Thursday, 1 August 2013

விடைபெற்ற உன்னுடன்... பரத்துவாசன்

சுவடகம் :  

விடைபெற்ற உன்னுடன்...
கந்தையா  பரத்துவாசன் (09.03.1953 மூளாய் - 27.01.2007 அனைலைதீவு)
(எமது நினைவுகளில் என்றும் உனது இளமைக் கோலத்துடனேயே இருப்பாய்)காலமும் இருப்பும் தந்த இடைவெளியின் நீட்சியில் நாம் கொண்ட உரையாடல் மிகச் சொர்ப்பம்தான். ஒன்றாக- கூடவே பிறந்திருந்தும் பிரிந்து வாழ்ந்த காலம்தான் மிகப் பெரியது. எமது குடும்பத்தில் முதன்மைப் பாத்திரம் உனக்குத்தான். பிறந்தது, வளர்ந்தது, பள்ளி சென்றது, படிப்பிற்காய் தெல்லிப்பழை சென்றது, தொழிற்பயிற்சிக்காய் கொழும்பு சென்றது, வேலை பெற்றது, குடும்பமைத்தது, மகற்பேறடைந்தது என உனக்கு எதிலும் முன்னுரிமைதான்.... ஆனாலும் விடைபெறுவதிலும் நீ முன்னிற்பாய் என நாம் கனவிலும் நினைத்திருக்கவில்லை!

சென்றுவிட்டாய்... இனி நாம் என்னத்தைச் சொல்ல? உன் நினைவுகளையும், கனவுகளையும், பிரிவையும் சுமப்பதைத் தவிர. ஆனாலும் உன்னுடன் கதைக்க விழைகிறோம். தனிப் பெயரிட்டு அழைக்காமல் - ‘அண்ணா’  என்று எமது குடும்பத்தில் அழைப்புப் பெற்றவன் நீ மட்டும்தான். பெரிய தம்பி என அழைக்கப்பட்டவனும் நீ மட்டும்தான். உனக்கான பெயர் கொஞ்சம் பெரியது பரத்துவாசன்- உன் சகாக்களால் ‘வாசன்’ எனவாகவே அழைக்கப்பட்டாய். அந்தக் காலத்தில் எமது கிராமத்தில் இப்படியான பெயர்கள்….. இப்ப நினைத்தாலும் ஆச்சரிமூட்டுபவன.

பதினொராவது வயதில் அழுதவாறு மகாஜனாக் கலலூரி விடுதிக்கு அப்பாவுடன் நீ மேற்கொண்ட பயணம் என் அடிமனதில் இன்னும் இருக்கிறது. விடுதியில் உன்னை விட்டுவிட்டு நாம் திரும்பும்போது அந்தக் கம்பிக் கதவைப் பிடித்தவாறு நீ கதறிய ஓலம் இன்றும் என்மனச் செவிகளில் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. ஆனால் அந்த விடுதியில் உன்னைப்போல் இருந்த பலரைக் கண்டதால் அப்போது நான் சமாதானமடைந்திருந்தேன். ஆனாலும் பிரிவின் வேதனையை சிறு வயதிலிருந்தே அனுபவித்த உனது அனுபவம் தனிக் கவனங் கொள்ளக் கூடியதுதான். அதுதான் உயிரிகளின்பால் ஆழ்ந்த பற்றை உனக்கு ஏற்படுத்திவிட்டிருந்தது போலும். நாம் வளர்த்த உயிரினங்கள் மீதும் இப்பற்றை நீ கொஞ்சம் அதிகமாகவே வெளிப்படுத்தினாய்.

