Monday 30 December 2013

பாரீசு திரையரங்கில் புலம்பெயர் தமிழ்த் திரைப்படம் A Gun & A Ring


பாரீசு திரையரங்கில்  புலம்பெயர்  தமிழ்த் திரைப்படம்
A Gun & A Ring



04.01.2014 சனி மாலை 16.00 மணிக்கு ‘ஒரு துப்பாக்கியும் ஒரு கணையாழியும்’ சிறப்புக் காட்சியாகிறது
அரங்கம் : Cinéma Elysée Biarritz, 22 Rue Quentin-Bauchart, 75008 Paris

எதிர்வரும் சனி மாலை புலம்பெயர் ஈழத் தமிழ் திரைப்படமாக வெளி வந்து உலகின் கவனத்தை ஈர்த்த ‘ஒரு துப்பாக்கியும் ஒரு கணையாழியும்’ என்ற கனடாத்  திரைப்படம்  பாரீசு நகர  மையத்தில்  சிறப்புக் காட்சியாகிறது.  காண்பிக்கப்பட்ட இடமெல்லாம் பார்வையாளர்கள் – படைப்பாளிகள் – விமர்சகர்கள் என சகலரதும் பாராட்டுகளையும் பரிசுகளையும் பெற்றதாய் தலை நிமிர்ந்த தமிழ்த் திரைப்படமாகப் பதிவாகியதொரு  திரைப்படம் ‘ஒரு துப்பாக்கியும் ஒரு கணையாழியும்’. இதற்கான உரிமத்தைப்பெற்று பிரான்சில் வெளியிட்டுப் பெருமை கொள்கிறது ஈழத் தமிழர் திரைப்படச் சங்கம் (LIFT).

திரைத்துறையில் ஈடுபடும் நமது புலம்பெயர்வு வாரிசுக் கலைஞர்கள், செயலர்கள் தங்களது திறனாற்றல்களை அர்ப்பணிப்பான செலவிடுதலுடன் வழங்குகிறார்கள் என்பதை சமூகப் பிரக்ஞையுடைய ஆர்வலர்களும், தனவந்தர்களும், முதலீட்டார்களும், ஊடகங்களும் கவனம்கொள்ள வேண்டிய தருணமிது.

நான்காவது தசாப்தத்தில் பயணமாகும் புலம்பெயர்வு வாழ்வில் தமக்கெனவான திரைமொழியுடன் உலகத்வர்களின் அங்கீகாரத்தையும் பெற்றவாறு திரைப் பவனியாக வெளிப்படத் தொடங்கியுள்ளது எம்மவர்களின் படைப்புகள். கனடாவில் 50 முதல் 100 கனடிய டொலர்கள் பெறுமானமான நுழைவுச் சீட்டுகளுடன் திரையரங்கம் நிறைந்த பார்வையாளர்களுடனும் காட்சிகள் பதிவாகியுள்ளன. பாரீசிலும்  விறுவிறுப்பாக ஆசனப்பதிவுகளும் நடைவெற்றுக் கொண்டிருக்கின்றன.



இந்நிகழ்வில் பார்வையாளர்களுடன் கலந்து சிறப்பிக்கிறார்கள் தயாரிப்பாளர் விஷ்ணு முரளி, இயக்குநர் லெனின் எம். சிவம் மற்றும் நடிகர்களாகப் பங்கேற்ற பாஸ்கர், தேனுகா. பிரான்சில் வாழும் கலைஞனாகிய பாஸ்கர் இப்படத்தில் தனது பங்கேற்பு பற்றிக் குறிப்பிடுகையில் « கனடாத் திரையிடலுக்குப் பின்னரான இரவு விருந்து நிகழ்வில் கலந்து கொண்ட தொம் கூபர் என்ற வெள்ளைக்காரர் ன்னை அழைத்து ‘இயல்பாக நடித்த சிறந்த நடிகன்’ என அனைவர் முன்னிலையிலும் பாராட்டியதை என் வாழ் நாளில் மறக்கவே மாட்டேன் ! » என்றார்.

