Wednesday 29 July 2009

சரம் - 14 கறுப்பு யூலையால் உனக்கென்ன வந்தது?


சரம் - 14

கறுப்பு யூலையால் உனக்கென்ன வந்தது?

மானிட வாழ்வில் காலம் கரைந்துவிடுவதை அனுபவத்தால்தான் உணர முடியும். இதுதான் 'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்' என முதுமொழி கூறியதுபோலும். போனது திரும்பாது என்பது அப்படியே பொருந்திப்போவது நேரத்திற்கு (காலத்திற்கு) தான்!

1983 யூலை ஈழத் தமிழர் மத்தியில் கறுப்பு யூலையாக வரலாற்று வடுவாகிவிட்டது. அப்போது இந்நிகழ்வு ஈழம் நோக்கிச் செல்லப் பலரை ஈர்த்தது, இவர்களில் நானும் ஒருவனானேன்.

ஆனால், 1993- இன் தொடக்கம் மீளவும் ஐரோப்பிய அகதியாக ஒருவித மன உறுத்தலுடன் விண்ணப்பித்திருந்திருந்தேன். அந்த மீளகதியான முதல் நாள் இரவின் தூக்கமற்ற புரளலை எப்படித்தான் மறக்க முடியும்?..... என்னை மாதிரி எத்தனைபேர் நாடு திரும்பக் காரணமானது இந்தக் கறுப்பு யூலை. ஆனால் நான் அறியப் பலர் இன்றில்லை. ஆம் அவர்கள் போயே போய்விட்டார்கள். மானுட வாழ்வின் எச்சங்களைக் காணாத அவர்களது பயணம் முடிவடைந்துவிட்டது. நானோ தோற்றவனாகி, நூலறுந்த பட்டமாக மீளவும் வெண் பனிப் போர்வையால் தன்னை தன்னை மூடிப் பளீரிட்ட ஊசியிலை மரத்தடியில் வீழ்ந்து கிடந்தேன். இப்ப நினைக்கும் போதே பெருமூச்சு வீறிட்டுச் செல்கிறது.

வந்தாயிற்று, துணைவி வழிவந்த புது உறவுகளுடன் எதைத்தான் பேசமுடியும்? மெளனமும் சிரிப்பும் உடல் மொழியாகி, மானுட மொழி உறைந்து போனது. ஐரோப்பியப் பயணத்தால் பிரிந்த துணைவியை மீளவும் இங்கு அழைத்தாக வேண்டும். கரைந்து போன இளமையையும் மீறி காலத்தின் ஓட்டத்துக்குள் நானும் ஓடிக் கலந்தாக வேண்டும்.

80களின் தொடக்கத்திலிருந்து இந்த ஐரோப்பிய மண்ணில் பதியமிட்ட பலரது வாழுதல் சீரானதாகி பொருளாதார மலர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. வாடகைத் தரிப்பிடம் சொந்தமாகிவிட்டிருந்தது. புதிய தொழில் வழங்குவோராகவும் சிலர் பரிமாணமாயினர். இன்னும் சிலர் நாடு விட்டு நாடு சென்றவர்களாகினர். மாற்மொன்றுதான் நிரந்தரமென்பதைப் பறைசாற்றிச் சிரித்தது ஐரோப்பா.

மைத்துனரது அழைப்பை ஏற்று அவர் பணியாற்றும் உணவகத்துக்கு அவருடன் உதவியாளனாகப் பணியாற்றச் செல்கிறேன். இது நம்மவர் நடாத்தும் பிட்சா உணவகம். அனைவருக்கும் 'வணக்கம்' கூறிக் கைகுலுக்கி சமையல் அறைக்குள் நுழைகிறேன். வெள்ளைக்காரச் சிப்பந்திகளும் வணக்கம் சொன்னது என்னையும் அறியாது பெருமையாக இருந்தது. ஈழத் தமிழனின் உலகளாவிய பிரசன்னம் 'வணக்கம்' என்ற சொல்லை உலகமயமாக்கிவிட்டிருக்கிறது.

சமயலறையில் எனக்குப் பாத்திரங்கள் கழுவும் வேலை. மைத்துனர் பிரதம சமையலாளர், தனக்கே உரிய வேகத்துடன் பல் வேறு வகை உணவுகளைத் தயாரித்தளித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். வாடிக்கையாளர் குறைந்த நேரம், எல்லோரும் தமக்கான உணவைச் சாப்பிடத் தொடங்கினர். உணவகத்தின் தமிழரான முதலாளி உள்ளே வந்து எனக்கு வணக்கம் சொன்னார். எல்லோரும் என்னைப் பொறாமையாகப் பார்த்தனர்.
"எப்படி?" என்றார்.
"நலம்" என்றேன் மெளனம் கலைந்தவனாகி.
"எப்படி இருக்கு சேர்மனி?"
"நன்றாக இருக்கு, நம்மவர்கள் வளர்ச்சியடைந்துள்ளார்கள்" என்றபின் தொடர்ந்து,
"உங்களுடைய 'காந்தி பிட்சா' பெயரும் இதன் சிறப்பாக மரக்கறிப் பிட்சாவாக்கிய உங்களது எண்ணம் மிகவும் சிறப்பானது" என்றேன் மகிழ்வோடு.
எனக்கு விசேட சாப்பாடு செய்து கொடுக்கச் சொல்கிறார்.
"எப்படி இத்தகைய எண்ணம் வந்தது?" என்றேன் அவரது நட்பால் கவரப்பட்டு
"இங்கு நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டுமென்றால் 'ராம்' அல்லது 'காந்தி' என்று சொல்ல வேண்டும். பெயரை வைத்தால் மட்டும் போதுமா? தனிச்சுவையுடன் இருக்க வேண்டுமல்லவா? இதற்காக இஞ்சி, உள்ளி, கொஞ்சம் பச்சை மிளகாய் சேர்த்து புதிய பசை செய்தேன். சிறப்பு 'காந்தி பிட்சா'வுக்காக வெண்டக்காயும் சேர்க்க நன்றாகப் போகிறது" என்றார் பெருமையுடன்
கொஞ்ச நேரம் அமைதியாகச் செல்கிறது.

"அது சரி, ஏன் நீர் திரும்பிப் போனீர்?" அமைதியைக் கலைத்தது அவரது கேள்வி.
என்னைப் பற்றிய விபரங்களை முன்னரே அறிந்திருக்கிறார். வேலை கொடுக்கும் முதலாளிகளுக்கு இது கைவந்த கலை.

நிமிர்ந்து பார்க்கிறேன், அவரது ஆர்வம் இயல்பானதாகவே இருப்பதாகப்பட்டது. திடீரெனக் கேட்ட இப்படியான கேள்வியை இவரிடமிருந்து நான் எதிர்பார்த்திருக்கவில்லை.
"அப்ப 83 கலவரம் நடந்ததே, அது ரொம்பவும் பாதிச்சுது அதுதான்!"...... என்றேன் ஒருவாறு சமாளித்தவாறு.

"83 கலவரம் அங்கே கொழும்பில் சிறிலங்காவில்தானே நடந்தது, ஆனால் பெர்லின் நகரில் இங்கிருந்த உம்மை அக்கலவரம் எப்படிப் பாதிச்சது?" என்றார் உறைப்பாக.

ஈழத் தமிழனொருனின் வாயிலிருந்து தமிழால் வெளிப்பட்ட வாக்கிய அதிர்வு காற்றைக் கிழித்து என் செவிப் புலனைத் தொட்டதும் இத்தகைய அதிர்வெண்ணை அறியாத என் செவிப்புலனை விறைப்பாகிக்கியது. இது என்னைப் பேச்சு மூச்சற்றதாக்கியது!
'என்ன சொல்லலாம்........?' இது நடந்து 15 வருடங்கள் கழிந்த நிலையிலும் இப்பவும் யோசிக்கிறேன்.

காலத்தின் ஓட்டத்திற்கு இசைவாகி தமக்கான தமக்கு மட்டுமான விருப்பின்
இருப்புக்காகவே வாழும் கருணாக்களுக்கான உலகில் இன்று எனக்குள் எரிமலையாகக் கொதிக்கும் கேள்வி

'அடேய்! முத்துக்குமாரா.... உனக்கென்ன வந்தது?'


- வளவன்
செர்மனி 25.07.2009


Tuesday 28 July 2009

சுவட்டுச் சரம் 1 - நினைவுத்துளிகள் (5)




சுவட்டுச் சரம் 1
நினைவுத்துளிகள் (5)

- குணன்


பேர்லின் முதல்,“தமிழ் மாலைப் பொழுதும்“ புகலிடத்தமிழர் அறிமுக விழாவும்! புகலிடம் தேடி வந்த 250 பேர் வரை, தகுதி வாய்ந்த அனுமதியின்றி உள் நுழைந்தார்கள், என்ற, காரணத்தினால், பொலிசாரினால், கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டார்கள், செய்தி, பத்திரிகையில், புகைப்படங்களுடன் வெளியிடப்பட்துடன், “பேர்லின் தமிழர் தகவல் ஒன்றியம்“ சார்பில், டாக்டா கொவ்மன் அம்மையார், மாநில, மத்திய அதிகாரிகள், அமைச்சர்கள், முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணி பா.உ(சாவகச்சேரி)திருவி.என்.நவரத்தினம்,(4.09.1981ல்)பேர்லினில் இடம் பெற்ற, தமிழகதிகள் வருகை பற்றி எடுத்துக் கூறியதுடன், ஒரே விமானத்தில் திருப்பி நாடு கடத்தப்பட்ட 139 தமிழர்களுக்கு நடந்தவற்றை விளக்கிடுமுகமாகவும், நாட்டில், தக்க பாதுகாப்பு ஏற்படாமல், அங்கு, குறிப்பாக, 1978ம் ஆண்டின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகலாம், என்றும், “இலங்கையில் தமிழர் துன்புறுத்தலும்-இங்கு அவர்கள் வருகையும்“ என்ற தலைப்பின் கீழ் நடந்த கருத்தரங்கில் விளக்கினார்கள். இதற்கு போலின் மாநில செனட்டர் கென்றிக் லூமர், சமூகநலத்துறை செனட்டர் பிங், மத்திய அரசின் அரசாங்க அமைச்சர், டாக்டர் காம் புரக்கர்(எவ்.டி.பி), பொருளாதாரத்துறை அமைச்சர் கிராவ் லம்ஸ்டோவ் ஆகியோரும் கலந்து கொண்டதன் விளைவாக, புகலிடம் கோரிய தமிழர் திருப்பியனுப்புவது நிறுத்தப்பட்டது! இங்கு, வந்திருந்த பா.உ திரு வி.என்.நவரத்தினம், பேர்லின் நீதி மன்றில் இடம் பெற்ற, புகலிடக் கோரிக்கை தொடர்பாக, சாட்சியம் வழங்கியதும் குறிப்பிடத்தக்கதாகும். இக்கலந்துரையாடலை, "ஆபத்துக்குள்ளாவோருக்கு உதவும் அமைப்பு" சார்பில் டாக்டர் கொவ்மன், ஆ.எல் பேர்லின், தமிழர் விடுதலைக்கூட்டணி, கூட்டாக ஒழுங்கு செய்யப்பட்டது.



தமிழ் மாலைப்பொழுது! - 17-04-1982

தமிழர் பற்றிய செய்திகள் ஜேர்மனியர்களிடம் சென்றடையும் பொருட்டு, அவர் தம் அரசியல், கலை, பண்பாடு, உணவு போன்றவற்றின் அறிமுகம், முதன் முதலாக அறிமுகஞ்செய்யும் முயற்சியில், பலரும் உதவினார்கள்.தமிழரின் வரலாற்று நாடகம்(சங்கிலியன் நாடகக் காட்சி), தமிழரின் பண்பாட்டுக் கலைகளாகிய, பரதம், நடனம், கோலாட்டம், பாட்டு எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன. இணைத் தலைவர்களாக நலன்புரிக்கழகப்பொறுப்பில், அதன் தலைவரும் தமிழர் ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் தலைவர், டாக்டர் கொவ்மன் அவர்களும், அறிமுக உரை, தலைமையுரைகளில், புகலிடத் தமிழ் மக்கள் பற்றிய செய்திகள் பற்றி கூறப்பட்டன.

தமிழரின் பாரம்பரிய பட்சணங்கள், உணவு வகைகள், பானங்கள் வழங்கப்பட்டதுடன், விவரணச் செய்தி(வீடியோ) படமும் காட்டப்பட்டது! இவ்விழா-பேர்லின் முதல் தமிழ் மாலைப்பொழுது மூலம், புகலிடத் தமிழர்களுக்கு, ஓர் தற்காலிக (அல்ல!) நிரந்தர விடியலுக்கு வழிகூறி நின்றது பேர்லின். இலவச பல்கலைக்கழக, இவாங்கிலிஸ மாணவர் ஒன்றியத்தினர் தந்துதவிய இலவச மண்டபம் நிறைந்திருந்த ஜேர்மனிய ஆர்வலர்கள் கூட்டம், இது வரை தமிழரின் வேறு எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் வருகை தந்ததில்லை!


"ஏ" பாஸ் பெற்று விட்டால்……!