இந்த மகாஜனாக் கலலூரியில் நானும் இணைந்தபோது அங்கே வைரவிழா நடந்தது நினைவில் வருகிறது. அதில் நடைபெற்ற கண்காட்சி அரங்கில் ஒரு அறை உனது கட்டுப்பாட்டில் உனது தொழிற்திறனை வெளிப்படுத்திய காட்சி அரங்காய் இருந்தது. எல்லோரும் என்னை பரத்துவாசனின் தம்பி எனவே அடையாளம் கண்டனர். இந்தக் காலத்தில் நடைபெற்ற ஆறுமுகநாவலர் நினைவு நாளில் உனது கைவண்ணத்தில் உருவான அந்த ‘விசேட சப்பறம்’ தொடர்பான விபரம் அந்தக் கால ஈழநாடு இதழில் வெளிவந்ததைப் பார்த்து பரவசமடைந்தவர்களில் நானும் ஒருவன். விடுதியில் தொடர்ந்த உறவும் நீடிக்கவில்லை. நீ விரும்பிய தொழிற்பயிற்சிக்காய் கொழுப்பு சென்றாய்.

மொறட்டுவ ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தில்(ceylon german technical institute moratuwa) பயின்று அங்கேயே தொழிற் பயிற்றுவிப்பனாக(Demonstrator) நீ சின்ன வயதினிலே பெற்ற தேர்ச்சி எம்மை ஆச்சரியப்படுத்தியது. நான்கு தடவை அந்தத் தொழிற்கூடத்தில் உன்னுடன் வந்திருக்கிறேன். உனது சகாக்கள், மாணவர்களைச் சந்தித்திருக்கிறேன். விசாலமான உயர் தொழில் நுட்ட இயந்திரங்களைக் கொண்ட அந்த நிறுவனம் உன் வாழ்வோடு தொடர்ந்திருந்திருக்க வேண்டும். பெருமூச்சு என்னை அறியாமல் கிளம்புகிறது. உனது தன்னாற்றல் அங்கு வெளிப்பட்டிருந்தது. பன்மொழியாற்றல். நல்ல வாசிப்பு, காருண்ணியம், எளிதில் புரியக் கூடியதான விளக்கத்திறன், இயல்பிலேயே இருந்த தொழில் நுட்ப ஆர்வம் எனப் பலவாக இங்கே உன்னால் மையங்கொள்ள இலகுவில் முடிந்திருக்கிறது.

நாங்கள் வீட்டில் சிறுவர்களாக இருந்தபோது புதிய விளையாட்டுச் சாமான்களும், சொக்கிளேற்- பிஸ்கட் பெட்டிகளுடனான உனது விடுமுறை வரவு அப்பாவின் முகத்தைக் கோணவைத்தாலும் எமக்கு இனிப்பானதாகவே இருந்தது. நீ கொண்டு வந்த புத்தகங்களை ஒழுங்குபடுத்தி பைண்டிங் செய்து அடுக்கி வைப்பதில் இராப்பகலாக குடும்பம் முழுவதும் ஈடுபடும்.

சிங்களம் என்றால் என்ன என்று தெரியாத சிறு கிராமத்தில் வாழ்ந்த எமக்கு உனது நெருங்கிய சிங்கள நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வந்ததும், அவர்களுடன் கைப்பாசையில் நாம்பேசியதும், வீட்டின் முன்னால் கிறிக்கெற் விiயாடியதும் கனவிலும் ஆச்சரிய மூட்டுபவன.

கொழுப்பு சென்றால் கந்தையா குறோசறியில் தொடர்பு கொண்டாலே போதும் இலகுவில் உன்னைப்பற்றி அறிந்துகொள்ளலாம். எனது பல்கலைக் கல்விக்கால விடுமுறையில் உன்னுடன் கொழும்பில் தங்கியிருந்த வேளையில் நீ என்னை அழைத்துச் சென்ற பிரிட்டிஸ் கவுன்சில் நூலகம், அருங்காட்சியகம், அப்பக்கடை என எல்லாம் ஞாபகத்தில் இருக்கின்றன.
இப்ப நெடுந்தூரப் பிரிவு. நாங்களும் தனிக்குடும்பங்களாகி புதிய தலைமுறையினரையும் உருவாக்கியவர்கள் ஆக்கிவிட்டோம். ஆனால் இத்தலைமுறையினருக்குள்ளான உறவுகளுண்டா? எமது கதை அவர்களுக்குத் தெரியுமா? பெரியப்பா என விளிக்கும் எனது இருமகன்களுக்கும் இதுவரை ஒருதொடர்பும் இல்லாதுபோனது சொல்லொணாத் துயரமானதுதான்!