புலம்பெயர்வு வாழ்வின் நீட்சியில் எமது இளையவர்கள் நம் கண் முன்னாலேயே தமது கலைப்படைபுகளுடன் மிளிர்கிறார்கள் என்பது எமக்கெல்லோருக்குமே பெருமைதானே !!

இப்படம் பற்றிய எண்ணத் தெறிப்புகள் சிலவற்றை நன்றியுடன் பன்முகக் கருத்துகளின் குவியமாகப் பதிவிடுகிறேன்.

« அதிகாலையில் ஒரு வெள்ளைக்காரப் பெண் வழக்கமாக ஓடும் பாதையில் ஓடுகிறாள். வேகமாகப் பறக்கும் பறவைபோல் சட்டென்று காமிராவைக் கடந்துவிடுகிறாள். அவளுடைய பின்பக்கத்தத் தொடரும் காமிரா திடீரென்று அவள் முன்பக்கமாக ஓடுவதைக் காட்டுகிறது. ஏதோ அசம்பாவிதத்திற்கு மனம் தயாராகிறது. சட்டென்று நின்று அந்தப் பெண் நிமிர்ந்து பார்த்தபோது மரத்திலிருந்து ஓர் இளைஞனின் உடல் கயிற்றில் தொங்கி ஆடுகிறது.
ஓர் ஆங்கிலப் படத்தைப் பார்க்க வந்து விட்டோமோ ? என்ற ஐய உணர்வைத் தருகிறது முதல் காட்சி….. »
என விபரிக்கிறார் கனடாவில் இப்படத்தைப் பார்த்த பிரபல்யமான எழுத்தாளர் அ. முத்துலிங்கம். (தீராநதி – நவம்பர் 2013)

« கனடா போன்ற நாட்டில் மிகச் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இருக்கிறார்கள். அதி நவீன காமிரா உபகரணங்களும் உள்ளன. ஆனால் லெனினுக்கு கிடைத்த பட்ஜெட்டில் அதுவெல்லாம் சாத்தியமில்லை. மிகச் சிக்கனமாக இரண்டாம்தர உபகரணங்களையும் தொல்நுட்பக் கலைஞர்களையும் பயன்படுத்தினார். மிகப் பெரிய சவால் படத்தில் பங்குபற்றியவர்கள் முழுநேர நடிகர்களோ தொழில்நுட்பக் கலைஞர்களோ அல்ல. 90 வீதம் பேருக்கு சன்மானம் இல்லை. ஏதோவொரு நிறுவனத்தில் பணியாற்றிய அனைவரும் 14 நாட்கள் விடுப்பு எடுத்துத்தான் படத்தில் படத்தில் வேலை செய்தார்கள். நாளுக்கு 20 மணி நேரப் படப்பிடிப்பு. அத்துடன் டப்பிங் என்பதே கிடையாது. படம்பிடிக்கும்போதே வசனங்களும் பதிவாகின. »
பிரபல்யமான எழுத்தாளர் அ. முத்துலிங்கம்

புலம்பெயர் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல்:
துப்பாக்கியும் கணையாழியும்    
-          கருணா வின்சென்ற்
-           
பல தமிழகத் திரைப்படங்களில் ஈழப்போர் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அவற்றால் ஒரு குறித்த எல்லைகளுக்கப்பால் போகமுடிவதில்லை. போரின் பின்னணியிலிருந்து வந்திருக்கும் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம். அந்தச் சமூகத்தின் கதைகள் நூறாயிரம். ஆனால் உணர்வூற்றோடு புரிந்துகொள்ள வெளியிலிருக்கும் சமூகத்தால் பெருமளவுக்கு முடிவதில்லை. லெனினின் A Gun & A Ring திரைப்படத்தில் வரும் ஆறு கதைகளும் தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவுக்கும் மிகவும் புதியவை.

