Friday 29 May 2009

செய்திச் சரம் -1 தமிழுக்கு கோயில்!

திண்டுக்கல் அருகே
தமிழுக்கு கோயில்!

இணைய உலாவரும்போது புதிதாய்க் காணப்பட்ட இச்செய்தியால் ஈர்க்கப்பட்டேன். தமிழுக்குக் கோயில் - எதிர்காலத்தில் தமிழின் இருப்பை நிலை கொள்ள வைக்க இது தமிழர் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் அமைக்க வேண்டிய பொருத்தப்பாடு காணப்படுவதாக உணர்வதால் மீளப்பதிவிடுகிறேன்.

திண்டுக்கல் அருகேயுள்ள சின்னாளபட்டியில் தமிழுக்கு கோவில் கட்டப்படுகிறது

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி காந்தி கிராம பல்கலை அருகே, தமிழன்னை திருக்கோவில் அறக்கட்டளை சார்பில், தமிழுக்கு கோவில் கட்டப்பட்டு வருகிறது.

இது குறித்து தமிழன்னை திருக்கோவில் அறக்கட்டளை தலைவர் யோகநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒரு கோடி ரூபாய் மதிப்பில் இதற்கான கட்டுமான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இங்கு மூலவராக தமிழன்னை சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

முத்தமிழ் அரங்கம், பெரு நூலகம், இலவச சித்த மருத்துவ நிலையம், தமிழ் தியாகிகள் நினைவுத் தூண் அமைக்கப்படும்.

தமிழன்னைக்கு தினமும் தமிழின் உயிரெழுத்துக்களால் அர்ச்சனையும், பிரசாதமாக தேன், தினைமாவு, கனிகள் வழங்கப்படும். ஆனால், மத அடிப்படையில் எந்த வழிபாடும் நடத்தப்படமாட்டாது.

ஆண்டுதோறும் பொங்கல் அன்று செங்கரும்பு பந்தலிட்டு தமிழர் திருநாள் கொண்டாடப்படும். திருவள்ளுவர் தினத்தன்று தமிழுக்கு தொண்டாற்றிய சான்றோர்களுக்கு நினைவுத்தூண் மூலம் போற்றல் நிகழ்ச்சி நடைபெறும்.

தமிழ் விழாக்கள், பொதுநல விழாக்கள், ஏழை வீட்டு திருமணங்கள் இலவசமாக நடத்தப்படும்.விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் இசை, பா புனைதல், இலக்கண வகுப்பு, தமிழ் வழிக்கலைகள் கற்றுத்தரப்படும். புதிய தமிழ் இலக்கிய படைப்புகள் அரங்கேற்றப்படும்.

ஆண்டுக்கு ஒருமுறை தமிழ் திருவிழாவும், இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை உலகளாவிய தமிழ் பெருவிழாவும் நடக்கும் என்றார்.

உலகத்தில் மொழி்க்கு என்று கோயில் கட்டப்படுவது தமிழகத்தில் தான். அதுவும் தமிழுக்குத்தான் என்பது குறிபிப்பிடதக்கது.


நன்றி: தட்ஸ்தமிழ் -செவ்வாய்க்கிழமை, மே 26, 2009, 10:14 [IST]
http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/0526-temple-for-tamil-annai-in-sinnalapatti.html

Sunday 24 May 2009

அறிவுச் சரம் - 1 கூச்சமும் அச்சமும்

சபைக் கூச்சமும் சமூக அச்சமும்

- க.அருள்மொழி

கூச்சம் என்பது பயம் என்ற மனவெழுச்சியின் (Emotion) ஆரம்ப நிலையாகும். ஒரு சிலர் மேடையேறிப் பேச ஆரம்பத்தில் பயப்-படுவார்கள். இது சபைக் கூச்சம் எனப்படு-கிறது. சிலர் நம்மைப் புகழும் போது ஏற்படும் உணர்வும் கூச்சம்தான். புதுமணப் பெண்-ணோ, மணமகனோ நண்பர்களாக கிண்டல் செய்யப்படும்போது கூச்சத்தால் நெளிவார்கள். புதிய நபர்கள் அறிமுகமாகி பழகும்வரை சற்று கூச்சம் ஏற்படுவதுண்டு. இதெல்லாம் தற்காலிகம்தான்.

