Friday 30 August 2013

ஓடலியார் வாசித்த கடிதம்

கதைச் சரம் 21
செவிவழிக் கதை 18

ஓடலியார் வாசித்த கடிதம்


யாழ் மாவட்டத்தில் அமைந்ததொரு நகரம். சுற்றவர பதினைந்து கிராமங்களை இணைக்கும் உதவி அரசாங்க அதிபர் பணிமனையைக் கொண்டது இந்நகரின் சிறப்பு. இங்கு பிரதம அஞ்சல் பிரிக்கும் தாபால் மற்றும் தந்தி அலுவலகமும், மாவட்ட வைத்தியசாலையும், உதவி அத்தியட்சகர் கொண்டதான காவல் பணிமனையும், நீதி மன்றமும் அமைந்திருந்தது. உயர் கல்வி வழங்கும் கல்லூரி ஒன்றும் இங்கிருந்தது. இதனால் புதிய மக்களது நடமாட்டமும், புதியதாக மாற்றலாகி வந்து வாழும் அரச மற்றும் திணைக்கள அதிகாரிகளும் ஊழியர்களும் கொண்டதாகவே இந்நகர் விளங்கியது.
இந்த வைத்தியசாலை சுற்றுக் கிராமங்களுக்கெல்லாம் மிகவும் பிரசித்தமானது. தவிர இன்னொரு தனியார் மருத்துவ மனையும் இந்த ஊரில் இருந்தது. ஆனாலும் அரச வைத்திசாலையின் சீரான நிர்வாகத்தால் எந்நாளும் கூட்டம் அலைமோதியபடிதான் இருக்கும்.
புதிதாக மாற்றாலாகி வந்திருந்த மாவட்ட வைத்திய அதிகாரி வைத்தியசாலையின் அருகாமையிலிருந்த அவருக்கான தனியான அரசவிடுதி வீட்டிலேயே தங்கியிருந்தார். கொஞ்சம் பருமனானவர். கோபப்படாமல் நகைச்சுவையாகப் பேசுவார். நல்ல இசை இரசிகன். அவருக்கு ஒரு பையன், துணைவி பதுமையானவர். இத்தகைய குணாதிசயங்களுடன் இருந்த குடும்பமாகையால் இலகுவில் அவ்வூர்க்காரர் சிலரது குடும்ப நட்பை விரைவாகவே பெற்றுவிட்டார். அந்த அம்மாவுக்கு வீட்டுத் தோட்டம் செய்ய மிகவும் பிடிக்கும். இந்த வைத்தியசாலை கடலுக்கு அருகாமையில் இருந்தமையால் வளவில் குறோட்டங்களுடனான பூ- இலைத்தோட்டம் மட்டுமே இருந்தது. இவர்களால் வீட்டுத் தோட்டத்தை உருவாக்க முடியவில்லை. இதனால் நட்பாகிய இராசையா குடும்பத்தினருடன் மிகவும் நெருக்கமாகிவிட்டிருந்தனர். இராசையா வீட்டிலிருந்துதான் இவர்களுக்கான மரக்கறிகள் கிரமமாக இவர்களுக்கு வரும்.
அக்கிராமத்தின் நடுப்பகுதியில், வண்டில் மாடுகள் சகிதம் பெரிய தோட்டத்துடனான வீடு இராசையாவுடையது. மனைவி நான்கு பிள்ளைகள் அவர்களின் மூத்த உறுப்பினர் -வேலையாட்களென இவர்களது வீடு என்றைக்குமே கலகலப்பாகவே இருக்கும். இராசையாவின் அம்மாவுக்கு அஸ்மாத் தொல்லை. இதனால் மாரி வந்துவிட்டாலே வைத்தியசாலையும் வீடும்தான்.
வேற்றூர்க்காரராக இருந்தாலும் இரு குடும்பத்தினரும் மிகவும் நெருங்கிப் பழகிவிட்டனர். நான்கு வருடங்களின் பின் வைத்திய அதிகாரிக்கு மாற்றல் அறிவிப்பு வந்தது. சும்மா சொல்லக்கூடாது ஊரே கதிகலங்கிய பிரியாவிடைதான் நிகழ்ந்தது.
பிறகென்ன, காலம் எல்லாவற்றையும் ஆற்றியவாறே பயணித்தது. அப்போதெல்லாம் தொலைபேசி, இணையவலைத் தொடர்புகளா இருந்தன? தொலைவிலிருந்தாலும் பேசி உறவாட! அப்போதெல்லாம் வைத்தியசாலைக்கும் அதனது ஊழியர்கள் தங்குமிடங்களுக்கும் மட்டும்தான் மினசாரம், ஊராருக்கு அரிக்கேன் விளக்குகளும் பெற்றோமெக்சுகளும்தான்.
நான்கைந்து மாதங்கள் போனதே தெரியவில்லை. மாரிகாலம் நெருங்கிக் கொண்டிருந்தது. இராசையாவுக்கு ஒரு அஞ்சல் கடிதம் வந்து ஊராரை அசரவைத்தது. வைத்தியர்தான் போட்டிருந்தார் என்பதை உறையின் முகவரி விபரத்திலிருந்து அறிந்த இராசையா வீட்டாருக்கு மகிழ்ச்சியென்றால் அப்படியொரு மகிழ்ச்சி.
ஆனாலும் கடிதத்தை அவர்களால் வாசிக்கவே முடியவில்லை. அதில் கனக்க எழுதப்படவே இல்லை. நீட்டுக் கோடுகளுடனான ஆங்கில வரிவடிவில் மூன்று நான்கு வரிகள்தான் இருந்தன. 
என்ன செய்வதென்று! யோசித்தார் இராசையா. « எதுக்கும் சின்னத்தம்பி அண்ணையிட்ட கொண்டு போய்க் காட்டுவம்! » என்ற முடிவோடு கிளம்பினார். அன்றைக்கெண்டு சின்னதம்பியாரும் வீட்டிலேயே இருந்தது நல்லாகப் போயிற்று.
« அண்ணை! இதை ஒருக்கா வாசித்துக் காட்டுங்கோவன் » மிகுந்த மகிழ்வும் குழைவும் குரலில் கலந்து வந்தது.
« யாராடா! உனக்கு கடிதமெல்லாம் போடுறது? உன்ர இன-சனமெல்லாம் இவ்வூரில்தானே இருக்கிறார்கள்! » சின்னத்தம்பியாருக்கு ஆச்சரியமோ ஆச்சரியம்.
ஆனால் பாவம் சின்னத்தம்பி! இவரால் ஒரு வரிதானும் வாசிக்க முடியவில்லை. 'என்ன செய்யலாம்?' அதிகமாகவே யோசித்தார்கள். அப்போது பக்கத்துவிட்டுக்காரர் ஐயம்பிள்ளை தனது அலுவலுக்காக அங்கு வருகிறார். கடிதம் அவரது கைக்கு மாறியது. ம்... ம்... அவராலும் முடியவில்லை.
ஆனால் ஐயம்பிள்ளை கெட்டிக்காரன், டக்கு டக்கென ஐடியாவைக் கொட்டக்கூடியவர். இதனால் ஐடியா ஐயம்பிள்ளையென்றும் இவருக்கு ஒரு பெயர். இதைச் சுருக்கி 'ஐய் ஐய்' என்றும் இவரில்லாதபோதில் இளவட்டங்கள் குறிப்பிடுவார்கள்.
« யாருடா இதைப்போட்டது? நம்ம டாக்குத்தர்தானே..... » ஐயம்பிள்ளையாருக்கு ஐடியா வந்துவிட்டதை அவரது கண்ணும் முகமும் அப்படியே வெளிப்படுத்தன.
« ஓமோம்!!.. » இராசையாவினதும் சின்னத்தம்பியாரதும் குரல்கள் கோரசாக வெளிப்படது ஆச்சரியம்தான்.
« அடேய்!..... அப்ப இதை ஓடலியாரிட்டக் காட்டித்தானே வாசிக்க வேண்டும்!! » குரலிலும் நடைபாவனையிலும் விஞ்ஞானக் கண்டுபிடிப்பைக் கண்ட விஞ்ஞானியின் பெருமிதம் அப்படியே வெளிப்பட்டது.
அசந்து போனார்கள் சின்னத்தம்பியாரும், இராசையாவும்! « அடடே.... இதெல்லாம் எனக்கு வரவேயில்லையே...! » எனவாக ஒரே சமயத்தில் எழுந்த தனித்தனிக்குரல்களுடன் தத்தமது தலைகளைத் தட்டியவாறு.
« தம்பியவை! நெடுகிலும் மண்வெட்டியைப் பிடிச்சுக் கொண்டிருக்கப்பிடாது.... கொஞ்சம் புத்தியையும் கிளற வேண்டுமப்பா... » ஐயம்பிள்ளையின் நளினம் குரலில் தவழ்ந்தது.
« அப்ப ஓடலியார் வீட்ட போவமே! » ஆர்வத்துடன் எழுந்தார் இராசையா. ஏதுமே பேசாது கூடவே எழுந்தார் சின்னத்தம்பி.
« அதுதான் நல்லது, இப்ப ஓடலி இருப்பான்!! நானும் வாரனடா...!! » ஐயம்பிள்ளையாரின் ஆர்வம் அவரது செயலில் அப்படமாக வெளிப்பட்டது. வெளியே முன்னிருட்டு காலம் ஆகையால் இருள் மென்மையாகக் கௌவத் தொடங்கியிருந்தது.
கொஞ்சம் தொலைவிலிருந்த ஓடலியாரின் வீட்டுக்கு அவரவர் சைக்கிள்களில் மிகவிரைவாகவே வந்தடைந்தனர். மூவரும் ஒன்றாக வந்ததில் ஓடலி குடும்பம் 'ஊரிலே யாருக்கோ ஆபத்தென்று' சிறிது பதைபதைத்தே விட்டது.
ஓடலியார் வீட்டுக்கு ஆசுவாசமாகப் பேச எவருமே வந்ததும் கிடையாது. இவரது வளவின் படலையும் சாமத்திலும், அதிகாலையிலுமாக எவ்வேளையிலும் ஒருவித கீச்சிடும் ஓசையுடன்தான் தனது பணியைச் செய்யும். இது பக்கத்து வீட்டு நாய்கே பரிச்சியமான விடயம். சின்னதான அசைவுக்கே ஊரை எழுப்பும் ஊர்நாய்க் கூட்டம், கீச்சிடும் ஓடலியாரின் படலைச் சத்தத்திற்கு முனகுவதுகூடக் கிடையாது.
« தம்பி ஓடலி!! இதையொருக்கா வாசித்துச் சொல்லு! » ஐயம்பிள்ளையார் உரிமையுடன் தொடங்கினார்.
« இது நம்ம பழைய டாக்குத்தருடையது தானே!! » ஓடலியார் ஆச்சரியத்துடன்.
வந்தவர்களுக்கு தென்பாகிவிட்டது. ஓடலியின் திறமையை மனதுக்குள் மெச்சிக் கொண்டனர். 'எவராலுமே எதுவுமே புரியாதிருந்த கோட்டு வரிகளை இந்தாள் எப்படித்தான் புரிகிறானோ!' சின்னத்தம்பியார் கொஞ்சம் ஆடித்தான் போனார். இராசையாவுக்கு மகிழ்ச்சியோ மகிழ்சி.

