Friday 11 December 2009

சுவட்டுச் சரம் 1 நினைவுத் துளிகள் (18) புலப்பெயர்வில் தமிழர் பண்பாடு


சுவட்டுச் சரம் 1 நினைவுத் துளிகள் (18)
சுவட்டுச் சரம் 1
பெர்லின் புலம்பெயர்வு தொடக்க கால நினைவுகள்
நினைவுத் துளிகள் (18)
-குணன்
(அசர்பைஜானின் கோபஸ்தானில் உள்ள பாறை ஓவியம். இது கி.மு 10,000 ஆண்டு காலப்பகுதியில் எழுச்சி பெற்றிருந்த பண்பாட்டைக் குறிக்கிறது.)

புலப்பெயர்வில் தமிழர் பண்பாடு ?

இன்றைய புலம்பெயர் வாழ்வில்,அதிகமாக பேசப்பட்டும் கருத்துக்கள் தெரிவித்தும், ஊடகங்களிலும், மேடைகளிலும், விவாதிக்கப்பட்டும் விளக்கம் பெற முடியாது எல்லோரையுமே தடுமாற வைக்கும் தலைப்பாக, தமிழர் பண்பாடு என்ற 'கருத்துரு' தோற்றம் பெற்றுள்ளதோவென எண்ணவேண்டியுள்ளது.

இதற்கு காரணங்கள் ஏதும் உண்டா? அல்லது, பண்பாடு பற்றிய தவறான கருத்தாக்கம் தோற்றம் பெற்று விட்டதா? என ஆழமாக வரலாற்றுப் பின்னணியில் ஆராய வேண்டுமா? என கேள்விகள் எழுந்துள்ளனவா? அல்லது எழுப்பவேண்டுமா? என்பதை ஆராய்ந்தறிய வேண்டிய பொறுப்பு மானிடவியலாளர்களுடைய பிரதான பணி எனக் காணப் படவேண்டும்.

மானிடவரலாற்றில், உலகின் பல பாகங்களிலும் வரலாறு காணதா காலந்தொட்டடே நீண்ட மனித நாகரிகம்-பண்பாடு, என்ற பரிணாம வளர்ச்சி கண்டிருப்பதும், மனித இடப்பெயர்வுகளினால், ஆதிக்க மேலாண்மை, மத,மாற்றம், மொழி மேலாதிக்கம், தொழில், கலை என, புதிய அறிமுகங்கள் எனப் பேணவேண்டிய காரணிகள் பண்பாட்டு, நாகரிக மாற்றங்களுக்கு உதவுகின்றன!


நாகரிகம்-பண்பாடு என்றால் என்ன?

மனித நாகரிகம், மருதம் சார்ந்த, ஆற்றங்கரைகளின் நிலப்பரப்பில் நிலைபெறத்தொடங்கியதும், பண்படுத்தப்பட்ட நிலங்களில், பயிர்ச்செய்கை இடம்பெற்றது. அதனையடுத்தே நிலையான குடியிருப்புச் சூழல், சுற்றாடல் போன்றவை உருப்பெற்றதும், குடும்பங்கள், உறவுகள், குடியமைப்பு, நண்பர், அயலவர், மேலோர், கீழோர், முதலையுடையோர், பணியாளர்கள், ஆள், பொருள் ஆதிக்கம் படைத்தவர்கள், எனப் பல்வேறு கட்டமைப்புக்கள் கொண்ட குடிகள் வாழும் நகரங்கள் தோன்றியன. ஏனையோருக்கு உணவு தரும் உழவுத் தொழில் முக்கியம் பெற்றிருந்ததும், வேளாண்மை கொண்டவர்கள், பதினெட்டுத் தொழில்களில் பிரதானமாகவும் விளங்கியது. இதன் காரணம் போலும் மனித வாழ்க்கையில், உணவுத் தொழில் முக்கியம் என்று கருதினார் போலும்! இவ்வாறான, குடிவாழ்க்கை, என்பதே,“பட்டின வாழ்க்கை“,(இலத்தீனில்- civitas-city or city state)என்ற கருத்தில், ”நாகரிகம் வாய்ந்த”(civilized life), என்ற கருத்தியல் தோன்றியதென்பர். இந்த நாகரிகம் வாய்ந்த குடியினரே(citizen) ஆட்சிப் பொறுப்புடையவர்களாகி தலைவர்களாக, பின்னர் முடிசூடிய மன்னர்களாக,(சர்வாதிகாரிகளாக மாறி) அதிகாரம் செலுத்திய வரலாறுகள் அறியமுடிகிறது! நகரங்களிலிருந்து தொடங்கிய மக்கள் குடிமுறை வழியாக, நாகரிக வாழ்க்கை, இயற்கையாக அமைந்த துறைமுகங்கள் அருகாமையில், வளர்ச்சி பெற்ற பெரிய பட்டினங்களை உருவாக்கியதென்பதற்கு, பண்டைய நாள் முதலாக, இன்றுவரை உலகநாடுகள் எங்கணுமே காணலாம்!

பண்டமாற்று, குடியேற்றம், வாணிபம், கப்பல் போக்குவரத்து என இதில் பல அடக்கம்! இன்றும், புலப் பெயர்வுக்கு முக்கியமான வழியாக, துறைமுகங்கள் -கப்பல் பிரயாணம் அமைந்திருக்கின்றது. இலங்கைத் தீவுக்குள் அகதியாக, எழு நூறு தோழர்களுடன் வட நாட்டிலிருந்து விஜயன், வந்திறங்கிய தம்பபண்ணை, ஓர் இயற்கைத துறை முகம் என்பதும், இங்கிருந்து வெளி நாடுகளுக்குச் செல்கின்ற நாவாய்கள், தோணிகள், கப்பல்களை ஆரியசக்கரவர்த்தி நிறுத்தி வைத்திருந்தான் என்ற வரலாற்றுக் குறிப்பு உள்ளது. அதே போன்று, மாந்தை(மன்னார்), பருத்தித்துறை, காங்கேசன்துறை, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம் என துறை முகங்களைச் சார்ந்த, தமிழர் தாயகம், பலநூற்றாண்டு கால நாகரிக வாழ்க்கைக்கு அடிகோலி இருந்தது!

பட்டினங்களில் பல்வேறு தரப்பட்ட மனிதர்களுடைய வரவால் கிடைக்கப்பெற்ற அனுபவங்களால் பட்டினவாசிகள் நாகரிகமடைந்தவர்கள் எனவும், கிராமத்தவர்கள், இவ்வாறான புதிய அனுபவங்களைப் பெறமுடியாதவர்களாக தனிமைப்பட்டிருந்த கிராமவாசிகள் ”பட்டிக்காட்டு”மக்கள் எனவும் குறிக்கப்பட்டதும் கவனிப்புக்குரியது!

பண்பாடு என்றால் என்ன?

பண்பாடு என்றால் எதனைக் குறிக்கிறது? தமிழர் பண்பாடு என்றால் யாது? என்று, கேட்கப்படுவதும், அதற்கு நீட்டி முழக்கிப் பதில் அளிப்பதும், எங்குமே காணப்படுகின்ற வழக்கம். அந்த விளக்கம் முழுமை என்று கருதலாமா? வெளிப்படையாகவே இது இயலாது என்பதை யாராலும் உணரமுடியும்.

தோற்றப்புல வெளிப்பாடாக அமையும் வேட்டி, மேற்சட்டை, சால்வை(தலைப்பாகை நீங்கலாக!) ஆண்களும், சேலை, சட்டை அணிவது(பழைய, புதிய) முறைகள் பெண்களும், கடைப்பிடிப்பதை தமிழர் உடைப் பண்பாடு என்பதும், குங்கும் பெண்களுக்கும், சந்தணம் ஆண்களுக்கும் (பொது வைபவங்களில் அனைவருமே அணிவதுண்டு), தமிழர் பண்பாட்டு அடையாளம் என்பர்! இது ஒரு சமயத்தவரின் குறியீடு என்று கூறி, மறுப்பவரும், தவிர்த்துக் கொள்வாரும் உண்டு!

பெண்கள் பருவம் எய்தி நடாத்தப்படுகின்ற சடங்கு, ஒருவர் மறைந்த பின்னர், குழந்தை பிறந்தால், பின்னர் காலத்துக்கு காலம் நடாத்தப் படுகின்ற சடங்குகள், சம்பிரதாயங்கள் என நடந்தேறிய எண்ணற்ற செயற்பாடுகள் அனைத்தையும் பண்பாடு என்று கூறுவாரும் உண்டு.

இது பற்றி, பேரா.தேவநேயப்பாவணர் குறிப்பதைப்போல, ”நாகரிகம் என்பது அழகுறத் திருந்திய வாழ்க்கை வழக்கம்", இதில் அந்தந்தக் காலக்கட்டத்தில் அறியப்பட்ட பொருள்களையும் தமக்கே பயன்படுத்தல்(அழகுபடுத்தல் அல்லது மெருகூட்டல்) வழக்கம், பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம் (வாழ்வு நெறி), அது சீரான வாழ்வுத் தேவையை முதன்மைப்படுத்தியதாக எல்லாப் பொருட்களையும் தமக்கும் பிறர்க்கும் பயன்படுத்தும் ஒழுங்காற்று முறைமை” என எண்ண முடிகிறது! ஒருவரின், அல்லது ஓர் குறிப்பிட்ட தொகுதி(இன, சமய, குழு)சார் மக்களிடத்தில், காணப்படுகின்ற பழக்க, வழக்கங்கள் வேறு சில மக்கள் கூட்டத்தினருக்கு, ஏற்கமுடியாத, அருவருப்புத்தருகின்ற (மேற்கு நாடுகளில், பொது இடங்களில் கைகளால் உணiவு உண்பது வெறுக்கப்படுவது, அல்லது விரும்பத்தகாததைப்போல), அக, புற பண்பாட்டு வெளிப்பாடுகள் பார்க்கப்படுவதும், விமர்சிக்கப்படுவதும் காணலாம்! ஆயினும், ஒருவரின், மாறுபட்ட பழக்கங்கள் என்பது, தனித்துவம் கொண்ட, அதேநேரத்தில், பலரால் பேணப்படும் பொழுது, அதனைப் பண்பாடாகப் பார்க்கவும், மதிக்கப்படவும் வேண்டும்!

