Friday 24 January 2014

பிரான்சில் எட்டாவது ஆண்டாக தொடரும் 'புலம்பெயர் தமிழர் திருநாள் - 2014'

பிரான்சில் எட்டாவது ஆண்டாக தொடரும் 'புலம்பெயர் தமிழர் திருநாள் - 2014' : சில பின்னணிக் குறிப்புகள்

- க. முகுந்தன் (செயலாளர், சிலம்பு சங்கம், பிரான்சு) 


01.

புலம்பெயர் வாழ்வில் நான் யார்? என்ற கேள்வி எதிர்காலத்தில் எமது புதிய தலைமுறையினரை அரித்தெடுக்கும் பிரதான வினாவாகவிருக்கும். நாம் வாழும் பல்தேசிய இனக்குழுமங்களுக்குள் நடக்கும் வாதப் பிரதிவாதங்களுக்கு முகங்கொடுத்தவாறே அவர்கள் நடமாடப்போகிறார்கள். இந்த இலத்திரனியல் - இணையத் தொடர்பூடக யுகத்தில் தெளிவான கருத்தாடல்களைக் கொண்டவர்களாலேயே நிமிர்ந்து உறவாடல் சாத்தியமாகும். அதுமட்டுமல்லாது, சமாந்தரமாக எம்மை ஏனைய சமூகத்தவர் புரிந்து கொள்ள நாம் முயற்சி செய்யவேண்டிய வரலாற்றுக் கடமையும் நமக்குண்டு. கலை- கலாச்சார நிகழ்வுகள் இத்தகைய புரிதல்களுக்கு இடமளிக்கின்றன. இவை,

1.     குடும்ப நிகழ்வுகள் (பிறந்தநாள், மணநாள், இன்ன பிற)
2.     பொது நிகழ்வுகள் (சங்கங்கள்- அமைப்புகளின் ஆண்டுவிழாக்கள், மதம் சார்ந்த நிகழ்வுகள், கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் இன்ன பிற)

இதில் தமிழால் ஒன்றுபடக்கூடியதான குறைந்த பட்ச நிலையிலுள்ள நிகழ்வாகத் தெரியப்படக்கூடியது எது? என அலசினால் கிடைப்பது தைப்பொங்கல் நாளாகும்.

ஆனால் இந்நாள் வெறுமனே பொங்கிப் படைக்கும் நாளாக குறுக்கப்பட்டிருக்கிறது. தமிழர்கள் கூடும் இடமெல்லாம் பொங்கிப் பங்கிட்டு உண்பதென்பது சாதாரண நிகழ்வு. அப்படியிருக்கும்போது தை முதலாம் நாளை ஏன் பொங்கல் நாளாகக்குறித்தான் தமிழன்? இந்நாளில் வாழ்வு இயங்கியல் நியதியான ‘பழையன களைந்து புதியன புகல்’ வழமையையும், வாழ்வுக்கு நம்பிக்கையூட்டும் ‘தை பிறந்தால் வழிபிறக்கும்’ - வாசகப் பிரயோகமும் ஏன் தொடர்கின்றன?

தமிழுடன் கூடிய வீர விளையாட்டுகளுடன், மனிதனுடன் இணைந்துள்ள மிருகங்களுடனான நேசிப்பையையும் - தன்வாழ்வோடு பிணைந்துள்ள இயற்கையுடனான நேசிப்பையும், நன்றிப் பகிர்வையும் வெளிப்படுத்தும் இந்த பண்பாடு எம்மிடம் காணப்படும் வரலாற்றுப் பொக்கிசம். இந்த உயரிய பண்பாலேயே இந்நிகழ்வு குறுகிய மதச்சடங்கு வலை வீச்சுக்குள் விழாமல் தொடரப்படுகிறது. இந்நாளுக்கும் மதத்திற்கும் சம்மந்தங்களேதுமில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