« யாருக்கு அனுப்பினவர்? » ஓடலி அறியும் ஆவலுடன்....
« யாருக்கோ.... என்னத்தைக் கேட்கிறீர் தம்பி? » ஐயம்பிள்ளை ஒன்றும் புரியாதவராக இராசையாவைப் பார்த்து « அந்த என்பலப்பை ஒருக்கா எடும்! » என்றார். இராசையாவும் மரியாதையுடன் பொக்கற்றிலிருந்த என்பலப்பைக் கொடுக்கிறார். ஓடலியாரது முகத்தில் பிரகாசமோ பிரகாசம்...! அது அரிக்கன் லாம்பின் வெளிச்சத்தில் தங்கமாக மினுங்கியது.
« உங்கட மகனுக்கும் ஏதும் வருத்தமோ? » இராரசயாவைப் பார்த்து ஓடலி.
« அது பெரிசாய் ஒன்றுமில்லை.... கொஞ்சம் வயிற்றுக் குழப்பம்தான் நண்டுக்கறியை அதிகமாகச் சாப்பிட்டுப் போட்டான்! »
« உங்களது அருமை நட்பு டொக்டர் உங்கள் அம்மாவுக்கும் உங்கள் மகனுக்கும் மருந்து எழுதியிருக்கிறார். » என்று சொல்லிவிட்டு வீட்டு அறைக்குள் செல்கிறார். இராசையாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி. « டொக்டர் தூரத்தில போனாலும் ஞாபகத்துடன் மருந்தை எழுதி அனுப்பி வைத்திருக்கிறாரே! » என்று நெகிழ்ந்து போனார்.
உள் அறையிலிருந்து வெளிவந்த ஓடலியார் இராசையாவிடம் « இந்த வெள்ளைக் குளிசையை அம்மாவுக்கு தினமும் ஒரு முறை குடுங்கோ, வழமைபோல இந்த சிவப்பு வெள்ளை நீளக் குளிசையை சளி கட்டியாக வரும்போது காலையிலும் மாலையிலும் ஐந்து நாள் மட்டும் கொடுக்க வேண்டும். இந்த நீலக் குளிசையை மகனுக்கு காலையும் மாலையும் இரண்டு நாள் மட்டும் குடுங்கோ சரியாகிவிடும். திங்கட்கிழமை வாங்கோ மிச்சத்தைத் தாறன்!! »
'அட இவன் இராசையாவுக்கு எப்படிப்பட்ட டொக்டர் நட்பாகி இருக்கிறார். நானும் அவரோட பழக நினைச்சனான்தான்.... ஆனால் என் வீட்டுக்காரி கண்ட கண்ட ஆக்களை எப்படி வீட்டுக்குள்ளால எடுக்கிறதெண்டு பிடிவாதமாக இருந்திட்டா..! ம்.....!!’ என்ற தனது மனவோட்டத்தை சின்னத்தம்பி யாருக்கும் வெளிப்படுத்தாமல் மௌனித்திருந்தார்.
தான் நினைத்தபடி நடந்துவிட்டதைக் கண்டு, ஐயம்பிள்ளையாருக்கு பெரிய சந்தோசம். முகமெல்லாம் பல்லாக சிரித்துக் கொண்டிருந்தார். மொத்தத்தில் ஏதுமே பேசாதவர்களாக அவரவர் வீடுகளுக்குத் திரும்பினர்.
இராசையா வீட்டாருக்குப் பெரும் சந்தோசம். சாமம் என்றும் பார்க்காமல் படுக்கையிலிருந்த அம்மா எழுந்து உட்காந்துவிட்டார். இராசையாவை உட்கார வைத்து அன்பொழுக இரவு உணவைப் பரிமாறினார் துணைவி.
அடுத்த மாதத்தில் ஒரு நாள், தனது மகனின் கல்லூரிப் படிப்புக்காக யாழ் நகருக்குப் புறப்பட்டார் இராசையா. இப்படியாக எப்போதாவது ஒருநாள் தான் இவர் பயணப்படுவது வழக்கம். மனுசன் இப்படியான பயணம் மேற்கொண்டால் வடை தேத்தண்ணி தவிர வேறெதுவும் சாப்பிடவே மாட்டார். நெடு நேரமானாலும் திரும்பி வீடு வந்தபின்தான் கை நனைப்பார்.
யாழ் வந்திறங்கிய இராசையாவுக்கு மகிழ்வானதொரு அதிர்ச்சி, எதேச்சையாக அந்த டொக்டரை ராணித் தியேட்டருக்கு முன் சந்தித்துவிட்டார்.
« அடடா!! வணக்கம் மிஸ்டர் இராசையா? எப்படி இருக்குறீர்கள்? அம்மா எப்படி இருக்கிறார்? பிள்ளைகள் எப்படி? »
« நீங்கள் தந்த மருந்தினால் அம்மா சுகமாவே இருக்கிறார் டொக்டர். எல்லோரும் நல்லாயிருக்கிறோம் சேர்!! நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் மகன் எப்படி இருக்கிறார்? » ஆர்வம் பொங்க மகிழ்வுடன் குசலம் விசாரித்தார் இராசையா.
« அவன்தான் போனமாதம் இலண்டனுக்குப் பயணமாகிவிட்டானே! உங்களை வீட்டுக்குவரும்படி அழைத்திருந்தோமே!! ஆனால் நீங்கள் வரவேயில்லை. என் மனைவியும் மகனும் ஆவலுடன் காத்திருந்தார்கள். ம்.....போகட்டும்!.... » என்றவர் கொஞ்சம் நிதானித்துவிட்டுத் தொடர்ந்தார்.
« உங்களுக்கு என்ன சிரமம் இருந்திச்சோ எமக்கென்ன தெரியும்? எங்கட மகனை இனி எப்ப சந்திப்போமோ....? இப்ப நானும் அவளும்தான் தனியாக வீட்டில் இருக்கிறோம்!! » டொக்டர் பட படவென தன்னிலை விளக்கத்தைக் கொட்டினார்.
« எங்களுக்கு அழைப்பை எப்போது, எப்படி அனுப்பினீங்கள் டொக்டர்! » இராசையா மிகவும் குழம்பியவராக. « போன மாதம் ஒரு கடிதத்தில அனுப்பியிருந்தனானே!! » டொக்டருக்கும் ஆச்சரியமாக இருந்ததை அவரது முகம் காட்டியது.
« கடிதமா.............! » குரலில் அவலவொலி அதிகமாகவே வெளிப்பட இராசையா வாயடைத்தவரானார்.
இவரைப் பார்த்த டொக்டருக்கு ஒன்றுமே புரியவில்லை.