புலப்பெயர்வில், பொது - குடும்ப விழாக்களில் இடம்பெறுகின்ற தோற்றப்பாடுகள், பற்றிய வினாக்களை, பிற மத, இன, மக்கள் கிளப்பும் போது, சரியான விடை தரவேண்டியவர்கள், பலவாறு, விளக்கம் தருவதைக் காணலாம்! பெண்கள், திலகம் இடுவது பற்றி பலரும் வினா எழுப்புவதைக் காண முடிகிறது! இதை, அழகுச் சின்னம், சமயச் சின்னம், அறிவுச்சின்னம் (மூன்றாவது கண்!) என விளக்கங்கள் தரப்படுகின்றன! இவ்வாறான, ஒரு கூட்டுப் பழக்கம், ஓர் தொகுதி மக்களால், தொடர் நிகழ்வாக காரணம் புரியா நிலையிலும் பின்பற்றப்படுகின்ற "பண்பாட்டுக் குறியீடாக" கொள்ளப்படுவதான (Sign is something which stands to somebody for something insome respect or capacity) உட்கருத்தை தாங்கியதென்பர் குறியீட்டியலாளர்(Semiologist). இவ்வியல் நிபுணராக,பிரஞ்சு நாட்டின் மிசேல் புக்கோ (Michel Foucault) மதிக்கப்படுபவராவார்.

ஒருவரிடம், எமது அன்பு, இரக்கம், நன்றி போன்ற அக பண்பாடுகளை வெளிப்படுத்தும் முகமாக, மலர்கொத்தை (குறியீடாக) வழங்குவதைக் கூறலாம். இதே போல, அமைதிச் சின்னமாக, புறாவைக் குறியீடாக்குவதையம் குறிப்பிடலாம்.”குறி” என்பது,”உணர்த்து” என்ற பொருளில் வாழ்வின் ஒவ்வொரு செயலும், ஒன்றை உணர்த்தி நிற்கின்ற தென்பதால், ஒரு தனிமனித நடத்தை, அவன் சார்ந்த, இன, மதப் பிரிவையும் பிரதிபலிக்கின்றதென்பது உணரப் படவேண்டியதாகும்! புறத்தோற்றங்களுக்கான மதிப்பீடுகளின் முக்கியத்துவம், பெறுமானங்களைவிட, அகவுணர்வுகளைப் புலப்புடுத்தி நிற்கும்.

மானிடநேய விழுமியங்களின் அடிநாதமாகிய அன்பு, இரக்கம், கொடை ஆகிய பண்புகளையே சிறப்புடையனவாக அறிவுடையர் கருதுவர். பட்டினியால் வாடும் ஒருவருக்கு தான் உண்பதை பங்கிட்டு உண்ணும் பண்பு வாயினால், வெறும் வார்த்தைகளைவிட பயனுடையதாகும்!இதனை, தமிழ் ஞானி திருவள்ளுவர், மிக நுட்பமாக,
“பகுத்துண்டு பல்லூயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை "
- திருக்குறள் (322),
கூறியவாறு,கோடி நீதி, தத்துவ வாசகங்களை விட, ஒரு சிறிய செயலாக்க வடிவம், நிகழ்த்தல், பெரியதும், தலையாயதுமாகும்! ஒரு போதனையைவிட, ஒருவரின் பட்டறிவு மேலானது!

இரண்டாம் உலக போர் இறுதிக்காலநாட்கள், அறுபது ஆண்டுகள், கழிந்த பின்னரும், அன்று, ஒன்பது வயதுச் சிறுவனாக நானும், பிள்ளைப் பருவத்தினராகிய எனது இரு சகோதரர்களும் உணவுப் பஞ்சத்தினால்,அ வதிக்குள்ளாகிய வறிய குடும்பங்களில் ஒன்றாக இருந்து பட்ட பசியின் கொடுமையை இன்றும், முழமையாக என்னால் உணரமுடிகிறது. எங்கள் பசியைத் தீர்த்தவரையும், இன்றும் நெஞ்சில் நினைக்க மறந்திடவில்லை! அவ்வாறே, புகலிட வாழ்வில், உள்ள பல்லினத்தவர்களை, தமது நாடுகளில் அனுமதித்து, தம்மைப்போல வசதிகள் வழங்கி, வாழ வைத்த மக்களுக்கும், அவர் தம் அரசுகளுக்கும் நன்றியுணர்வுடையவர்களாக –பண்புடையவர்களாக வாழவேண்டுமல்லவா?
(பண்டைய எகிப்து நாட்டைச் சேர்ந்த ஓவியம்.Ägyptischer Maler um 1400 v. Chr. 001.jpg)




அறிவியலை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் -எடுத்துச்செல்லுங்கள்!

கால் நூற்றாண்டுக்கு முன்பு, 1985ல், பேர்லின் நகரில், வாழும் புலம் பெயர் தமிழர்கள் மத்தியில், உரையாற்றிய (20.10.1985), அன்றைய சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ந.சஞ்சீவி அவர்கள், ”ஐரொப்பிய நாடுகளில், வாழும் புலம் பெயர் ஈழத்தமிழர்கள் குறிப்பாக பெரும்பான்மைத் தமிழ் இளைஞர்களுக்கு சில அறிவுரைகள்” என்ற தலைப்பில் வழங்கிய கருத்துரையில், "ஐரோப்பிய நாடுகளில், சொந்த நாட்டை விட்டு புலம்பெயர்ந்து உறவை, ஊரை, நட்பை, பிறந்த மண்ணைப் பிரிந்து வாழ்வதென்பது, மிகப் பெரிய துயரம் மட்டுமன்றி பேரிழப்புமாகும். இதனை இளைஞர்கள் பிற்காலத்தில் தான் நன்கு புரிந்து கொள்ளவும், வருத்தப்படவும் முடியும்!" ஏதோ ஒரு விபத்தைப்போலவே இன்றைய புலப்பெயர்வு உங்களை இங்கு தள்ளிவிட்டிருக்கிறது! இதில் பெருமையோ, மகிழ்ச்சியோ ஏற்பட முடியாது -கூடாது! இது ஒரு வேதனை தரும் நிகழ்வாகவே நீங்கள் கருதி, அந்த வேதனை வாழ்க்கையை ஒரு சாதனை வாழ்வாக ஒவ்வொரும் மாற்ற சபதம் எடுத்துக்கொள்ளுங்கள்! இதனை, எனது பணிவான வேண்டுகோளாக உங்கள் முன் கூற விரும்புகிறேன்!” என்று குறிப்பிட்டு, இங்குள்ள கண்மூடித்தனமாகக் கெளவிக் கொள்ளப்படும் ஆடம்பரங்கள் காலப்போக்கில் அர்த்தமற்றதாகிப்போய் எமது பண்புகளுக்கும் ஒழுக்கத்திற்கும் கேடு விளைவிக்கும். நிதானமாக சொந்தப் புத்தியில் அறிவைத் தேடி வாழப் பழகியவராக முடிந்தவரை, ஐரோப்பாவின் அறிவியல்களை பெற்றுகொள்ளுமளவுக்கு தேடிக் கற்றுக்கொள்ளுங்கள்!"

"தமிழர் வாழ்வுக்கும், ஒழுக்கத்திற்கும் ஊறு விளைக்கும், கீழ்த்தர நடவடிக்கைகளில் பலர் தம்மை ஈடுபடுத்துவதைக் காண வருத்தம் அடைகிறேன். இவ்வாறன செயல்களில் தம்மை ஈடுபடுத்துவோர், தமக்கும் தான் சார்ந்த மக்களுக்கும் தீங்கு செய்பவர்களாவர்!இவ்வகையினர், தம்மை அழிப்பதுடன், தமது கிடைத்தற்கரிய மனித வாழ்வையே முழுமையாக இழந்துவிட நேரிடுகிறது. எனவே, ஒரு நாள், நீங்கள் அனைவருமே, உங்கள் சொந்த நாட்டிற்கு சென்று வாழவேண்டியபோது, உங்களுடன், இங்கு கற்றுக் கொண்ட அறிவியலை மட்டும் எடுத்துச் செல்லுங்கள், இன்றேல், நீங்கள் கண்டு, கேட்டு, கற்றுக்கொண்டவற்றை, முடிந்தவற்றை நூலாக, பதிவுகளாக, கலை வடிவங்களாக ஆவணமாக்குங்கள். பெற்றிருக்கும் இத்தகைய புதியதான அனுபவங்களை உண்மைப் பதிவுகளாக்க முனையுங்கள்!” என்று குறிப்பிட்டு, மேலும் தொடர்கையில், ”உங்கள் உடன் பிறப்புக்கள், தமிழகத்தில் அகதிகளாக முகாம்களில், மிகவும் துயர் பட்டுக்கொண்டிருக்கையில், இங்கெல்லாம், அர்த்தமற்ற விதத்தில், நீங்கள் நடப்பதை எப்படி (சினிமாக்காரர்களுக்கு மேடையில், தங்க மோதிரங்கள், சங்கிலிகள், விருந்து என…….!) ஏற்பார்கள்! தமிழர் சமுதாய வாழ்வியலில்,என்றுமே சாதி இருந்ததில்லை என்பதை தமிழ் இலக்கியங்கள்(சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியலாம்)".

"சாதி என்ற அநீதி மதத்தினூடாக இடைச்செருகலாக புகுத்தப்பட்டு, இதனை இன்றும் கடைப்பிடிப்பது அறிவீனமல்லவா? தமிழரின் அறிவுக் களஞ்சியமாகிய திருக்குறளை, அன்றைய மதந்சார்ந்திருந்து கோலோச்சிய மூவேந்தர்கள் எனப்படுவோரும் வளர்த்திட உதவவில்லை! வேதங்கள், புராணங்கள் கட்டிக்காக்கப்படவேண்டி தமிழர் கிராமங்களைத் தானம் செய்தார்கள்! இவ்வாறு தமிழர் வாழ்வை சிறுமைப்படுத்தவே உதவியதால், தமிழ், தமிழர் தாழ்வடைந்தனர்!"

