Saturday 29 August 2009

சுவட்டுச் சரம் -1 நினைவுத்துளிகள் (12)


சுவட்டுச் சரம் -1
பெர்லின் புலம்பெயர்வு தொடக்க கால நினைவுகள்
நினைவுத்துளிகள் (12)

- குணன்

"புலப்பெயர் வா
ழ்க்கை புதிரென மாறிப்போனால்...........!", என்ற எண்ணம் எழுவது ஒன்றும் வரலாற்றில் அறியாத ஒன்றல்ல.

ஐரோப்பாவில் வாழ்ந்த அறுபதாண்டுகள் கடந்த யூத இனமக்களின் அழிப்பும், அதன் வி
ளைவாக உலகம் முழுமையாக கண்ட மாற்றங்களும் என இன்றும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் கவனம் பெற்றிருப்பதை எப்படித்தான் மறக்கடிக்க முடியும்!
இந்துக்களின் (சைவர்களுக்கு இதில் சம்பந்தமில்லை) சமய அடையாளச் சின்னமாக கூறப்படும் "சுவாஸ்திகா", கொடுங்கோலன் அடொல்வ் கிட்லர் தனது ஆட்சிச் சின்னமாக தெரிவு செய்திருந்ததும் ஒன்றுதானே! ஆரம்பத்தில் ஐரோப்பாவில் வாழ்ந்த ஒரு கோடி பத்து இலட்சம் யூத மக்களை அழிப்பதற்கு, அடையாளங்கண்டு கொள்ள ஏதுவாக, தனது ஏவலாளர்களைக் கொண்டு, அவர்கள் வாழும் இல்லங்கள், வர்த்தக நிலையங்கள் யாவையும் அடையாளப்படுத்த, நுழைவாயில் கதவுகளில் பொறிக்கப்பட்டு, பின்னர் அவற்றை தீயிட்டு கொளுத்தியும், அங்கிருந்தவர்களை காரணமின்றி கைதுசெய்தும், பல்வேறு வதை முகாங்களுக்கு கொண்டு சென்று ஆண், பெண் என்ற பேதமின்றி, சிறையிலிட்டு, வதைத்து சாகடித்ததும், தங்க வெள்ளியினால் கட்டிய பற்களை களைந்து குவித்ததும், அவர்களின் தலை முடிகளை தலையணைகளுக்கு பயன்படுத்தி தனது இராணுவ வீரர்களுக்கு வழங்கியும், கொன்று குவிக்கப்பட்டவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டு, கிடைத்த சாம்பலை, ஆஸ்திரியா (கிட்லர் பிறந்த நாடு) வயல்களில் உரமாக பாவிக்கப்பட்டதும், நாசிப்படைகளின் செயல்களாகி கறைபடிந்த வரலாறாகிவிட்டது!
இவ்வாறு நடந்தேறிய வரலாற்றுக்கு மூலகாரணம் யாதென ஆராயும்பொழுது, இவ்வாறான செயல்களை நிறைவேற்ற கிட்லரும் அவனது கூட்டமும் 20-1-1942ல், பேர்லின் வான்சி என்ற இடத்தில் "வான்சி" மாளிகையில் கூடி எடுத்த தீர்மானத்தின்படி இரண்டாவது உலக யுத்தம் ஏற்படக் காரணியாகி 60 இலட்சம் மக்கள் உயிர் பறிக்கப்பட வழிகாட்டியதெனலாம்! உரோமர்களிடம், இஸ்ரேல் வீழ்ந்து, தங்கள் தாயகத்தை இழந்த மக்கள், ஐரோப்பிய நாடுகளில் புகலிடந்தேடி வந்து, தங்கள் உழைப்பால் உயர்வடைந்தார்கள்! இதன் விளைவே, பின்னர், இவர்களின் முடிவுக்கும் காரணமாகியது! ஆயினும், அன்று "அழிவுக்கான தீர்மானம்" எடுத்த அந்த வான்சி மாளிகை, இன்று அருங்காட்சியகமாக மாற்றப்பட்டிருப்பதும் கூட வரலாறு தான்!

இன்று, பல்வேறு நாடுகளில் பலகோடி பல்லின பாவப்பட்ட மக்கள், உலகப் பந்தில், உயிர்களை மட்டும் காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தஙகளுக்கு உட்பட்டவர்களாக, சொந்த நாடுகளிலும், பக்கத்து நாடுகளிலிலும், தூர நாடுகளிலும்
இடம்பெயர்ந்தும், புலம் பெயர்ந்தும் உள்ளார்கள்! இது ஓர் உண்மையாகக் காணமுடிகிற மனித அவலம் ஆகும்!

ஐரொப்பிய நாடுகளாகிய பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து போன்றவற்றில் புலப்பெயர்வுக்கு முன்பிருந்தே நூற்றாண்டு காலமாக, காலனித்துவ காலம் முதல் வந்த சுதேசிகளான இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் போன்ற தெற்காசிய நாடுகளில் இருந்து வந்து பெருந்தொகையில் வாழ்கிறார்கள். சுவற்சிலாந்து, ஒல்லாந்து, பெல்ஜியம் மற்றும் நோர்வே, சுவிடன், டென்மார்க் போன்ற இதர ஐரோப்பிய நாடுகளிலும் இன்று குடியேறி வாழ்கிறார்கள். ஆயினும் முதன் முதல் ஐரொப்பிய கண்டத்திற்கு பிதா பத்தலோமிய சிகன் பால்க் என்ற ஜெர்மனிய தமிழறிஞரால், மலையப்பன் என்ற தமிழர், டென்மார்க்
மொழி கற்று அழைத்து வரப்பட்டு, டென்மார்க் மன்னர் சபையில் தமிழிலும், டேனிஸ் மொழியிலும் உரையாற்றினார் எனவும் அப்போது, தமிழ் நாட்டின் தரங்கம்பாடி துறைமுகப்பகுதி டென்மார்க் மன்னரின் ஆளுமைக்குட்பட்டாக இருந்தது!
பிதா சீகன் பால்க் பாதிரியார்(Ziegenbalg), மலையப்பன் மூலம் விரைந்து தமிழ்மொழியைக் கற்று, தமிழ் நூல்களில் அதிக ஆர்வங்கொண்டவராய் தமிழ்மொழி மீது தாழாத பற்றுடையவராய் நூல்கள், ஓலைச் சுவடிகள், நீதி நூல்கள், வைத்திய நூல்கள் என (இன்று மறைந்து விட்ட)பலவற்றை, தனது தாய் நாடாகிய ஜேர்மனிக்கு எடுத்து வந்தார். இந்நூல்கள் இன்றும் (முன்னைய கிழக்கு ஜெர்மனின் கல(Kalle) பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் பேணப்பட்டுள்ளன. இன்றைய புலப்பெயர்வின் இளைய தலைமுறையினருள் தமிழார்வமிக்க, ஜேர்மனிய மொழியறிந்தவர்கள் இது பற்றிய தேடல்களில் ஆர்வங்காட்டுவது அவசியமாகும்!

டேனிஸ் மன்னரின் வேண்டுகொளை ஏற்றுக்கொண்ட, ஜேர்மானிய பாதிரியார் தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெற்ற பின்னர், தமிழ்மொழியின் இலக்கண, இலக்கிய வளங்கள் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்ட பின்னர், தமிழரின் நீண்ட வரலாற்றுச் சிறப்பை உணர்ந்தார்!

14ம் பிடரிக் மன்னர் (1671-1730), டென்மார்க்-நோர்வே மன்னராக விளங்கியவர் தமிழ்மொழிக்கு உரிய பல வரலாற்றுச் சான்றுகள், மேலை நாட்டுத் தமிழ் அறிஞர்கள், அவர்கள் ஆற்றிய அரும் பெருந்தொண்
டுகள் பற்றிய செய்திகளை, குறிப்பாக இன்று, புலம் பெயர்ந்தும், இங்கு பிறந்தும், கல்வி கற்றும் வாழ்கின்ற புதிய தலைமுறைத் தமிழர்கள், இங்கிலாந்து, டென்மார்க்- நோர்வே, சுவிடன், பிரான்ஸ், சுவிஸ், ஒல்லாந்து, ஜேர்மனி, இத்தாலி மற்றும் போர்த்துக்கல், சோவியத் ரஸ்யா செக் குடியரசு போன்ற இன்ன பிற நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள், தமிழ் மொழி இலக்கண, இலக்கியம், பண்பாடு போன்றவற்றிற்கு ஆற்றிய சேவைகள் பற்றி மீள்பார்வை செய்தலையும், ஆவணப் பதிவிடலையும் தலையான பணியாகக் கொள்ள முன்வரவேண்டும். வருவார்களா?

00000000000000000000000000

செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ் மொழி மிகப் பெரிய வரலாற்றுப் பொக்கிசமுடையது. இதன் வழித் தோன்றல்களான பிறப்பைப் பெற்று, 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்!' எனவான உலக மானிடப் பண்பில் ஊறிய எமது எதிர்காலச் சந்ததியினருக்கு நிறையவே பல பணிகளுண்டு. கடல்கோளால் காணாமல் போன சுவடிகளும் எழுத்துக்களும் ஏராளம். ஒரு மொழியின் இலக்கியங்கள் தொலைந்து போகிறது என்றால் அது அந்த பண்பாடு தொலைந்து போனதாகவே அர்த்தம். இதனை நன்கு உணர்ந்திருந்ததால்தான் அன்றைய பெரியோர்கள், அச்சு எந்திரம் என்ற கலாச்சார மீட்டுருவாக்க எந்திரத்தை நன்கு பயன்படுத்தி நமக்கு நமது பண்பாடு, பழக்க வழக்கங்கள், சமய நடைமுறைகள் ஆகியவற்றை பதிப்புகள் மூலம் மீட்டுத் தந்துள்ளனர். இன்று ஐரோப்பா எங்கும் தடம்பதித்துள்ள தமிழ்த் தலைமுறையினரின் சந்ததிகள் தமது தொன்மம் தொடர்பான நினைவு மீட்டலும் நீட்சியுமான அரும்பணிகளில் ஈடுபடும் காலம் தொலைவில் இல்லை. இந்தவகையில் முன்னைய காலத்தில் தமிழின் மீட்சியில் பெரும்பங்காற்றிய சிலவற்றை இங்கு குறிப்பாகப் பதிவிடுகிறேன்.

தமிழும் ஐரோப்பாவும்

ஆசிய, இந்திய மொழிகளில், அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழ்மொழி பற்றியும் அதன் இலக்கண, இலக்கிய வளத்தையும் கண்ட ஐரோப்பிய மத பிரசாரகர்கள் பலர், தமிழ்மொழியைக் கற்று, இயேசு மத பிரசாரம் செய்ய முனைந்த வேளை, தமிழின் வளத்தையும், இதன் இனிமை, இலக்கண, இலக்கியச் சிறப்புக்கள் என்பனவற்றை இயல்பாகவே தமக்குத் தெரிந்த பிற மொழியறிவு ஆற்றல்களுடன் ஒப்பிட்டும், அலசியும் நன்றாகக் கற்றுக்கொண்டார்கள்!

காலனித்துவ ஆட்சியாளர்களாக விளங்கிய போர்த்துக்கேயர்கள், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், மற்றும் மத பிரசாரகர்க
ளாக வந்த ஜெர்மனிய, பிரான்ஸ், இத்தாலிய நாட்டவர்களும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த, தமிழாய்வு மேற்கொண்ட அறிஞர்களும், தமிழ்-தமிழர் பற்றித் தெரிந்து கொள்ள, திறவுகோலாக விளங்கிய, கலங்கரை விளக்காகிய தமிழரின் இலக்கண நூல் தொல்காப்பியமும், அறிவுச் சுரங்கமாகிய "திருக்குறளும்" ஆகும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், எழுத்துச் சாதனங்கள் பெரிதும் இல்லாத காலத்தில், பனை ஓலைச் சுவடிகளில், எழுத்தாணி கொண்டு, இஙஙனம் எழுதிய பெரும் புலவர்களின் சாதனை பற்றி யார் தான் வியப்படையமாட்டார்!

1. பிதா.கென்றிக் கென்றிக்ஜஸ்(1520-1598)

போர்த்துக்கேய மதபிரசாரகர் பிதா.கென்றிக் கென்றிக்ஜஸ், 16ம் நூற்றாண்டில் தமிழகம் வந்து, தமிழ் மொழியை நன்கு கற்றுத்தேறி, இயேசு மத பிரசாரத்தை(சுதேசிகளாகிய தமிழர்களிடம்) புரிய முடிந்ததெனலாம்! மன்னார், புன்னைக்காயல், கன்னியாகுமரி ஆகிய தென் தமிழ் நாட்டில் (முதல் ஐரோப்பியத் தமிழறிஞராகத் திகழ்ந்தார்) தொண்டாற்றியதுடன், “தமிழ் அச்சுக் கலையின் தந்தை" பிதா.கென்றிக் கென்றிக்ஜஸ் எனும் பெருமைக்குரியவர் என்பது அனைவராலும் நினைவில் நிறுத்தப்படவேண்டியதொன்றாகும். மேலும், இப்பெருந்தகையால், ஆசிய- மற்றும், இந்திய மொழிகளுள், முதன் முதலாக, “தம்
பிரான் வணக்கம்" என்ற தமிழ்-போர்த்துக்கேய மொழிகளில் அச்சில் DCCTRINA CHRISTAM ON LinguaMalavar Tamul (கி.பி.1540-1550) பிரசுரமாகியதெனலாம்.

இவர், தமிழர் அல்லாத, மேலைநாட்டவர், தமிழ் மொழியை இலகுவாக கற்க உதவுமுகமாக, “முதலாவது ஐரோப்பிய தமிழ் இலக்கணம்“ (The First European Tamil Grammer) என்ற இலக்கண வினா விடை, போர்த்துக்கேய-தமிழ் அகராதி, மற்றும் பல சமய பிரசாரச் செய்திகளையும் வெளியிட்டதன் மூலம் உலகம் தமிழ் மொழியை அறிய வைத்தார்!

பரிசுத்த பிரான்ஸிஸ் சேவியர் அடிகளாரின் வேண்டுகோளுக்கு அமைய, 1548 முதல், தமிழ் மொழியில் புலமை பெற்றார்! இயேசு மத செய்திகளை தமிழ் மொழியில் பதியும் பணி இவரிடம் தரப்ப
ட்டிருந்தது! இப்பெருமகனார் தமிழ்த் தாயின் தவப் புதல்வராக கிடைத்தவரென்றால், மிகையன்று!

1560 அல்லது அதற்கண்மித்த காலத்தில், மன்னார் அல்லது புன்னைக்காயல் எனும் இடத்தில், ”தமிழ் பல்கலைக் கழகம்” ஒன்று அமைக்க முயற்சி மேற்கொண்டபோதும் அது நிறைவேற முன்னரே 22-02-1600 அன்று, புன்னைக்காயலில் மறைந்தார்! தமிழ்த் தாயின் தவப் புதல்வரின் உடல், தூத்துக்குடி, தமிழ் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளது. இக்கல்லறை என்றும் நினைவுக்குரியதாக, உலகத் தமிழர்களால் போற்றப்பட வேண்டியதாகும்! அன்னைத் தமிழ் மொழியை முதன் முதல் அச்சில் ஏற்றி, அகிலமெங்கும் உலா வரக்கண்ட தமிழ்த் தாயின் தவப் புதல்வர், கென்றிக் கென்றிக்ஸ் அடிகளார்!

இவரின் சேவை, தமிழ்மொழி பற்றிய புலமை பற்றி அறிந்த பலர், தமிழகம் சென்று, அன்னாரின் அடிச்சுவட்டில், தமிழ் மொழியிலும், அதன் இலக்கண, இலக்கியம், மருத்துவம், சமயம் என ஆய்வுசெய்தும்,மொழி பெயர்த்தும், ஐரொப்பாவில் தமிழ் அறியச்செய்தனர்!


2. வீரமாமுனிவர்
என அழைக்கப்படும் பெசுகிப் பாதிரியார்
- தமிழ் வசன நடையின் தந்தை - பெசுகிப் பாதிரியார், (நவம்பர் 8, 1680 - பெப்ரவரி 4, 1746) -
மதம் பரப்பும் முயற்சிக்காகத் தமிழைக் கற்றுக்கொண்ட இவர், தமது பெயரினை தைரியநாதன் என்று முதலில் மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தனது இயற்பெயரின் பொருளைத் தழுவி, செந்தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார்.

பாரதி பாடியவாறு, "மறைவாக நமக்குள்ளே பழங்கதை பேசி பயனுமில்லை
திறமான புலமையெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்தால்
வெளிநாட்டார்,அதை வணக்கம் செய்வார்!"
என்பதை நிரூபிப்பதைப்போல, 1710ல், இத்தாலி நாட்டிலிருந்து தமிழகம் வந்து மதப்பிரசாரகராக விளங்கிய பிதா கொன்ஸ்ரான்டின்ஸ் ஜோசப் பெச்சி முனிவர், மற்றெவரைக்காட்டிலும்,தமிழ்மொழி மீது மட்டுமன்றி, தமிழ் வசன நடையில் புதுமை படைத்து, சிறந்த ஆக்கங்களையும், இலக்கண நூல்கள்கள் சதுரகராதி (நிகண்டுக்கு ஒரு மாற்றாகக் கொண்டு), தேம்பாவணி பாடல்கள் வாயிலாக, தமிழ் நாட்டு சூழலில் இயேசு சரிதத்தை -(கம்பரின் இராமாயண காவியத்தைப்போல) பல காண்டங்களாக இனிய பாடல்கள் முலம் யாத்திருப்பதும், தமிழரைப் போல, தென் இந்திய உடை உடுத்தி, மக்கள் பண்பாடு பேணி வாழ்ந்தார்!

இவர் எழுதிய நகைச்சுவை சார்ந்த, "பரமார்த்த குரு", தமிழில் வந்த நகைச்சுவை இலக்கியமாகும்! இவர் இலத்தீன் மொழியில், திருக்குறளை (காமத்துப்பால் நீங்கலாக)மொழி பெயர்த்ததன் மூலம், ஐரோப்பியர் அறிஞர்கள் பலரையும் தமிழ் மொழி பக்கம் பார்வையை திரும்பச்செய்தார்! இவரின் இலத்தீன் மொழி பெயர்ப்பை மூலமாகக் கொண்டே, ஏனைய ஐரோப்பிய மொழி பேசும் மக்கள் 'திருக்குறள்' நீதிநெறி நூலென அறிமுகமானதெனலாம். தமிழ் மக்கள், அவர் மொழி, பண்பாடு, நாகரிகம் எனவும், தெரிந்து கொள்ள முடிந்தது! இவர், சிலகாலம் மன்னரின் அதிகாரியாகவும் விளங்கிய இவர் 1742-ல், மணப்பாறை எனுமிடத்தில் மறைந்தார்!