-அநாமிகன்
பாரீஸ் 30.08.2013

பின்னிணைப்பு:

0 வட்டாரச் சொல் விளக்கம்

பெற்றோமெக்சு :– வெண்ணொளி பரப்பும் மண்ணெய் விளக்கு
ஓடலி :– அலோபதி மருத்துவமனையில் மருந்து கொடுப்பவர்
டாக்குத்தர் - டொக்டர் :– அலோபதி மருத்துவர்
சின்னத்தம்பி –இராசையா – ஐயம்பிள்ளை :- ஈழத்தமிழ் ஆண்களுக்கான பெயர்கள்
என்பலப் :- கடித உறை
குளிசை :- மாத்திரை
தேத்தண்ணி :- தேநீர்

0 தொடர்பான இணைப்பு: நுழைய அழுத்துக

ஓடலியார் - 'ஓடலி" யார்?



மொழி புரியாத புலம்பெயர் வாழ்வில் நாம் சந்தித்த- சந்திக்கும் 'ஓடலிமார்' ஏராளம்
'வாழ்வைப் பதிவு செய்யும்போது நாம் சிறுவயதில் அறிந்துகொள்ளப் பயன்பட்ட தடங்கள் எமையறியாது மனப்புலத்திலிருந்து உதவும். அவ்வகையில் ஒன்றானதுதான் 'செவிவழிக் கதை' இதைப் 'பாட்டி சொன்ன கதை' என்றும் சொல்வார்கள்.
புலப்பெயர்வின் ஆரம்பத்தில் கடித உறையையும் - அது பதிவுத்தபாலாக வந்ததா? அல்லது சாதாரணமாக வந்ததா? என்பதையும் யாருக்கு வந்தது? அவரது நிலை என்ன? என்பதையும் அறிந்திருந்த சிலர் நம்மவர்களின் கடிதங்களை வாசித்துச் சொன்னதை நினைக்க இப்போதும் சிரிப்பாகத்தான் இருக்கிறது.
'ஓடலி' என்பவர் தொழில் முறையில் அந்தக்கால வைத்தியசாலையில் மருந்து கலக்கிக் கொடுப்பவர். டாக்டர் எழுதிக் கொடுக்கும் சீட்டுகளைத் தெளிவாக அறிந்துகொண்டு மருந்து கொடுப்பதாக ஊராரால் அதிசயமாகப் பார்க்கப்படுபவர். மேலதிகமாக அறிவிருப்பமாயின் மேலே உள்ள இணைப்பின் வழியாகச் செல்க!
இக்கதை ஈழத்து தமிழ் நாட்டார் வழக்கிலான உரையாடல் மொழியில் எழுதப்பட்டுள்ளது இச் செவிவழிக்கதை, 
இது சுவிஸ் நிகழ்கலை ஈடுபாட்டு நண்பன் ரமணன் தொலைபேசி வாயிலாகக் கூறிய நகைச்சுவைக் கதையின் எழுத்துரு வடிவம்.



Thursday 29 August 2013

« பாரிஸ் ஈழத் தமிழ்த் திரைவிழா 2013»

திரை விமர்சனச் சரம் 1

அமைதியாக நடந்த புலம்பெயர்  - ஈழத் தமிழர்களின் முழுநீளத் திரைப்படங்களின் காட்சி மஞ்சரி
« பாரிஸ் ஈழத் தமிழ்த் திரைவிழா  2013»

திரைத்துறையில் ஈடுபடும் நமது புலம்பெயர்வு வாரிசுக் கலைஞர்கள், செயலர்கள் தங்களது திறனாற்றல்களை அர்ப்பணிப்பான செலவிடுதலுடன் வழங்குகிறார்கள் என்பதை சமூகப் பிரக்ஞையுடைய ஆர்வலர்களும், தனவந்தர்களும், முதலீட்டார்களும், ஊடகங்களும் கவனம்கொள்ள வேண்டிய தருணமிது.