"இங்கு எல்லா வசதி வளங்கள் கிடைப்பதாக உங்கள் வாழ்வை மறந்து, வருங்கால நிலை மறந்து வாழாதீர்கள்! அடிமைத்தனம், எந்த உருவத்தில் வசதிகளைத் தந்தாலும், அது அடிமை வாழ்வே என்பதை மறந்து விடாதீர்கள்! நாம் இங்கு உபதேசிகளாக வரவில்லை உங்களைக் காணவும், உங்களிடம் கேட்டறியவும், ஐரோப்பா வாழ் தமிழரைக் காணவுமே ஆவலாக வந்திருந்தோம். இங்கு எமது ஐரோப்பிய பயணத்தில் பேர்லின் வாழ் உங்களைக் கண்டு, உரையாட வசதி செய்த பேர்லின் நலன் புரிக்கழக நிர்வாகத்தினருக்கும் நன்றியறிதல் உடையோம்!உங்கள் அனைவருக்கும் தமிழக மக்கள் சார்பில் எமது நன்றிகள் உரித்தாகுக! வணக்கம்!!” இவ்வாறு, ந.சஞ்சீவி அவர்களின் உரை, காலந்தாண்டியும் நிலைக்கும் கருத்துக்களாக இன்று நான் நினைவில் மீட்டுப்பார்க்கிறேன்.


எண்ண சில எண்ணங்கள்

இன்று, வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து பல நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களில், ஒரு வீதத்தினர் கூட, தமது தாய் நாட்டில் சென்று வாழ -வாழும் திடம் கொண்டிருப்பார்களா? என எதிர்பார்க்கக் கூட முடியாது! அவ்வாறாயின், அவர்கள், தமக்கு வாய்த்த புகலிட உரிமைகளை தூக்கி எறிந்து விட்டு தாம் பிறந்த மண்ணில், தம் பெற்றோர், உறவினர், ஊரவர் என பலரும் வாழ்ந்த மண்ணில் செல்ல யாரும் (எந்த தலை முறையினரும்) முன்வரப் போவதில்லை என்பதும், அங்கு தமக்கு, எந்தவித உறவோ,அறிமுகமோ இல்லை என்றும் முதிர்ந்த உறவுமுறையினரும் மறைந்து விட்டார்கள் என்று கூறும் பலரை எங்குமே அறிந்து கொண்டிருக்கிறோம்! அவ்வாறு தமது கருத்தை வெளிப்படுத்துபவர்களின், அடுத்த தலைமுறையிரும், தொடர்ந்து வருபவர்களும், எதிர்காலத்தில் தமது பெற்றோர்கள், பாட்டன் பாட்டி பிறந்து வாழ்ந்து மறைந்த மண்ணை எட்டிக்கூட பார்க்கும் நிலை வரமாட்டாது -வரும் வாய்ப்பு ஏற்படும் சூழுல் உருவாக இடம் எழாது என்பது இன்றே உருவாகியுள்ளது!

மேலும், இங்கு புதிய தலைமுறையினராகிய இளைய தலைமுறை, தங்கள் பெற்றோரின், உறவுகளோடு, முழமையாகத் தொடர்பை வைத்துக்கொள்ளவும் -வளர்க்கவும், வாழ்க்கைப் பந்தம் ஏற்படுத்தவும் முடியாத ஓர் அவல நிலை உருவாகிக் கொண்டிருப்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதற்கு, இரண்டு முக்கிய காரணிகளைக் கூறலாம். ஒன்று தாய்மொழிச் சிக்கல், மற்றையது வளர்ந்த பண்பாட்டுச் சிக்கல் என்பதை விபரிக்க வேண்டியதில்லை. பிற இனத்தவர்களின், புதிய தலைமுறையினரை விட, தமிழர்களின், உறவுப் பாலம் மிக பலவீனமுற்றிருப்பது வெள்ளிடமலை. இனி வருங்காலத்தில் இது மாற்றத்துக்குள்ளாகாது போயின், புலமபெயர் தமிழினம் கூறுபட்ட -வேறுபட்ட குழுவாகவே மாற்றம் பெறலாம்!

இவற்றைக் கடந்து, இணைந்த இனமாக காப்பாற்ற அல்லது நிலைத்து, நீடித்து, பண்பாடு, தாய்மொழி, உறவு வளர, புலம்பெயர் புதிய தலைமுறைத் தமிழர்கள், தமது பெற்றோர்களின் தாய் மொழியாகிய தமிழ் மொழியை, மற்றெல்லாவற்றைக் காட்டிலும், உறவுப் பாலமாக கைக்கொள்தல் அவசரமும் -அவசியமுமாகும்.
***********************

பிற்குறிப்பு 1.:

பண்பாடு
(கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து)

பண்பாடு என்பது பரந்த பொருளுடன் பயன்படுத்தப்படும் ஒரு சொல். ஆங்கிலத்தில் culture (கல்ச்சர்) என்னும் சொல்லுக்கு இணையான பொருளில் இச்சொல் தமிழில் பயன்படுத்தப்படுகிறது. கலாச்சாரம் என்ற சொல்லும் பண்பாட்டுக்கு ஒத்தசொல்லாக பயன்படுகின்றது. இது பொதுவாக மனித செயற்பாட்டுக் கோலங்களையும்; அத்தகைய செயற்பாடுகளுக்குச் சிறப்புத் தன்மைகளையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புக்களையும் குறிக்கின்றது.

பண்பாடு ஒரு பலக்கிய கருப்பொருள். அதற்கு பல நிலைகளில் வரையறை உண்டு. ஒரு நிலையில் பண்பாடு என்பது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், அறிவு பரம்பல்கள், வாழ்வியல் வழிமுறைகள், சமூக கட்டமைப்பு என்பனவற்றை சுட்டி நிற்க்கின்றது. மொழி, உணவு,
இசை, சமய நம்பிக்கைகள், தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டுக்குள் அடங்கும்.

பொதுவாக இது மனிதரின் நடவடிக்கைகளைக் குறிக்கிறது எனலாம். பண்பாட்டின் வெவ்வேறு வரைவிலக்கணங்கள், மனிதச் செயல்பாடுகளை விளங்கிக்கொள்வதற்கான அல்லது அவற்றை மதிப்பிடுவதற்குரிய அளபுருக்களுக்கான வெவ்வேறு கோட்பாடுகளைப் பிரதிபலிக்கின்றன எனலாம். 1952ல் அல்பிரட் எல். குறோபெர் என்பாரும் கிளைட் குளுக்ஹோனும் பண்பாடு என்பதற்குக் கூறப்
படும் 200க்கு மேற்பட்ட வரைவிலக்கணங்களைத் தாங்கள் எழுதிய பண்பாடு: எண்ணக்கருக்களும் வரைவிலக்கணங்களும், ஒரு விமர்சன மீள்பார்வை (Culture: A Critical Review of Concepts and Definitions) என்னும் நூலில் பட்டியலிட்டுள்ளார்கள்.

(இன்று கம்போடியாவின் பண்பாட்டின் அடையாளமாகப் பயன்படும் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அங்கூர் வாட் கோயில்)
பிற்குறிப்பு 2.:
'பண்பாட்டு அசைவுகள் ' நூலிலிருந்து உணவும் நம்பிக்கையும் - தொ. பரமசிவன் (திண்ணை)
http://www.thinnai.com/?module=displaystory&story_id=203082810&format=html
"தமிழருகென்று தனிப்பண்பாடு இருக்கின்றதா?" - மு. பொ நேர்காணல் (ஆறாம்திணை) http://www.aaraamthinai.com/guest/ponnambalam.asp


தொடர்பான பதிவுகள்

சுவட்டுச் சரம் 1 நினைவுத் துளிகள் (17) இழந்ததும் பெற்றதும்......

Tuesday 8 December 2009

செய்திச் சரம் - 7 நோர்வே ஒஸ்லோ நகரில் “ஈழத்தில் நாடகமும் நானும்" நூல் அறிமுக நிகழ்வு

செய்திச் சரம் 7
“ஈழத்தில் நாடகமும் நானும்" நூல் அறிமுக நிகழ்வு
ஈழத்தமிழர் பரவிவாழும் உலக நகரங்களில் ஒன்றான ஒஸ்லோவில் 13.12.2009 ஞாயிறன்று நடைபெறவுள்ளது
TAMIL DRAMA IN CEYLON AND MY PART IN IT
By Kalai Arasu K.CHORNALINGAM




"ஈழத்தில் நாடகமும் நானும்” கலையரசு க. சொர்ணலிங்கம் அவர்களாள் எழுதப்பட்டு 1968 ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நூலை ”ஈழவர் திரைக்கலை மன்றம்” மறுபதிப்பு செய்து 13.12.2009 ஞாயிற்றுக்கிழமை Veitvet skole மண்டபத்தில் (Veitvetveien 17, 0596 Oslo) 17.30 மணிமுதல் 18.30 மணிவரை நோர்வே தமிழ் பிச்சர்(nt picture), சலங்கை நர்த்தனாலய ஆதரவுடன் இந்நூலை வெளியிடவுள்ளது.


பிரதம விருந்தினராக இந்நூலின் மறுபதிப்பில் முக்கிய பங்காற்றிய 'ஈழவர் திரைக்கலை மன்றம்' இன் தலைவரான பரீஸ்ரர் எஸ். ஜே. ஜோசெப் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார். நம்மவர் கலையில் ஆர்வமுடையவர்களை அன்புடன் அழைக்கின்றனர் அழைப்பாளர்கள்.


இந்நிகழ்வு உலகம் முழுவதிலுமுள்ள நகரங்களிலும் நடக்கவுள்ளதென்பது முன்னரே அறியப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.


மேலதிக விபரங்கள்:
www.ntpicture.com/index.php?option=com_content&task=view&id=231

தகவல்: மூத்த நடிகரும் இந்நூலாக்க மறுபதிப்பாக்கத்தில் முன்னின்றவருமான திரு ஏ. ரகுநாதன் அவர்கள்.

