Monday 5 September 2016

ஜோக்கர்களும் ஜோக்குகளும் - ஜோக்கரான நானும்!!

குஞ்சரம் 26
ஜோக்கர்களும் ஜோக்குகளும் - ஜோக்கரான நானும்!!

புலப்பெயர்வின் நீட்சியில் நீண்ட இடைவெளியின் பின்னர் நண்பரது வீட்டுக்குச் சென்றிருந்தேன். 'ஜோக்கர் - சினிமா பார்த்தபோது நீங்கள்தான் ஞாபத்தில் தெரிந்தீர்கள்?' எனத் தந்திரச் சிரிப்புடன் கூறினார் நண்பர். ஏதுமே பேசாது நான் நிதானமாக அவரை உற்று நோக்கினேன். அவரது துணைவியார் சட்டென முகத்தைத் திருப்பியவாறு அவ்விடத்தைவிட்டு அகன்றார்.
'என்னது? குடும்பமாக ஜோக்கர் படத்தை இங்கும் பார்த்திருக்கிறார்கள். மிக்க நன்றி! - எனது வாழ்வும் ஆழமான பதிவை சிலருக்குத் தந்துதான் இருக்கிறது!' என்ற திருப்தியுடன் மௌனித்தேன். மனதில் சிவகுமாரது வெளிப்படையான துணிவான கருத்துதான் நிழலாடியது. . "யார் ஜோக்கர்கள்?"
ஒரு படைப்பும் அது கிளறிடும் பரிவலைகளும் - எள்ளல்களும் – படைப்பாளியின் வெற்றி!!

