Friday 17 November 2017

தனித்துவ முன்னெடுப்பாளராக வாழ்வுத் தடமிட்ட ஈழத் தமிழ் ஊடகவியவியலாளர் கோபு எனும் 'எழுத்தாணி எஸ்.எம்.ஜி' !!

தகவல் பகிர்வு :


ஈழத் தமிழ் ஊடகவியல் -  தனித்துவ முன்னெடுப்பாளராக வாழ்வுத் தடமிட்ட கோபு   எனும் 'எழுத்தாணி எஸ்.எம்.ஜி' !!
எஸ்.எம். கோபாலரத்தினம் (03.10.1930 - 15.11.2017)


தனித்துவ தடமிட்ட வாழ்வினை முன்னெடுத்த சாதனையாளர்   எஸ்.எம். கோபாலரத்தினம்  - காலம் கடந்தும் வாழ்வார்!!

தக்கார் தகவிலர் என்பது அவரவர் 
எச்சத்தாற் காணப்ப படும். (குறள் 114 - நடுவு நிலைமை) 

ஈழத் தமிழ் ஊடகர் - எஸ்.எம். கோபாலரத்தினம்

'நேற்றிருந்தார் இன்று இல்லை..!' என காலம் கரையும் வாழ்வில், 'காயமே இது பொய்யடா வெறும் காற்றடடைத்த பையடா..' எனச் சித்தர் சொன்ன வாக்கிலும் நிலையாமைக் கோட்பாட்டில் வாழும் தொடர் அசைவில் பிறந்த ஓர் உயிரிகள்தானே.  -  நமக்கு நாமே (நம்மை நாமே அறிந்த) 'மனிதர்களாக' அடையாளமிட்ட ஒரு சிறப்பு உயிரிகள்!

இத்தகைய வாழ்வில் தனித்துவமான தடங்களில் பயணிப்பவர்களது அனுபவங்களை காலத்தின் பதிவுக்கல், தன்னில் பொறித்து காலம் கடந்தும் கடத்தும் வழமையைக் கொண்டிருக்கிறது. இது இரு வகைகளில் தொடரப்படுகிறது. 1) தொன்மையாகத் தொடரும் வாய்வழிக் கதைகள் - பாடல்கள் 2.) வரலாற்று ஆவணங்கள்.

தான் கைபிடித்த பேனாவை - எழுதுகோல் கருவியை நேசித்து வரலாற்றை புனைவின்றி உண்மையின் பதிவாக காலத்தின் பதிவேடுகளில் பதிந்தவர் ஊடகர்  கோபு ஐயா. இன்று அவை எழுத்துச் சாட்சியங்களாக நிலைபெற்றிருக்கின்றன. நாளிதழ்கள் - வார இதழ்கள் - மாத இதழ்கள் என ஆயிரமாயிரம் பதிவுகளை இவரது கைப்பட்ட பேனா எழுதிப் பதிப்பித்திருக்கிறது. இவரது கைவிரலிடுக்கில் பிடிபட்ட பேனா தானாகவே துரித பயணத்தைச் செய்யும் காட்சியில் மெய் சிலிர்த்திருக்கிறேன். இவரது பார்வை மங்கிய காலத்தில் வெள்ளைத் தாள்களில் கட்டுக்கட்டாக எழுதியவற்றைக் கொண்டு தொகுத்ததுதான் 'ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை'. இதனை நான் பணியாற்றிய ஆய்வு நிறுவனத்தில் மறைந்த பேபியும், பபாவும் தட்டச்சுப் பிரதிகளாக்கித் தந்திருந்தனர். இவரிடம் வசமாகும் தலைப்புகள் பொது மக்களை வசீகரித்து ஈர்க்கும். சாதாரண பொதுமக்கள் இலகுவாக வாசிக்கும் மொழியாடலாக இவரது ஆக்கங்கள் எளிமையானவை. இவரது கூர் அவதானிப்பில் தகவல்கள் செய்திகளாக வடிவமடையும். எதை? எப்போது? எப்படி? தகவலாகப் பதிவு செய்வதென்பதை சதா அவாவுறும் பத்திரிகையாளராகவே வாழ்ந்தார். உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை அதீத கவனத்துடன் வெளியிடுவார். அந்தக் காலத் தகவல் திரட்டலுக்காக  அதிக நேரப் பிரயாணங்கள் - தொலைபேசி வசதியீனங்கள் - தொலை அஞ்சல் தொடர்புத் தகவல் சேகரிப்புகள் எனப் பரபரப்பாகவும்  'வானொலிகளில்' மூழ்கியவர்களாகவும் இருப்பார்கள் பத்திரிகையாளர்கள். இத்தகைய சூழலில் இவரிடம் காணப்படும் நகைச் சுவை உணர்வு சொல்லும் செயலுமாக வெளிப்படும். 

