Wednesday 31 July 2013

'சிவ.. சிவா...!! நான் இயேசுவை மறப்பேனா?

குஞ்சரம் 11

'சிவ.. சிவா...!! நான் இயேசுவை மறப்பேனா?

அண்மையில் பாரீசில் நடந்த உறவினரின் மரணச் செய்தி கேட்டு கலங்கியவர்களாக அவரது வெற்றுடலைப் பார்க்கச் சென்றிருந்தோம். புலம்பெயர்ந்து நான்காவது தசாப்த காலத்திலும் மரணத் தகவல் கிடைத்ததும் கூடி ஆறுதல்கள் தெரிவிக்கும் மக்களாகவே நம்மவர்களது வாழ்வு நீடிக்கிறது.
நீடிக்கும் இந்தப் புலம்பெயர்வு வாழ்வு குடும்ப உறவுக் குழாத்துக்குள் ஆங்காங்கே செங்குத்தாகக் குத்தி நிறுத்திய ‘புத்தம் புது மதக் கோட்பாடு’களால் சமூகவலைத் தளம் பொத்தல்களாகி உறுத்துகின்றது. பல சமயங்களில் சங்கடங்களைத் தருவிக்கும்  இதனைச் சகித்துக்கொண்டு முனகிவாறு பொது சனம் கடந்து செல்கிறது.

இந்தப் புதியதான மதங்களின் குருவானவர்களாக அரிதாரத்துடன் பவனிவரும் 'பிரசங்கிகள்' படுத்தும்பாடு தனியாகவே ஆராயப்படவேண்டியவை. 'புது விளக்குமாறு நன்றாக் கூட்டும்' முதுமொழிக்கு ஒப்பானதாக இவர்களது செயல்கள் அவர்களின் உறவு - நட்பு நிகழ்வுச் சடங்குளில் பெருக்கிப் பளீரிட்டு பிரகாசிக்கும்.

இரு வருடங்களின் முன் இலண்டனில் நடந்த எனது பெறா மகனின் திருமணத்திற்குச் சென்றிருந்தபோது அங்கே வருகைதந்தோரின் முன்னிலையில் கையைத்தூக்கி வைத்து ஆட்டிவைத்தார் ஒரு பிரச்சாரகர். குடும்பத் திருமணத்திற்குப் போன எமக்கு சுவிஸிலிருந்து வந்திருந்த பெண்ணின் மாமனாகிய பிரச்சாரகர் ஒரு மணி நேரத்துக்கு மேலாக தனக்கு 'ஒளி கிடைத்தான அதிசயத்தை' எடுத்துரைத்து, தயாராகத் தனது கைப்பையிலிருந்து மதப் பிரசுரத்தையே எடுத்து தந்ததைக் கண்டு அரண்டுதான் போனோம். 


சென்ற வருடத்தில் பாரீசில் நண்பனின் 50வது அகவை நிகழ்வுக்குப் போயிருந்தபோது ஒரு பிரச்சாரகர் ‘டிரில் மாஸ்டராகி’ அங்கே வருகை தந்திருந்த மனித உயிரிகளை ஆட்டிப் படைத்தார் ! என்னை அங்கு அழைத்த அந்த நண்பர் அதிக முற்போக்குக் கருத்துகளை முன்மொழிபவராக இருப்பதுதான் நகைமுரண். இந்தப் பிரச்சாரர்களுக்கு 'இடம் பொருள் ஏவல்' என்பது பற்றியதான அறிவு மறந்தே போய்விட்டது போலும்! எங்கும் எதிலும் எப்போதுமே « ஒளி பெற்றவர்களாகிப் பிரகாசிக்க முனைவதையே » எவ்வித சங்கோசமும் கொள்ளாது தொடர்கிறார்கள். பிரான்சு போன்றதான மனித உரிமையை மதிக்கும் நாடுகளில் மற்றவர்களின் நிம்மதியை குலைக்கும் இவர்களின் அடாவடித்தனம் கவனம் கொள்ளப்பட வேண்டியதொன்றுதான். புலம்பெயர் பொது மகன் பயந்தவாறே குடும்பச் சடங்குகளுக்குப் போவதாகவே இன்றைய புலம்பெயர்வு வாழ்வு சந்தி சிரிக்க நிற்கிறது. 


இப்படித்தான் எனது உறவினரின் வெற்றுடலைப் பார்க்கத் தயக்கத்துடனதான் போனோம். இவர்களது நெருங்கிய உறவினர் இப்படியானதொரு புது மதப்பிரச்சாரக அண்டை நாடொன்றில் நீணடகாலமாகவே செயற்படுகிறார். ‘பாரீசில் பெண்களையும், கால நிலையையும் அறுதியிட்டு மதிப்பிட முடியாது அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும்’ என்பார்கள். இதனுடன் நீடிக்கும் புலம்பெயர் வாழ்வில் நம்மவர்கள் பின் தொடரும் மத ஈடுபாட்டையும் இணைத்துவிடலாம். இப்போதெல்லாம் யார் யார் எந்த மத ஈடுபாடுகளுடன் இருக்கிறார்கள் என்று சொல்லவே முடியாது.

தனியார் மரணநிகழ்வு நிறுவனத்தின் 'பிணக் காட்சி அறையில்' மௌனமாக இறுக்கமான மனத்துடன் நுழைகிறோம். தேவாரம் மெல்லிய கணீரென்ற குரலில் பாடப்பட்டுக் கொண்டிருந்ததானது எமது காதையெட்ட படியேறிவந்த என் துணைவிக்கு 'அப்பாடா..!' என்றிருந்திருக்க வேண்டும். என்னைத் திரும்பிப் பார்த்துக்கொண்டார். உறவினர்கள் அழுகையுடன் அணைத்து வரவேற்றனர். சிலர் அழுகையை அடக்கியவாறு மௌனித்து நின்றனர். உள் அறையில் கட்டிலில் அவர் மீளாத் துயிலில் கிடந்தார். பிள்ளைகள் கதறியவாறு அருகில் நின்றனர். எனது துணைவியும் குசலம் விசாரித்தவாறு உள் அறைக்குள் நுழையவும் திருவாசகம் பாடலாக ஒலிக்கத் தொடங்கவும் சரியாக இருந்தது. நான் சிறிது நேரம் மௌனித்தேன். யாருடனும் கதைக்க நான் விரும்பவில்லை. சிறிது நேரம் நின்று விட்டு எனது முகத்தைத் திருப்பி முகங்களைப் பார்வையிடத் தொடங்கினேன். 


ஆச்சரியமோ..... ஆச்சரியம்.... திகைத்தேவிட்டேன். எனக்கு நேரெதிரில் அமர்ந்திருந்த அந்த மதப் பிரச்சாரகர் கலங்கியவாறு மெய்மறந்த நிலையில் மௌனித்து உறைந்திருந்தார். ‘தமிழ் தெரிந்திருந்து திருவாசகம் கேட்டு உருகாதார் உண்டா?’ எனவாக சிறுவயதில் எமக்குப் பாடம் நடத்திய தியாகராசா மாஸ்டர் சொல்லிப் பாடிக்காட்டியதுதான் நினைவோடையில் வந்திறங்கியது.

சும்மாவா சொன்னார்கள் 'தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும்' என்று?’

பேசாது அடுத்த அறையிலிருந்த இருக்கையில் தனியனாக வந்த அமர்கிறேன். ஆங்காங்கே சிலர் குழுக்களாக அளவளாவிக் கொண்டிருந்தனர். எனது மனம் அசைபோடத் தொங்கியது. எனது அப்பாவுடன் ஆசிரியராக இருந்த நடராசா மாஸ்டரின் கதைதான் நினைவிலிருந்து வந்துவிழுந்தது. 
0000

இலங்கையில் பிரித்தானிய கொலணி ஆட்சிக்காலம். அந்தக் காலங்களில் ஆசிரியர்களாக வருபவர்கள் முறைசார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் கற்றுத் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். யாழ்நகரில் எனது அப்பா பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பட்டம்பெற்றிருந்தவர். நடராசா மாஸ்டர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றவர்.

அந்தக் காலத்தில் இந்த கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி கொலணிய கிறீஸ்தவ மதபீடத்தினரால் நடாத்தப்பட்டது. இங்கு அனுமதி கிடைக்க வேண்டுமாயின் கிறீஸ்தவர்களாக இருக்க வேண்டும் அல்லது கிறீஸ்தவர்களாகி மதம் மாறியிருக்க வேண்டும்.

நமது நடராசா மாஸ்டரும் கல்விக்காக மதம் மாறியிருந்து அனுமதி பெற்றிருந்தார். ஆனாலும் பழக்க தோசம் அவரை விடுவதாக இல்லை. யாருக்கும் தெரியாதவாறு தனது அறையிலிருக்கும் தனக்கேயான அலுமாரியினுள் மறைத்து வைத்துள்ள 'சிவன்' படத்தைப் பார்த்து அவ்வப்போது உருகி வணங்கிக்; கொள்வதை வழக்கமாக் கொண்டிருந்தார்.

கால ஓட்டத்தில் இதனை ஒரு சக ஆசிரியப் பெருமகன் கண்டுவிட்டார். ‘தமிழர்களுக்கேயான கோள்மூட்டிக் குணம் சும்மா இருக்குமா? உடனடியாகவே நேரே சென்று தலைமைப் பாதிரியாரிடம் வத்தி வைக்கப்பட்டது. பிறகென்ன..... வழக்கமான விசாரணைக்கு ஆசிரியர் அழைக்கப்பட்டார். கல்வி பாதியிலே நிறுத்தப்படப் போவதை எண்ணிக் கலங்கித்தான் போனார் நடராசா மாஸ்டர். 


இதை எழுதும் போதே உங்களுக்கே தெரியும்..... 'தமிழ்படத்தின் பிளாஸ் பாக் காட்சியாக' விரியும் விபரணத்தில், அவர் பட்டம் பெற்றுவிட்டதும் ஆசிரியராகப் பணி புரிவதென்பதும்!! மோசமாக ஏதும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றால் என்னதான் நடந்தது?

தலைமைக் குருவானவர் அறைக்குள் மிகவும் கலங்கிய நிலையில் நுழைகிறார் நடராசா.

'வாருங்கள் மிஸ்டர் நடராசா... வணக்கம்!! உட்காருங்கள்!!"

'வணக்கம் ஃபாதர்... பரவாயில்லை நான் நிற்கிறேன்!"

"சரி! நேராகவே விடயத்திற்கு வாறேன்.... என்னத்துக்காக நீர் இங்கு என் முன்னால் நிற்கிறீர் எனத் தெரியும்தானே!" மிடுக்கான குரலில்.

'ஆம்... ஃபாதர் ஆனால் நான் அப்படியாக ஏதுமே செய்பவனில்லை... இங்கு முறைப்படியாக அனைத்து செபக் கூட்டங்களிலும் முறையாகக் கலந்து கொள்ளுபவன் ஃபாதர்!!"

'கிறீஸ்தவராக மதம்மாறியிருக்கும் நீர்.... இனிமேல் பிசாசுகளை எல்லாம் வைத்திருக்கலாமா?"

'அப்படியாக... ஏதுமே என்னிடம் இல்லையே ஃபாதர்!" ஆச்சரிய பாவத்துடன்.

'பொய் சொல்லக் கூடாது... மிஸ்டர் நடராசா! நாங்கள் முறையாக விசாரிக்கத்தான் உம்மை இங்கு அழைத்திருக்கிறோம். இந்தக் குற்றச்சாட்டு வந்தபின் உமது நடவடிக்கைகளைக் கண்காணித்தே வருகிறோம். குற்றம் நிரூபணமானால் உடனடியாகவே இங்கிருந்து விரட்டப்படுவீர் தெரியும்தானே!!" குரலில் கடுமை தகித்தது.