இதனால்தான் கூறுபட்டுக்கிடக்கும் தமிழ்ப்பேசும் மக்களது நெஞ்சகங்களில் பதிவுற்றிருக்கும் தமிழின் பொதுமறையான திருக்குறளைத் தந்த திருவள்ளுவரின் நாளாகவும்  தமிழ் அறிஞர்களால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்டுகளாகச் சுழலும் வாழ்வில் தமிழுக்காக ஒரு நாள் இருக்கிறதென்றால் அது இந்தத் தைப்பொங்கல் நாள் தான். இன்று பிரதேசங்களால் – நாடுகளால் – மதங்களால் - சாதியங்களால் - வர்க்கவேறுபாடுகளால் எனப் பலவாகப் பிளவுண்டுள்ள தமிழ்ப் பேசும் மக்களை ஒன்றிணைக்கூடியப் பொது நாள் இந்தப் பொங்கல் நாள். இதுதான் தமிழர் திருநாள்.

தமிழர்களின் தனிப்பெரும் நாளும், தமிழால் ஒன்றுபடும் தனிதுவ நாளுமாகிய தைப்பொங்கல் நாள் - தமிழர் திருநாள் - ஒன்றுகூடலை உலகளாவியரீதியில் பிரமாண்டமாக ஒருங்கிணைத்து செயற்படவேண்டியது ‘அடையாள’த் தக்கவைப்புக்கான வரலாற்று பணியாகும்.










02.

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின். (குறள் 334) என்பதான வள்ளுவன் கூற்றுப்படி கடந்து செல்லுகிறது வாழ்வு.

ஈழத்தமிழர்களாய் 1980களில் புலம்பெயர்ந்து நீட்சியுறும் எமது வாழ்வில், எம் அடுத்த தலைமுறையினர் புலம்பெயர் தமிழராய்- உலகத்தமிழர்களாய் புதிய சந்ததியினராகப் பரிணமிக்கத் தொடங்கியும்விட்டனர். பல்லின, பல்தேசிய மக்களுடன் வாழத் தலைப்பட்டுள்ள புலம்பெயர்வு வாழ்தலின் நீட்சியில் இந்தப் புதிய அடையாள ஒன்றிணைவு அவசியமாகிறது. இதனை மையமிடும் தைப்பொங்கல் பொது நிகழ்வரங்கம் - தமிழால் ஒருத்துவமாகி சாதி, மதம், பிரதேசம், தேசம் மற்றும் அரசியல்- வர்க்க பேதம் கடந்ததாகச் சங்கமிக்கிறது. இது எம்மைப் பற்றிய புரிதலை எம் சந்ததியினருக்கும், இங்கு வாழும் ஏனைய பல்தேசிய, பல்லின மக்களுக்கும் இதமான புரிதலுக்கு வழிசமைக்கிறது.

90களின் ஆரம்பத்தில்ஐரோப்பிய புலப்பெயர்வுக்கு உட்பட்ட வேளையில் எம்மை அதிகம் சிந்திக்க வைத்தது தொலைவாலும், காலத்தின் நீட்சியாலும் தொலைவுறும் எம் சந்ததியினரது அடையாளம்பற்றியதுதான். இதனை நாம் நடாத்திய 'மௌனம்' சஞ்சிகையில் கரிசனையுடன் பதிவு செய்துள்ளோம். இந்தச் சிந்தனையின் தேடலில் 'காலம் அரித்திடாது மூலம் காக்கும்' எண்ணச்செயலாக தமிழ்மொழி அறிவை அடுத்துவரும் தலைமுறையினருக்கு புகட்டுவது உணரப்பட்டு நடைமுறையாகியது. இதன் தொடராக கலை பண்பாட்டு அறிவைப் பகிர்தலும் உலகளாவிய அளவில் கவனங்கொள்ளத் தொடங்கின.

இதன் அடுத்த கட்டமாக, பூமிப் பந்தில் சிதறியவர்களாகி விரவி வாழத் தலைப்பட்டுள்ள தமிழர்களுக்கு வேற்றுமையில் ஒற்றுமையாகி ஒருத்துவமாகும் தமது அடையாள நினைவுகூரலை வெளிப்படுத்தும் நிகழ்வரங்கை கொணரும் முயற்சியை படிமுறையாகத் தொடங்கினோம். இதற்கு இசைவானதாக தைப்பொங்கல் உணரப்பட்டது. இதனை 'தைப்பொங்கல் - தமிழர்க்கு ஒருநாள் தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவநாள் - தமிழர் திருநாள்' எனக் கொண்டோம்.