சிலர் சமூகத்தில் இயல்பாக ஊடாடு-வதற்கே கூச்சப்படுவார்கள். வாய்விட்டு, மனம்விட்டு பேச மாட்டார்கள். யாருடனும் அறிமுகம் செய்து கொள்ள மாட்டார்கள். ஆயிரம் பேர் கூடியிருந்தாலும் அந்த இடத்தில் தனியாக இருப்பார்கள் இது சமூக அச்சம் (Social Phobia) எனப்படும்.

பொதுவாக எல்லோருமே ஏதாவது ஒருவகை அச்சத்திற்கு ஆளாவதுண்டு. உயரமான இடம், பாம்பு, கரப்-பான் பூச்சிக்கு பயப்படுபவர்கள் உண்டு. தனியாக இருக்க பயப்படுவது அனேகம் பேருக்கு இயல்பு. ஆனால் மற்றவர்களோடு சேர்ந்து இருக்க பயப்படுவது மிகவும் பாதிப்பை ஏற்படுத்துவதாகும்.

சமூக அச்சம் உள்ளவர்கள் கூட்டத்தைப் பார்த்தாலே பதட்டப்படுவார்கள். தான் அங்கு சென்றால் குழப்பம் என்று நினைத்துத் தவிப்பார்கள். இதனால் மற்றவர்களுடன் பேசிப் பழகி அனுபவிக்கும் மகிழ்ச்சியை இழந்து விடுகிறார்கள்.

பொதுவான சமூக அச்சம்: எல்லோரும் தன்னையே பார்ப்பதாகவும் தன்னுடைய செயலையே உற்று நோக்குவதாகவும் நினைக்கிறார்கள். அடுத்தவர்களுடன் அறிமுகம் செய்து கொள்ள மறுக்கிறார்கள். கடைகளுக்கு, உணவகங்களுக்குச் செல்லவும் பயப்படுகிறார்கள்.

பொது இடங்களில் உண்ணவோ அருந்தவோ கவலை கொள்கிறார்கள். பொது இடங்களில் குழப்பமாக உணர்கிறார்கள். மற்றவர்களுடன் உறுதியான நட்புடன் இருப்பதில்லை. இதுபோன்ற குணங்களைக் கொண்டவர்களை பொதுவான சமூக அச்சம் (General Social Phobia)கொண்டவர்கள் எனலாம்.

மேலும் மணவிழாக்கள், தன் வீட்டில் நடைபெறும் நிகழ்வுகளில் கூட தனித்து சென்றுவிடவே முயல்வர். கலந்து கொள்ள இயலாத நிலை தனக்கிருப்பதாக நினைத்துக் கொள்-வர். சிலர் தனிமைச் சிறையில் அடைத்துக் கொள்ளும் நிலைக்கும் சென்றுவிடுவர். மது விருந்து போன்ற-வற்றிற்குச் செல்ல வேண்டியிருப்-பவர்கள் முன்கூட்டியே மதுவருந்தி விட்டு செல்வதால் சற்று கலந்து பழகும் உணர்வைப் பெறுகின்றனர்.

குறிப்பிட்ட சமூக அச்சம்: ஒவ்வொருவர் செய்யும் தொழிலுக்கேற்ப சில நேரங்களில் அவர்களை மய்யப்படுத்தி நடக்கும் நிகழ்வுகள் குறிப்பிட்ட சமூக அச்சம் (Specific Social Phobia) உடையவர்களை வெகுவாக பாதிக்கிறது. இந்த வகையினர் சாதாரண நடவடிக்கைகளில் அனைவருடனும் கலந்து பேசு-வார்கள். ஆனால் அவரை மய்யப்படுத்தியோ அல்லது அவர் தலைமையிலோ ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டுமெனில் பதட்டமடைந்து விடுவார். அந்த நேரத்தில் திடீரென்று திக்குவாய் ஏற்படும். அல்லது உறைந்து போனது போலவும் ஆகிவிடுகிறார்கள். தனக்காக ஒரு கேள்வியைக் கேட்டு பதில் பெற வேண்டிய அவசியமுள்ள நிலையிலும்கூட அதைத் தவிர்க்கிறார்கள்.