சென்ற 2013 ஆகஸ்ட் 23 - 24- 25  ஆகிய நாட்களில் தமிழர்கள் பெருமளவில் குவியும் பாரீசு 'லாச்சப்பல்' வட்டாரத்திலமைந்த 'தங்கவயல்' திரையரங்கில் ஏழு புலம்பெயர்வு ஈழத்தமிழர் திரைப்படங்களும் ஒரு ஈழத்தில் படமாக்கப்பட்ட திரைப்படமுமாகக் காட்சியாகின. எவ்வித ஆர்ப்பாட்மும் இன்றி உறவு(கனடா), இனியவளே காத்திருப்பேன்(அவுஸ்திரேலியா), சில்லு(கனடா), இருமுகம்(சுவிஸ்), சகாராப் பூக்கள்(கனடா),  STAR 67(கனடா), மாறு தடம் (சுவிஸ்) புலப்பெயர்வுப் படங்களுடன் என்னுள் என்ன மாற்றமோ(யாழ்ப்பாணம்) என்ற யாழில் படமாக்கப்பட்ட படமும் காட்சியாகின. 
நினைக்கவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இலங்கையில் ஈழத் தமிழரின் திரைப்படமாக வெளிவந்தவை  வெறுமனே எண்ணக்கூடியதாகி வரலாறாகிவிட்டது. ஆனால் வெறும் முப்பது வருடப் புலம்பெயர்வு வாழ்வில் அடுத்துவரும் தலைமுறையினர் அடுக்கடுக்காக தமது படைப்புகளால் மிளிருகிறார்கள். பிரான்சின் ஈழத் தமிழ்த்திரையிடல் வரலாறில் பல்வேறு நாடுகளில் வெளிவந்த புலம்பெயர் ஈழத் தமிழ்த் திரைப்படங்களைத் திரையிடும் நிகழ்வை நிகழ்த்தி முன்னுதாரணமாகிவிட்டார் ‘தடம்’ முன்னெடுப்பாளர் குணா. அடுத்துவரும் காலங்களில் 10000 ஈரோக்கள் வழங்கும் போட்டிகளை நடத்தப்போவதாக இவர் அறிவித்திருப்பதென்பது இத்துறையை வளர்த்தெடுக்கும் இவரது ஆர்வத்தைக் கட்டியமிடுகிறது.
ஆரம்பத்தில் சலிப்புற வைத்த காட்சிரங்கம் போகப்போக தானாகவே பார்வையாளரை உள்வாங்கி அரவணைத்து கடைசியாகத் திரையிடப்பட்ட 'STAR 67'  படத்தால் கௌவிக் கொண்டது.
அரங்கம் நிறைந்த கூட்டமோ, பல்தரப்பட்ட பார்வையாளர்களோ இருக்கவில்லை. திரைக் கலைஞர்கள், திரை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், படைப்பாளிகள், திரைத்துறைசார் ஈடுபாட்டு இளைஞர்கள் எனவாகவே அரங்கம் களைகட்டியிருந்தது. ஆயினும் முடிவில் நம்பிக்கை ஒளியைப் பரவியதாகவே நிறைவுற்றது.
அறிவிக்கப்பட்ட ஏழு படங்களும், சிறப்புத் திரையிடலான 'மாறுதடம்' படமுமாக எட்டுத் திரைப்படங்களின் பிரதிபலிப்புப் பார்வையின் பொதுப் பகிர்வே இக்கட்டுரை. இது கொத்தாகப் பார்க்கக் கிடைத்த ஒப்பீட்டு உணர்வால் உந்தப்பட்டே பரிசீலனையாகிறது. இது அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடும் கூற்றாக, முதலில் குறை- நிறைகளுடனான பரிசீலிக்கக் கூடிய எனது இரசனைத் தெரிவாக STAR 67, மாறுதடம், இருமுகம், உறவு ஆகியன தெரிவாகின. இதனுடன் யாழில் படமாக்கப்பட்ட என்னுள் என்ன மாற்றமோ  என்ற படம் காவிவந்த ‘சொல்லாத செய்தி’க்காக சிறப்பு விமர்சனத் தகுதியைப் பெற்றுள்ளது.
எட்டுப் படங்களில் நான்கு முதற் பார்வையில் பொதுத் தேர்வாகியது இத் திரையிடல் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்றே பதிவிட முடியும். நம் அடுத்த தலைமுறையினரால் 'நம்மால் முடியும்" என்பது இன்னுமொரு முறை நிரூபணமாகியுள்ளது. இந்த நான்கில் பரவாலான பொது மக்களது பார்வைக்குக் கொண்டு சென்றால் வரவேற்பைப் பெறும் படங்களாக STAR 67, மாறுதடம் தனித்துவமாக வேறுபட்டிருந்தன. ஏனைய இருமுகம், உறவு ஆகியன இரண்டும் தகுநல் தொகுப்பாக்கம் (Editing) செய்யப்படுமானால் மேலெழும் போட்டிக்குச் செல்லும்.
உடல் மொழியாகப் பதிவாகும் சட்டகக் காணொலித் திரைமொழியில் நிறையவே ஆண், பெண், இளைஞர், சிறார் எனப் பலதரப்பட்ட நடிகர்கள் கலைஞர்களாகக் கவனத்தைப் பெற்றார்கள். ஒளிப்பதிவு தொழில்நுட்பம் இசை என திரையின் பல்துறை தொழில்நுட்ப ஈடுபாட்டையும் வெளிப்படுத்தினார்கள். அதிகமாக பெண்கள் ஈடுபாட்டோடு சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அடுத்த தலைமுறையினர் தமக்கேயுரியதான சிறப்புகளுடனும் உடல் மொழி இலாவகத்துடனும் திரை வழியில் கவனம் பெற்றிருக்கிறார்கள். இதற்கு மாறு தடம் சிறப்பான கவனத்தைப் பெறுகிறது.

இப்படத்தின் காட்சிகள் இலங்கையிலும் சுவிஸிலுமாக அதிகவளவான பாத்திரங்களுடன் கவனத்துடன் படமாக்கப்பட்டுள்ளது. இது பெரும் நேர மற்றும் பொருட் செலவைச் செய்திருக்கும் என்பதை முதற்பார்வையிலேயே புலப்படுத்துகிறது. புலம்பெயர்வு ஈழத் தமிழ் நிகழ்கலை அரங்கியலாளனாகிய ரமணனின் இயக்கத்தில் வெளியானதொரு குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படம் இது. இவருடன் அடுத்த தலைமுறை இளைஞர்கள் தலைமுறை இடைவெளியில்லாது இயல்பாக நடிப்பதை இப்படம் பதிவிடுகிறது. இந்த வகையில் இப்படம் தனித்துவ முத்திரையைப் பதிக்கிறது. கலைஞன் ரமணன் இவ்வரங்கிலிருந்ததால் அனைவரது பாராட்டையும் நேரடியாகவே பெற்றுக் கொண்டார்.


STAR 67 :  கமெராத் திரைமொழியால் கதை சொல்லும் இயல்பான திரைக்கதையுடன் கனடா இளைஞர்கள் களமாடிய திரைப்படமாகி பார்வையாளர் அனைவரையும் நிமிர்ந்திருக்கச் செய்த படமாகும். இயல்பான நடிப்பு, தொடராக இலாவகரமாக நகர்த்திச் சென்ற கதைசொல்லல். பன்முகப் பரவலான பார்வையை அகட்டிப் பதிவிட்ட கச்சிதமான கனடாக் காட்சிகள் கொண்டாதன படம். திரைப்படம் முடிந்த பின்பும் பார்வையாளர்களை தொடரும் கேள்விகளுடன் பயணிக்க வைத்த இயக்குநர் பாராட்டப்பட வேண்டியவர். இது சர்தேச பார்வையாளர்களும் விரும்பிப் பார்க்கும் படமாகி தனியாகக் காட்சியளித்தது. எம்மவர்களின் படைப்புகளாக கனடாவில் இருந்து வெளிவந்த தமிழிச்சி, 1999, A Gun and A Ring வரிசையில் இப்படமும் கவனம் கொள்ளக்கூடியதாகப் பதிவாகிறது.

திரைத்துறையில் ஈடுபடும் நமது புலம்பெயர்வு வாரிசுக் கலைஞர்கள், செயலர்கள் தங்களது திறனாற்றல்களை அர்ப்பணிப்பான செலவிடுதலுடன் வழங்குகிறார்கள் என்பதை சமூகப் பிரக்ஞையுடைய ஆர்வலர்களும், தனவந்தர்களும், முதலீட்டார்களும், ஊடகங்களும் கவனமெடுக்கவேண்டிய தருணமிது. ஆற்றலாளர்கள் கவனங்கொள்ளப்படாது அலட்சியப்படுத்தப்படுமானால் புலம்பெயர்வு தமிழ்ச் சமூகம் என்னும் வரைபுத் தளம் தள்ளாடியே அசைவுறும். உலக வாழ்வோட்டத்தில் தனக்கானதொரு கலையைக் காவிச் செல்லாத சமூகம் முழுமையடையாது.
பொதுவாக வேட்டை நாய் ஓட்டம் என்று சொல்லுவது போல் தொடக்கத்தில் விறுவிறுப்பாக ஆரம்பிக்கும் படங்கள் கடைசியில் ஓய்ந்து தள்ளாடி நிறைவு காணுபவையாகின்றன. சில வேளையில், மாற்றமடைந்த முடிவுக்கு இயக்குநர் செல்வதாகவும், தெளிவான திட்டமின்மையையும் பறைசாற்றின.
இருமுகம் படம் இளைஞர்களாகப் பரிணமிக்கும் முதிர் பதின்ம வயது புலம்பெயர்வு மாணவர் மனநிலையில் பயணிக்கும் படமாக இருந்தது. இப்பிராயத்தினருக்கு இயல்பாகவரும் 'சாகச உணர்வுந்துதல்’ மிக இயல்பான கதையாகி பார்வையாளனை ஈர்த்திருந்தது. இதில் பங்கேற்ற இளைஞர்கள் அழகாகக் கதையை திரையில் பார்க்கவிட்டார்கள். ஆனால் 'தமது பிள்ளைகளை கெட்டவர்களாக நினைத்துவிடுவார்களோ?' என்ற பெருசுகளின் சிந்தனைக்கோலம் இதனுள் உள்ளீடாக இப்படம் தேவையில்லாமல் நீட்சியுற்று பொருத்தமில்லாத செயற்கை வேடமிடல்களுடன் நாடகமாகி முடிந்தது.

