Saturday, 1 August 2009

சுவட்டுச் சரம் 1 - நினைவுத்துளிகள் (6)சுவட்டுச் சரம் 1 -
நினைவுத்துளிகள் (6)


- குணன்

"அகதி" என்ற மூன்றெழுத்துச் சொல்லில் முதல் எழுத்தான அகரம் நீங்க “கதி“ என்றால், நிலை, வழி, ஆதரவு, புகலிடம் போன்ற கருத்துக்கள் தருவதாகும்! அதே போல "அமலன்“ என்ற சொல்லுக்கு, அழுக்கற்றவன் என்றவாறு, அகதி என்றால் கதி அற்றவன் எனப் பொருள் தரும் சொல்லாகும்! எம்மை-எம்மைச் சார்ந்தவர்களை காத்துக்கொள்ள –வழி தேடி, வந்த காரணத்தால், அகதிகள் நிலை தேடும் (refugees status) மக்கள் பிரிவினர், என ஐ.நா.வின் அகதிகள் அமைப்பினால் கணிக்கப்பட்டோம்! இதன்கீழ், ஜேர்மனிய சமஸ்டிக் குடியரசு, அகதிகளுக்கான மத்திய நிலையத்தின் கீழ், அகதி நிலை தேடி வந்த மக்களின் அந்தஸ்துக்களை தகுந்த அதிகாரிகள் மூலம் விசாரணை செய்து, தனித்தனியாக, தீர்மானம் எடுத்து வந்தது! இங்கு வந்த எவருக்கும் ஜேர்மன் மொழி அறிந்திருக்க நியாயம் இல்லை. இதனால், ஆங்கில தமிழ் மொழிகள் மூலம் எழுதப்பட்ட (அதனையும் பலர் தாமாகவே எழுத முடியாது பிறரின் உதவியால் எழுதப்பட்ட) விண்ணப்பங்களை கழகம் ஆங்கிலத்திலும், அவற்றை, தமிழர் ஒருங்கிணைப்பு ஆதரவாளர்கள்- போன்றவர்களால், ஜேர்மனிய மொழியிலும் மாற்றிக் கொடுப்பதும், தகுந்த சான்றுகளைத் தேடியும்-உருவாக்கியும் வழங்கிய பாரிய பொறுப்பை, அதன் பிரதான அமைப்பாளர்கள் மேற்கொண்டிருக்காவிட்டால், பலரின் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டு திருப்பியனுப்பப்பட்டிருக்கலாம்!

"பேர்லின் ஆபத்துக்குள்ளானோருக்கு உதவும்", உலக அமைப்பின் கிளைப்பொறுப்பாளர், டாக்டர் .திசா கோவ்மன், இலங்கையைச் சேர்ந்த மனிதவுரிமைகளுக்கான சட்டத்தரணி அமரர் கந்தசாமி, ஈ.த.ந.க.வின் ஆரம்பகால உறுப்பினர்கள், தமிழர் ஒன்றிணைப்பு ஆதரவாளர்கள், குறிப்பாக திரு.பி.புக்கோல்ஸ், செல்விகள் ரீனா றிட்டர், றோசி, திருமதி வோபிரட், மெல்லி, கோவ்ரன், போன்றோரின் இடையறா முயற்சிகளின் வாயிலாக ஈழத்தமிழர்களை, சிறிலங்காவின் பெரும்பான்மை-பௌத்த சிங்கள பெரும்பான்மை அரசுகள் தொடர்ந்து துன்புறுத்தியும், விசாரணைகளின்றி சிறையியுள் அடைத்தும் வைத்திருப்பதை, தக்க ஆதாரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சான்று ஆவணத்தை ஜேர்மன் மற்றும் ஐரொப்பிய நீதிமன்றங்களுக்கு முதன் முதல் வழங்கியவர் திருமதி கோவ்மன் அவர்களாவார்.

அன்று இருந்ததும் நம்பகத் தன்மையுடையதுமாகக் கருதப்பட்ட “வீரகேசரி“ தின இதழை, வரவழைத்து அதில் வெளிவரும் செய்திகளை, ஆங்கிலத்தில்(1981-1983 காலத்தில்) மொழி மாற்றிக்கொடுத்தவகையில் ஈ.த.ந..க.வின் சேவை அளப்பரியது! இவ்வறிக்கையின் அடிப்படையில், பேர்லின் (administrative court) நிர்வாக நீதிமன்று, தமிழர்கள் அவைருக்கும் அரசியல் புகலிடம் வழங்கலாம்“ என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருந்தது! இதனைத் தொடர்ந்து, தமிழர்கள் எவரும் திருப்பப்படாததோடு அன்றி, மீள் விசாரணைக்கே அனுமதிக்கப்பட்டது! உலகில் இதற்கு முன் இவ்வாறு, நமது இனத்தினரை எங்குமே ஏற்று, புகலிட விசாரணையில் தீர்ப்புக்கூறியதாக அறியவில்லை!