அச்சத்தால் ஏற்படும் விளைவுகள்: பொதுவான அச்சம் குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படும் அச்சம் எதுவாக இருந்தாலும் பதட்டம் என்பது பொது-வானது. தன்னைத்தானே முட்டாளாக்கிக் கொள்-வார்கள். எந்த சமூக நிகழ்ச்சிக்கும் செல்ல முடியாத-தால் கவலைபற்றிக் கொள்ளும். எந்த வேலையும் குழப்பத்திலேயே முடியும். தேவையான வேலைகளைக்-கூட செய்ய முடியாது. மற்றவர்களுடன் பழக வேண்டிய சூழலில் தவறாக நடந்து கொண்டு-விட்டு பின்னர் நினைத்து நினைத்து வருந்துவர்.

உடல் ரீதியான சில விளைவுகளும் ஏற்படும். அதாவது, வாய் உலர்ந்து போவது, அதிக வியர்வை, இதயம் வேகமாக அடித்துக் கொள்வது, இதயம் தாறுமாறாகத் துடிப்பது, சிறுநீர் கழித்தல், மரத்துப் போதல் அல்லது ஊசியால் குத்தப்படுவதுபோல உணர்தல், வெட்கத்தால் முகம் சிவந்து போதல், நாக்கு குழறல், நடுக்கம் போன்ற அறிகுறிகளைக் காணலாம். இதனால் கவலைப்பட்டு கவலைப்பட்டே முகம் மோசமாக தோற்றமளிக்கும்.

சமூக அச்ச நோய் உள்ளவர்கள், மற்றவர்கள் சாதாரணமாக செய்யும் வேலைகளைக்கூட செய்ய முடியவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பர். மற்றவர்-களுக்குச் சுமையாக இருப்பதாகவும் உணர்வர். மற்றவர்கள் கண்களுக்கு சோகமாகவும் மன அழுத்த நிலையில் இருப்பதும் எளிதாகத் தெரியும்.

குடும்பத்தில் மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது இவர்கள் மட்டும் சோக-மாகவே இருப்பார்கள். குழந்தைகளின் பள்ளிக்குச் சென்று வரவும் தயங்குவார்கள். மிகப் பெரிய பணமும் அதிகாரமும் வரக்கூடிய பணிகளை தவிர்த்து விடுவர். நீண்டகால நட்புறவு என்பதே இவர்களுக்குக் கிடைக்காது.

நூற்றில் அய்ந்து பேர் ஓரளவு சமூக அச்சத்தால் பாதிக்கப்படுகிறார்கள். பெண்கள் சற்று கூடுதலாக பாதிக்கப்படுகிறார்கள்.

மன அழுத்தம் என்பது சமூக அச்ச நோயின் தொடர் விளைவாகும். தொடர்ந்து, கூட்டமான இடத்தை தவிர்த்து வருவதும் தனிமையைத் தேடுவதும் வெளியில் செல்லவே பயம் (agora Phobia) என்ற நோயையும் ஏற்படுத்தும், போதைக்கு அடிமையாக நேரிடும். மற்ற நபர்களைவிட மாரடைப்பு ஆபத்து அதிகம்.

இந்நோய் ஏற்படக் காரணங்கள்: திட்ட-வட்டமாக காரணம் எதுவும் சொல்ல முடியாத நிலையில்தான் இருக்கிறது. ஆனால் அடித்து வளர்க்கப்படும் குழந்தைகளுக்கும், மூன்று வயது முதல் ஏழு வயதிற்குள் ஏற்படும் கூச்ச நிலையைப் போக்க பழக்கப்-படுத்தாதவர்களுக்கும் பொது இடங்களில் அதிகபட்ச நாகரீக தரத்துடன் நடந்து கொள்ள முடியாது என்று நினைப்பவர்-களுக்கும் இந்நோய் ஏற்படுவதாகக் கருதப்-படுகிறது.

தான் மிகவும் கட்டுப்பாடு உள்ளவன்/உள்ளவன் என்று நினைப்பவர்களுக்கும், தான் மற்றவர்களுக்கு சலிப்பைத் தருபவர் (Boring) என்று நினைப்பவர்களுக்கும் பொது இடத்தில் கலந்து கொண்டால் தன் அறியாமை வெளிப்பட்டு விடும் ன்று நினைப்பவர்களுக்கும் இந்நோய் ஏற்படுகிறது.

