Tuesday, 27 August 2013

ஒட்டுக்கேட்ட மனநோயாளி

கதைச் சரம் 20
செவிவழிக் கதை 17

ஒட்டுக்கேட்ட மனநோயாளி


அந்த நகரில் மனப்பிறழ்வு வைத்தியசாலை ஒதுக்குப்புறமாக அமைக்கப்பட்டிருந்தது. சுற்றிவர மரச்சோலையான பகுதியாக இருந்தாலும், மிகவும் உயர்ந்த மதிற் சுவராலான வேலிக்குள் இது அமைந்திருந்தது. பல்வேறு தொகுதிகளாக உட்சுவர்ப் பிரிப்புகளும் கட்டிடங்களுமாக தனித்துவமாக காட்சியளைித்தது இந்த வைத்தியசாலை.
இதில் தெளிவடைந்து பெரும் முன்னற்றமடைந்த நோயாளிகளுக்கான விசாலமான தொகுதி (ward) தனியாக வேறு பிரிக்கப்பட்டிருந்தது. மொத்தம் இருபது கட்டில்களும் அவர்களுக்கான பொருட்கள் வைத்துக் கொள்வதற்காக நேர்த்தியாக வைக்கப்பட்டுள்ள தளபாடங்களுடன் அழகாகவே இருக்கும். தேறிய நோயாளிகளின் பாராமரிப்பினால் உருவான பூக்களும், காய் கறிகளுமான சிறிய தோட்டமும் இவ் வளாகத்திலிருந்தது. இவ்வளாகம் அந்தக் கட்டத் தொகுதிக்குள் தனித்துவமானதொரு அழகாக எப்போதும் சுத்தமாகவே இருக்கும். இவர்களது தொடர்பார்களாகப் பணியாற்றும் கண்காணிப்பாளர்களும், தாதிகளும் மலர்ச்சியுடன்தான் காணப்படுவார்கள். இந்தத் தங்குகூடத்தில் பணியாற்றுவதற்கு இந்த வைத்தியசாலைப் பணியாளர்களிடையில் என்றைக்குமே ஏகப்பட்ட போட்டிதான்.
ஒருநாள் காலை உணவு முடிந்த வேளையில், அந்த தனி வளாகச் சுவரொன்றில் தனது இடது காதை ஒட்ட வைத்து ஒட்டுக் கேட்கத் தொடங்கினார் ஒருவர். இவரது செய்கையைப் பார்த்த இன்னொருவர் முதலாவதாளிடம், "என்னப்பா நடக்குது?" என ஆர்வம் பொங்கக் கேட்கிறார்.
முதலாவதாள், வலது கை ஆட்காட்டிவிரலால் தனது வாயை மூடிக் காட்டி 'உஸ்......ஸ்....ஸ்...!" என்று ஒலி எழுப்பி ஏதும் பேசக் கூடாதென சைகை செய்து, அதே கையால் அவனையும் ஒட்டுக்கேட்க சைகையால் அழைக்கிறார்.
அவரின் பின்னால், ஆர்வத்துடன் இரண்டாது நோயாளியும் தனது இடது காதை சுவரில் பதித்து ஒட்டுக்கேட்கத் தொடங்கினார். இவர்களது முகபாவம் ஒட்டுக்கேட்கும் சுவாரிசியமான பாவத்துடன் மாறிக் கொண்டிருந்தன.
இதைக் காணுற்ற மூன்றாவது ஆளும் இவ்வாறே தொடர்தார். அதன்பினாக வந்த நான்காவதும் தொடர..... இருவதாவதும் தனது காதைப் பதித்து ஒட்டுக்கேட்டக்கலானார்.
வளாகமே 'குண்டூசி விழுந்தால் ஓசை கேட்கும்" அமைதியாக இருந்தது.
அன்றைய மதிய உணவுவேளைக்கு ஒருவரும் வராததைக் கண்ட வைத்தியசாலை நிர்வாகம் நிகைத்துப் போனது. இதை அறிந்த தலைமைக் கண்காணிப்பாளர் தானே உடனடியாக நோயாளிகளைத் தேடிச் சென்றார்.
வளாகச் சுவரில் வரிசையாக நின்று ஒட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகளைக் கண்டு ஒரு கணம் திகைத்துத்தான் போனார். ஆனாலும் தன்னைத் சுதாரித்துக் கொண்டு,  'சாப்பிடவும் வராமல் இங்கு என்னப்பா நடக்குது?" ஆர்வ மிகுதியுடன் கேட்கிறார்.
'உஸ்......ஸ்....ஸ்...!" என்று ஒலி எழுப்பி வலது கை ஆட்காட்டிவிரலால் தனது வாயை மூடிக் காட்டி ஏதும் பேசக் கூடாதென சைகை செய்து, அதே கையால் அவரையும் ஒட்டுக்கேட்க சைகையால் பணித்தார் முதலாவதாள்.
மிகுந்த ஆர்வத்துடன் அவனின் முன்பாக அனைவரையும் நோட்மிட்டவாறு தனது வலது காதைப் பதித்து ஒட்டுக் கேட்கத் தொடங்கினார் தலைமைக் கண்காணிப்பாளர்.
ஒன்று... இரண்டு... மூன்று.... பத்து நிமிடம் ஏதுமே கண்காணிப்பாளருக்குக் கேட்கவே இல்லை. வெறுத்துப் போனவராகி, சுவரில் இருந்து விடுபட்டு அனைவரையும் பார்த்தவாறு "என்னப்பா.... எனக்கு ஒன்றுமே கேட்கவில்லையே!" என்கிறார் பரிதாபகரமாக.
'அடச் சீ..... இங்கே பாருங்கடா...! காலையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த எனக்கே ஒன்றும் கேட்கவில்லை. இப்பத்தான் வந்து பத்து நிமிடமாகக் கேட்ட உமக்குக் ஏதும் கேட்கவில்லையென எம்மிடமே கேட்கிறீர்;? ....என்ன..... ஆ....." என்றவாறு கண்காணிப்பாளரை மேலும் கீழும் தன் முகத்தை ஆட்டி முறைத்துப் பார்த்துச் சலித்தவாறு சுவரிலிந்து வெளிவந்தார் முதலாவது நபர். தொடர்ந்தார்கள் மற்றவர்கள்.
000