எம்மைப் போல பேர்லின் நகரில், ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர், பஞ்சாபிகள் லெபனானியர்கள், ஆபிரிக்கர்கள்,கிழக்கு ஐரொபியர்கள்,என வந்து குவிந்தவண்ணம் இருந்தார்கள். வெளிநாட்டவருக்கானவர்களுக்கான தனிப்பகுதியில், அகதி விண்ணப்பங்கள் எழுதி பயணச்சான்று, கடவைச் சான்றுகளுடன், வரிசையில் மணித்தி யாலக்கணக்கில் என்றால் தாங்கி கொள்ளலாம். ஆனால் முதல் நாள் மாலையில், வந்து, இடம்பிடித்து, இரவிரவாக காத்துக் கிடந்தாலும், வாசற் கதவு திறக்கும் நேரத்தில்,வரிசையைக் குலைத்துக்கொண்டும் முண்டியடித்துக் கொண்டும் வருகின்றவர்கள், காட்டுமிராண்டிகள் போன்று நடந்துகொள்வதை, எவருமே தாங்கிக் கொள்ளமாட்டார்கள்!


இவ்வாறு,நாட்கணக்கில், வாரக்கணக்கில், அலைந்து திரிந்த பின்னர்தான், உள்ளே சென்று, நிழற் படம் இணைத்த தற்காலிக, தங்குமிட அனுமதிப் பத்திரமும், இலவச பயணச் சீட்டு, வைத்திய பரிசோதனை செய்யும் அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டு, தற்காலிக தங்குமிட வசதி, உணவு ஆகியவற்றுக்குரிய அனுமதி உத்தரவுகளும், மத்திய அகதிகள் நிலையத்தால் வழங்கப்பட்டு, மீண்டும் அதே பத்திரங்களைப் புதிதாகப் பெறுவதற்கு திகதி வழங்கப்படும். இத்தனைக்கும் கையில், பெற்றுக்கொண்ட, தற்கால வதிவிட அனுமதிப் பத்திரத்தில், பெரிய எழுத்தில், பொறித்த “A“ (for asyl applicant) என்றிருப்பதையே, "A Passport” என்று கூறினார்கள்! இவ்வாறு, "ஏ” பாஸ்போர்ட்டுடனே, பேர்லின் வீதி தோறும் அச்சமின்றி எங்குமே சென்று வரலாம். ஆனால், எல்லை தாண்டமுடியாது!

இவ்வாறு, இரண்டு மாதங்கள் முதல் ஆறுமாதங்கள் வரை தற்காலிக முகாங்களாகிய விடுதிகளில் தங்கிய பின்னர் நிரந்தர வதிவிடம், ஜேர்மன், ஏனைய மாநிலங்களின் இடவசதிகளைப் பொறுத்து (station) நிரந்தர வதிவிடம் வழங்கப்பட்டு, அரச செலவில் அனுப்பிவிடுவார்கள்! மிகக் குறைவானவர்களுக்குத்தான், பேர்லின் மாநகரத்தில் (station) நிரந்தர வதிவிட அனுமதி கிடைப்பதென்பது பலரின் கணிப்பாகும் அவ்வாறு, தவறிய பலர் கவலையடைவதும் உண்டு! எமது நாட்டைப் போல, இங்கு உணவுச் சாலைகளில்,குறைந்த செலவில் உணவைப் பெற முடியாது! அதே நேரம், தற்காலிக விடுதிகளில் தினமும் பாண், பட்டர், ஜாம், அவித்த முட்டை, மீன் ரின், பிரதான உணவாக வழங்கப்பட்டது! அன்று, தேனீர் தயாரிப்புக்கு அனுமதிக்கப்பட்டிருந்த மின்சார சட்டியில், உருளைக்கிழங்கு, மீன், முட்டை, பயணப்பொதியில் இருந்த, யாழ்ப்பாண மிளகாய்த்தூள் இட்டு, மாலையில், அறையின் மூலைக்குள், சமைத்த குழம்பின்வாசனை, நிர்வாகத்தின் அறைக்குள் இருந்த மனேஜரின் மூக்கினுள் சென்றது. அவர் என்னவோ ஏதோவென அறைக்குள் வந்ததும், செய்வதறியாது திகைத்திருந்த வேளையில் நண்பரின் சமயோசிதத்தால், பழைய பொருள் விற்கும் வாரச்சந்தையில் (லுண்டா மார்க்கெட்)* ஆளுக்கு ஒரு டொச் மார்க் வீதம் சேர்த்து விலைக்கு வாங்கிய “கீட்டர்” போர்வையால் மூடிக்கிடந்து,”குளு குளு”த்தபடியே மறைக்கப்பட்டது. இதைக் கண்ட எல்லோருமே, வயிறு குலுங்கிட சிரித்தபடியே குழம்புடன், பாண் உண்டதை இன்றும் எண்ண வைக்கும் ஓர் நினைவுத் துளிதான்!

00000000000
குறிப்பு:
* லுண்டா மார்க்கெட் - (Trödel Markt or flohmarkt) :
செர்மானிய மக்களால் வாங்கப்பட்ட பின், நல்ல நிலையிலுள்ள தமது பாவனைக்குத் தேவையற்றதெனக் கருதும் பொருட்களை அவர்களே விற்கும் ஒரு சந்தை. இது மக்களால் நடாத்தப்படும் சிறப்புச் சந்தை. கையில் போதிய காசில்லாத அகதிகளாக வந்திருந்த ஈழத்தமிழருக்கு இங்கு தம்மாலும் வாங்க முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்த சந்தை இது. வாராந்தம் நடக்கும இச் சந்தை பற்றிய செய்தி நம்மவர் மத்தியில் வேகமாகப் பரவி பெரும்பான்மையானவர்கள் காத்திருந்து சந்திக்கும் இடமாகிவிட்டது. இதில் நம்மவர்களால் நடைமுறை செர்மன் மொழி பேசும் அரிய வாய்ப்பைத் தந்தது எனலாம். அப்போதெல்லாம் நம்மால் அணியப்பட்ட உடைகள் மற்றும் பாவனைப் பொருட்கள் இங்குதான் பெரும்பாலும் நுகரப்பட்டன என்பதை அறுதிட்டுச் சொல்லலாம்.


(நினைவு துளிகள் சொட்டும்....)

Monday 27 July 2009

கதைச் சரம் - 7 சாப்பாட்டுராமன் கதை


கதைச் சரம் - 7
செவி வழிக் கதை - 5

சாப்பாட்டுராமன் கதை

இது ஒன்றும் இராமன் கதை கிடையாது. நன்றாகச் சாப்பிடுபவர்களை 'சாப்பாட்டுராமன்' என்று சொல்வது வழக்கம் என்ற வகையிலமைந்த கதை இது.


அந்த ஊரில் நன்கு அறிமுகமான சாப்பாட்டுராமன் இருந்தான் இவன் முன் எவ்வளவு உணவை இட்டாலும் பொறுமையாக முழுமையையும் முடித்துவிடுவான். அதனால் இவன் குண்டன் கிடையாது. வெண்ணிலாக் கபடிக்குழுவில் சாப்பிட்டவன் போல் இருப்பான்! கலகலப்பானவன் ஆகையால் இவனைச் சுற்றியொரு கூட்டம் எப்போதும் இருக்கும். இவனது திறமை அறிந்து அவ்வப்போது பக்கத்து ஊரிலிந்தெல்லாம் போட்டிகளுக்கான அழைப்புகள் வரும். இப்படியான போட்டிகளüல் கலந்து பெற்ற வெற்றிகளால் இவனது புகழ் பெருகி சுற்றுவட்டாரத்திலெல்லாம் விசிறிகளை ஏற்படுத்தியிருந்தது. இப்போதெல்லாம் இந்த விசிறிகள் தரும் உற்சாக விசிலடி ஆரவாரத்துடன்தான் போட்டிகள் நடைபெறுவது வழக்கமாகி விட்டது.

இந்த நிகழ்வுகளால் அவ்வூர் இராசாவின் கவனத்துக்கு உரியவனாகி விட்டான்.
அதனால் இந்த இராசாவுக்கு இவனைத் தோற்கடித்துக் காட்ட வேண்டுமென்ற எண்ணம் தோன்றிவிட்டது. இராசாவின் உய்தறிந்த எண்ணத்தை உய்தறிந்த மந்திரிமாரும்(இவர்களுக்கு வேறென்ன வேலை) தூபமிடத் தொடங்கினர். சாப்பாட்டுராமனை அழைத்து போட்டிக்கான நாள் குறிக்கப்பட்டு தண்டோராவும் தரப்பட்டது. இம்முறை சாப்பாட்டுராமன் தோற்கடிக்கப்படுவான் என்று மந்திரிகளிடமிருந்து கசிந்த செய்தியால் போட்டி நாளனன்று கூட்டம் அலை மோதியது.

போட்டிக்கான அரங்கம் நிரம்பி வழியும் உற்சாகம் கண்டு மன்னர் நெகிழ்து போனார். தனது அரசாட்சியில் மக்கள் மகிழ்வாக இருப்பதை எண்ணி அகமகிழ்கிறார். முன்னரே திட்டமிட்டபடி ஒருவனால் உண்ண முடியாத அளவில் போட்டிக்கான பண்டங்கள் தயாராகி விட்டன. விசிறிகளின் ஆரவார அழைப்பொலியுடன் அரங்கத்தில் நுழைகிறார் நம்ம சாப்பாட்டுராமன். சும்மா சொல்லக்கூடாது இராசாவுக்கே கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது. இராசாவிற்கும் சபைக்கும் வணக்கம் தெரிவித்து அமர்கிறான் சாப்பாட்டுராமன்.

போட்டி விதிகள் அறிவிக்கப்பட்டதும் எழுந்த நம்ம சாப்பாட்டுராமன் "மன்னா! ஒரு வேண்டுகோள் இந்தப் போட்டியில் நான் உண்ண வேண்டிய முழு உணவினையும் இங்குள்ள மேசையில் என் கண் முன்னால் வைக்க வேண்டும்!" என்றான்.

மன்னரும் சற்றே யோசித்துவிட்டு "சரி" என்கிறார்.
"நான் கேட்கும் வகையிலேயே உணவைப் பரிமாறவேண்டும்" என்கிறான் நம்ம சாப்பாட்டுராமன்.

சாப்பாட்டுராமன் பயந்துவிட்டான் என்று திருப்தியடைந்த மன்னர் "சரி" என்கிறார்.

விசிறிகளும் கைதட்டி ஆரவாரிக்கின்றன. அழகான மேசை தருவிக்கப்படுகிறது. அதன் மேல் வட்ட வட்டத் தாம்பாளங்களில் விதம் விதமான ஒழுங்காக அழகாக அடுக்கப்பட்ட உணவுகள் கொண்டு வந்து வைக்கப்படுகின்றன. இவ்வளவு உணவை ஒருசேரப் பார்த்ததால் பலருக்கு வாயில் எச்சில் ஊறியது. சபை மெளனிக்கிறது. அனைவரது கண்களும் உணவு மேசையையும் நம்ம சாப்பாட்டுராமனையும் மாறி மாறிப் பார்த்த வண்ணமிருக்கின்றன.

நம்ம சாப்பாட்டுராமன் எழுந்து வந்து சாப்பாடு முழுவதையும் நோடமிடுகிறான். பின் அமைதியாகத் திரும்பி வந்து கை கால்களை ஒரு முறை அசைத்து தன்னைத் தயார் செய்து அமர்கிறான். ஒரு நிமிடம் தியானம் செய்தபின் சரியென்கிறான்.

அவன் சொல்லச் சொல்ல உணவுகளை எடுத்து வைக்கின்றனர். முதல் அரை மணித்தியாலத்தில் அரைவாசி உணவு காலியானதைக் காணவே அதிசயமாக இருந்தது. நம்ம சாப்பாட்டுராமன் கருமமே கண்ணாகியிருந்தான். சும்மா சொல்லக்கூடாது அவன் உண்பதே அழகாகத்தான் இருந்தது. இவனது அசைவுகளை வைத்த கண் விடாது பார்த்த வண்ணமிருந்தது பெரியதொரு இளையோர் கூட்டம்.

அடுத்த அரை மணியில் முக்கால்வாசி உணவும் காலியானதைக் கண்ட மன்னரும் துணுக்குற்றார். சபை ஆரவாரம் செய்து உற்சாகமளித்துக் கொண்டிருந்தது. அடுத்த அரை மணி மேலும் விறுவிறுப்பாகி உச்சக்கட்ட உணர்வு மயமாகியது. ஒவ்வொரு உணவாகக் காலியடைந்த தட்டுகள் பரிதாபகரமாக முழித்துக் கொண்டிருப்பதாகச் சிலருக்குத் தோற்றமளித்தன.

மந்திரிமார் முகங்களில் ஈயாட்டம் கிடையாதது போல் விறைத்திருந்தன. இராசா உறைந்தே போனவரானார். சபை அதிரும் ஆரவாரமும் மேளதாள ஓசைகளும் பெரிய அளவில் கிளம்பி நம்ம சாப்பாட்டுராமன் வெற்றியைக் கட்டியமிட்டன. மந்திரிமாரில் சிலரும் தம்மையும் அறியாது கைதட்டினர். வெற்றி முகத்துடன் எழுந்து நிற்கிறார் நம்ம சாப்பாட்டுராமன். 'எப்படி சாத்தியமானது?' என்ற குழப்பத்துடன் பரிசை வழங்குகிறார் மன்னர்.

ஆரவாரம் சற்றுத்தணிந்ததும், "எப்படியப்பா உன்னால் இது சாத்தியமாகிறது?" என்ற தனது விடை காணாத கேள்வியை நம்ம சாப்பாட்டுராமனிடம் கேட்டே விட்டார் மன்னர்.
"இது சின்ன விடையம் மன்னா! இதைச் சொல்வது சிரமம் செய்து காட்டுவதுதான் சுலபம்" என்றான் அடக்கத்தடன் நம்ம சாப்பாட்டுராமன்.
"சரி சரி!! விளக்கமாக விபரி பார்க்கலாம்.....!" என்றார் ஆர்வமிகுதியுடன் மன்னர்.