திருக்குறளை போப் ஐயர்(ஆங்கிலம்), கார்ல் கிரவுல் (ஜேர்மன, இலத்தீன்) எம்.ஆரியல்(பிரஞ்சு)ஆகிய மொழிகளில் மாற்றம் செய்து, தத்தம் நாட்டறிஞர்களின் மத்தியில், திருக்குறளையும், தமிழ் மொழியையும் பரப்பினர்!


00000000000000000000000000

(நினைவுத் துளிகள் சொட்டும் .....)

Friday 28 August 2009

கதைச் சரம் -12 அல்லாவுக்குப் பகிடி தெரியல்ல...!


கதைச் சரம் -12
செவி வழிக்கதை -10
அல்லாவுக்குப் பகிடி தெரியல்ல...!

காதர் காக்கா மீன் பிடிக்கச் சென்றால் கூடை நிரம்ப மீன் கொண்டுவருவது வழக்கம். அப்படியிருந்தும் ஒரிரு நாட்கள் மீன் பிடிபடாது போவதும் உண்டு. அல்லா மீது அசையாத பக்தி கொண்டவராகையால் எல்லாவற்றையும் அவன் மீது சொல்லி அமைதியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தார்.

இவர் தூண்டில் மீன்களை உயிருடன்தான் பிடித்து வருவதுதால் சுற்றுவட்டாரத்தில் நன்கு பிரசித்தமாகியிருந்தார். அவரது வள்ளத்தில் இதற்கென்று பெரிய பிளாஸ்டிக் அண்டா எப்போதும் இருக்கும. நீச்சலடிக்கும் மீன்களையும் , வெளியில் போட்ட மீன்களின் உயிர் மூச்சடங்கும் துள்ளலையும் பார்க்கவென்று சிறுசுகள் முதல் பெரிசுகள் வரையில் கூடிக் கும்மாளமிடுவதைக் கேட்கும்போது காதர் காக்காவிற்குக் கொஞ்சம் பெருமிதம்தான். நிமிர்ந்திருந்தவாறு பேரம் பேசுவார். இதனால் காதர் காக்காவின் வள்ளம் கரையொதுங்கும்போது இதற்கெனக் கூட்டம் காத்திருப்பது வழமையாகி இருந்தது.

அவரது மூத்த மகள் குடும்பமாகிச் சென்றுபின், தன் தாய் வீட்டுக்கு இன்று வருவதாகக் கடிதம் எழுதியிருந்ததால் காதர் குடும்பம் அதிகாலையிலேயே எழுந்து பரபரப்பாக வரவேற்பு ஏற்பாடுகளை மேற்கொண்டது. காதர் அதிகாலைத் தொழுகையுடனேயே மீன் பிடிக்கப் புறப்படடிருந்தார். தனது வள்ளத்தை தோதான இடத்தில் நிறுத்தி தூண்டிலையும் போட்டாயிற்று. சும்மா சொல்க் கூடாது ஒரே சமயத்தில் நான்கு கு}ண்டில் போடக்கூடிய ஆற்றல் உள்ளவர் காதர் காக்கா. ஆனால் இன்று சூரியன் இரண்டு பனை உயரத்துக்கு எழும்பியும் ஒரு மீன் குஞ்சுதானும் படுவதாக இலலை. காதருக்கு ஆச்சரியமோ ஆச்சரியம்!! 'அட என்னடா இது இன்றைக்குப் பார்த்து இப்படியாயிருக்கே!" என கொஞ்சம் மனம் சங்கடப்பட ஆரம்பித்தது. தூண்டில்களை இழுத்து இழுத்து தூர வீசிப் பார்த்தார். ஒன்றுமே நடக்கவில்லை.

'மனப்பதட்டத்துடன் வள்ளத்தினுள் இருக்கப்படாது' இது அவரது தாத்தா வழியாகக் கேட்டுப் பழகிய பழக்கம். தூண்டில்களை வள்ளத்துடன் இறுகக் கட்டியுள்ளதை இன்னுமொரு தடவை சரிபார்த்தார். தலையில் கட்டியிருந்த துண்டைக் கழற்றிப் போட்டுவிட்டு கண்களை மூடி மனமுருக அல்லாவை வேண்டினார். 'அல்லாவே! இன்று நான் பிடிக்கும் முதல் மீனை உனக்கே தருகிறேன்!" என்பதாக அவரது உருக்கமான வேண்டுதல் அமைந்தது.

என்னே ஆச்சரியம் வள்ளம் விந்தி விந்தி ஒரு பக்கம் இழுக்கப்பட்டது. 'ஆகா! நல்ல மீன் பிடிபட்டுவிட்டது. அல்லா கைவிடமாட்டார்!" மனம் குளிர கண் திறந்த காதர் காக்கா துண்டை எடுத்து தலையில் கட்டியவாறு அல்லாவுக்கு நன்றி சொல்லிக்கொண்டு சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கினார். பெரிய மீனொன்று முறையாக மாட்டியிருந்தது. காலையிலிருந்த களைப்யெல்லாம் போன சுவடே தெரியாமல் போயிற்று. பிறகு மற்றத் தூண்டில்களிலும் சில மின்கள் பிடிபட்டன. ஆனால் எல்லாமே சின்னவை.

மதியமாகிக் கொண்டிருந்தது..... 'இனி தாமதிக்கயேலாது.. திரும்பிட வேண்டியதுதான்' என்ற முடிவுடன் தூண்டில்களை மீளப் பெறத் தொடங்கினார். அப்போது அவரது மனசுக்குள் 'அட! வேண்டுதலுக்குரிய மீனாக ஒரு சின்ன மீனைக் கொடுப்பம். பெரிசு மகளுக்குத்தான்.... நல்ல பொரியலும் குளம்பம் வைக்க அந்தமாதிரி இருக்கும்!" எண்ணம் அருமையாகவே இனித்தது. திடீரெ சலக் சலக் கென்று தண்ணீருக்குள் கல்லு விழும் சத்தம் கேட்டது. வள்ளமும் ஒருக்காக் குலுங்கியது. துணுக்குற்றவாற திரும்பிப் பார்த்த காதர் காக்கா மலைத்துப் போனார். அவரது தூண்டிலில் பிடிபட்ட அந்தக் கொழுத்த மீன் துள்ளலுடன் மீளவும் கடலினுள் பாய்ந்து விடடிருந்தது.

தனது நினைப்பை உணர்ந்த காதர் காக்கா, "ஐய்யை...யே....!! நம்ம அல்லாவுக்கு பகிடியும் தெரியல்லை.... வெற்றியும் தெரியல்லை!" என்றார்.



- முகிலன்
சிறு வயதில் ஊர்ப் பாடசாலையில் கேட்ட கதை இது.
பரிஸ் -ஓகஸ்ட் 2009

Thursday 27 August 2009

சரம் 18 திரையில் பிரகாசிக்கும் அசகாய சூரர்கள்!



சரம் 18 திரையில் பிரகாசிக்கும் அசகாய சூரர்கள்!

திரை அரங்கில் மக்களுடனான எண்ணக் கருத்துகளுடன் சினிமா பார்த்த காலங்கள் கனவாகிப் போய், வீட்டின் வரவேற்பறையின் சுவரில் அகண்ட திரையில் குடும்பமாகவோ தனியாகவோ நாளாந்தம் பார்க்கும் சாதனமாகிவிட்டது. பிரான்சில் புலம்பெயர்ந்துள்ள நம்மவர் வீடுகளில் அநேகமாக செயற்கைக் கோள் அலைவாங்கிளுடனான இணைப்புகள் இருப்பதைக் காணலாம். அப்படியில்லாத வீடுகளிலும் இணையத்துடனான இணைப்பிலுள்ள ஃபிறி பொக்ஸ் (free box) சாதனத்தினூடாக தமிழ்ப்படங்கள் பார்க்கும் வழக்கத்தையும் காணலாம்.

நண்பரின் அழைப்பை ஏற்று அவரது வீட்டுக்குச் சென்றிருந்தேன். சினிமா, குறுந்தொடர் எனவாகப் பார்த்த வண்ணமிருக்கும் இல்லத்தரசிகளுக்கு விருந்தினராக நம்மைப் போன்றவர்கள் வந்தாலே இடைஞ்சலாகத்தான் இருக்கும். தாமாகவே எழுந்து உள்ளே சென்றுவிடுவார்கள். வழமையாக செய்திகள், ஆய்வுகள், அது இதுவென நாம் செய்யும் அலசல்களுக்குள் எந்த விறுவிறுப்பையும் அவர்கள் பெற்றதுமில்லை.

கடந்த சில மாங்களாக அதிகம் பேசாத சந்திப்புகள்தான் நிகழந்த வண்ணமிருப்பதால் இப்போது அவர்கள் எழுந்து செல்வதில்லை. திரையில் வழமையான காட்சிகள் ஓடிக் கொண்டிருக்கும். நாங்களும் ஏதும் பேசாதவர்களாக அவர்களுடன் சேர்ந்து திரையில் ஓடியாடும் கதாநாயக- நாயகி பாடல்களையோ, உருக்கமான தொடர்களின் நடுவிலான ஏதோ ஒரு காட்சியையோ அல்லது ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படத்தின் இடையிலான காட்சியையோ பார்த்தும் பார்க்காதவர்களாயிருப்போம்!

நாங்கள் மெதுவாக வந்த விடையம் தொடர்பாக மெதுவாகப் பேசியவண்ணமிருந்து தேனீர் அருந்திக் கொண்டிருந்தோம். தொலைக் காட்சியில் அடிக்கடி காட்சிகள் மாறிக் கொண்டிருந்தன..... இப்போது கதாநாயகன் விறுவிறுப்பான சண்டைக் காட்சி... தூள் பறக்க விளாசிக் கொண்டிருந்தார்.
இல்லதரசி தொலைக் காட்சியின் இணைப்பைத் துண்டித்து முணுமுணுத்தவாறு...... எழுந்தது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.
அதனால் கொஞ்சம் பதறியவாறு, "நாங்கள் இங்கிருப்பது இடைஞ்சலென்றால்.. நான் சென்று பிறகு வருகிறேனே!... " என்றவாறு எழுகிறேன்.

"நீங்க வேற... அதொன்றுமில்லை... நீங்க இருந்து பேசுங்க!.." என்றார் ஏதோ தவறாக தான் நடந்துவிட்டதாக நான் நினைத்துவிட்டேனோ என்ற பவ்வியத்துடன்.

"அப்ப ஏன்?....." எனது கேள்வியில் உறுதி இருந்திருக்க வேண்டும்.

"அங்க உண்மையான வீரர்களைத் தொலைச்சுப்போட்டுள்ள இவ்வேளையில... இவங்க நோஞ்சாங்களைக் கொண்டு வந்து றீல் விடுறாங்க பார்க்கவே எரிச்சலாகப் பத்திக் கொண்டுவருது!.." என்றார் கோபத்துடன்
அவரது வாயால் இப்படியான வார்த்தைகளை நான் எதிர்பார்க்கவில்லையாதலால் ஆச்சரியத்தால் திக்கு முக்காடி..... மௌனித்தேன்.

சிறிது நேரத்தில், றோல்சும் பலகாரமுமான சிற்றுண்டி வந்தது. இது என்னை மேலும் திகைக்க வைத்தது.

"என்னதான் நடக்குது உங்கட வீட்டில... இப்ப நல்லூர்க் கந்தன் திருவிழாக்காலமல்லவா?"
என்கிறேன். (சைவமாக விரதமிருப்பது இவர்களது வழமை)

குசினியிலிருந்தே பதில் வந்தது "மான ரோசமில்லாத கடவுகளுக்கு இப்ப திருவிழா வேண்டிக்கிடக்கோ.... வெட்கம் கெட்டதுகள்தான் இப்ப போவாங்கள்.. கடைப்பிடிப்பாங்கள் தொலைஞ்சு போகட்டுமென்று விட்டிட்டன்."
நான் நண்பனைப் பார்க்கிறேன்... அமைதியாக ஊதிவிட்டவாறு றோல்சைச் சுவைத்துக் கொண்டிருந்தார். ஆம்! றோல்ஸ் சூடாகவே இருந்தது!


-முகிலன்
பாரிசு ஓகஸ்ட் 2009

சுவட்டுச் சரம் 1 நினைவுத்துளிகள் (11)


சுவட்டுச் சரம் 1
பெர்லின் புலம்பெயர்வு தொடக்க கால நினைவுகள்
நினைவுத்துளிகள் (11)

-குணன்


யாழ் குடா நாடு, வரலாற்றுக்கு முற்பட்ட வரலாற்றுடைய ஓர் நிலப் பரப்பை கொண்ட, மணல் திடல் என்று குறிப்பிடுவதும், இங்குள்ள ஆதிக் குடிகள் யார்? என்ற நீண்ட கேள்விக்கு பல்வேறு புனைவுகளுடன், எத்தகைய சான்றுகளும் முன்வைக்கப்படாது, "இவர் அவர், அவ்வாறு -இவ்வாறு குறிப்பிட்டார்- பாடியுள்ளார்" என்ற வரைவுகளையும், நம்பகத்தன்மை அற்ற கூற்றுக்களையும், புராண, இதிகாசங்களையும் மட்டும் எடுத்தாண்டு, எத்தகைய ஆராய்சிகள் பெரிதுமின்றி, எழுதுவதும்- பேசுவதும் ஆய்வுகளாக ஏற்கப்படுவதில்லை. இவ்வாறான ஈழத்தமிழர் வரலாற்றில், எஞ்சியிருப்பது வரலாற்றுப் பஞ்சம் என்றால், அது மிகையல்ல!

இந்நிலைதான், இன்றைய சமகால, அரசியல், பொருளாதார, புலப்பெயர்விலும் தொடர்கதையாக உள்ளது என்பதே எனது கருத்து. உண்மைகள் பதியப்படவேண்டியதும், அவை பேசி அலசப்பட்டு பேணப்படாவிட்டால், நாளைய (குறிப்பாக புலப்பெயர்வு பற்றிய நிகழ்வுகள் யாவும் மறைந்து போய்விடலாம்!) பதிவுகளும் வாசிப்பும் என்பது வெற்றுப் புராணமாக மாறிவிடலாம்! ஒரு தனி மனித பார்வை என்றாலும் சரி, ஓர் இன மக்களின் சம கால மற்றும் கடந்த காலங்களின் பார்வைகள் என எதுவாகினும் முழுமையாக ஒளிவு மறைவு இன்றி பதியப்படுமாயின், அதன் வழி தொடரும் கருத்துக்கள் மூலம் வளர்ச்சியும், வீழ்ச்சியும் முழுமையாக அறியப்படும்! மறக்கக்கூடாத- மறையக்கூடாத, எந்த ஒரு உண்மை அனுபவத்தையும் முயன்று விருப்பு வெறுப்பு இன்றி, பதிவிட்டு காப்பதென்பது, எளிதான விடயமன்று.

இதற்கு, முதலில் வரலாற்று பிடிப்பும், எதிர்கால - தூர நோக்கும், யதார்த்த நேசிப்பும், உள்ளார்ந்த பார்வையும் நிரம்ப தேவையாகும்!எல்லாவற்றுக்கும் மேலாக நினைவுகளை முடிந்தவரை திரிபு படுத்தா நடுநிலை மிகவும் தேவையாகும்! நூலறிவு, சம-கடந்த காலங்களின் செய்தித்தேடல்கள்- சேகரித்தல், பாதுகாத்தல், கடந்த- நீண்ட காலநினைவு- மீட்டல், என விரிந்த அளவுகொண்ட- பரந்த பரப்புக்குள் செல்லும் துணிவும்- தூய பயணிப்பும் கிட்டாவிட்டால், இவ்வகைச் செயற்பாடு பயனற்ற முயற்சியாகவே முடிந்துவிடலாம்!


உலகம் பரவிய அகதித் தமிழர்கள்

இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் தொடங்கிய இடப்பெயர்வின் உச்சக்கட்டம் இன்றும் முடிவுற்றாதாக தெரியவில்லை!இலங்கையிலிருந்து இடப்பெயர்வுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை பத்து இலட்சம் மக்கள் என, ஐக்கிய நாடுகளின் அகதிகள் திணைக்களம் அறிவித்துள்ளதுடன், அதில் 95 விகிதமானவர்கள், தமிழர்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளது! இவ்வாறு, கடந்த மூன்று தசாப்தங்களில் புலம் பெயர்வுக்குள்ளாகிய தமிழர்கள், 70 க்கும் மேற்பட்ட உலகப் பந்தின் பல்வேறு நாடுகளிலும் கால்பதித்துள்ளார்கள். அன்று, பேர்லின் நகரில்,“கண்டாயம் கடப்பு“ கண்டு பிடித்து, செஞ்சிலுவைச் சங்கவிடுதியை முகவரியாக்கி, காலமாகிப் போனவரின் பெயருக்கு கடிதம் கொடுத்த நம்பிக்கை அடிப்படையில், வானில் பறந்து, இருப்பைத் தேட வந்த ஆரம்ப கர்த்தாக்களுக்கு, அடுத்த வரிசையில் இடம்பெற்ற, ஒரு சில நூற்றுவர்களில் அடக்கப்படவும், பலரால் நினைக்கப்படவும், ஆங்காங்கு கண்ட இடங்களில் தாமாகவே அறிமுகப்படுத்தி நினைவு கொள்ளவைக்கும் ஒருசில சந்தர்ப்பங்களில், “அந்த பழையநாட்கள் பற்றிய நினைவுகள் எத்தனை எத்தனை இனிமையானவை என்பதை, புலப்பெயர்வின் பொக்கிசம் என்று கூறினால் பிழையல்லவே!

எனது, “பேர்லின் நாட்கள்“ பற்றித் தனியாக, ஒரு நூலையே தரமுடிந்தாலும் அதனைக்கூட, “அதிகப் பிரசங்கித்தனம்“ என்றுகூட “நாமசங்கீகரணம்“ செய்யப்படலாம்! பேர்லின் நாட்களுக்கு ஒரு நீண்ட முப்பது ஆண்டுகள், முன்னாக வந்து நந்தியைப்போல, நெஞ்சில் துளிர்க்கத்தான் செய்கிறது! குப்பைகளை எல்லாம் கூட்டி கோபுரம் என்று கூறவேண்டிய தேவை யாருக்கும் ஏற்படத் தேவையில்லை. அதனால் யாதும்- யாருக்கும் பயனில்லை.

அக்கால கட்டத்தில், நண்பர் சிலரும் நானும் முன்னின்று (பிராமணர்களற்று, ஓமகுண்டம், கன்னிக்கால், கெட்டி மேளம் இன்றி, முடியற்ற தேங்காய்க்கு செயற்கையில் முடி செய்து), சங்காலத் தமிழ்த் திருமணம் போல, தமிழ் உறவுகள் சிலர் வாழ்த்த, இல்லறம் புகுந்த தமிழ் குடும்பங்களில், வந்துதித்தவர்களின் மணவினைக்கோலங்களின் பாங்கினை நினைக்கவே ஆச்சரியமாகவும் மகிழ்வாகவும் இருக்கிறது. இன்றும் அவ்வாறாக அமைந்த குடும்பங்களையும் அவர்களது வழித் தோன்றல்களையும் காணும்போது புகலிடத்தில் வாழத்தொடங்கிய அந்தநாட்கள் நினைவில் இனிமையாகத் தோன்றிச் செல்லும்.