தீர்வுகள்: சமூக அச்ச நோயின் முதற்கட்டம் கூச்ச சுபாவம். அந்த நிலையிலேயே மணவளப் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். மனத்தணிப்பு (Mind Relaseing) பயிற்சிகளைச் செய்ய வேண்டும். முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

தன்னைப்பற்றி கொண்டுள்ள தவறான எண்ணங்களை ஒருதாளில் எழுதிப் பார்த்து கிழத்தெறிய வேண்டும். இதனால் மனதிலுள்ள தவறான எண்ணங்கள் மறையும்.

மற்றவர்களைத் தவிர்க்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். ஆரம்ப நிலையிலேயே, கவலை தருவதாக நினைக்கும் சூழ்நிலைகளைக் கையாண்டு என்ன ஆனாலும் கடைசிவரை முயற்சி செய்வோம் என்று நினைத்து தொடங்க வேண்டும்.

உளவியல் மருத்துவம்: சமூகத் திறன் (Social Skills) பயிற்சிகள்மூலம் புதியவர்களுடன் எப்படி உரையாடலைத் துவங்குவது, எப்படி நடப்பது என்று பயிற்சி அளிக்கப்படுகிறது. பலருடன் கலந்து பழகும் பயிற்சியை படப்பதிவு செய்து ஒவ்வொருவரும் என்ன செய்கிறார்கள். எப்படித் தோற்றம் அளிக்-கிறார்கள். என்ன கருத்தை வெளிப்படுத்து-கிறார்கள் என்று தெரிந்து கொண்டு நடத்தை மாற்ற சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஒருவரை அச்சுறுத்தும் சூழ்நிலைகளைப் பட்டியலிட்டு மிக அதிக பயமளிக்கும் சூழல் முதல் குறைவாக பயமுறுத்தும் சூழல் வரை வரிசைப்படுத்தப்படுகிறது. சிகிச்சையளிப்-பவரின் உதவியுடன் குறைவான பயச்சூழலி-லிருந்து ஆரம்பித்துப் படிப்படியாக ஒவ்வொரு சூழலையும் கையாளக் கற்றுக்-கொடுக்கப்படுகிறது.

எண்ணம் மாற்றும் சிகிச்சை: சமூக அச்சம், தன்னைப் பற்றி தானே கொண்டுள்ள தவறான எண்ணங்களால் வருகிறது. இதனை மாற்ற, தேவையற்ற கட்டுப்பாடு, கற்பனை ஆகியவற்றையும் தற்காப்பு நடவடிக்கைகளையும் பற்றிய விழிப்புணர்வை அளிக்கிறார்கள். மேலும் தேவைப்பட்டால் மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது.

"அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடைமையடா - ஆறிலும் சாவு நூறிலும் சாவு" என்ற பாடல் போர்க்களத்திலும், சொற்போர் களத்திலும் நெஞ்சு நிமிர்த்திச் செல்ல நம்பிக்கையைத் தரக்கூடியது.

நன்றி: உண்மை மே 2009 -

http://files.periyar.org.in/unmaionline/2009/may/01-15_2009/page14.php?0945-560_%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_0000-1100_01-15_2009

சரம் - 5 அடிமைகள்

அடிமைகள்

அடிமைகள் என்ற சொல் கொடுக்கும் வேதனையை வார்தைகளால் இலகுவாக வர்ணிக்க முடியாது.
21-ம் நூற்றாண்டு புதிய கணனி யுகத்தில், உலகின் முன் கதறக்கதற நிகழ்ந்த மானிடக் கொலைக்களமாகப் பதிவாகிப்போனது முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால். பாரிசில் நினைவுகூரப்பட்ட அவல நிகழ்வில் கலந்துவிட்டு குடும்பத்துடன் வீடு திரும்புகிறேன். கனத்த மனநிலையுடன் திரும்பிக்கொண்டிருந்த எமை நாம் வசிக்கும் கிராமத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த அடிமைகள் நினைவு நாள் நிகழ்ச்சி ஈர்க்கிறது. காற்றில் கலந்துகொண்டிருந்த ராப்பிசையுடன் வெளிவந்த மானிடக் குரல் எமது சோகத்தையும் தாண்டியதாகி நிற்கவைக்கிறது. இன்றைய உலகில் அடிமைவழிவந்துள்ள வழித் தோன்றல்களின் உணர்வுகளை நூற்றாண்டுகள் கடந்தபின்பும் உமிழ்வதைப் பார்க்கிறேன். எதையும் சட்டைசெய்யாது சுழன்று கொண்டிருக்கிறது காலச்சக்கரம்.