"ஒரு அறையில் அடைக்கக் கூடிய அளவு மக்களை அடையுங்கள் பார்க்கலாம்!" என்றான் மன்னனைப் பார்த்து நம்ம சாப்பாட்டுராமன்.

"அப்படியே ஆகட்டும்!" என்கிறார் மன்னர்.

ஒரு அறையில் மக்களை அடைக்கின்றனர் காவலர்கள்.

ஒவ்வொருவராக அறையிலிடவும், இதைப்பார்த்த நம்ம சாப்பாட்டுராமன் "இன்னும் அடைக்கலாம்" என்பதுமாகி மேலும் பலர் உள்ளே தள்ளப்பட்டு அறை நிரம்பி வழிகிறது. இனிமேல் யாருமே புகமுடியாத நிலை ஏற்படுகிறது.

"மன்னா! இனிமேல் யாருமே உள்ளே புகமுடியாது" என்றார் தலைமைக் காவலர்.

மன்னர் நம்ம சாப்பாட்டுராமனை நோக்கினார் நடப்பதை அறியும் ஆவலுடன். ஆனால் அவனோ "இன்னுமொருவர் புகமுடியும்" என்றான் அடக்கத்துடன்.

"எப்படியப்பா? சரி! செய்து காட்டு பார்க்கலாம்" மன்னரே தாங்க முடியாதவராக வினவினார். குண்டூசி விழும் சத்தம் கேட்குமளவில் அமைதியாக இருந்தது சபை.

எழுந்து வந்த நம்ம சாப்பாட்டுராமன் மன்னரை வணங்கி, "அடியேனின் கோரிக்கையை தாங்களால்தான் நிறைவேற்ற முடியும்" என்றான் அடக்கத்துடன்.

"அப்படி நான் என்ன செய்ய வேண்டும்?" என்கிறார் மன்னர்.

"தாங்கள் இந்த அறைக்குள் தயைகூர்ந்து நுழைய வேண்டும். இப்படி நான் கேட்பதால் குறை நினைக்கக் கூடாது மன்னா!!"

மன்னர் மறுக்காது அறையினுள் உள் நுழைகிறார். என்னே ஆச்சரியம்! மன்னரைக் கண்டு அறையிலிடப்பட்ட கூட்டம் இன்னும் நெருங்கி வழிவிடுகிறது.

விடைகிடைத்த திருப்தியுடன் மன்னர் திரும்பி நம்ம சாப்பாட்டுராமனை நோக்கிவந்து கைகுலுக்கி, தனது கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை அணிவிக்கிறார். கூட்டம் சந்தோச மிகுதியால் எழுந்து நின்று ஆர்பரிக்கிறது.



- முகிலன்
பாரீசு யூலை 2009

(இக்கதை என் சிறு வயதில், சிங்களப்பகுதியில் பணியாற்றிய எனது அண்ணாவிடம் கேட்டது)

Friday 24 July 2009

கதைச் சரம் 6 நினைத்தாலே சிரிப்பு வரும்!!


கதைச் சரம் 6
செவி வழிக்கதை - 4


நினைத்தாலே சிரிப்பு வரும்!!
(உனக்குப் பின்னால் உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு.......! )

முன்னொரு காலத்தில் விநோத எண்ணமுடைய ஒரு ராசா இருந்தார். இவருக்கு புதுசு புதுசா சாப்பிட வேண்டுமென்று விருப்பம் (அதுதான் நம்ம 23-ம் புலிகேசி மாதிரி, இப்பவுள்ள மஞ்சள் துண்டு ராசா மாதிரி, சிவப்புத் துண்டு ராசா மாதிரி நிறையவே இருந்திருக்காங்க). இவரின் விருப்த்தை நிறைவேற்று முகமாக அமைச்சரவையும் திட்டங்களை அறிவித்து ராசாவை உற்சாகப்படுத்தியது. இது ஒரு கோடை காலம், அமைச்சரவை காலத்துக்கு ஏற்றவாறு புதுப் புதுப் பழங்களை தருபவர்களுக்கு ஆயிரம் பொற்காசு கிடைக்குமென அறிவித்திருந்தது.

பரிசைப் பெறுவதற்காகப் பெருமளவில் வித விதமான பழ வகையுடன் போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். ஐயோ பாவம்! அதில் பெரும்பான்மையான பழ வகைகள் மன்னரால் அறியப்பட்டவைகளாக இருந்தன. இதனால் கோபப்பட்ட மன்னரது மன நிலையை அறிந்த அமைச்சரவை திடீரென புது அறிவிப்பை அறிவித்து. அது "மன்னருக்கு தெரிந்த பழங்களைக் கொண்டு வந்தால், அப்பழங்கள் முழுமையாக கொண்டு வந்தவர் வாய்களுக்குள் அப்படியே திணிப்படும்." என்பதாக இருந்தது. இதனை நிறைவேற்று முகமாக காவலர்களும் நியமிக்கப்பட்டு இருந்தார்கள். இந்தச் சேதி காட்டுத் தீ எனப் பரவ, வேடிக்கையைக் காண்பதற்காக பொதுமக்களும் அலையலையாகத் திரள அரசவை அல்லோல கல்லோப்பட்டது.

இப்படியான ஒரு நாள், ஒரு வாலிபன் அன்னாசிப் பழத்துடன் அரசவைக்கு வந்தான். அன்னாசி பற்றி மன்னருக்கு ஏற்கனவே தெரிந்திருந்து. மன்னரும் "இது அன்னாசிப் பழம்" என்கிறார். உடனே காவலர்கள் பழம் கொண்டு வந்த இளைஞனை தர தரவென்று இழுத்து வந்து கட்டிவிட்டு அவனது வாயில் அந்த அன்னாசிப் பழத்தை திணிக்கத் தொடங்கினர்.

அன்னாசிப்பழத்தை செலுத்தும் போது அவனது கடவாய் கிழிந்து இரத்தம் வழிந்தது. இக்காட்சியைப் பார்த்து சபை துணுக்குற்றது, ஆனால் அவனோ சிரிக்கிறான்..... இந்த நிலையில் அந்த வாலிபன் சிரிப்பதைக் கண்ட பிரதம அமைச்சர் திகைத்துப் போனார். உடனே காவலர்களை நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டார். அந்த இளைஞனைப் பார்த்து "இப்படியான நிலையிலும் ஏனப்பா சிரிக்கிறாய்?" என வினவினார்.

அவனும் " எனக்குப் பின்னால என்னுடைய மாமா பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறார். அன்னாசியுடன் வந்த என் கதி இப்படியிருக்க... அவரை நினைக்கவே...." என்றவாறு மீண்டும் வாய் விட்டுச் சிரிக்கிறான். இம்முறை அவனோடு அவையும் சேர்ந்து கொள்கிறது.

- முகிலன்
யூலை 2009 - பிரான்சு

00000000000000000000000000000
செவி வழிக் கதைகள்
நாம் சின்ன வயது முதல் பல்வேறு கதைசொல்லிகளால் கவரப்பட்டவர்கள். இக் கதைசொல்லிகளாக எம்மது மூத்த தலைமுறையினர், பெற்றோர், ஆசிரியர்கள், சுற்றத்தார், நண்பர்கள் எனப் பலவாறாகவும் காணப்பட்டனர். இவற்றில் பல கதைகள் இராமாயண, மகாபாரதக் கிளைக் கதைகளாகவும் இருந்துள்ளன. சென்ற நூற்றாண்டில் அறிமுகமாகிப் பரவலான எழுத்துலகின் பரந்துபட்ட வாசிப்புக் கலாச்சாரம் கதைசொல்லலைப் பதிவுகளாக்கித்தரத்தொடங்கியது. இது தற்போதுள்ள தொழில் நுட்பஙகளுடன் பாட்டி கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், இன்றைய கார்டூன் கதைகள் வரையில் கதைசொல்லிகளின் வெளிப்பாடும் மனிதனுடன் சேர்ந்து பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது.
ஆனாலும் சில கதைசொல்லிகளின் கதைகள் நாடோடிக் கதைகளாகவும் வரையறுக்க முடியாது, கிராமக் கதைகளென்றும் கூறமுடியாது ஆனால் நகைச்சுவையுடன் குறுங்கதைகளாக கவனங்கொள்ள வைக்கும். ஆனால் இதைப் படைத்தவர் யாரென்பதை அறியவே முடியாது. செவி வழியாக அறிந்துள்ள இவ்வகைக் கதைகளைப் பதிய தோரணம் முனைகிறது.

00000000000000000000

Thursday 23 July 2009

சுவடுச் சரம் 1 நினைவுத் துளிகள் (4)




சுவடுச் சரம் 1
நினைவுத் துளிகள் (4)

- குணன்
-------------------------------------------------------------------------------------------------
முற்குறிப்பு:

தோரணத்தில் புதிய தொடராகப் பதிவுறுகிறது நடந்துவந்த பாதையின் நினைவுச்சுவடு. இலங்கையிலிருந்து ஈழத்தமிழர்கள் பெருமளவில் அகதிகளாகவெளியேறத் தொடங்கியகளின் ஆரம்பத்தில், இலண்டனும் - ஆங்கிலமும்தவிர்ந்த ஏனைய நகரங்கள் - மொழிகள்பற்றி பெரிதும் அறிந்திராத ஈழத்தமிழர்கள் பரவலாக பூமிப் பந்தில் பரவிய குடிப்பரம்பலுக்குஅச்சாணியாகத்திகழ்ந்தது பேர்லின் நகர்தான். அப்போது கிழக்கு - மேற்கு எனப்பிளவுண்டிருந்தஇந்த நகருக்கூடாகத்தான் ஐரோப்பாவின் அகதிகளாகஈழத்தமிழரின்முதற்தலைமுறை தடம் பதித்தது. இந்த ஆரம்பகால நினைவுகளைமீட்டுசொட்டுச் சொட்டாக துளிரிடுகிறார் குணன். நினைவுத் துளிகளாகளாகச்சொட்டும் இத்தொடர் வாசகர்களின் கருத்துகளால் மெருகூட்டப்படுமென ஆவல்கொள்கிறார்.

இதைப் புகலிடப் பதிவாக்கிய தோரணம் 'சுவடுச் சரமாக'த் தொங்கவிடுகிறது. இப்பதிவுவாசகர்களின் நினைவுகளைத் தூண்டி இவ்வாறாக இன்னும் பலபதிவர்கள் பதிவிடமுன்வரும் உந்துதல் கிட்டிடவேண்டுமென்பதே தோரணத்தின்அன்பான எதிர்பார்ப்பு.
-------------------------------------------------------------------------------------------------

எங்கோ ஆறாயிரம் மைல்களைக் கடக்க, வானத்தையும், கடல், மண்ணையும் தாண்டி ஏன் இந்த புதிய மனிதர்கள் நூறு ஆயிரம் என விமானங்களை அமர்த்திக்கொண்டு பேர்லின் மேற்குள் குவிந்து தங்குமிடம், உணவுக்கு அவதிப்படவேண்டும்? என உள்ளுர் - வெளிநாட்டு ஊடகங்கள் புறப்பட புதியதான எமது தமிழர் நலன்புரிக்கழகம் பற்றி தேவாலயத்துக்குச் சென்ற சில தமிழ் கிறிஸ்தவ நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்ட திரு பீர் புக்கோல்ஸ் என்ற ஜேர்மனி பெருமகனும், கத்தோலிக்க மாணவர்களும், நாம் தங்கியிருந்த விடுதியில் ஓர் ஊடகச் சந்திப்பை நடாத்தினர்.

எம்மை அறிமுகம் செய்யவும் அதன் மூலம், எமது வருகை பற்றி யாவரும் தெரிந்து கொள்வதால், மாநில அரசின் கவனத்தையும், ஏனைய மனிதாபிமான நிறுவனங்களின் மற்றும் பொது மக்களின் அனுதாபங்களையும் பெறமுடியும் என்று கூறி பேர்லின் கிறிஸ்தவ மாணவர் கூட்டமைப்பினால், வரலாற்றில் முதன் முதலாக ஜேர்மனிய-ஐரொப்பிய ஊடகங்களின் செய்தி மாநாடு, பொஸ்டம்மர் வீதி 147, ஐந்தாம் மாடியின் எண் 502 அறையில், 08.07.1981-ல், நடைபெற ஏற்பாடாகியது!

அப்பத்திரிகை செய்தி மாநாட்டு அழைப்பிதழில், "நாம் இதன் வாயிலாக, உங்கள் கவனத்திற்கு கொண்டுவரும் செய்தியாவது, இதுவரை ஊடகங்களின் கவனத்தைப் பெறாதுள்ள, சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற சிறுபான்மையினராகிய தமிழர் மீது நடாத்தப்பட்டு வருகின்ற, வன்செயல்களுக்குத் தப்பிட வேண்டி, 500 பேர்கள் வரை அகதிகளாக பேர்லின் மேற்குள் வந்திருக்கிறார்கள். தினமும் மேலும் வருகிறார்கள். இது பற்றி ஓர், ஊடக மாநாட்டைக் கூட்டி ஆராய, உங்களையும் அழைக்கிறோம்" என்று குறிப்பிட்டிருந்தது. இது கீழ்க்காணும் அமைப்பு மற்றும் ஆதரவாளர்களின் சார்பில் இடம் பெற ஏற்பாடாகியது என்றவாறு அழைப்பாளர்கள் :
- அண்மையில் வந்த தமிழர் பிரதிநிதிகள்
- இங்குள்ள தமிழ் அகதிகள்
- தமிழரின் புதிய அமைப்பின் (ஈ.த.ந.க. பேர்லின்)
- கத்தோலிக்க மாணவ அமைப்பு பிரதிநிதிகள்

இங்ஙனம், நன்றியுடன்,
கிறிஸ்தோப் றெம்பெக் எஸ்ஜே
பீர் புக்கோல்ஸ் (என) பெயர்கள் காணப்பட்டன.