Friday 4 December 2009

சுவட்டுச் சரம் - 2 நம் அறிவுப் பயணத் திசைகாட்டிகள் -1 பகுதி -2 சம்பத்திரிசியார் கல்லூரி அதிபர் T.M.F. லோங் அடிகளார்

சுவட்டுச் சரம் - 2
நம் அறிவுப் பயணத் திசைகாட்டிகள் -1

பகுதி -2


உள்ளத்தாற் பொய்யாது ஒழுகிய உத்தமர் யாழ். சம்பத்திரிசியார் கல்லூரி அதிபர் T.M.F. லோங் அடிகளார்
(Rev. Fr. T. M.F. Long, OMI 1936 – 1954)



பாடசாலை சகல துறைகளிலும் முன்நோக்கிப் போதல் வேண்டும்:

லோங் அடிகளார் பாடசாலைக்கு ஆசிரியராக நியமனம் பெற்ற உடனடியாகவே அவருக்கு விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் பதவியும் கொடுக்கப்பட்டது. மாணவர்கள் வெறுமனே புத்தகப் பூச்சிகளாக இருக்கப்படாது அவர்கள் முழுமையான ஆளுமை விருத்திக்கு வழி கோலுவது பாடசாலையே என்பதில் மிக்க நம்பிக்கை உடையவராக அடிகளார் இருந்தார்கள். ஆகவே அவர் அதிபர் பதவி ஏற்ற பின்னர் பாடசாலையினது விளையாட்டுத்துறை மாத்திரமல்லாமல் கலை இலக்கியத் துறையிலும் அதீத முன்னேற்றம் காட்டினார். அக்காலத்தில் யாழ் பிரதான வீதியில் புனித மார்டீனார் குரு மடவளாகத்தில் தான் விளையாட்டு அரங்கு அமைந்திருந்தது. அங்கு தான் பயிற்சிகளும் போட்டிகளும் நடாத்தப்பட்டன. இதன் பயனாக கல்லூரி தேசிய ரீதியில் பல போட்டிகளில் பங்கு பற்றி வெற்றிகளைப் பெறக் கூடியதாக இருந்தது. கொழும்பில் நடந்த மெய்வல்லுனர் போட்டியில் முதல் தடவையாக எம் கல்லூரி மாணவர்கள் மெய்வல்லுனர்ப் போட்டிகளில் சாதனை படைத்தார்கள்’ என கல்லூரியின் பழைய மாணவர் R.L. Xavier கூறியதுடன் ஆபிரிக்காவின் உகண்டாவினைச் சேர்ந்த கல்லூரிப் பழைய மாணவர் Benching Kibuka சர்வதேச இரீதியிலும் புகழ் பெற்றதாகக் குறிப்பிடுகிறார். யாழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் நடத்திய உதைபந்தாட்டம், துடுப்பாட்டம், விளையாட்டுப் போட்டி ஆகிய போட்டிகளில் தொடர்ந்து முதலிடத்தினை பெற்று Triple Crown சாதனையாளராகியது.

அடிகளார் சம்பத்திரிசியார் கல்லூரியின் அதிபராயிருந்த காலத்திலே யாழ்ப்பாணக் கல்லூரியின் அதிபராக இருந்தவர் சங்கைக்குரிய பங்கர் அவர்கள். இருவருக்குமிடையே அந்நியோன்ய பாசம் இருந்தது. அதன் காரணமாக இரு பாடசாலைகளுக்குமிடையே ஆண்டு தோறும் துடுப்பாட்டம் மற்றும் உதைபங்தாட்டப் போட்டிகள் நடைபெற்றன "Battle of the Golds" எனும் தலைப்புடன் பழைய மாணவர்கள் பொதுமக்களைக் கவரும் போட்டிகளாக அவை அமைந்தன.

ஒழுங்காட்சியில் அதீத கவனமுடைய அடிகளார் விளையாட்டில் முறைகேடுகளை முற்றாகவே வெறுத்தவர். எப்படியாக எமது அணியினரின் சிறப்பான ஆட்டத்தை நாம் கரகோசம் செய்து பாராட்டுகின்றோமோ அதே போன்று எதிரணியினரையும் பராட்ட வேண்டும் என வகுப்புகளுக்கு சுற்றறிக்கை மூலம் போட்டிக் காலங்களில் அறிவிக்கத் தவறமாட்டார். அக்காலத்தில் சம்பத்திரிசியார் கல்லூரியின் படைப்பயிற்சி மாணவர் குழு (Cadets) மிகவும் பிரபலமாயிருந்தது.


கனவு மெயப்படவேண்டும் காரியமாவது விரைவில் வேண்டும்:

பலரது கனவுகள் கனவாகவே முடிந்து விடுவதுண்டு ஆனால் அடிகளாரின் கனவு சாதனையில் தான் முடியும். ஏனென்றால் எண்ணியது எண்ணியாங்கு எய்தும் திண்ணியர் அவர். அவரது பல முயற்சிகளுக்கு யாழ் மக்களினது பங்களிப்பினை முழுமையாக அவரால் பெற முடிந்தது. மக்களுக்கும் சிறந்த பொழுது போக்கு நிகழ்ச்சிகளாக களியாட்ட விழாக்களை ஒழுங்கு செய்தார். 1938 மற்றும் 1941 ஆண்டுகளில் நடந்ததாக நான் அறிந்தவற்றில் தென்னகத் திரை நட்சத்திரங்களான N.S. கிருஸ்ணன், T.A மதுரம் போன்றோரையும் அந்தக்காலத்தில் புகழ் பெற்ற மல்யுத்த வீரர்களாயிருந்த கிங்கொங் மற்றும் தாரசிங் போன்றோரையும் அழைத்து மக்களின் ரசனைக்கு ஊட்டம் கொடுத்தார். கூட்டம் நிரம்பி வழிந்தது. பணமும் தாராளமாகச் சேர்ந்தது. அடிகளாரும் தமது அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய முடிந்தது. பாடசாலையின் நூலகம் தரம் உயர்ந்தது, ஆய்கூடங்கள் புதுப்பொலிவு பெற்றன, விளையாட்டு மைதானம் விசாலமானது.
அடிகளார் அவர்கள் அதிபர் பதவி ஏற்ற முதல் எட்டு ஆண்டுகள் இரண்டாவது உலக மகாயுத்தகாலமானமையால் அவர் வகுத்த பல செயல் திட்டங்களை நிறைவேற்றுதல் கடினமாகவே இருந்தது. யுத்தம் முடிந்த உடனடியாகவே மூன்றடுக்கு மாளிகை ஒன்றினைக்கட்டி எழுப்பி அதனை ‘மத்தியூஸ் நினைவக்கட்டிடம்’ எனப் பெயரிட்டு அவரது நினைவினைப் போற்றினார்.

பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்கள் யாபேரும் உயர் கல்வி பெறுவதில்லை அல்லது ஏதாயினும் தொழில் பெறுவதற்கான கல்வியைப் பெறுவதும் இல்லை. ஒரு தொகையினர் ஏதேதோ காரணங்களுக்காகப் பாடசாலையிலிருந்து விலகி விடுகிறார்கள். இவர்களுக்கு வாழ்வியலில் முன்னேறுவதற்கு என்ன செய்யலாம்? எப்படி உதவலாம்? என்பது பற்றித் தீவிரமாக அடிகளார் சிந்தித்தார். அதன் விளைவு? யாழ்ப்பாண சமூகம் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமூகம் ஆனால் பொதுவாக யாபேரும் சிறு விவசாயிகளே. அவர்களது விவசாயம் சம்பந்தமான அறிவினை மேம்படுத்துவதால் அவர்களுக்குச் சிறப்பான வாழ்கையை அமைக்க உதவும் என்பதை உணர்ந்த அடிகளார் கிளிநொச்சியில் 100 ஏக்கர் வரை நிலம் வாங்கி அங்கே ஒரு விவசாயக் கல்லூரியை நிறுவினார். பாடசாலையை விட்டு இடைநீங்குகின்ற மாணவர்கள் பற்றிய கவலையும் அடிகளாருக்கு இருந்தமையால் தொழில் நுட்பக் கல்வியாக மோட்டார் தொழில் நுட்பத்தினையும் பாடசாலையில் போதிப்பதற்கு வழிவகுத்தார்.

1950ஆம் ஆண்டினிலே கல்லூரியினது நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சுதந்திர இலங்கையின் முதல் பிரதமராகிய D.S சேனநாயகா அவர்கள் விழாவினில் பங்கேற்றுச் சிறப்பித்தார். கொழும்பிலே உள்ள “Aquinas College” போன்ற உயர் கல்வி வசதிகளுடைய "பெரிய சம்பத்திரிசியார்" என்ற ஒரு நிறுவனம் அமைக்க வேண்டும் என்ற கனவுடனேயே அடிகளார் வாழ்ந்தார். அதனைச் செயற்படுத்தும் வண்ணமாக யாழ் நகரிலே ஒரு களியாட்ட விழா எற்பாடு செய்து பணம் சேர்த்தார். மேலும் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்கும் சென்று போதிய நிதியினைச் சேகரித்து வந்தார்” என்கிறார் சேவியர் அவர்கள். “கோயில் கட்ட அந்த நிதியினைத் தருமாறு கேட்கப்பட்டது. "College money is for College" என்று கூறிய லோங்; அடிகளார் அதனைக் கொடுக்க மறுத்தமை யாழ் வாழ் கிறிஸ்தவர்கள் மத்தியிலே அன்று பெரிதாகப் பேசப்பட்டது. லோங் அடிகளார் சொல்லாலும் செயலாலும் பாதிப்புற்ற போதும், உயர்ந்த கற்பகதரு விருட்சமாகவே யாபேருக்கும் காட்சி அளிக்கிறார்.” என்கிறார் பண்டிதர் அலெக்சாந்தர் அவர்கள்.


பாடசாலையின் தொடர்ச்சியே சமூகம்:

உலகமகாயுத்தம் நடைபெற்ற சமயத்திலே RAF என அழைக்கப்படும் இங்கிலாந்து அரசினது விமானப் படையினரின் உபயோகத்திற்கென பலாலியில் விமான தளம் ஒன்று அமைக்கப்பட்டது. போர் முடிவுற்றதும் இந்ததளத்தினை மூடி விட முடிவு செய்தபோது லோங் அடிகளார் தான் தனது நண்பராயிருந்த A.R வார்டில் அவர்களிடமும், அன்றைய ஆளுனரிடமும் பேசி அந்த விமான தளத்தினை தொடர்ந்தும் இயங்க வைத்தார். இதன் மூலமாக யாழ் மக்கள் இந்தியாவின் திருச்சி, மற்றும் கொழும்பிற்குச் சுலபமாகச் சென்று வர முடிந்தது.