ஆசிரியர் நடுங்கிவிட்டார். பாதிரியார் தொடர்ந்தார், 'கிறீஸ்தவராக மாறியபின் சபலப்படக் கூடாது! பரிசுத்த வேதாகாமத்தைத் தவிர பிற மத நூல்களைத் தொடவே கூடாது. தேவையற்றதைக் காதில் விழுத்தவே கூடாது.... எல்லாச் செபங்களிலும் கலந்து கொள்ள வேண்டும்! எனக்கு டிசுப்பிளீன் மிகவும் முக்கியம் மிஸ்டர்!" கடுமையான தொனியில்.

'என்ன ஃபாதர் என்னென்னவொ எல்லாம் சொல்கின்றீர்கள்.... அப்படியாக ஏதுமே நான் செய்யவில்லை. செய்யவும் மாட்டேன்!" மன்றாட்டமாக தன்னிலையை மறந்தவராகிவிட்டார்.

'சும்மா என்னிடம் முறைப்பாடு வந்திருக்காதே?" ஃபாதர் கண் முறைக்கத் தொடங்கியது.

'ஐயையோ....! சிவ.... சிவா....  நான் இயேசுவை மறப்பேனா.... ஃபாதர்!!' கன்னத்தில் இருகைகளாலும் போட்டவாறு கதறியேவிட்டார் நடராசா மாஸ்டர்.


0000

இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட காலமாக இவ்வேளை இருந்ததால் தப்பிப் பிழைத்து நடராசா மாஸ்டர் என்ற பெயருடனேயே இன்றும் ஆசிரியராக இருக்கிறார் என அப்பாவும் இக்கதைக்கு தமிழ்ப்படத்தின் இறுதிக் காட்சியாக ‘சுபம்’ போட்டார்.


« போகும் திசை மறந்து போச்சு -இங்கே
பொய்யே வேதமுன்னு ஆச்சு…. »
எனும் வைரமுத்துவின் கவிதை வரிகளை இசைஉயிரூட்டிக் காற்றில் மிதக்கவிட்டவர் எங்கள் இளையராசா. இவ்வாறாக  காற்றில் மிதந்து வந்து எமது மண்டைக்குள் சென்றடைந்த கவிதைகள் எம் நினைவழியா மனவெளியில் பதிந்து கிடக்கின்றன.
இசையோடு இப்பாடலை நினைவுகூர்ந்து எங்கள் இசைராசாவுக்கு நன்றிகளையும் தெரிவிக்கிறேன்!


-முகிலன்
பாரீசு 31.07.2013

Tuesday 30 July 2013

மகாஜனாக் கல்லூரியும் நானும்

சுவடகம்

நினைவில் மலரும் அந்த நாட்கள்

மகாஜனாக் கல்லூரியும் நானும்

'உனை நீ அறி'


’70 களின் ஆரம்பத்தில் எனது பதின்ம வயதின் தொடக்க நிலையில் கல்விக்காக எனக்குக் கிடைத்த இடமாற்றம். வகுப்பறை தாண்டியதான புத்தம்புதிய சூழல் தொடர்பு அறிவுக் கண்ணைத் திறந்துவிட்டிருந்தது. எனது வீட்டையும் எனது கிராமத்தையும் தாண்டியதாக தொலைவில் புதியதான இயற்கைச் சூழலில் அமைந்த தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி நுழைவுதான் இதனைத் தொடக்கி வைத்தது. 40 ஆண்டுகளுக்கு முன்னதான அடிமனப் பதிவை வார்த்தைகளால் கோர்த்திருக்கிறேன்.

இந்த ஆக்கம் பிரான்சு பழையமாணவர் சங்கம் வெளியிட்ட நூற்றாண்டு மலருக்காகவே எழுதப்பட்டது. இதற்காக வெளியூரிலிருந்து இக்கல்லூரியில் படிக்க வந்த ஒரு மாணவனின் நினைவு மீட்சியாகப் பதிவிட்டிருக்கிறேன்.


70களின் ஆரம்பத்தில்; நான் மகாஜனாக் கல்லூரியில் ஒன்பதாம் வகுப்பு மாணவனாக உள்நுழையும் முன்னரே இக்கல்லூரி தொடர்பாக அறிந்திருந்தேன். எனது அண்ணா தனது பதினொராவது வயதில் 6-ம் வகுப்பில் இணைந்து ஐந்தாண்டுகளாக இங்குள்ள விடுதியில் தங்கிப்படிப்பவராக இருந்தார். அந்தக்காலத்தில், இவர் கலங்கியவாறு எமது வீட்டைவிட்டுப் புறப்படுவதும், விடுதியின் இரும்புக் கம்பிக் கதவுகளுக்குள் கதறி அழுதவாறு பிரியாவிடை கொடுப்பதையும் என் சிறுவயது முதல் அப்பாவுக்கு பக்கத்திலிருந்து பார்த்துத் திணறியிருக்கிறேன். அப்போது எனது அப்பாவின் முகத்தில் எந்தத் துயரும் தெரிந்ததில்லை. நான் அறிந்து கரம்பனில் இருந்து மகாஜனாவுக்கு கல்வி கற்க வந்த முதல் மாணவன் எனது அண்ணாவாகத்தான் இருக்கும்.

காலத்தின் ஓட்டத்தில் அண்ணாவும் தெல்லிப்பழை மகாஜனாவுடன்; இயைந்து சங்கமமாகியதானது எனது நுழைவுக்கு வழி கோலியது. எனது கிராமமான கரம்பனில் அமைந்த சண்முகநாத மகா வித்தியாலயத்தில் 8-ம் வகுப்பு வரை துடிப்பான மாணவனாக இருந்த எனக்கு ஏற்பட்ட இந்த இடமாற்றம் திடுமென வேறொரு தளத்தில் வேறாரு உலக சஞ்சாரமாகியதை எப்படி மறக்க முடியும் ? பதின்ம வயதுப் பிராயம் ஒவ்வொருவர் வாழ்விலும் சுவாரசியங்களைக் காவிச் செல்வதாகவே இருந்திருக்கும். குடும்பத்தில் குழந்தையாகப் பிறந்து, அன்பின் அரவணைப்பால் குடும்ப உறவினனாகி இருந்தாலும் வீட்டின் வெளியே கிராமத்தில் கிடைக்கும் நட்பும், முதன்முதல் நுழையும் ஆரம்பப்பாடசாலையில் கிடைக்கும் நட்புதான் எமக்கெல்லோருக்கும் சமூகம் தொடர்பான முதல் தொடுகையைத் தருகிறது. சாதாரணமாக நிகழும் இத்தகைய தொடுகைகளும் அதன் நீட்சியில் கிளம்பும் மனப் பரிவலைகளும் உருவகிக்கும் மனமண்டலத்தில்தான் மானிடம் பிறக்கிறது, சமூகப் பிரக்ஞைக்கான அத்திவாரம் இடப்படுகிறது.

ஒருகாலகட்டத்தின் நினைவுகளைப் பதிவாக்கும்போது அக்காலகட்த்தில் நம் மனவெளியில் நிகழ்ந்த பண்பியல் மாற்றங்களையும் தாக்கங்களையும் கூறல் சிறந்ததாக இருக்கும். பரிசோதனைக்கூடத்தில் பௌதிகம், இரசாயனம் நிறுவிப்படித்ததுபோல் இல்லாமல் மனித மனவெளியில் அவரவரால் உய்த்து உணரும் நிலைசார்ந்தது மனோவியல். விலங்குகளில் இருந்து மனிதரைப் பிரிக்கும் 'மனோவியல்" எனக்குறிப்பிடப்படும் இத்துறையை நாம் கற்ற பாடசாலையில் ஒரு பாடமாக அப்போது கற்கவில்லைதான். ஆனாலும் சுயநினைவுகளுடன் வாழ்வு என்ற பாத்திரத்தில் இந்தப் பூமியில் நடமாடும் வரையில் கற்றும், கற்றுக்கொண்டும், கற்றுணர்ந்து எதிர்கொள்ளலுடனும் படித்துக்கொண்டே இருப்பதை யாரால்தான் மறுக்க முடியும்.

60களின் கடைசியில் எனது விடலைப் பருவம். காலை எழுந்ததும் வீட்டில் வானொலி இயங்கத் தொடங்கிவிடும். பொங்கும் பூம்புனல் கேட்டதும் பாடசாலை செல்லலும் நாளாந்த வழமை. வானொலியில் சில வசதிகளுண்டு. அருகில் இருந்துதான் கேட்க வேண்டுமென்பதில்லை. அதைக் கேட்டுக் கொண்டே செய்யவேண்டிய பணிகளையும் தொடரலாம். இதனால் பெற்றோர் இதைத் தவறாக அப்போது சொன்னதில்லை. காலில் செருப்புப் போடாமலேயே பள்ளிக்குப் போகும் கிராமத்து மாணவன்;. அப்போது இப்படியாக இருந்த எமக்கான உலகத் தொடர்பை செவி வழியாகத் தந்ததில் வானொலி முக்கியமானதாக இருந்தது. அதுவும் இலங்கை வானொலி முக்கிய பங்காற்றியது. கிரிகட் விளையாட்டை விபரண வர்ணனையாகக் கேட்டு இரசித்தவர்கள் எங்களில் எத்தனையோ பேர். இவ்வேளையில் சந்திர மண்டலத்திற்குப் போன ஆம்ஸ்ரோங்கின் செயலை வர்ணித்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை யாராலும் மறக்கமுடியாது. மறைந்த அறிஞர் அண்ணாவுக்காக நடந்த ஊர்வலத்தை செய்தி வர்ணனையாக அப்போதே கேட்டு இலயித்தவர்களில் நானும் ஒருவன். விளையாட்டாக வர்ணனையைக் கேட்டுக் கொண்டிருந்த எமக்கு விஞ்ஞாகத்தின் உயர்வையும், தமிழ் மொழி சார்ந்த உணர்வையும் குக்கிராமங்களிலும் கொண்டு வந்து சேர்த்தன.

இலங்கையின் வடக்கே கிடக்கும் தீவுக்கூட்டங்களில் ஒன்றின் ஓரமாக அமைந்தது கரம்பன் கிராமம். முறுக்கேறிய பனை வளவுகளுடன் கரிசல் மண்ணைக்கொண்ட இக்கிராமத்தில் ஆறுமாத காலம் மட்டும்தான் விவசாயம் செய்யமுடியும். வானை நம்பிய கிணற்று நீரை நாடியிருக்கும் மண்ணில் தேங்கிக் கிடக்கும் நீர் வற்றி வருடத்தில் மூன்று மாதங்களாவது உயிர்வாழ்வுக்காக நீர் தேடிப் பயணிக்கும் வாழ்வைக் கொண்டது எமது வாழ்வு. தெல்லிப்பழை இதற்கு நேர் எதிரான கிராமம். மிகவும் ஆழமான கிணறுகளைக் கொண்டதும் கிணற்றுக்குள்ளேயே தண்ணீர் இறைக்கும் இயந்திரங்களைக் கொண்டு வருடம் முழுவதும் விவசாயம் செய்யும் செம்மண்ணைக் கொண்ட கிராமம். தண்டுகளெங்கும் காய்த்துக் குலுங்கும் பலா மரங்களின் அழகை இங்குதான் நான் முதன் முதலில் கண்டேன். அழகான வெற்றிலைத் தோடங்களையும், கீரை வயல்களையும், காய்கறித் தோடங்களையும் காணுற்ற பசுமை இன்றும் நினைவோடைப் படங்களாகி மூளையின் நினைவுத் திரையில் அழகாகப் பளீரிடுகின்றன. எனது கிராமத்தில் பிரதான பணப் பயிராக புகையிலையும், மிளகாயும், வெங்காயமும் முதன்மை வகித்தன. சிறு தோடங்களாகத்தான் மரக்கறி மற்றும் வாழை எங்கும் பயிரிடப்பட்டிருக்கும். அந்தக் காலத்தில் என் வீட்டைச் சுற்றியிருந்த வயல்களில் மாரி கால நெற்பயிற்செய்கை இருந்தது. பின்னர் இது இல்லாது போய்விட்டிருந்தது.