அங்கு அன்று, மேற்படி அழைப்பை ஏற்று, ஜேர்மன், உள்ளுர் - வெளி ஊடகங்களில் பி.பி.சி உட்பட பலரும் வருகை தந்தனர். ஏன் இவ்வாறு பெரும் பொருட்செலவில், இங்கு மிகவும் கஸ்டங்களைக் கடந்து வரவேண்டும்? என்றும், அண்டை நாடாகிய தமிழ் நாடு, இந்தியா செல்வது இலேசானதல்லவா? என்று பலரும், குறிப்பாக பி.பி.சி நிருபர் கேட்டது இன்றும் என் நினைவில் துளிர்க்கிறது. தாய் மண்ணையும், குடும்ப உறவினர், நண்பர்கள், அனைவரையும் பிரிந்தும் என் போன்ற சிலர் மனைவி, பிள்ளைகளையும், வயதான பெற்றோர்களையும் அழைத்து ஏன் வரவேண்டும்? இதன் வழி, எதனைச் சாதிக்க எண்ணம்? என்றது போன்ற கேள்விகள் பலரால் கிளப்பப்பட்டன!

அன்று, வந்த பலரின் நோக்கம் பசுமை தேடியே என்பது தவறெனக்கொள்ள முடியாது! ஆயினும் 1981-ல், யாழ் மாவட்டசபை தேர்தலை அடுத்து, போராளிகள் - அரசியல்வாதிகள் மோதல், யாழ் நூல் நிலைய எரிப்பு, யாழ் பா.உ.அமரர் யோகேஸ்வரன் வீடெரிப்பு, யாழ் நகர அங்காடி தீவைப்பு, என தமிழர் மீது வன்முறை, கொலை, கொள்ளை, தீவைப்பு என்பன தொடராக அரச இயந்திரங்கள் மூலம் நடந்தேறிய செய்திகள் பேர்லின் நகரில் தெரிந்து கொள்ள முடிந்தது. இக்காலத்தில், பல்வேறு மனித உரிமைகளுக்கான அமைப்புக்களாகிய ஜேர்மன், பேர்லின் கிளை, ஆபத்துக்குள்ளாகிய இனங்களுக்கு உதவும் உலக அமைப்பின் பேர்லின் பொறுப்பதிகாரியாக விளங்கிய டாக்டர் ரீ.கொவ்மன் மற்றும் பல்வேறு கிறிஸ்வ பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள், ஆகியோர், ஈழத்தில் இருந்து இங்கு, ஆதரவின்றி வீதிகள், மைததான்ஙகள், சோலைகள், ரயில் நிலையம் போன்ற இடங்களில் தவித்துக் கொண்டதை அறிந்து, மாநில அரசுக்கும், மற்றும் பல்வேறு உதவி புரியும் செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றின் கவனத்துக்கும் கொண்டு வந்ததுடன், மத்திய-மாநில செனட்டர்கள், அமைச்சர்களுடன், தமிழ் அகதி வருகையும், தமிழர் நிலைமை பற்றியும் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்தவர் டாக்டர் கொவ்மன் என்பதும், இலங்கையில் இருந்து, முதன் முதல், "வீரகேசரி” இதழை கழகத்தின் சார்பில் தருவித்து(தினந்தோறும்) தாயகச் செய்திகளை அறிந்துகொண்டு, அவற்றை சான்றுகளாக்கி தமது விண்ணப்பத்துடன் வழங்கச் செய்தோம்!

ஆம்! தமிழர் யார்? ஏன் இங்கு வந்தோம்? அரசியல், கலை, பண்பாடு, உணவு என, ”தமிழர் அறிமுகவிழா”என ஜேர்மன் - பேர்லின், பல்கலைக்கழகத்தின் இவாங்கிலிச மாணவர் ஒன்றியத்துடனும், மற்றும் பல்வேறு அமைப்புக்களுடனும் இணைந்து முதன் முறையாக, கோலாகலமாக ஜேர்மனிய-தமிழர் நடாத்திய, ”தமிழ் மாலைப்பொழுது” நடந்தேறியது. மீண்டும் கொவ்வன் அவர்கள் முன்நின்று நாம் (கழகம்) நடாத்த அனைவரையும் ஒன்றிணைத்து உதவினார்.

0000000000000000000

எப்போது மனிதன் தோன்றினான் என்பதையும், எங்கு, எவ்வாறு தோன்றினான் என்பதையும் "இப்படி, இங்கேதான்!" என்று அறுதியிட்டுக் கூற இயலாது அறிவியல் மற்றும் மதவாதிகள் நீண்ட காலமாக முரண்பட்டே வந்துகொண்டிருக்கிறார்கள். ஆயினும், ஆதிகாலத்தில் விலங்குகளைப் போன்றே மனித இனம் வாழ்ந்து, முன்னேற்றங்கண்டு, சமூகப்பிராணியாக மாற்றம் பெற்றிருக்க வேண்டும் என்ற மானிடவியலாளர் டார்வின் கூறிய கருத்து முழு அளவில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஏனெனில், மனிதனிடம் விலங்குத்தனம் இன்றும் ஒழிந்ததாகத் தெரியவில்லை!

இன்றைய புதிய நூற்றாண்டிலும், வரலாற்றுத் தொடக்க காலம் போன்று, மனித குலத்தின் ஒரு பிரிவு மக்கள் உலகின் பல நாடுகளில், நாட்டைவிட்டு துரத்தியடிக்கின்ற, குறிப்பாக சிறுபான்மை இன மக்கள், வாழ்வுரிமை நாடி, புலம் பெயர்கின்ற அவலத்தை எதிர்நோக்கி உலகின் பல பாகங்களுக்கும் ஓடிக் கொண்டிருப்பதைக் காணலாம். இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலும், மனிதர்கள் தினம் தினம் எங்கோ ஒரு மூலையில், இறக்கிறார்கள் என்பது உண்மைதான்! அதே போன்று, ஆதிக்குடியினர், சிறுபான்மை இனத்தவர்கள், ஆளும் அதிகார வர்க்கத்தினராலும், ஆயுதப் படைகளினாலும், கட்டங்கட்டமாகத் திட்டம் போட்டு, வேரோடு அழிக்கப்படுவதை இன்றும் கண்டும் உலகம் கையாலாகத்தனமாக கைகட்டி, வாய் மூடி மௌனம் காக்கிறது. இது ஒருவகையில், தந்திரமாக வன்முறைகளுக்கு துணை போவது போல சந்தேகம் எழுவதைக் தவிர்க்க முடியாததாக்கிறது. இத்தகைய ஆபத்துக்களைக் கண்டும், கேட்டும், பட்டறிவும் கொண்டவர்களாகிய எம்மக்களும், தமது அழகிய பிறந்த மண்ணில் வாழமுடியாமல் ஊர், உறவை உதறிவிட்டு, மிகக் கொடுமை மிக்க காலநிலை கொண்டதான புதிய நாடுகளில் (எங்காவது) சென்றிடத் துணிந்தவர்களாக மாறினார்கள்!

இலங்கையின் மூத்த குடிகளாகிய தமிழர்கள், வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டே வாழ்ந்து வருபவர்கள். இம்மக்களின், அடிப்படை சொத்துக்களாகிய வாழ்விடம், தாய்மொழி, தனித்துவமான பண்பாடு ஆகியனவற்றை, சென்ற 5000 ஆண்டுகளாக பேணிவருபவர்கள். இவ்வாறான எம்மை இல்லாதொழிக்கும் முகமாக அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டதாலேயே, கடந்த அரை நூற்றாண்டு தாண்டிய நீண்ட எதிர்ப்பையும், போராட்டங்களையும் நகர்த்தி வந்தார்கள். இன்று உலகின் அகதிகளாக்கப்பட்ட மக்களில், கடந்த மூன்று தசாப்தங்களில் கணிசமான மக்கள் கூட்டத்தினருள், ஈழத்தமிழர்களும் அடங்குவர். 1980 முதல், தொடங்கிய புலப்பெயர்வு, இனறும் தொடர் கதையாகவே உள்ள ஒன்று!

ஐரோப்பாவுக்குள், அதிக எண்ணிக்கையில் தமிழரின் பரம்பல் இடம்பெறுவதற்கு வழிசெய்த பேர்லின் ஊடாக, ஏனைய நாடுகளுக்குள் நுழைவை மேற்கொள்ளும் வழி ஏற்பட்டது. 1980 சனவரி 15 முதல் பிரான்ஸ், நுழைவுக்கு, விசா முறை புகுத்தல் நடைமுறை கொண்டு வரப்பட்டதால், பிரான்ஸ்சுக்கு நேரடியாக வருவது தடைப்பட்டது. இதனால், பேர்லின் வழி மட்டுமே இருந்தது. மேற்குல நாடுகள், அனைத்திற்கும், பேர்லின் வழியாக பலர் செல்லமுடிந்தது. இவ்வாறு, அடுத்து ஐந்தாண்டுகளாக, 1985 யூலை 15 வரை, தொடர்பாதையாக பாவித்து பலரும் நுழைய முடிந்தது. 1980 - 1989 வரையான காலப்பகுதி, பேர்லின் வாழ் தமிழர் நலன்புரிக்கழகம் ஆற்றிய பணிகளையும், அதற்கு வழிகாட்டிய அமைப்பு சார்ந்த பெருமக்களையும், தொண்டுணர்வுடன் உதவியவர்களையும், எல்லாவற்றிற்கும், மேலாக, ஐரொப்பிய- நிரந்தர இருப்பை, உறுதி செய்யும் வகையில், டாக்டர் கொவ்மன் ஆற்றிய உதவியை ஈழத்தமிழர்கள் புலப்பெயர்வில் என்றுமே மறக்கமாட்டார்கள்-மறக்கமுடியாது!

(நினைவுத் துளிகள் சொட்டும்…..)

Wednesday 22 July 2009

சரம் - 13 மணவாழ்வில் விட்டுக் கொடுத்தல்


சரம் - 13
மணவாழ்வில் விட்டுக் கொடுத்தல்


புலம் பெயர்ந்த முதல் தலைமுறையினருக்கு அடுத்த தலைமுறை எப்படியாகவெல்லாம் வாழ்கிறது என்பதை அவதானிப்பதில் கொஞ்சம் அதிகமான ஈடுபாடுள்ளதென்றே சொல்ல வேண்டும். 
சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர்தான் இந்த இளைஞனின் கல்யாணம் நடந்திருந்தது. பார்த்திருக்கும் போதே காலம் உருண்டோடியது தெரியாது போய்விட்டது. சும்மா சொல்லக் கூடாது ஐரோப்பாவில் நேரம் விரைந்துதான் ஓடுகிறது போலும்! இங்கு வளர்ந்திருந்தாலும் காதல் வலையில் சிக்காது பெரியவர்களால் பேசி முடித்த கல்யாணம் இவனுடையது. இன்று மூன்று பிள்ளைகளோடான இளம் குடும்பமாகி விட்டது.

இன்று நீண்ட நேரம் இருக்கும் சூரிய கிரகணம் என்ற செய்தி வரவே ஐரோப்பியரெல்லாம் கறுப்புக் கண்ணாடிகளுடன் ஆவலாக இருக்க, ‘வரப்போகிறது சிறப்புச் சுனாமி’ என்ற வதந்தியுடன் சாமி கும்பிட்டு காரியம் பார்க்கும் மூத்த தலைமுறையல்லவா? நம்மவருடையது.
எது நடந்தாலும் ஒருக்கா சாமியோடு பகிர்ந்து போட்டுச் செய்தா ஒரு யானை பலம் கிடைத்த மாதிரி- என்ற நினைவுடன் பயத்தையெல்லாம் அந்தக் கடவுளுடைய தலையில் சுமத்திவிட்டு வெளியில் வரும்போது கிடைக்கும் சுகத்தை அனுபவித்தால்தான் தெரியும். புலம்பெயர்ந்த வாழ்விலும் இப்படியான தமது மனவுணர்வுகளை ஒருவாறு அடுத்த தலைமுறைக்கும் கடத்தி அந்தப் பழக்க வழக்கத்தைக் கொடுத்திருந்து நிம்மதியான முதல் தலைமுறையின் செயலை வியக்காது இருக்கமுடியாது.

தனது திருமண நாளை கோவிலில் அரிசனையுடன் நினைவுகூர்ந்து விட்டு வந்திருந்தார் இந்த அடுத்த தலைமுறை இளம் குடும்பத்தன். நான் அவரது குடும்ப நண்பன்.

"அண்ணே!.............." என்று பெளவியமாக என்னைப் பார்த்து இழுத்தார்.


"என்ன தம்பி கூச்சப்படாது கேளுங்கோ......!" ஏதோ சூரிய கிரகணத்தைப் பற்றியதாக இருக்குமாக்குமென அலட்சியத்துடன்

"அண்ணே! குடும்பத்தில நிம்மதி இருக்க யார் அதிகவளவில் விட்டுக் கொடுக்கிறார்கள்? ஆணா? பெண்ணா? உள்ளதைச் சொல்ல வேண்டும்!" என்னை உற்றுப் பார்த்தவாறு

எதிபாராத கேள்வியால் துணுக்குற்ற எனது கண்கள் தடுமாறியவாறு சில கணங்கள் நிலம் நோக்கின....