படத்தின் இறுதியில் நேர்த்தியான ஒரு செய்தி சொல்லப்படுகிறது. வன்னியாக இருந்தாலும் சரி, ஈராக்காக இருந்தாலும் சரி, சூடானாக இருந்தாலும் சரி போரின் பின்னணியிலிருந்து வரும் இருவர் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் விதம் வேறானது. சூடான் இனப்படுகொலையிலிருந்து தப்பித்துவரும் ஒருவருக்கு, ஈழப்போரிலிருந்து மீண்டு வரும் அந்தப் பெண் கூறுகிறாள்: ‘நாங்கள் இருவரும் ஒன்று.’ அந்தக் கதையுடனேயே படம் முடிகிறது. இதுதான் கனடியத் தமிழரான லெனின் எம். சிவம் எழுதி இயக்கிய A Gun & A Ring என்ற தமிழ்த் திரைப்படம் பதிவுசெய்யும் அழுத்தமான செய்தி.
லெனினுக்கு இளவயதிலிருந்தே திரைப்படம் மீது தீராத ஆர்வம் இருந்திருக்கிறது. தந்தையாரின் திரைப்பட மற்றும் நாடக ஆர்வம் குடும்பத்தில் மிகுந்த நெருக்கடிகளை உருவாக்கியிருக்கிறது. ‘படித்து முடித்துவிட்டு எதையாவது செய்’ என்று குடும்பத்தினர் கூறிவிட்டார்கள். லெனின் வோட்டர்லூ பல்கலைக்கழகத்தில் மென்பொருள் பொறியியலாளராகப் படிப்பை முடித்தார். படிப்பை முடித்துப் பணியில் இணைந்ததும் முதல் வேலையாக றயர்சன் பல்கலைக்கழகத்தில் ‘திரைப்படப் பிரதியாக்கத்’ துறையிலும் தொடர்ந்து ஒளிப்பதிவு, தொகுப்பாக்கத் துறைகளிலும் பயின்றிருக்கிறார். அதைத் தொடர்ந்து ‘இனியவர்கள்’, ‘உறுதி’, ‘பக்கத்து வீடு’ போன்ற குறும்படங்களை இயக்கியிருக்கிறார். மூன்று கோணங்களில் கதை சொல்லப்படும் 1999, இவர் இயக்கிய முதல் முழுநீளத் திரைப்படம். இது கனடாவின் வன்கூவர் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

காலச்சுவடு http://www.kalachuvadu.com/issue-163/page40.asp

2.)
எமது வழக்கமான தமிழ்ச் சினிமாவிலிருந்து வேறுபட்டு உண்மையில் சினிமா மொழி எவ்வகையில் அமைதல் அவசியமோ அவ்வகையில் இது படைப்பாக்கப்பட்டுள்ளது. தமிழில் இத்தன்மையான சினிமாக்கள் மிக மிகக் குறைவு. அதன் காரணமாக இதனை எடுத்த எடுப்பில் எமது ரசனைக்குரியதாக்குவதில் சிரமம் இருக்கலாம். அதனோடு ஒன்றித்துப் பயணிக்கும்போது நல்ல சினிமாவை அனுபவித்த இன்பத்தைப் பெறவியலும். நேர்கோட்டுப் பாதையில் கதை சொல்வதாயில்லாமல் பார்வையாளரை சிந்தனைவயப்பட்ட உடன் பயணியாக அழைத்துச் செல்லும் வகையில் காட்சித் தொகுப்புகளைக் கட்டமைத்துச் செல்கிறது இச்சினிமா.

- கலாநிதி ந இரவீந்திரன் | சிரேஷ்ட விரிவுரையாளர், மஹரகம ஆசிரியர் பயிற்சி கலாசாலை| இலங்கை

3.)
இத்திரைப்படத்தில் அத்தனை கதாபாத்திரங்களையும் இணைப்பதாகத் தெரியவில்லை. ஆயினும், ஒரு மோதிரமும், ஒரு துப்பாக்கியும் அத்தனை கதாபாத்திரங்களையும் இணைக்கின்றன. ஆகையால், அவ்விரண்டையும் கதைக்கருவெனவும், அவற்றைச் சுற்றிப் பிணையப்பட்டவற்றைக் கதைக்களமெனவும்தான் கொள்ளமுடியும்.