உறவு கனடாவிலிருந்து வித்தியாசமான சவாலான பாத்திரங்கள் -கதையமைப்புடன் தயாரான படம். பாடல் ஆடல் கலை ஈடுபாட்டுக் குடும்பமொன்றின் கதை. இதில் மகளாகவும் மருமகனாகவும் பாத்திரங்களாகி நடித்தவர்கள் பார்வையாளரின் கவனத்தைப் பெற்றார்கள். நவீன காலச் சினிமா தொடர்பான புரிதலை மறுக்கும் நாடகத் தன்மையான பாத்திரமாக்கலில் அதீத நம்பிக்கை கொண்டிருந்த இயக்குநர் இப்படத்தை மிக நீண்டதொரு படமாக்கிவிட்டார். குடும்பம் என்ற சட்டகத்தில் அடக்கபட்ட 'ஆணாதிக்க - பெண்ணடிமை' முரண்பாட்டை புலம்பெயர் நாடுச் சூழலை அறிந்த பார்வையாளர் சலிப்புறும் நீட்சியுடன் பதிவாக்கிவிட்டார்.

அந்தக் காலங்களில், எமக்காக சினிமா எடுத்தவர்கள் நாடகங்களிலிருந்து வந்தவர்களாகவும், தென்னிந்திய சினிமாவின் தாக்கத்தால் மருண்டு போனவர்களாயும் தமது படைப்புகளை வெளிப்படுத்தினார்கள். ஆனால் இத் தொகுப்புப் படங்களில் சிலர், தொலைக் காட்சித் தொடர்களால் உந்தப்பட்டவகளாகி நிதானமாக நீண்டு செல்லும் திரைக் கதைகளை தமது படைப்புகளில் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
இந்நிகழ்வில் சுவிஸ், கனடா, அவுஸ்திரேலியா, இலங்கை ஆகிய நான்கு நாடுகளில் இருந்து மட்டும் வெளியான படங்களே இடம் பெற்றிருந்தன. பிரான்சிலிருந்து ஒருபடமேனும் இடம் பெறவில்லை. இதில் வேறு ஐரோப்பிய நாடுகளும் அடக்கம்.

000 000
என் கவனத்தை ஈர்த்த படங்கள் STAR 67, மாறுதடம் தொடர்பாக பின்னர் தனித்தனியாகப் பதிவிடவிருக்கிறேன்.
பார்க்க வைத்து  பதிவிடத் தூண்டிய படங்கள்  சலன முன்னோட்டமாக (எனது தெரிவு வரிசையில்)
1.) STAR 67

2.) Maaru thadam மாறு தடம்

3.) Irumugam - இருமுகம் 

4.) Uravu உறவு

இணைப்புகள் காட்சிப் படங்கள் கூகிள் தகவல் வங்கியிலிருந்து நன்றியுடன் பெறப்பட்டது
தொடர்பான இணைப்பு:

« பாரிஸ் தமிழ்த் திரைவிழா »


- சலனம் முகுந்தன்
நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம்!

பாரீசு 29. 08. 2013

சிதிலமாகி இளக்காரச் சிறுமையாகிச் சிதைவுறும் கலாச்சார அடையாளங்கள்

குஞ்சரம் 16

சிதிலமாகி இளக்காரச் சிறுமையாகிச் சிதைவுறும்
கலாச்சார அடையாளங்கள்

பாரீசுக்கு வான் வழியான உலகப் பயணத்தைத் தரும் முக்கியமான தளம் சார்ல் டு கோல் விமான நிலையம். உலகின் எந்த விமான நிலையத்திலும் கிடைக்காததொரு அனுபவத்தை இந்தப் பாரிய விமான நிலையம் தருவதாக பல வெளிநாட்டு நண்பர்கள் எமக்குத் தெரிவித்திருக்றிhர்கள். இந்த விமான நிலையத்தில் பயணிக்கவோ, பயணம் அனுப்பவோ, வரவேற்பதற்காவோ எப்போதுமே கூட்டம் நிறம்பி வழிந்த வண்ணமே இருக்கும்.
இது ஒரு வெள்ளையர் நாடுதானா? என்று நம்மவர்களும் வினவுமளவுக்கு, இங்கு நடமாடும் மனிதர்கள் பல்லினப் - பல்தேசியர்களாக தத்தமது தனித்துவமான வேறுபட்ட கலாச்சார ஆடை அலங்காரங்களுடன் காணக்கிடைப்பார்கள். 'சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" என்னும் விருதுவாக்கியக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்தும் ஒரு நாட்டின் தலைநகரிலமைந்த விமானத்தளமே அந்த மானிட அழகியல் பண்பை வெளிப்படுத்தி நிற்பதில் என்னதான் ஆச்சரியம் இருக்கிறது.
முப்பது வருடங்களுக்கு மேலான புலப்பெயர்வின் நீட்சியில் எவ்வளவோ தன்னிலை முன்னிலை படர்க்கை மாற்றங்களை காண்பவர்களாகவே நாமும் வாழ்வில் சமைந்து போயுள்ளோம்.
சென்ற மாதத்தில் ஒருநாள், இந்தக் கோடை விடுமுறையை இலங்கையிலிருக்கும் தனது பாசத் தாயாருடன் கழிப்பதற்காகப் பயணப்பட்ட எமது நண்பனின் துணைவியாரை வழியனுப்பச் சென்றிருந்தோம்.
பயணத்தை உறுதி செய்யும் இருக்கை அட்டை (boarding pass) பெறுவதற்காக நீண்ட வரிசையில் பயணப் பொதிகளுடன் காத்திருந்தோம். அது சிறிலங்கன் ஏயர்லைன் விமானம். பல்தேசியர்களும் பல்வேறு ஆடை அணிகளுடன் தத்தமது கனவுகளுடனான எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்தனர்.
நம்மவர்களை (ஈழத்தமிழர்கள்) இப்போது இலகுவில் அடையாளம் கொள்ள முடியாது. அதுவும் பெரும்பாலான அடுத்த தலைமுறையிலானவர்களை நம்மவர்கள்தானா என்று பேசிப்பார்த்தால் மட்டுமே இனங்காண முடியும். இருந்தும் அங்கொன்று இங்கொன்றாக நம்மவர்களும்(ஈழத்தமிழர்கள்)- இந்திய வம்சா வழித் தமிழர்களும்- சிங்களவர்களும், இந்திய - பாக்கிஸ்தானியர்களும்- வங்காளிகளும் புலப்படவே செய்வர்.
நாம் புலப்பெயர்வில் வந்திருந்த ஆரம்பக் காலங்களில், வெள்ளை இனத்தவர் எல்லோரையும் ஒரே மாதிரித்தானே பார்த்திருந்தோம். காலம் கடந்து செல்ல இன்று கிழக்கு-மேற்கு ஐரோப்பியர், ஸ்கண்டிநேவியர், இத்தாலியர், போர்த்துகல்காரர், ஸ்பானிஸ்காரர், ஜேர்மனியர், இங்கிலாந்து ஆங்கிலேயர்- அமெரிக்கர் என எமது மூளைப் படிமம் வேறுபிரிக்கும் திறனைப் பெற்றுத்தானே இருக்கிறது. ஆனால் நம் வாரிசுகளாகி நடமாடுபவர்களது நடையுடை பாவனைகளால் இப்போது எமது அடுத்த தலைமுறையினரை இலகுவில் இனங்காண முடியாதவர்களாகி விட்டோம். இந்த தலைகீழ் மாற்றத்தை நினைக்கவே முகத்தில் புன்முறுவல் பூக்கிறது.
பிரியாவிடைபெறும் நண்பனின் துணைவியாரும், எனது துணைவியாரும் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
'வெயில் நேரமாகையால், பாவாடை சட்டையோடு போகலாம் என்றுதான் நினைத்தேன். அவரும் அப்படித்தான் சொன்னவர்."
'ஓமோம், பிறகென்னத்திற்கு டவுசர் சட்டையோடு கிளம்பி விட்டீர்?" எனது துணைவி ஆச்சரியத்துடன்.
'இல்லையப்பா, இங்கு வரேக்கே அப்படித்தானே வந்தோம். அப்ப நினைச்சுப் பார்த்திருந்தோமா டவுசர் போடுவமென்று!" பெருமை முகப் பொலிவுடன் பிரகாசித்தது.
'நான் நிறையவே யோசித்தனான்! வந்த மாதிரியே திரும்பிறதிலே என்ன இருக்கு? இங்கு நாளாந்தம் இப்படித்தானே உடுக்கிறம். அப்ப இப்படியே போவம் என்று முடிவெடுத்தனான்."
எனது துணைவி மௌனமாகவே கேட்டுக்கொண்டிருந்தார். 'சும்மா" என்ற சொல் தமிழில் மிகவும் வித்தியாசமானதொரு தனித்ததொரு சொல். இச்சொல் தரும் பொருளடிப்படையில் 'சும்மா"வாக இருக்கவே முடிவதில்லை. காத்திருக்க நிர்ப்பந்திக்கப்படும் வேளையில், நம்மை இந்த 'சும்மா" எவ்வளவோ விடையங்களை அவதானிக்கத் தள்ளிவிட்டுவிடுகிறது. இப்படியானதொரு நிலையில் அனைத்தையும் கிரகிப்பவனாகினேன். இந்நிலையில், தொலைவில் ஒரு குடும்பம் தமக்கான இருக்கை உறுதியட்டையைப் பெற முன்னேறியிருந்தது.