00000
நீண்ட இடைவெளியின் பின்னர் எனது வலைப் பக்கத்தினுள் இடுகையிடுவதற்கு முனைகிறேன். நிறையத் தகவல்கள் தேங்கிக் கிடக்கின்றன. வசதிபோல் பதிவுகளை இடத் தயாராகி வருகிறேன். இதற்கு உந்துதல் அளித்தது நண்பனின் எள்ளல் உரையாடல். நன்றிகள்!!
00000
பிரான்சில் தமிழ்த் திரை இசைப் பாடல்களை பிரதியிடும் 'வானம்பாடிகள் 2016' நிகழ்வு பார்ப்பதற்காக புறப்பட்ட வேளை. இத்தகைய நிகழ்வுகளை தொடர்ந்து பார்க்கும் நண்பன் நினைவுக்கு வந்தார். நீண்ட கால இடைவேளையின் பின்னர்  பயணத் துணையாக அவர்களுடன் இணைந்து செல்லும் நோக்கோடு அவரது வீட்டுக்குச் செல்கிறேன்.
இந்த நண்பர் வீட்டிற்கு எப்போது சென்றாலும் ஒரு விவாதத்தை கிளறி விவாதிப்பதைப் பழக்கமாக வைப்பது அவரது வழக்கம். நொடிக்கு நொடி 'நீயா நானா' பற்றிக் கூறிக் கொண்டே இருப்பார். இரசனையாளர். புலம்பெயர் வாழ்வின் மிடுக்கோடான பகட்டான பிரமாண்ட இரசனைகளை அள்ளி வீசுவார். ரகுமான்  - சங்கர் - மணிரெத்தினம் போன்ற பிரமாண்டங்களது செயல் மீது விருப்புடைய இரசிகன். நவீனத்வதும் பற்றி அதிகமாக வெளிப்படுத்துவார்.
புலப் பெயர்வின் நீட்சியிலும் நானோ தமிழின் தனித்துவம் - எளிமையுடனான தொன்மமும் நீட்சியுமான வாழ்வு - இளையராசா - எமக்கான அடையாளம் என்பதான இரசனையுடைய வாழ்வுடையவன்.
வழமையாக பலருடன் விவாத மேடையாக இருக்கும் இவரது வீடு. எனது துணைவியாரோ 'என்ன கேட்டாலும் பேசாது இருக்க வேண்டும்!' என தடையுத்தரவை என்  மீது பிறப்பித்தே அங்கு செல்ல என்னை அனுமதிப்பார். ஆனால் இன்று வெறுமனே நான் மட்டுமே அவர்களோடு இருந்தேன். இன்றைய பேசு பொருளாகியது ஜோக்கர்.
"ஜோக்கர்  பார்த்து விட்டீர்களா?"
"ஓம்!! தமிழில் மிகவும் வித்தியாசமான படம்! அசந்து போய்விட்டேன். இப்படியும் தமிழில் படம் எடுப்பார்களா? என்றும் நினைத்தேன்" என்றேன் புன்முறுவலோடு.
"படம் முழுக்கப் பார்த்துவிட்டீர்களா?" அவரது துணைவியார்.
"ஓம்!! இப்படியான படங்களை நான் ஒருபோதும் விட மாட்டேன்!"
"தெளிவில்லாத பிரதியாக இருந்ததால் இலகுவாகப் பார்க்க முடியவில்லை!" அவரது துணைவி.
புலப் பெயர்வில் இத்தகைய படங்களை இணையத் தளங்களிலிருந்துதான் நாம் பார்ப்பது வழக்கம். இங்குள்ள திரை அரங்குகளுக்கு இவை ஒரு போதும் வருவதே இல்லை.
"இந்தப் படத்தில் பேசுபொருளாக்கிய 'மலக் கழிவிடம்' எனக்கு மிகவும் பிடித்தது. இந்தியாவில் வாழ்ந்த அனுபவத்தில் இது அருமையான கதையாடலாக இயக்குநர் வெளிக் கொணர்ந்திருக்கிறார். இந்தியாவில் இத்தகைய வாழ்வை அனுபவித்த எவராலும் ஒருபோதும் மறக்கவே முடியாது!
அதில் வந்த எளிமையான காதலும் அந்தக் காதலியின் இயல்பான கோரிக்கையும் அதனை நிறைவேற்ற முனையும் வாழ்வும் அங்கு மலிந்துள்ள ஊழலும் - பகட்டான அரசும் என படம் பன்முகத் தளத்தில் பயணிக்கும் அனுபவத்தை இந்தப் புலம்பெயர்ந்த வாழ்வின் நுகர்வு அனுபவத்தில் நோக்க பரிதாபகரமாக இருக்கிறது. இது 21வது நூற்றாண்டு என நினைக்கவே கவலையாக இருக்கிறது." என்கிறேன் இரசனைத் தன்மையுடன்.
" இப்ப அப்படிப் பார்க்க முடியாது இந்தியா எங்கேயோ போய்விட்டது! நவீன வளர்ச்சியும் நவீனத்தனமும் வசதிகளும் அங்க பெருகி செழிப்படைந்துள்ளது. முன்னர் மாதிரி இப்போது அங்க இல்லை" என்றார் முகத்தை இறுக்கமாக வைத்தவாறு.
இவரது சகோதரர் குடும்பம் சென்னையில் நீண்ட காலமாக வாழ்ந்திருந்தது. இதன் மூலம் பல தடவைகள் அங்கு பயணித்தவர்களாக இவர்கள் இருந்தார்கள். ஆனால் நானோ அங்கு பத்து வருடங்களுக்கு மேலாக வாழ்ந்தவன். எனது வாழ்வும் செயற்பாடுகளுமாக நிறையவே நட்புகளைப் பெற்றவனாகி இன்று வரையில் நட்புறவோடிருப்பவன்.
"உலகத்தில் இந்தியா என நினைக்கும் போது  இன்றும் நினைவுக்கு வருவது இந்த மனிதக் கழிவகற்றல்தானே! இந்தப் படத்தில் பாத்திரங்களை என்ன மாதிரியாக அமைத்திருக்கிறார் இயக்குநர் -இது முற்றிலும் புதுமையானது!" என்கிறேன் நிமிர்ந்து பார்த்தவாறு.
"இந்தப் படத்தைப் பார்தபோது நாம் உங்களைத்தான் நினைத்து சிரித்தோம்! அப்படியான பாத்திரமாக ஜோக்கர் இருந்தார்!" என்றார் பரிகாசச் சிரிப்போடு.
ஏதுமே பேசாது நான் நிதானமாக அவரை உற்று நோக்கினேன். அவரது துணைவியார் சட்டென முகத்தைத் திருப்பியவாறு அவ்விடத்தைவிட்டு அகன்றார்.
'என்னது? குடும்பமாக ஜோக்கர் படத்தை இங்கும் பார்த்திருக்கிறார்கள். மிக்க நன்றி! - எனது வாழ்வும் ஆழமான பதிவை சிலருக்குத் தந்துதான் இருக்கிறது!' என்ற திருப்தியுடன் மௌனித்தேன். மனதில் சிவகுமாரது வெளிப்படையான துணிவான கருத்துதான் நிழலாடியது. . "யார் ஜோக்கர்கள்?"
ஜோக்கர் - சினிமா வெளிவந்தபோது 'இப்படியும் தமிழில் சினிமா வருமா?' என மலைத்த சில ஆயிரம் பேர்களில் நானும் ஒருவன். தமிழ்த் திரை அடுத்த கட்டத் தடத்தில் பயணிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த தடங்களில் திரை மொழியினை இரசிப்பவர்களாக மக்களது இரசனை உயர்ந்திருக்கிறது. இத்தகைய படைப்புகளது வெற்றிகள் திரைக் கரிசனையாளர்களால் பெரிதும் கவனத்துக்குள்ளாகின்றன.
0000000