இந்தக் கருதுகோளை மையப்படுத்தி பிரான்சில் பொது நிகழ்வரங்கம் ஒன்றை ஏற்படுத்தும் தொடர் முயற்சியில் இறங்கினோம். ஆரம்பத்தில் பிரான்சின் மேற்கு முனை நகரான பிறஸ்ட் நகருக்கு அண்மையில் அமைந்த நெவே கிராமத்தில்வாழும் நண்பர் ஜெகன் இல்லத்தில் பதினொரு குடும்பங்கள் ஒன்றிணைந்து 1996 தைப்பொங்கல் நிகழ்வை ஒன்றிணைந்து நடாத்தினோம். புலம்பெயர்வாழ்வில் இது மிக இனிமையான புத்துணர்வை அளித்து உற்சாகமூட்டியது. [மெளனம் இதழ்-06ல் இப்பதிவு இடம்பெற்றுள்ளது]

இதன்பின் 2000ல் பாரீசின் புறநகரில் குடிபெயர்ந்ததால், நாம் வாழத் தலைப்பட்ட வில்தானூஸ் கிராத்தின் தமிழ்ப் பள்ளியில் இணைந்த தமிழார்வலர்களான சங்கத்தினருடன் தைப்பொங்கல் நிகழ்வை தொடர்ந்து நிகழ்வரங்கமாக நடாத்தினோம். இத்தகைய தொடர் ஈடுபாடு தைப்பொங்கல் தொடர்பான புரிதலை ஒருத்துவப்படுத்தி தமிழர் திருநாளாகப் பரிணமிக்க வைத்தது. இந்த நம்பிக்கையூட்டும் செயல்முறையால் பொது மக்களது ஈர்ப்பைப் பெற்றது. இந்த உந்துதல், அடுத்த கட்டமாக ஒன்றிணைந்த பெரு நிகழ்வரங்கை நடாத்த வழிசமைத்தது.

இத்தகைய நோக்கை இலக்காகக் கொண்டதாக 2005ல் பிரான்சில் தமிழ் - தமிழர் கலை பண்பாட்டு ஆர்வலர்களுடன் இணைந்து 'சிலம்பு சங்கம்' உருவாகியது. பிரான்சு பாரீஸ் பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளரும், கல்வெட்டு ஆய்வாளருமான நண்பர் அ. முருகையன் எம்மோடு கைகோர்த்து இந்தச் செயல்களில் எமக்கு தகுநல் ஆலோசகராக, எம்முடன் இணைந்திருந்தார். அதேபோன்று ‘உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்’ (பிரான்சு), என்ற அமைப்பின் தலைவரும் நகரசபை உறுப்பினரும் நண்பருமான அலன் ஆனந்தன் அவர்களின் பங்களிப்பு மறக்க முடியாததொன்று. இத்தகைய ஒருங்கிணைப்புகளில் என்னுடன் எனது நீண்டகால தோழரும் புலம்பெயர் சமூக ஆர்வலருமான கி.பி. அரவிந்தன் இணைந்து பயணித்தார்.

இந்தச்சிலம்பு சங்கத்தின் முன்னெடுப்பில், பிரான்சு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு, உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் (பிரான்சு) வேற்றுமையில் ஒற்றுமை காணும் குறைந்தபட்ச ஒப்பந்தத்தில் இணைந்து பிரமாண்டமான 'தமிழர் திருநாள் - 2007' நிகழ்வரங்கை 14.01.2007 அன்று பாரீசின் புறநகரான சார்சலில் நடாத்தின.

இந்நிகழ்வு பரவலான புரிதலையும் புத்துணர்வையும் கொடுத்தது. இந்நிகழ்வுக்காக சிறப்பு அதிதியாக யுனெஸ்கோ வெளியீடான ‘கூரியர்’ தமிழ்ப்பதிப்பின் ஆசிரியரான மணவை முஸ்தபா அவர்கள் வந்திருந்தார்கள்.