எவன் ஒருவன் தனது தொடக்க- உண்மைகளுக்கு வெட்கப்படுவதும், மூடி மறைத்து பொய்த்திரையிட்டு, தடம் புரண்டு நிற்பதும் தொடங்கி விட்டதோ, அக்கணமே, அவன் ஒரு வேடதாரி என்பதைப் புரியமுடிகிறது! "கூட்டில் அடைபட்ட கிளிகளை சிறகுகள் வெட்டப்பட்டு இருப்பதைப் போல, வெளியே நடமாடவும், எல்லை தாண்டவும் முடியாத மக்களாக கிழக்கு ஜேர்மனியர்கள், இரண்டாவது உலக யுத்த முடிவில், பிரிக்கப்பட்டிருந்த தமது நாட்டில்(பேர்லின் உட்பட) இருந்த நாட்களில், ஆறாயிரம் மைல்களைத்தாண்டி வந்த எம்மைப் போன்றவர்கள், அதிக எண்ணிக்கையில் வந்து புகலிடங்கோரினார்கள் என்பதான உண்மை நிலையை இன்று எண்ணிப்பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது.

அக்கால கட்டத்தில் அகதிளாகக் கோரிய பல்துறையைச் சார்ந்தவர்களுக்கும், முகங்கோணாமலும், முடிந்தவரையிலும், அன்றைய தேவைகளை மத்திய, மாநில அரசுகள் சிறப்பாக வழங்கின. பின்னாட்களில், நிரந்தர வதிவிடம், தொடர்ந்து வேலைவாய்ப்பு, வதிவிடம், குடும்ப இணைப்பு, குடியுரிமை என்று தனது சொந்த மக்களுக்குரிய அத்தனையும் என்று கூறமுடியாவிட்டாலும், 95 வீத உரிமைகள் பெற்று, வளமுடன் வாழ வழி கிடைத்தது!

இவ்வாறே இந்த ஈழத்தமிழர்கள், தத்தமது தனித்தனி முயற்சிகளாலோ அல்லது கூட்டு முயற்சிகளாலோ தமது சொந்த நாட்டில் இருந்த தமக்கான அரசியல் முக்கியத்துவத்துவமுடைய உரிமங்களைப் பெற்றுக்கொண்டார்களா? என்றால், அதுபற்றி அடையாளங்காட்டிட ஒருவர் தானும் கிடைக்கமாட்டார்கள். ஆயினும் அன்று, ஈழத்தமிழர்களின் நீண்ட ஒடுக்குமுறைகளைத் தொட்டுக்காட்டி, தொகுத்து வகுத்து, எடுத்துக்கூறவும் ஈழத்தமிழர்களை புலப்பெயர்வுக்குள் தள்ளிய காரணிகளையும், தேவையையும் முறையாகவும் விளக்க வைப்பதிலும், ஈழத்தமிழர்களை தாபனமயமாக வெளிப்படுத்துவதில் 'ஈழத்தமிழர் நலன்புரிக்கழகம்' பேர்லின் மாநிலத்தில் ஆற்றிய பணிகளுக்கு தகுந்த அங்கீகாரம் கிடைத்தது. அக்காலத்தில், அகதிகளாகக் கோரிய புகலிடத் தமிழ் விண்ணப்பதாரிகள் ஒவ்வொருவரிடமும், "உமது நாட்டில் அரசியல் காரணங்களுக்காக இங்கு புலம் பெயர்ந்தவராயின், இங்குள்ள ஈழத்தமிழர் நலன்புரிக்கழகத்தில் அங்கத்துவமுடையவராக இருக்கின்றீரா? அவ்வாறாயின் அதனை உறுதிப்படுத்தவும்!" என பேர்லின் நீதிமன்றம் கேட்ட பின்னரே பேர்லின் வாழ் புகலிடத் தமிழர்கள் கண்விழித்து "தானும் ஒருவர்தான்" என்ற பதிலுக்கு ஆதாரமாக கழகத்தை நாடத் தொடங்கினார்கள். கழகத்தில் கால்வைத்த நாள் முதல் மறுப்பில்லாது அங்கத்துவப் பணம் செலுத்தி உறுதி செய்தார்கள். இது பேர்லின் வாழ் ஈழத்தமிழர்களால் கழகத்திற்கு இயல்பாகக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதக்கூடியதாகும்!


(நினைவுத் துளிகள் சொட்டும் .....)

Sunday 23 August 2009

சரம் - 17 "கோயிலுக்கு யார் போவார்கள்?"


சரம் - 17 "கோயிலுக்கு யார் போவார்கள்?"

எனது தந்தையார் ஆசிரியப் பணியில் இருந்த போதும், வீட்டில் சோதிடம் கணித்து எழுதுபவராகவும் இருந்ததால் எங்களது வீட்டுக்கு புதியவர்கள் அதுவும் படித்தவர்கள், அதிகாரிகள், வணிகர்கள் எனப் பலர் அடிக்கடி வந்து போவது வழக்கம். அப்போது பதின்ம வயதுப் பிராயத்திலிருந்த எனக்கு இது புரியவதே இல்லை. மாலையில் என்னை விளையாடப் போகவிடாமல் சாதகக் குறிப்புக் கணிப்பதைக் கற்றுக்கொள்ளும்படி வற்புறுத்துவார். நானும் திமிறிக் கொண்டிருப்பேன். சிலசமயம் அவருடன் இணைந்து வேலையும் செய்வதாகவும் போனதுண்டு.

இப்படியாக ஒருநாள், அப்பாவிடம் எனக்கு எழுந்த கேள்வியை முன்வைத்தேன்.
"அப்பா!, ஏன் ஆக்கள் சோதிடம் கணித்து சாதகம் பார்க்க வருகிறார்கள்?" எனது நீண்ட நாள் கேள்வியைக் கேட்டுவிட்டேன்.

அப்பா பதிலுக்கு என்னிடம் வேறு கேள்வியை முன்வைத்தார்...
"வைத்தியரிடம் யார் போவார்கள்?"

"நோயாளிகள்..." இது என்ன கேள்வியென்ற அலட்சியத்துடன்

"காவல் நிலையத்திற்கு யார் போவார்கள்?" அப்பாவும் விடாமல்

"குற்றச் செயல்களுடன் தொடர்புள்ளவர்கள்" இப்போது அப்பாவை ஆச்சரியமாகப் பார்க்கிறேன்.

"அப்புக்காத்திடம் (லோயர்) யார் போவார்கள்?"

"வழக்காடுபவர்கள்..." என்றேன் ஆவலுடன்...

"இப்படியே யோசித்துப்பார்.... சோதிடரிடம் யார் போவார்கள்? என்பது தெரியவரும்" என்றார் புன்முறுவலுடன்

எனது மண்டையில் எதுவும் சரியாகக் கிடைக்வில்லை.... அப்பாவை அண்ணாந்து பார்க்கிறேன். என்னிலையைப் புரிந்தவராகித் தொடர்கிறார்..

"தம்பி! மனித மனங்கள் பற்றி நிறையவே முதலில் அறிய வேண்டும். நிறையவே வாசிக்கவேண்டும். முடிவெடுக்க முடியாது தடுமாறும், தன்னம்பிக்கை குறைந்தவர்கள், தோல்விகளால் மனம் நொந்தவர்கள்தான் சாதகம் பார்க்க வருவார்கள்"

எனக்குக் கொஞ்சம் புரிவது மாதிரி இருந்தது. ஆவலுடன் அப்பாவைப் பார்க்கிறேன்.

"சாதகம் என்றால் என்ன தெரியுமா?" வினவினார் அப்பா.

"தெரியாது.... " என்கிறேன்.

"இங்கு பார் தமிழ் ஆழமான மொழி. 'சாதகமாக நடந்து கொள்' என்றால் என்னவென்று புரியுதா?" என்றவாறு என்னைப் பார்க்கிறார்.

"ஓ!! நன்றாகப் புரியுது." எனது முகத்தில் பிரகாசம் இருந்திருக்க வேண்டும்.

"நிலையை உணர்ந்து சாதகமாகச் செயற்படும் உத்தியை வழங்குவதுதான் 'சாதகம் பார்த்தலுக்கான' பணி" என்று சொல்லியவாறு தொடர்கிறார், "தம்பி! சோதிடரிடம் வரும் இந்தத் தன்னம்பிக்கை குறைவானவர்களுக்கு மிகுந்த மனவுறுதி கிடைக்குமாறு அறிவுறுத்தி, எதிர்காலச் செயற்பாடுகளை ஆர்வத்துடன் செய்யத்தூண்டும் கலைதான் சோதிடக் கலை."

அழகாகப் பாடம் கற்ற திருப்பியுடன் எனது கருமங்களில் மூழ்கினேன். கொஞ்சம் காலம் கடந்த பின்னர் எனக்கு அப்பரின் பாணியில் ஒரு கேள்வி எழுந்தது....
"கோயிலுக்கு யார் போவார்கள்?" பதிலை உங்கள் தேடலுக்கு விட்டுவிடுகிறேன்.

- முகிலன்
பாரீஸ் ஓகஸ்ட் 2009

Friday 21 August 2009

சுவட்டுச் சரம் 1 - நினைவுத்துளிகள் (10)




சுவட்டுச் சரம் 1
பெர்லின் புலம்பெயர் வாழ்வு தொடக்க கால நினைவுகள்
நினைவுத் துளிகள் (10)

- குணன்


-----------------------------------------------------------------------
1982 நவம்பர் 10-ம் நாளிலிருந்து வெளிவந்த அர்த்தமுள்ள 'யதார்த்தம்' இதழ்

கால்நூற்றாண்டுக்கு முன்னர், புலம்பெயர்வில், பேர்லின் மாநகரில், கால்கோள் இட்டு, அன்றைய நாட்களில், உரிமைக்கும், உணர்வுகளுக்கும் தீனி போடவேண்டும் என்ற நோக்கில், சிந்தித்த சிலரின் எண்ணப்படி, முன்னர் பத்திரிகையாசிரியர் தொழில் அனுபவமுடைய இரா.பாஸ்கரன் ஆசிரியராகவும், திருவாளர்கள் முகுந்தன், நகுலன், குகன், கண்ணன், குணன் (இவர்களில் ஒருவர் தவிர ஏனையவர்கள் இன்று பேர்லினில் இல்லை) மற்றும் பலரின் ஒன்றுபட்ட உழைப்பின் விளைவாக "யதார்த்தம்" உருப்பெற்றது. பேர்லின் ஈழத்தமிழர் நலன்புரிக் கழகத்தின் வழிகாட்டலுடன், 'ஆபத்துக்குள்ளானோருக்கு உதவும் அமைப்பு' (organisation for endangered people) வழங்கிய நிதியுதவியுடன் கையெழுத்துப் பதிவில், கனமான கருத்தாழமிக்க கட்டுரைகள், செய்திகள், கொள்கை விளக்கங்களுடன், புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழர் நலன்கள் பேணும் கவசம் போல 1982 முதல் 1987 வரையான காலப் பரப்புள் 29 இதழ் வெளியிடப்பட்டன! இவ்வாறு வெளிவந்த இதழ்களுடன், ஒன்று விசேட வெளியீடாகவும், ஒன்று சிறப்பு இதழாகவும், மற்றொன்று பத்தாண்டுநிறைவு இதழாகவும், கடைசியாக நலன்புரிக் கழகந் தொடங்கி, கால்நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடியபோது (1982 - 2007) வரலாற்று மலராக புலப்பெயர்வின் ஆவணக் கோவையாகவும் (அச்சுப் பதிவில்) வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது! இதனை வெளியிட எண்ணியவேளை, "யதார்த்தம்" என்ற பெயரை முன்மொழிந்தவர் நண்பர் குகன் ஆவார்! முதலாவது இதழில் சிறந்த சிந்தனைகள் நிறைந்த கட்டுரைகள் எழுதிய திருவாளர்கள் குணன், முகுந்தன், குகன், கணேசன், தங்கராசா மற்றும் ஆசிரியர் இரா.பாஸ்கரன், ஓவியம், பிரதி எழுதல், வடிவமைப்பு போன்றவற்றிலும், தொடர்ந்து அதன் வெளிக்கொணர்வில், பங்காற்றியவர்களில், கழக நிர்வாகங்களில் பதவியேற்ற பலரையும் 25 வது ஆண்டு நிறைவு மலரில் காணலாம்! இந்த இதழ்கள் வெளியீட்டு முயற்சியை இன்று மீட்டுப்பார்க்கையில் இனிக்கும் நிகழ்வாகி ஆறுதல் தருகிறது. இவ்வாறு நீண்டவரலாற்றுடன் வளர்ந்து வந்த இந்த இதழ், இன்றைய கணினி யுகத்தில் தொடரப்படாது, நின்றுவிட என்னதான் காரணமோ தெரிய முடியவில்லை!
பேர்லின் 'டாலம்டோவ்' பல்கலைக்கழகத்தின், வெளிநாட்டவர்க்கான சுவடிக் காப்பகத்தில் டாக்டர் கோவ்மன் அவர்களின் ஆதரவுடன் இவ்விதழ்கள் பேணப்பட்டிருப்பது ஓர் வரலாற்று பதிவேயாகும். இது புலப்பெயர்வின் செய்தி, சிற்றிதழ் முயற்சிக்கு தரப்பட்ட ஆவண அங்கீகாரமுமாகும்!


குறிப்பு:
'யதார்த்தம்' முதல் இதழின் அட்டை, முதல் பக்கம், ஆசிரியர் பக்கம் ஆகிவற்றின் பிரதியினை பார்வைக்காக இணைக்கிறேன். முதல் இதழ் வெளியிடப்பட்ட நாள் 1982. 11. 10
இவ்விதழ்கள் கையால் எழுதப்பட்டு, பிரதியெடுப்பு இயந்திரத்தின் மூலம் (A4 size - photocopies) புத்தகமாக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன.
------------------------------------------------------------------------

தாய் நாட்டை விட்டு, புலப்பெயர்வுக்கு ஆளாகிய ஓர் இனத்தைச் சார்ந்த மக்கள் எனக் கூறியவர்களுக்கு, புகலிடத்தில் வதிவிட அனுமதி கிடைத்து விட்டால் அனைத்தும் கிடைத்து விட்டதாகக் கொண்டதும், தான் சார்ந்த இன, மொழி போன்ற அடிப்படை அடையாளங்கள் அனைத்தையும் உடைய நிறுவன அமைப்புக்களையுங்கூட சிறிதும் சிந்தனை அற்ற போக்கில் தூக்கி வீசியதுமான தூரநோக்கில்லாத மக்கள் வரிசையில், புலம்பெயர்ந்த தமிழருக்கு ஓர் சிறப்பு இடம் கிடைத்திருக்கிறது!

பெற்றார்- குடும்பம், உறவுகள், நண்பர் எல்லாவற்றையும் மிகத் துச்சமாக்கிவிடவும், எதையும் ஊன்றிப் பார்க்கின்ற செயல் திறன் அற்று, பிறரின் ஏமாற்று அல்லது ஆசை வார்த்தைகளில், யாவற்றையும் மறந்து, தனித்துவத்துடன், சுயத்தை இழப்பதில மற்றவர்களுக்கு ஒருபடி முன்நிற்பதிலும் நம்மவர்கள் வல்லவர்கள் தான் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. இவ்வாறன போக்கால் தன்னை இழந்து தவித்தவர்கள் எத்தனையோ எத்தனையேர் வகை சார்ந்தவர்கள் என இனங்காணமுடியும்!

தாம் செய்கின்ற, பங்கெடுக்கின்ற எதனையும் நன்றாக சீர்தூக்கிப் பார்க்கும் ஆழ்ந்த அறிவும், தெளிவான நோக்கும், செல்லத் துணிகின்ற பாதை சரியா, தப்பா என்றெல்லாம் தாமாகத் தெளிவு பெறமுடியாது போகும் அல்லது பிழையான தீர்மானங்களை எடுக்கும் போது அதனைச் சுட்டிக்காட்டி விளக்கிடும் தகுதியான நட்போ- வழிகாட்டியோ இல்லாத காரணிகளால், புலம்பெயர்வில் இருக்கும் போது வயதில் மட்டுமன்றி அனுபவத்தில் புதிய பலருக்கு, குறுக்கு வழிகளில் செல்ல அல்லது இட்டுச் சென்று சீர்குலைக்கவென்று சில வேடதாரிகள் தாமாக வந்து புகுந்து விடுகிறார்கள் என்பதுதான் உண்மை!

கடந்த மூன்று தசாப்த, ஐரொப்பிய புலப்பெயர்வில், தமிழர்கள் எவற்றை எல்லாம் தமதாக்கினார்கள்? எவ்வகையான அறிவையும், அனுபவத்தையும் வளர்த்துள்ளார்கள்? என நோக்கும் போது, சமுதாய நலனைக் காட்டிலும், சுய தேவைகளுக்கான வேலைத்திட்டங்கள், மற்றும் வெளிப் பகட்டான, தேவையற்ற பாமரத்தனமான ஏமாற்றுக் காரியங்களை, நீட்டி முழக்கும் மூன்றாந்தர சினிமாத்தனங்களில் அதிக ஈடுபாடுடைய தென்னிந்திய பாணிக்கு சளைத்தவர்கள் அல்லர் என்பதை நிரூபித்திருப்பதைக் காணமுடிகிறது! இதற்கு எத்தனையோ உதாரணங்களை வரிசைப்படுத்தின் பிழையல்லவே!

புலம் பெயர் ஈழத் தமிழர்கள், குடும்பம், சமூகம், உறவு என, எல்லாவற்றையும் பற்றி ஏனைய பிரிவினரைக்காட்டிலும், சற்று சுயசிந்தனையுடன், தனது ஆணிவேர்களைத் தேடிச் செல்வது, அதற்கு அமைவாக தூரநோக்குடன், அவசரத்தனங்களையும், வெற்று வேட்டு வேடங்களையும் ஒட்டுமொத்தமாக ஒதுக்கி, யதார்த்தங்களை எண்ணவேண்டிய பாரிய பொறுப்புக்குள் உள்ளார்கள் என்பதே இன்றைய நிலைமையாகும்!