சுற்றி வர விவசாயத் தோட்டங்களின் மத்தியில் பெரும் சுவர்களுக்குள் செவ்வகக் கட்டிடத் தொகுதியையுடைய பிரமாண்டமான மகாஜனாக் கல்லூரிக்குள் அங்குமிங்கும் பார்த்து கிலேசித்தவாறே நுழைந்த முதல் நாளை இலகுவில் மறக்கமுடியாது. அண்ணா கூடவே இருந்தது சற்று தெம்பைத் தந்திருந்தது. கட்டிடத் தொகுதியின் நடுவே அழகான புற்தரை மைதானம். நடுவில் கிறிக்கற் ஆடு களம். அங்கே கட்டிடத் தொகுதியின் நடுவில் ஒரு திறந்தவெளி அரங்கம். மைதான மூலையில் ஒரு கோவில். முன் முகப்பு கட்டடித்தின் மேல் மாடியில் அழகானதொரு உள்ளரங்கம். இதற்கு நேர் எதிர்ப் பக்கத்தில் மைதானத்தைத்தாண்டி சிறிய நுழைவாசலுடனான மாணவர் விடுதி. இந்த விடுதிக்குப் பக்கதிலான வகுப்பறையொன்றில்தான் எனக்கான இடம் கிடைத்திருந்தது.

முதலாம் ஆண்டு எனக்கு விடுதியில் தங்கியிருக்க அனுமதி கிடைக்காததால் எனது தந்தையின் நண்பர் வீட்டில் இருந்து தினமும் வந்து போகும் மாணவனாகினேன். இந்த வீடு; பண்டைத்தரிப்பு நகரில் அமைந்த வடலியடைப்பு என்றதொரு கிராமத்தில் இருந்தது. இக்கிராமத்திலிருந்து நாள்தோறும் காராளி என்பவரின் காரில் பள்ளிப் பாடப் பொதியுடன் மதிய உணவையும் சுமந்தவாறு பயணிப்பவர்களில் நானுமொருவனாக இருந்தேன். இது எனக்கானதொரு புத்தம் புதிய அனுபவமாக இருந்தது. நாளாந்தம் பண்டத் தரிப்பு செல்லும் பிரதான வீதியில் குறித்த நேரத்தில் காராளியின் காருக்காகக் காத்திருக்க வேண்டும் அதேபோல் மாலையில் மகாஜனாவின் முகப்புக்கு முன்னால் இருக்கும் பிரசித்தி பெற்ற தேனீர்க் கடைக்குப் பக்கத்தில் காராளியின் காரை இனங்கண்டு ஏறிக் கொள்ள வேண்டும். இதெல்லாம் எனக்கு முன்னர் எப்போதுமே அறிந்தே இராத புத்தம் புது அனுபவங்களாக இருந்தன.

அப்பாவின் நண்பர் கொழும்பில் பணியாற்றிக் கொண்டிருந்தார். விடுமுறைக்கு மட்டுமே வீட்டிற்கு வருவார். அப்போதெல்லாம் தொலைபேசி வசதிகள் இருந்ததில்லை. ஆனாலும் அவர் வரும் நேரம் அறிந்து சுன்னாகம் புகையிரத நிலையத்திற்கு கார் பிடித்து செல்லும் வீட்டாரோடு நானும் செல்வேன். இங்குதான் முதன் முதலில் அசையும் புகையிரதத்தையும் தண்டவாளமெனப்படும் இரும்புப் பாதையையும் காணுற்றேன். சிறுபிராயத்தில் நான் அப்பா-அம்மாவோடு பதுளையில் வாழ்ந்திருந்தாலும் எனது சுய அறிவுக்கெட்டிய பதிவாக புகையிரதம் அமைந்தது இங்கேதான். எனது குடும்பத்திற்கு வெளியில் இன்னொருவர் வீட்டில் நானும் ஒருத்தனாகி வாழ முடிந்ததை இங்குதான் பெற்றேன். அவர்களை அப்பா அம்மா எனவாகவே அழைத்தேன். அவர்களுக்கு இரண்டு பெண்பிள்ளைகள். இருவரும் பெரியவர்கள். பெரியக்கா சிவாஜி பிரியை, சின்னக்கா எம்ஜிஆர் பிரியை இதனால் அடிக்கடி இவர்களுக்குள் சண்டைவரும். எனக்கு ஒன்றுமாக விளங்காது. சில சமயங்களில் கோவித்துக் கொண்டு சாப்பிடாமலும் இருப்பார்கள். இச்சமயங்களில் அவர்களின் அம்மாவோடு நானும் சமாதானம் செய்யப்போவேன். இதிலிருந்து நான் யார் பக்கம் என்ற பிரச்சனை தொடங்கிவிட்டது. எனக்கு சிவாஜியும் தெரியாது எம்ஜி ஆரும் தெரியாது. கரம்பனுக்கான நகரான ஊர்காவற்றுறையில் ஒரே ஒரு தியேட்டர்தான் இருந்தது. அங்கே பழைய படங்கள்தான் ஓடும். இதில் நான் பார்த்தது புராண இதிகாசக் கதைப்படங்கள் மட்டும்தான். இங்கே பண்டத்தரிப்பில் விடுமுறை நாட்களில் கார் பிடித்து யாழ்ப்பாணம் போய் படம் பார்க்கும் வழக்கத்தை இந்தக் குடும்பத்தினர் கொண்டிருந்ததால் அவர்களுடன் நானும் ஒருவனானேன். மாதம் ஒரு தடவை அல்லது இரு தடவை எனவாகப் பார்க்கும் திரைக் காட்சிகள் எனது மூளைக்குள்ளும் சலனத்தை உண்டாக்கியது. இதனால் வீட்டில் நடக்கும் தமிழ்த்திரை இரசிகர் வாக்குவாதத்தில் நீண்ட நாட்களுக்கு என்னால் நடுநிலை வகிக்க முடியவில்லை. எதையும் அறியாதவனாக இருந்த நான் சிவாஜி ரசிகனாகத் தொடங்கியதை இப்போது நினைக்கையிலும் முகத்தில் புன்முறுவல் பூக்கிறது.

நான் மகாஜனாவில் படித்தபோதுதான் வைரவிழா பிரமாண்டமாக நடைபெற்றது. இன்று நூற்றாண்டுவிழா ஆக நாற்பதாண்டுகள் ஓடிக் கரைந்தே விட்டிருக்கின்றன. நினைக்கவே ஆச்சரியமாக இருக்கிறது. இந்த விழாவில் நடந்த கண்காட்சி அரங்கத்தில் எனது அண்ணாவும் தனது தொழில்நுட்பத்திலான காட்சியையும் வைத்திருந்தான். இது கல்லூரியின் பிரதான நுழைவாசலுக்கு அருகாமையில் இடது பக்கமாக இருந்த முதல் கட்டிடத் தொகுதியில் இருந்தது. தண்ணீரில் செல்லும் சிறிய மோட்டார் படகுகளை அவன் இயக்கச் செய்திருந்தான். இப்படியானதொரு கண்காட்சியை இதன் முன் நான் எங்குமே பார்த்திருக்கவில்லை. அப்போதைய அதிபர் ஜெயரெத்தினம். கண்டிப்பிற்குப் பெயர் பெற்றவர். அந்தக் காலகட்டத்தில் அதிபர்களின் ஆளுமையை வைத்தே கல்லூரிகள் பெரிதும் மதிக்கப்பட்டன. சிறந்த அதிபர்களைக் கண்டால் மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் ஒரு வித பயம்கலந்த மரியாதையை வழங்குவதை நம்மில் பலரும் நேரிலேயே பார்த்திருக்கிறோம். எமது பெற்றோரில் அனேகமானவர்கள் நல்லொழுக்கத்திற்கே முன்னுரியை வழங்கினார்கள். மாணவர் பிராயத்தில் நல்ல கட்டுப்பாடான பாடசாலைகளில் படித்தால் நல்லொழுக்கம் தானாகவே வருமென பெரிதும் நம்பினார்கள். இதனால்தான் யாழ் குடாவிலுள்ள பிரபல்யமான பாடசாலைகளுக்கு தொலை தூரத்திலிருந்தும் மாணவர்கள் வந்திருந்தனர்.

எனது கிராமப் பள்ளியில் நீளம் பாய்தல், உயரம் பாய்தல், ஓட்டம் இவற்றிலெல்லாம் பரிசுகள் பெற்றிருந்தவனாயினும் கல்லூரியின் நுழைவு பெரிது-சிறிது வெளிப்படுத்தும் இருகோடு தத்துவத்தைக் காட்டியது. பென்னாம்பெரிய விளையாட்டாளர்களைக் கண்டு மலைத்துப்போனேன். தடியூண்டிப் பாய்தல், ஹாக்கி, சிவப்பு நிறத் தோற்பந்திலான கிறிக்கற், பூப்பந்து போன்ற புதியதான விளையாட்டுகள் பற்றி அறியத் தொடங்கியதும் இங்குதான். காற்பந்து விளையாட்டுக்காகக் குழுவாகச் செல்வதும், வெற்றியிடைந்தால் மேளதாள வரவேற்புடன் வீரர்களை அழைத்துவருவதும், சிறப்புப் பரிசாக வெற்றிக் கேடயங்களை பெற்றால் அடுத்தநாள் விடுமுறையை அதிபர் அறிவிப்பதையும் காணுற்று கிறங்கிப்போனவர்களில் நானும் ஒருவன். இதில் கதாநாயக விளையாட்டு வீரராக அப்போது 'முயல்' இருந்தார். காங்கேசன்துறை-யாழ் பிரதான வீதியில் அமைந்த தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கும் இந்த மகாஜகாக் கல்லூரிக்கும் எப்போதுமே எட்டாப் பொருத்தம். இதற்கிடையில் விளையாட்டுப் போட்டிகள் வந்துவிட்டால் ஊரே பிளந்துபோகும். ஆர்ப்பாட்டங்களுக்குப் பஞ்சமே இராது. அறியாப்பருவத்தில் எப்பேர்ப்பட்ட காட்சிகளையெல்லாம் பார்த்துக் கொண்டு கடந்து வந்திருக்கிறோம்.