இந்நிகழ்வில் முதன் முதலாக சிறார்களுக்கான புதிய ஏடுதொடக்கலாக 'அகரம் எழுதல்' நிகழ்வு திருவள்ளுவர் முன் சான்றோர், கல்விமான்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றும் தொடரப்படுகிறது.

புலம்பெயர் அரங்க நிகழ்வாக எமது தொன்ம வீரக் கலையான 'சிலம்பாட்டம்" நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் வெளி முற்றத்தில், அடுப்பு வைத்து பொங்கலிடல் நிகழ்வாகியது. எமது தொன்மமும் நீட்சியுமான கலை பண்பாட்டு நிகழ்கலைகள் காட்சி மற்றும் அரங்க நிகழ்வாயின. கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக நுண்கலைப் பீடாதிபதியாக இருந்த பாலசுகுமாரது நெறிப்படுத்தலில் இன்னிய அணி நிகழ்வு புலம்பெயர் தேசத்தில் அரங்கேற்றம் கண்டது.

தமிழர் புலம்பெயர்வு வாழ்வில் 1950களில் மலேசியாவில் கோ. சாரங்கபாணி அவர்களால் தைப்பொங்கல் - 'தமிழர் திருநாள்' - என முன்னெடுக்கப்பட்ட பொது ஒன்றுகூடல் நிகழ்வு புதுவடிவில் பிரான்சில் 2007ல் மீளுருவாக்கம் கண்டது.

இதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு, மேற்படி மூன்று சங்கங்களுடன் கரீப்ஸ் இந்தியா, பிரான்சு சுயமரியாதை இயக்கம், நல்லூர்-ஸ்தான் பண்பாடும் விளையாட்டும் போன்றைவையும் இணைந்து கொண்டன. இம்முறை சிறப்பு அதிதிகளாக யுனெஸ்கோவில் பணியாற்றிய பரசுராம், பாண்டிச்சேரிப் பல்கலைக்கழப் பேராசிரியர் பன்னீர்ச் செல்வன், மொரீசியஸ் தலைமைச் செயலக செயலாளர் கிரீஸ் பொன்னுச்சாமி, மலேசிய ஆசிரியர் திருமாவளவன், கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் நுண்கலைத் தலைவர் பாலசுகுமார் போன்றோர் வருகை தந்து சிறப்பித்தனர். இவர்களடங்கிய ஆய்வரங்கம் ஒன்றும் இவ்வேளையில் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் மூன்றாம் தலைமுறைத் தமிழர்களான குவாதூலூப் குழுவினரின் தமிழ்ப்பாடல் அரங்கம் அனேகரது கவனத்தை ஈர்த்தது.

பரவாலான மக்களது கைகோர்த்தலுடன் புலம்பெயர்வு வாழ்வின் தனித்துவ அடையாள நாளாக 'புலம்பெயர்தமிழர் திருநாள் 2009' பெருமெடுப்பில் ஒழுங்கு செய்யப்பட்டது. ஆனால் ஈழத்தின் ஏற்பட்டிருந்த அசாதாரண மானிட அவலநிலையைக் கவனத்திலெடுத்து இந்நிகழ்வு நிறுத்தி வைக்கப்பட்டது.

2009ம் ஆண்டு இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இன வன்கொடூர அழிவால் புலம்பெயர்தமிழர்களும், உலகத் தமிழர்களும் துவண்டு போயிருந்தனர். ஆனாலும் 'தை பிறந்தால் வழிபிறக்கும்" எனும் கூற்றுக்கு அமைவாக ‘தமிழர் திருநாள் 2010’  நிகழ்வை செவ்றோன் நகரில் எளிமையாக நடாத்தினோம்.

2009ல் இணைந்த சங்கங்களுடன் பிரான்சு திருமறைக் கலாமன்றம், பிரான்சு தமிழ்ச்சோலை, பிரான்சு மகாஜனா பழைய மாணவர் சங்கம், தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை போன்றனவும் கைகோர்த்து 'புலம்பெயர் தமிழர் திருநாள்2011' சார்சல் நகரில் சிறப்பாக நடைபெற்றது. இதில் சென்னை உலகத் தமிழாராட்சி நிறுவனத் தலைவர் முனைவர் கரு. அழ. குணசேகரன் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டார்.