எனது பல்கலைக் கழக வாழ்வில் மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்ட நண்பன் பிகராடோ சொன்ன கதை இது. காற்றில் தவழ்ந்து வந்து நுட்பமான அறிவைச் சுட்டும் செவிவழிக் கதைககள் கரைந்து போகாமல் இணையவைலையிலும் பரவிவிடுகிறேன். கதைசொல்லிகளாக விபரணித்ததை கண்டு கேட்டு இரசித்ததை வார்த்தைகளால் வரித்துத் தடமிடுதென்பது இலகுவானதில்லை. நம் வாழ்வில் நமக்கான தனித்துவமான கதைசொல்லிகளைக் நேரடியாகத் தரிசித்தவர்கள் நாம். இன்று நம் வாரிசுகள் தொலைக்காட்சிச் சட்டக வாயிலாகவே அதிக பிம்பங்களைத் தரிசிக்கிறார்கள்.
நீண்டு செல்லும் புலம்பெயர்வு வாழ்வில் நம்மவர்களால் தொடரப்படும் சடங்கு சம்பிரதாய நிகழ்வுகளைக் காணும்போது நம் வாரிசுகளால் எழுப்பப்படும் விடையில்லாத வினாக்களுக்கான பதில் கதையாக ஞாபக மனவறையிலிருந்து மேலெழுந்தது இக் கதை.


- முகிலன்

பாரீசு 27.08.2013

4 comments:

 1. அற்புதமான கதை
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
  Replies
  1. வலைத்தளத்தினுள் வருகை தந்து வாசித்து கருத்தைப் பதிவிட்ட ரமணி அவர்களுக்கு இணையவலையில் நேசமுடன் கைகுலுக்குகிறேன். நன்றி!

   Delete
 2. நண்பர் முகிலன் அவர்களே, தினமணி மூலம் உங்களை அறிந்துகொண்டேன். புலம்பெயர்ந்தோர் வாழ்வின் சங்கடங்களுக்கு நடுவே வலைப்பூக்களையும் தொடர்ந்து முனைப்புடன் நடத்துவது உங்கள் மனத்திண்மையைக் காட்டுகிறது. வாழ்த்துக்கள். உங்களைத் தொடர்ந்து படிக்கவிருக்கிறேன்.-
  இமயத்தலைவன் (கவிஞர் இராய.செல்லப்பா) –சென்னையிலிருந்து.
  (http://imayathalaivan.blogspot.in) & (http://chellappaaTamilDiary.blogspot.in)

  ReplyDelete
  Replies
  1. நண்பராகக் கைகுலுக்கிய கவிஞர் இராய செல்லப்பா ஆகிய இமயத்தலைவன் அவர்களுக்கு நேசமுடன் வாழ்த்துத் தெரிவிக்கிறேன்.
   மானுட வாழ்வுப் பயணத் தொடர் பயணத்தில் நாம் பெற்றுக் கொண்டிருப்பதை தமிழ்பேசும் உலகில் பரவியவாறே செல்லவேண்டும். தங்களது உற்சாகமான பதிவிடல் மிகு மகிழ்வைத் தருகிறது. இனியதான எமக்கிடையிலான சந்திப்பை நீட்சியுறச் செய்வோம். வாழ்க வளமுடன்

   Delete