தான் தேர்ந்தெடுத்த கதைக்களத்தில் தான் தேர்ந்தெடுத்து உலாவவிட்ட கதாபாத்திரங்களின் ஊடாக, கனடாவில் தமிழ்ச்சமூகம் எதிர்கொள்ளும் பல வாழ்வியல் சிக்கல்களை துணிச்சலாக வெளிக்கொணர்ந்திருக்கிறார் இயக்குநர் லெனின். அந்த சிக்கல்கள் குறித்து சிந்தித்திட, இவை குறித்து வெளிப்படையாகப் பேசிடக் களமும் அமைத்திருக்கிறார்.

--  தமிழ்ஸ்.கொம் தளத்திற்காக அன்பு http://archive.is/dnRbr

4.)
வேலை வேலை என்று குடும்பம் பற்றி கவலை கொள்ளாமலும் குழந்தைகள் பற்றி அக்கறைப்படாமலும் ஓடிக் கொண்டிருக்கும் எம்மில் பலர் விடும் தவறுகள் எவ்வாறான பின்விளவுகளை ஏற்படுத்தும் என்பதற்கான எச்சரிக்கை மணியை உரத்து ஒலிக்கச் செய்திருக்கின்றார் லெனின்.

 யுத்தம் முடிந்து விட்டதாக உலகம் எங்கள் மீது எத்தனை முறை வேண்டுமானலும் அடித்துச் சத்தியம் செய்தாலும் எங்கள் மனங்களில் எல்லாம் யுத்தம் மரணம் வரை உயிர் வாழ்ந்து கொண்டே தான் இருக்கும். புலம்பெயர் தேசத்தில் பிறந்து வளரும் அடுத்த தலைமுறை  மீது நாம் செலுத்தும் அதிகாரத்துடன் கூடிய வன்முறைகள் மூலம் எங்கள் வலிகளை கடத்திக் கொண்டிருக்கின்றோம். நாங்கள் நம்பிய எல்லாம் தோற்றுக் கொண்டே இருப்பதால் ....
எங்கள் நம்பிக்கைகள் எல்லாம் பொய்யாகிக் கொண்டே இருப்பதால்… எங்களிடம் இழப்பதற்கு இனி எதுவுமே இல்லை என்றானதால்…

எங்கள் வாழ்கையில் எதோ ஒரு புள்ளியில் துப்பாக்கிச் சன்னங்களால் நாம் காயப்படுத்தப்பட்டுள்ளதால் .....இது எமது கதைகளை பேசும் ஒரு திரைப்படம் என்பதை பார்வையாளனால் உள்வாங்கிக் கொள்ள முடிகின்றது. அது தான் இந்த படைப்பின் வெற்றியாகவும் கருதப்படுகின்றது.


5)
ஒரு துப்பாக்கியும் ஒரு மோதிரமும் இணைக்கும் ஆறு கதைகள் – A Gun & A Ring
இதுவரையில் யாரும் சொல்லாத கதையைச் சொல்ல வேண்டு-மென்ற முனைப்போடு இளம் கனடிய இயக்குநர் லெனின் எம். சிவத்தின் எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு முரளியின் தயாரிப்பில் உருவான ‘A Gun & A Ring’ திரைப்படம் 37வது மொன்றியல் உலகத் திரைப்பட விழாவுக்குத் தெரிவாகியுள்ளது.

ஈழத்துப் போர்கால உயிரிழப்புகள், கொடூர நினைவுகளிலிருந்து மீளவும் முடியாமல் அவற்றை மறக்கவும் முடியாமல்,   தாம் குடியேறிய நாட்டில் புதியதொரு வாழ்வைக் கட்டியமைக்க முனையும் வெவ்வேறு தலைமுறையினர் எதிர்கொள்ளும் கடினமான யதார்த்தத்தை இத்திரைப்படம் ஆழமாக ஆராய முயல்கின்றது.