2009ல் ஈழத்தில் நிகழ்ந்தேறிய இனவழிப்பும் அதனைத் தொடர்ந்த நிகழ்வுகளும் தாங்கமுடியாத சோகங்களாகி புலம்பெயர்வு வாழ்வில் நிலைகொண்டு வாழத் தலைப்பட்டவர்களுக்கு வடுவாகியது.  இதனால் சிலம்பு சங்கம் தமிழர் திருநாள் நிகழ்வுகளை சுருக்கிக் கொள்ள நேர்ந்தது. புலம்பெயர் தமிழர் திருநாள் - 2012 நிகழ்வு சென் டெனி நகரிலும், புலம்பெயர் தமிழர் திருநாள் 2013 ஸ்ரான் நகரிலும் திறந்த வெளிக் கொட்டகை அரங்க நிகழ்வாக நடாத்தியது.

தற்போது, புலம்பெயர்ந்து நீட்சியுறும் வாழ்வில், தமிழால் ஒருத்துவமாகி சாதி, மதம், தேசம், அரசியல்-வர்க்க பேதம் கடந்த தமிழ்க் குடும்பங்களாக ஒன்றிணைந்து "புலம்பெயர் தமிழர் திருநாள் 2014' நிகழ்வை Jeanne d'Arc, 50 Rue Torcy, 75018 Paris அரங்கில் 19.01.2014 அன்று நிகழ்த்தவுள்ளது. இது எட்டாவது தடவையாகத் தொடரப்படும் நிகழ்வாகவும், முதல் முறையாக பாரீஸ் பெருநகர மையத்தினுள் நடக்கும் நிகழ்வாகவும் பதிவாகிறது. இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக இலங்கை வானொலிப் புகழ் தமிழ் அறிவிப்பு மேதை பி. எச். அப்துல் ஹமீத் அவர்களும், சுவீடன் உப்சலா பல்கலைக்கழகத்தின் மத வரலாற்றுத்துறைப் பேராசிரியர் பீட்டர் சல்க் அவர்களும் கலந்து சிறப்பிக்கிறார்கள்.

« தைப்பொங்கல் - தமிழர்க்கு ஒருநாள் தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவநாள் - தமிழர் திருநாள் »










00000
நன்றி காக்கைச் சிறகினிலே தமிழர் திருநாள் சிறப்பிதழ் (இறக்கை3 சிறகு1)
- முகுந்தன்
பாரீசு 23.01.2014
இதில் இடம்பெற்றுள்ள படங்கள் பாரீசில் நடைபெற்ற 'புலம்பெயர் தமிழர் திருநாள் 2014' நிகழ்வரங்கின் சில காட்சிகளாகும்



Tuesday 14 January 2014

இனிய தைப்பொங்கல் - 2014 புத்தாண்டு - தமிழர் திருநாள் வாழ்த்துகள்

அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்!!

வாழ்க! வளமுடன்!!




தமிழர்கள் பொங்குவதற்காக கூடுவதும், கூடுமிடங்களில் பொங்கிப் பங்கிட்டு உண்பதென்பதும் சாதாரண நிகழ்வு. அதேவேளையில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் நாமும்; ஒருத்துவத்துடன் கொண்டாடக்கூடியதும் இத்தைப்பொங்கல் நாளாகும். இந்நாளில் வாழ்வியல் சுழற்சியான ‘பழையன களைந்து புதியன புகல்’ எனும் வழமையையும், வாழ்வுக்கு தென்பூட்டும் ‘தை பிறந்தால் வழிபிறக்கும்’ என்னும் நம்பிக்கையும் முக்கியமானவையாகும். அத்துடன் மனிதருடன் இணைந்துள்ள உழைப்பை வழங்கும் கால்நடைகளுக்கு அன்பைப் பொழியவும், வாழ்வோடு பிணைந்துள்ள இயற்கையை நேசிக்கவும், அவற்றை போற்றவும், நன்றி செலுத்தவும் கூடியதான பண்பாட்டு கூறுகள் இந்த பொங்கல் நாளில் அடங்கி உள்ளன. இந்த உயரிய பண்புகளாலேயே இப்பொங்கல் நாள் குறுகிய மதச்சடங்கு வலை வீச்சுக்குள் விழாமல் தொடரப்படுகிறது. 
இதுவரையில் இந்நாள்; வெறுமனே பொங்கிப் படைக்கும் நாளாக குறுக்கப்பட்டிருந்தபோதிலும், இது தற்போது தமிழர் நாளாக- தமிழரின் அடையாள நாளாக - ‘தமிழர் திருநாளாக’ - தற்போது புதிய வாழ்வியல் சூழலுக்கு அமைவாக பரிணாமடைந்து வருகிறது. இதற்கமைவாக எம்மாலான பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