"நிர்மலா- எனும் ஈழத் திரைப்படம் வெளிவந்தபோது ஈழநாடு இதழில் நாளாந்தம் இப்படம் பற்றிய ஒரு தகவல்வருமாறு தொடர்ந்து தன்னியல்பாகச் செயற்பட்டார்!" என நெகிழ்ச்சியோடு நினைவுகூர்வார் பாரீசில் வாழும் முதுபெரும் கலைஞர் ஏ. ரகுநாதன் அவர்கள். தினசரி இதழ்களில் விளம்பரம் செய்ய முடியாத நிலையில் வெளியிடப்பட்ட மறைமுகப் பிரச்சாரமாக இத் தகவல்கள் மக்களைிடம் சென்றடைந்தன. ஈழத் திரைப்படத்தை பரந்த பார்வைக்கு ஊக்குவிக்கும்  பத்திரிகையாளனாக செயற்பட்ட பதிவு இதுவாகும். இத்தகைய தார்மீகச் செயலை செய்வதென்பது ஒரு சிறந்த முன்னுதாரணமாகும். 

ஈழத்தின் தமிழ் ஊடகராக பலரை உருவாக்கி ஊக்கப்படுத்தி நிலைநிறுத்திய பெருமை அவரது தனிச் சிறப்பு. 

இவரது எழுத்துகளின் தொகுப்பாக 
1. ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை
ஆரம்பத்தில் ஜூனியர் விகடனில் தொடராக வெளிவந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களது கவனத்தைப் பெற்றது. பின்னர் இரு பதிப்புகளாக வெளிவந்துள்ளன - நிகரி (இலங்கை வெளியீடு 2000 மற்றும் 2002). தற்போது தோழமை வெளியீடாக (இந்தியா 2007) வெளிவந்துள்ளது.
2. அந்த ஒரு உயிர் தானா உயிர்? (2003 நிகரி)
3. பத்திரிகைப் பணியில் அரை நூற்றாண்டு (2003 - பாரதி) தன் வரலாறு
4. ஈழம் : முடிவில்லாப் பயணத்தில் முடியாத வரலாறு (2008 -தோழமை வெளியீடு இந்தியா)
ஆகியன தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. இவரது ஆயிரமாயிரம் கட்டுரைகள் - ஆசிரியத் தலையங்கள் - கட்டுரைகள் - தகவல்கள் - சிறுகதைகள் என்பன தொகுக்கப்பட வேண்டியன. தகுந்த மொழிபெயர்ப்புக்கும் உரியன.