‘படத்துக்குக் கிடைக்கும் இவ் அங்கீகாரம் எம்மைப் பெருமையுறச் செய்கிறது’ என்று மகிழும் விஷ்ணு முரளி, ‘இங்கே ஒரு புது வாழ்வைக் காண கடினமாக உழைக்கும் எம்மக்களுக்கு எவ்வாறு அவர்களின் கடந்த கால கசப்பான, கொடூரமான நினைவுகள் இடையூறாக இருக்கின்றன என்பது கண்டிப்பாக சொல்லப்பட வேண்டியதொரு கதை’ என்கிறார்.

ஓகஸ்ட் 22 தொடக்கம் செப்ரெம்பர் 02 வரை நடைபெறவுள்ள மொன்றியல் உலகத் திரைப்பட விழாவில் கவனத்தை ஈர்க்கும் உலகத் திரைப்படங்கள் இடம்பெறும்  ’Focus on World Cinema’ பிரிவில் ‘A Gun & A Ring’ திரையிடப்படுகின்றது. வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியாகி, ஆறு இந்தியத் தேசியவிருது களைப் பெற்ற ‘ஆடுகளம்’ திரைப்படமும் 2011ம் ஆண்டு இதே பிரிவில் திரையிடப்பட்டதும் குறிப்பிடத் தக்கது. நீண்ட காலமாக நிகழ்ந்துவரும் கனடாவின் திரைப்பட விழாக்களுள் ஒன்றான இவ்விழா, திரைப் படத் தயாரிப்பாளர் சங்கங்களின் சர்வதேச சம்மேளனத்தின் அங்கீகாரம் பெற்ற ஒரேயொரு வட அமெரிக்கத் திரைப்படப் போட்டி விழாவாகும்.

இளம் தொழில் முனைவர் விஷ்ணு முரளியும், அவரின் தந்தை முகுந்த முரளியும் இணைந்து நிறுவி, ரொறன்ரோவில் இயங்கும் பல்தொடர்பூடக நிறுவனமான Eyecatch Multimedia நிறுவனத்தின்  சுயாதீனத் திரைப்படம் தயாரிக்கும் முதல் முயற்சியாக ‘A Gun & A Ring’ திரைப்படம் உருவாகியுள்ளது.


6.)
ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் (A Gun & a Ring), 2013 ஆம் ஆண்டு கனடாவில் தயாராகி, வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இது சூன் 19, 2013 அன்று சீனாவின் சாங்காய் நகரில் நடைபெற்ற பன்னாட்டுத் திரைப்பட விழாவில், போட்டிக்காகத் திரையிடப்பட்ட முதலாவது தமிழ்த் திரைப்படமாகும். 112 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலிருந்தும் போட்டிக்காக சமர்ப்பிக்கப்பட்ட 1655 திரைப்படங்களில் 12 படங்கள் மட்டுமே போட்டிக்குத் தேர்வாகியிருந்தது குறிப்பிடத்தக்க ஒன்று.

இத்திரைப்படத்தை 1999 என்னும் திரைப்படத்தை இயக்கிய லெனின் எம்.சிவம் எழுதி இயக்கியுள்ளார்.

பின்னிணைப்பு:


 Gun & a Ring
Directed by
Produced by
Vishnu Muralee
Written by
Lenin M. Sivam
Starring
Jon Berrie
Thenuka K
Baskar M
Mathivasan S
Kandasamy G
David B George
Arthur Simeon
Music by
Cinematography
Editing by
Pras Lingam
Studio
Eyecatch Multimedia Inc
Running time
104 minutes
Country
Canada
Language

விமரிசனங்கள்
·         A Gun and A Ring - எங்கட கதை சொல்லும் சினிமா தென்றல் சஞ்சிகக்காக கானா பிரபா
·         ஒரு துப்பாக்கியும் மோதிரமும் திரைப்பட ரசனைக் குறிப்பு, கடவை தளத்திற்காக மெலிஞ்சிமுத்தன்
·         துப்பாக்கியும் கணையாழியும், தாய்வீடு பத்திரிகக்காக பொன்னையா விவேகானந்தன்
·         பார்த்து ரசித்த A GUN AND A RING திரைப்படம், தமிழ் முரசு அவுஸ்ரேலியா தளத்திற்காக செ .பாஸ்கரன்
·         எ கன் அன்ட் ரிங் (ஒரு துப்பாக்கியும் மோதிரமும்), வணக்கம்லண்டன் தளத்திற்காக கலாநிதி ந இரவீந்திரன்
·         என்-பார்வையில், மறுமொழி தளத்திற்காக சிவதாசன்
·         A Gun & A Ring திரைப்பட விமர்சனம், தேசம் தளத்திற்காக நட்சத்திரன் செவ்விந்தியன்
·         போருக்குப் பின்னான தமிழ்த் திரைப்படங்கள், இனியொரு தளத்திற்காக நட்சத்திரன் ரதன்
வலைத்தளங்கள்
·         வலைத்தளம்