திரை இரசனை : ஜோக்கர்
'ஜோக்கர்களும் - ஜோக்குக்களும்'
"தமிழில் இப்படியாகவும் ஒரு திரைப்படமா?" என இப்படம் பார்த்ததும் நினைக்க வைத்த உணர்வை நம்மில் பலர் கொண்டிருப்போம்.
பிறநாடுகளிலிருந்து இந்தியா சென்ற பலருக்கும் துணுக்குற வைத்த காட்சிப் படிமங்களில் 'மனித மலங் கழிப்பு' முக்கிய இடத்தைப் பெற்றதென்பதை யாராலும் மறுக்க முடியாது.
இதை பேசு பொருளாக்கிய படைப்பாளி ராஜுமுருகன் குழுவினரது துணிச்சலைப் பாராட்டியே ஆக வேண்டும். வாழ்த்துகள்!!
தமிழ்த் திரை இரசனை தெளிவான புரிதல்களுடன் மேலெழவும் சிறந்த படைப்புகள் வெளிவரவுள்ளன என்பதற்கான கட்டியக்காரனின் அறிவித்தலாகவே ராஜுமுருகன் குழுவினரது செயல் பறை சாற்றுகிறது.
இந்தத் திரைப்படம் தொடர்பாக நடிகர் சிவக்குமார் வெளியிட்ட காணொலிப் பகிர்வை மகிழ்வோடு பகிர்கிறேன். நன்றி: யூரியூப் இணைய வழங்கி

உள்ளீடு : முகிலன்

பாரீசு 05.09.2016

Wednesday 23 March 2016

முகம்கொள்: கவிஞர் கி பி அரவிந்தன் (17.09.1953 - 08.03.2015) முதலாவது ஆண்டு நினைவேந்தல் - பாரீசு பிரான்சு

செய்திச் சரம் 31

முகம்கொள்: கவிஞர் கி பி அரவிந்தன் (17.09.1953 - 08.03.2015)
முதலாவது ஆண்டு நினைவேந்தல் - பாரீசு பிரான்சு


கிபி அரவிந்தன் நினைவு  - புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016  - முடிவுகள் அறிக்கையிடல்!

கவிஞரும் எழுத்தாளரும் சமூகக் கரிசனையாளருமாக புலம்பெயர்வு வாழ்வில் எம்மோடு பாரீசில் வாழ்ந்து மறைந்த கி பி அரவிந்தன் அவர்களது முதலாவது ஆண்டு நினைவேந்தல் பாரீசில் எதிர்வரும் 26.03.2016 சனி மாலை 16.00 மணி முதல் 20.00 மணி வரை நடைபெற ஏற்பாடாகி்யுள்ளது.

Paroisse St Bernard de Chapelle,
5 rue pierre l'ermite, 75018 Paris


இங்கு சிறப்பு அரங்கமாக
காக்கைச் சிறகினிலே (சென்னை) இதழ்க் குழுமம் நடாத்திய 

கிபி அரவிந்தன் நினைவு  - புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016  - முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.


சென்னையிலிருந்து வெளிவரும் இலக்கிய சஞ்சிகையான 'காக்கைச் சிறகினிலே' இதழ்க் குழுமம் ஆண்டு தோறும் கவிஞர் கிபி அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசுத் திட்டமொன்றை நடாத்துவதென அறிவித்தது. அந்தவகையில் கவிஞர் கிபி அரவிந்தனது முலாவது நினைவையொட்டி 'புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016' யை முன்னெடுத்தது. இப்போட்டியின் கடைசி நாளாக 31. 01. 2016 என அறிவிக்கப்பட்டு முடிவு கிபி அரவிந்தன் முதலாவது நினைவு மாதமான மார்ச்சு 2016 இல் அறிவிக்கப்படும் எனவும் வெளிப்படுத்தப்பட்டது.