யாழ்- பெருமாள் கோவிலடியில் வாழ்ந்த இவர்களது இல்லத்தில் நிகழ்ந்த சந்திப்புகளை தனி நூலாகத் தொகுக்கலாம். கண்டதும் விருப்புற்ற குயின்சி எனும் கத்தோலிக்க இந்திய வம்சாவழிப் பெண்ணை கைகோர்த்து துணைவியாக இணைந்து - ஆச்சாரியமுடைய பெருமாள் கோவிலடி வீட்டில் வாழ்ந்த இவர்களது வாழ்க்கை தனித்துவமானது. இவர்களது இந்தச் சிறிய வீட்டில் தரித்து விருந்தோம்பிய பிரமுகர்களை தனியாகவே பட்டியலிடலாம். இப்படியாக இவர்களது மூத்த மகனின் நண்பனாக - தோழனாக அறிமுகமாகி இவர்களது பெறாமகனாக வாழ்பவன் நான். தான் பெற்ற ஐந்து பிள்ளைகளுடன் என்னையும் மூத்த பிள்ளையாக இணைத்ததால் இன்னும் பலரை அவர்களுடன் இணைத்த வாழ்வு எனக்குண்டு.

"ஈழத்தில் இந்திய அமைதிப்படையின் நிகழ்த்திய கோரத் தாண்டவத்தின் முப்பது ஆண்டுகளை வேதனையோடு நினைவுகூரும் இந்த வேளை இவற்றுக்கெல்லாம் நேரடிச் சாட்சியாக விளங்கிய கோபு என்ற எம்.எஸ்.கோபாலரத்தினம் அவர்களின் பிரிவுக்கு நாம் செய்யக் கூடிய கைமாறு இந்த “ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை” என்ற நூலை மீள் பதிப்பித்துப் பரவலான வாசகர் வட்டத்துக்குச் சென்றடைய வைக்க வேண்டும். அத்தோடு இந்த நூல் ஆங்கில மொழிபெயர்ப்புக்கும் உட்பட வேண்டிய தேவை இருக்கிறது."  - கானாப்பிரபா (முகநூல்)






குடும்பத்துக்கு அப்பால் சமூகத்துடன் பிணைந்த எழுத்தாணியயாக இவரது வாழ்க்கை பயணிக்கிறது. இது இவரது ஆழ்மன ஈடுபாடுடன் எல்லைகள் கடந்ததாக அமைகிறது. ஈழம் - இலங்கை - தமிழ்நாடு - இந்தியா - உலகம் என மனித நேயமிக்க பத்திரிகையாளராக உறவை பின்னிப் பிணைத்தது. 

'தமிழ் பத்திரிகை துறையில் 1953-ஆம் ஆண்டு வீரகேசரி நாளிதழில் ஒப்பு நோக்குநராக இணைந்து கொண்ட இவர் அதே ஆண்டில் உதவி ஆசிரியரானார். 1960-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வெளிவந்த 'ஈழநாடு' நாளிதழில் செய்தி ஆசிரியராக இணைந்து கொண்ட அவர், அந்தப் பத்திரிகையின் ஆசிரியராக உயர்வு பெற்று 20 வருடங்களுக்கு மேல் அந்நிறுவனத்தில் பணியாற்றினார்.
அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் வெளியான காலைக்கதிர், செய்திக்கதிர் , ஈழமுரசு ஆகிய பத்திரிகைகளிலும் ஆசிரியராக பணியாற்றி இறுதியாக 2000-ஆம் ஆண்டு மட்டக்களப்பில் வெளியான " தினக்கதிர் " நாளிதழ் ஆசிரியராக இணைந்து சில வருடங்கள் பணியாற்றினார்.
யாழ்பாணத்தில் வெளிவந்த " ஈழமுரசு "பத்திரிகை ஆசிரியராக பணியாற்றிய வேளை 1987ம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி இந்திய அமைதிப்படையினரால் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.'