இநத நினைவுகளுடன் தூக்கம் கலைந்தவனாகி இந்தப் பதிவையிடுகிறேன். பத்து வருடங்களின் முன் ஐரோப்பாவில் வளரும் தமிழ் சிறார்களின் தமிழ்மொழி கற்கைக்கான கருத்தரங்கம் ஜேர்மனியில் நிகழ்த்தப்படுகிறது. இதில் நானும் பங்கேற்றிருந்தேன். இந்நிகழ்வில் புதிய அரிய நட்புகளும் தொடர்புகளும் தகவல்களும் கிடைக்கப்பெற்றிருந்தன. இதில் நண்பராகிவருடனான மனந்திறந்த அளவளாவல் 'அடிமைகள்' தொடர்பானதாகவும் இருந்தது.
எண்பதுகளில் பட்டப்படிப்பு முடிந்ததும் ஆபிரிக்கக் கண்டத்தில் ஆசிரியப் பணிபெற்று ஈழத் தமிழர்களில் பலர் பயணிப்பதென்பது சாதாரணமான தொன்று. இந்தவகையில் நைஜீரியா சென்றிருந்தார் இந்த நண்பர். நைஜீரியர்களுடன் ஏற்பட்டிருந்த நடப்புடனான தொடர்பாடல்களில் பல் தரப்பட்ட விடையங்களும் அங்கும். அன்றாருநாள் 'அடிமைகள்' தொடர்பான அலசல் தொடங்கியது....

- 'ஆபிரிக்கர் எப்படியாகவெல்லாம் அடிமைகளாக விற்கப்பட்டார்கள் இந்நிலை எமக்கு(இந்திய இலங்கையர்கள்) வரவில்லை' என்றார் நண்பர்.
- 'என்ன நண்பா இப்படிச் சொல்கிறீர், எங்களை கலைத்துப்பிடித்து சங்கிலிகளால் கட்டி கப்பலில் ஏற்றினர் ஆனால் உங்களிடத்தில் கப்பலைக் கொண்டுவந்து துறைமுகத்தில் கட்டிவிட உங்களவர்கள் தாமாகவே கப்பலில் ஏறிச் சென்றிருந்தனரே!' முகத்தை கடுமையாக வைத்துப் பின் புன்முறுவலிடுகிறார் ஆபிரிக்க நண்பர்.
- வரலாற்றுப் பார்வை சுட்ட குற்ற உணர்ச்சியை எவ்வகையிலும் மறைக்கமுடியாது மெளனித்தார் நண்பர்.

சுமார் இருபது வருட இடைவெளியின்பின், நண்பரின் மறக்க முடியாத நினைவாக எம்முடன் பகிரப்பட்ட இத்தகவல் ஏனோ நினைவில் வந்திருந்தது.

1948இல் மலையகத் தமிழரின் வாக்குரிமை மறுக்கப்பட்ட வேளையில், 'இன்று மலையகத்தமிழர்களின் நாடற்றவரது நிலை தொடர்பாக நாம் அதிக சிரத்தை எடுக்காதுவிட்டால் என்றோ ஒருநாள் இலங்கைத் தமிழர்களும் நாடற்றவராகும் நிலை வரும்!' தந்தை செல்வா கூறிய வார்த்தைகள் இன்று நிசமாகிவிடுவதான அவலத்தில் தவிக்கும் வேளையில் அகதிகள், அடிமைகள், நடோடிகள், ஜித்தோன்கள் தொடர்பாக நிறையவே கற்க வேண்டிய நிலையில் நம் எதிர்காலச் சந்ததியினர் இருக்கின்றனர்.