மாணவர்களுடைய அறிவு விருத்திக்கு ஆசிரியர் போதிப்பது மாத்திரம் போதாது. அவர்கள், சிறப்பாக உயர்தர மாணவர்கள், மேலும் பல தகவல்களைப் பெறவேண்டும். அதனை வழங்குவற்கு ஒரு சிறந்த நூலகம் அமைய வேண்டும் என்பதை உணர்ந்த அடிகளார் அவர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து சிறந்த நூல்களைப் பெற்று பாடசாலையின் நூல்நிலையத்தின் தரத்தினைப் பெரிதும் உயர்த்தினார். ஓவ்வொரு வகுப்பறையிலும் “Read a book A Week” என்று அட்டையில் எழுதித் தொங்க வைத்தார். பிள்ளையினது முழுமையான ஆழுமை வளர்ச்சிக்கு பாடசாலை எந்த அளவிற்கு உதவுகிறதோ அந்த அளவினுக்குக் குடும்பமும் உதவுகிறது. பெற்றோர்களில் பலர் பாடசாலைக் கல்வியைப் பெறக் கூடிய வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம் அன்றைய காலகட்டத்தில் ஆங்கிலக் கல்வி கற்பதாயின் கட்டணம் கட்ட வேண்டியிருந்தது. அது எத்தனை பெற்றோர்களுக்குச் சாத்தியமாயிற்று. ஆகவே பலபெற்றோர் ஒரளவு தமிழ்ப் பாடசாலைக் கல்வியுடன் நிறுத்தி தமது குலத்தொழிலினையே செய்து வாழக்கையை ஓட்டினர். இவர்களது உலகளாவிய அறிவினை வளர்த்தால் தான் அவர்களது குலக்கொழுந்துகள் அறிவார்ந்த சூழலில் வாழ்வார்கள் என்பதை உணர்ந்தவர் அடிகளார். சமூகத்தினைச் சார்ந்தோர் அத்தனை பேருக்குமே ஒரு சிறந்த நூலகம் இன்றியமையாதது எனக் கருதிய லோங் அடிகளார் யாழ் நூல் நிலையம் அமைப்பதில் அதிக ஈடுபாடு காட்டினார். அன்றைய யாழ்நகர பிதாவாக இருந்த சாம் A. சபாபதியுடனும் இன்னும் பல அறிவு ஜீவிகளுடனும் இணைந்து யாழ் பொதுநூலகக் குழு அமைத்து ஒரு கோடி ரூபா நிதி சேகரிப்பதற்கு முன்னின்று உழைத்தார். தமிழகத்தின் பிரபல கட்டிடக்கலை வல்லுனர் கலாநிதி. இராமநாதன் அவர்களின் தொண்டினை நாடிப் பெற்றதுடன் அமெரிக்க அரசாங்கத்திடம் ஒரு பெரும் தொகை பணத்தினையும் நன்கொடையாகப் பெற்றுத் கொடுத்தார். அவரது சேவை யாழ் மக்களினது உள்ளத்தில் எத்தனை தூரம் இடம் பெற்றுள்ளது என்பதை அவரது உருவச்சிலை யாழ் பொது நூலக முன்றில் அழகோச்சியபடி நிற்பதில் இருந்து கண்டு கொள்ள முடியும்.

2006 மே மாதம் 26ந்தேதி அருட்தந்தை ஞாபகர்த்மாக நிறுவப்பட் மூன்று மாடிக்கட்டிடம் திறந்து வைக்கப் பட்டமை அப் பெரியவரின் நினைவு அவரது பழையமாணவர்களிடம் என்றும் பசுமையாக இருக்கும் என்பதனை நிலை நாட்டியுள்ளது.


அவர் பெருமை முழு இலங்கைக்குத் தெரியவந்தது:

அவரது நிர்வாகத் திறமையும், மாணவர்கள் மேலுள்ள அக்கறை சேர்ந்த கவனிப்பும் எல்லோராலும் பேசப்பட்டது. இதன் காரணமாகத் தென்னிலங்கையிலுமிருந்து மாணவர்கள் கல்லூரியில் வந்து விடுதிச் சாலையில் தங்கிக் கல்வி கற்றார்கள். அவர்களில் பலர் பல உயர் பதவிகளைச் சுதந்திர இலங்கையில் வகித்துள்ளனர். E.L.B ஹறுள்ளை U.N.P அரசாங்கத்தில் அமைச்சராகவும் பின்னர் ஸ்ரீலங்காவின் தூதராக ஆஸ்திரேலியாவிலும் கடமையாற்றி அடிகளாரின் பெருமைக்கு உதாரணரானார்கள். 1945ஆம் ஆண்டினிலே அடிகளாரது ஆசிரியப் பணியின் வெள்ளி விழா கொண்டாடப்பட்ட போது "Times of Ceylon” என்ற பத்திரிகை “ Fr. Long has fulfilled his task as Rector of St. Patrick’s in so much a fashion that the school ranks as one of the finest in the country, Students come from Colombo, Kandy and other areas to St. Patrick’s on account of the special “tone” this excellent school imparts to its pupil.. For one setting of that ‘tone’ the Rector is chiefly responsible” என எழுதியிருந்தது. . Collette என்பவர் அந்நாளில் Daily News பத்திரிகையின் பிரபல கேலிச் சித்திர கலைஞர். அகில இலங்கையிலும் பெயர் பெற்ற லோங் அடிகளார் கொல்லெற்றின் கண்களுக்குத் தவறவில்லை. அவரை வேட்டி சால்வை அணிந்தவராகக் கேலிச்சித்திரம வரைந்து "Jaffna man of Irish Origin” எனத்தலைப்பு இட்டிருந்தமை அடிகளார் தன்னை எந்த அளவினுக்கு யாழ்ப்பாணத்தவனாக ஆக்கிக் கொண்டார் என்பதற்கு எடுத்துக் காட்டு. அடிகளார் அமெரிக்கப் பயணத்தை மேற்கொண:டு பணம் திரட்டி வந்த போது, "Oh,Oh, Look Out, America" என்ற தலைப்பிலும் அடிகளார் ஆஸ்திரேலியாவிற்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற போது “He Comes From Jaffna”: என்ற தலைப்பினிலும் கேலிச் சித்திரம் வரைந்தருந்தார். இடமாற்றம் பெற்றதற்கான கேலிச்சித்திரத்தில் ஒரு தலைப்பாகை அணிந்தவராகக் காதிலே கடுக்கன் ஒருகையினில் குடையும் மறு கையினில் முருங்கைக்காய் கட்டுடன் ஆஸ்திரேலியா எனக் குறிக்கப்பட்ட சூட்கேசுடனும் அடிகளை வரைந்திருந்தார்.

“சுகாதாரத்துறையில் பதவி ஒன்றினுக்காக எழுத்துப் பரீட்சையில் சித்தி எய்திய பின்னர் நேர்முகப் பரீட்சையினுக்குத் தோன்ற வேண்டியிருந்தது. நேர்முகப் பரீட்சையில் கல்விச் சான்றிதழுடன் இரண்டு நற்சான்றிதழ்களும் எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. சுகாதார இலாகாவில் இரண்டு உயர் அதிகாரிகள் என்னை நேர்கண்டனர் அவர்கள் என்னிடம் முதல் கேட்ட கேள்வி “நீர் எங்கு கல்வி கற்றீர்?" என்பதே. நான் பதில் கூறியதும் எனது சான்றிதழ்களைப் பெற்றவர்கள் முதலில் இருந்த லோங் அடிகளாரின் சான்றிதழினை வாசித்ததும், மேலே ஒன்றினையும் பார்க்காமல் புன்சிரிப்புடன் ‘சரி; நீர் போய் வாரும் என்றனர்’. பின்னர்தான் தெரிந்தது அந்த உயர் அதிகாரிகளில்; ஒருவர் அருட் தந்தை லோங் அடிகளாரின் மாணவர் என்பது” என சம்பதிரியார் கல்லூரியின் பழைய மாணவர் றாபியல் சேவியர் அவர்கள் என்னிடம் தெரிவித்துள்ளார்கள்.


அவர் பிரிவை ஒவ்வொருவரும் அனுபவித்தனர்:

அல்பிறெட் எட்வேர்ட்ஸ் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையில் லோங் அடிகளாரது குறைபாடாக ஒரு குறைபாட்டினைக் குறிப்பிடுவது ஆச்சரியத்தைத் தருகிறது. ”அடிகளார் அவர்கள் ஒதுங்கியே வாழ்ந்தது மனவருவருத்தமானது. அவர் மாணவர்களையும் பெற்றோர்களையும் கொஞ்சம் தூரத்திலேயே வைத்திருந்தார். அவருக்கு நெருக்கமான சில ஆசிரியர்கள் தவிர ஏனையவர்களுடனும் சமூகத்தினருடனும் அவர் அவ்வளவாகப் பழகியதாகத் தெரியவில்லை” என அல்பிறெட் எட்வேர்ட்ஸ் அவர்கள் எழுதியுள்ளார்கள். இவர் கற்ற காலம் லோங் அடிகளார் அதிபர் பதவி ஏற்ற ஆரம்பகாலம் ஆகவே அன்றைய அடிகளார் பற்றிய கருத்தாக இது அமையலாம்.
அருட் தந்தை ரி.எம்.எப் லோங் அவர்கள் 1954 இல் .இடமாற்றம் பெற்று ஆஸ்திரேலியாவுக்குப் போக வேண்டி வந்தது. கல்லூரி வளர்ச்சிக்கு மேலும் பல திட்டங்கள் வகுத்து அவற்றினுக்குச் செயல் வடிவு கொடுக்க முற்பட்ட வேளையில் வந்த இடமாற்றத்தைக் கேள்வியுற்ற பழைய மாணவர், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மிகவம் அதிர்ச்சி அடைந்தனர். அடிகளாரை ஆஸ்திரேலியாவின் குருமார்களுக்குப் பயிற்சி தரும் ஒரு மதபாடசாலையினுக்கு அனுப்பியிருந்தார்கள். என்றுமே தமது உரைகளின் போது ‘யாழப்பாணம், நாம் தமிழர்’ என யாழ் மக்களைத் தனது உடன் பிறப்பாகக் கருதிய ஆடிகளார் ஆஸ்திரேலியா சென்றாலும் அவரது உள்ளமும் உயிரும் என்றுமே யாழ்ப்பாணத்தினை விட்டு அகல மறுத்தது. கத்தோலிக்க திருச்சபையினுக்கும் அடிகளாருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிகளாரின் சேவை கல்லூரியினுக்குத் தேவையில்லை என மேலிடத்திற்கு அறிவிக்கப்பட்டமையே தான் அடிகளாரின் இடமாறற்த்திற்குக் காரணமானது எனப் பேசப்பட்டது.