பத்திரிகையாளர் கோபு:
இந்திய அமைதிப்படையினரால் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த தனது அனுபவத்தை " ஈழ மண்ணில் ஓர் இந்திய சிறை " என்ற தலைப்பில் எழுதினார்.
இந்த கட்டுரை "ஜுனியர் விகடன் " இதழில் தொடர் கட்டுரையாக வெளியாகியிருந்தன.
இலங்கை தமிழ் பத்திரிகை உலகில் கோபு ,எஸ்.எம்.ஜி என பலராலும் அறியப்பட்ட எஸ்.எம். கோபாலரெத்தினம் ஆணித்தரமான அரசியல் தலையங்கங்கள், கட்டுரைகள் மற்றும் செய்திகள் மூலம் துணிச்சல் மிக்க பத்திரிகையாளராக விளங்கினார்." (பிபிசி - தமிழ்)

“பேனா ஒரு வலிமை மிக்க ஆயுதம் என்கிறார்கள். உண்மை தான்! அவனிடம் இருக்கும் ஒரே ஆயுதம் அது மட்டுமே! அதைப் பறித்து விட்டு அவன் கைகளைப் பிணைத்து விட்டால் அவனை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்” - கோபு என்ற எம்.எஸ்.கோபாலரத்தினம்.

"தமிழில் நாம் பத்திரிகையாளருக்கும் எழுத்தாளருக்கும் அதிகம் வேறுபாடு காட்டுவதில்லை. ஒருவரே இரண்டு நிலையிலும் தென்படலாம் (கைலாசபதி நல்ல உதாரணம்). ஆனால் பத்திரிகையாளர் என்பவர் எழுத்தாளர்களிடமிருந்து வித்தியாசப்பட்டவர். பத்திரிகைகளின் (இதழ்களின்) தேவைகளை மனங்கொண்டவராய் வாசக நுகர்வைப் புரிந்தவராய் பத்திரிகையின் எழுத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்பவராக அதனைத் தொழில் முறையாகக் கொண்டபவராக விளங்குபவர்." - பேராசாசிரியர் க. சிவத்தம்பி (அணிந்துரை - ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை)

"பாரிசிலிருந்து வெளிவந்த ‘ஈழநாடு” பத்திரிகையில் கோபாலரத்தினம் அவர்கள்; எழுதிய தொடரின் ஒரு பகுதி ‘முடிவில்லாப் பயணத்தில்” என்ற தலைப்பில் சிறு பிரசுரமாக வெளிவந்திருந்தது. அந்நூலின் விரிவான பதிப்பினைப் பின்னர் ‘ஈழம்: முடிவில்லாப் பயணத்தில் முடியாத வரலாறு” என்ற தலைப்பில் எஸ்.எம்.ஜி அவர்கள் தமிழகத்தின்; சென்னை, தோழமை வெளியீடாக வெளியிட்டிருந்தார். இந்த நூலே இவரது இறுதி நூலென்று கருதுகின்றேன். டிசம்பர்; 2008இல் வெளிவந்த இந்நூல் அலைகடல் பயணம், கரை தெரியவில்லை, முடிவில்லாப் பயணம், துக்கதினம், ஓரின ஆட்சி – இது சிங்கள ஜனநாயகம், தனிச் சிங்கள அமைச்சரவை, அரசியல் யாப்பு, சிங்களக் குடியேற்றம், சிங்களம் மட்டுமே, அமைதிவழிப் போராட்டம், பண்டா-செல்வா ஒப்பந்தம், சரணடைந்தார் பண்டாரநாயக்க, கடவுளே வருவார் காடுகளே சுடும், ஓநாய்கள் மீண்டும் உறுமின, ஓரினத்தின் பிரதமர் – ஒரு தேசத்தின் பிரதமர் அல்ல, வஞ்சக வலை, நெடும்பயணம் போன நீதி, சிங்களம் சிங்களம் சிங்களம் மட்டுமே, ஈழநாடு, மறுபடியும் காந்தி மகாத்மா, ஆதிக்க நரித்தனம் ஆண் என்ன பெண் என்ன, குனிவதா நிமிர்வதா, புதுடில்லி வஞ்சகம், நட்டாற்றில் மூழ்கும் படகுகள், அடிமைகள் ஓய்வதில்லை, மீண்டும் வென்றார் சிறிமாவோ> இனப்பாகுபாடு-இனவெறி -இனஒழிப்பு> வங்கதேசம் போல், உலகத் தமிழர் மாநாடு, தமிழருக்குத் தனிஅரசு, ஆயுதம் செய்வோம், தனி ஈழப் பிரகடனம் ஆகிய தலைப்புகளினூடாக இலங்கையின் இனப்பிரச்சினையின் அரசியல் வரலாறு பேசப்படுகின்றது. பின்னிணைப்பாக புதினம் இணையத் தளத்தில் பிரசுரமான அனிதா பிரதாப் அவர்களுக்கு வழங்கிய நேர்காணலும் இணைக்கப்பட்டிருந்தது.