புருவத்தின் மேல் தோலில் பலவான கீறல்கள் தோன்றியிருக்க வேண்டும்
கல்யாணம் பேசிய காலத்தில் அவனது கைத்தொலைபேசி டயல் ரோனில
 "நான் ஆம்பிளைச் சிங்கம்டா........." என்றதை நானும் கேட்டவன்.

"என்ன தம்பி திடீரென்று......" ஒருவாறு சமாளித்து வார்தைகள் விழுந்தன. எனது கண்கள் நேராக அவனது முகத்தை ஆழமிட்டன.

"இல்லை அண்ணே என்ர கண்டுபிடிப்பை ஒப்பிடத்தான்.........." சஞ்சலமில்லாது

"இது என்ன கேள்வி தம்பி! ஆம்பிளையாலதான் அதிகமாக விட்டுக் கொடுக்க முடியும். அப்பத்தான் நிம்மதியாக இருக்கலாம் தம்பி."  அனுபவ முதிர்ச்சி ஓசைநயமாகி இருந்திருக்க வேண்டும்.

"ஓம் அண்ணே! சரியாகச் சொன்னீர்கள்" என்றான் திருப்தியுடன். தொடர்ந்து "மாயாண்டி குடும்பத்தார் பார்த்தனீங்களா அண்ணே! கட்டாயம் பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்!" மகிழ்வுடன்.

"பார்க்கலாம்" என்கிறேன் அமைதியாக
- அமலன்
செர்மனி 22. 07. 2009

Monday 20 July 2009

சுவடுச் சரம் - 1 நினைவுத் துளிகள் (3)



சுவடுச் சரம் 1
நினைவுத் துளிகள் (3)

- குணன்
__________________________________________________________________
ஈழத்தமிழரின் அமைப்பாக விளங்கிய ஈ.த.ந.கழகத்தின் சார்பாகவும், அன்று இணைந்து செயலாற்றிய, சக ஜேர்மனிய நலன்புரி அமைப்பைச் சார்ந்த பலர், தேவாலய அமைப்பாளர், மனித நேய தொண்டமைப்புக்களைச் சார்ந்த ஆதரவாளர்கள் எனப் பலரோடும், அத்தகையோர்கள் தொடர்பால் அரசியல்வாதிகள் எனப் பலருடனும் பலகாலம் இணைந்து செயலாற்றிய அருமையை எண்ணவே இனிக்கிறது. அண்மைக்காலங்களில், வாழும் நாட்டு மக்களிடை எடுத்துச்செல்லவும், சனநாயகம், தொண்டு மனப்பான்மை, பண்பாடுகளைப் புறந்தள்ளிவிட்டு, தூரநோக்கும் - உதவிபுரியும் பண்பும் குன்றி, வெற்றுப் பகட்டும், பொருள்தேடும் பேரவாவும் சேர, நலன்புரிதலற்ற, வியாபாரத் தந்திரங்கள் முன்நிற்கும் பொய்மைத் திரை தெரியவர தேவையற்ற வன்முறைகள் ஊர்வலமாகிப் போக, நல்லவர்கள்- வல்லவர்கள் தூரப்போய்விட்டதுதான் இன்றைய பெரிய சோகம்!
___________________________________________________________________


"கொஞ்சிக் கொஞ்சி உயிர் குடித்தான்“ என்ற கூற்றைப்போல, கம்யுனிஸத்தின் முகத்தை புரட்டிப்போடுவதற்குத் துணிந்தவராக குரபர்ட்சோவ், பழைய பொலிற் பீரோவின் தலைவராக்கப்பட்டது, மேற்குலகம், எதிர்பார்த்திருந்ததுபோல, பேர்லின் நகருக்கு வருகை தந்த அமெரிக்க சனாதிபதி, தனது, “பேர்லின் உரையில்,“ மிஸ்டர் குரபோர்ட்ஸ்சோவ்! பேர்லின் தடுப்பு மதிலை, இடித்து விடுங்கள்!, (அதன் வழியாக,பிரிந்து, துண்டுகளாக்கப்பட்ட, கிழக்கு, மேற்கு ஜேர்மனிகளும், அவற்றின் தலை நகர்களாகிய கிழக்கு-மேற்கு பேர்லின் நகரங்களும்,ஒன்றாக மக்களும் மண்ணும் இணைவதாகும்!) என்ற கோரிக்கை, உலகப் புகழ் பெற்றுத் திகழ்ந்து, அதன் விளைவுதான், இன்று, இரத்தம் சிந்தாப் புரட்சியாகப் பெற்றுக்கொண்ட ஜேர்மனியின் இணைப்பும், சோவியத் ரஸ்சியாவின் மாற்றங்கள் மட்டுமன்றி உலக அரசியல்-இராணுவ மாற்றங்களும், குறிப்பாக, கிழக்கு ஐரொப்பிய நாடுகள்,புதிய சிறிய அரசுகள்,முன்னாள் ,“இரும்புத்திரை“ நாடுகள்,ஐரொப்பிய சமூகத்தில் அங்கத்துவ உரிமைபெற வழிவகுத்து- வழிகாட்ட, அடிகோலியது ஜேர்மன் பேர்லின் இணைப்பென்றால் மிகையல்ல! இரண்டாவது உலக யுத்தத்தின் முடிவில்,பேர்லின் நகர் கண்ட அழிவெனப் பேசும்போது,முழு ஜேர்மன் நாட்டின் அழிவைப்போல,இருமடங்கெனககூறப்படுகின்றது! இதற்கு, யுத்தத்தின் போது, நாசியரசின் தலைநகராக இருந்ததும், ரஸ்ய செம்படையின் கடுமையான தாக்குதல்களுக்கு முகங்கொடுத்ததுமாகலாம்! வரலாறு அறிந்திராத அழிவுகளுக்கு முகங்கொடுத்த பேர்லின், இன்று, அதி நவீன, அழகிய, புதிய அறிவியல்,வரலாற்றுடன், உலகின் தலைசிறந்த பல்கலைக் கழகங்கள், வைத்திய ஆய்வு நிலையங்கள், ஆவணக்காப்பகங்கள், ஐரொபாவில், பசுமை நிறைந்த நகரமாக விளங்குகின்ற பெரு நகராகும்! இந்நகரின் தொடர் வரலாறு 800 வருடங்களைக்கொண்டதாகும்! இரண்டாம் உலகப்போர் முடிந்தும், ஜேர்மன் நாடு, தலைநகர், விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள் நாட்டின் பெறுமதிவாய்ந்த தேசியச்சொத்துக்கள், போர்வீரர்கள் என அனைத்தையும் குறிப்பாக நேசதேசப்படைகளாகப போரிட்ட நாட்டரசுகளின் படைகள் வசம் ஆயின! பேர்லின் நகரை முதல் கைப்பற்றினாலும் அதனையும், பங்கு பிரிக்கச் சம்மதித்தனர் வெற்றியரசுகள் ஆகிய அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஸ்யா. தலைநகர் பேர்லின் (கிழக்கு பெர்லின்-கம்யுனிச ஆட்சி), மேற்கு பேர்லின் (அமெரிக்க சார்பு), எனவும் பிரிக்கப்பட்டது!

அகதிகளுக்கு வழி

இரண்டு பகுதிகளாக்கப்பட்டது பேர்லின்நகர், ஜேர்மன் தேசம், ஜேர்மன் குடும்பங்கள், ஆனாலும், எந்த அதிகாரத்தாலும், அம்மக்களின் தாய்மொழியை –ஜேர்மன் மொழியை, ஆங்கிலமாகவோ, பிரஞ்சுமொழியாகவோ, ரஜ்யமொழியாகவோ, மாற்ற முடியவில்லை. வெவ்வேறு கோடபாடு, கொள்கை எனப் பிரிந்து, கடந்த அரைநூற்றாண்டைத் தாண்டி, 1989ல் இணைந்து ஒரே இன மக்களென கைகோத்து நிற்கையில் அதற்கு உதவிய ஒரே காரணி “தங்கள் தாய்மொழி மாறாது பேணிக்காத்து வந்ததுதான்" என்பதை தமிழர்களாகிய நாம் கவனிக்கவேண்டும்!

அரச மற்றும் எங்கு சென்றாலும், ஜேர்மன் மொழி தெரியாது, பிறமொழி மூலம் எதனையும் சாதிப்பது முடியாது! இணைப்புவரையும், பேர்லின் நகரின் பாதுகாப்பு முழமையாக அமெரிக்க கூட்டுப்படைகளின் பொறுப்பில் மேற்கு பேர்லின் நகரும், ரஸ்யப் படைகளின் பொறுப்பில் கிழக்கு பேர்லின் நகர் அடங்க கிழக்கு ஜேர்மனியும் இருந்தன. கிழக்கு-மேற்கு எல்லையில், இருக்கும் “பிரண்டன் பேர்க்" நுழைவாயில், வரலாற்றுச் சிறப்புடையது. இதன் வழியே, நெப்போலியன் படைகள் கிழக்கே சென்றன! கிழக்கு ஜேர்மனியர்கள் மற்றும் கிழக்கு ஐரொபிய நாடுகளில் இருந்து தப்பி தஞ்சம் கோரி வருபவர்களுக்காகவே அரசியல் தஞ்சம் வழங்கும் சட்டம், மேற்கு ஜேர்மன் அரசியல்யாப்பில் மாற்ற முடியாத ஒன்றாக்கப்பட்டிருந்தது.. தற்போது இதனை திருத்தம் செய்துள்ளார்கள்! இதன் வழியாக மட்டுமே, இங்கு வந்து குடியேற முடிந்ததென்பதை மறந்து, “நான் ஒரு அகதி“ என்ற நமது ஆரம்ப முகத்திரையை அறிந்தவர் பலரும் அதனை மறைத்துக் கொள்ளும் இழிசெயல்கள் மூலம் புனிதமாகிய “காப்பை“ களங்கப்படுத்துவதாகவே கொள்ளமுடியும்!

0000


ஜேர்மனியர்கள், தங்கள், தாம் பிறந்த நாட்டை, பிறரைப்போல, “தாய் நாடு“ என்பதற்குப் பதிலாக, பாரதி பாடியிருப்பதைப்போல (“தந்தையர் நாடென்னும் போதினிலே ……!), “தந்தை நாடு“இ (ஏயவநச டுயனெ) என்றே வழங்குவதைக் காணலாம். இங்கு வருபவர்கள் வாழ விரும்புபவர்கள், முதலில், தங்களின் தாய் மொழியறிவு பெற்றிருப்பது இன்றியமையாதது என்பதையே முதலில் அறிவுத்துவார்கள். தொடக்கம், ஈழத்தமிழர்களில், மாணவர்களாக, பல்கலைகழகங்களில் பட்டப்படிப்புக்காக இலங்கையில் இருந்து, வந்த சிலர் இருந்தார்கள்! இவர்களில் தமிழ், சிங்கள மாணவர்களும் அடங்குவர்! இவர்களில், சிலர் ஏதிலியாகிய வந்திருந்த ஈழத்தமிழர்களுக்கு குறிப்பாக மொழி பெயர்ப்பு விடயங்களில் உதவி செய்தார்கள்.

பின்னர் மொழியறிவு பெறுவதற்கு மாநில அரசு உதவி வழங்கிய போதுங்கூட, அந்த உதவியைப் பெற்றுக்கொண்ட பலர், மொழியறிவு பெறாது வாழாதிருந்தார்களென்றே கூறவேண்டும்! இதன் காரணமாக, நிலையான வதிவிட உரிமை பெற்றுக் கொண்டபோதும், மொழியறிவு இன்மையால், சிறந்த வேலைகளைப் பெறமுடியவில்லை! பிற்காலத்தில், குறித்த தரத்தில், மொழியறிவு பெற்றறிருந்தால் மட்டுமே, நிரந்தர வதிவிடவுரிமை வழங்கப்படலாம் என்று அரசாணை பிறப்பித்ததையடுத்து மொழியறிவு பெறவேண்டி பலரும் முயற்சி செய்தார்கள்!

ஆரம்பத்தில், பல்வேறு விண்ணப்பங்கள் அத்தாட்சிகள், விசாரணைகள், என முகங்கொடுக்கவேண்டிய போது ஈழத்தமிழரின் அமைப்பாக விளங்கிய ஈ.த.ந.கழகத்தின் சார்பாகவும், அன்று இணைந்து செயலாற்றிய, சக ஜேர்மனிய நலன்புரி அமைப்பைச் சார்ந்த பலர், தேவாலய அமைப்பாளர், மனித நேய தொண்டமைப்புக்களைச் சார்ந்த ஆதரவாளர்கள் எனப் பலரோடும், அத்தகையோர்கள் தொடர்பால் அரசியல்வாதிகள் எனப் பலருடனும் பலகாலம் இணைந்து செயலாற்றிய அருமையை எண்ணவே இனிக்கிறது. அண்மைக்காலங்களில், வாழும் நாட்டு மக்களிடை எடுத்துச்செல்லவும், சனநாயகம், தொண்டு மனப்பான்மை, பண்பாடுகளைப் புறந்தள்ளிவிட்டு, தூரநோக்கும் - உதவிபுரியும் பண்பும் குன்றி, வெற்றுப் பகட்டும், பொருள்தேடும் பேரவாவும் சேர, நலன்புரிதலற்ற, வியாபாரத் தந்திரங்கள் முன்நிற்கும் பொய்மைத் திரை தெரியவர தேவையற்ற வன்முறைகள் ஊர்வலமாகிப் போக, நல்லவர்கள்- வல்லவர்கள் தூரப்போய்விட்டதுதான் இன்றைய பெரிய சோகம்!



யார் இவர்கள்? எங்கிருந்து, ஏன் இங்கு வந்தார்கள்?


