Wednesday, 1 July 2009

கதைச் சரம் - 3 காத்திரமான கடவுளின் இலை!


காத்திரமான கடவுளின் இலை!

செவி வழிக் கதைகள் - 1

நாம் சின்ன வயது முதல் பல்வேறு கதைசொல்லிகளால் கவரப்பட்டவர்கள். இக் கதைசொல்லிகளாக எம்மது மூத்த தலைமுறையினர், பெற்றோர், ஆசிரியர்கள், சுற்றத்தார், நண்பர்கள் எனப் பலவாறாகவும் காணப்பட்டனர். இவற்றில் பல கதைகள் இராமாயண, மகாபாரதக் கிளைக் கதைகளாகவும் இருந்துள்ளன. சென்ற நூற்றாண்டில் அறிமுகமாகிப் பரவலான எழுத்துலகின் பரந்துபட்ட வாசிப்புக் கலாச்சாரம் கதைசொல்லலைப் பதிவுகளாக்கித்தரத்தொடங்கியது. இது தற்போதுள்ள தொழில் நுட்பஙகளுடன் பாட்டி கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், இன்றைய கார்டூன் கதைகள் வரையில் கதைசொல்லிகளின் வெளிப்பாடும் மனிதனுடன் சேர்ந்து பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது.

ஆனாலும் சில கதைசொல்லிகளின் கதைகள் நாடோடிக் கதைகளாகவும் வரையறுக்க முடியாது, கிராமக் கதைகளென்றும் கூறமுடியாது ஆனால் நகைச்சுவையுடன் குறுங்கதைகளாக கவனங்கொள்ள வைக்கும். ஆனால் இதைப் படைத்தவர் யாரென்பதை அறியவே முடியாது. செவி வழியாக அறிந்துள்ள இவ்வகைக் கதைகளைப் பதிய தோரணம் முனைகிறது.

00000000000000000000

ஈழத்தின் இன்றைய அவல நிலை, சிறிய வயதில் நான் கேட்ட இக்கதையை நினைவில் கொண்டு வந்தது.

வில்பத்துக் காட்டுக்குள் வந்திருந்து இருகுழுக்களிலிருந்து புதியதான இருவர்பிரிந்துவிட்டனர். இவர்களுக்கு காட்டைத்தாண்டிப் போகத் தெரியவில்லை. இரவில் மரங்களில் தூங்குதும் பகலில் சூரியன் உதிர்க்கும் திசை நோக்கிப்பயணமாவதுமாகி நண்பராகிவிட்டிருந்தனர். இதிலென்ன வேடிக்கையென்றால்இதில் ஒருவர் பெளத்தர் (சிங்களவர்) மற்றவர் சைவர்(தமிழர்).

வழக்கமான காலைப் பொழுதொன்றின்போது காலைக் கடனைக் கழிக்கச்சென்றிருந்த சைவர் ஒருமரத்தின் இலைகளால் தன்னைச் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தார். இதைப் பார்த்து பதட்டமடைந்த பெளத்தர்,
"ஐயையோ எங்கள் கடவுளை கேவலப்படுத்தி விட்டீரே!....." எனவேதனைப்பட்டார். இதனால் திகைத்துப்போன சைவர் தான் பயன்படுத்தியஇலையை உற்றுப் பார்த்தார். அது அரசமர இலையாக இருந்தது.
உடனே தன்னைச் சுதாகரித்தவராக,
"ஆ இது எனக்குத் தெரியாமல் போய்விட்டது. என்னை மன்னியுங்கள்! நான் இனிஒருபோதும் இப்படிச் செய்ய மாட்டேன்" என்றார். தொடர்ந்து "நண்பா, உங்கள்கடவுள் இலையில் சக்தியில்லைப் போலிருக்கு!" என்றார் தயங்கியவாறு.

"அதெப்படிச் சொல்கிறீர்?" ஆச்சரியத்துடன் பெளத்தர்.

"எங்களது கடவுளின் இலையைத் தொட்டிருந்தாலே அரிச்செடுத்திருக்கும், அதனால்தான் சொன்னேன்" என்றார் அப்பாவித்தனமான முகபாவத்தோடுசைவர்.

ஆச்சரியத்தால் உந்தப்பட்ட பெளத்தர் "அப்படியானால் காட்டும் உங்களதுகடவுளின் இலையை நானும் சோதித்துப் பார்க்கிறேன்" என்றார்.

"வேண்டாம் நண்பா, ரொம்பவும் சிரமப்படுத்திவிடும்" தயக்கமடைவதுபோல்பாசாங்கு செய்கிறார் சைவர். ஆனாலும் பெளத்தர் விடுவதாக இல்லை.

"சரி சரி வாரும்..." என அழைத்துச் செல்கிறார். காட்டில் காணப்பட்டகாஞ்சோண்டி'ச் செடியினை வணங்கி இதுதான் எனது கடவுள் மரம் என்றார் சைவர். பென்னாம் பெரிய மரமொன்றைக் காணும் ஆவலுடன் வந்திருந்தபெளத்தருக்கு இச் செடியைக் கண்டதும் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.

"பு... பூ... இதுதானா உங்களது கடவுளின் மரம்! இல்லை செடி! உங்களைப் பார்க்கபாவமாக இருக்கு... நண்பா என்றவாறு அக்.... க்கக்கா... வெடிச்சிரிப்புடன் விழுந்துவிழுந்து எழுந்தார்.

ஆனால் சைவரோ முகத்தை இறுக்கமாக வைத்தவாறு ப்கதி சிரத்தையை வெளிப்படுத்திக் கொண்டு, "நண்பா அதிகம் சிரிக்க வேண்டாம்! பிறகுசிரமப்படுவீர்....." என்கிறார்.

இந்த அணுகுமுறையால் உந்தப்பட்ட பெளத்தர் படாரென பாய்ந்து காஞ்சோண்டி இலைப் பிடுங்கி தனது அடியில் உரஞ்சிவிட்டார்.
'

(இக்கட்டத்தில் கதை சொல்லி மெளனியாகி கேட்போரை உற்றுப் பார்ப்பது வழக்கம்)
வெடிச் சிரிப்பு பரவலாகி அவ்விடத்தில் கூடி நின்ற அனைவரையும் திரும்பிப்பார்க்க வைக்கும். வயிறுகுலுங்கச் சிரித்து கண்ணீர் வரத் துடைதவாறு கதைசொல்லியைத் திரும்பிப் பார்த்தால் அவர் எங்களைப் பார்த்து புன்முறுவலோடுஇரசித்துக் கொண்டிருப்பார்.

குறிப்பு:
காஞ்சோண்டி என்பது நம் நாட்டில் காணப்படும் ஒரு செடி. இதன் இலை உடம்பில் பட்டால் சுணைத்து அரிப்பெடுக்கும். சுமார் ஒரு நாள் மட்டும் இந்த அரிப்பு இருக்கும். நல்லெண்ணை தடவினால் கொஞ்சம் இதமாகும்.

- அநாமிகன் (யூலை 2009)

1 comment:

  1. nalla vilakkam..arumaiyyana sindhanai..

    Suresh
    Thamizhagam

    ReplyDelete