பேர்லின் நிரந்தர வதிவிட அனுமதி பெற்றபின் கல்யாணமாகிய ஆண்கள் தமது மனைவிமாரையும் (பிள்ளைகள் இருப்பின் ஓரிருவரையும்), பேர்லின் நகர் வருவதற்கு பெரும் முயற்சி செய்தனர். பேர்லின் நகரில் அவ்வாறு பலர் இணைந்து கொண்டதைக் கண்ட ஏனைய பிரதேசங்களில் வதியத் தலைப்பட்ட தமிழர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது ஐரொப்பிய நாடுகளிலும், மேற்கு ஜெர்மன் நாட்டின் பிற பகுதிகளில் வாழும் (முன்பு வந்தவர்களும்) தத்தமது குடும்பங்களையும், இளைஞர்களாக இருப்பவர்கள் திருமணஞ் செய்வென மணப் பெண்களை (பெற்றோரினால்) ஏற்பாடு செய்வித்து பேர்லின் வழியாக பயணிக்க வகைசெய்தது. இதற்காக பேர்லினில் வதிவிட உரிமம் கிடைத்த தமக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்களின் உதவியை நாடினர்! இவ்வாறு தமக்கான வாழ்க்கைத் துணை நாடி, பேர்லின் வழியாகப் பயணித்த சிலர் எதிர்நோக்கிய ஏமாற்றங்களும், அவமானங்களும், சுரண்டல்களும், பலரின் வாழ்க்கையையும், எதிர்பார்ப்புக்களையும் பகற்கனவாக்ககியதும் தனியாகப் பதிவிடப்பட வேண்டியதொன்று! இந்தக் கசப்பான அனுபவங்கள் பேர்னில் வதிவிட உரிமம் கிடைத்த தமிழர்களை ஏனைய ஐரோப்பியப் பகுதிகளில் வதியத் தலைப்பட்ட தமிழர்களுக்குமிடையில் மனப்பிரிவை உண்டாக்கியது.

இவ்வாறு போலாந்து, ரஸ்சியக் குடியரசு போன்ற நாடுகளைத் தாண்டி, குறிப்பாக பேர்லின் நகருக்குள் வந்து சேரும் பெண்கள், குழந்தைகள் போன்றோர் தங்கி தப்பிக்கொண்டதும்- உயிர் தப்பியதும், தாயை, குழந்தையை, மற்றும் கூடவந்த துணையையும், ஆற்றைக் கடக்கும் வேளை, நீர் மட்டம் உயர, அடித்துச் சென்ற சொல்லொணாச் சோகவரலாறு பலவும் நெஞ்சில் உறைந்து, நினைவை வாட்டிய உண்மையாகும்! பொருந்திய பணத்தைக் காட்டிலும், மேலும் வருத்தியும் பயமுறுத்தியும் பெற்று, ஏமாற்றிவிட்டு தப்பியோடிய தரகர்கள் பற்றியும் சேதிகள் கிடைக்கத்தான் செய்தது!

நீதி, தர்மம், பண்பாடு என்றெல்லாம் கூறிக்கொள்ளுகின்ற, அடக்குமுறை- கொடுமைகள் பற்றி தெரிந்து கொண்டு, அவற்றுக்கெதிராக குரல் எழுப்புகின்ற வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என அறிமுகமுடையவர்களே, தமது சொந்த மக்களை சுரண்டிக் கொண்டவர்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டார்கள் என அறிந்தபோது, யாரைத்தான் இங்கு நம்பமுடிகிறது? என,மட்டுமே எண்ணிப்பார்க்க மனம் விழைகிறது!



நேற்றைய செய்திகள் இன்றைய வரலாறு

எத்துறை சார்ந்த செய்திகளாயினும் காலங்கடந்து மீட்டுப் பார்க்கும்போது, அவற்றின் உண்மைத் தன்மைகளை உணரப்பட்டு, அதன் வரலாற்றுத்தேவை நன்றாகப் பேசப்படுகின்றதென்றால் வரலாற்றுப் பெறுமதியுடையதென்பது கருத்தாகும்!

புலம்பெயர்ந்து வந்து தன்னைப் பற்றியோ தான் சார்ந்த சமுதாயம் பற்றியோ அன்றி, அவற்றில் நாட்டம் கொள்ளவோ, பலர் முயலாது தமது சுயலாபங்களை முன்வைத்து (வேலை, வதிவிடம், மற்றும்……..!) தொடர்பாடல்களுக்காக,சில தேவைகளை நிறைவேற்றவே, சில நல்லவர்களிடம் 'நச்சு விதைகளை விதைக்கும், மட்டரகச் செயல்களில் ஈடுபட்டார்கள்!' "தமிழன் என்றெரு இனமுண்டு....“என்று அன்று கவிஞன் ஏன் பாடினான்? என்பதற்கு புகலிட வாழ்க்கையில் தான், சரியான- பொருத்தமான கருத்தை அறியமுடிந்தது என்பது பட்டறிவாக கொள்ளமுடிகிறது!

அது மட்டுமன்றி தமிழர்கள், தனது தன்மானத்தை தாரைவார்த்துக் கூட, பிறர் மானத்தை(இனமானத்தை) விற்க முடிந்தால், தயங்கிட மாட்டார்கள் என்பதை இங்கெல்லாம் பரவலாகக் காண முடிந்தது தான்! பொது விடயங்கள், எதுவாகினும், அங்கு, எவை எல்லாம் கையடக்கமாக்க முடியுமோ அவற்றை தனதாக்கும் தனிக்கொள்கையுடையவன் தமிழன், தவிர பிறர் இல்லை என்பதை நன்கு தெரிந்த பின்னர் தான் அந்த அடைமொழியைக் கொடுத்துப் பாடினான் போலும்! ஒருவரின் பலவீனத்தை அன்றி அறியாமையைத் தெரிந்து கொண்டால், அதனைப் போக்கிட உதவுதற்குப் பதிலாக அதனைப் பிறரிடம் பரப்புவதும் பழிப்பதும், இழித்துரைப்பதும் மிகக் கண்டிக்கப்பட வேண்டியதே!

புகலிடத்தேடலின் தொடக்க நிலைமையை முற்றாக இழந்து முகந்தெரியாது, தாம் வாழும் நாடுகளில் தமக்கு வழங்கப்பட்ட பிறந்து வளர்ந்த நாட்டில், பெறமுடியாத வசதிகளைப் பெற்றுக் கொண்டவற்றை மேலும் பேணி மதிக்காது, பிழையான, பேராசை, பொய்யான வழிகளில், சட்டங்களை மீறிய வழிகளில் அதிக நாட்டங்கொண்டதால், தங்கள் இருப்பையும், எதிர்காலத்தையும் பாழடித்துக் கொண்டவர்கள் பலர், நாட்டையே விட்டு, வெளியேறினார்கள்! சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டாவது, பொருள் சேர்க்கத் துணிந்தவர்கள், சிறைக்குள் தள்ளப்பட்டு, பின்னர் நாடு கடத்தப்பட்டு, தம்மைத் தாமே தண்டித்தவர்களாய் மாறினார்கள்! வெளிநாட்டில் புகலிடங்கோரியவர்களிடம் வேறு காரணங்களுக்காக(கல்வி,வேலை) போன்றவற்றுக்காக வந்தவர்கள், தொடக்கத்தில் நட்புக்கொள்ளவோ, உறவு வைக்கவோ விரும்பவில்லை! ஆயினும், ஜேர்மன் மொழிபெயர்ப்பாளர்களாகிய ஒரு சிலர் பழக முன் வந்ததும் உள்நோக்கங் கொண்டதே என்பது பின்னர் அறிந்து கொள்ளமுடிந்தது!

புலம்பெயர்வில் ஆங்காங்கு வாழ்ந்த பலரும், தமது சமூகப் பொறுப்பை புறந்தள்ளியும், புரிந்துகொள்ளும் வகையில் குறிப்பாக, மொழியறிவைப் பெற முயலாது, தம்மை, பொருளாதாரத்தில் உயர்த்துவதில், எதையெதைச் செய்து குறுக்கே பயணிக்கலாம் என்பதில் அதிகம் கவனத்தை செலுத்தினர்!

இவற்றுள் தவறான, மலிவான கூலியில் வேலை செய்தல், விடுமுறையற்று தொடர் வேலை, குறித்த வேலைக்கான எல்லையைத்தாண்டி, வேலை உடன்படிக்கையைத் தாண்டி, குறித்த பணிக்குப் புறம்பாக மேலதிகமாகவும், 'காக்காய்' பிடிப்பதற்காகவும் பணியாற்றுவதில் முன்மாதிரி தொண்டாற்றியவர்கள் தமிழர்கள், என்றவாறு, சக தொழிலாளர்களின் எரிச்சலைத் தேடிக் கொண்டார்கள்! ஓய்வற்று, குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து நோய்வாய்ப்பட்டவர்கள், தம்மையே இழந்துபோனார்கள்!

புலப்பெயர்வாழ்வில் இரண்டாம் தலைமுறையினர் கல்வியில் கால்பதித்தும், எதிர்காலத்தில் பொறுப்புமிக்க குடிமக்களாகவும், அதே நேரத்தில், தாம் சார்ந்த இனத்தின், பெற்றோர்- உறவின் முறை, பண்பாடு, மொழி போன்ற மானிட அடையாளங்களைத் தொலைத்து-தொலைந்து போகாமலும், காத்து, வளர்த்து, வாழையடி வாழையாக புலப்பெயர்வில் வேர் பதிக்கவேண்டிய கடமையை உணர்த்தும் பாரிய பொறுப்பு சமூக அக்கறை கொண்ட அனைவருடையதாகும்!

(நினைவுத் துளிகள் சொட்டும்....)

Thursday 20 August 2009

கதைச் சரம் - 11 மெத்தப் படித்த வாலிபனும் குடியானவனின் பண்ணையும்


கதைச் சரம் - 11
செவி வழிக்கதை - 9

மெத்தப் படித்த வாலிபனும் குடியானவனின் பண்ணையும்

வட இலங்கையில் மன்னார் மாவட்ட மாதோட்டத்தில் அடம்பன் என்ற அழகிய கிராமம். இதன் இயற்கை வாழ்வியல் அழகிற்கு பெரிய நாவற்குளம் எப்போதும் நீர் நிறைந்ததாக வழி சமைத்தது. இங்கு விவசாயமும் கால்நடை வளர்ப்பும் பிரதான தொழிலாகவிருந்தது. நெற்பயிரிடலுக்குப் பேர்போன கிராமங்களில் இதுவும் அடங்கும். இந்தக் கிராமத்திலிருந்த பெரிய பண்ணை வீட்டின் இளையமகன் அமலன் பல்கலைக் கழகத் புகுமுகத் தேர்வில் வெற்றியடைந்திருந்தான். அப்போது தரப்படுத்தல் அமுலில் இருந்த காலம். அடம்பன் கிராமத்திலிருந்து யாழ் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவான முதல் இளைஞனாக இவன் இருந்தான். ஊரே ஒன்றிணைந்து மாதோட்டம் சந்தியில் பஸ்சில் வழியனுப்பியதென்றால் பாருங்கள்! 'சின்ன வயதிலிருந்தே அவன் நல்ல கெட்டிக்காரன்!" என்றார் அந்த ஓர் ஆரம்ப்ப பாடசாலை ஆசிரியர் பெருமையுடன்!

பெரிய பண்ணையில் ரக்டர் ஓட்டும் முதல் மகனுக்கும், குடும்ப்ப பெரியவருக்கும் பெருமையோ பெருமை! தனது குடும்பத்திலிருந்து உயர் கல்வி பெறும் வாய்ப்பை இளையவன் பெற்றிருக்கிறான் என்றால் சும்மாவா? பின்னே! ஊர்ச் சிறுசுகளுக்கு ஒரே வேடிக்கைதான். "பெரிய படிப்பென்றால்; பென்னாம்பெரிய கொப்பியெல்லாம் வைச்சிருப்பாங்களாம்" என்கிறான் ஏதோ இதுபற்றித் தெரிந்ததாகப் பாவனைசெய்யும் குறுப்புக்காரச் சிறுவன் தன் நண்பனிடம்.

இப்படியாகப் பயணித்த நம்ம அமலன் தனது பல்கலைக் கழகக் கல்வியின் முதலாண்டை நிறைவு செய்து விடுமுறைக்கு வீடு திரும்புகிறான். சொல்வா வேண்டும் மாதோட்டச் சந்தியில் பெரிய வரவேற்பு. தனது ரக்டரில் வந்திருந்த பெரிய அண்ணனைக் கண்டதும் அமலனுக்கு சந்தோசத்தால் கண் கலங்கியது. பெரிய அண்ணனென்றால் அவனுக்கு சின்ன வயதிலிருந்து சரியான பயமும் மரியாதையும் இருந்தது. அந்த அண்ணனே தனக்கு மரியாதை வழங்கி வரவேற்கிறார் என்றால் சும்மாவா?

பதினொரு பிள்ளைகள் பெற்ற பெரிய குடும்பம் அது இவன்தான் கடைக்குட்டி. இவனுக்குப் பின் அந்த அம்மா போயே போய்விட்டார். இதனால் அனைவருக்கும் இவன்தான் செல்லப் பிள்ளை. பொதுவான பள்ளிகளுக்கும் இப்பத்தான் விடுமுறை காலமாதலால் அவ்வூர் சிறுவர்களுக்கு பெரிய பண்ணை வீட்டு சிறப்புகளைப் பார்ப்பதே பொழுதுபோக்காகி விட்டிருந்தது. அமலனின் ஒவ்வொரு அசைவும் நோட்டமிப்பட்டு அவ்வப்போது சிறுவர்களால் நடித்தும் காட்டப்படன. அந்தவூர்க் கதாநாயகன் இப்ப அமலன்தான்!

அந்தக் காலத்தில் யாழ்ப்பாணக் கிராமங்களில் நாங்கள் வசித்தபோது இலண்டனிலிருந்து இளைஞர்கள் திரும்பியபோது அவர்களது நடை, உடை பாவனைகளால் நாம் கவரப்பட்டதையொட்டியதாக இது இருந்தது. அந்த மார்க
ண் ஸ்பென்சர் உடுப்பும் குறுந்தாடியும் மினுங்கும் பேனாக்களும் தேற்பையும் கறுப்புச் சப்பாத்துமாக அந்த ஆடல் நடையுமாக வந்து நம் கனவுகளைக் ஆக்கிரமித்த நண்பர்களை எப்படி எம்மால் மறக்க முடியும்.

நம்ம கதாநாயகன் அமலனுக்கும் கிட்டத்தட்ட இதே நிலைதான். ஊரே வந்து குசலம் விசாரித்து நோட்டமிட்டது. "சாப்பாடு எப்படி?" "நல்லா மெலிந்து விட்டாயடா!" "உன்னோடு இருப்பவர்கள் நன்றாகப் பழகுறார்களா?" "யாழ்ப்பாணத்திலே என்னவெல்லாம் பார்த்தாய்?" இப்படியாகப் பல விசாரிப்புகள். இதனால் உற்சாகமான நம்ம ககதாநாயகன் புதிய நடையுடன் வலம்வரலானான். வயசுப் பெண்கள் நேரில் தென்படாவிட்டாலும் தன்னை ஆங்காங்கிருந்து நோட்டமிடுவதை அவனது அறிவுக் கண்(அதுதான் ஞானக்கண்!- அவன்தான் மெத்தப் படிக்கிறவனாயிற்றே) சொல்லிக் கொண்டிருந்ததால் மண்டையில் காதுகளின் பின் புறம் விறுவிறுக்க மேலும் மெடுக்கு அதிகரித்தது.

முதல் நாள் மாலை, வயல் வேலை முடிந்து மேலும் ஆக்கள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். மேச்சலுக்குப் போன கால் நடைகளும் திரும்பின. சூரியனும் மறைந்தும் மறையாத செவ்வான வெளிச்சம் மனதை வருடுவதாக இருந்தது. பண்ணையின் பெரியவர் "தம்பி அமலா! மாடுகளெல்லாம் பட்டிக்கு வந்துவிட்டதா என கணக்குப் பார்க்கிறாயா?" என்கிறார் அன்புடன்.

"ஓம் ஐயா!" என்று துள்ளலுடன் எழுந்தான் நம்ம கதாநாயகன். அவனுக்குப் பின்னால் சின்னஞ் சிறுசுகளின் கூட்டம் தொடர்கிறது. இதனால் புதிய சங்கடம் ஏற்படுகிறது நம்மாளுக்கு.

'அடடா! இந்தச் சிறுசுகளுக்கு முன்னால் எப்படி சாதாரணமாக எண்ணுவது? அப்படி எண்ணினால் எப்படி என்னை மதிப்பார்கள்... பெரிய படிப்பைப் படிச்சாலும் நம்மளப் போலத்தான் கணக்குப் பார்ப்பதாக ஊர் முழுக்கச் சொல்லித்திரிவார்கள்.... என்ன செய்யலாம்!' அவனது எண்ணம் குறுக்குமறுக்காக ஓடியது. தேடல் வீண் போகவில்லை. அவனுக்கு ஒரு புதிய உத்திகிடைத்துவிட்டிருந்தது.

படபடப்படன் ஓடி, மாட்டுப் பட்டிக்குள் நுழைந்தான். சடாரென கீழே படுத்து மாடுகளின் கால்களை எண்ணத் தொடங்கினான். பின் தொடர்ந்த சிறுவர் கூட்டம் வாயைப் பிளந்தவாறு அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தது. ஆகா! நம்மாளும் ஒருவாறு எண்ணி முடித்தவாறு எழுந்து ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட்டு அக்கம் பக்கம் பெருமிதத்துடன் நோட்டம் விட்டான். எல்லோரது கண்களும் அவனையே மொய்த்த வண்ணமிருந்தன. அதே சமயம் அவன் மனது கணக்கு பார்த்துக்கொண்டிருந்தது .
"எத்:தனை மாடுகள் இருக்கண்ணே?" ஒரு சிறுவன் கேட்டுவிட்டான்.

"மொத்தம் தொண்ணூறெட்டே முக்கால் மாடுகள்" என்றார் நம்மாள் பெருமிதத்தோடு. ('மொத்தம் 395 கால்கள் ஆக 4ஆல் வகுத்தால் தொண்ணூறெட்டே முக்கால் மாடுகள்.
395 / 4 = 98 3/4 )

- முகிலன்
(இக்கதை என்னுடன் பல்கலையில் படித்த மன்னார் பள்ளிமுனையைச் சேர்ந்த நண்பன் பிகராடோ சொன்னது. இவர் இப்போது எங்கிருக்கிறார் என அறிய முடியவில்லை.)
பாரிஸ் ஓகஸ்ட் 2009

Tuesday 18 August 2009

சுவட்டுச் சரம் 1 - நினைவுத்துளிகள் (9)


சுவட்டுச் சரம் 1 - நினைவுத்துளிகள் (9)
பெர்லின் புலம் பெயர் வாழ்வு தொடக்க கால நினைவுகள்
- குணன்


கூடி வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து, தனிக் குடித்தனம் மாதிரி வாழ்க்கையை புகலிட வாழ்க்கையில் ஏற்படுத்திய அந்த ஆரம்ப நாட்களில், ஒரு சிலர் தனிக்குடித்தன-கணவன்-மனைவியாக வாழத் தலைப்பட்டாலும், அங்கு பொது விடுதிகளாகிய புகலிடங்கோரிய, நிரந்தர வதிவிட அனுமதி பெற்ற, இளைஞர்களும் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டனர். அதுமட்டுமன்றி, பல்லினத்தவர்களுடன் ஒன்றாக ஒற்றுமையாக, சமையல், குளியல் அறைகளில், கருமங்களை ஆற்ற வேண்டிய பொதுமைக்குள் தள்ளப்பட்டவர்களாக அன்றைய அனுபவங்கள் இருந்தன!