1980 முதல் 1984, 85, ஆடி மாதம் 15 வரை, பேர்லின் எல்லை கடந்த எண்ணற்ற தமிழர்கள், இன்று ஜேர்மன் நாட்டை விட, ஏனைய நாடுகள், கனடா போன்ற உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழ்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது! இளைஞர்களாகவும், குடும்பம், பிள்ளைகள், பெற்றார் என இணைத்தும், கணவன்-மனைவி என துணையுடனும் வாழ வழிவகுத்து, துணை நிற்காவிட்டாலும், திசை காட்டியாக விளங்கியது பேர்லின் என்பதை வரலாறு என்றென்றும் கூறி நிற்கும்!

1985 முன்பு எல்லை(பேர்லின் மதில்-சுரங்கப் பாதை) அங்கு செல்லமுடியும், அதன் பின்னர் நுழைவு அனுமதி தேவையின்றி பெறமுடியாதென்பதால் தாயகத்திலிருந்து தினமும் கிழக்கு பேர்லின் விமான நிலையம் நோக்கிய தமிழர்கள் நாளொன்றுக்கு ஐந்து முதல் பத்து விமானங்களில் வந்திறங்கினார்கள். ஏரொபிளட் விமான சேவையே அதிக அளவில் கொழும்பு-மோஸ்கோ வழியாக, "இன்டர்புளுக்" (கிழக்கு ஜேர்மன் ,அரசின் விமானம) கிழக்கு ஜேர்மனிக்குள் வரமுடிந்தது. இவ்வாறு மேற்கு பேர்லினுக்குள் வந்தவர்கள், பற்றிய செய்திகள புகைப்படங்கள்,ஊடகங்களின் முதற் பக்க செய்திகளாக விளங்கின. இவ்வாறு வந்தவர்களில், ஆண்களே அதிகம்! அவர்களில் இளவயதினரே பெரும்பான்மையினராவர்! அவர்கள் தங்கிட வசதியின்றி, புகையிரதத்தை அண்டிய பகுதிகளிலும், இரவில் மட்டும் தங்கும் வசதிகொண்ட (சிற்ரி மிசன்) நிலையத்தில் இரவைக் கழித்தார்கள்.

பகலில் அங்குமிங்கும் அலைந்து கொண்டு தெரிந்வர், அறிந்தவர் பற்றி விசாரிக்கவும், இங்குள்ள தமிழருடன் தொடர்கொள்ளவும் முடிந்தது. இவ்வாறு வந்தவர்களில் இருநாற்றைம்பது வரையான தமிழர்கள், பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டார்கள் எனச் செய்திகள் தெரிவித்தன. இந்நேரத்தில், தேவாலயங்களைச் சேர்நதவர்களும், மனிதநேய அமைப்புக்களைச் சார்ந்வர்களும், இங்கு அனாதைகளாக வந்தவர்களுக்கு, உணவு, தங்மிட வசதி வழங்குமாறு கேட்டுக்கொண்டதுடன் ஈழத் தமிழர்கள் பற்றி அறிய முற்பட்டனர். இதனால் கத்தோலிக்க மாணவர் குழவினர் சார்பில் எமது புதிய தமிழர் நலபுரிக் கழகத்தைப் பற்றி அறிந்து, எமது கழக ஆரம்பகால உறுப்பினருடன் சந்தித்து உரையாடிதன் விளைவாக ஊடகச் சந்கிப்பு ஒன்றுக்கு ஏற்பாடாகியது.


(நினைவுத் துளிகள் சொட்டும்)

000000000000000
பிற்குறிப்பு:

தோரணத்தில் புதிய தொடராகப் பதிவுறுகிறது நடந்துவந்த பாதையின் நினைவுச்சுவடு. இலங்கையிலிருந்து ஈழத்தமிழர்கள் பெருமளவில் அகதிகளாகவெளியேறத் தொடங்கியகளின் ஆரம்பத்தில், இலண்டனும் - ஆங்கிலமும்தவிர்ந்த ஏனைய நகரங்கள் - மொழிகள்பற்றி பெரிதும் அறிந்திராத ஈழத்தமிழர்கள் பரவலாக பூமிப் பந்தில் பரவிய குடிப்பரம்பலுக்குஅச்சாணியாகத்திகழ்ந்தது பேர்லின் நகர்தான். அப்போது கிழக்கு - மேற்கு எனப்பிளவுண்டிருந்தஇந்த நகருக்கூடாகத்தான் ஐரோப்பாவின் அகதிகளாகஈழத்தமிழரின்முதற்தலைமுறை தடம் பதித்தது. இந்த ஆரம்பகால நினைவுகளைமீட்டுசொட்டுச் சொட்டாக துளிரிடுகிறார் குணன். நினைவுத் துளிகளாகளாகச்சொட்டும் இத்தொடர் வாசகர்களின் கருத்துகளால் மெருகூட்டப்படுமென ஆவல்கொள்கிறார்.

இதைப் புகலிடப் பதிவாக்கிய தோரணம் 'சுவடுச் சரமாக'த் தொங்கவிடுகிறது. இப்பதிவுவாசகர்களின் நினைவுகளைத் தூண்டி இவ்வாறாக இன்னும் பலபதிவர்கள் பதிவிடமுன்வரும் உந்துதல் கிட்டிடவேண்டுமென்பதே தோரணத்தின்அன்பான எதிர்பார்ப்பு.

கதைச் சரம் - 5 நம்பூதிரி வீட்டுக் கத்தரித் தோடத்தில் புகுந்த மாடு


கதைச் சரம் - 5

செவிவழிக் கதை - 3

நம்பூதிரி வீட்டுக் கத்தரித் தோடத்தில் புகுந்த மாடு

கேரளாவில் நம்பூதிரிகள் உயர் அறிவுடைய மேல்மட்டக் குடியினர். மாலை நேரம், இப்படியான ஒருவரது கத்தரித் தோட்டத்தில் மாடு திடீரென நுழைந்து கத்தரிகளை வேகமாக நாசம் செய்து கொண்டிருந்தது. சாய்வுக் கதிரையில் கண்ணயிர்ந்து கொண்டிருந்த நம்பூதிரியார் திடுக்கிட்டு வழித்து் பார்த்தார். அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மாட்டை விரட்டுவதற்காக உற்றுப் பார்த்தார். அவரது அறிவு கிளர்ந்தெழத் தொடங்கியது......

'மாட்டின் முதுகுத் தண்டில் அடித்தால் முன்னங்கால் செயலிழந்து போகும்!'
'மாட்டின் பின் பக்கத்தில் அடித்தால் பால் சுரப்பி செயலிழந்துவிடும்!'
'மாட்டின் கழுத்தில் அடித்தால் அதன் வாய் செயலிந்து விடும்!'
'தலையில் அடித்தால் மாடே இறந்து போகும்!'.....

என அவரது நரம்படி நுணுக்கப் பார்வையுடன் சிந்தனை ஓடத் தொடங்கியது. செய்வதறியாது திகைத்தப் போனார். இவரது கால தாமதத்தால் மாடு காற்பங்கு தோட்டத்தை நாசமாக்கிவிட்டது.
"பாலு.... டேய் பாலு............ " என வீரிட்ட இவரது வீரிட்ட அழைப்பைக் கேட்ட தோட்க்காரன் பாலு ஓடோடி வந்தான். இவரது பார்வை மாடை நோக்கியிருந்ததைக் கண்ட தோட்டக் காரன் கண நேரம் கூட தாமதிக்காது கையில் கிடைத்த தடியை எடுத்து தாறு மாறாக விளாசியவாறு மாட்டை விரட்டினான். அடியின் கோரம் தாங்காது மாடு கத்தியபடி அவ்விடத்தை விட்டு ஓடிவிட்டது.

"ஏன் ஐயா! முன்னமே என்னைக் கூப்பிடவில்லை? எவ்வளவு செடிகளை நாசம் செய்துவிட்டது இந்த மாடு." செல்லக் கோவத்துடன் நம்பூதியை வினவினான் பாலு.

நம்பூதிரி பாலுவின் செயலில் இலயித்தவராகி..... புன்முறுவலிக்கிறார்!


(இக்கதை நான் சிறுவனாக இருந்தபோது எமது உறவினரான நல்லையா வாத்தியார் சொல்லக் கேட்டது.)

- முகிலன்
பாரீஸ் - யூலை 2009

Saturday 18 July 2009

சுவடுச் சரம் - 1 நினைவுத் துளிகள் (2)




சுவடுச் சரம் - 1

நினைவுத் துளிகள் ( 2)
- குணன்

பேர்லின் நகரை வந்து சேர்ந்தநண்பர்களும் நானும், செஞ்சிலுவைவிடுதியின் வாயிலில் திகைத்து, பேதலித்து கைப்பொதிகளுடன் நின்றவேளையில், உள்ளே இருந்து வெளியே வந்தவர்களில் சிலர், தமிழர்களாகவும்இருந்தார்கள். இது எல்லோருக்கும் நம்பிக்கையைத்தர, அவர்களில்ஒருவர்,“நீங்கள், சிறீலங்காவா, தமிழா,?“ என்று கேட்கவும் எமக்கு ஒருவிதநம்பிக்கை பிறந்தது!

இவ்வாறு உரையாடியவேளை மற்றொருவர் தமிழில் "யார் உங்களைஅனுப்பியது?" என்ற கேள்வியுடன் நுழைந்தார். அவர் வந்தவர்களின் ஊரைக்கேட்டுக்கொண்டே "கூட்டமாக நிற்கவேண்டாம் பொலிஸ் கண்டால்அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள்" என்று கூறினார். ஏற்கனவே, வேறுமுகாங்களில் இருந்தவர்களில் அவரவர்களின் ஊர்களைச் சேர்ந்தவர்கள், பற்றியவிபரங்களை பரிமாறிக்கொண்டு, "கடவுச்சீட்டு, பணம்(டொலர் செக்)" போன்றவற்றை மட்டும் கைகளில் எடுத்துக்கொள்ளும்படி கூறிவிட்டு, பொதிகளை செஞ்சிலுவைச் சங்க விடுதிக்குள் கொணடு; சென்று, பாதுகாப்பாகவைப்பதாக எடுத்துச் சென்றார். கூறியபடி பின்னர் எல்லோரிடமும் அவற்றைச்சேர்த்தார்கள்.

எனது ஊரவர்களாகிய சிறீரங்கநாதன், சரவணபவன், தியாகலிங்கம், துரைராசா, நித்தியானந்தன் ஆகியோருடன் நான் 12.07.1980 அன்று, தங்கிய பேர்லின், கிளைஸ்ட் பார்க் விடுதியில் (4ம் எண் அறையில்) “பேர்லின் முதலிரவு“ நிர்ணயமாயிற்று. நண்பர்களின் நளபாகத்தில், பைக்கட் (வெள்ளை அரிசி) சோறை கோழிக்குழம்புடன் அள்ளி உண்ட அந்த 'முதல் உண்டிக்கு' ஈடாக எதுவும்சுவையாகாது!

நண்பர்கள், மான்குட்டி, பவன் ஆகியோரில் பவனை மட்டும், பத்தாண்டுகளுக்குப்பின்னர் சந்தித்து, அந்த முதல் அனுபவத்தை பகிர்ந்திருக்கிறேன்! அந்தநண்பர்களும், பின்னாட்களில் உறவுகொண்டவர்களும், இங்குவந்துள்ளவர்களுக்காக ஏதாவது ஆற்ற வேண்டி உந்தினார்கள். இதனை தனித்துநிற்காது, இங்கு வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து செயற்படுத்ததூண்டுகோலாக இருந்த பலருள் முத்துலிங்கம், பாலசுப்பிரமணியம் (இதுபற்றிய முழுமையான செய்திகள் அறிய ஈழத் தமிழர் நலன்புரிக் கழக. 25-ம்ஆண்டு மலரை பார்க்க) ஆகியோருடன், இன்று பேர்லின்வாசிகளாகியதமிழன்பர்கள் செல்வராசா, சத்தியநேசன், கணேசன், பரமலிங்கம், உட்படபேர்லினை விட்டுச்சென்றவர்கள் பலரும் அடங்குவர்.

தமிழருக்கு(புலம்பெயர்ந்திருப்பவர்கள், புதிதாக வருபவர்கள், போதிய சான்றுகள்அல்லது தாம் இங்கு ஏன் வந்தோம் என்ற காரணங்களைக் கூறத்தவறியவர்கள், பிழையான தகவல் கூறிய காரணத்தால் திருப்பி நாடு கடத்தப்படசிறைக்காவலில் வைக்கப்பட்டவர்கள் போன்றோருக்கு பல்வேறு அமைப்புக்கள்மூலம் உதவி புரியவும் வேண்டி முதன் முதலாக, பேர்லின் வாழ் தமிழருக்கானநலன்புரிக் கழகமாகிய, “ஈழத்தமிழர் நலன்புரிக் கழகம்" என்ற பெயருடன், பொஸ்டமர் வீதி 147 இலக்க விடுதியின், 304 ம் இலக்க அறையில், ஐம்பதுபுலம்பெயர் தமிழர் கூடிய அங்குரார்ப்பணக் கூட்டம் தற்காலிகத் தலைவர்தலைமையில் புதியதான புலம்பெயர் தமிழர் அமைப்பு உருவாக்கப்பட்டது, இதன்வரலாறு, ஆண்டுகள் இருபத்தைந்தைத் தாண்டடியுள்ளது. இது புலம்பெயர்தமிழர் வரலாற்றில் பேசப்படும் ஒன்றென்பதை தமிழர்கள் புலம்பெயர்வாழ்வில்மறந்தாலும், நிச்சயம் பேர்லின் பல்கலைக்கழக ஆவணக்காப்பகம் நூற்றாண்டுதாண்டியும் பேசும்!
000000000000


கடந்த அரை நூற்றாண்டுக் காலப் பரப்பை எண்ணிப் பார்க்கையில், ஈழத்தமிழர்களுக்கு சமூக,பொருளாதாரம், கல்வி, பண்பாடு என அனைத்திலும்புலப்பெயர்வையும், பிறந்த நாட்டின் நிலையையும் வேறு வேறு தொனிகளில்பேசப்படுவதைக் காணலாம். இன்றும், நாளையும் .இனிவருங்காலங்களிலும்ஒன்றில் ஒன்றை இணைத்துப் பிணைத்தோ, அல்லது ஒன்றை ஒன்று தாங்கிச்செல்லும் வாய்ப்பும் வசதிகள் இருந்தும் வழி காட்ட முடியுமா? என்பதற்குஇப்போது பதில் கூறமுடியாது!