அடுத்தவருடம், எனது அண்ணா தொழில்நுட்பப் பயிற்சி மேற்படிப்பு கிடைத்து கொழும்பு செல்ல நான் விடுதிக்குள் நுழைந்து உள்ளக மாணவனாகிறேன். சைவ உணவைக் கொண்ட புத்தம் புதியதான விடுதிவாழ்வு. காலை 5.40ற்கு எழுந்தால் இரவு 10.30 மணி வரையிலும் நிர்ணயிக்கப்பட்ட சீரான ஒழுங்கு வாழ்க்கை. மாறுதலே இல்லாத வாராந்த உணவு முறை (உதாரணமாக புதன் காலையில் புக்கை என்றிருந்தால் ஆண்டு முழுவதும் புதன் காலையில் புக்கைதான் உணவு), பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்ல முடியாத கடும் கட்டுப்பாடு, பகலில் படிக்கும் வகுப்பறைகளிலேயே இரவிலும் மீட்டலுக்காக யாருடனும் கதைக்கக்கூட முடியாத இருப்பு, ஒவ்வொருவருக்கும் தனியான அடையாள இலக்கமிட்டு அதையே அடையாளமாக்கி இனம்காணும் புதிய பொறிமுறை (எனக்கான கட்டில், கோப்பை, தட்டு, வாளி என தனியான எண் குறியீடாக இருக்கும்), நொறுக்குத் தீனி உண்ண முடியாத வெறுமை என்பன எங்களைக் கைதி போலவும் நாளாந்த மாணவர்களை சுதந்திரமானவர்கள் போலவும் இனங்காட்டியது. ஆனால் இந்த இருப்பு புதிய அறிமுகத் தொடுகைகள் கிடைக்கவும் ஒரு குழாமாக இணையவும் வழிகோலியது. தீவுக்கூட்டம் முதல், கிழக்கு மாகாணம், மலையகம் வரையில்; பலபிரதேசங்களில் இருந்து வந்துள்ள சக மாணவர்களின் அறிமுகத்தாலும் கூடி வாழ்தலாலும் பேச்சு வழக்கு முறைகளிலிருந்து - உணவுப் பழக்கம் வரையிலான பன்முக அறிதல்கள் பெற்றவராயினோம். மாணவர்களைப் பார்க்கவரும் உறவினர்கள் ஏதாவது தின்பண்டங்களை கொண்டே வருவார்கள்.  இவை பகிர்ந்துண்ணும் இயல்பான பண்பை எமக்குள் ஏற்படுத்தியிருந்தது. இதனால் எமக்கிடையில் ஒருங்கிணைப்பைத் தந்து மகிழ்வூட்டியது.

இந்தக் காலகட்டத்தில்தான் சேகுவரா சிங்கள இளைஞர் எழுச்சி இலங்கையில் நடைபெற்றிருந்தது. சிங்களமென்றால் என்ன என்று தெரியாதிருந்த பிராயத்தில் இளைஞர்களது எழுச்சி மலைப்பூட்டியது. பலரும் ஆங்காகே குசுகுசுத்த வண்ணமே இருந்தனர். விடுதியில் நிறையவே கதைக்கப்பட்டன. ஆனால் எம்மால் எங்குமே செல்ல முடியாதிருந்தது. இங்கு தான் டாக்டர் கோபூர் பற்றிய அறிதலும் வித்தைகளும் கடவுள் பக்தியும் தொடர்பான தொடக்க அறிமுகமும் கிடைத்தது. இந்த விடுதிக்குள் எத்தனையோ விவாதங்களைக் கேட்டிருப்போம். எத்தனையோ மேடையில்லா நிகழ்த்துகளையும் பார்த்திருப்போம். இதில் ஒன்று நம்மில் பலர் விழுந்து விழுந்து சிரித்துப் பார்த்த 'மங்கோலியாவிலிருந்து வருகை தந்திருந்த சிறப்பு அதிதியின் உரையை மொழிபெயர்த்து வழங்கிய நிகழ்வு" இன்றும் என் கண் முன்னால் இருக்கிறது. இந்த மொழி பெயர்ப்புக் கலையை வி.பொன்னம்பலம் வாயிலாக மேடைகளில் கேட்டு வளர்ந்த தலைமுறை எங்களுடையது. இதுமட்டுமல்லாது தந்தை செல்வா மகாஜனா திறந்தவெளி அரங்கில் வாயசைத்து ஆற்றிய செய்கை உரையை அமிர்தலிங்கம் உரத்துச் சொல்லியதை வாயைப் பிளந்தவாறு கேட்டிருக்கிறோம். அதைக்கூட அமிர்தலிங்கம் மொழி பெயர்த்துக் கூறியதாகவே கதைத்துக்கொள்ளுவோம்.

அப்போதைய விடுதிப் பொறுப்பாளராக இருந்தவர் பெரிய அல்சேசன் நாயை பிள்ளை போல் வளர்த்து வந்தார். இந்த அல்சேசன் நாயை முதன் முதலில் அதிசயமாக இங்குதான் நான் பார்த்தேன். இவருக்குப் பிள்ளை இல்லாததால்தான் இப்படியாகச் செல்லமாக வளர்க்கிறாரென சக மாணவர்கள் சொல்வார்கள். பின்னொரு நாளில், இந்த நாய் அவரைக் கடித்ததால் அவர் இறந்த செய்தி கேட்டு அரண்டு போனேன்.

வகுப்பில் கிராமத்திலிருந்து வந்து படிக்கும் அப்பிராணியாக நான் இருப்பதை எனது சக மாணவனொருவன் எப்படியோ தெரிந்துகொண்டிருக்கிறான். அவன் கட்டுன் கிராமத்தவன். அழகான துடிப்பானவன் கொஞம் குள்ளத் தோற்றமுடையவன். நகைச்சுவையாகப் பேசுவான். பல்வேறு புதினங்களைச் சொல்வான். ஆசிரியரிடம் புத்தகம் வாங்கியதற்காக கொடுப்பதற்கு 7 ரூபாய் வைத்திருந்தேன். "இக்காசை வெள்ளியன்றுதானே கொடுக்கவேண்டும், என்னிடம் தா இதை நான் வெள்ளியன்று திருப்பித் தந்துவிடுவேன்" என்று அவன் கேட்க நானும் கொடுத்துவிட்டேன். வெள்ளின்று நான் காசைக் கேட்டபோது, "மச்சான் இப்ப என்னட்ட இல்லை கொஞ்சம் பொறு தந்துடுவன்." என்று சொல்லிக் கொண்டு ஏதோ யோசித்தவனாக "உன்னிட்ட இருக்கிற 3 ரூபாயையும் தந்தா கணக்கு 10 ரூபாயாக மட்டமாக இருக்கும் நானும் மறக்காமல் தந்துவிடுவேன்" என்றான். நானும் கொடுதே விட்டேன். அதன் பின் எத்தனையோ வெள்ளிகள் தாண்டியும் அந்தக் காசு எனக்குக் கிடைக்கவே இல்லை. பின்னொரு நாளில் யோசித்துப் பார்க்கையில் சிரிப்பாக இருக்கிறது. ஒப்பீட்டளவில் 'வாழ்வியல் சமயோசிதம்" வேறுபட்டிருந்த வளர்ப்பு முறைகளிலேயே நாமிருந்ததை உணர முடிந்தது. பட்டறிவுகளால் கிடைக்கும் பெறுமதி மிக்க அனுபவங்களைப் பெறுவதற்கு நாம் வீட்டிற்கு- கிராமத்திற்கு- நாட்டிற்கு வெளியில் நடமாடியே ஆகவேண்டும்.

இந்த மகாஜனாவுக்கான எனது பிரயாணம் வலிகாமத்தில் நிறைய ஊர்களையும், ஊராரையும் அறிமுகம் செய்தது. கிணற்றுத்தவளையாக இருந்தவன் குளத்துத் தவளையாகி இன்னும் பென்னாம்பெரிய நீர்நிலைகளை அறியும் உலகப் பார்வையை பார்க்கத் திறந்துவிட்டது. பின்னாளில் தொடரப்பட்ட எனது முறைசார் கல்வி வாழ்வில் நட்பின் முக்கியத்தவத்தையும், இதனோடான பிரயாணங்களின் அவசியத்தையும் எவ்வித சங்கோசமில்லாமலும் பிரயோகிக்க வழிகோலியது. இன்று தேசம் கடந்து கண்டம் கடந்த நிலையில், 40 ஆண்டுகள் போனாலும் புதிய உத்வேகத்துடன் தொடரப்படும் பண்பாகவும் அமைந்துவிட்டது.

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு. (திருக்குறள் 784)
(நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று, நண்பர் நெறிக்கடந்து செல்லும் போது முற்ப்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.)

மனித வாழ்வில் நமக்கென நாமே தெரிவாக்கி நாமே அனுபவித்து, மகிழ்ந்து- பரவசமாகி, நொந்து- துவண்டு...... இன்ன பிறவாக பல்வேறு உணர்ச்சி வலைக்குள் மூழ்கி எழும் அனுவத்தைத் தருவது இந்த 'நட்பு" என்ற மூன்றே எழுத்தில் அடக்கப்பட்ட கடுகுச் சொல். வார்த்தைகளை அளந்துபேசிய, நாவடக்கத்தை வலியுறுத்திய, பயனில்லாதவற்றைத் தவிர்க்கப் பணித்த வள்ளுவர், தனது 133 அதிகாரங்களுடைய குறட் கோவையில் 5 அதிகாரங்களை "நட்பு" இற்காக ஒதுக்கியிருக்கிறார். திருக்குறளில் வேறொரு தலைப்புக்கும் இந்தளவுக்கு அதிக பதிவு முக்கியத்துவம் தராத திருவள்ளுவரின் கவனங்கொள்ளல் இதனது செயற்திறனை நன்குணர்த்தும்.

இளைஞராவதற்கு முன்னரான பதின்ம வயதானது வகுப்பறை தாண்டியதான பாடங்களையும் அறியும் தேடல்களையும் புரிதல்களையும் கொண்டது. ஒரு மனிதனது சுயம் கட்டமைக்கப்படும் முக்கியமானதொரு காலகட்டம். இத்தகைய பிராயத்தில் எமக்கான ஆளுமையை அல்லது எதிர்கால வாழ்வின் இருப்புக்கானப் பாதைகள் தெரிவாவதோ அல்லது கிடைக்கவோ செய்கின்றன. அதுமட்டுமல்லாது இப்பிராயத்தின் நினைவுகள் ஆழ்மனப் பதிவாகிவிடுகின்றன.
இறுக்கமான குடும்பச்சூழல் வேலியைத் தாண்டியதாக அவரவர்களது சுயவிருப்புகளுடன் கிடைக்கும் புதியதான வாழ்வின் நீட்சியில் இனிக்கும் நினைவுகளாக மீள்பாக்கமடையும் நினைவலைகள் இவ்வகையினர்களுடனான தொடர் சந்திப்புகளில் குவியமாகிறது. தன்னியல்பாக இக்குவிய மையங்கள் சமூக அசைவியக்கத்தில் செயலாற்றும் தார்மீக வகிபாகத்தை எடுக்க முனையும்போது அவை இதில் பங்கேற்பவர்களது தனி விருப்ப அடையாளமாகிறது.
இந்த யாதார்த்த வெளிப்பாட்டு நிலையில்தான் புலம் பெயர்ந்த சூழலிலும் செயற்படும் பழைய மாணவர் சங்கங்களையும், ஊர்ச்சங்கங்களையும் விளங்கிக் கொள்ள முடியும். அதாவது இன்று இருக்கும் 'நான்" யார்? எப்படியாக இந்நிலைக்கு முகிழ்ந்தேன்? என்ற கேள்விகள் அவரவர் சுயத்திற்கான, இருத்தலுக்கான விடைகளைக் கொண்டிருக்கும். இப்படியாக ஒருத்துவமாகும் விடைகளைக் கொண்டோர் பொதுமைப்பட்டு 'நாங்கள்"(நான்+கள் - நாங்கள்) ஆக ஒன்றிணைந்து சமூக அசைவியக்கத்தில் பணியாற்ற விளையும்போது இந்த "நாங்கள்" என்பது இவர்களது தனி அடையாளமாகிறது. செம்மண்ணின் செறிவைப் பிரதிபலிக்கும் கடுமையான பிறவுண் நிறத்திலான 'மகாஜனன்' இவ்வகை அடையாளத்தில் ஒன்றுதான்.
- க. முகுந்தன்
நன்றி : 'மண்ணிறம்' நூற்றாண்டு விழா சிறப்பிதழ்
பிரான்சு பழையமாணவர் சங்கம் 14.11.2010


பின்குறிப்பு :