மிகப் பெரிய பிரியாவிடை ஒன்று வழங்கப்பட்டது அப்பொழுது கல்லூரி அவருக்கு பிரியாவிடை எடுத்தது. அதில் கல்லூரி ஆசிரிய மாணவர்களுடன் முழுக் கத்தோலிக்க சமூகம் மாத்திரமல்லாமல் ஏனைய சமூகங்களும் ஒருமித்த பங்கு பற்றியதென்றே கூறவேணடும். விழாவினுக்கு அமைக்கப்பட்ட மேடையின் பிற்புறத்தினில் 'Long Live Fr. Long’ என எழுதப்பட்ட பதாகை துலாபரமாகக் காட்சியளித்தது. அடிகளாருக்கு யாழ்நகரின் பிரபல சைவப்பெரியார் ஆள் உயரமான மாலையிட்டமை அவர் யாழ்பாணசமூகத்தவர் எல்லோரதும் அபிமானத்துக்குரியவர் என்பதைக் காட்டியது. அத்துடன் முழுச் சமூகமுமே அவரை புகையிரத நிலையத்திற்குக் கூட்டிச் சென்று வழியனுப்பியது. மக்கள் தொகையினால் புகையிரத நிலையமே நிரம்பி வழிந்தது அந்தளவிற்கு அவர் சமூகத்திலும் பிரபல்யம் அடைந்திருந்தார். லோங் அடிகளார் உயிர் வாழ்ந்த 66 வருடங்களில் 34 வருடங்களை யாழ்ப்பாணத்து மாணவர்களின் நலனுக்காகவும் யாழ் சமூகத்தின் உயர்வுக்காகவும் அரும் பணியற்றியதை எவரும் மறப்பதற்கில்லை. அவரது சேவை நலத்தினை இலங்கை அரசாங்கமே கௌரவிக்கு முகமாக 1990ஆம் ஆண்டு பங்குனி மாதம் தபால் திணைக்களம் நினைவு முத்திரை ஒன்றினை அன்றைய ஜனாதிபதி கௌரவ சு. பிரேமதாசா அவர்களால் வெளியிட்டது. வெளியீட்டு விழா யாழ்நகரிலும் கெர்ழும்பு மாநகரிலும் கோலாகலமாகக் கொண்டாடப் பட்டது.

அடிகளார் ஆஸ்திரேலியாவின் பிறிஸ்பேன் நகரினில் தனது கல்விப் பணியினைத் தொடர்ந்தார். அங்கே Iona College எனும் ஒரு பாடசாலையை அமைத்து சேவையாற்றிய சமயத்தில் அவரது கண் பார்வையில் பிரச்சினை வந்தபோது அதனை நிவர்ப்பிப்பதற்காக கெர்ழும்பினுக்குதான் அடிகளார் வந்தார். இங்கே அவரது மாணவர் கண்வைத்தியர் சிவசுப்பிரமணியத்தினைக் கொண்டு அறுவை வைத்தியம் செய்து குறைபாட்டினை நிவர்த்தி செய்த பின்னர் மீண்டும்; ஆஸ்திரேலியா சென்றாராம். அங்கு நோய்வாய்ப்பட்டமையால் இங்கிலாந்து திரும்பினார். அவர் எங்கு வாழ்ந்தாலும் அவரது இதயம் யாழப்பாணத்திலதான் இருந்தது எனபதை அவர் மரணிக்கச் சில வாரங்களுக்கு முன்னர் தன்னை உபாசிக்கும் ஒரு "மகனுக்கு” எழுதிய கடிதத்தில், “தனது சொந்த மண்ணிலே உள்ள வளர்ந்த ஒரு மரத்தினை வேரோடு பிடுங்கி வேறோர் இடத்தினில் நடப்பட்டது போல நான் உணர்கிறேன். நான் இன்னும் வாழவேண்டும் என கடவுளிடம் பிரார்த்தியுங்கள்” என எழுதியிருந்தமையைக் கண்டு உணரமுடிகிறது. ஆனால் கடவுளுக்கு அத்தனை பொறுமை இல்லையோ? இலண்டன் மாநகரத்தில் உள்ள மருத்துவ மனை ஒன்றினில் அறுவைச் சிகிச்சை நடைபெற்றிருக்கையிலேயே அடிகளாரை 30-04-1961ல் அழைத்துக் கொண்டார்.


- பொ. கனகசபாபதி
*****************

*****************

தகவல் உதவிக்கு நன்றிக்குரியோர்:
Dedication Very Rev, Fr, T,M,F Long O.M.I S.P.C Alumni Association. U.K
பொன்மாலை - 150 Years in Education. St. Patrick’s College Alumni Association, Canada.
M.S. அலெக்சாந்தர் முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர்,
செல்வா இலங்கையன். முன்னாள் ஆசிரியர், ஓய்வு பெற்ற விஞ்ஞான கல்வி அதிகாரி R..L சேவியர் அவர்கள்

தொடர்புகளுக்கு: P.Kanagasabapathy
Tel: 415- 283 -1544(கனடா) e.mail: pkanex@hotmail.com


பிற்குறிப்பு:
Rev. Fr. Timothy M.F. Long, OMI (1936 – 1954)
The Age of Fr. Long were years of Grandeur at St. Patrick’s. The magic personality of Fr. Long could make possible what seemed impossible. Fr. Long’s period was one of scintillating activity. It was the period of Carnivals, Exhibitions, Pageantry and open-air Passion plays. In sports, our teams emerged invincible on the playing fields. In studies, the brilliant feats of the earlier period remained untarnished. The Matthews Block will be a constant reminder of his hard work. He was the architect of an excellent library at St. Patrick’s and the driving force behind the Jaffna public library. In 1990 the Government of Sri Lanka recognized him as a “National Hero” and issued a stamp, enshrining the memory of his contribution to the society at large. In 1961 on the 30th of April he passed away to enjoy Eternal Glory.

http://www.stpatrickscollege.edu.lk/past%20rectors.htm

Thursday 3 December 2009

சுவட்டுச் சரம் - 2 நம் அறிவுப் பயணத் திசைகாட்டிகள் -1 யாழ். சம்பத்திரிசியார் கல்லூரி அதிபர் T.M.F. லோங் அடிகளார்

சுவட்டுச் சரம் - 2
நம் அறிவுப் பயணத் திசைகாட்டிகள் -1
பகுதி -1

உள்ளத்தாற் பொய்யாது ஒழுகிய உத்தமர் யாழ். சம்பத்திரிசியார் கல்லூரி அதிபர் T.M.F. லோங் அடிகளார்
(Rev. Fr. T. M.F. Long, OMI 1936 – 1954)


யாழ் சம்பத்திரிசியார் கல்லூரி 1850ம் ஆண்டு ஆரம்பமானது. இதன் முதல் அதிபராக அயர்லாந்து நாட்டினைச் சேர்ந்த திரு Patrick Foy அவர்கள் தான் கடமை ஆற்றினார். அவர்கள் கடமையாற்றியதைத் தொடர்ந்து அயர்லாந்தினைச் சேர்ந்த பல குருமார்களும் சங்கைக்குரிய சகோதரர்களும் வருகை தந்தனர். இவர்களது ஆக்கத்தாலும் ஊக்கத்தாலும் இக்கல்லூரி படிப்படியாக உயர்ந்து யாழ் மக்கள் பெரும் பயன் பெற வைத்தது. இலங்கையின் ஏனைய பாகங்களிருந்தும் மாணவர் தமது கல்வியை வளம் படுத்துற்காக தேடிவரும் அளவினுக்குப் புகழ் பூத்த கல்லூரியாக வளர்ந்தது. இக்கல்லூரிக்கும் நாட்டு மக்களுக்கும் அளப்பரிய சேவையாற்றிய பின்னர் நாட்டினை விட்டு வெளியேறிய கடைசி ஐரிஸ் பாதிரியார் அதிபர் T.M.F. லோங் அடிகளார் ஆகும். இவர் யாழ்ப்பாணத்திலிருந்து திருச்சபையினால் ஆஸ்திரேலியாவிற்கு இடமாற்றம் செய்யப் பட்டார்.

அருட் தந்தை லோங் அடிகளார் 22- 04- 1896ல் அயர்லாந்து தேசத்தின் Patrickswell எனும் நகரில் பிறந்தார். தனது இளம் வயது முதலே குருவாக மாறவேண்டும், பின்தங்கிய நாடுகளில் வாழும் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற சீரிய கொள்கையுடன் வாழ்ந்த லோங் அடிகளார் அவர்கள்
1915ல் அமலமரித்தியாகிகள் (OMI) சபையினில் சேர்ந்து 1820ல் குருப் பட்டம் பெற்றார். குருப்பட்டம் பெற்ற சில மாதங்களிலேயே சேவையாற்றுதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டார். சம்பத்திரிசியார் கல்லூரியினுக்கு அப்பொழுது அதிபராக இருந்த அருட்தந்தை சார்ள்ஸ் மத்தியூஸ் அவர்களே லோங் அடிகளார் அவர்கள் இலங்கைக்கு, சிறப்பாக யாழ்ப்பாணத்திற்கு வருவதற்குக் காரணராயினார். லோங் அடிகளார் 1921 ஜனவரி மாதம் கல்லூரியில் ஆசிரியப் பொறுப்பேற்றதுடன் விளையாட்டுத் துறைக்கும் பொறுப்பேற்றார். 1923ல் லோங் அடிகளார் மீண்டும் இங்கிலாந்து சென்று தனது மேற்படிப்பினை கேம்பிறிட்ஜ் சர்வகலாசாலையில் முடித்துக் கொண்டு M.A பட்டதாரியாக திரும்பி வந்ததுடன் பாடசாலையினது அதிபர் பதவியையும் ஏற்றார். மிக்க இளம் வயதிலேயே அதிபர் பதவியை ஏற்ற அடிகளார் திறமையுடனும் சாமர்த்தியமாகவும் அப்பதவியை வகித்து பதவிக்கே பெருமை சேர்த்தார்.

அடிகளார் அதிபர் பதவி வகித்த காலத்தினை இலங்கை வரலாற்றினிலே இரண்டாம் உலக மகாயுத்தத்திற்கு முன், இரண்டாம்
உலகமகாயுத்தத்தின் பின், இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் என, மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். இந்த மூன்று காலகட்டங்களிலும் நாட்டிலும் வெளியேயும் தனக்கு உள்ள தொடர்புகளின் மூலம் பெறக்கூடிய அத்தனை அனுகூலங்களையும் பெற்று தனது கல்லூரியினுக்கும் அது சார்ந்த யாழ் சமுதாயத்தின் உயர்ச்சிக்கும் பயன்படுவண்ணம் அடிகளார் மிக இலாவகமாகப் பிரயோகித்தார்.