இரண்டாம் தலைமுறையைத் தாண்டி, வளரப்போகும் மற்றொரு தலைமுறைஒன்றின் நிலை எவ்வாறு திசை திரும்பும் என்பதை புலம்பெயர் சமூகம்புரிந்துகொள்ளவே செய்யும்! அப்படியாயின், அதற்குத் தனது ஆணிவேரைப்பேணி, அடையாளங்காட்டவும், அதனைக்கொண்டு தனது, அடுத்து, தொடரும்புதிய தலைமுறை புரிந்துகொண்டு, முன்னோர் தந்து சென்ற அருஞ்செல்வங்கள்அனைத்தும் காத்துப் பேணும் கடமை தெரிந்து, பிறப்புரிமைகளை காத்துப் பேண, வரலாற்றுத் தேரை விழிப்புணர்வெனும் வடம்பிடித்து இழுக்குமா? இன்றேல்யாவையும் கைநழுவ விட்டு, அடையாளமற்று, வாழ்விடம் - உறவு - உரிமைஎதுவும் தெரியாது ஐரோப்பிய நாடுகளில் ஒதுக்கி வைக்கப்பட்ட சிந்தி, ரோமாபோலாகுமா?

மாறாது காப்பாற்ற நாமும் நம்மை அமைப்பாக்கி செயற்பட வேண்டும் என்றஎண்ணத்தை வண்ணமாக்கி முனைப்போடு எழுந்திடற் செய்தலே முதற்படியாகவேண்டும். 'அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு' என்ற முதுமொழிக் கருத்தில்ஈர்க்கப்ட்டவர்களாகி செயலுருப் பெறல் வேண்டும்.

மண்ணை மறக்குமா மனம், அதனை துறந்திட முடியுமா, முயலுமா தினம்!
தாயை-தாய் நாட்டை, தாய் மொழியை பேணிக் காக்க வேண்டியது, ஒவ்வொருமனிதனின் தவிர்க்கமுடியாத கடமையாகும்! இன்றேல் உலகில் உயிர் வாழ்க்கைபொருளற்றதாகி விழுந்து விடும்!

சீனமக்கள் இயற்கையோடியைந்து, ஐயாயிரம் ஆண்டு தொடர் வரலாற்றையும், வைத்திய முறைகளையும், உணவு முறைகளையும் இன்றும் பேணிப் போற்றிவருபவர்கள்! அவர்களின் மேற்கூறிய மூன்று பற்றுக்களையும் விட்டுக்கொடுக்கமுன்வந்ததில்லை! மனித உடலின் மண்ணீரல் என்ற உள்ளுறுப்பின் முதன்மைச்செயற்பாடு உண்ணும் உணவிலிருந்து, பிராண வாயுவைப் பிரித்து, நுரையீரலுக்கு செலுத்தி, உயிரார் வாழ, ஏனைய உறுப்பைக் காப்பாற்றுகின்றஇயற்கையின் மிகப்பெரிய விந்தைச் செயலாகும்! அதே போன்று, தாய்-தாய்மொழி, தாய்மண்(பிறந்தமண்) என வரும்போது, உலகில் வாழும்ஒவ்வொரு மனிதனுக்கும், இந்த ஒப்பற்ற உயிர் போன்ற உறவை ஊட்டுவதும், “மண்ணீரல்“ என்பதால்தான் இப்பெயரிடப்பட்டதென்று சீன மருத்துவம்கூறுகிறது போலும்!

வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து வாழ்கின்றவர்கள், தமது தாய் நாட்டில், யாவும் வழமையெய்தியதும், திரும்பவேண்டியவர்கள் அல்லது நாடு கடத்தும்வாய்ப்புள்ளவர்கள். இவ்வாறு புலப்பெயர்வில் வாழ்கின்றவர்களில் கொடியகுற்றம் புரிந்தவர்கள் நாடுகடத்தப்பட்டிருப்பதைப் பலரும் அறிவார்கள். தொடக்ககாலத்தில் அகதி நிலை தேடி அனுமதியின்றி(விசா இன்றி) நாட்டிற்குள்சட்டவிரோதமாக நுழைந்ததால், வந்த பாதைவழியே திருப்பி அனுப்பப்பட்டும்உள்ளனர். இவர்கள் இரண்டாவது முறையும் நுழைந்தால் கைது செய்து காவலில்வைப்பதும் விசாரணையின் பின்னர், அனுமதிப்பதா? அல்லது நாடுகடத்துவதா? என்பது முடிவாகி அப்போதே நடைபெற்றது. எண்பது முதல் எண்பத்தைந்து ஆடிவரை ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் ஈழத்தமிழர்கள் குறிப்பாகஇளைஞர்கள், மாணவர்கள், குடும்பத் தலைவர்கள் எனப் பல வயதினரும்பேர்லின் வந்தடைந்தனர். கிழக்கு-மேற்கு பேர்லின் இருவேறு அரசியல்கோட்பாடுகளைக் கொண்டதும் மிகுந்த,“கொதிநிலை“யில், பொதுவுடமை-முதலாளித்துவ முரண்பாடுகளின் மோதுகளமாகி, மூன்றாவது உலக யுத்தத்தின், “திறவுவாயிலாகுமோ என உலகின் இரண்டாவது உலக யுத்தத்தின்இறுதிக்களமாகத் திகழ்ந்த பேர்லின், மீண்டும் ஒரு இரணகளமாகிவிடலாம் என்றஅச்சம் 1989 -ம் ஆண்டுவரை இருந்தது.

குரபோர்ட்ஸ்ஸோவ் -கேல்மட் கோல் முயற்சியால், இரத்தம் சிந்தாப் புரட்சிமூலம், 44 வருடங்களுக்ப் பின்னர், பிரிந்து-பிரித்து வைத்து அவதியுற்றஜேர்மனியர்கள் குறுக்கே நின்ற கல் மதிலை, தூள்,தூளாக்கி கைகோத்தும் - கட்டியணைத்தும் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கித் திளைத்தார்கள் செர்மானியர்கள்! நம் கண்முன்னால் நிகழ்ந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கதான கணத்தில்சுவரின் முன்னால் நாமும் இருந்தோம் என்பதை நினைக்கவே புளங்காகிதமாகஇருக்கிறது.

(நினைவுத் துளிகள் சொட்டும்)


0000000

பிற்குறிப்பு:

தோரணத்தில் புதிய தொடராகப் பதிவுறுகிறது நடந்துவந்த பாதையின் நினைவுச்சுவடு. இலங்கையிலிருந்து ஈழத்தமிழர்கள் பெருமளவில் அகதிகளாகவெளியேறத் தொடங்கிய 80களின் ஆரம்பத்தில், இலண்டனும் - ஆங்கிலமும்தவிர்ந்த ஏனைய நகரங்கள் - மொழிகள் பற்றி பெரிதும் அறிந்திராத ஈழத்தமிழர்கள் பரவலாக பூமிப் பந்தில் பரவிய குடிப்பரம்பலுக்கு அச்சாணியாகத்திகழ்ந்தது பேர்லின் நகர்தான். அப்போது கிழக்கு - மேற்கு எனப் பிளவுண்டிருந்தஇந்த நகருக்கூடாகத்தான் ஐரோப்பாவின் அகதிகளாக ஈழத்தமிழரின்முதற்தலைமுறை தடம் பதித்தது. இந்த ஆரம்பகால நினைவுகளை மீட்டுசொட்டுச் சொட்டாக துளிரிடுகிறார் குணன். நினைவுத் துளிகளாகளாகச்சொட்டும் இத் தொடர் வாசகர்களின் கருத்துகளால் மெருகூட்டப்படுமென ஆவல்கொள்கிறார்.

இதைப் புகலிடப் பதிவாக்கிய தோரணம் 'சுவடுச் சரமாக'த் தொங்கவிடுகிறது. இப்பதிவு வாசகர்களின் நினைவுகளைத் தூண்டி இவ்வாறாக இன்னும் பலபதிவர்கள் பதிவிட முன்வரும் உந்துதல் கிட்டிடவேண்டுமென்பதே தோரணத்தின்அன்பான எதிர்பார்ப்பு.


0000000000

Friday 17 July 2009

சரம் - 12 விண்ணாதி விண்ணர்களாக நாம்!!

சரம் - 12 விண்ணாதி விண்ணகர்ளாக நாம்!!
1. சுயபெருமை?


சந்திப்பிடங்களில், நம்மவர் கண்களால் அளவெடுத்து, பகுத்து தகுதிகள் தெரிந்துமெல்லமாகக் கலந்துரையாடல் தொடங்குவது வழமை. இந்தத் தகுதிப்பிரிப்புபுதிய புலம் பெயர் கலாச்சார அளவீடுடாகியுள்ளது. சொந்த வீடுடையவர்கள், வாடகை வீட்டில் இருப்பவர்கள், விசா இல்லாதிருப்பவர்கள் என முதல்கட்டத்திலும், சொந்த வீடுடையவர்களில் - தனியான வீடுடையவர்கள், தொடர்மாடிக் கட்டிட வீடுடையவர்கள் எனவாகவும், வாடகை வீடுடையவர்களில் - தனியார் வீடுகளில் இருப்போர், அரசாங்க வீடுகளில் இருப்போர் எனவாகவும், விசா இல்லாதிருப்போரைத் தனியாகவும் வேறுபிரிக்கும் பாவம்வந்துவிட்டுள்ளது. இதில் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுடையவர்கள் எல்லோருக்கும்மேலாகவும் இருப்பர். சொத்து இல்லாதவர்களை யாரும் சட்டைசெய்யமாட்டார்கள்.

வட்டமாகக் கூடிநின்றவர்களுடன் நானும் கலந்து கொள்கிறேன். எதிர்காலத்தலைமுறையினர் தொடர்பாக உரையாடல் இருந்தது.

" என்னுடைய இரண்டு பிள்ளைகளையும் நன்றாகப் படிப்பித்துப் போட்டன், அந்தமாதிரிக் கெட்டிக்காரங்கள். முதலாவதவன் கனேடியன் கம்பனியில வேலையாகிஇலண்டனில் இருக்கிறான். இரண்டாவது பெட்டடை இந்த முறை பட்டமெடுத்துவெளியேறுகிறாள் இவளுக்கும் இலண்டனில்தான் கல்யாணம்செய்யவுள்ளோம்."

" இங்க நம்ம புள்ளைகள் கலக்குறாங்கள். படிப்பில பேய்க் கெட்டிக்காரங்கள்! " என்கிறார் இன்னொருவர்.

" மொழி தெரியாதிருந்தும் நம்மவர்கள் நன்றாகப் பிள்ளைகளைவளர்திருக்கிறார்கள். ஆனால் இந்த அடைகளைப்(அரபு நாட்டவர்கள்) பாருங்கள்.... எக்கச் சக்கமாகப் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டு வாழத்தெரியாமல் இருக்கிறார்கள்...."

" இங்க பாருங்க, எங்களை யூதருடன் மட்டும்தான் ஒப்பிட முடியும்......!"

" தமிழர்கள் என்றா சும்மாவா? யூதர்களிலும் பார்க்க எத்தைனையோ மடங்குவிண்ணர்கள் தெரியுமா? " என்கிறார் உணர்ச்சி மேலிட்டவராககேட்டுக்கொண்டிந்தவர்.

என் எண்ணக்குளத்தில் அடுத்தடுத்து விழும் கருத்துக் கற்களால் விரியும்அலையில் மெளனமாகி உறைந்துப் போகிறேன்.

அந்தக் காலத்தில் நம் செவிவழியாக நேரே உச்சியிலேற்றப்பட்ட வாசகங்கள்மீளவும் நினைவலையில்....
'மோட்டுச் சிங்களவன்...முழு முட்டாள்கள்! அக்க்க....கா!! (சிரிப்பு)'
'வயிற்று வலியை நம்பினாலும் வடக்கத்தானை நம்பக் கூடாது! சரியோ...?'
'இந்தத் தொப்பி பிரட்டிகள் எப்போதும் இப்படித்தான்!.....'
'கிராமத்தான் கவனம்! இவன்கள் காட்டான்கள்... மொக்குத்தனமாக ஏதாவதுசெய்துவிடுவான்கள். ஆட்களை அறிந்து பழகிக் கொள்ள வேண்டும் தம்பி!'

அந்தக் காலத்தில் பல்கலைக் களகத்தில் நுழைந்தபோது, பல்கலைஆற்றல்களுடன் விளங்கிய இந்த மொக்கன்களும், காட்டான்களும், மோடன்களும், தொப்பிகளும், வயிற்றுவலியிலும் மேலானவர்களும்..... இலாடமிடப்பட்டவர்களாக வளர்க்கப்பட்ட நம்மவர்களும் சங்கமித்த காட்சி......!

சிரிப்பதா? அழுவதா?
சுயம் இருந்தால்தானே சுயபெருமை இருக்கும்.