‘70கள் இலங்கைத் தமிழர்களின் கல்வி - அரசியல் - பொருளாதாரத் தளத்தில் மாபெரும் குலுக்கலை ஏற்படுத்திய காலகட்டம். இக் காலத்தில்தான் இலங்கையின் வடபகுதி இளைய பருவத்தினராக நாம் வளர்ந்து கொண்டிருந்தோம். கல்வி வழிப் பொருளாதார மேம்பாட்டிற்காக ஊக்குவிக்கப்பட்ட சமூகமாக இருந்த போக்கில் திடீர் பண்பு மாற்றமாக ‘வெளிக்கிடடி விசுவமடு’ ஆகிய கமம் செய்வதை இலக்காக்கும் வன்னியில் படித்த வாலிபர் குடியேற்றங்கள் நிகழ்ந்த காலம். அதேசமயம் இலண்டனை நோக்கிய பயணமாத் தொடங்கிய ஆங்கில மேட்டுக் குடிப் புலப்பெயர்வு. நாம் கனவுகூடக் கண்டிராததொரு பிரமாண்டமான ஊர்வலமும் உலகத் தமிழ் மாநாடாகவும் அதன் வடுவானதாகவும் அமைந்த ‘தமிழாராட்சி மாநாடு’. பாரிய அளவில் தொடங்கிய வேலைகளுக்கான அரபு நாட்டுப் புலப்பெயர்வும் அதன் நீட்சியாகி விரவிய ஐரோப்பியப் புலப் பெயர்வும்…. பக்கத்து வீட்டுச் சண்டையில் கூடத் தலையிடாது ஒதுங்கிக்கொள்ளும் நடுத்தர வர்க்க மனநிலை இளைஞர்கள் ‘ஈழக் கனவுகளுக்காக’ தம் தனித்துவமான சுயநல வாழ்வைத் துச்சமெனப் புறந்தள்ளித் தொடங்கிய ‘புதுமையான போராட்டக்’ காலகட்டம். இலங்கைத் தமிழ் திரைப்பட வெளிப்பாடுகளில் அதிகமான இலங்கைத் தமிழ்ச் சினிமாக்களைக் கண்ட காலம். வானொலியைத் தாண்டி ‘தொலைக் காட்சிகளும் வீடியோகக்களுமாக’ குறுந்திரையை கறுப்பு வெள்ளையாகவும் பின் வண்ணமாகவும் வந்து நம்மவர் பார்வையை குவியப்படுத்திய குறுந்திரையின் வரவு. இப்படியாகச் சொல்லிக் கொண்டே போகலாம்….. எனவாகும் கடந்துபோன இலங்கைத் தமிழர் வாழ்வியலை ஆராய முனைபவர்கள் ‘70கள் காலகட்டத்தைத் தனித்துவமானதாகத் தொகுக்க வேண்டும்.


இடுகை : முகிலன்

பிரான்சு 30.07.2013

Monday 29 July 2013

'மூன்று பூனைகளும் இரண்டு சிறிலங்கனையும் வளர்க்கும் சீமாட்டி!'

குஞ்சரம் 10

அதோ வாருகிறாவே அவர்தான்
'மூன்று பூனைகளும் இரண்டு சிறிலங்கனையும் வளர்க்கும் சீமாட்டி!'
ஆ!!! '.. ம்.....'வென அனைவரும் அசந்துபோய் பிரமிப்புடன் பார்த்தனர்



'90களின் ஆரம்பத்தில் ஐரோப்பாவுக்கு வந்தடைந்த நான் பிரான்சில் வந்து தங்குவேன் எனவாகக் கனவுகூடக் கண்டிருந்ததில்லை. அதுவும் கலை நகரமாம் பாரீசில் வந்திறங்கி வாழத் தொடங்குவேன் எனவாக என் வாழ்நாளில் கற்பனைகூட செய்திருந்திருக்கவில்லை. ஒரு பிரஞ்சுச் சொல்கூட நான் அறிந்திருக்கவும் இல்லை. ஆனால் எனது மனதைத் தொட்டவாறு வாழும் நணபர்களில் ஒருவனாகிய கபிலன் {தற்போது செர்மனியில் வசிக்கிறார்} சென்னையில் '80களின் நடுவில் அலையன் பிறான்சேயில் பிரஞ்சு மொழி படித்தபோது எனக்கு பிரெஞ்சு பற்றி ஏதேதோவெல்லாம் சொல்லுவான் - பிரஞ்சுச் சினிமாக்கள் பற்றியெல்லாம் சொல்வான். நான் சட்டை செய்ததே இல்லை. பாண்டிச்சேரி நகரம் பிரஞ்சின் பிரதிபலிப்பாக இருப்பதை நண்பன் நேரு மூலம் பலமுறை அறிந்தும் இருந்தேன். எனக்குத் தெரிந்ததெல்லாம் தமிழ் நாட்டில் கிடைக்காத 'சோமபானம்' மலிவாகப் பாண்டிச்சேரியில் தங்கு தடையின்றி கிடைக்கும் என்பதுதான் !
பிரான்சின் தலைநகரில் கால் பதித்து நடமாடும் புத்தம் புதியதான சூழல் பல முதன்முதலான சம்பவங்களாக அனுபவித்து ஆழ்மனப் பெட்டகத்தில் பதிவாகிக் கிடக்கின்றன. இப்படியானவற்றில் ஒன்றுதான் நான் பார்த்த முதல் வேலை. ஆழ்ந்துறைந்து கிடக்கும் இவை மேலெழும் குமிழிகளாகி இணைய வானில் சங்கமிக்க முனைகின்றன.....

ந்தடைந்த பாரீசு நகரைச் சுற்றிப் பார்ப்பதிலும் அறிந்து கொள்வதிலும் நாட்டம் கொண்டிருந்த எம்மவருக்கு பணத்தின் அருமையும் அவசியமும் தெளிவாகவே தெரிந்துவிடும். இந்தப் 'பணம்' சும்மா வரவேவராது. இந்த அழுத்தம் எப்பேர்ப்பட்ட வேலையாயினும் செய்தாக வேண்டிய மனப் பக்குவத்தை இலகுவில் ஏற்படுத்திவிடுகிறது. பணம் இல்லாது நட்போடோ உறவுகளோடோ இங்கு வாழவே முடியாது. குடிக்கும் தண்ணீரில் இருந்து கழிக்கும் நீருக்கும் காசால் அறிவிடப்படும் புத்தம் புதியதான சூழல் இது. தற்காலிகமாக ஒருவரது வீட்டில் தங்கியிருந்தால் கூட அவரது மாதச் செலவீன கணக்கறிக்கையில் ஒரு குறிப்பிட்ட தொகை அதிகரித்ததாகவே அமைந்துவிடும்.
பாரீசில் வதிவிட உரிமம் கிடைத்தவுடன் எனக்கு கிடைத்த முதல் வேலை சீமாட்டி வீட்டில் பூனைகள் பாராமரித்தல். இது எனது தோழமையுடனான நட்பினால்தான் கிடைத்தது. இங்கு அப்போதிருந்தே அனுசரணை மூலமே வேலை வாய்ப்புகளும் இன்னபிறவுமான தேவைகளையும் இலகுவாகப் பெறமுடிகிறது. இந்த வேலையும் சும்மா கிடைக்கவில்லை. நேர்முகப் பரீட்சை வைக்கப்பட்டே தெரிவாகப்பட்டிருந்தது. இந்த நேர்முகப் பரீட்சை நடந்திருந்திருந்ததைக் கூட நான் அப்போது அறிந்திருக்கவே இல்லை.
ஒருநாள் மாலை நேரம் தேனீர் பருகும் அழைப்புக்காக எனது தோழமை நண்பன் தான் வாழும் வீட்டிற்கு அழைத்திருந்தான். இவன் அந்த வீட்டுச் சீமாட்டியின் தத்துப்பிள்ளை. சந்திப்பு மிகச் சாரணமாக மகிழ்வுடன் நடைபெற்றது. இலங்கையில் இருக்கும் உறவினர் நிலை பிரான்சு பற்றிய புரிதல்கள்... போன்ற சம்பிரதாயமான கருத்துப் பரிமாறலாகத் தொடங்கிய உரையாடலில் பிரஞ்சு மொழி கற்கவேண்டிய எனது அவாவை இயல்பாகவே வெளிப்பட்டது. இவ்வேளையில் அங்கு வந்த பூனை என்னை உரசியவாறு சென்று அம்மணியின் மடியேறிக் கொஞ்சி மேசையில் செல்லமாக ஏறிப்படுத்து முகத்தை அவர் முன் நீட்டியது. அவரும் அதனது தாடையை வருடிக் கொடுக்கவும் அது சுதந்திரமாக மேசையில் நடந்து என்னைப் பார்த்து 'மியாவ்' என்றது. நானும் வாஞ்சையுடன் பார்த்து முறுவலித்தேன். 'நமது நாட்டில் இப்படியாக ஆக்கள் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது பூனையை மேசையில் சுதந்திரமாக நடமாட விட்டிருப்போமா?' எனவாக விரியும் நினைவுகளோடு எல்லாமே ஆச்சரியமான காட்சிகளாவே இருந்தன.
‘உங்களுடைய நாட்டில் நாய் பூனையைக் கண்டிருக்கிறீர்களா?' அம்மணி என்னிடம் வினவியதை நண்பன் மொழிபெயர்த்துக் கேட்டார்.
'எனது வீட்டிலேயே இரண்டு நாய்களும் பூனைப் பட்டாளமும் இருந்தன. நான்கூட சிறுவயதிலேயே மூக்கில கறுப்பன் என்ற பூனையைச் செல்லமாக வளர்த்தனான். நான் தூங்கும்போது எனது காலடியில்தான் அது எப்போதுமே தூங்கும்.' என்றேன் மிகுந்த மகிழ்வோடு.
அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்திருக்க வேண்டும் என்றே நினைத்தேன்! சந்திப்பு நிறைவு பெற்று விடைபெறும்போது வாசல் வரையில் நண்பன் கூடவே வந்திருந்தான்.
'அப்ப எப்போது வாரீர்?' என்று முகமலர்ச்சியுன் கைகுலுக்கியவாறு நண்பன்.
'எங்கே வாறது?' எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
'இங்குதான்.... பெட்டி படுக்கைகளையும் எடுத்துவாரும்!' என்றான் சிரித்தவாறு
'என்னது இங்கேயா? அதெப்படி?' எனது வாய் இயல்பாகவே பிளந்துவிட்டது.
'அதுதான்... நீர் வேலைக்குத் தெரிவாகி விட்டீர். இனி இங்கு வீட்டு வேலையைப் பார்த்தவாறு மொழி படித்தலைச் செய்யலாம் என்று அம்மா சொல்லி விட்டார்.'
'என்ன வேலை?'
'பூனையைப் பராமரிப்பதுதான்!.... பூனையும் சம்மதித்துவிட்டது!!' என்றான் தொடர்ந்தும் மகிழ்வுடன்.
'பூனை சம்மதித்ததா?.... எப்டித் தெரியும்?' அடுத்தடுத்த ஆச்சரியங்களால் திகைத்தேவிட்டேன்.
'மிருக உயிரி உளவியல் நிறையப் படித்தவர் அம்மா... இங்கு வீட்டிலேயே ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன. அங்கு வந்த பூனை உம்மை உரசியவாறு வந்து மேசையில் ஏறிய பூனை  உம்முன் வந்து 'மியாவ்' என்றதே....  அதுதான் சம்மதம்.'
நான் சிறு வயது முதல் நிறையவே பிராணிகளுடன் வாழ்ந்த விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவன்தான். ஆனாலும் இவ்வகை வெளிப்பாட்டை முதன் முதலாக இங்குதான் அறிந்தவனானேன். 'நன்றி!' என்று என் நண்பனின் கையை எனது இரு கைகளாலும் பற்றி எனது உணர்வைப் பகிர்ந்தேன். அவன் சாதாரணமாகவே ஏற்றுக் கொண்டு இங்கு வந்து வேலையைத் தொடங்கும்படி பணித்தான்.