'அங்கே பாருமப்பா.....!" நண்பனின் துணைவி வரிசையின் முன்னணியில் இருந்த அக்குடும்பத்தை என் துணைவிக்குக் காட்டினார். நானும் ஆர்வ மிகுதியில் பார்க்கிறேன். எனக்கு ஏதும் புதினமாகத் தெரியவில்லை.
'எதைப் பாரக்கச் சொல்கிறீர்?" எனது துணைவியார்
'அதுதான்... அவவுடைய உடுப்பைப் பாருமேன்..!"
'அந்தப் பச்சைச் சாறியுடன் இருப்பவரைத் தானே சொல்கிறீர்!"
'ஓமப்பா..... இங்கிருந்து சாறியோடு கிளம்பிட்டா!....ம்!!" என்றவாறு நையாண்டிச் சிரிப்பை வெளிப்படுத்தினார் நண்பனின் துணைவி.
'இந்தியக்காரராக இருக்கும்!" எனது துணைவி.
'அது இல்லையப்பா.... இந்தியர்களென்றால் சுடிதாரோடுதானே போவார்கள்? சாறி உடுத்துவதென்றாலும் எத்தனை புத்தம் புது ஸ்ரைலில் மினுங்கும் சாறிகள் கிடைக்கின்றன... இப்படியாக கிளடுகள் உடுத்துற பிளேன் சாறியுடனா போவார்கள்?" அவரது நக்கல் தொடர்ந்தது. எனது துணைவியாரும் அவருடன் இணைந்து சிரிக்கிறார். இது அப்பெண்ணை இவர்கள் இளக்காரமாக நினைப்பதாக என்னைத் துணுக்குற வைத்து, அதிக கவனமெடுக்கத் தூண்டியது.
முன்சென்ற குடும்பத்தை  உற்று நோக்குகிறேன். அந்தப் பெண் இரண்டு சிறு பிள்ளைகளும், கணவனுடனும் காணப்பட்டார். அவர் உடுத்தியிருந்தது பச்சை நிற காஞ்சிபுரம் பட்டுச் சாறி. தொலைவிலேயே அது பெறுமதி வாய்ந்ததென என்னால் ஊகிக்க முடிந்தது. என்னிடமிருந்து தானாகவே கிளம்பியது பெருமூச்சு.
தொலைக் காட்சிச் சட்டகங்களுக்குள்ளாக வெளிப்படுத்தப்படும் தந்திர அழகியல் நம்மவர்களுக்கு பாரம்பரிய பெறுமதியான பிடவைகளை இளக்காரமாக ஒதுக்கி, மினுக்கும் மின்னும் வட இந்திய மொடல் உடுபுடவைகள் மேல் அதீத ஈடுபாட்டைக் குவித்துவிட்டன. இது தேசங்கள் கடந்தும் கலாச்சார எல்லைகள் தாண்டியும் கௌவிக் கொண்டு வியாபித்துவிட்டன.
வழியனுப்பிவிட்டு திரும்புகிறோம். சிறிலங்கன் ஏயர்லைன் விமானிகள் இருவரும், கூடவே ஆறு விமானப் பணிப் பெண்களும் கம்பீரமாக மலர்ந்த முகத்துடன் நின்று கொண்டிருந்தனர். அந்தப் பணிப் பெண்கள் தமக்கேயுரியதான மென் நீல மயில் இறகுக் கண் போடப்பட்ட நைலோன் சாறியுடன் அழகாக இருந்ததை இன்றுதான் நான் தெளிவாகப்; பார்த்தேன். என்னையும் அறியாததொரு மகிழ்வு எனக்குள் கிளர்ந்தது.
000 000

ஒரு மாத இடைவெளியின் பின் ஒரு நாள், பிரான்சு திரும்பும்; நண்பரின் துணைவியாரை அழைக்கச் சென்றிருந்தோம். இது பெரும் காத்திருப்புக்கு இடமளிக்கவில்லை. விரைவிலேயே வெளி வந்துவிட்டார்.
வண்டியில் திரும்பிக் கொண்டிருக்கையில், வழக்கமான குசலம் பகிர்ந்தபின் காலை உணவு பற்றிய விசாரிப்புடன் உரையாடல் தொடங்கியது.
'சிறிலங்கன் ஏயர்லைனில சாப்பாடு நன்றாகத்தான் இருக்கும் என்று கேள்விப்பட்டனான்." எனது துணைவி.
'என்ன சாப்பாடு…. !  காலைச் சாப்பாட்டுக்குச் சோறும் குழம்புமா போடுறது?"
'சோறா?"