புலம்பெயர் தமிழர் திருநாள் 2014 - நிகழ்வரங்கம் 19.01.2014

Le 19. 01. 2014 * 11h30 - 18h30
Salle Jeanne d'Arc, 50 rue Torcy, 75018 Paris. 
M°12 Marx Dormoy 

தொடர்பான பதிவு: 

பாரீசில் புலம்பெயர் தமிழர் திருநாள் 2014 - நிகழ்வரங்கம் 19.01.2014

முகிலன்
பாரீசு 14.01.2014

Friday 10 January 2014

பாரீசில் புலம்பெயர் தமிழர் திருநாள் 2014 - நிகழ்வரங்கம் 19.01.2014

புலம்பெயர் தமிழர் திருநாள் 2014 - நிகழ்வரங்கம் 19.01.2014

Le 19. 01. 2014 * 11h30 - 18h30
Salle Jeanne d'Arc, 50 rue Torcy, 75018 Paris. 
M°12 Marx Dormoy 

தமிழர்கள் பொங்குவதற்காக கூடுவதும், கூடுமிடங்களில் பொங்கிப் பங்கிட்டு உண்பதென்பதும் சாதாரண நிகழ்வு. அதேவேளையில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் நாமும்; ஒருத்துவத்துடன் கொண்டாடக்கூடியதும் இத்தைப்பொங்கல் நாளாகும். இந்நாளில் வாழ்வியல் சுழற்சியான ‘பழையன களைந்து புதியன புகல்’ எனும் வழமையையும், வாழ்வுக்கு தென்பூட்டும் ‘தை பிறந்தால் வழிபிறக்கும்’ என்னும் நம்பிக்கையும் முக்கியமானவையாகும். அத்துடன் மனிதருடன் இணைந்துள்ள உழைப்பை வழங்கும் கால்நடைகளுக்கு அன்பைப் பொழியவும், வாழ்வோடு பிணைந்துள்ள இயற்கையை நேசிக்கவும், அவற்றை போற்றவும், நன்றி செலுத்தவும் கூடியதான பண்பாட்டு கூறுகள் இந்த பொங்கல் நாளில் அடங்கி உள்ளன. இந்த உயரிய பண்புகளாலேயே இப்பொங்கல் நாள் குறுகிய மதச்சடங்கு வலை வீச்சுக்குள் விழாமல் தொடரப்படுகிறது. 
இதுவரையில் இந்நாள்; வெறுமனே பொங்கிப் படைக்கும் நாளாக குறுக்கப்பட்டிருந்தபோதிலும், இது தற்போது தமிழர் நாளாக- தமிழரின் அடையாள நாளாக - ‘தமிழர் திருநாளாக’ - தற்போது புதிய வாழ்வியல் சூழலுக்கு அமைவாக பரிணாமடைந்து வருகிறது. இதற்கமைவாக எம்மாலான பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். 
இன்று பிரதேசங்களால் – நாடுகளால் – மதங்களால் - சாதியங்களால் - வர்க்கவேறுபாடுகளால் எனப் பலவாகப் பிளவுண்டுள்ள தமிழ்ப் பேசும் மக்களை ஒன்றிணைக்கூடியப் பொது நாள் இந்த தைப்பொங்கல் நாள்- இது எமது அடையாள நாளாகும்.
இதனால்தான் கூறுபட்டுக்கிடக்கும் தமிழ்ப்பேசும் மக்களது நெஞ்கங்களில் பதிவுற்றிருக்கும் தமிழின் பொதுமறையான திருக்குறளைத் தந்த திருவள்ளுவரின் நாளாகவும் - தமிழர்களின் புத்தாண்டாகவும் தமிழ் அறிஞர்களால் இப்பொங்கல்நாள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தமிழர்களின் ஆண்டு திருவள்ளுவர் ஆண்டு என்றே கொள்ளப்படுவதும் வழமையாகி விட்டது.