'இருந்தாலும்.... உங்களது வீட்டில் நாய் பூனை வளர்த்ததைச் சொல்லாமல் விட்டிருக்கலாம்...!' என்றான் பவ்வியமாக.
'ஏன்?'


'இவர்களுக்கு மிருகங்கள் வளர்ப்பது என்றால் பெரும் பெருமைக்குரியதொன்று. நாம் இங்கு வேலைக்கு வருபவர்கள்... நாங்களும் இதை நம்ம நாட்டில் வளர்த்ததாகச் சொல்லாமா?... இருந்தாலும் பரவாயில்லை! உமது வேலை உறுதியாச்சு... பிரஞ்சுப் படிப்பும் தொடர வழி கண்டாயிற்று!' என்றான் மிகுந்த மலர்ச்சியுடன்.
எனது வாழ்வில் மானிடர்களாக மனதைத் தொட்டுச் சென்ற சிலரில் இவரும் ஒருவர். வலது கை கொடுப்பதை இடது கை அறியாது வழங்கும் கொடையாளி. மிகுந்த காருண்யம் கொண்டவர். எனது நண்பன் சிறந்ததொரு பிரஞ்சு மொழிப் புலமையுடையவர். தற்பெருமை கொள்ளாத அடக்கமானவர். இவரது நல்ல மனத்தால்தான் அந்த சீமாட்டியார் தத்தும் எடுத்திருக்கிறார். நீட்சி பெற்று விரியும் புலம்பெயர் வாழ்வில் இவர் தனது துணைவியன் பிறந்த மண்ணான ஆசிய நாட்டிற்குச் சென்றுவிட்டார். சீமாட்டியார் நிறைவான வாழ்வை தத்தெடுத்த தன் மகனது ஆசியக் குடும்பத்தாருடனும் பேரக் குழந்தைகளுடனும் வாழ்ந்து சென்ற வருடத்தில்தான் இயற்கை எய்தினார். இவரது இறப்புச் செய்தி கேட்டபோது நானும் ஒருகணம் 'அம்மா!' எனவாக மௌனித்து உறைந்துதான் போனேன். பெற்றால்தான் பிள்ளைகளா என்ன?
இந்த வீட்டிலிருந்தவாறு அம்மாவிடம் நான் கற்றதும் பெற்றதும் அறிந்ததும் ஏராளமானவை. 'கொக்கோ கோலா முதலான சுவையூட்டப்பட பானங்கள் அருந்தக் கூடாது. முட்டை வாங்குவதாயின் நடமாடும் கோழிகளின் முட்டைதான் வாங்க வேண்டும். முட்டையை நன்கு அவித்துதான் உண்ண வேண்டும். சுவையூட்டப்படாத பழரசங்கள் அருந்தலாம். பழங்கள் அதிகம் உண்ண வேண்டும். உயர்தரமான பால் வகைதான் வாங்க வேண்டும்' என்று வாஞ்சையோடு ஆலோசனை தருவார். தனது வளர்ப்புப் பிராணிகளுக்கும் அப்படியாகவே உணவும் வழங்குவார். வேலையாள் - முதலாளி என்ற பாகுபாடு இருந்ததே கிடையாது.
'ஒரு வீட்டில் இரு பெண்கள் வாழவே முடியாது' என்பதை மீண்டும் மீண்டும் அறிதியிடுவார். 'உமது துணைவி இங்கு வந்ததும் வேறு வீடு பார்த்துச் சென்றிட வேண்டும்!' என்றும் கூறியிருந்தார்.
நான் வீட்டையும் மூன்று பூனைககளின் பராமரிப்பையும் எடுத்திருந்ததால் இவர்கள் இலகுவாகச் சுற்றுலாக்களைத் தொடர முடிந்தது. ஒவ்வொரு வருடமும் மூன்று மாதங்கள் செனகலுக்குச் சென்றுவிடுவார். இதைவிடவாகவும் வேறு நாடுகளுக்கும் சென்று வருவார்கள். ஒரு முறை செனகலில் இருந்து திரும்பும் போது தாயத்து கட்டியிருந்தார். இன்னொரு முறை அளகான கிளிகளுடன் வந்திருந்தார். இந்தக் கிளிகளுடன் பறவைகள் தொடர்பான நூல்களும் வந்திறங்கின. அன்றைக்கு நண்பன் சொன்னதின் ஆழம் தெளிவானது. இவர்கள் ஒருவிடையத்தில் ஆர்வமாகினால் எப்படியாகவெல்லாம் தேடிச் சென்று ஆராய்கிறார்கள். கீழ்த் தளத்தில் பென்னாம்பெரிய கூட்டில் கிளிகள் - முதலாம் மாடியிலிருந்து மூன்றாம் மாடிவரையில் பூனைகளின் நடமாட்டம். எனக்கு முசுப்பாத்தியாகத்தான் இருந்தது. மனதில் கேள்விகள் எழுந்த வண்ணமே இருக்கும். இக்கேள்விகளை நண்பனிடம் மட்டும்தான் சரளமாக வினவ முடியும். ஒரு நாள் கேட்டேவிட்டேன். 'இவ்வளவு பிராணிகளை வளர்க்கிறீர்களே... ஏன் நாயை வளர்க்கவில்லை?'

'நாயா?... அதை வளர்க்காமல் இருந்திருப்போமா?' என்று நண்பன் சிரித்தான்.

'எப்போது?' நானும் ஆர்வம் ததும்பியவனாக....

'அதெல்லாம் பழைய கதை. நான் வந்த ஆரம்பத்தில் நாயும் இருந்தது...... அதோடு பெரிய தொல்லை...... வீடு திரும்புவதற்கு கொஞ்சம் பிந்தினாலும் போச்சு...... தன் கழிவுகளால் எல்லாவற்றையும் அசிங்கப்படுத்தி.... நாறச் செய்துவிடும்..... பூனைகள் சுத்தமானவை. தொந்தரவு அதிகம் இருக்காது! குறிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே தனது கழிவை அகற்றி மூடிவிடும். காலம் செல்லச் செல்ல அம்மா சொல்லிப் போட்டார் இனி நாய் வேண்டாம் என்று!!' பழைய நினைவுகளுடன் கலந்ததாக அவரது வார்த்தைகள் அவரது உடல் மொழி தழுவி விழுந்தன. புரிந்தவனாக.... புன் சிரிப்போடு... பேசாமல் கேட்டுக்கொண்டேன்..
பிரான்சில் தங்கியிருந்தபோது ஒருநாள் தடல்புடலான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. வீட்டுக்குத்தான் யாரோ விருந்தினர்கள் வரப் போகிறார்களோவென நான் நினைத்தேன். அப்படியில்லை... இவர்தான் வேறொரு விருந்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தார் எனத் தெரிந்தது.
அந்தக் காலத்தில் பிரான்சின் உள்விவகார அமைச்சர் விருந்துக்கு அழைத்திருந்தார். அவரும் இவரும் ஒரே ஊர்காரர்கள். பிரான்சின் தென் கடலுக்குள் இருக்கும் தீவவகமான கோர்ஸ்தான் இவர்களது பிறந்த இடம்.
நண்பன் தொலைபேசியில் பேசுவதும் வண்டியை எடுத்துச் செல்வதும் திரும்பவதுமாக இருந்தான். எனக்கு ஏதுமே புரியவில்லை. 'ஏன் இந்தப் பரபரப்பு?' கேட்டே விட்டேன்.
'வங்கி லொக்கரிலிருந்து எடுக்க வேண்டும்!'
நான் நினைத்தேன் பெறுமதிவாய்ந்த வைர நகை ஏதாயினும் இருக்குமென்று. 'அதற்கேன் இவ்வளவு சிரமம்? போகும்போது எடுத்துப் போட்டுப் போவதுதானே!' என்றேன்.
'நீர் என்னதை நினைச்சீர்? அது மதிப்பு மிக்கதொரு ஆடை. அதை எப்படி தெருவிலிருந்து அணிவது? அதனால்தான் கோட்டல் அறையும் ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கிறது !'  அம்மாடியோவ்.... திகைப் பென்றால் அப்படியொரு திகைப்பு.ஆதன் பின்... நான் வாய்யைத் திறக்கவே இல்லை.

'கவனமாக எடுத்து அணிந்து சென்றுவிட்டு மீளவும் திரும்பம்போது வங்கியில் கொண்டு போய் பௌத்திரமாக வைத்துவிட்டுத்தான் வரவேண்டும்! வேறிடங்களுக்கு அதோடு செல்லக் கூடாது! மிகப் பெறுமதி வாய்ந்த உயர்தரமான ஆடை அது.' என்றார்
00000
நான் எனது நினைவு வெளிக்குள் நுழைந்து பயணிக்கலானேன். ஆகா... அழகாக ஒழுங்கமைக்கப்பட்தொரு விசாலான மண்டபம். விருந்து ஏற்பாடு செல்வச் செழிப்புடன் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது. சேவர்கள் - பணியாளர்கள் எல்லோருமே ஒழுங்கான முறைப்படுத்தப்பட்ட உயர்தர ஆடை அணிகலங்களுடன் பவ்வியமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர். குறிக்கப்பட்ட நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக விதம்விமான உயர்தரமான கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து ஊர்ந்து வாசலை வந்தடைகின்றன. சீமான்களும் சீமாட்டிகளும் கோலாகலமான சிரிப்புடன் வருகைதர தடல்புடலாக வரவேற்பு நிகழ்கிறது.
மண்டபத்தினுள் சோடி சோடியாகவும் தனியர்களாகவும் விருந்தினர் நுழைகிறார்கள். முன்னரே வருகை தந்தவர்கள் தமக்குத் தெரிந்தவர்கள் வரும்போது பரஸ்பரம் முணுமுணுப்பாக பக்கத்திலிருப்பவர்களுக்கு அறிமுகம் செய்கின்றனர்.
'இதோ இவர் மாரடினிக்கில் பெரிய புள்ளி.... தான் போகுமிடமெல்லாம் தனது நாய்க்குட்டியையும் அழைத்தே செல்வார்.'
'இதோ இவர் பெரிய சீமாட்டி.... இரண்டு நாய்கள் ஒரு பூனை வளர்ப்பவர்!!'
'இதோ இவர்களைப் பாருங்கோ... இப்பத்தான் கல்யாணம் முடித்தவர்கள்! அவர் பெரியதொரு ஆடை அலங்கார வித்தகர்.'
'இவர்தான் பிரல்யமான தொலைக் காட்சி தொகுப்பாளர்!!'
'இந்தச் சீமாட்டியைப் பாருங்கோ... இவர் ஐந்து நாய்களை வைச்சிருக்கிறார்...'
'அதோ அங்க பாருங்கோ..... தனியாக ஒரு சீமாட்டி...... வருகிறாவே கம்பீரமாக... அவர் மூன்று பூனையும் இரண்டு சிறிலங்கனும் வைத்திருக்கிறார்!' கூட்டம் அதிர்ந்து பெருமையுடன் அவரை வரவேற்கிறது.
(நன்றி: படங்கள் கேட்டதும் வழங்கும் கூகிள் வழங்கி)

-முகிலன்
பாரீசு 29.07.2013

Saturday 27 July 2013

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே.. பதிவிலே.. 'மௌனம்' -காலாண்டு இதழ் பிரான்சு


செய்திச் சரம் 13
ஆவணமயப்படுத்தல் - அருமையானதொரு நினைவோடை அசைபோடல்!
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே.. பதிவிலே..
'மௌனம்' காலாண்டு இதழ் பிரான்சு