சிந்தனையின் ஆழத்தால் பெருமூச்சு அமைதியாக வெளியேறுகிறது.


முகிலன் பிரான்சு. 23.05.2009

Saturday 9 May 2009

சரம் - 4 இதுதாண்டா தீர்வு!

1 இதுதாண்டா தீர்வு!

புதிய இதிகாசம்: சோனியாயணம்
தயாரிப்பு- வடிவமைப்பு- செயலாக்கம்- நெறியாழ்கை: இதிகாச மூலவர்கள் வாரிசுகள்
நடைபெறும் இடம்: ஈழம்
பாத்திரங்கள் தம் உயிரை வழங்கி கதையுடன் வாழ்கிறார்கள்.


என்னடா ராஜசேகர் சினிமாத் தலைப்பு மாதிரி இருக்கிறதே என எண்ணலாம். இது இந்தியச் சினிமாக்களில் வரும் காட்சிகள்போலத்தான் நடைபெறுவதாலும், தேவர்களாகச் சித்தரிக்கப்படும் மானுடர்(அரக்கர்)களாக இல்லாது மேலோகத்தில் வாழுவோரது கதைக்கருவாக இருப்பதாலும் இப்படியாகத் தலைப்பிடுவதே பொருத்தம்.

இலங்கைத் தமிழருக்கான தீர்வாகக் கருதப்படும் சகல காலரோக ராசீவு நிவாரணியைச் செலுத்துவதற்கு தயாராகி வருவதாகச் செய்திகள் கசியத் தொடங்கிய நிலையில், புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியில் இது அலசப்படுவது வழக்கமாகிவிட்டது. இலங்கையில் தோன்றியுள்ள பயங்கரவாத நோயைத் தடுப்பதற்கான ஒரேயொரு தடுப்பு மருந்தாகிய இந்த ராசீவு நிவாரணியை மீண்டுமொருமுறை கட்டிவைத்துச் செலுத்தப்போகிறார்களாம். இதில் நோய் குணமாகாதுவிட்டாலும் ஆள் தப்பாது என்பதால் சிங்களம் மீண்டுமொரு முறை நமட்டுச்சிரிப்புடன் வேடிக்கை பார்க்க ஆரம்பமாகிக் கொண்டிருக்கிறது.

இன்றைய உலகின் -தேசிய அரசு இறையாண்மை- என்ற கோட்பாடுகளால் எது நடந்தாலும் இலாபமடைவது இந்த சிறிலங்கா சிங்கள பௌத்த அதிகார பீடந்தானே! இதற்கு சுனாமியால் கடும் பாதிப்புக்குள்ளாகிய போது மகிழ்வுடன் காட்சி தந்த அரசுத் தலைவர் சந்திரிகா சிறந்ததொரு உதாரணம்! ஈழத்தமிழருக்குத் தீர்வு கிட்டுதோ இல்லையோ தமது நலனுக்கு ஏற்றதாக இலங்கை இருந்தால் போதும் என்பதுதானே இந்த ராசீவு நிவாரணத்தின் சாரம்.

சிங்களம் ஒருபோதும் சிறிய தீர்வைத்தானும் வழங்காது என்பது இந்தச் சிங்களக் கொள்கை வகுப்பாளருடன் நெருங்கிப் பழகிய பலராலும் கற்றிருந்த பட்டறிவு. இதை ஓங்கிச் சொல்லி உயிரைவிட்டவர் தராக்கி. எத்தனையோ பேச்சுவார்த்தைகள் நடாததியும் துரும்புதானும் கிடைக்காது நொந்துபோய் ‘தமிழரைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ எனக்கூறி தனி ஈழம்தான் தீர்வென மக்களாணையைப் பெற்றவர் தந்தை செல்வா. இன்னும் ஏன் மூன்றாம் சாட்சியாக ஐரோப்பிய நாடொன்றை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட 2002 சர்வதேச ஒப்பந்தத்திற்கே என்ன நடந்தது? சிறிலங்காவின் இன ஒடுக்குதலுக்கு வாழ்வாதாரச் சாட்சியமாக உலகெங்கும் பரவி வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட இந்தத் தமிழ் உறவுகளே நிகழ்காலச் சாட்சியமாகக் கட்டியம் கூறுகையிலும் உலகம் கண்ணை மூடியவாறு மௌனித்து இருக்கும் அவலம் 21ம் நூற்றாண்டு மானுடவியல் பெருந்துயர்தான்.