ஒரே ஊரில், இருந்த நாட்களில், சொந்த வீடு, தனிக் கிணறு, சுற்றி நான்கு புறமும் கிடுகு வேலிகள், என்ற கட்டமைக்குள் காலா காலமாக வளர்ந்த "தனிக் காட்டு" மனப்பான்மை இரவோடிரவாக, அவ்வளவு சுலபத்தில் மாறிவிடும் ஒன்றல்ல வென்றாலும், சூழ்நிலைக்கு தக்கவாறு, வசதிகளைப் பயன்படுத்துவது தேவைப்பட்டது!

திருமணமாகி, குடும்பங்களைப் பிரிந்து, தனித்து வாழ்ந்தவர்களும், திருமண வயதை எய்தியவர்களும், தமக்குத் துணைகளைத் தேடவேண்டியவர்களாய் மாறினர்! பெற்றாரின் ஊக்கத்தால் தமது துணைகளை அழைத்தவர்களும், தாம் விரும்பியவர்களை முயற்சி செய்து அழைத்தவர்களும், உடன் பிறந்த பெண்கள் திருமணம் முடிக்க வேண்டி, உழைப்பை நல்கியவர்களுக்கு, பெரும்பாலனவர்கள் தமது துணைகளைத் தேடுவதில் தாமதம் எய்தியதும், ஒரு சிலர், புகலிடங் கோரி வந்தநேரத்தில் மனதுக்குப் பிடித்தவர்களை துணையாக்கிய சம்வங்களும், அவ்வப்போது புகலிட வாழ்க்கையில் முதன் முதல் இடம்பெற்ற முற்போக்கு நிகழ்வுகளாகப் பதிய வேண்டியவையாயின!

இன்று காலூன்றி, பணம், பகட்டென்றெல்லாம், குடும்ப விழாக்கள் என்று கூறப்படுபவை, படாடோபமாக, பெரும் பொருட் செலவில் நடைபெறாவிட்டால், அதற்கு பொருள் அற்றதாகிவிட்டதென்ற மட்டமான கருத்துக் கொண்டு போலும்,"பெரும்பாடு பட்டேனும்" பிறந்த நாள் தொட்டு அனைத்தும் அமர்க்களப்படுத்தும் நிலை உருவாக்கப்பட்டிருப்பதை புலத்தில் காணலாம்!

இன்று நாம் எல்லோரும் சேர்ந்து எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதைக் காட்டுவதுபோன்ற நிகழ்வுகள் முழுமையானதென்றோ அன்றி தவறில்லையென்றோ எண்ணுவது சரியாகும் என ஏற்கலாமா? என உள்நோக்கி ஆராய்ந்து பார்த்தால், இதன் பின்னணியில் ஏதோ ஒரு உள்நோக்கம் இருப்பதைப் புரியலாம்! இன்று தாயகத்தில் இடம்பெறாத ஒன்றாகப் பார்க்கும் அளவிற்கு, சில குடும்ப விழாக்கள் புலப்பெயர் வாழ்வில் பெரும் பொருட் செலவில், நாடு கடந்த அளவில் ஒன்று கூடல்கள் ஒழுங்கு செய்வதெல்லாம் மிக சாதாரணமாகியும், அதே நேரத்தில், அதிமுக்கிய நோக்கத்துக்காக நடைபெறவேண்டி ஒழுங்கு செய்யப்படுகின்ற பல்வேறு பொது விழாக்களுக்கோ அல்லது ஒன்றுகூடல்களுக்கோ தமிழர்கள் இன்றும் முக்கியத்துவம் அளிப்பது எத்தகையது? என்பதை இங்கு நினைவு கூறத்தான் வேண்டும்.

இன ஒன்றுகூடல், பண்பாட்டு, மொழித் தேடல்கள், விழிப்புணர்வு, இலக்கியம் என, எதைக்காட்டிலும், தனிமனித, குடும்ப நிகழ்ச்சிகளுக்கு அதிக கவனம் செலுத்துகின்றவர்களாக மாறிவிட்டதில் மறைமுகத் தேவை உருவாக்கப்பட்டுள்ளது போல கருதவேண்டியதல்லவா?இவற்றை உற்று நோக்கின், ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்! சமூக-அரசியல், பண்பாடு, போன்ற பொது நோக்கிற்கான, ஆர்வமும் பொறுப்பும் பங்கேற்பும் புறந்தள்ளப்படுவதும், கண்மூடித்தனமான, காலந்தாண்டிய, தேவையற்ற தனிமனித நோக்கம் மட்டும் கொண்ட நிகழ்வுகளுக்கு அதிமுக்கியம் கொடுப்பதும், இன்றை புலம்பெயர்ந்த வாழ்வில் உள்ளவர்களை ஆங்காங்குள்ள நோக்கர்களால் சந்தேகம் கொள்ளவும் அவதானத்துக்குள்ளாக்கவும் இட்டுச்செல்கிறது எனலாம்!

பெரிய எண்ணிக்கையில் ஒன்று சேர்வதும், பெருவிருந்து போன்றவற்றில் புலப்பெயர்வில் ஈடுபாடுகொள்வதும், குறித்த மாத வருமானத்தில் நடத்த முடிகிறதா? என்ற கேள்வி எழுப்பப்படாமலில்லை!

பெரிய எண்ணிக்கையில் ஒன்று சேர்வதும், பெருவிருந்து போன்றவற்றில், புலப்பெயர்வில் ஈடுபாடுகொள்வதும், குறித்த மாத வருமானத்தில் நடத்த முடிகிறதா? என்ற கேள்வி எழுப்பப்படாமலில்லை! "நூற்றுக் கணக்கில் உங்கள் நண்பர்கள், மற்றும் உங்கள் உறவினர் மற்றும் விருந்தினர்களை உங்கள் நாட்டில் அழைத்து குடும்ப விழாக்களை நடாத்துவது ஏற்றுக் கொள்ளலாம்! ஆனால், இங்கு என்னை விடவும் மிகவும் குறைந்த ஊதியத்தைப் பெறும் ஒருவரால் எப்படி, இத்தகைய பெரிய அளவில் செலவு செய்ய முடிகிறது?" என்ற கேள்வியை தமிழர் ஒருவரின் அழைப்பை ஏற்று குடும்ப விழாவிற்கு, வருகை தந்த வேளை, அவரின் முதலாளி மற்றொரு தமிழரிடம் வினவினார். இந்தக் கேள்வியைச் சற்றும் எதிர் பாராத வேளை கேட்டதுடன் தொடர்ந்து "அப்படியாயின், வேறு தவறான வழிகளில் பணம் தேடுபவராகத்தான் கருதமுடியும்" என்றவாறு ஏளனமாகச் சிரித்துக்கொண்டவராய் அங்கிருந்து அகன்றார்! இந்தச் சம்பவப் பதிவை இலகுவில் புறந்தள்ளிவிட முடியுமா?
0000000000000000

இன்றைய புலப்பெயர்வின் (பயனாக?) விளைவாக, கடந்த முப்பதாண்டு காலத்தையும் படித்த பாடங்களை அல்லது அனுபவங்களின் வெளிப்பாடுகளையும் சற்று நோக்கின்,
"உலகம் பரவிய தமிழன்" இன்று எங்கே உள்ளான்?
எதனை பெற்றுள்ளான்?
அவனிடம் கண்ட புதிய அறிவார்ந்த மாற்றங்கள் எவை?
எவற்றில் நாட்டங்கொண்டிருக்கிறான்?

எனவாக நோக்கின், அவன் எதையுமே, தான் வாழும் வளர்ச்சி கொண்ட மக்கள் சமுதாயத்திடம் இருந்து வரவாக்கிப் பெற்றிருக்கிறானா? என்றால், பெரிதாக ஆக்கந்தரும் எதனையும் பெறவில்லையே என்ற ஏக்கத்தைத்தான் பதியமுடிகிறது!

பண்பாடு, கலாச்சாரம், சமயம், என்ற திரைகளுக்குப்பின்னால், ஓர் சுரண்டலுக்கு ஏதுவான வேலைத்திட்டங்கள், மிகக் கன கச்சிதமாக நிறைவேற்றப்படுவதற்கு தூண்டுகோலாக மாறியிருப்பதைக் காணலாம்!

அறிவியல், நாட்டுப்பற்று, மொழிப்பற்று, மிக்க மக்களிடையே வாழுகின்ற நாம், எதனைத்தானும் கற்றுக்கொண்டிருக்கிறோமா? என்றால், எதையும் தொட்டுக் காட்டவோ, சுட்டும் அளவுக்கோ கற்றுக்கொள்ளவில்லை என்பது உண்மையாகும்! அறிவைத்தேடும் தாகத்திற்கேற்ற விடயங்களை அறிவதைவிட, வெறும் ஊனக் கண்களுக்கு தீனி போடுகின்ற நிகழ்ச்சி நிரல்களையே தேடித்திரிந்து 'அருமருந்தென' காலத்தை வீணடிப்பதும், இளந்தலைமுறையினருக்கும் அவற்றிற்கு பாதை போட்டு கொடுக்கிறோம் என்பதை, ஏனோ மறந்து விடுகிறோம்!

மேலைநாட்டவர்கள் மத்தியில் எங்கும் எல்லோரிடமும் காணக்கூடிய ஓர் சிறந்த பழக்கம்,"வாசிப்பு", அதுவும், ஒரே குடும்பத்தில் இருப்பவர்களாயினும், தாமாக பணங்கொடுத்து வாங்கும், தின, வார, மாத, அல்லது நூலைப் படிப்பதைத் தவிர, பிறரிடம் இலவச(ஓசியில்......!)மாக பெற்றுக்கொள்ளும் பழக்கமின்மையால்தான், இந்நாடுகளில் வெளியிடப்படுகின்ற இதழ்களின் எண்ணிக்கை பல இலக்கங்களைத் தாண்டியுள்ளன! தமிழில் வெளியீடுகள், நூல்கள், சிற்றிதழ், எதனையும் வெளியிட யாரும் துணிவதோ, எழுதுவதிலோ முன்வருவது, மேலை நாடுகளில் இடம் பெறுவது போல இல்லை என்பதற்கு, வாசிப்போர்-வாங்குவோர் இன்மை தான் காரணம்.

தமிழர் புலப்பெயர்வில் கூட, வசதிகொண்டிருந்தும், மேலை நாட்டவரிடத்தில் இருப்பதைப்போன்ற வாசிப்பு ஆர்வம், வேரூண்டாத் தன்மையை குறிப்பிட்டேயாக வேண்டும்! ஆயிரம் நூலைத் தமிழில் வெளியிட்டு, விற்பனையாக்கிட, (இலவசம்- அன்பளிப்புக்கள் நீங்கலாக) சில வருடங்கள் தானும் தேவை!

சிக்கன வாழ்க்கையும் சேமிப்பும் எத்துணை தேவையானதென்பதை யாருமே ஏற்பர். இதனை, இன்றைய வாழ்க்கைத் தேடலில், குறிப்பாக புதிய சூழலில்வாழும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப மேற்கொள்வது, புலம் பெயர்ந்தவர்களின் எதிர்கால இருப்புக்கு மிகத் தேவையான காரணியாகும். சட்டப்படி கிடைக்கின்ற ஊதியத்தில், சிக்கனமாக வாழ்க்கை நடாத்துவதென்பது எல்லோராலும் முடிவதில்லை!

சிக்கனத்தின் மறுபெயர் 'ஈயாத்தனம்' அல்ல எனபதையும், நாம் பிறரிடமிருந்து பெறுவதில், எத்தனை ஆர்வமுடையோமோ, அந்த அளவிற்கு எம்மைக் காட்டிலும் நலிவுடையோருக்கு வழங்கிடவும் வேண்டும்! ஆயினும், சிக்கனம் என்றால் என்ன? சேமிப்பு என்றால் எப்படி? என்பதைப் புலம் பெயர்வில் வாழ்கின்ற நாட்டின் சட்ட ஒழுங்குமுறைக்கு ஏற்றவாறு பேணுதல் கவனிக்கப்படவேண்டும். காண்பதும், கேட்பதும் ஈற்றில் இருப்பையே மாற்றிய கதையாகத்தான் முடிவுற்ற அவலத்தில் கொண்டு சென்றதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு!

சீட்டுக்கட்டு ராசாக்களாக மாறிய பலர் புலப்பெயர்வில் பெற்றுக்கொண்ட 'பட்டறிவுகளின்' பாடங்களில் ஏற்றுக்கொண்ட பாரிய தாக்கங்களும், ஏமாற்றுக்களும், இவ்வாறாகவா சேமிப்பை மேற்கொள்வது? என்பதற்கு விடை கண்டிருந்தும் கூட, தொடர் பாணியில் இன்னும் நீண்டிருப்பதுதான், புலம் பெயர்ந்தும் தமிழர் தமது பட்டறிவை எப்படியாகப் பயன்படுத்துகிறார்கள்? என்ற கேள்வி எழாது போகுமா?

இது குறிப்பாக,புலம்பெயர் சூழலில், நிதானமாகவும், நியாயமாகவும் நாணயத்துடனும், வாழ்வதை வெளிப்படுத்தவேண்டிய சமூக நல உதவிகள் உறுதிசெய்யப்பட்ட தகுதிமிக்க-அமைப்பின்கீழ் வாழ வசதி நல்கிய நாட்டில், வாழ்கின்றபோது ஏனோ நம் நாட்டில் முன்பு கண்டறிந்த பின்னர், இங்கும் வேதாளம் வெளிநாட்டிலும் ஏற வேண்டிய தேவை ஏன்? என்பது ஆராய வேண்டும்.

தமிழர் எங்கெலாம் புலப்பெயர்வில் உள்ளார்களோ அங்கெலாம், இவ்வாறு சீட்டுப்(பிள்ளையார் பிடிக்கப்போனவர்கள்), குரங்கு பிடித்த செய்திகள் பரவலாக அறிந்த தொன்றே!

(நினைவு துளிகள் சொட்டும்....)

Monday 17 August 2009

கதைச் சரம் - 10 தாத்தாவின் சாப்பாட்டுச் சிரட்டையும் பேரனும்


கதைச் சரம் - 10
செவிவழிக் கதை - 8
தாத்தாவின் சாப்பாட்டுச் சிரட்டையும் பேரனும்

ஒரு கிராமத்தில் அந்தக் குடும்பம் நல்ல வசதியாக வாழ்ந்து வந்தது. அந்த நாட்களில் வசதியென்றால் மூன்று வேளை நல்ல உண்வு, போதிய ஆடை அணிகலங்கள், விவசாயத்துக்கான நில புலத்துடனான வீடு, கால்நடைகள் போன்றவைதான் பிரதானமாகப் பார்க்கப்படும். இது ஒரு கூட்டுக் குடும்பம்.

இந்த வீட்டில் மிகவும் வயதான தாத்தா ஒருவர் இருந்தார். பல் எல்லாம் விழுந்த இவரால் எழுந்து நடக்க முடியாத முதுமைநிலை. படுக்கையிலேயே கழிவு போகும் இவரது நிலை கண்ட குடும்பத்தின் தலைவனாக இருந்த மூத்த மகன், இவருக்கு வீட்டின் புறத்தே அமைந்த மாட்டுத் தொழுவத்துக்கு அருகாமையில் ஒரு பத்தி இறக்கி அதில் சாய் மனை வசதியுடனான பலகைக் கட்டில் வைத்துப் பராமரித்து வந்தான். நாளாந்தம் கழிவைச் சுத்தப்படுத்துவதற்கு இந்த இடமும் கட்டிலும் நல்ல வசதியாக அமைந்திருந்தது. இவருக்கு கஞ்சி போன்ற திரவ உணவு வகைகளே கொடுப்பதால் இவருக்கென்று தனியான சிரட்டையொன்றை சிறப்பாகச் செய்து அந்த அறைபோன்ற பத்தியின் கிடுகுக் கூரையில் சொருவி வைத்திருந்தனர்.

இந்தக் குடும்பத்தலைவனாகிய வயதானவரின் மூத்த மகனுக்கு ஆறு பிள்ளைகள். இதில் நான்கு வயதான கடைக்குட்ப் பயல் ஒரு சுட்டிப் பையன். இவனுக்கு தாத்தா என்றால் நல்ல விருப்பம். தனக்குப் பல் முளைத்த போதும் தாத்தாவுக்குப் பல் இல்லாதது இவனால் அறிய முடியாத அதிசயம். தனது சின்ன வயதிலிருந்து தாத்தாவிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டு அந்தப் பொக்கை வாயால் வரும் பதில்கள் புரிந்தனவோ, புரியவில்லையோ தலையாட்டிச் செல்வது வழக்கம். தான் மெல்ல மெல்லத் தவழ்ந்து நடந்து பழகி ஓடத் தொடங்கவும் நடந்து கொண்டிருந்த தாத்தா தடியூன்றி நடந்து பின் நடக்க முடியாதவராகி படுக்கையில் வீழ்ந்ததானது இவனுக்கு சரியான கவலை. தாத்தாவுக்கு என்ன பணிவிடை நடந்தாலும் ஓடி வந்து பார்ப்பதும் தன்னால் முடிந்த ஒத்தாசை செய்வதும் இவனது வழக்கமாகிவிட்டன. அதுவும் சாப்பாடு கொடுக்கும் போது அந்தச் சிரட்டையைத் தன் கையால்தான் தாத்தாவுக்குக் கொடுக்க அடம்பிடிப்பான். இதனால் கொஞ்சம் கஞ்சி சிந்தியதும் உண்டு. பேரனின் ஆசையை அந்தக் குடும்பத்தினர் கண்டு பெருமிதம் கொண்டனர்.

இப்படியான ஒரு நாள் அந்த முதியவர் காலமாகிப் போனார். இறப்பென்றால் என்னவென்று தெரியாத சிறுவன் அனைவருடன் சேர்ந்து தாத்தாவுக்கு நடக்கும் புதிய சடங்குகளை கவலையுடன் உன்னிப்பாக கவனித்தான். எல்லோரும் அழுததால் அவனும் அழுதான். இறப்பு என்றால் இனித் திரும்பி வராத இடத்துக்கு தாத்தா போயிற்றார் என்றே அவனுக்கு விளக்கம் கூறியிருந்தனர்.
"தாத்தாவின் உடம்பு இங்கிருக்கையில் தாத்தாவால் எப்படி, அதுவும் நடக்க முடியாத தாத்தாவால் எப்படி திரும்பி வராத இடத்துக்குப் போக முடிந்தது?" சுட்டிப் பையனின் இந்தக் கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.