1993 இல் பிரான்சில் புத்தம்புதியதான புலம்பெயர்வு மொழிச் சூழலில் நான் - நாங்களாகி 'மௌனத்தைப்' பிரவித்த காலம். இவ்விதழ்கள் வெளிடப்பட்டபோது எங்களிடம் போதிய பணம் இல்லை - இப்போதைய நிலையைப்போல் கணினி வசதிகளில்லை - இருந்த கணினித் திரைகளிலேயே பக்கங்கள் ஆக்கும் மென்பொருட்கள் இல்லை - இணையத்திலான ஊடக வலைப்பின்னல் இல்லை - ஆக்கங்கள் எல்லாமே அஞ்சலில்தான் பெறமுடியும் அவற்றை தட்டச்சுப் பிரதியெடுத்து உரிய வகையில் பக்கமாக்கலை கைவினைஞராக ஒட்டி - ஒத்தி செய்து - படிதிருத்தி - முழுமைப்படுத்தி சரிபார்த்து - அச்சுவாகனமேற்றி இதழ் வெளிவருவதென்பது ஒரு பிரசவம்தான். தனியராக தொலைவில் வாழும் எம் நட்பு வட்ட நண்பர் குழாத்திடம் இதற்காக பயணித்த நேரங்கள்.... தொலைபேசி உரையாடல்கள்.... வெளிவந்த இதழ்களை அஞ்சலில் பயணிக்க வைக்கச் செய்த பகீரதப் பிரயத்தனங்கள்... எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.
புலம்பெயர்ந்த முதற் தலைமுறையினரில் பேனாவையும் வாசிப்பையும் புத்தகங்களையும் நேசித்தவர்கள் அக்காலகட்டங்களில் உலகமெங்கிலும் தமது படைப்புகளால் இத்தகைய பணியைச் செய்து கொண்டுதான் இருந்தார்கள்... இவர்களில் கொஞ்சம் வித்தியாசமானதாய் எமது பிரகடனத்தை முதல் மௌனம் தாங்கி வெளிவந்திருந்தது.

'93 இல் இணைந்த நாம் மௌனிகளாய் செய்த பிரகடனம் 'மௌனம் 1' (மே யூன் யூலை '93) இதழின் தொகுப்புத் தலையங்கமாக இடம்பெற்றது. இன்று தகுநல் வரலாற்று ஆவணமாகி தோரணத்தில் இணையவலைப் பயணமாக தன் பவனியைத் தொடங்குகிறது. இதனைத் 'தோரணம்' தனது நூறாவது பதிவேற்றமாக - இருபது வருடப் புலப்பெயர்வின் தொடக்க வெளிப்பாட்டை மீளவும் அசைபோட்டு மீட்டுப் பார்க்கிறது. மௌனிகளாக இணைந்திருந்தவர்கள் தொடரும் புலம்பெயர்வின் நீட்சியில் சிதறுண்டவர்களாகி பல்வேறு நாடுகளில் தம் வாழ்வைத் தொடர்பவர்களாகியும் விட்டனர்.


000 0
மௌனம் இதழ்1 (மே யூன் யூலை ’93)
சொட்டுச் சொட்டாய் தேங்கி மடை உடைத்த வெள்ளமென..


காதலில்தான் மௌனம் சம்மதமெனக் கொள்ளப்படுகிறது.
அங்கே மௌனம் தன் அர்த்தம் இழந்து நெகிழ்ந்து தன்னிலை மறக்கையில் சம்மதமாகிறது.
அந்த மௌனப்போதுகளில் கன்னம் மெருகேறி கண் இமைகள் தாழ்ந்து இதழ்கள் துடித்து மௌனம் மொழியாகின்றது.
இப்படிப் பொய்யாகிப் போன மௌனம் விருப்ப உணர்வாகின்றது.
காதல் அல்லாத நிகழ்வுகளில் மௌனம் இப்படியெல்லாம் விருப்ப உணர்வாவதில்லை.
கோப உறைதலாகின்றது.
மௌனம் கொள்ளாத 'சூழல் கைதியை' சமரசங்கள் ஆட்கொள்ள போர்க்குணம் தணிகின்றது. ஆதலால் மௌனம் தவிர்க்க இயலாத நிகழ்வாகின்றது.
மௌனங்கள் உறைந்து உறைந்துதான் கோபாக்கினியும் மூள்கின்றது.
சொட்டுச் சொட்டாய்த் தேங்கிய மௌனம் மடை உடைத்துப் பாய்கையில் எல்லைகள் விலங்குகள் சிதறுகின்றன. கட்டறுந்த சிறகுகள் விரிகின்றன.
நீண்ட ஆழ்ந்த மௌனங்கள் இப்படித்தான் இலக்கியங்களாகின்றன. சாட்சியங்களாகின்றன.
வராலாற்று குருடர்களைப் புறந்தள்ளி மௌனம் எக்காளமிடுகையில் உலகம் குலுங்குகின்றது. உதயங்கள் எழுகின்றன. வரலாறு மீள் படைப்பாகின்றது.
தூங்கும் எரிமலையாய் அலை எழா ஆழ்கடலாய் புயல் எழுமுன் சூனியமாய்.....
 கூட்டு மௌனங்கள்.
மௌனங்களின் சங்கமிப்பு சங்கமாய்....

000 00
மௌனிகளின் பதிவான 'மௌனம்' இரு நூறு பிரதிகள் மட்டுமே வெளியிடப்படுகின்றது.
மக்களுக்காக வெளியிடுகின்றோம் வென்றெடுக்கப் போகின்றோம் என்ற 'மிதப்பு' எதுவும் கிடையாது.
அறிமுகமான வாசக ஆர்வலர்களில் நேசமிக்கோரைச் சென்றடைதலும் இணைதலுமே இதன் திசையாகும்.
மௌனித்துள்ள கலை இலக்கியப் பதிவுகளை சமூகத் தளங்களை வரலாற்றின் பக்கங்களை வெளிக்கொணர முயல்வதே இதன் திசையாகும்.
ஆங்கிலம் படித்து அதில் சிந்தித்து ஆங்கிலேயருக்குக் கற்பிக்கும் எழுதும் கல்விப் பாரம்பரியத்தையும் கல்விமான்களையும் கொண்ட சமூகத்தில் 'இளக்காரமான தமிழ்பேசும்'  மௌனிகளின் இதழ்தான் இந்த மௌனம்.
அந்தப் பலவீனப்பட்ட சமூகத்தின் தேவையும் அவாவுமோ அளப்பெரியவை. மெளனித்துக் கிடப்பவை.
இதற்காய்ப் பூக்கும் நூறு பூக்களில் ஒரு பூவென மௌனமும் புன்னகைக்கும். தன்னை வடிவமைக்கும்.
பூக்கும் நூறும் சிவப்பு ரோஜாவாய் இருக்கும்படி விதிக்கப்படின்  விமர்சிக்கப்படின் மௌனம் வெவ்வேறு வண்ணங்களில் பூத்துக் காட்டும்!
எப்படியாயினும் கலைச் செல்வங்கள் சுமக்கும் பெட்டகமாகவும்; மேலை நாட்டு மொழிச் செழுமையைக் காவும் கடத்தியாகவும்; தமிழை - கலாச்சாரத்தைப் பரிமாறும் மையமாகவும்; நோய்வாய்ப்பட்ட சமூகத்தின் தாதியாகவும்; இனிவரும் தலைமுறையின் நம்பிக்கையாகவும் இருக்க மௌனம் உறுதி கொள்கின்றது.
மெல்லெனப் பாயும் தண்ணீர் கல்லையும் புரட்டுமென.....

000 000
அரச வன்முறையாலும் ஆயுத பாணியானோரின் வன்முறையாலும் கனவுகளுக்காய்க் கொலையுண்டு இறந்தவர்களை 'மௌனம்' நினைவில் கொள்கின்றது. தலை தாழ்த்துகின்றது.
ஆயுதக் கலாச்சாரப் பரம்பலினால் தற்காப்பு நிலைமாறி தற்கொலைக்கொப்பாய் சமூகம் தள்ளப்பட்டிருக்கின்றது.
இவ்வாயுதக் கலாச்சாரப் பரம்பலின் பொறுப்பாளிகள் நாங்களல்ல என வேறுபக்கம் கை நீட்டித் தப்பித்துக் கொள்ள முடியாது.
'மௌனிகள்' உள்ளிட்ட சம தலைமுறையினரும் அவர்தம் நாவும் பேனாவும் கூடத்தான் என்பதனை வேதனையுடன் மௌனம் ஏற்றுக் கொள்கின்றது.
வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்ததனாலேயே 'போராட்டக் குற்றவாளிகள்' அற்றவர்களாய் நாங்கள் மாறியுள்ளோம் கொல்லாமை நிலையாமை பற்றிய ஒளி கிடைத்து புனிதத்துவத்தைப் பெற்றுவிட்டோம் எனும் மார்தட்டலை மௌனம் மறுதலிக்கின்றது.
பொய்மைகளை கருத்து எழுத்து அழகுகளால் மூடி மறைப்பதையும் மௌனம் ஏற்ற மறுக்கின்றது.
தமது முன்னெடுப்புகள் பலவற்றில் 'மௌனிகள்' தோற்றவர்கள் - சிதைந்தவர்கள் என அறிக்கை செய்வதுடன் எண்பதுகளின் பிற்பகுதிகளில் உலகெங்கும்  நிகழ்ந்த - நிகழ்ந்த வண்ணமுள்ள சறுக்கல்களையும் தோல்விகளையும் மாற்றங்களையும் உள்வாங்கி கற்க கடப்பாடுடையவர்கள் என்பதனையும் ஏற்கின்றது.
'கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாதார்' பற்றி பாரதி கொள்ளும் கவலையை மௌனமும் தனதாய் வரித்துக்கொள்கின்றது.
பல்வேறு காரணிகளால் அருகிச் செல்லும் மனித விழுமியங்களை மீட்டெடுத்தலையும். நம் அடையாளத்தைப் பேணுதலையும். இருப்பை உறுதி செய்தலையும் மௌனம் தொடரும்..
'கலாச்சார ஒன்றித்தலிலும்' 'கலாச்சாரப் புத்தமைவிலும்' ஆற்றல் மிக்கோருடன் கைகோர்க்கும்.
அன்று பதிப்பு இன்று ஆவணம் :


- முகிலன்
பரீசு - பிரான்சு 27.07.2013

Friday 26 July 2013

'83 கலவரம் உமக்கு என்ன செய்தது.... ஐசே!

குஞ்சரம் 9

'83 கலவரம் உமக்கு என்ன செய்தது.... ஐசே!