இதன்படியாக இப்போட்டியின் முடிவு 26. 03. 2016 சனியன்று பாரீசில் நடைபெற இருக்கும் நினைவேந்தல் நிகழ்வில் அறிவிக்கப்படவுள்ளது. இப்போட்டியின்
நெறியாளர் தமிழ் இலக்கிய ஆர்வலர் இ. பத்மநாப ஐயர் அவர்களது வழிகாட்டுதலுடன் உலகளாவிய தமிழ் எழுத்தாளர்கள் கொண்ட நடுவர் குழுவினராக 
மதிப்புக்குரிய அ. முத்துலிங்கம் (கனடா), 
மதிப்புக்குரிய மு புஸ்பராசன் (இங்கிலாந்து), 
மதிப்பிற்குரிய இளவாலை விஜயேந்திரன் (நோர்வே), 
மதிப்புக்குரிய அ. யேசுராசா (இலங்கை), 
மதிப்பிற்குரிய ஜோ டி குருஸ் (தமிழ்நாடு)
கலந்து கொண்டனர்.



.........................................................
முதல் பரிசு                      10 000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்
இரண்டாவது பரிசு         7500 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்
மூன்றாவது பரிசு           5000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்


மூன்று ஆறுதல் பரிசுகள்  : காக்கைச் சிறகினிலே ஓர் ஆண்டு வெளிநாட்டுச் சந்தாவும் சான்றிதழும்
...........................................................

நிகழ்வரங்கில்
    • இடதுசாரி அரசியல் சிந்தனையாளர்,  ஆய்வாளர்  பி.. காதர் (இங்கிலாந்து)
    • உரைஞர்,  ஆசிரியர் 'செழுங்கலைப் புலவர்' குமரன் (ஜேர்மனி)
    • வில்லிசையாளர்,  கலைஞர்,  எழுத்தாளர் நாச்சிமார் கோவிலடி ராஜன் (ஜேர்மனி)
    • பத்திரிகையாளர், படைப்பாளி நஞ்சுண்ட காடு குணா கவியழகன் (நெதர்லாந்து)
    • புலம்பெயர் ஊடகர், எழுத்தாளர், தமிழ்-3 வானொலி நெறியாளர் றூபன் சிவராசா (நோர்வே)
    • முன்னைநாள் கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைப் பீடத் தலைவர் பாலசுகுமார் (இங்கிலாந்து)
    • கலைஞர்கள் பரா, இந்திரன் குழு (பிரான்சு) 
    • மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள், சமூகக் கரிசனையாளர்கள் பங்கேற்கிறார்கள்


முதலாவது ஆண்டு நினைவு மலர் வெளியீடு 
கவிஞர் கிபி அரவிந்தனது  முதலாவது ஆண்டு நினைவு மலரை காக்கை இதழ்க் குழுமம் இவ் வேளையில் வெளியிடுகிறது. இத் தொகுப்பு நூலின் நெறியாளர் தோழர் எஸ்.வி.ராஜதுரை அவர்களும் தொகுப்பாளர்களாக திருமதி சுமத்தி பிரான்சிஸ் (பிரான்சு) , முகிலன் (பிரான்சு), ச. மா. பன்னீர்ச்செல்வம் (தமிழ்நாடு) ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.  நூல் வடிவமைப்பினை பசீர் (பைன்லைன்) மேற்கொண்டார். காக்கை வெளியிட்டுள்ளது. 
நூல் விபரம் :  டம்மி 1*8 -  பக்கங்கள் 300 முதலாவது பதிப்பு - மார்ச்சு 2016

000000


00000

நூல் கிடைக்குமிடம்
காக்கை
288 டாக்டர் நடேசன் சாலை, 
திருவல்லிக் கேணி, 
சென்னை 600 005. 
இந்தியா
புலம்பெயர் நாடுகளில் :
Mme Sumathri FRANCIS,


மண்டப விபரம்: https://plus.google.com/109454874060414301814/about
.
அனைவரும் வருக!

 - ஏற்பாடு திருமதி சுமதி பிரான்சிஸ் குடும்பம்
மற்றும் முகிலன்
000000



தொடர்பான தகவல்கள் :



முகிலன்
பாரீசு 23.03.2016