மேளமடித்து எல்லாவிதச் சடங்குகளும் முறைப்படி நடந்து வயதானவரின் உடலைத் தீமூட்டித் திருப்பினர் குடும்பத்தினரும் ஊராரும். அடுத்த நாள், வயதானவரின் அந்தக் கட்டிலும் இடமும் சுத்தம் செய்யப்படன. கிழவரின் படுக்கையும் துணுமணிகளும் வெளியில் குவிக்கப்பட்டு தீயிடப்பட்டன. எல்லாவற்றையும் அந்தச் சிறுவன் பார்த்துக் கொண்டிருந்தான். கிழவரின் பத்திக்குள் குடும்பத் தலைவன் வந்து பார்க்கிறான். தனது தந்தையுடன் இந்தச் சிறுவனும் கூட வந்துவிடுகிறான்.

சுற்று முற்றும் சுழண்டு பார்க்கும் தந்தையின் கண்களில் அந்தச் சிரட்டை பட்டுவிடுகிறது. அதை எடுத்தவாறு எரியும் நெருப்பிலிட வெளியில் வருகிறார் குடும்பத் தலைவன்.

"அப்பா...." சிறுவன் கத்திக் கூப்பிட்டதை இதுவரையில் இவர் கேட்டதில்லை. திடுகிட்டவாறு நிற்கிறார். ஓடி வந்த சிறுவன் அவரது கையிலிருந்த சிரட்டையைப் பறிக்க முயலுகிறான்.

"தம்பி! ஏனப்பா பறிக்கிறாய்....? தாத்தா இனி வரமாட்டார்தானே... இனி இது தேவையில்லையல்லவா!!" பொறுமையுடன் விபரிக்க முனைகிறார். வீட்டிலிருந்தவர்களும் வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

"இல்லை. இது எனக்கு வேணும்." சிறுவனின் குரலில் இறுக்கம் இருந்தது. தந்தையாருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

"ஏன்.....?" என்றார் சலிப்புடன்.

"அப்பா! நீங்களும் கொஞ்சக் காலத்தில் தாத்தா மாதிரி வந்துவிடுவீர்களல்லவா... அப்போது நான்தான் உங்களுக்கு சாப்பாடு தரவேண்டும்.... அதற்கு இந்தச் சிரட்டை வேண்டும் !!"

சிறுவனின் உறுதியான பதில் கண்டு அனைவரும் வாயடைத்துப் போயினர்.



- முகிலன்
பாரீசு ஓகஸ்ட் 2009
(சிறு வயதில் எனது தந்தையிடம் கேட்ட கதை)

Sunday 16 August 2009

கதைச் சரம் - 9 பெப்சியும் யேசுவும்!


கதைச் சரம் - 9
செவிவழிக் கதை - 7
பெப்சியும் யேசுவும்

அந்தப் பிரெஞ்சுக்காரச் சிறுவன் இந்த விடுமுறைக்கு மிகவும் பழமையான கிராமத்துக்குச் சென்றிருந்தான். இவனுக்கு பெப்சி என்றால் வாயூறும். பெப்சி குடிக்காத மதிய உணவென்பது அவனுக்குக் கிடைத்ததே இல்லை. பெறறோரும் அவனது விருப்புக் கேற்றவாறே நடப்பது வழக்கம்.

ஆனால் விடுமுறைக்கு வந்த கிராமத்தில் பெப்சி கிடைக்கவில்லை. இதைப் பெற்றோர் எடுத்துக்கூறியும் அவனால் நம்பவே முடியவில்லை. கிடைக்காத பெப்சி என்றதும் பெப்சி மீது இன்னும் அதிக நாட்டம் கூடியது. இதனால் அவ்வூரிலுள்ள கடைக்கு இவனே சென்று பெப்சி கேட்டான். கடைக்கார் பெப்சி இங்கு கிடையாது என்று சொல்லிவிட்டார். சிறுவனோ விட்டபாடில்லை, அடுத்த நாளும் கடைக்காரனிடம் போய்க் கேட்டான். அவரும் இல்லை என்று சொல்லி அனுப்பிவிட்டார். இது இப்பயே வாடிக்கையாகி ஓவ்வொரு நாளும் காலையில் சிறுவன் வருவதும் பெப்சி கேட்பதுமான நிலையைக் கண்டு கடைக்காரன் கோவத்துக்குள்ளானான்.

"தம்பி இனிமேல் நீ இங்கு பெப்சி கேட்டு கடைக்கு வந்தாயானால் நடப்பதே வேறு!" என்று கடுமையாகச் சொல்லிவிடுகிறான்.

பெப்சி மேல் தீராத தாகமுடைய சிறுவன் கடைக்காரனின் எச்சரிக்கையை சட்டைசெய்யவில்லை. அடுத்த நாளும் செல்கிறான். கடைக்காரன் இந்த முறை ஏதுமே பேசவில்லை. சிறுவனைப் பிடித்து சிலுவையில் கட்டிவிடுகிறான். இதைச் சற்றும் எதிபாராத சிறுவன் என்ன செய்வதென்று தெரியாமல் அங்குமிங்கும் பார்க்கிறான். காலை நேரமாகையால் சன நடமாட்டம் இல்லாது வீதி வெறிச்சோடியிருந்தது. தெருவின் அடுத்த பக்கத்தில் சிலுவையில் யேசு அறையப்பட்ட பெரிய சின்னம் அந்தச் சந்தியிலிருந்ததை அவனால் இப்போதுதான் உணர்வுபூர்வமாகப் பார்க்க முடிந்தது. அதில் இலயித்துப் போனவனாகி,

"யேசுவே! ஐயகோ!! நீருமா பெப்சிக்காக சிலுவையில் ஏற்றப்பட்டீர்!!" அவன் வாய்விட்டே கேட்டுவிட்டான்.


- முகிலன்
பாரீசு ஓகஸ்ட் 2009
(கோடை விடுமுறைப் பிரயாணத்தின்போது பல்வேறு பகிடிக் கதைகளை பரஸ்பரம் சொல்லிச் செல்கையில், வாகனத்தின் பின் இருக்கையிலிருந்த பிரான்சில் பிறந்து வளரும் 12 வயது எனது இளையமகன் சொன்ன கதை இது)

Saturday 15 August 2009

சரம் - 16 பெண்ணியம் - தொலைக்காட்சித்தொடர் - இளையோர்


சரம் - 16
பெண்ணியம் - தொலைக்காட்சித்தொடர் - இளையோர்

இது ஒன்றும் கட்டுரைத் தலைப்பல்ல. வெயில் கொழுத்தும் கோடை என்றால் உடனே இங்கு இருக்கும் நம்மவர்கள் போடும் திட்டம் 'கிறில் பாட்டி' (grill party) உணவை திறந்தவெளியில் தீ மூட்டிச் சுட்டு பகிர்நது சாப்பிடுவதும் கலந்து பேசுவதும் நல்ல விருப்பமான குடும்பப் பொழுதுபோக்கு ஆகும். குடும்பத்தினர் அனைவருக்கும் பிடித்தமானதாக இது அமைவதால் இந்தக் கோடைவிடு முறையில் செர்மனிச் சிற்றூரான சுண்டனுக்கருகில் ஒதுக்கப்பட்ட இடத்தில் நான்கு குடும்பங்கள் ஒன்றிணைந்தது.

பிள்ளைகள் பந்து விளையாடிச் சாப்பிட்டனர். பெண்கள் ஆண்களென பெரியவர்கள் இதற்கான அடுப்பில் கரியிட்டு தீ மூட்டி உணவைப் பதமாகத் தயாரித்து திறந்த வெளியில் உண்டபடி கலந்துரையாடினர்.

மலைக் கிராமத்தில் ஒரு சிறிய அருவி இவ்விடத்தில் வளைந்து செல்லும் 'சல சல' ஓசையும் பார்க்குமிடமெல்லாம் பசுமையான மரங்களுமாக மனதைக் கவரும் அருமையான இடம். பக்கத்தில் குடிமனைகளே கிடையாது. ஆனால் இவ்விடத்தில் ஓய்வெடுப்பதற்காக மகிழ் ஊர்தியில் செர்மானியர்கள் வந்து சென்று கொண்டிருந்தனர்.

பேச்சு பல்வேறு விடையங்கள் பற்றியும் இருந்தது. இதில் சிகாமணி அண்ணர் நகைச் சுவையாக தன் இளமைக்கால ஊர்க் கதைகளை நினைவுகூர்ந்தார். அவருடன் அவரது நண்பர் இளவயது ஊர்த்தோழன் றாபீக் குடும்பமும் கலந்துகொண்டதானது பழைய முல்லை வாலிபர் சங்கக் கதைகளை நினைவூட்டியிருந்தது. சும்மா சொல்லக் கூடாது வர்ணனையின் போதே இந்த நினைவுகளால் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்துவிட்டார்.

இப்படியாக கழிந்த மாலையில், இறைச்சிகளை பதமாக சுட்டுக் கொண்டிருந்த பெண்கள் தங்களுக்குள் பகிடிவிட்டுதாலோ என்னவோ விழுந்துவிழுந்து சிரித்தனர். இதனால் அப்பக்கம் திரும்பிய என்னைப் பார்த்து சிகாமணி அண்ணர்,
"நான் மேடைகளில் பேசும் போது என் பிள்ளைகள் வினவிய கேள்விகளுக்கான விபரங்களைத்தான் பேசுவது வழக்கம். இதுதான் பொதுமக்களுக்குப் பிடித்ததாக தேவையானதாக அப்பிளாஸைத் தரும்" என்றார்.

"ஆ!! அப்படியா?" எனது வாய் பெரிதாகவே பிளந்திருக்க வேண்டும்.

"இதுலே... நிறையவே விசயங்களிருக்கு. பிள்ளைகளின் தொடர்பாடலும் சிந்தனைகளும்தானே நாளைய நடைமுறையாகப் போகுது."

விடயம் யதார்த்தமானதாக இருந்ததால், ஆவலுடன் அவரது முகத்தைப் பார்த்தேன்.

"அன்றொரு நாள் எனது மகன் என்னைக் கேட்டான ஒரு கேள்வி அப்படியே அசந்து போய்விட்டேன்." என்றார் முகத்தை ஆச்சரிய பாவத்தில் வைத்தவாறு. சிற்நத மேடைப் பேச்சாளருக்கேயுரிய இலாவகம் அப்படியே அனைவரையும் கவர்ந்தது.

"அப்படி என்ன கேட்டான்?" ஆர்வம் என்னைக் குடைந்தது, எல்லோரையும்தான்!

ஒரு கணம் தன்னை ஆசுவாசப்படுத்தி தனது மகன் போலவே நடித்துக்காட்டுகிறார். "... 'அப்பா, பெண்ணியம் பெண்ணடிமைத்தனம் என்று ஏது ஏதோ சொல்கிறீர்களே.... எனக்கென்றால் அப்படித் தெரியவில்லை! இந்த ரீவித் தொடர்களில வாற பெண்களைப் பார்த்தபிறகு, எனக்கு பெண்களுக்குச் சுதந்திரம் கொடுக்ககூடாது என்றுதான் படுபிறது' என்றானே பாருங்கள்..... நான் என்னத்தைச் சொல்ல....." என்றார் பெருமூச்சுடன்.

இதைக் கேட்ட நானும் கூட இருந்தவர்களும் வாயடைத்துப்போனோம். இதன்பின் பெரிதாக வேறு உரையாடலில் செல்ல மனம் ஏனோ விடவில்லை.

ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் விரைவிக்கிடந்தாலும் வீட்டு வரவேற்பறைகளில் சென்னையிலிருந்து பிரவாகமெடுக்கும் தமிழ்த் தொலைக் காட்சிகள் கொப்பளிக்கும் தொடர்கள் தொடர்பாக நம் பெண்கள் தமக்குதாமே சுருக்குத் தடம் போடுவதாகத்தான் தெரிகிறது.



- முகிலன்
பாரீசு, ஓகஸ்ட் 2009

Friday 14 August 2009

செய்திச் சரம் 4 'இருக்கிறம்' சஞ்சிகை



செய்திச் சரம் - 4
கொழும்பிலிருந்து மாதமிருமுறை வெளிவரும் இலங்கைத் தமிழ்ச் சஞசிகை
'இருக்கிறம்'

கொழும்பிலிருந்து மாதம் இரு இதழாக வெளிவந்து கொணடிருப்பதான 'இருக்கிறம்' சஞ்சிகையின் ஒரு பிரதியை இந்தக் கோடை விடுமுறையின் போது எனது நண்பர் வீட்டில் காணக்கிடைத்தது. அது காத்திருப்பு : 3 - இருக்கை : 6 ஒரு பொல்லாப்புமில்லை 01.04.2009 எனப் பதியப்பட்ட அட்டையில் ஏ ஆர் ரகுமான் புன்சிரிப்போடிருந்த இதழ். அட்டையில் 'நான் கடவுள்' பதிவும் உள்ளிருப்பதான கட்டியமும் காணக் கிடைத்தது. மூன்று வருடங்களின் பின்னரே என் கைக்கெட்டிய இதழைக் குற்றவுணர்வுடன் புரட்டினேன்.

இலேசான மென் வாசிப்புத் தளத்தில், அழகான வடிவமைப்புடன், குங்குமம் - ஆனந்தவிகடன் அளவில் அதே சாயலில் கொழும்பிலிருந்து புதியதான தமிழ்ச் சஞ்சிகை. இன்று இலங்கைத் தமிழன் மூலத்தொடர் முகவரி தொலைத்தவனாகி ஆணிவேர் பிடுங்கப்பட்டவனாகி உலகெங்கும் விரவிக்கிடக்கும் அவலத்துக்கான குற்றத்தை தார்மீக ரீதியில் சுமக்கும் அதிகூடிய அதிகார மையத்தைக் கொண்ட கொழும்பிலிருந்து ஒரு தமிழ்ச் சஞ்சிகை. நம்பச் சிரமமாகவே இருந்தது.
நகைச்சுவைத் துணுக்குகளும், அருமையாக கார்ட்டூன்களும், கவிஞர் திமிலைத் துமிலன், வ.ஐ.ச ஜெயபாலன், அக்ஷயா போன்றோரின் தொடர்களுமாக பல்வேறு தகவல்களுடன் பக்கங்களைக் கவனமாகவே புரட்டமுடிந்தது.

'இருக்கிறம்' நேர்த்தியாக வெளிவரக் கடுமையாகப் பாடுபடுகிறது. உழைப்பு வீண்போகாது!
பாரீசு வந்ததும் நம் கலாச்சார விற்பனை மையமாகத் திகழும் 'லாச் சப்பல்' சென்று 'இருக்கிறம்' வினவுகிறேன். கிடைக்கவில்லை. ஒரு கடைக்காரர் மட்டும் சொன்னார், "உங்களுக்குத் தேவையாயின் எடுப்பிக்கிறேன்" என்று. நான் ஏதும் பேசவில்லை. 'உன் குற்றமா? என் குற்றமா?..... யாரை நானும் குற்றம் சொல்ல?' என்ற பாடல் முன் கடையில் இத்தருணத்தில் ஏனோ ஒலித்துக் கொண்டிருந்தது.

சென்ற நூற்றாண்டு வரை ஈழத் தமிழனாக அறியப்பட்டவன் தற்போது, பல்தேச பன்மொழிகளுடனான உறவுபூண்டவனாகி புதிய பரிமாணம் அடைந்துவிட்டான். எண்பதுகளின் பின் பூமிப் பந்தெங்கிலும் விரவி வீசப்பட்டவனாகியவன் இப்ப வாரிசுகளுடன் பூகோளத் தமிழனாகிவிட்டான். இவனுக்கு பூமி சிறுத்துவிட்டது. 'இருக்கிறம்' இந்தப் புதிய விசாலமான பரப்பின் வீச்சைக் கவனம் கொண்டால் உலகெங்கும் பயணிக்கும் சஞ்சிகையாகும்.

நான் கண்ட இந்த சஞ்சிகையில் இடம்பெற்றிருந்த ஆசிரியர் தலையங்கம் என் மண்டையில் இப்போதும் ரீங்காரமிடுகிறது. இதை மீளவும் பதிவிடுகிறேன்.

****************
நோயிருத்தல்

வணக்கம் வாசக நெஞ்சங்களே!
நோய் பற்றிக் கொஞ்சம் பேசவேண்டி இருக்கிறது. நோய் என்று வந்துவிட்டால் தீர்க்க வேண்டியதே தவிர பேசவேண்டிய விடயமல்லவே என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. நோயைச் சரிவர உணர்ந்து கொண்ட நோயாளிகளும் நோய்த் தோற்றுவாய்க்கான சரியான வாயை அறிந்து வைத்தியம் செய்யத் தயாராய் வருகிற வைத்தியனும் சந்திக்காதபோது நோயைப் பேசலாமே தவிர, வேறெதுவும் செய்ய முடியவில்லை.

இருக்கட்டும் வாருங்கள் கொஞ்சம் நோய் பற்றிப் பேசலாம். நாம் பார்க்கும் இந்த நோய் விரைவில் தீர்க்கக்கூடிய ஒன்றல்ல. முதற்காரணம் நோய்வாய்ப்பட்டவர்களில் ஒரு சாரார் தமது இருப்பே இந்த நோயில்தான் இருக்கிறதென்று நம்புகிறார்கள். இரண்டாம் காரணம் சரிவர வைத்தியம் தெரிந்த வைத்தியனை நாம் இன்னும் இனம் காணவில்லை. இதுவரை வந்துபோன வைத்தியர்களிடம் இந்த நோயைத் தீர்த்திருக்கலாமே என்று கேட்பீர்கள்.

இதே கேள்வியோடு அல்லலுறும் நோயாளியைப் பார்த்தேன். உபாதைதரும் தன் நோயையும் மறந்து சிரிக்கிறான். எனக்குத் புரியவில்லை, உங்களில் யாருக்கேனும் புரிகிறதா என்று தெரியவில்லை. ஆனால் பொதுமறை தந்த வள்ளுவனுக்குப் புரிந்திருக்கிறது.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

இ.தயானந்தா - இருக்கிறம்

*****************
பின்னிணைப்பு :
இணைய வலை உலாத்தலில் காணுற்ற சில 'இருக்கிறம்'


"இருக்கிறம்" சஞ்சிகை (15-02-09)

உண்மையான கலையுழைப்பைச் செலுத்தும் கலைஞரை ஊக்குவிக்காதவரை, நசிவுப்பண்டங்களை ஒதுக்கி தரமான படைப்புக்கள் வருவதை உறுதிப்படுத்தாதவரை, ஆபாசப்பண்டங்கள் உண்மையன கலைப்படைப்புக்களை ஒதுக்கிதள்ளும் நிலையை மாற்ற முடியாதவரை, படைப்பொன்றின் மொத்த பயனும் படைப்பாளிக்கும், மக்களுக்கும் ஆரோக்கியமான முறையில் பகிர்ந்தளிக்கப்படாதவரை எந்தவொரு காப்புரிமையும், புலமைச்சொத்துரிமையும் பெரு முதலாளிகளின் உரிமைகளாக மட்டுமே இருக்கும்.