நன்றி: இணைய வழங்கிகள்
தகவல் : சலனம் முகுந்தன்
பாரீசு 30.12.2013

Wednesday 25 December 2013

பிரான்சில் தமிழரின் இசைத் தொன்ம அடையாளத்தை வெளிப்படுத்தும் 'பறை'

பறை - பறை

பறை எமது இசைத் தொன்மச் சான்றாக கவனம்கொள்ள வைக்கும் கருவி. இதனால் வெளிப்படுத்தப்படும்  பேரொலி மொழி கடந்ததாக உலகத்தவர்களை திரும்பிப்பார்க்க வைக்கும் தனிச்சிறப்பையும் கொண்டிருக்கிறது.

எதிர்வரும் 19.01.2013 அன்று பாரீசு நகரில் நடைபெறவுள்ள தைப்பொங்கல் - தமிழர் திருநாள் நிகழ்வில் சிறப்பு இசையரங்கமாக பறையாட்டம் இடம்பெறவுள்ளது. புலம்பெயர்வு வாழ்வில் பிரான்சில் முதற் தடவையாக அரங்க நிகழ்வாகிறது பறையாட்டம். எமது மூதாதையினர் தந்தளித்த  தொன்ம இசைக் கருவியின் அதிர்வுகள் காற்றில் பயணித்து மொழி கடந்ததாக பல்லினச் செவிகளுக்குள் நுழைந்து தமிழரின் தனித்துவத்தைப் பறையும்.

1) பறை (இசைக்கருவி)
ஒரு தமிழிசைக் கருவியாகும். இது தோலால் ஆன மேளமாகும். 'பறை' என்ற சொல் பேச்சைக் குறிப்பதாகும். 'பேசு' எனப்பொருள்படும் 'அறை' என்ற சொல்லினின்று 'பறை' தோன்றியது. (நன்னூல் : 458). பேசுவதை இசைக்கவல்ல தாளக் கருவி 'பறை' எனப்பட்டது. பன்னெடுங்கால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள பறை, ஓர் இசைக் கருவி மட்டுமல்ல தொல்குடித் தமிழ்ச் சமூகத்தின் சொத்து. தோலிசைக் கருவிகளின் தாய். தமிழினத்தின் தொன்மையான அடையாளம். உழைக்கும் மக்களின் இசைக் களஞ்சியம். தமிழர் வாழ்வியலின் முகம் என வருணிக்கப்படுகிறது."பறை என்பது ஓடும் இசையை ஒழுங்கு பெற நிறுத்தி ஓர் அளவோடு சீரோடு, ஒத்த அழகோடு நடக்க, இசைக்கு நடை கற்பிக்கும் கருவி' என முனைவர் வளர்மதி தன்னுடைய "பறை' ஆய்வு நூலில் விளக்குகிறார்


2.) பறை எனும் சொல் 
ஒரு தூய தமிழ் சொல்லாகும். இச்சொல் பறை எனும் பெயரில் ஒரு இசைக் கருவிக்கான பெயர்ச்சொல்லாக பயன்பட்டாலும், வினைச்சொல்லின் பயன்பாடுகளும் உள்ளன. குறிப்பாக இச்சொல்லினதும், இச்சொல் தொடர்பான சொற்பயன்பாடுகளும் யாழ்ப்பாணத் தமிழர் பேச்சு வழக்கில் இன்றும் உள்ளனவைகளாகும்.