தம் சகோரங்களுடனான தொடர்புகளை இந்தப் புதிய தலைமுறை பேணி தூர- கால இடைவெளி கடந்தும் உறவை மேம்படுத்துவதுதான் இனி நாம் செய்யக்கூடியது. இதைத்தான் நீயும் விரும்புவாய். உன்முகத்தில் புன்முறுவல் தோன்றுவதைக் காண்கிறேன். நன்றி

- முகுந்தன் (தம்பி)
கூடவே அருந்தா, இளவேனில், இலக்கியன்
பிரான்சு


அண்ணனின் நினைவு சுமந்து வெளியிடப்பட்ட கல்வெட்டு மலருக்காகவே எழுதப்பட்டது இவ்வாக்கம். ஒருவர் மறைந்தபின் இருப்பவர்களால் நினைவுகூரப்படும் குடும்ப மற்றும் உற்றார், சுற்றார்  கைகளில் தவளவிடப்படும் ஆவணம்தான் ‘கல்வெட்டு’. இனிவருங்காலங்களில் புதியதான தொடர்பூடக வலை ஆவணங்காகி இவை நிலைபெறல் வேண்டும்.
எனது அண்ணனை நான் கடைசியில் கண்டது எண்பதுகளின் கடைசியில். ஆயினும் தொலைபேசியில் 2000களில் கதைத்திருக்கிறேன். இவரது திருமணம் நடைபெற்றிருந்தும் இவரது தொழிலுடனான (இலங்கைப் போக்குவரத்துச் சபை மெக்கானிக்களை உருவாக்கும் நிறுவன தொழில் பயிற்றுநர்) கொழும்பு வாழ்வால் பிரிவாகியே இருந்தனர். அந்த வேளையில்  பெரும் பிரயத்தனம் மேற்கொண்டே மீள் இணக்கப்பாட்டை மேற்கொண்டிருந்தோம். ஆனால் இதன்பின் அவரால் கொழும்புப் பணியைத் தொடரமுடியாது போய்விட்டது. கடைசி வரைக்கும் அனலைதீவிலேயே தங்கிவிட்டார். குடும்ப வாழ்வில் நான்கு பிள்ளைகளின் தந்தையானார்.
‘90களில் பாரீசு வந்திருந்த புதிய சூழலில் நண்பனாகியவர் மட்டக்களப்பைச் சேர்ந்த பயஸ். இதனால் நீண்டு தொடரும் சந்திப்பில் இவரது தம்பி பற்றிக் (இப்போது கனடாவில் வசிக்கிறார்) அறிமுகமாகினார். அப்போது தெரிய வந்த  ‘பற்றிக்’ உனது மாணவன் என்பதான தகவலால் மெய் சிலிர்த்துப் போனேன்.

அண்ணனது தணைவியாருடன் தொலைபேசியில் 2000களில் கதைத்திருக்கிறேன். ஆனால் அவரது பிள்ளைகளுடன் முதன் முதலாகத் தொலைபேசிவாயிலாக் கதைத்தது இந்தக் கோடைவிடுமுறை காலத்தில்தான் நிகழ்ந்திருக்கிறது. அவர்களது குரல்கள் என் காதுகளில் கேட்டவண்ணமே இருக்கின்றன. இதனது தூண்டலால், இன்று புவியெங்கணும் விரவியவர்களாகவே வாழ்வைத் தொலைவில் தொலையுறும் நீட்சியில், இப்பதிவை இணைய வலையில் பரவிவிடுகிறேன்.
ஈழத் தமிழர்கள் சிதறுண்டவர்களாகி, விரவிக்கிடக்கும் ஆவணங்களில் இதுவும் ஒன்றுதானே.


முகிலன்

பிரான்சு 01.08.2013

No comments:

Post a Comment