நன்றி : "ம்.."

http://mauran.blogspot.com/2009/03/drm.html

00000000

"இருக்கிறம்"

வெற்றிகரமான ஒரு தமிழ் சஞ்சிகையாக கொழும்பிலிருந்து மாதம் இருமுறை வெளிவந்துகொண்டிருக்கும் இருக்கிறம் தற்பொழுது வடக்கு, கிழக்கு, மலையக பிரதேசங்களிலும் தன்னை விஸ்தரித்துள்ளது. இதுவரை 34 இதழ்களைத் தாண்டி பயணித்துக்கொண்டிருக்கும் இருக்கிறம் சஞ்சிகையின் வெற்றிப் பயணத்தில் நீங்களும் இணைந்துகொள்ளுங்கள்.

Contact - T.P - 0602150836
Fax : 011 2585190

Office:
ஈகோ பப்ளிசிங் ஹவுஸ் (பிறைவேற்) லிமிட்டட்

03, டொரிங்டன் அவன்யு, கொழும்பு - 07

நன்றி : http://te-in.facebook.com/group.php?gid=32791766180

000000000

கவிஞர் இளையதம்பி தயானந்தாவை ஆசிரியராகவும் (பெண்ணிலைவாதி) சாந்தி சச்சிதானந்தனை நிர்வாக ஆசிரியராகவும் கொண்டு வெளிவரும் இச்சஞ்சிகை ஆங்காங்கு கவித்துவச் சாயலோடும் பெண்ணிலைக் கருத்துக்கள் இடைக்கிடை தூவப்பட்டதாயும் விளங்குவதில் வியப்பில்லை.

"இருக்கிறம்' என்பது வெறும் அர்த்தமில்லாத இருப்பாக இருந்துவிடக்கூடாது என்பதில் மேற்குறித்த இரு ஆசிரியர்களும் கவனமாக இருக்கிறார்கள் என்பதை இதன் உள்ளடக்கங்கள் புலப்படுத்துகின்றன.

வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமன்றி, தரமான வாசகர் குழாத்தை உருவாக்கும் நோக்கிலும் ஆக்கங்கள் சேர்க்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. அவை வாசகர்களின் சிந்தனையைத் தூண்டுபவையாக விளங்குவதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி : http://www.kalaikesari.com/culture/culturenews/view.asp?key_c=Book+launch&offset=33

சுவட்டுச் சரம் 1 - நினைவுத்துளிகள் (8)



சுவட்டுச் சரம் 1 - நினைவுத்துளிகள் (8)
பெர்லின் புலம் பெயர் வாழ்வு தொடக்க கால நினைவுகள்
- குணன்


ஈழத் தமிழர்களின் இன்றைய அவல நிலையை உலகம் உணர்ந்து கொள்ளவில்லையென்றும், விரைந்து செயலில் இறங்கி மத்தியஸ்தம் அல்லது, தலையீடு செய்யவில்லை என்ற எதிர்பார்ப்புக்களும், அதே போன்று ஏமாற்றங்களும் அனைத்துலக நாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்களிடையே ஏற்பட்டுத்தான் இருக்கின்றன.

ஆயினும், எந்த ஒரு தகுதி வாய்ந்த செயலிலும், எந்த ஒரு தலைவரோ, நாடோ தலையிட்டு ஒரு தற்காலிக ஏற்பாட்டையோ முன்வைக்காது, மக்கள் அழிக்கப்பட்டு, அனாதைகளாக்கப்பட்டும், விலங்குகளைப்போல் துரத்தப்பட்டு முட்கம்பி வேலிகளுக்கிடையில் முடக்கி அடைக்கப்பட்டிருப்பது வெறும் செய்தி மட்டுமல்லவே! ஒரு இனத்தின் இருப்புக்கான ஜீவமரணப் போராட்டம் என்றுதான் கூறவும் - பதிவு செய்யவும் சமகால வரலாறு காத்திருக்கின்றது!

இன்றுள்ள தமிழர் நாம், புகலிடம் பெற்று, குடிமக்கள், நிரந்தர வதிவுடமை, வேலை, வீடு, மொழியறிவு, தலை முறை விரிவாக்கம் என்ற பரவலான தகுதிகள் பெற்றுள்ளவர்களாகி வாழ்கின்றோம். இருந்தபோதிலும் நாம் பிறிதொரு நாட்டின் மக்கள், அகதி நிலைத் தகுதி கொண்டிருப்பவர்கள் என்பதையும் 'அகதி நிலை' தேடி வந்த நாட்களில் கொண்டிருந்த அனுபவங்களை முடிந்தவரையில் மறந்தவர்களாகவும் நாம் 'அகதிகள்' என்பதை முற்றாகப் புறந்தள்ளியும் நாம் வாழுகின்ற நாட்டு மக்களுக்கும் அரசுகளுக்கும் வெளிப்டுத்தியமையை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இதனால்தான், இவர்கள் எமது உறவுகள் என்று கூறிய 'தாயக மக்கள்' பற்றியவற்றைப் பெரிதும் கவனத்தில் எடுக்கவும் இல்லை, பெருந்தொகையில் உள்ளூர்ப் பொதுமக்கள் ஈடுபாடுகாட்டவும் இல்லை!

1983 ஆடிக் கலவரத்தின் போது போலின் நகரில் ஜேர்மனிய பொதுமக்கள், பொது அமைப்புக்கள், மனிதவுரிமை அமைப்புக்கள், தேவாலய -பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள், ஐரொபிய அளவில், ஈழத்தமிழருடன் இணைந்து குரல்கொடுத்த நிலை ஏற்பட்டது, இருந்த போதிலும் 25 வருடங்களின் பின்னர், முற்று முழுதாக தமிழர் தாம் புரிகின்ற நிகழ்வுகளாக்கி நடாத்தப்பட்ட கடந்துபோன சம்பவங்களால் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்பது புதிய படிப்பினையாகும்!

ஐரொப்பிய நாடொன்றின் அரசியல் வாதி தமிழரின் வெளிநாடுகளில் இடம்பெற்ற எதிர்ப்புக்கள் பற்றி கருத்து தெரிவிக்கையில்,“இங்குள்ள உங்களுக்கு, ஏதாவது, குறைகள் என்றால், கூறுங்கள்,தீர்க்கிறேன் பிற நாடுகளில், நாம் தலையிட முடியாதுள்ளது!“ கூறியது கவனங்கொள்ளத்தக்கதாகும். தமிழர்கள், தம்மையும் தமது பிறந்த நாட்டில் வாழும் உறவுகளையும் அகதி நிலை தாண்டிய மாற்றங்களினால் முற்றாக மறந்துள்ள காரணத்தால், நீண்ட காலமாக வாழ்கின்ற உள்ளூர் மக்களின் மத்தியில தமது நாட்டின் அரசியல், சமூக, நிகழ்வுகளைப் பற்றிய உண்மைகளை பகிர்ந்துகொள்ளத் தவறியதால், எமக்கும் எமது உறவுகளுக்கும், ஏற்பட்டவைகள் பற்றி, இறுதி நேரத்தில் வாழும் நாட்டவர் மத்தியில் எடுத்துக் கூறிய போதும், அவற்றின் நம்பகத்தன்மை சந்தேகத்துக்குரியதாகவே காணப்பட்டது!

மக்களைக் கொண்ட அங்கீகாரம் பெற்றுள்ள பொதுவமைப்புக்கள் மூலமாக, சிறிய கலந்துரையாடல்கள், தமிழர் ஆதரவுக் குழுக்கள், பல்வேறு மட்டங்களிலும் தொடராக நிதழ்த்தப்பட்டிருந்தால் அன்று எண்பதுகளில் நடந்தேறயதைவிட பன்மடங்கு ஆதரவும், அங்கீகாரமும் கிட்டியிருக்கும் என்பது எனது திடமான எண்ணம். இவ்வாறு நடக்காது போனதேன்? என்பதற்கான விடையைத்தேடி இனியாவது உணரவேண்டும்.
***************

வந்த நாட்களும் இந்த நாட்களும்

கூட்டு வாழ்க்கை பற்றிய "அரிச்சுவடிப் பாடம்" படித்ததைப் போல, அற்றை நாள் புலப் பெயர்வில், வாழ்ந்த அந்த அனுபவங்களை எவ்வாறு இலேசாக மறப்பதோ?

அறியாதவர்களாய், பயண முடிவில், சந்தித்து பின்னணி எது பற்றிய தேவை இன்றி, பேசும் தாய் மொழியாலும், தூரத்து அறிமுகப் பேர்வழிகள் சிலரின் முகவரி முகமன்களாலும், (ஓரிருவர் மட்டும் உற்ற நண்பர்கள் - என்ற உறவு கொண்டவர்கள்) "நாமெல்லோரும் ஒரு தாய் மக்கள்!" என்றவாறு, விடுதி அறைகளில் சோடி, சோடியாக ஐந்து பேருக்கு அதிகப் படாமல், அடுக்கு கட்டில்கள், பஞ்சு (கோழிச் செட்டைகளால் நிரப்பிய தென்பது பின்னர் தான் தெரியவந்தது!) மெத்தை, தலையணை, போர்வை, படுக்கை விரிப்பு (அதுவும் வாரா வாராம் மாற்றம்) இப்படி ஒரு உல்லாச விடுமுறையில் நாட்களை ஓட்ட வந்தவர்களின் அத்தனையும் கிடைக்க, ஓரிருவர் தவிர்ந்த இளைஞர்கள் குளாமுக்கு ஓரே ஆரவாரம் என்று தான் சொல்ல வேண்டும்!

அன்று வந்து, ஒருவாறு தங்க இடம் கிடைத்ததும், கேட்கும் முதலாவது கேள்வி,"நீங்ககள் வேலை செய்கிறீர்களா?" என்றதாகத்தான் இருந்தது. இதைத்தான் கேட்பார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நண்பர் அல்லது ஊர்-உறவு யாராக இருந்தாலும், எரிச்சலுடன், "நீ தான் இதைக் கேட்க மறந்திட்டியள் என்று எண்ணிக் கொண்டிருந்தது சரியாய்ப் போய்ச்சு!... நீயுமடாப்பா, எல்லாரையும் போலக் கேட்டிட்டாய்!" என்பதும், "புகலிடம் தேடி வருபவர்கள் இரண்டு வருடங்களுக்கு, வேலை செய்யக் கூடாது என்று தடை போட்டிருக்கிறார்களாம்!" என்பதும், "ஊர் திரும்பிப் போனாலும் அங்கே செய்த வேலையில் சேரலாம்!" என்று கூறுவதும் சாதாரணமாக நடக்கும். இதனால் சிலர், குறிப்பாக அரசிலும், வேறு நிலையான பதவிகளிலும் இருந்த சிலர் நாடு திரும்பியதுமுண்டு.

இடைத்தரகர்களின் பேச்சசைக் கேட்டு, பெருந்தொகை செலவு செய்து, பாணையும், சூப்பையும் மூன்று நேரமும் உண்பதும், கட்டில் தூக்கமும் தொடர் கதைதானோ என்ற ஏக்கம் எல்லோரிடமும் இருக்கத்தான் செய்தது. கூட்டுச் சாப்பாட்டுத் திட்டம் (மெஸ்) கணக்கில், அவரவர் நான்கு, ஐந்து பேர்கள் கூட்டாக சமையல் செய்து சாப்பாடு சமைக்க தொடங்கிய பின்னர் வாரா வாராம் சாமான்கள் என்றால், அரிசி, உருளைக் கிழங்கு, கோழிக்கால், கோழி மாங்காய், கோழி ஈரல், தேடிவாங்கும் முறை மாறி மாறி பொறுப்பு ஏற்று, முடிந்தவரை ஆரம்பத்தில், ஐம்பது அறுபதுக்குள்(டி.எம்) முடிக்க வேண்டிய காரணம் வந்த செலவுக்கு வட்டியைத்தானும், மிச்சப்படுத்தி, மாதா மாதம் 60 முதல் எண்பது அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் (செக்) எடுத்து அனுப்பாதவர்களுக்கு ஊரில் இருந்து "அரிச்சனை"க் கடிதம் வரவே செய்தது! பக்கத்து வீட்டு பரமு போனவுடனேயே, செலவில் அரைவாசி அனுப்ப,"நீ, என்ன தம்பி,செய்யிறாய்?"என்று கேட்பது நியாயமான கேள்விதானே!

வாழ்க்கைப் படியாகவோ அல்லது பைக்கட் செலவும் சாப்பாடும் வழங்கிய நிலையில்,"இப்பொழுது சிறிய வேலைதான் செய்கிறேன், விசாரணை முடிந்து, நிரந்தர வேலை கிடைத்ததும் கூட அனுப்பலாம்! ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம்" என்ற பதில் சென்று சேரும் வரைக்கும் எல்லோர் மனதிலும் சோகம் தான்! இப்படி, கண்களில் எண்ணெய் ஊற்றியதைப்போல, காலத்தை ஓட்டிச் சென்ற - வந்த நாட்களின் சோகங்கள் எல்லாம் - அந்த நோவுகள் எல்லாம், ஆழ்மனங்களில் துளிர்க்காமல் இருக்க முடியாது! வந்து புகுந்த நாட்களில், அன்றைய நாட்களில், காலையும் மாலையும் பைக்கட் (வெள்ளை)பாணும்; மதியம் பைக்கட் வெள்ளை அரிசிச்சோறும்(ஆளுக்கு 1 அல்லது ஒன்றரைப் பைக்கட்) ஒரே மூச்சில், யாவும் சமமாக, சாதுரியமாக, பகிர்தல் செய்யப்படுவது அன்றைய("நளபாக நாயகரின் பொறுப்பு!") எழுதாச் சட்டம்! சாப்பாட்டு வேளையில், எதிர்பாராத(புதிய) விருந்தினர், வரின், அவர்களுக்கும், அதே பைக்கட் கணக்கில், அன்னம் பரிமாறல் தவறாது! அது என்றும் எல்லோராலும், எங்கும் தமழர் நிறைந்த விடுதிகள் தோறும் நடைமுறையில் இருந்தது! உறவுகள் நட்புகள், நகர்வுகள், வதிவிட இருப்புக்களுக்கு அமைய, மாற்றம் பெறும்! பழகிய நட்பை பிரிந்ததில் துயரம் அடைவதும், புதிய வரவுகளில் இணைவதும், தொடர் கதையாகிய வேளைகளில் ஒரு சிலர் பேர்லின் நகரில் நிரந்தர வதிவிட அனுமதி பெற்று, தமது மறுபாதியாகிய குடும்பத் துணையை நகர்த்தும் முயர்ச்சியில், ஐரோப்பாவில் வாழும் புகலிடத் தமிழர்களுக்கு வழிகாட்டினர்!

(நினைவு துளிகள் சொட்டும்....)

0000000000000000000000000000000000000000000000000000
பின்னிணைப்பு:
BOX-FOLDER-REPORT: 27-2-150
TITLE: The GDR and Third World Refugees to Western Europe
BY: Matthew Boyse
DATE: 1985-9-9
COUNTRY: Germany
ORIGINAL SUBJECT: RAD Background Report/104

--- Begin ---


RFERL

RADIO FREE EUROPE Research

RAD Background Report/104
(East-West Relations)
9 September 1985

THE GDR AND THIRD WORLD REFUGEES TO WESTERN EUROPE

by Matthew Boyse

Summary: The recent escalation of the dispute
between the GDR and Sweden over people seeking
asylum follows several recent cases in which
Soviet bloc states have served as conduits for
refugees from the Third World to Western Europe.
For a country with among the most severe border
and travel regulations in the world, the GDR has
been unusually lax about letting refugees use
East Berlin as a point of departure to the West.
This paper briefly examines the most recent
disputes between East Berlin and several Western
European countries over Third World refugees.

***

East Berlin's role as a conduit for refugees from the Third
World to Western Europe, particularly the Scandinavian countries
and the FRG but also France and the Low Countries, has led to
protests by the Swedish government. West European governments
have become increasingly annoyed during the past year by East
Berlin's allowing unprecedented numbers of refugees from South
Asia (especially Sri Lanka, Bangladesh, and Pakistan) and the
Middle East (particularly Iraq, Iran, and Lebanon) to travel
without proper documents through the GDR on their way to Western
Europe. In 1983 100 people seeking asylum arrived in the
Swedish port city of Trelleborg via the GDR, while in the first
7 months of 1985 alone the number was more than 3,000. In the
case of West Germany, Chancellor Helmut Kohl said at a press
conference on July 4 that in the first half of 1985 17,000
people had gone through East Berlin to West Berlin, where they
had asked for asylum. During the same period the GDR allowed
2,500 such refugees to proceed to Denmark.[1]

The Swedish government has accused East Berlin of not
keeping the pledge it made in late February 1985 to examine more
carefully applications for transit visas to the Swedish
mainland, one of the key provisions of which was to have......

This material was prepared for the use of the staff of Radio Free Europe/Radio Liberty.

******
note:
1 For data on people seeking asylum, see dpa, 26 August 1985; Neue Zuercher Zeitung, 22 August 1985; dpa and UPI, 5 3uly 1985; and Sueddeutsche Zeitung, 29 August 1985.
thanks: http://www.osaarchivum.org/files/holdings/300/8/3/text/27-2-150.shtml
0000000000000000000000000000000000000000000000000000000000

Wednesday 12 August 2009

கதைச் சரம் - 8 புகையிலை விற்ற கதிர்காமக் கந்தன்!



கதைச் சரம் - 8
புகையிலை விற்ற கதிர்காமக் கந்தன்!


கதைச்சரம் - 8
செவிவழிக் கதை - 6

அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து புகையிலை தென்னிலங்கைக்கு பெருமளவில் ஏற்றுமதியாகும் பெரும் பணப்பயிர். இந்த வகையிலான பல கடைகளை தென்னிலங்கையின் பல சிங்கள நகரங்களில் நிறுவி வியாபாரத்தில் கோலோச்சியவர்கள் குறிப்பிடத்தகுந்த நம் தமிழ் வியாபாரிகள். இதில் மொத்த மற்றும் சில்லறை வியாபாரமும் அடங்கும். இதிலும் குறிப்பிடப்பட வேண்டியது யாழ் தீவகற்பத்தில் அமைந்ததொரு தீவைச் சேர்ந்த வியாபாரக் குழுமமொன்றே இந்தக் கொள்முதல் விநியோக நிர்வாகத்தில் கோலோச்சியது. புகையிலையும், சுருட்டும் குறிப்பாக கோடா சுருட்டும் தென்னிலங்கையில் நன்றாகவே விலை போயின. இதற்கான ஆளுமையும், வியாபாரத் துணிச்சலும் இந்த ஊரார்வசம் கைவந்த கலையாகியிருந்தது. இதனால் இந்த ஊரின் வியாபார அடைமொழியாக புகையிலையும் அமைந்திருந்தது.