26 ஆண்டுகள் தாண்டிய கறுப்பு ஆடி


1980-1983 காலத்திற்கு முன்னரே, யாழ்ப்பாணத்தில் பொங்கலுக்கு தமிழீழம் என்று கூறிக்கொண்டு, 1977 ஆடியில் தேர்தல் நடைபெற்றபின்னர், ஆவணிமாதம் "77 இனக் கலவரம்" நடைபெற்று, எதிர்க் கட்சித் தலைவராக அமிர்தலிங்கம் பதவியேற்றதில் பலர் குறிப்பாக, இளைஞர்கள் அதிருப்தியுற்று, தனிவழி செல்லத் தீர்மானித்து, அரசுக்கு எதிராக கிளம்பினர்!

இதனை அடக்கி ஒழிக்க, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 1979 மார்கழி இறுதிக்குள், முடிவு கட்டு மாறு அன்றைய அரசுத் தலைவராகவிருந்த ஜே.ஆரினால், இராணுவம் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு தமிழ் இளைஞர் பலரைக் கொன்றும், கைது செய்தும் துன்பப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக, தமிழ் இளைஞர்கள் தலைமறைவாகினர்! இதன் பின்னர், பல்வேறு போராட்ட அமைப்புக்கள் தோன்றியதும், ஆயுதப் படைகள் மீது தாக்குதல்கள் தொடர்ந்தன. 1981-ல் நடந்தேறிய யாழ் மாவட்டசபைத் தேர்தலின் போது பொலிசார் மீது நடாத்தப்பட்ட தாக்குதலின் விளைவாக, சிங்களக் குண்டர்-இராணுவத்துடன் இணைந்து, யாழ் நூலகம், வர்த்தக நிலையங்கள், யாழ் பா.உ இல்லம், பொதுமக்கள் எனப் பலரும் தாக்கப்பட்டனர்!

1980ல் பேர்லின் நகருக்குள், புகலிடம் கோரிய ஈழத் தமிழர்களின் அமைப்பாகிய ஈ.த.ந.க.வினால், 08.08.1981 இல் முதன்முதலாக ஓர் மாபெரும் ஊர்வலம் (2000க்கு அதிகமானவர் கலந்து கொண்டனர்!) தமிழர்களால் நடந்தேறியது அனைவருக்கும் அதிர்சியளித்து! அதுவரை பேர்லின் நகரில், புகலிடங்கோரியவர்களால் அதுபோல ஒரு ஊர்வலம் நடைபெற்றதில்லை எனலாம்! தமிழர் மீது அரச படைகள் தாக்குதல்கள், ஈழத் தமிழர்களின் வரலாற்றுக் காப்பகமாக விளங்கிய, யாழ் நூலக எரிப்பு ஆகியன, பற்றி கோசங்களும், விளக்கங்களும் தரப்பட்டன! 1981-1982,83 காலத்தில், ஈழத்தமிழர் பற்றி, முழு நேரமாக பங்களிக்கவும், பல்வேறு செயல்களில் இணைந்து கொள்ளவும், புகலிடத் தமிழர்கள் முன்வந்தார்கள்!

யாழ் நூலகத்திற்கு தன்னிடம் வாழ்நாள் தேட்டமாக தேடிச் சேர்த்து, காத்து, தமிழினத்தின் எதிர்கால சந்திதியினர் பயன் பெற ஆவல் கொண்டிருந்த, மொழியியல் அறிஞரும், ஆய்வாளரும், நல்லூர் ஞானப்பிரகாசசுவாமிகளின் மாணவரும் ஆகிய வண.பிதா தாவீது அடிகளார் தம்மிடம் இருந்த நூற்றொகுதியை வழங்கிய மறுநாள் காலையில், யாழ் நூல் நிலையம், தீக்கிரையான செய்தியை பத்திரிகை வாயிலாக அறிந்த உடனே, அதிர்ச்சியடைந்து மயங்கி, மீளாத்துயில் கொண்டார்! அறிவுச் செல்வங்கள் அனைத்தையும், தீக்கிரையாக்கிய, சிங்கள இராணுவக் குண்டர்களுடன் தெற்கில் இருந்து கூட்டிவரப்பட்ட காடையர்களும் சேர்ந்து யாழ் நகரின் சிறந்த அறிவுக் களஞ்சியத்தை எரித்ததை அறிந்த பேர்லின் வாழ் புகலிடத் தமிழர்கள் தமது அமைப்பாகிய ஈ.த.ந.க, மற்றும் நட்பு பேணும் பல ஜேர்மனிய, சகோதர, தமிழர் நலன் பேணும் அமைப்புக்களின் ஆதரவுடனனும் வழிகாட்டலுடனும், 1983 யூலை, 23முதல் 27 வரையான ஒருவார காலத்தில் இலங்கையில், தமிழருக்கெதிராக அரச படைகள் நடாத்திய வன்செயல்கள் பற்றி மாபெரும் தமிழர் ஆதரவு எழுச்சி நடவடிக்கை கூட்டம், 6.8.1983 இல், பேர்லின் மெரிங்டாம் மண்டபத்தில், டாக்டர் கோவ்மன் தலைமையின் கீழ் நடாத்தப்பட்டது!