இந்த முடிவுக்கமைவாக, « தைப்பொங்கல் - தமிழர்க்கு ஒரு நாள் - இது தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள் » என்ற விருதுவாக்கிய வெளிப்பாடுடன் ஐரோப்பிய பெருநகரான பாரீசில் 2007ம் ஆண்டிலிருந்து மக்களரங்கு நிகழ்வாகக் கொண்டாடிவருகிறோம் பிரான்சில் எட்டாவது தடவையாக 2014ம் ஆண்டிற்கான பொங்கலை பாரீசு மாநகரில் புலம்பெயர் தமிழர் திருநாளாக நிகழ்வரங்காக்குகிறோம்.  
இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாகப் பங்கேற்கிறார்கள் சுவீடன் கீழத்தேய மத வரலாற்றுத்துறைப் பேராசிரியர் பீட்டர் சல்க், புகழ்பெற்ற வாழும் தமிழ் வானொலி தொகுப்பு மேதை பி.எச். அப்துல் ஹமீட் மற்றும் இலண்டன் வாழ் இசைக் கலைஞன் சந்தோஷ், பாரீசு வாழ் நடனக் கலைஞன் பிறேம கோபால் அவர்களும் நிகழ்கலை அரங்கலாளர்களாகப் பங்;கேற்கின்றனர். இவர்களுடன் ஈழநாட்டியத்தை உருவாக்கும் முன்னாள் கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைத்துறைப் பீடாதிபதி பாலசுகுமார் அவர்களும் கலந்து சிறப்பிக்கிறார்கள். இந்நிகழ்வில் அவதாரம் குழுவினர் தமது சிறப்பு நடன அரங்காட்டத்தை வழங்குகிறார்கள். இவர்களுடன் பிரான்சு நாட்டு நகரசபை மாநிலங்களவை உறுப்பினர்களும் பல்லின சமூக-பண்பாட்டுத்துறை செயற்பாட்டார்களும் கலந்து கொள்கிறார்கள்.   
எதிர்வரும் காலங்களில் தமிழர் கால் பதித்திருக்கும் அனைத்திடங்களிலும் இப்பொங்கல் நாள் பெரும் ஒன்றுகூடல் நிகழ்வாகப் பரிணமிக்க வேண்டுமென்பதே எங்களது விருப்பமாகும். இதற்கு தமிழ் ஊடகங்கள் பெரும் பங்காற்றிட வேண்டியது தார்மீகக் கடமை. இந்நிகழ்வுக்கான சிறப்பான பிரச்சார முன்னெடுப்புகளை தாங்கள் எம்முடன் இணைந்து மேற்கொள்ள முன்வருவீர்களானால் இந்நிகழ்வு தொடர்பான வெளிப்பாடுகளை தங்களது ஊடகங்களில் வெளியிட எம்மாலான அனைத்து ஒத்தாசைகளையும் வழங்குவோம்.
தமிழால் ஒன்றுபடும் « தமிழர் திருநாள் » சிறப்பினை மக்களிடம் காவிச்செல்லும் அரும்பணியைத் திட்டமிட்டு செயற்படுத்துவீர்களென அன்புடன் எதிர்பார்க்கிறோம். 

அனைவரும் வருக!!
பின்னிணைப்பு:
இந்நிகழ்வரங்கை நடாத்த ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி செலுத்துகிறோம் : 

க. முகுந்தன் - செயலாளர் - சிலம்பு சங்கம் - பிரான்சு 2014
பாரீசு 10.01.2014