யாழ்ப்பாணக் கிராமங்களில் கொக்குவில் மற்றும் கோண்டாவில் யாழ்ப் பெருநகர அண்டிய நல்ல விவசாயக் கிராமங்கள். இதில் புகையிலையைப் பணப் பயிராகச் செய்துவரும் கந்தசாமி என்ற விவசாயி வாழ்ந்து வந்தார். இவரின் அனுபவ முதிர்ச்சியால் புகையிலை, சின்ன வெங்காயம், மிளகாய் போன்ற பணப் பயிர்களும் கத்தரி, வெண்டை, பாகற்காய், புடலங்காய், பூசணி போன்ற உள்ளூர்ச் சந்ததைக்கான பயிர்களும் செழிப்பாக வளர்வது அக்கம் பக்கமெல்லாம் பிரசித்தமானது. உரவகை ஏதையும் சேர்க்க மாட்டார். எல்லாமே இயற்கை ஊக்குவிப்பான சாணம், குழைகள் கொண்டு மண்ணைப் பதப்படுத்தி தகுந்த முறையில் பயிரிடுவார். பக்கத்துத் தோட்டக்காரர்களுக்கான பயிர் ஆலோசனைகளையும் விருப்புடன் வழங்கி செய்தும் காட்டுவார். இதனால் இவரை எல்லோரும் 'கந்தசாமி அண்ணை' என்று அன்பாக அழைத்தனர்.

விவசாயிகள் வியாபாரிகளாக இல்லாத காலம் அது. இன்னும் சொல்லப் போனால் ஊர் தாண்டி வேறு ஊர் பார்க்காத கிராமவாசிகளைக் கொண்டதான காலம் அது. யாழ் நகரத்தையே பார்த்திராத கிராமவாசிகள் கொண்டதான யாழ் குடாவாசிகளில் வெளியூரில் வியாபாரம் செய்து அதுவும் தென்னிலங்கையில் சிங்களக் கிராமங்களில் வியாபாரம் செய்பவர்களைக் கண்டால் எப்படி இருக்கும்? இந்தப் பிரமாதமான அறிமுகம் கந்தசாமி அண்ணைக்கு வீடு தேடி வந்தது. புண்ணிய மூர்த்தி என்ற பெருவியாபாரி கந்தசாமி அண்ணையின் புகழறிந்து வீடு தேடிவந்திருந்தார். புகையிலைக்கு நல்ல விலையும் பேசப்பட்டு 'முன்பணமும்' கொடுக்கப்பட்டதில் கந்தசாமி அண்ணைக்கு நல்ல திருப்தி. முழுமையான கொள்வனவு முடிந்ததும் ரொக்கப் பணத்தையும் கொடுத்து மேலதிகமாக 'அண்ணே! உங்களது புகையிலையின் தரம் மிகவும் நன்றாகவுள்ளதால் ஆயிரம் ரூபா மேலதிகமாகத் தருகிறேன்' என்றார் மூர்த்தி முதலாளி. அந்க்காலத்தில் இது பெரிய தொகை. மூர்த்தி முதலாளியின் பேச்சிலும் சிரிப்பிலும் நடையுடை பாவனையிலும் ஒருவித கவர்ச்சி மிளிரும். இடைக்கிடை சிங்களத்திலும் பேசுவார். சிங்களம் விளங்காத கிராமவாசிகள் அண்ணாந்து பார்த்த வண்ணமிருந்தனர். இப்படியாக இந்த வியாபார உறவு மூன்று வருடங்களாகித் தொடரந்து அண்டை அயல் விவசாயிகளின் கொள்வனவையும் மூர்த்தி முதலாளிக்குப் பெற்றுக் கொடுத்தது. மூர்த்தி முதலாளியின் நடையுடை பாவனையால் 'மூர்த்தி மாத்தையா' என அழைக்கப் பெற்றார். எல்லா விவசாயிகளுக்கும் கந்தசாமி அண்ணைதான் துணை அதாவது பொறுப்பானார். இப்படியாக மலர்ந்த கந்தசாமி - மூர்த்தி மாத்தையா நட்பு கொடுக்கல் வாங்கலுக்கான கடன் கையாளலாகவும் விரிவடைந்தது.

கடந்த ஏழு மாதங்களாக மூர்த்தி மாத்தையா இந்தப்பக்கம் வராதலால் மூர்த்தி கிராமத்தில் ஒருவித சஞ்சலம் எழுந்தது. முதலாளியால் தனக்கு வரவேண்டிய கடன் பாக்கியும், புதியதான வியாபார அணுகுமுறையும் கந்தாமி அண்ணையின் நிம்மதியைப் பாதித்து சுமையாகியது. அக்கம் பக்கத்தவர்களது நிலையும் இதுதான். எல்லோரும் அதிகாலையிலேயே கந்தசாமி அண்ணையின் வீட்டு வாசலில் குழுமும் வழக்கமும் வந்தாயிற்று.

கந்தசாமி அண்ணைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. "அண்ணே! நீங்க மூர்த்தி முதலாளியின் கடைக்குப் போய் விசாரித்தால் என்ன?" என்றார் பக்கத்தூர் விவசாயி ஒருவர். கந்தசாமி அண்ணை அந்தக்குரல் தந்தவரை திடுமென திரும்பிப்பார்த்தார். முகத்தில் இலேசான மலர்வு தென்படத் தொடங்கியது. இது எல்லோருக்கும் சரியாகவே தெரிந்தது.

கொழும்புக்கே பயணமாகாத கந்தசாமி அண்ணை மாத்தறைக்குப் பயணமாத் தயாரானர். மூர்த்தி மாத்தையாவின் வியாபார முகவரிகளை இலகுவில் பெறமுடியவில்லை. அப்பாவிக் கந்தசாமி அண்ணைக்கு இதிலெல்லாம் நாட்டமிருந்திருக்கவில்லை. எல்லாமே உடன் பணமாகவே செய்திருந்த மாத்தையாவும் கடன் வியாபாரம் செய்திருக்கவில்லை. கந்தசாமியின் துணைவிதான் அந்தக் கலண்டரைக் கொண்டுவந்து காட்டி முகவரியைப் பார்க்கச் செய்தது ஆச்சரியத்தைத் தந்தது. ஒவ்வொரு வருடமும் தனது வியாபாரக் கலண்டரை அவரிடம் மாத்தையா கொடுப்பதின் முக்கியத்துவம் இப்பத்தான் கந்தசாமி அண்ணைக்குப் புரிந்தது. அதில் ஐந்து முகவரிகள் இருந்தன. அவை கொழும்புவில் ஒன்று, மாத்தறையில் ஒன்று, காலியில் ஒன்று, இரத்தினபுரியில் ஒன்று, பதுளையில் ஒன்றெனவாக இருந்தன. அனைத்தையும் குறித்துக் கொண்டார். தான் திரும்ப எவ்வளவு காலமெடுக்கும் என்பதை குத்துமதிப்பாகக் கணக்கெடுத்து அவ்வேளையில் தோட்டத்தில் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதை விலாவாரியாக விபரித்தைக்கேட்ட மூத்த மகன் சலிப்பின் எல்லையைக் கடந்தவனாகியிருந்தான். ஆனால் எதையுமே பேசாதிருந்தான். கந்தசாமி அண்ணையின் பயணம் நன்றாக அமைவதற்காக சிறப்பு வழிபாடு செய்த துணைவியார் வீபூதியையும் பூசி மிகுதியையும் கட்டி இடுப்பு மடியில் வைக்கும் பெட்டியில் பத்திரமாக வைத்துவிட்டார்.

கந்தசாமி அண்ணையின் முதல் கொழும்புப் பிரயாணம் அதிகாலையில் யாழ்தேவியில் தொடங்கியது. பேச்சுத் துணையாக கொழும்பில் வேலைபார்க்கும் அவரது அக்கா மகன் கிடைத்தது வசதியாகவும் கொழும்பில் தங்கி மூர்த்தி மாத்தையாவின் கடையைக் கண்டுபிடிக்கவும் வசதியாகிப்போனது. கொழும்பைப் பார்த்து அசந்து போய்விட்டிருந்தார் கந்தசாமி அண்ணை. 'கண்ணைக் கட்டி காட்டில் விட்டது' மாதிரி இருந்தது அவருக்கு முதலில். அவர் போன வேளையில் மூர்த்தி மாத்தையா கடையில் இல்லை. அவர் எப்ப வருவார் என்ற விபரமும் கடைச் சிப்பந்திகளுக்குத் தெரியவில்லை. இதனால் ஒவ்வொரு நாளும் காலை, மாலை என இரு வேளைகள் கடைக்கு வருவதான பயணம் கொழும்பை கந்தசாமி அண்ணைக்கு ஓரளவு பழக்கப்படுத்திவிட்டது. கிணற்றடியில் அனாயாசமாகக் குளித்த அண்ணைக்கு குளோரின் மணத்துடனான குளாய்க் குளியல் கடைசி மட்டும் பிடிக்கவேயில்லை. சாப்பாட்டுக் கடையில் சாப்பிட்டு புதிய பழக்கங்களும் நட்புகளும் கிடைத்துவிட்டிருந்தன. இப்ப இவரால் தனியாக தான் இருக்கும் இடத்திலிருந்து முதலாளியின் கடைக்கு வந்து போகத் தெரிந்தது மட்டுமன்றி, கொழும்புக் கோட்டையின் சுற்றுப் புறங்களும் கோல்பேசும் ஐந்து லாம்புச் சந்தியும் பரீட்சியமாகி விட்டன. கடைச் சிப்பந்திகளும் பழகிப் போயினர். இதனால் முதலாளி மாத்தறையில் இருப்பதான தகவல் கிடைத்தும் விட்டது. பிறகென்ன கந்தசாமி அண்ணையின் மாத்தறைப் பயணம் அடுத்த நாள் தொடங்கியது.

இப்ப கொஞ்சம் பிரயாணத்துக்கான சிங்களமும் கற்றுக் கொண்டுவிட்டார். அப்போதெல்லாம் ஆட்டோ கிடையாது பஸ் மட்டும்தான். மாத்தறையின் பிரதான வீதியில் கடை இருந்ததால் சிரமமில்லாது கண்டு பிடித்துவிட்டார். கடை ஓகோவென நடந்து கொண்டிருந்தது. சிப்பந்திகளுக்கு இவர் யாரெனத் தெரியாத போதும் மாத்தையாவுக்கு வேண்டியவர் என்ற படியால் நன்றாகக் கவனித்தனர். சோடாவும் கொடுத்தனர். ஆனால் மாத்தையாவைப் பற்றி ஏதுமே அறியமுடியவில்லை. நொந்து போன கந்தசாமி அண்ணை மீண்டும் கொழும்பு திரும்பும் முடிவெடுத்தார். சிப்பந்திகளின் ஒருவன் பஸ் கண்டக்டெருடரன் பேசி முன்சீற்றில் இடம் பிடித்துக் கொடுத்திருந்தான்.

ஐயோ பாவம்! கொழும்பு திரும்பிய அண்ணைக்கு பரிதாப அதிர்ச்சி காத்திருந்தது. நேற்று மூர்த்தி மாத்தையா கொழும்புக் கடைக்கு வந்து சென்றிருந்த தகவலால் ஆடிப்போனார். முதலாளியின் பயணங்கள் பற்றி யாருமே விசாரிக்க முடியாதாதலால் எவருக்கும் எங்கு போயிருப்பாரென்றே தெரியவில்லை. அனேகமாக இரத்தினபுரி போயிருப்பார் என ஊகம் செய்தனர்.

சோர்ந்து போயிருந்த கந்தசாமி அண்ணைக்கு வந்தது ஒருவெறி. மறுநாள் அதிகாலையில் கிளம்பினார் இரத்தினபுரிக்கு. ஒருவாறு விசாரித்து கடைக்குப் போய்விட்டார். இரண்டடுக்குக் கடை. மேல் மாடியில் சிப்பந்திகள் தங்குமிடமாக இருந்தது. வயதான ஒருவர்தான் கடையை நடாத்திவந்தார். அண்ணையின் முகத்தைப் பார்த்த அவர் மேலே அழைத்துச் சென்று முதலில் சாப்பிட வைத்தார். பின் விபரம் கேட்டார். இதிலிருந்து முதலாளியின் ஒன்றுவிட்ட மூத்த சகோதரன் இராசையாதான் இவரென்பது தெரிந்தது. 15 வருடமாக இக்கடையை நடாத்தி வருவதும் அந்தத் தெருவில் அனைவரது நட்பைப் பெற்றவராகவும் இருந்தார் இராசையா முதலாளி. கோடாச் சுருட்டு நன்றாக விற்பனையாகிக் கொண்டிருந்தது. கடை பலசரக்கு(மளிகை)க் கடையாகவும் இருந்தது.

விபரம் அறிந்த இராசையா முதலாளி "அண்ணே! கவலைப் படாதேயுங்கோ! மூர்த்தி மாத்தையா(தம்பி என்றாலும் இப்படித்தான் அழைப்பது வழக்கம்) பதுளைக் கடைக்கு இந்த வெள்ளி அல்லது சனிக்கு வந்தேயாக வேண்டும். அந்தக் கடையின் கணக்கு வளக்குப் பிரச்சனை முடிக்க இந்த வாரம்தான் கடைசி... அந்தக் கதிர்காமக் கந்தனை நினைத்துக் கொண்டு அங்க போங்கோ உங்களுக்கு எல்லாமும் கைகூடும்" என்றார் நம்பிக்கையுடன்.

கதிர்காமக் கந்தன் என்று சொன்னதும் அண்ணைக்கு பக்தியால் நா தடுமாறியது. நம்பிக்கை துளிர்விட்டது. 'சரி வந்ததுதான் வந்தம் கதிகாமத்தானையும் தரிசித்துவிடுவம்' என மனம் உறுதியானது. இராரசயா முதலாளியின் பக்குவமான கவனிப்பால் நெகிழ்ந்து போனார் கந்தசாமி அண்ணை. இங்கு குளியல் அதிகாலையில் வளைந்து நெளிந்து செல்லும் ஆற்றில் கிடைத்தது 'சொர்க்கமாக' இருந்தது அண்ணைக்கு. நாட்கள் போனதே தெரியவில்லை. வியாழன் மாலையில் பதுளை நோக்கிய பிரயாணத்திற்கு தன் சிப்பந்தியொருவரையும் துணையாக அனுப்பினார் இராசையா முதலாளி. அச்சிப்பந்தி கண்டி மட்டும் துணைக்கு வந்து அண்ணையை பதுளைக்கு வேறொரு பஸ்ஸில் ஏற்றிவிட்டு தனது கண்டி வீட்டுக்குச் செல்ல விடைபெற்றுவிட்டார்.

மலைப்பாதைகளில் பஸ் உந்தியவாறு வளைந்து செல்வதும் பச்சைப்பசேலென இயற்கை கொழிப்பதும் அழகான தேயிலை இரப்பர் தோடங்களுடனான மலைகளையும் கண்டு கிறங்கிப்போனவரானார் அண்ணை. பதுளையும் வந்தாச்சு கடையையும் கண்டு பிடிச்சாச்சு. ஆனால் மாத்தையாவைத்தான் இன்னும் காணமுடியவில்லை. ஆனால் இம்முறை நல்ல நம்பிக்கையுடன் இருந்தார் கந்தசாமி அண்ணை. எப்ப மாத்தையா வருவாரென்ற தகவல் யாருக்கும் தெரியாத நிலையிலும் கந்தசாமி அண்ணைக்கு நம்பிக்கை தந்தது அந்த கதிர்காமக் கந்தன்தான்!

தான் நாளைக்கு இவ்விடம் வருவதாக கடைச் சிப்பந்திகளுக்குச் சொல்லிவிட்டு, 'சரி ஒருக்கா கதிர்காமத்தானைத் தரிசித்துவருவமென'க் கிளம்பினார்.

அப்பாடா! அண்ணைக்கு புல்லரித்தது. கதிர்காம மண்ணில் கால்பட்டதை அவரால் நம்பவே முடியவில்லை. 'அடடா! மனுசியை அழைத்து வராமல் போனேனே!' என மனம் ஒரு கணம் குத்திக் காட்டிற்று. 'யாழ்ப்பாணத்திலே நம்மாக்கள் ஏன்தான் முடங்கிக் கிடக்கிறாங்களோ?' என மனம் தன்பாட்டில் கேள்வியையும் எழுப்பியது. 'சரி எனக்குப் பாக்கியம் கிடைச்சிருக்கு! எல்லோருக்குமாக கந்தனை வேண்டுவம்!!' என்ற முடிவோடு நடக்கத் தொடங்கினார். முதலி மாணிக்கை கங்கையில் நீராடல் பின் தரிசனம்... ஒரு திட்டம் வரையப்படுகிறது. 'கதிர்காமத்தான் இனி எல்லாத்தையும் பார்த்துருவான்!' நம்பிக்கை மெருகூட்ட நடையில் தெம்புதொனித்தது.

மாணிக்க கங்கையின் கரையோரமாக வேட்டி நசனலையும் சால்வையையும் பையையும் வைத்துவிட்டு பக்தியுடன் ஆற்றில் இறங்கி நீராடியதை இவரால் என்றுமே மறக்க முடியாது. குளிர் தண்ணீர் பட்ட உடம்பும் பக்தியால் நன்றாகச் சூடேறியிருந்தது. துள்ளிய வாறு கரைக்கு வந்த அண்ணைக்கு அதிர்ச்சி! 'எங்கே எனது வேட்டி நெசனல் சால்வை?' பக்கத்தில் ஆள் அரவமே இல்லை. யாரும் தூக்கியிருக்கவும் வாய்ப்பிலலை, முதற் தடவையாக அண்ணைக்கு நெஞ்சடைத்தது. தூரத்தில் வந்தவரிடம் விசாரித்ததில் "இங்கு குரங்குத் தொல்லை அதிகம் கவனமாக இருக்க வேண்டும்" என்ற அனுபவப் பாடம் பதிலாகக் கிடைத்தது.
"ஐயனே! கதிர்காமக் கந்தா! இதென்ன சோதனையடா?" வாய்விட்டே கதறினார் கந்தசாமி அண்ணை. அப்படியே மெல்ல நடைபோட்டவராக கோயில் முகப்பிற்கு வந்த அண்ணைக்கு ஆச்சரியமோ ஆச்சரியம்!! தனது கோலத்துடனேயே கந்தன் சிரித்தவாறு அளித்த காட்சியைக் கண்டு உருகிப்போனார்.
"ஐயகோ! கந்தா! கதிர்காமத்தானே!! நீயுமா மாத்தையாவுக்குப் புகையிலை விற்றிருக்கியாய்?" என்று கதறிய கந்தசாமி அண்ணையின் கதறல் கேட்டு சந்நிதியில் இருந்த அனைத்துப் பக்தர்களும் பதைபதைத்துப் போனவர்களாகி அண்ணையைச் சுற்றிக் குழுமத் தொடங்கினர்.


- முகிலன்
பாரிசு - ஓகஸ்ட் 2009
(சிறுவயதில் எனது கிராமத்தில் கேட்ட கதை. இதில் ஒரு ஊரின் பெயர் வருவது வழக்கம். அந்த ஊருக்கு அவப்பெயர் வரக்கூடாது என்பதற்காகத் தவிர்ததுள்ளேன்.)

*பிற்குறிப்பு:
இதை அடியொற்றிய வேறொரு கதையின் பதிவு (பிரான்சில் பிறந்து வளரும் எனது இரண்டாவது மகன் சொன்ன கதை) அடுத்த முறை இடம்பெறும்.