1980 தொடக்கத்தில், மேற்கு பேர்லின் நகருக்குள், புகலிடம் தேடி வந்த ஈழத்தமிழர்களுக்கு, செய்வதறியாது திகைத்து, தவித்த போது, உதவிய ஒருசிலர் பல்கலைக்கழகங்களில் படிப்பை மேற்கொண்டிருந்த இலங்கை மாணவர்களும், இங்கு வாழ்ந்து வந்த நிரந்தரவாசிகள் சிலருமாவர். இவர்களில் காலஞ் சென்ற பெரியார், திரு. பற்றிக்செல்வி என்பவர் குறிப்பிட வேண்டிய ஒருவர் ஆவார்! திருமலையைச் சேர்ந்த இவர்(ஓர் பறங்கியர்), ஜேர்மனிய பெண்ணை மணஞ்செய்து, நிரந்தரபிரசையாக வாழ்ந்தார். நீதிமன்ற மொழிபெயர்ப்பாளராகவும்(ஆங்கில-ஜேர்மன்), கடமையாற்றியவர்! இங்கு, தவித்து நின்ற சில தமிழ் இளைஞர்களுக்கு தகுந்த சமயத்தில், தானாகவே அணுகி பல உதவிகளையும் ஆலோசனைகளையும் நல்கியவர். தமிழ் மொழியில் மிகச் சிரமப்பட்டு உரையாடுவார். சிங்களம், ஆங்கிலம், ஜேர்மன் மொழிகளில் நன்கு தேர்ச்சியுடையவர்! தனித்து தமிழர்கள் வந்தவேளையில், இவர் செய்த சேவையை யாரும் மறக்க முடியாது!

விசாரணைகளில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், சான்றுகள், ஆவணங்கள், விண்ணப்பங்கள், எவ்வாறு, தயாரித்தல் வேண்டும், என்று சட்டத்துக்குட்பட்டு ,ஆலோசனைகள் வழங்கியவர்! தந்தை செல்வாவின் மீது அபிமானங்கொண்டிருந்வராதலால், ஈழத்தமழர்கள் பற்றியும், அங்குள்ள சிறுபான்மையர்கள் பற்றியும், ஜேர்மனியர்களுக்கு விளக்கியவர். பேர்லின்-சிறீலங்கா நட்புறவு அமைப்புடனும், பெரும்பான்மை இன மக்களுடனும் தொடர்பு கொண்டிருந்தார். ஈழத்தமிழர்களுடனும், அன்பு பாராட்டியும் உதவி புரிந்துமுள்ளார். ஜேர்மன்-பேர்லின் சட்டங்களை நன்கு அறிந்தவராகையால், விடுதிகளில் வாழ்ந்த குறிப்பாக, தமிழ் இளைஞர்களுக்கு புத்திமதிகளைக் கூறினார்! ஈழத்தமிழர் நலன்புரிக்கழத்துடன், இணைந்து, தமிழ் மக்களின் நிலைமைகள் பற்றி வெளிக்கொணர்வதில் பங்கு வகித்தார்.

1980-1983, காலப்பகுதியில், இலங்கையில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகளைக் கண்டும், பாதிப்படைந்தும், எதிர்காலம் இருள் மயமானதாகவே அமையலாம் என்பதாலும், 1956ல் ஆரம்பமாகிய மொழி, வேலைவாய்ப்பு என்பதில் தமக்கு இடம் தரப்போவதில்லை என்பதால், குறிப்பாக பொருளாதாரத்தில்-வேலை வாய்ப்பின்றி இருந்த பாடசாலை, கல்லுரிகளை விட்டு வெளியேறியவர்களும் நலிந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுமே(மிக குறைந்த எண்ணிக்கையில் இளங்குடும்பத் தலைவர்கள் உட்பட) புகலிட வாழ்வைத் தேடிய முன்னோடிகள் எனக்கூறலாம்!

இவ்வாறானவர்களில், ஒரு பிரிவினர், "கப்பல் வேலை" தேடிச்சென்றவர்களும், தரை மார்க்கமாக, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் என, சர்வதேச எல்லைகளைத் தாண்டி, மிகப் பல தடைகளைக் கடந்து, தாம் சென்ற இடங்களுக்குள் நுழையமுடிந்தது!ஈழத்தில், மூண்ட 1983 இனப்படுகொலையால் பாதிப்புற்ற பின்னரே, படித்தவர்கள், பதவியில் இருந்தவர்கள், சமூகத்தில் தம்மை உயர்வாகவும், உடன்பிறப்புக்களை, தள்ளி வைத்து, தீண்டத் தாகாதவர்என, புறந்தள்ளி வைத்தவர்களுங்கூட, புகலிடந்தேடி புறப்பட்டனர்!


(நினைவு துளிகள் சொட்டும்....)

No comments:

Post a Comment