'அதுதான் பால் சோறு!"
'என்னது புக்கையா?"
'ஓமோம் புக்கையும், இறைச்சிக் குழம்பும், பழமும் தந்தார்கள். கொஞ்சப் புக்கையை மட்டும்தான் நான் சாப்பிட்டனான்." என்று சொல்லி நிறுத்திவிட்டு தொடர்ந்தார். 'என்னுடன் வந்த வெள்ளைக்காரரெல்லோரும் வழித்து வழித்துச் சாப்பிட்டாங்கள்!"
'நீர் வேறு சாப்பாட்டைக் கேட்டிருக்கலாம் தானே?" எனது துணைவி.
'அது பால்ச் சோறு என்றதால சக்ரைப் புக்கை என்று கேட்டுவிட்டன்!"
'ஆனால் வடிவாக சதுரத் துண்டான புக்கையை இறைச்சிக் குளம்புக்குள் வைத்துத் தந்திருந்தார்கள். நான் எங்கட குழம்பே சாப்பிடுறது கிடையாது. காலையில யாரும் இப்படியாக மொத்துவாங்களா?" இதைச் சொல்லும்போதே அவரது முகத்தில் ஆச்சரியம் பளீரிட்டது.
'அம்மா! உலகில் 75 வீதமான மக்கள் காலை உணவாக இறைச்சி முட்டை வகையானதையே சாப்பிடுகிறார்கள். பட்டர் ஜாம் வகையானதை குறைந்த அளவானவரே சாப்பிடுகிறார்கள்" கேட்டுக் கொண்டிருந்த அவரது மகன் தெளிவாகப் பதிலுரைக்கிறான்.
அமைதியாக வாகனம் ஓடிக் கொண்டிருக்கிறது.
000 000


முப்பது வருடங்களுக்கு முன்னரான வாழ்வில் எமக்கான காலை உணவாக கருவாட்டுக்குழம்பும், பழைய மீன் குழம்பும் கிடைக்கவில்லையா? முட்டைக் கோப்பி அருந்தவில்லையா?
நீடிக்கும் புலப்பெயர்வு வாழ்வில், எமது உணவு வகைகளில், உடுபிடவை வகைகளில், நடைமுறைகளில் எவ்வளவு மாற்றங்கள்? எமது மூலப் பழக்க வழக்கங்களையே நாமே மறந்துவிட்டிருக்கிறோம். போகும்போது சாறி இளக்காரமாகியது. திரும்பும்போது காலை உணவு பட்டிக்காட்டு வகையாகிறது.
ஆனால் இந்நடைமுறையைத் தொடரும் சிறிலங்காவின் ஆளும் பெரும்பான்மை இனம் பெருமிதம் கொள்கிறது. இது ஜனாபதிபதியின் உடையில் மட்டும் வெளிப்படவில்லை.
ஏதும் பேசாமல் இறுகிய மனதுடன் பயணத்தைத் தொடர்கிறேன்

 (படங்கள் கூகிள் இணையத்திலிருந்து நன்றியுடன் இணைக்கப்படுகிறது.)
.-முகிலன்

பாரீசு 29.08.2013

Tuesday 27 August 2013

ஒட்டுக்கேட்ட மனநோயாளி

கதைச் சரம் 20
செவிவழிக் கதை 17

ஒட்டுக்கேட்ட மனநோயாளி


அந்த நகரில் மனப்பிறழ்வு வைத்தியசாலை ஒதுக்குப்புறமாக அமைக்கப்பட்டிருந்தது. சுற்றிவர மரச்சோலையான பகுதியாக இருந்தாலும், மிகவும் உயர்ந்த மதிற் சுவராலான வேலிக்குள் இது அமைந்திருந்தது. பல்வேறு தொகுதிகளாக உட்சுவர்ப் பிரிப்புகளும் கட்டிடங்களுமாக தனித்துவமாக காட்சியளைித்தது இந்த வைத்தியசாலை.
இதில் தெளிவடைந்து பெரும் முன்னற்றமடைந்த நோயாளிகளுக்கான விசாலமான தொகுதி (ward) தனியாக வேறு பிரிக்கப்பட்டிருந்தது. மொத்தம் இருபது கட்டில்களும் அவர்களுக்கான பொருட்கள் வைத்துக் கொள்வதற்காக நேர்த்தியாக வைக்கப்பட்டுள்ள தளபாடங்களுடன் அழகாகவே இருக்கும். தேறிய நோயாளிகளின் பாராமரிப்பினால் உருவான பூக்களும், காய் கறிகளுமான சிறிய தோட்டமும் இவ் வளாகத்திலிருந்தது. இவ்வளாகம் அந்தக் கட்டத் தொகுதிக்குள் தனித்துவமானதொரு அழகாக எப்போதும் சுத்தமாகவே இருக்கும். இவர்களது தொடர்பார்களாகப் பணியாற்றும் கண்காணிப்பாளர்களும், தாதிகளும் மலர்ச்சியுடன்தான் காணப்படுவார்கள். இந்தத் தங்குகூடத்தில் பணியாற்றுவதற்கு இந்த வைத்தியசாலைப் பணியாளர்களிடையில் என்றைக்குமே ஏகப்பட்ட போட்டிதான்.
ஒருநாள் காலை உணவு முடிந்த வேளையில், அந்த தனி வளாகச் சுவரொன்றில் தனது இடது காதை ஒட்ட வைத்து ஒட்டுக் கேட்கத் தொடங்கினார் ஒருவர். இவரது செய்கையைப் பார்த்த இன்னொருவர் முதலாவதாளிடம், "என்னப்பா நடக்குது?" என ஆர்வம் பொங்கக் கேட்கிறார்.
முதலாவதாள், வலது கை ஆட்காட்டிவிரலால் தனது வாயை மூடிக் காட்டி 'உஸ்......ஸ்....ஸ்...!" என்று ஒலி எழுப்பி ஏதும் பேசக் கூடாதென சைகை செய்து, அதே கையால் அவனையும் ஒட்டுக்கேட்க சைகையால் அழைக்கிறார்.
அவரின் பின்னால், ஆர்வத்துடன் இரண்டாது நோயாளியும் தனது இடது காதை சுவரில் பதித்து ஒட்டுக்கேட்கத் தொடங்கினார். இவர்களது முகபாவம் ஒட்டுக்கேட்கும் சுவாரிசியமான பாவத்துடன் மாறிக் கொண்டிருந்தன.
இதைக் காணுற்ற மூன்றாவது ஆளும் இவ்வாறே தொடர்தார். அதன்பினாக வந்த நான்காவதும் தொடர..... இருவதாவதும் தனது காதைப் பதித்து ஒட்டுக்கேட்டக்கலானார்.
வளாகமே 'குண்டூசி விழுந்தால் ஓசை கேட்கும்" அமைதியாக இருந்தது.
அன்றைய மதிய உணவுவேளைக்கு ஒருவரும் வராததைக் கண்ட வைத்தியசாலை நிர்வாகம் நிகைத்துப் போனது. இதை அறிந்த தலைமைக் கண்காணிப்பாளர் தானே உடனடியாக நோயாளிகளைத் தேடிச் சென்றார்.
வளாகச் சுவரில் வரிசையாக நின்று ஒட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகளைக் கண்டு ஒரு கணம் திகைத்துத்தான் போனார். ஆனாலும் தன்னைத் சுதாரித்துக் கொண்டு,  'சாப்பிடவும் வராமல் இங்கு என்னப்பா நடக்குது?" ஆர்வ மிகுதியுடன் கேட்கிறார்.
'உஸ்......ஸ்....ஸ்...!" என்று ஒலி எழுப்பி வலது கை ஆட்காட்டிவிரலால் தனது வாயை மூடிக் காட்டி ஏதும் பேசக் கூடாதென சைகை செய்து, அதே கையால் அவரையும் ஒட்டுக்கேட்க சைகையால் பணித்தார் முதலாவதாள்.
மிகுந்த ஆர்வத்துடன் அவனின் முன்பாக அனைவரையும் நோட்மிட்டவாறு தனது வலது காதைப் பதித்து ஒட்டுக் கேட்கத் தொடங்கினார் தலைமைக் கண்காணிப்பாளர்.
ஒன்று... இரண்டு... மூன்று.... பத்து நிமிடம் ஏதுமே கண்காணிப்பாளருக்குக் கேட்கவே இல்லை. வெறுத்துப் போனவராகி, சுவரில் இருந்து விடுபட்டு அனைவரையும் பார்த்தவாறு "என்னப்பா.... எனக்கு ஒன்றுமே கேட்கவில்லையே!" என்கிறார் பரிதாபகரமாக.
'அடச் சீ..... இங்கே பாருங்கடா...! காலையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த எனக்கே ஒன்றும் கேட்கவில்லை. இப்பத்தான் வந்து பத்து நிமிடமாகக் கேட்ட உமக்குக் ஏதும் கேட்கவில்லையென எம்மிடமே கேட்கிறீர்;? ....என்ன..... ஆ....." என்றவாறு கண்காணிப்பாளரை மேலும் கீழும் தன் முகத்தை ஆட்டி முறைத்துப் பார்த்துச் சலித்தவாறு சுவரிலிந்து வெளிவந்தார் முதலாவது நபர். தொடர்ந்தார்கள் மற்றவர்கள்.
000