முப்பது வருடங்கள் கடக்கும் புலம்பெயர் வாழ்வில் நம்மவர் மனப்புலப் பெயர்வுமலர்வுக்கான உழவு நடந்ததா?


- அநாமிகன்
பாரீஸ் யூலை 2009

00000000000

2. சாதிகள் இல்லையடி பாப்பா....!
... (பாரதியின் எண்ணம்) நூற்றாண்டு கழிந்து, கண்டங்கள் தாண்டிய நிலையில்!

அடுத்த தலைமுறையின் வீச்சைக் காணுவதும் வியப்புறுவதுமானபுலம்பெயர்வின் மூன்றாவது தசாப்பத்தில் ஒருநாள்.
இலட்சம் ஈரோக்கள் என்று சொல்வதைத்தாண்டி அரை மில்லியன் ஈரோக்களெனசரளமாக உச்சரிக்கும் மாளிகைகள் நம் அடுத்த தலைமுறையினரால் குடிபுகலத்தொடங்கிவிட்டன. இப்படியாக குடிபுகல் நிகழ்ந்த புதிய வீடு நண்பர்களாலும்உறவுகளாலும் களைகட்டியிருந்தது.

இளைஞர்களாக இருந்த இளம் தம்பதியினருக்கு உறவினரின் வருகையும்அவர்களின் விழி பிதுங்கல்களும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. வாழ்த்தவந்தவர்கள் அவர்களையும் மீறியதாகக் கொட்டிய பொறாமை உணர்வால்கொஞ்சம் தள்ளாடிப்போனார்கள். கூட்டுக் குடும்பமாக இருந்தபோது தெரியாதவிடையங்கள் இப்ப தெரியத் தொடங்கிவிட்டிருந்தன. அதுதானே நீத்துப்பூசணியின் மகிமை, நாவூறு படாதிருக்க கட்டப்படும் பொம்மை, வீட்டு வளவின்வாசலில் வைரவர் சூலம் வைக்க வேண்டிய மக்கியத்துவம் எனப் பலவற்றினைஅறி ஆவல்கொண்டதானது பெற்றோரைக்(இரண்டு பெற்றோரையும்) கிளர்ச்சியூட்டியது. கல்யாணம் கட்டி மூன்றாவது பிள்ளை பெறும்போதும் வராதபொறுப்புணர்ச்சி வீடு வாங்கய போதுதான் வந்துள்ளதை எண்ணி அகமகிழ்ந்துஓடி ஆடி ஒத்தாசைகள் புரிந்தனர்.

புதிய வீட்டின் முற்றக் காற்றைச் சுவாசித்தபடி உறவினர்கள் கதைத்துக்கொண்டிருந்தனர்.
இளந்தம்பதினரின் மூத்த மகன் துடிதாட்டமானவன். தகப்பனாகிய இளைஞன்செய்யும் யோகாசனப் பயிற்சிகளையும் சிலம்பு சுற்றலையும் கை்ககுழந்தையாக இருந்தபோதே பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ இச்சிறுவயதிலேயே சிலம்பு சுற்றப் பழகியிருந்தான். பெரியவர்கள் இருந்து கதைத்துக்கொண்டிருந்த முற்றதில் கம்புடன் வந்த இந்தப் பொடியன் கம்பைச் சுற்றத்தொடங்கினான். இவனது தன்னார்வச் செயற்பாடு அனைவரையும் கதைகளைநிற்பாட்டிக் கவர்ந்தது.

வந்தவரில் ஒருவருக்கு இது புதியதாக இருந்திருக்க வேண்டும். "எப்படி இவன்இதைக் கற்றுக் கொண்டான்?" வார்த்தைகளிலேயே ஆச்சரியத்தின் ஓசைநயமிருந்தது.

"யாருமே பழக்கவில்லை. தானாகத்தான் பழகிச் செய்கிறான்" மகிழ்வுடன் இளம்தந்தை.

"அதெப்படி சொல்லிக் கொடுக்காது பழகுவதற்கு..... சிறுபிள்ளைகளிடத்தில்கவனமாக இருக்கவேண்டும்... அதுவும் தடி தண்டுகள் என்றால் அதீத கவனம்தேவை" முன்னவரின் வார்த்தைகளில் அக்கறை கொட்டியது.

"அது பாருங்கோ எனக்கு சிலம்பு சுற்றவிருப்பம். இதை முறைப்படி கற்றனான். நான் சிலம்பு சுற்றுவதைப் பார்த்து இவனும் சுற்றத் தொடங்கிவிட்டான்" என்றார்சிரித்துக் கொண்டு அந்தத் தந்தை.
சிலம்பின் பெருமை பற்றியும் அதனால் ஏற்படும் ஆராக்கியம் பற்றியும் கொஞ்சம்விளக்கினார் இந்த ஈடுபாட்டில் வாழும் இளம் தந்தை.

"ஓம் தம்பி, நானும் ஊரல கேள்விப்பட்டிருந்தனான்தான். இந்தச் சிலம்புபழகியிருந்தால் நல்ல தற்காப்பாகத்தான் இருக்கும். அங்க நம்ம ஊரில சாதிகுறைந்தவர்கள் செய்வதை நான் பார்த்திருக்கிறேன்!"

'ஆ ஆ!!...' மனதுக்குள் முனகியவாறு சிலம்பாட்டத்தில் ஆர்வத்துடன் இருந்தஇந்த அடுத்த தலைமுறை இளைஞன் துவண்டுதான் போனான்.
காவல் வைரவரை எந்த இடத்தில் வைப்பதென்ற ஆய்வில் இறங்கினர்மூத்தவர்கள்.

- அமலா
(செர்மனி - யூலை 2009)

Thursday 16 July 2009

செய்திச் சரம் - 3 சுரதா யாழ்வாணனுக்கு தமிழ்க் கணிமை விருதும் - பாராட்டும்!


செய்திச் சரம் 3

சுரதா யாழ்வாணனுக்கு தமிழ்க் கணிமை விருதும் - பாராட்டும்!

காலச்சுவடு அறக்கட்டளையுடன் இணைந்து வழங்கப்படும் தமிழ்க்கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது 2009ஆம் ஆண்டில் திரு. சுரதாயாழ்வாணன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சுரதா யாழ்வாணன் தமிழ் கணினித்துறைக்குப் பங்களித்து வருபவர்களுள் முக்கியமான ஒருவராவார். யாழ்ப்பாணத்தில் 1961இல் பிறந்த சுரதா, 1984 முதல் ஜெர்மனியில் வசித்துவருகிறார். இளமைக் கல்வியை யாழிலும் பின்னர் புலம்பெயர்ந்து ஜெர்மனியில்தகவல் தொழில்நுட்ப மின்னணுவியல் (Information electronics) துறையில்மேற்படிப்பு பெற்றுத் தற்பொழுது அத்துறையில் பணிபுரிந்து வருகிறார்.

தமிழில் தட்டச்சுசெய்ய விரும்புவோர் வசதிக்காகப் பல்வேறு வகையானநிரல்களை சுரதா எழுதியுள்ளார். இவரின் தினமணி, தினத்தந்தி, விகடன், TSC, TAB, மயிலை, பாமினி, அமுதம் தினகரன் போன்ற பல்வேறு வகையானஎழுத்துருக்களை ஒருங்குறிக்கு (UNICODE) மாற்றும் பொங்குதமிழ் குறியீட்டுமாற்றி ஒருங்குறியில் தகவல் பறிமாற மிகவும் பயனுள்ள ஒன்றாகும். தமிழ்தட்டச்சு தெரியாத ஆங்கில ஒலியியல் (Romanized) முறையில் தமிழ் எழுதவிரும்புவோர் தமிழைக் கணினியில் பாவிப்பதிலிருக்கும் தயக்கத்தை இதுபெரிதும் குறைக்கிறது. சுரதா புதுவை தமிழ் எழுதி யுனிகோட் குறிமுறையில்கணினியில் தமிழில் எழுத உதவும் மென்பொருள் செயலி ஆகும். அஞ்சல், பாமினி, அமுதம் உள்ளிட்ட பல தட்டச்சு முறைகளின் மூலம் இதில் எழுதலாம். ஜாவாஸ்க்ரிப்ட் மொழி கொண்டு எழுதப்பட்ட இச்செயலியை இலவசமாகஇணையத்தில் இருந்தவாறும் தரவிறக்கியும் பயன்படுத்தலாம். தமக்குப்பரிச்சயமான உள்ளீட்டு முறையைப் பயன்படுத்தி யுனிகோடில் எழுத உதவும்இந்த நிரலி தமிழில் யுனிகோட் புழக்கத்தைப் பரவலாக்கப் பேருதவியாகஇருந்தது.

இவை தவிர யுனிகோடில் இல்லாத பழைய தமிழ் மீயுரை (hypertext) பக்கங்களைஉலகத் தரமான யுனிகோடிற்கு மாற்ற உதவும் மென்கலன், தமிழிலேயேஉள்ளிட்டு தேடக்கூடிய யாழ்தேவி போன்ற பல பயனுள்ள பங்களிப்புகளையும்சுரதா தந்திருக்கிறார். சமீபத்தில் பார்வையில்லாதவர்களும் தமிழில்கணினியைப் பயன்படுத்த உதவும் தமிழ் படிப்பி (Text to speech) நிரலியையும் சுரதாவடிவாக்கி வருகிறார்.

தகவல்: http://www.kalachuvadu.com/issue-114/page79a.asp

சுரதாவின் இணையம்: http://www.suratha.com

கணினிக்கான செயலிகள் பெற : http://www.jaffnalibrary.de/tools/

பொங்கு தமிழ் - எழுத்துருமாற்றி : http://www.suratha.com/reader.htm

வாழும்போதே பாராட்டுவதும் கெளரவிப்பதும் செய்யப்படவேண்டும் என்பதில்சிரத்தையுடையது 'தோரணம்'. புதிய தொழில்நுட்ப யுகத்தில், இன்று நான்காம்தமிழாக தமிழ் கணனி வலைப் பின்னல்களூடாக அழகாகப் பவனி வருகிறது. எமக்குத் தெரிந்த மன்னராட்சி முதல் இன்று தனக்கான தனித்துவமானஅரசாட்சியில் இல்லாத நிலையிலும் தமிழ் கோலோச்சுவதற்கு தன்னலமற்றதமிழார்வலர்களின் அளப்பெரிய பங்களிப்பே காரமாணகும். இதற்கு வரலாறுநெடுகிலும் பல்வேறு சான்றுகளுண்டு. மற்றெல்லா மொழிகளும் அரசுகளின்அரவணைப்பால் வளமூட்டப்படும் போது தமிழ் அரசுகளால் 'தமிழால் முடியுமா? எனவாகக் கேலியுடன் புறக்கணிக்கப்பட்ட நிலையிலும்' தமிழ் வாழ்ந்துகொண்டிருக்கிறது. ஆயிரமாயிரமாண்டுகள் தாண்டியும் வாழும் மொழியாகஇன்று புவியிலுள்ள மொழிகளில் தமிழும் ஒன்று. இதைக் கடற்கோள் எனதமிழில் அழைக்கப்பட்ட சுனாமியாலும் அழிக்க முடியவில்லை. வரலாற்றில்ஆக்கிரமிப்புகள் செய்த காலனித்துவச் சுனாமிகளாலும் அழிக்க முடியவில்லை.

உலகமொழிகளின் தரத்திற்கு இணையாக நிமிர்ந்து செல்கிறதென்றால் அதுஅன்று தொட்டு இன்று வரை தமிழால் முடியும் என்ற முனைப்புடன்அர்ப்பணிப்புகளை வழங்கிய தமிழார்வலர்களின் தொண்டுகளால்தான எனஉறுதிபட கூறமுடியும். அடுத்த யுகத்திற்கான தமிழ் பயணத்தைஇலகுவாக்கியுள்ளார் சுரதா. தன்னலமற்ற தமிழ்த் தொண்டாற்றியவர்கள்வரிசையில் மதிப்புக்குரிய சுரதா யாழ்வாணனும் இடம்பெறுகிறார் என்பதுமிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.

சுரதா யாழ்வாணனின் அளப்பெரிய பங்காற்றியிருப்பதற்கான அங்கீகாரமாககாலச்சுவடால் வழங்கப்பட்ட இந்த விருதை நோக்கலாம். தமிழ்நாட்டு இந்தியஎல்லைகள் தாண்டியநிலையில் சுரதாவிற்கு இப்படியொரு விருதுகிடைத்திருப்பதானது தமிழ்ப் பேசும் உலகினருக்குக் கிடைத்த கெளரவமாகும்.

புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளனைத்தையும் பணமாக்கிக் குவிக்கும்மைக்ரோ சொவ்ற் - உலகமயமாக்கல் சூழலில், தமிழின் எதிர்கால இருப்பிற்கானபயணத்தில்(நான்காம் தமிழ் - கணனி இணையத்தமிழ்) உரமிட்ட சுரதாவின்தன்னலமற்ற பங்களிப்பு மகத்தானது மதிக்கப்படவேண்டியது.


புதிய கணனி இணைய தொழில்நுட்ப உலகின் தமிழ்ப் பயணத்துக்கான அகண்டசாலை அமைத்து இதில் பயணமாவோரின் மகிழ்வில் சங்மித்துள்ள சுரதாவே நீவாழ்க! நீவிர் வாழ்க! வாழ்க!! என மனமார வாழ்த்துகிறோம்.

அன்றைய அதியமான் இன்றிருப்பானாகில் இந்தச் சுரதா யாழ்வாணனுக்கேநெல்லிக்கனி வழங்கப்பட்டிருக்கும்!


-யூலை 2009 பாரீஸ்