கோபு, எஸ்.எம்.ஜி ஆகிய அடைமொழிகளில் பத்திரிகையாளர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட எஸ்.எம்.கோபாலரத்தினம், ஈழத்துப் பத்திரிகை உலகில் மூத்த தேர்ச்சிபெற்ற ஒரு பத்திரிகையாளராக எப்போதும் மதிக்கப்பட்டவராக இருந்தார். இன்று ஈழத்துப் பத்திரிகைத்துறையில் சிறந்த விளங்கும் பலர், எஸ்.எம்.ஜி.யின் வழிகாட்டலின்கீழ் வளர்ந்தவர்களே. ஈழத்துப் பத்திரிகைத் துறையில் சுமார் 65 வருட எழுத்துப் பணியாற்றிய கோபாலரத்தினம் மீளாத்துயில் கொண்டுவிட்டார்" - எனப் பதிவு செய்திருக்கிறார் நூலகர் என். செல்வராஜா (தேசம் நெற்).

ஈழத் தமிழ்ப் பத்திரிகையின் முன்னுதாரண ஆசானாக விளங்கிய எஸ்.எம். கோபாலரத்தினம் அவர்கள் காலம் ஆகிவிட்டார். இனி நினைவிலி மனங்களில் அவர் விட்டுச் சென்ற தடங்களைத் தொட்ட பயணங்கள் தொடரும்!!
*********
இறுதி நிகழ்வு
பின்னிணைப்பு  1 :

பின்னிணைப்பு 2 : ஈழத்தில் பத்திரிகைப் பணியில் தான்பெற்ற அரை நூற்றாண்டு அனுபவங்களை தனது தனித்துவமான மொழிநடையில் தொகுத்த தன் வரலாறாக அமையும் 'பத்திரிகைப் பணியில் அரை நூற்றாண்டு' நூல். (2003 - யாழ். பாரதி பதிப்பகம்) 





பின்னிணைப்பு 3 : காணொலி (நன்றி ஆதவன் தொலைக் காட்சி)



- முகிலன்
பாரீசு 16.11.2017

Saturday 4 November 2017

காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுக்கும் கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு - '- உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018'

செய்திச் சரம் 34
தகவல் பகிர்வு :
காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுக்கும் 
கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு - 

'- உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018' - வள்ளுவராண்டு 2049

காக்கைச் சிறகினிலே இதழ் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த இலக்கியவாதி 'கி பி அரவிந்தன்' கனவின் மீதியில் எழும் தடமாக இந்தப் போட்டி  அமைகிறது. 
பாரதி கண்ட "சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !" என்ற கனவை நனவாக்கும் முயற்சிகளில் ஒன்றாகவும் தொடரப்படுகிறது.
சென்னையில் இருந்து வெளிவரும் இலக்கிய மாத இதழ் காக்கைச் சிறகினிலே முன்னெடுக்கும்
மூன்றாவது ஆண்டு இலக்கியப் பரிசு

இதற்கமைய இம்முறை ‘உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018’ நடாத்தப்படுகிறது.

 உலகளாவிய சுயாதீனப் படைப்புகளை  வழங்கும் ஆற்றலாளர்களைக் கௌரவிக்கும் முகமாக இந்தப் போட்டி அமைகிறது. இந்தப் போட்டியில் உற்சாகமாப் பங்கெடுத்துச் சிறப்பிக்க உலகத் தமிழ் எழுத்தாளர்களை அன்போடு அழைக்கிறோம்.
இந்தக் குறுநாவல் தெரிவில் ஏற்கனவே ஊடகங்களில் வெளிவந்த ஆக்கங்கள் பரிசீலனைக்கு எடுக்கப்படமாட்டாது.