சமரசம் உலாவும் இடமே:


அன்றைய யாழ்ப்பாணம் ஓரளவு பிற்போக்கான சமூகக் கோட்பாடுகளை உள்ளடக்கிய சமூகமாயிருந்தது என்பதை வெட்கத்துடன் சொல்லியே தீரவேண்டும். எமது சமூகத்தின் சாதிப் பாகுபாடு அதீத முன்னிலை வகித்த கேடுகெட்ட நிலையினை மாற்ற வேண்டும் எனத்தீவிரமாக செயல்பட்டவர் அடிகளார். இதனால் சமூகத்தால் ஒதுக்கிவிடப்பட்ட இனத்தவரின் பிள்ளைகளை பாட
சாலையில் எந்த வித பாகுபாடுமின்றி எவ்விதமான பேதமும் காட்டாமல் அரவணைத்தார். எங்கெங்கு அச்சமூகத்தவருக்கு உதவ முடியுமோ அங்கங்கே துணிகரமாக உதவினார் இப்பெருந்தகையாளர். அங்கே சமரசம் உலாவியது. சமத்துவம் கோலோச்சியது.

சம்பத்திரிசியார் கல்லூரியில் அருட் தந்தை லோங் அடிகளாரால் ஆசிரிய சேவைக்குச் சேர்க்கப்பட்டவரும் பின்னாளில் விஞ்ஞானக் கல்வி அதிகாரியாகவும் இருந்து ஓய்வு பெற்று அண்மையில் அமரரான எனது அருமை நண்பர் திரு செல்வரத்தினம் இலங்கையன் அவர்கள், “நான் 1953 யூன் மாதம் இலண்டன் Bsc பட்டதாரிப் பரீட்சைக்குத் தோற்றி அதன் பெறுபேறுகளுக்காகக் காத்திருந்த பொழுது யா
ழ் சம்பத்திரிசியார் கல்லூரியில் கணித விஞ்ஞான ஆசிரிய வெற்றிடத்துக்கான விளம்பரத்தைக் கண்ணுற்று அதற்கு விண்ணப்பித்தேன். அதற்கான நேர்முகப் பரீட்சைக்குப் போயிருந்தேன். அன்று என்னை நேர்கண்டவர் அப்போது கல்லூரியின் அதிபராயிருந்த(Rector) அருட்தந்தை ரி.எம். எப். லோங் அவர்களே. அவரைக் கண்டதும் அவரின் உயர்ந்த பருத்த தோற்றம் பயமுறுத்தியது. ஒரு ஆஜானுபாகன் வீற்றிருந்ததைப் போன்ற தோற்றமளித்தார். அவர் ஒரு கண்டிப்பானவரும் மிக ஆளுமை உடையவருமாக இருப்பார் எனவும் கருதினேன். ஆனால் அவர் என்னை நேர்கண்ட பொழுது கேட்ட கேள்விகளின் தொனி எனக்கு மிக ஆறுதல் அளித்தது. 20 நிமிடங்கள் வரை இடம் பெற்ற நேர்காணலின் போது நான் ‘தாழ்த்தப்பட்ட’ என்று கூறப்படும் சமூகத்தைச் சேர்ந்தவன் என்று கூறிய பொழுது, அது பற்றி நீர் பயப்படத் தேவையில்லை. அது பற்றி நாங்கள், அதாவது கல்லூரி நிர்வாகம் கவனித்துக் கொள்ளும் என்று கூறிவிட்டு அலுவலகத்தில் நியமனக் கடிதம் பற்றி தலைமை லிகிதர் ஆகிய திரு. ஜேம்ஸ் அவர்களைக் காணும்படியும் பாடஅட்டவணை சம்பந்தமாக அதற்குப் பொறுப்பான உப அதிபர் அருட் தந்தை ஜோன் அவர்களைச் சந்திக்கும் படியும் பணித்தார். நான் விடுதிச் சாலையில் தங்குவதற்கும் வேண்டுகோள் விடுத்தேன். அதற்குச் சம்மதித்த அடிகளார் என்னை அருட்தந்தை ஜோன் அவர்களிடம் பேசுமாறு பணித்தார். அருட்தந்தை ஜோன் அவர்கள் நான் உயர்தர மாணவர்கள் தங்கும் விடுதிச் சாலையில் தங்குவதற்கு ஒழுங்குகள் செய்து தந்தார். ஏறக் குறைய ஒரு வருடம் வரை நான் விடுதிச்சாலையில் தங்கியிருந்தேன். மாணவர்களுக்குரிய அதே விதிகளை நாமும் அங்கே கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. அது ஒன்றும் கஸ்டமாயிருக்கவில்லை ஆனால் உணவு விசயத்தில் எனக்குச் கொஞ்சம் சலிப்பு. அதிகமான நாட்களில் மாட்டு இறைச்சி தந்தார்கள் ஆகவே அந்த வருட இறுதியில் விடுதிச் சாலையில் இருந்து விலகி விட்டேன்” என தனது வாழ்க்கைச் சரிதத்தில் எழுதியுள்ளார்.

“ஒரு சமயம் நலிந்த சமூகத்தினைச் சேர்ந்த யேமிஸ் அவர்களும் பாடசாலையின் ஆசிரியரான யேக்கப்பும் தேர்தல் ஒன்றினில் போட்டியிட்டனர். இருவருமே லோங் அடிகளாரின் ஆதரவினை வேண்டி நின்றனர். அடிகளார் வெளிப் படையாகவே தனது எண்ணத்தை ஒழிவு மறைவில்லாமல் எடுத்துக் கூறினார். நலிந்த சமூகத்தின் மேம்பாடேதான் முக்கியமானது எனவே தனது ஆதரவு யோமிஸ் அவர்களக்கு எனக் கூறினார்” என்கிறார் அக்கல்லூரியின் பிரபலமான பழைய மாணவரும் தகைசார் கல்விமானுமாகிய பண்டிதர் அலெக்சாந்தர். போட்டியிட்டவர்களில் ஒருவர் தனது பாடசாலை ஊழியர் என்று கூடப் பார்க்காது யேமிசுக்கு அடிகளார் ஆதரவு காட்டியமை அடிகளாரது கண்ணியத்தையும் நேர்மையையும் இங்கே துலக்குவதுடன் நலிந்த சமூகத்தினது உயர்வே அவரது கனவு, என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

நலிந்த மக்களுக்கு உதவ வேண்டும், அவர்கள் மேம்பாட்டினுக்கு வழிகோல வேண்டும் என்ற நல்ல நோகங்களைக் கொண்டிருந்த அடிக
ளார் அமரர் C.W.W. கன்னங்கரா அவர்களால் கொண்டுவரப்பட்ட இலவசக் கல்வித் திட்டத்தினை வரவேற்கவில்லை என்பதை அறிந்த எனக்குச் சற்று நெருடலாகவே இருந்தது. அதனை அடிகளார் விரும்பாமைக்கு என்ன காரணம் என்பது இன்றும் எனக்குப் புரியாத புதிராகவே உள்ளது. கட்டணம் கட்டிப் படிப்பதற்கு வசதி அற்றிருந்த எத்தனை மக்களுக்கு இலவசக் கல்வித்திட்டம் ஆங்கிலப் பாடசாலைகளில் அடி எடுத்து வைக்க உதவிற்று! இலவச கல்வித் திடம் பின்தங்கிய சமூகத்தவருக்கு எத்தனை உதவியது என்பதை அடிகளார் நிச்சயமாகப் பின்னாளில் உணர்ந்திருப்பார் என்றே எண்ணுகிறேன்.


மலைவாழை போலல்லவா கல்வி வாயார உண்ணலாம் வா:


அவர் தனது அலுவலகத்திற்கு வரும் பொழுது, சுவாமிமார்களுக்கான விடுதிப் பகுதியிலிருந்து இறங்கி வகுப்பறைகள் தொடராக இருக்கும் விறாந்தை வழியாகவே வருவார். அப்பொழுது மாணவர் எவரும் வகுப்பறைகளுக்கு வெளியிலோ அல்லது நூலகத்துக்கு வெளியிலோ காணப்பட மாட்டார்கள்.உயர் பாடசாலைக்குத்தான் அடிகளார் பொறுப்பாயிருந்
தார். மத்திய பாடசாலையும் ஆரம்ப பாடசாலையும் வேறு வேறாகத் செயற்பட்டன. அவற்றிற்கு வேறு வேறு சுவாமிகளே பொறுப்பாயிருந்தார்கள்.

காலையில் வகுப்புகள் ஆரம்பிக்கு முன்னர் முதல் மணி அடித்ததும் ஓவ்வொரு நாளும் உயர் பாடசாலையின் மத்தியில் அலுவகத்திற்கு முன்பாக அமைந்திருக்கும் மேரி மாதாவின் உருவச்சிலைக்கு முன்பாக உள்ள வெளியில் மாணவர்கள் எல்லோரும் கூடுவது வழக்கம். மாணவ
ர்கள் யாவரும் நேரத்திற்குப் பாடசாலைக்கு வந்து விடவேண்டும் என்பதில் மிகவும் கண்டிப்புடன் செயல்பட்டார் அடிகளார். அதற்காகவே பாடசாலை தொடங்கும் நேரத்துக்கான முதல்மணி தொடர்ச்சியாக ஐந்து நிமிடங்கள் வரை அடிக்கப்படும் என அறிகிறேன். இதனால் பாடசாலைச் சுற்றாடலில் வதியும் மாணவர்கள் காலதாமதமின்றி ஓடோடி பாடசாலையை வந்தடைவதற்கான அவகாசம் கிடைக்கும். பாடசாலை ஆரம்பிப்பதற்கான முதல்மணி அடித்ததும் அதிபர் அலுவலகத்திற்கு முன்பாக மேரி மாதாவின் பீடத்தில் ஏறி நின்று அதன் முன்பாக உள்ள வெளியை நோக்கி தன் கண்ணோட்டத்தைச் செலுத்துவார். அப்பொழுது நூல் நிலையம் வகுப்பறை விறாந்தைகள் தோறும் நின்று ஓடித் திரிந்த மாணவர்கள் எல்லோரும் மேரி மாதா உருவச் சிலைக்கு முன்பாக ஓடோடி வந்து நிற்பார்கள். மர்ணவர்களின் ஒழுங்காட்சிக்குப் பொறுப்பான தலைமை ஆசிரியர் (Head Master) பிரம்புடன் மாணவர்களின் ஒழுங்கு நிலையை மேற்பார்வை செய்துகொண்டு உலாவித்திரிவார். மாணவர்களின் இந்த ஒன்றுகூடலின போது அதிபர் பாடசாலையில் இடம்பெற்ற இடம்பெறப் போகின்ற விசேட நிகழ்ச்சிகள் பற்றி எடுத்துக் கூறுவார்.