எனது பல்கலைக் கழக வாழ்வில் மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்ட நண்பன் பிகராடோ சொன்ன கதை இது. காற்றில் தவழ்ந்து வந்து நுட்பமான அறிவைச் சுட்டும் செவிவழிக் கதைககள் கரைந்து போகாமல் இணையவைலையிலும் பரவிவிடுகிறேன். கதைசொல்லிகளாக விபரணித்ததை கண்டு கேட்டு இரசித்ததை வார்த்தைகளால் வரித்துத் தடமிடுதென்பது இலகுவானதில்லை. நம் வாழ்வில் நமக்கான தனித்துவமான கதைசொல்லிகளைக் நேரடியாகத் தரிசித்தவர்கள் நாம். இன்று நம் வாரிசுகள் தொலைக்காட்சிச் சட்டக வாயிலாகவே அதிக பிம்பங்களைத் தரிசிக்கிறார்கள்.
நீண்டு செல்லும் புலம்பெயர்வு வாழ்வில் நம்மவர்களால் தொடரப்படும் சடங்கு சம்பிரதாய நிகழ்வுகளைக் காணும்போது நம் வாரிசுகளால் எழுப்பப்படும் விடையில்லாத வினாக்களுக்கான பதில் கதையாக ஞாபக மனவறையிலிருந்து மேலெழுந்தது இக் கதை.


- முகிலன்

பாரீசு 27.08.2013

Saturday 24 August 2013

புலம்பெயர் தமிழர் திருநாள் 2013 பிரான்சு





 பாரீசில் புலம்பெயர் தமிழர் திருநாள் 2013 - வள்ளுவராண்டு 2044                                                                    - வெண்பனி மூடிய தரையில் தமிழர்களாக ஒருங்கிணைந்து நிகத்தப்பட்ட தைப்பொங்கல் நிகழ்வு - 

இத் தைப்பொங்கல் 7வது ஆண்டு நிகழ்வாக பாரீசின் வடக்கிலமைந்த ஸ்ரான் நகரில் 19.01.2013 அன்று நடைபெற்றது. புலம்பெயர்ந்து வாழத் தலைப்பட்டவர்களாக நான்காவது தசாப்த காலத்தில் பயணிக்கும் முதற் தலைமுறையினருடன், முழுமையான புலம் பெயர்ந்தவர்களாக வாழத் தலைப்பட்டுள்ள மூன்றாம் தலைமுறையினரும்(பேரர்) சங்கமித்ததாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.
தமிழர்க்கு ஒருநாள் - தமிழால் அடையாளங் கொள்ளும் தனித்துவநாளாக விளங்கும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல்; நிகழ்வு பிரான்சில் பல்லின மக்கள் கலந்து கொள்ளும் நிகழ்வாகி சிறப்பித்தது.

வெளித்திடல் நிகழ்வாக பொங்கலிடல், கோலமிடல் கட்புலச் சுவையூட்டலாக அமைந்திருக்க உள்ளரங்கில் நிகழ்த்துக் கலை நிகழ்வுகள் மற்றும் தாமாகவே சுவைத்து அனுபவிக்கும் தமிழர் உணவுக் காட்சியும் கொண்டதாக செவிச்சுவையையும் நாச் சுவையூட்டலாகவும் அமைந்திருந்தது. நிகழ்கலை அரங்கினை நிகழ்த்தி வருகை தந்தோரை மகிழ்வித்தனர் சிறுவர்கள். 'கண்டியரசன் பொங்கல்" என்ற சிறு கூத்தரங்கம், மற்றும் பொங்லிடல் அரங்கில் அமைந்த பாரம்பரிய தாள வாத்திய முழக்கத்துடனான பாடலிசை அரங்கம் தமிழர் திருநாளுக்கு பெருமைகூட்டியது.

தமிழர்களின் பாரம்பரிய பாடலிசை முழங்க சிறுவர் முதல் மூத்தோர் வரை சுற்றிச் சூழ நிற்க வெளித்திடலில் பொதுப் பொங்கலிடப்பட்டது. பொங்கலுக்கான அரிசியை பானையிலிட்டு ஆரம்பித்துச் சிறப்பித்தவர் 50 ஆண்டு திருமண வாழ்வை நிறைவுடன் தொடரும் மூதாளர்களான சின்னராசா பாக்கியலட்சுமி தம்பதியினர். தொடர்ச்சியாக உள்ளரங்கில் பொங்கலோடு தமிழர்களின் பாரம்பரிய உணவுகளும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
கலந்துகொண்டிருந்தவர்கள் முக மலர்ச்சியுடன் காணப்பட்டதால் அரங்கம் மகிழ்வானதொரு ஒன்றுகூடலாகி அனைவரையும் மகிழ்வூட்டி சூழலில் தகித்துக் கொண்டிருந்த கடுமையான குளிரை மறக்கடிக்கச் செய்திருந்தது.
ஸ்தான் துணை நகரபிதா அசடீன்; சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழர் திருநாள் ஒன்றுகூடல் உணர்வினை வாழ்த்தி அனைவருக்குமான புத்தாண்டு வாழ்த்தையும் பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்வினை பிரபல நடனக் கலைஞர் பிரேம் கோபால் அவர்கள் தனக்கேயுரிய தனித்துவ அழகுடன் பிரஞ்சு தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தொகுத்தளித்தார். தைப்பொங்கல் தொடர்பான பிரஞ்சு உரையை மனமுவர்ந்து வழங்கிய பாண்டிச்சேரி வழி வந்த புலம்பெயர்ந்த தமிழர் தலைமுறையினரான செல்வி ஜெசிமா மொகமட் தனக்கிருக்கும் கோலம் போடும் ஆர்வத்தைச் சொன்னார்.

வெண்பனியால் இறுகிப் போர்த்திய பாரீசின் தரையில் 'பொங்கலோ பொங்கல்.." எனும் கூட்டு குரலொலியுடன் பொங்கியது பொங்கல் பானை - நாம் என்ற பன்முகத் தன்மையுடன் தமிழர்களாக ஒருங்கிணையும் ஓர் உன்னதமான திருநாள் தமிழர் திருநாள் என்பதனை இம்முறையும் இந்நிகழ்வு பிரான்சில் பறைசாற்றியது சிலம்பு அமைப்பினரால் ஒழுங்கமைக்கட்ட புலம்பெயர் தமிழர் திருநாள் 2013 !



புலம் பெயர்வாழ்வில் நான் யார்? - என்ற கேள்வி எம்மால் விட்டுச் செல்லும் புதிய தலைமுறையினரை அரித்தெடுக்கும் பிரதான வினாவாகவிருக்கும். நாம் வாழும் பல் இனக்குழுமங்களுக்குள் நடக்கும் வாதப் பிரதிவாதங்களுக்கு முகங்கொடுத்தவாறே நடமாடப்போகிறார்கள் எமது சந்ததியினர். இந்த இலத்திரனியல் - இணையத் தொடர்பூடக யுகத்தில் தெளிவான கருத்தாடல்களைக் கொண்டவர்களாலேயே நிமிர்ந்து உறவாடல் சாத்தியமாகும். அதுமட்டுமல்லாது, சமாந்தரமாக எம்மை ஏனைய சமூகத்தவர் புரிந்து கொள்ள நாம் முயற்சி செய்யவேண்டிய வரலாற்றுக் கடமையும் நமக்குண்டு. கலை- கலாச்சார நிகழ்வுகள் இத்தகைய புரிதல்களுக்கு இதமாகின்றன. புலம்பெயர்வு வாழ்வில் இந்நோக்கைச் செயற்படுத்தும் முயற்சியில் வெளிப்படதொரு அரங்கநிகழ்வாக இது அமைந்திருந்தது.


- பாரீசு ராம்