தொன்மமும் நீட்சியுமாக நீண்ட நெடிய பயணத்தில் இயங்கும் தமிழ் இயல் - இசை - நாடகமென்ற முத்தளத்தையும் கடந்து புதிய ‘கணினித் தமிழாக’ நான்காவது பரிமாணத்தில் இன்று பவனி வரும் சூழலில், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்!’ என்றபடி பாரெங்கும் விரவித் தொடரும் வாழ்வின் அசைவினைப் பதியும் படைப்புகளை ஊக்குவிக்கும் உலகத் தமிழ்ப் படைப்புப் போட்டியாக இது அமையப் பெறுகிறது.

போட்டி விதி முறைகள் :

1. சுய ஆக்கமாக உலகத் தமிழ் எழுத்தாளர் பங்குபற்றும் போட்டி. இதுவரையில் ஊடகங்களில் பிரசுரமாகாத படைப்பு என்ற உத்தரவாதம் போட்டியாளரால் தரப்படல் வேண்டும்.

2. கணனித் தமிழ் எழுத்துருவில் காக்கை இதழில் அதிகபட்சம் 35 பக்கங்கள் (ஏ4 தாள்களில் 28 - அண்ணளவாக 10000 சொற்களுக்கு மிகைப்படாத) கொண்டனவாக இந்தக் குறுநாவல்கள் அமையலாம்.

3. தமது சுய விபரத்தையும் தொடர்பு விபரத்தையும் தனக்கான மின்னஞ்சலையும் எழுத்தாளர் கொண்டிருத்தல்.
0- படைப்பு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: : kipian2018kaakkaicirakinile@gmail.com
0- தலைப்பு: உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018' எனக் குறிப்பிடல் வேண்டும்.
0- படைப்புகள் அனுப்பவேண்டிய கடைசி நாள் : 05.01.2018

4. நெறியாளர் தமிழ் இலக்கிய ஆர்வலர் இ. பத்மநாப ஐயர் அவர்களது வழிகாட்டுதலுடன் உலகளாவிய தமிழ் எழுத்தாளர்கள் கொண்ட நடுவர் குழு பரீட்சித்து முடிவுகளை அறிவிக்கும்.

நடுவர் குழு :
மதிப்புக்குரிய பேராசிரியர் அ. ராமசாமி (இந்தியா)
மதிப்புக்குரிய எழுத்தாளர் ரஞ்சகுமார் (அவுஸ்திரேலியா)
மதிப்புக்குரிய எழுத்தாளர் இளவாலை விஜயேந்திரன் (நோர்வே)

5. காக்கை இதழ்க் குழுமத்தின் தெரிவுக்குழுவின் முடிவே இறுதியானதாக அமையும். இந்த முடிவுகள் 2018 மார்ச்சு கடைசி வாரத்தில் முறைப்படி காக்கை குழுமத்தினால் வெளியிடப்படும்.

6. பரிசுகள்:

0. முதல் பரிசு : 10 000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்
0. இரண்டாவது பரிசு : 7500 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்
0. மூன்றாவது பரிசு : 5000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்
0. மூன்று ஆறுதல் பரிசுகள் : 2000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்

தெரிவாகும் தகுதிபெற்ற குறுநாவல் எழுத்தாளருக்கு சிறப்புப் பரிசு : காக்கைச் சிறகினிலே ஓர் ஆண்டுச் சந்தா
மேலதிக விபரங்களுக்கு: காக்கைச் சிறகினிலே 
மின்னஞ்சல் - kaakkaicirakinile@gmail.com

...........................................................
தகவல் : முகிலன்
04.11.2017 
...........................................................

தகவல் : முகிலன்
04.11.2017