எட்டிப்பார்க்கத்
தேவையில்லை எட்ட நின்றாலே தெரியும்:

பாடசாலை ஒன்றில் பணியாற்றும் எல்லா ஆசிரியர்களும் அர்ப்பணிப்புடன் சேவை ஆற்றுவார்கள் எனக் கூற முடியாது. அது போன்றே எல்லா மாணவர்களும் சிரத்தையுடன் கற்பார்கள் என்பதும் இல்லை. ஆகவே தலைமைக்குப் பயந்தே சில ஆசிரியர்களும் கணிசமான தொகை மாணவர்களும் செயற்படுவார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. எனவே, கற்றலும் கற்பித்தலும் பாடசாலையில் ஒழுங்காக நடைபெறுகின்றனவா? என்பதை தெரிந்து
கொள்வதற்குத் தினசரி அதிபர் ஓரிரு முறையாவது பாடசாலையினை வலம் வரவேண்டியது அவசியம்.

அடிகளாரது ஆஜானுபாகுத் தோற்றம் வகுப்பறை மேற்பார்வைக்காக விறாந்தை வழியே அவர் செல்லும் பொழுது வகுப்பறைகளில் கற்பித்தலும் கற்றலும் அமைதியான முறையில் இடம் பெறுவதை அவதானிக்க வசதியாயிருந்தது. ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஊக்குவிப்பதில் கை தேர்ந்தவர் லோங் அடிகள். சிறந்த வாய் வல்லமை உடையவராகவும் வற்புறுத்திப் பேசும் ஆற்றல் உடையவராகவும் இருந்தமையால் ஆசிரியர்கள் அவர் மீது பயம் கலந்த அபிமானமும் பக்தியும் கொண்டிருந்தனர்.


" The best is good enough for St. Patrick’s”, “ Let not circumstances keep you down” எனும் வாசகங்கள் தாரக மந்திரங்கள் ஆயின. அடிகளார் பதவி ஏற்ற அக்காலத்தில் Cambridge Junior, Cambridge Senior போன்ற இங்கிலாந்துப் பரீட்சைகள் தான் நடைபெற்றன. லோங் அடிகளார் மாணவர்களுக்கு அயராது பயிற்றுவித்து அப்பரீட்சைகளுக்குத் தோற்றிய மாணவர்களைச் சிறந்த பெறுபேறுகளையும் பெற்றுக் கொள்ள தயார்ப் படுத்தினார்.

இலங்கை அரசாங்கத்தினால் நடத்தப் பட்ட S.S.C எனும் சிரேஸ்ட பாடசாலைப் பத்திரப் பரீட்சைக்கு மாணவர்கள் முதன் முதலாக தோற்றினார்கள். 1946ல் நடைபெற்ற S.S.C பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் பாட
சாலை மாணவர்கள் சித்தியடையாமை கண்டு அடிகளார் மனம் வருந்தினார். உடனடியாகவே மாணவர்களுக்கு விசேட வகுப்புகள் நடத்தத் தொடங்கி அவர்களின் ஆங்கிலத் தரத்தினை உயர்த்தினார். ஆங்கிலத்தில் நல்ல பெறுபேறுகளை மாணவர்கள் பெறுவதற்கு வழிவகுத்தார்.


அடிக்கிற கைதான் அணைக்கும்:

அவர் மாணவர் ஒருவருடன் கதைக்கும் பொழுது தோளில் கை போட்டுக் கொண்டுதான் பிள்ளாய் (Child) என்று விழித்தே சம்பாசணையை ஆரம்பிப்பார். ஒழுங்காட்சி சம்பந்தமான விடையங்களை உப அதிபரும், தலைமை ஆசிரியரும் கவனிக்கும் படியும் விட்டு விடுவார். உடல் தண்டனை ஏதும் இருப்பின் அதை தலைமை ஆசிரியர் தான் வழங்குவார். சற்று மிகையான குற்றகளுக்கான தண்டனையை அதிபர் அவர்களே வழங்குவார்கள். சில சமயங்களிலே தண்டனை பிரார்த்தனை நேரத்தில் மேரிமாதா சிலைக்கு முன்னர் பகிரங்கமாகவே நடைபெறுவதும் உண்டு. அடிகளார் ஒருவரைத் தண்டிக்கு முன்னர் குழந்தாய் முழங்காலில் நில் என்றே பணிப்பார்.

ஆரம்பகாலத்தில் "அடியாத மாடு படியாது” என்ற யாழ்ப்பாணத்தவரது பாரம்பரிய முறையினுக்கு ஒப்பவே அடிகளார் கல்லூரியின் ஒழுங்காட்சி, மற்றும் கல்வி முன்னேற்றத்திற்குப் பிரம்படி முக்கியம் என்ற கணிப்பினை வைத்துச் செயற்படுத்தினார். ஆனால் 1952ல் அமெரிக்கா பயணம் மேற்கொண்டு திரும்பிய அடிகளார் மனதில் புரட்சிகரமான ஒரு மாற்றம் ஏற்பட்டது. மாணவர்களைப் பிரம்பு கொண்டு தண்டிக்கும் மு
றை ஒழிக்கப்படவேண்டும் என அடிகளார் எண்ணினார். தனது அறை மற்றும் வகுப்பறைகள் யாவற்றிலும் உள்ள அத்தனை பிரப்புகளையும் மைதானத்தின் மத்தியில் போடப்பட்டு ஆசிரியர்களும் மாணவர்களும் சூழ்ந்து நிற்க தீ மூட்டி எரிக்கப்பட்டது. அவ்வேளையில் அடிகளார் ஆற்றிய உரையினில் அன்புடனும் வாஞ்சையுடனுமே ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும் எனவும் அதே போன்று மாணவர்களும் ஆர்வத்துடனும் ஊக்கத்துடனும் கற்று நாட்டின் நற்பிரஜைகளாக வாழவேண்டும் எனவும் வேண்டிக் கொண்டார். எரிக்கப்பட்ட சாம்பல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, “Death of A Cane” என்ற பதாதையுடன் கல்லூரி வளாகத்தில் உள்ள குளத்தில் கரைக்கப் பட்டதாம். அன்று பாடசாலைக்கும் அரை நாள் விடு முறை வழங்கப் பட்டது. அதோடு மாத்திரமல்லாமல் " Abolition of Corporal Punishment at St. Patrick’s College” எனத் தலைப்பிட்டு அதிக பத்திரிகைகளிலும் அது செய்தியாக வந்ததாம். அடிகளார் மேற்கொண்ட இம் முயற்சி உண்மையிலேயே அதிசயிக்கத் தக்கதும் புரட்சிகரமானதுமான ஒன்றாகும். நான் அதிபராக இருந்த காலத்திலும், எண்பதுகளிலும் கூட, இது நடைபெற்று ஏறக்குறைய 25 ஆண்டுகள் கழிந்த பின்னரும் கூட, அதிகமான யாழ்ப்பாணப் பாடசாலைகளில் பிரம்படி நடைமுறையில் இருந்தது.

பிரம்படியை நிறுத்திய போதும், வேறு வகையான புதிய தண்டனை முறையினை அடிகளார் கையாண்டுள்ளார் .“கல்லூரியில் அதன் பிறகு சிறிது காலம் தவறு செய்யும் மாணவனைச் சாக்கினிலே போட்டு ஏந்தும் முறை நடைபெற்றது. அந்த மாணவனை ஏனைய மாணவர்கள் பார்த்துச் சிரிப்பதால், அவன் மீண்டும் தவறு செய்யமா
ட்டான். இம்முறை தொடங்கிச் சில மாதங்களில் பின்னர் சிலீபா என்ற வரலாற்று ஆசிரியர் அந்த முறை சரியானது அல்ல எனக் கூறியதன் காரணமாக அத்தண்டனை முறையினை அடிகளார் நீக்கி விட்டார்” எனப் பண்டிதர் அலெக்சாந்தர் அவர்கள் தெரிவித்தார்கள். மற்றவர்கள் சொல்வதில் உள்ள தர்மத்தை மதிக்கின்ற பக்குவம் அடிகளாருக்கு இருந்ததை இச்செய்கையினால் உணர முடிந்தது.

காலையில் எல்லா மணவர்களும் சரியாக 9:00 மணிக்கு ஒன்று கூடிப் பிரார்த்தனை நடத்துவார்கள். அதன் பின்னர் ஒழுங்காக வரிசையாகத் தமது வகுப்புகளுக்குச் செல்வார்கள். அடிகளாருடை
ய கழுகுக் கண்கள் ஒவ்வொரு மாணவனையும் கவனித்தபடியே இருக்கும். யாராவது ஒழுங்கு தவறினால் அவன் அவரது அருகே முழங்காலில் நிறுத்தப் படுவானாம். “ ஒரு முறை நான் குயூ வரிசையில் செல்லும் போது பராக்குப் பார்த்து நடந்து சென்றமையால் என் முன்னால் சென்ற மாணவனுடன் முட்டி மோதி விழ நேரிட்டது. கண்ணில் எண்ணை ஊற்றியது போல நின்று இதனை அவதானித்த அதிபர் அவர்கள் என்னை அழைத்து ஒரு ஓரத்தினைக் காட்டி, “On your knees over there” என்றார். நான் வெட்கத்தால் தலை குனிந்து முழங்காலில் இருந்தேன். மாணவர்கள் யாபேரும் தத்தம் வகுப்புகளுக்குச் சென்ற பின்னரே அதிபர் என்னை வகுப்பினுக்கு அனுப்பி வைத்தார்” என திரு R. L. சேவியர் அவர்கள் பழைய நினைவுகளை மீட்டார். காலையில் முதல் பாடவேளையில் அவர் சமயக் கல்வி போதிப்பாராம். அப்பொழுது யாராவது மாணவன் வகுப்பினிற்குப் பிந்தி வருவானாயின் எல்லா மணவர்களையும் எழுந்து நின்று அவனுக்கு salute அடிக்க வைப்பராம். அவன் அதன் பிறகு பிந்தி வருவானா?


- தொகுப்பு: P.Kanagasabapathy
Tel: 415- 283 -1544(கனடா) e.mail: pkanex@hotmail.com


தொடரும்.....