இந்தச் சூழலில் நம்மவர் வீடுகளில் அடிக்கொரு தடவை பேசப்படும் விடையமாகிவிட்டது. பொதுப் பார்வையில் புலம்பெயர்ந்த வாழ்வின் எதிர்காலம் பொங்கிப் பிரவாகமடிப்பதாகத்தான் தோன்றும். ஆனால் மூலத்திற்கான நாடொன்றில்லாத சந்ததியினரை விட்டுச் செல்லும் வரலாற்றுப் பழியை நம்மால் சுமக்க முடியுமா? இக்கேள்வி புலம் பெயர்ந்த மூத்த தலைமுறையினரை வாட்டிவதைக்கிறது. சென்ற நூற்றாண்டில் நாடொன்றில்லாது செல்வச் செழிப்புடன் பரவலாக வாழ்ந்து கொண்டிருந்த யூத இனத்திற்கு ஐரோப்பாவிலேயே என்ன நடந்தது? எதிகாலத்தில் எமது சந்ததி ஜித்தானாவதா??

புலிகளுக்கு எதிரானவர்களை இனம் காணுவதும் அவர்களிடம் ஆட்சியைக் கொடுப்பதுமான 87 அரங்கம் இன்னுமொரு தடவை 2009இல் அரங்கேற்றபடபோகிறது. தகவல் தொழில்நுட்ப விரிவாக்க உலகின் இன்றைய சூழலை மறந்தவர்களாகிச் செயற்படும் தயாரிப்பாளரும் நெறியாளரும்
படாதபாடுபடுகிறார்கள். இந்த நிகழ்அரங்கிற்கான பாத்திரங்களுக்குத் தோதானவர்களை வலைவீசித் தேடுகிறார்கள். இவர்களின் தெரிவுக்குள்ளாவோரை நினைத்தால் சிரிப்பு பொத்துக் கொண்டு வருகிறது. ஆக முழுக்க நகைச்சுவை அரங்காகத்தான் இருக்கப்போகிறது. இதைப்பற்றி உரையாடும்போது என் துணைவி கேட்டார்
“இந்தத் தெரிவுக்குள்ளானவர்கள் எந்தப் பாதுகாப்பும் இல்லாது தன்னந்தனியாக இவர்களால் நடாத்தப்படும் அகதி முகாங்களுக்குள்ளாகச் சென்று வரட்டும் பார்க்கலாம்?”

வினவல் மிகுந்த தாக்கத்துடனானதென்பது அனைவராலும் உணரக்கூடியதுதானே!
மக்கள் மத்தியில் சாதாரணமாக நடமாட முடியாதவர்களை மக்கள் பிரதிநிதிகளாக்கி என்னதைச் சாதிக்கப்போகிறார்கள்? . எமக்கான அண்டை நாட்டாரை நினைக்க வேதனையாகத்தான் இருக்கு! வன்னியில்கிளம்பியுள்ள
பிண வாடை பெருமணமாகி காற்றில் கலந்து உலகின் முகச் சுழிப்புள்ளாகியுள்ளதானது சும்மா விடுமா?
- நல்ல மாட்டுக்கு ஒரு சூடு! - இது சின்னப்பிள்ளையாக இருந்தபோது மண்டையில் ஏற்றப்பட்ட முதுமொழி.

- மகேந்திரா 08. 05. 2009கனடா -

0000000

2வீட்டில் இருந்ததபடியே தொலைபேசி கதைக்கலாம்!