மூட்டை மூட்டைகளாய்க் கனவுகளைச் சுமந்தவர்களென்றால் அவர்கள் 40களில் தொடங்கி 80 -90 கள் வரையில் இலங்கையில் பிறந்து வளர்ந்த தமிழர்களாகாத்தான் இருக்கும். அப்படியாக வானத்தை முட்டும் கனவுகளுக்குச் சொந்தக்காராக இருந்தும் பதிவுலகில் கொட்டப்படாமலும் முன்னைய காலத்தவர்கள் போல் தம் வாரிசுகளின் செவி வழியாகத் தொடரப்பட முடியாதவர்களாகவும் முடமாகிப் போனவர்களும் நம்மவர்கள்தான்.
எமது வாழ்நாட்களில் 'இரு கோடுகள்' தத்துவம் மீளவும் மீளவும் நிரூபணமாக பல சமயங்களில் சிறியதை பெரியது கௌவிச் சென்றதைக் கண்டிருக்கிறோம். இன்று '83 கறுப்பு யூலை உம் அப்படியாகி அடங்கிச் சிறுத்தும் விட்டது. 2009 கொடூர மே வெளுப்பால் அடித்துச் சென்றும் விட்டது. எல்லாமே திட்டமிடப்பட்ட ஆனால் பரிமாணங்களால் வேறுபட்டதான நிகழ்வுகள்தான். ஈழத் தமிழர்களின் அழிவின் கொடூர வடுவாக உலக மனித குல வரலாற்றில் பதிந்து சென்ற நிகழ்வுமாகிவிட்டது..
'90களின் ஆரம்பத்தில் மீளவும் ஐரோப்பிய மண்ணில் காலடி எடுத்து வைக்கிறேன். நான் கனவே கண்டிராததொரு மறுபிறப்பெடுத்த வரவு இது. கொழும்பில் தனியாகத் தவிக்கவிட்ட எனது துணைவியின் பிரிவைக் காவிவாறு புத்தம் புதியதான நுண்மன உணர்வுகளுடன் வந்தடைந்த பிரயாணம்.
எனது மைத்துனரின் இல்லத்தில் தங்கிய காலம். அவருடன் அவர் வேலைசெய்யும் பிட்சாறியாவுக்கு நானும் இரவு நேர உதவியாளனாகப் போவது வழக்கமானது. அங்கே நான் செய்த வேலை பாத்திரங்கள் கழுவுதல்தான். இந்தக் கடை முதலாளியாக இருந்தவர் ஒரு தமிழன். இவர் '80களில் இங்கு வந்து தரித்தவர். விடாத முயற்சியாலும் கடுமையான உழைப்பாலும் இப்போது தனியாகக் கடைபோட்டு நடத்தும் நிலைக்கு வந்திருந்தார். ஆரம்பத்தில் குசலம் விசாரித்துவிட்டுச் சென்றுவிடுவார். நாட்கள் சில கடந்த பின் எனது உழைப்பிலும் அவருக்கப் பிடித்தம் வந்திருக்க வேண்டும். இவ்வேளையில் எனது வரலாற்றையும் அறிந்திருந்தார்போலும்! இங்கு இவரது கண்டு பிடிப்பாக 'ராம் பிட்சா' விசேட உணவாகி இருந்ததை நானும் இரசித்தேன். மரக்கறி பிட்சாவாக சின்ன மிளகாயும் சிறிதளவு இஞ்சியும் வெண்டைக்காய்த் துண்டங்களுமாக உருவாக்கி இருந்தார். இவரது கற்பனை வளம் என்னைக் கவர்ந்து பாராட்ட வைத்தது.
ஒருநாள் வேலை முடிவுறும் நேரம் 'வணக்கம்! தம்பி!!' நானும் பதிலுக்கு 'வணக்கம்' என்கிறேன். அன்று எனக்கு ஒரு கிளாசு உசார் பானத்தை வழங்கிக் கைகுலுக்கிச் சிரித்தார். வழக்கமான கேள்விகளான 'இந்த நாடு பிடித்திருக்கா?' 'எவ்வளவு காலம் எடுத்து இங்கு வந்தடைய?' என்று என்னிடம் அவர் கேட்கவில்லை. தனது உணவகத்தில் பணி தொடர்பாகவும் பொதுவான நாட்டு நிலவரங்கள் பற்றியதுமான இலகுவான எண்ணங்களே கதைக்கப்பட்டன. மிடறு மிடறாக இறங்கிக் கொண்டிருந்த உசார் பானம் உரையாடலை வேறு தளத்தில் கொண்டு போயிற்று.
'முந்தி நீங்கள் பெர்லினில் இருந்தீர்களாமே?' கேள்வி சடாரென அடித்துவிட்ட பந்து மாதிரி வந்து விழுந்தது.
'ஓமோம். இருந்தனான்!' உயர எத்தனிக்கும் புருவத்தை அடக்கியதாக அமைந்தது எனது பதில்.
'எங்கே இருந்தனீங்கள்? நானும் அந்த வழியாலேதான் இவ்விடத்துக்கு வந்தனான்.
அமெரிக்கன் ஓட்டல் குறுமலங்கா... லோறன்ஸ் ஸ்ராச, போஸ்டமா ஸ்ராச, இன்னும் பிற இடங்களில் இருந்ததையும் தெரிந்தவர்கள் பற்றிய பரிமாறலாகவும் கதைக்கப்பட்டது.
'பெர்லினிலே வாழ உரிமம் கிடைத்தவர்கள் அந்த நேரத்தில் நன்றாகச் சம்பாதித்த காலமல்லவா?'
'ஓம்! சிலர் நன்றாகவே சம்பாதித்தவர்கள்தான்.....' நிதானமாக இவரது கேள்வியிலிருந்து அந்நியப் பட்டவனாக.
'அந்தக் காலங்களில் ஒரே பாஸ்போட்டில் முப்பது பேரை அனுப்பியவர்களும் இருந்திருக்கிறார்கள். இப்ப ஐரோப்பா எங்கிலும் வந்தவர்களெல்லோருமே அந்த வழியால் வந்தடைந்தவர்கள்தானே!'
'ஓமோம்!' என்ற ஒற்றைச் சொல்லில் பதில் சுருங்கிப்போனது.
'அப்ப நீர் என்ன செய்தனீர்?'
'அங்கு வந்தடையும் அகதிகளுக்கு தகுந்த முறையில் விரைவான உதவிகளைப் பெறும் தார்மீகத் தொண்டை வழங்கும் ஈழத்தமிழர் நலன்புரிச் சங்கத்தில் இணைந்து 'யதார்த்தம்' என்ற மாத சஞ்சிகையை வெளியிட்டனாங்கள்.' என்ற பதில் அவருக்கு எரிச்சலை மூட்டியிருக்க வேண்டும்.
'அதுசரி! அப்ப ஏன் நீர் திரும்பிப் போனனீர்?' என்றதான கேள்வி ஏறிய உசாரை சப்பென்று இறக்கிவிட்டது.

'இலங்கையில் பெரிய அளவில் அழிவுகள் நடந்ததுதானே.... அதுவம் திட்டமிடப்பட அழிவுகளாக நடந்தேறினதானே..... எல்லாத்துக்கும் உச்சமாக '83 கலவரம் நடக்க என்னாலே பொறுக்க முடியவில்லை!'
'83 கலவரம் அங்கதானே நடந்தது... நீர் இங்கதானே இருந்தனீர்?.... அந்தக் கலவரம் உமக்கு என்ன செய்தது?... ஐசே!'
முதற் கேள்வியுடன் குடிப்பதை நிறுத்திய நான் இனிமேல் இங்கு வருவதில்லை என்ற முடிவுடன் உறைந்து போனேன். கொழும்பில் கடை வைத்திருந்து கலவரங்களால் பாதிப்புள்ளாகி அகதியாக வந்தவர்தான் இவர்.
புலம்பெயர்ந்த நிலையில் புலம்பெயர்ந்த மண்ணில் ஈழத் தமிழன் ஒருவனால் தமிழில் இன்னொரு ஈழத் தமிழனிடம் இப்படியாக வினவ முடியுமா? எனவாக இன்று வரையில் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். புலம்பெயர் நாடுகளில் அகதிகளாக விண்ணபம் கொடுத்தபோது தமக்கானதும் தம்மோடு கூடியவர்களும் இனக்கொடுமையால் பாதிப்புற்றதை விபரமாக விளக்கி அகதிநிலை வதிவிட உரிமம் பெற்றிருந்தவர்கள்தானே நாமெல்லோரும். இவரது வார்த்தைகளால் கொடுக்கபட்ட தாக்குதல் '83 கலவரத்திற்கு ஒப்பானதாகவே உணர்கிறேன்.
முதலில் '80 களின் ஆரம்பத்தில் பல்கலைக் கழக் கல்வியை முடித்த இளம் துடிப்புடன் இருந்த என்னை யாழ் நகர அழிப்பும் --நாம் இரசித்த யாழ் நூலக எரிப்பும் - யாழ் முற்றவெளிக் காடையரின் அட்டகாசமும் நாட்டைவிட்டு வெளியேற்றும் உந்துதலைச் செய்தது. வந்தடைந்த ஐரோப்பிய வருகை முற்றிலும் வேறுபட்ட தொரு அனுபவமாகியது. நாம் காணுற்ற ஐரோப்பாவும் - நாம் விட்டுவந்த மண்ணும் எம்மை சும்மா இருக்கவிடவில்லை. ஈழக் கனவைச் சுமந்தவாறு மகிழ்வுடன் மீளவும் மண்ணைச் சென்றடைந்த பலரில் நானும் ஒருவனானேன்.
ஒரு விடிவெள்ளி நேரத்தில் யாழ் மண்ணில் மீளவும் கால் பதித்த வேளை நான் செய்தது. மண்ணைத் தொட்டு வணங்கி - மண்ணை இருகைகளாலும் அள்ளி பிசைந்து.... மண்ணில் ஒரு முறை புரண்டு எழும்பியதுதான்.... இதைப் பதிவிடும்போதே இலேசாக கலங்கத்தான் செய்கிறேன். பெருமூச்சும் தானாகவே வெளியேறுகிறது.


இருபது வருடங்களின் முன் நிகழ்ந்த உரையாடல் மீட்கப்படும்போது கூடவும் சில எண்ணச் சிதறல்களும் தெறித்தன..


இராமாயண இதிகாசத்தில் அனுமான் தனது வாலால் தீயைக் கொண்டு சென்று இலங்கைத் தீவைப் பொசுக்கினான் என்பதை வாயைப் பிளந்தவாறு பக்திப் பரசவத்துடன் கேட்டு வளர்ந்தவர்கள்தான் நாமெல்லோரும். ஆனால் தீப் பிளம்புகளால் உலகம் படும்பாட்டை இன்றைய தொடர்பூடகம் காவிவரும் போது கலங்காத மனிதர்களே கிடையாது. எப்பேர்ப்பட்ட இயற்கை நாசம் எவ்வளவு பல்வேறு உயிரிகளின் அழிவுகள்.... குறிக்கப்பட்ட சில பல கால எல்லைக்குள் நிகழ்ந்து முடிகின்றன. நினைவிடலே அச்சமூட்டுகின்றது. இதனைத் தடுக்கமுடியாத கையறு நிலையில் இன்றும் அதீத விஞ்ஞான வளர்ச்சி எனப் பெருமிதம் கொள்ளும் உலகம்.
'சித்திரையில் புத்திரன் பிறந்தால் பெரும் தரித்திரம்' எனக் கூறிக்கொண்டு சித்திரையில் மகப்பேற்றை விலக்கி வருடப் பிறப்பை ஊக்குவிக்க முடியுமா?  அதுவும் இவ்வருடங்களெல்லாம் ஆண் மக்களாகப் பிறந்த பெயர்களுடன் எப்டியாக கூசாமல் கொண்டடாட முடியும்? எனக் கேள்விகளைக் கேட்காமல் பின்பற்றுபவர்களும் நாம்தான்.
யூலை - ஆடி நீசமான மாதம் என்றதால் கறுப்பும் அதனுடன் ஒட்ட 'கறுப்பு யூலை' எனவாகிவிட்டது. இதனிலும் பேரழிவைக் கொடுத்த மார்கழி (யேசு பிறந்த புனித மாதம்) 2004 ஆழிப்பேரலை அழிவும் 2009 மே - வைகாசி (புத்தர் பிறந்த புனித மாதம்) மனித குல வடுவாகிப்போன கொடூர அழிவும் மாதத்துடனான அடைச் சொல்லுடன் ஏன் பதிவாக மறுக்கின்றன?


- முகிலன்
பாரீசு 25.07.2013
தொடர்புடைய வேறு ஆக்கங்கள் நுழைய:

சுவட்டுச் சரம் 1 - நினைவுத்துளிகள் (10)

சரம் - 6 யார் சிறிலங்கன்?