3.) பறை ஆட்டம் அல்லது தப்பாட்டம் 
என்பது தமிழர்களின் பாரம்பரியமான நடனம் ஆகும். பறையாட்டம் உணர்ச்சி மிக்கது. மற்றும் எழுச்சி மிகுந்தது. அதிர்ந்தெழும் பறையின் ஓசைக்கேற்ப ஆடக்கூடியது என்பதால் பறையாட்டம் கிளர்ந்தெழும் உடல் அசைவுகளைக் கொண்டது. ஆதி மனித சமூகம் தங்கள் கூடுதலுக்காகவும், தங்கள் குழுவுக்கு ஆபத்துக்களை உணர்த்தவும், விலங்குகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் எழுப்பிக் கொண்ட சத்தம் தான் பறையாட்டத்தின் மூலம் எனக் கருதப்படுகிறது. ஆவேசம், மகிழ்ச்சி, உற்சாகம் என உணர்ச்சிகளை எழுப்பி, கேட்போரை ஒரே நேர்க்கோட்டில் இணைக்கும் சக்தி வாய்ந்தது இது. தப்பு அல்லது பறை என்ற இசைக்கருவியை இசைத்து ஆடப்படுவதால் இது தப்பாட்டம் அல்லது பறையாட்டம் என்று அழைக்கப்படுகிறது.[1] இது ஒரு போர் இசைக்கருவியாகும். போர்ப்பறை என்றும் அழைக்கிறார்கள்.
எனவாக விக்கிபீடியா பதிவுசெய்துள்ளது. பறை தொடர்பான காணொலிப் பதிவை மேலதிக புரிதலுக்காக கீழே இணைக்கிறேன்.




4.) புலம்பெயர்வு வாழ்வில் 'பறை'யின் வகிபாகம்
பாரீசில் நடந்த பயிற்சிப்பட்டறை அடுத்த தலைமுறையினரின் உற்சாகமான ஈடுபாட்டை வெளிப்படுத்தியது. எமது அடையாளத்தை தகவமைக்கும் தேடலுடனாகத் தொடரும் புலம்பெயர்வு வாழ்வுவின் நீட்சியில்  'பறை' முக்கியமானதொரு வகிபாகத்தை எடுக்கப்போகிறது.



00000 00000

பின்னிணைப்பு: 

வீட்டிலிருந்தவாறே தமிழரின் தொன்ம் இசைக் கருவியான பறையை இலகுவாகக் கற்றுக் கொள்ள பின்வரும் இணைப்புகளுடன் தொடரலாம்













அமெரிக்காவில் முறையாகப் பயிற்றப்பட்ட  'பறை' பட்டறையின் பதிவைக் காண்க:


பிற்குறிப்பு: 

இணைய வலையூடாகத் தொடரும் எனது பகிர்வு சில மாதங்கள் சற்று ஓய்ந்திருந்தது. புலம்பெயர்வு வாழ்வில் பல பணிகளை மேற்கொள்ள எத்தனிக்கும்போது சிலவற்றைத் தொடர முடியாது போகிறது. என்னை அனைவரும் மன்னிக்க வேண்டும்.
எதிர்வரும் 19.01.2014 ஞாயிறு அன்று பிரான்சு சிலம்பு சங்கத்தின் ஏற்பாட்டில் எட்டாவது தடவையாக 'புலம்பெயர் தமிழர் திருநாள்' நிகழ்வு நடக்கவுள்ளது. இதுவரைகாலமும் பாரீசு புறநகரத்தில் நடாத்தப்பட்ட இந்நிகழ்வு பாரீசு நகரத்தினுள் முதற்தடவையாக இடம்பெறவுள்ளது.
சென்னையிலிருந்து வெளிவரும் ‘காக்கைச் சிறகினிலே’ மாத சஞ்சிகை (சனவரி 2014) « தமிழர் திருநாள் » சிறப்பிதழாக வெளிவருகிறது.
தொடர்பு முகவரி :
காக்கை, 288 டாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 600 005


நன்றி : விக்கிபீடியா மற்றும் யூ ருயூப்
இணைப்பு : முகிலன் 20.12.2013