‘ஆடுற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும், பாடுற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்!’ என்ற முதுமொழியின் செறிவை நாளாந்தம் அனுபவக்கும் வேலை நமக்கு. ஆம் தொலைத்தொடர்புக் கடை ஒன்றில்தான் வேலை. நாளாந்தம் பன்முகச் சமூகத்துடனும், பல்வேறு முகங்களுடனும் உரையாடும் வாய்ப்பைத் தரும் பணி. வாயாற தொலைபேசிவிட்டு வரும் வாடிக்கையாளரிடமிருந்து பணத்தைப் பெறுவதென்பது இலுகுவான காரியமில்லை. இதற்காக நாசுக்காக நாமும் பல்வேறு விடையங்கள் தொடர்பாக உரையாடிட வேண்டும், வாடிக்கையாளரை மகிழ்வூட்டி கிறங்கடிக்கச் செய்யவும் வேண்டும்.

இப்படியான வாடிக்கைளார்களில் ஒருத்திதான் கறிமா. சுறுசுறுப்பானவள், குஸ்புவை நினைவூட்டும் உடல்வாகு. முன் கடையில் தற்காலிக வேலை பார்க்க வந்த மொகமட், வியாபாரத்தன்மைக் கேற்ப காசை அளந்து செலவிடும் கட்டுப்பாடானவன். இவனிடமிருந்து தாள்க் காசு இலகுவில் வெளியே வராது. அப்படி நிலை வந்தால் கடன் சொல்லியே செல்வான்.

கறிமா தொலைபேசிவிட்டு வருகிறாள், கட்டணம் 7 ஈரோக்கள் 30 காசு. வழமையான மகிழ்வூட்டு வசனங்களை உரையாடியவாறு பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவளிடம் 2 ஈரோக்கள் 50 காசுதான் இருக்கு. அப்ப தற்செயலாக வந்தான் மொகமட். ‘ஏய், மொகமட் 5 ஈரோ இருந்தாக் குடுவன்’ என்றாள் செல்லமாக. மொகமட்டின் பரிதவிப்பைப் பார்க்கப் பாவமாக இருந்தது. முதற்தடவையாக ஒரு பணத்தாளை எடுத்துத் தந்தான். எங்களுக்கு பணப்பிரச்சனை சுமுகமாகத் தீர்ந்ததில் கிடைத்த மகிழ்ச்சியுடன் நன்றியைத் தெரிவித்தோம்.
அடுத்த நாள் மாலை, கறிமா வருகிறாள். எனது கூட்டாளி வரவேற்கிறார். ‘எப்படிச் சுகம் கறிமா? எங்கே உனது வாழ்வுத் துணைவன்?’
‘எனக்கு வாழ்வுத் துணைவனா? யாரது?’ மிகுந்த ஆச்சரியத்துடன் திகைப்பை முகத்தில் வெளிப்படுத்தியவாறு... கறிமா.
‘அவர்தான் நேற்றுக் காசு கொடுத்தாரில்லையா?’ நமட்டுச் சிரிப்புடன் கூட்டாளி.
‘ ஏய்! அந்த முகமட்! போங்கடா... நானாவது அவனைக் கட்டுவதாவது!!’ குரலில் தெளிவு இருந்தது.
‘ நான் மக்கிறபனைக் கட்டமாட்டன்’
‘ ஏன்?’ வினாவில் திகைப்பு மேலோங்கியிருந்தது.
‘ நான் இந்துவைத்தான்(நம்மவரை இவர்கள் இந்து என்றும் இந்தியர்களென்றுமே விழிப்பது வழக்கம்) கட்டுவன். ஏனென்றால், அப்பத்தான் வீட்டிலிருந்தபடியே தொபேசியில் கதைக்கலாம்!’ நிதானமான பதிலுடன் சிரித்துக் கொண்டே தொலைபேசிடச் செல்கிறாள் கறிமா.
பதில் கொடுத்த தாக்கம் புருவத்தைத் தூக்க மௌனித்தவர்களாகி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். ஆனாலும் இந்த அரபு மற்றும் ஆபிரிக்கப் பெண்களை நினைக்க மலைப்பாகத்தான் இருக்கு! கதைப்பதற்காக இவர்கள் செய்யும் செலவுகளை நம்மவர்களுடன் ஒப்பிட்டால்..... நம்பெண்கள் சிக்கனமானவர்கள்தானே!
என்ன இருந்தாலும் மானுட வாழ்வின் இன்றைய துடிப்பு இந்தக் கதையாடல்களில்தான் எஞ்சித் தொங்குகிறது.

- சந்திரன்
பாரீஸ் -யூன் 2007