Thursday 27 August 2009

சரம் 18 திரையில் பிரகாசிக்கும் அசகாய சூரர்கள்!



சரம் 18 திரையில் பிரகாசிக்கும் அசகாய சூரர்கள்!

திரை அரங்கில் மக்களுடனான எண்ணக் கருத்துகளுடன் சினிமா பார்த்த காலங்கள் கனவாகிப் போய், வீட்டின் வரவேற்பறையின் சுவரில் அகண்ட திரையில் குடும்பமாகவோ தனியாகவோ நாளாந்தம் பார்க்கும் சாதனமாகிவிட்டது. பிரான்சில் புலம்பெயர்ந்துள்ள நம்மவர் வீடுகளில் அநேகமாக செயற்கைக் கோள் அலைவாங்கிளுடனான இணைப்புகள் இருப்பதைக் காணலாம். அப்படியில்லாத வீடுகளிலும் இணையத்துடனான இணைப்பிலுள்ள ஃபிறி பொக்ஸ் (free box) சாதனத்தினூடாக தமிழ்ப்படங்கள் பார்க்கும் வழக்கத்தையும் காணலாம்.

நண்பரின் அழைப்பை ஏற்று அவரது வீட்டுக்குச் சென்றிருந்தேன். சினிமா, குறுந்தொடர் எனவாகப் பார்த்த வண்ணமிருக்கும் இல்லத்தரசிகளுக்கு விருந்தினராக நம்மைப் போன்றவர்கள் வந்தாலே இடைஞ்சலாகத்தான் இருக்கும். தாமாகவே எழுந்து உள்ளே சென்றுவிடுவார்கள். வழமையாக செய்திகள், ஆய்வுகள், அது இதுவென நாம் செய்யும் அலசல்களுக்குள் எந்த விறுவிறுப்பையும் அவர்கள் பெற்றதுமில்லை.

கடந்த சில மாங்களாக அதிகம் பேசாத சந்திப்புகள்தான் நிகழந்த வண்ணமிருப்பதால் இப்போது அவர்கள் எழுந்து செல்வதில்லை. திரையில் வழமையான காட்சிகள் ஓடிக் கொண்டிருக்கும். நாங்களும் ஏதும் பேசாதவர்களாக அவர்களுடன் சேர்ந்து திரையில் ஓடியாடும் கதாநாயக- நாயகி பாடல்களையோ, உருக்கமான தொடர்களின் நடுவிலான ஏதோ ஒரு காட்சியையோ அல்லது ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படத்தின் இடையிலான காட்சியையோ பார்த்தும் பார்க்காதவர்களாயிருப்போம்!

நாங்கள் மெதுவாக வந்த விடையம் தொடர்பாக மெதுவாகப் பேசியவண்ணமிருந்து தேனீர் அருந்திக் கொண்டிருந்தோம். தொலைக் காட்சியில் அடிக்கடி காட்சிகள் மாறிக் கொண்டிருந்தன..... இப்போது கதாநாயகன் விறுவிறுப்பான சண்டைக் காட்சி... தூள் பறக்க விளாசிக் கொண்டிருந்தார்.
இல்லதரசி தொலைக் காட்சியின் இணைப்பைத் துண்டித்து முணுமுணுத்தவாறு...... எழுந்தது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.
அதனால் கொஞ்சம் பதறியவாறு, "நாங்கள் இங்கிருப்பது இடைஞ்சலென்றால்.. நான் சென்று பிறகு வருகிறேனே!... " என்றவாறு எழுகிறேன்.

"நீங்க வேற... அதொன்றுமில்லை... நீங்க இருந்து பேசுங்க!.." என்றார் ஏதோ தவறாக தான் நடந்துவிட்டதாக நான் நினைத்துவிட்டேனோ என்ற பவ்வியத்துடன்.

"அப்ப ஏன்?....." எனது கேள்வியில் உறுதி இருந்திருக்க வேண்டும்.

"அங்க உண்மையான வீரர்களைத் தொலைச்சுப்போட்டுள்ள இவ்வேளையில... இவங்க நோஞ்சாங்களைக் கொண்டு வந்து றீல் விடுறாங்க பார்க்கவே எரிச்சலாகப் பத்திக் கொண்டுவருது!.." என்றார் கோபத்துடன்
அவரது வாயால் இப்படியான வார்த்தைகளை நான் எதிர்பார்க்கவில்லையாதலால் ஆச்சரியத்தால் திக்கு முக்காடி..... மௌனித்தேன்.

சிறிது நேரத்தில், றோல்சும் பலகாரமுமான சிற்றுண்டி வந்தது. இது என்னை மேலும் திகைக்க வைத்தது.

"என்னதான் நடக்குது உங்கட வீட்டில... இப்ப நல்லூர்க் கந்தன் திருவிழாக்காலமல்லவா?"
என்கிறேன். (சைவமாக விரதமிருப்பது இவர்களது வழமை)

குசினியிலிருந்தே பதில் வந்தது "மான ரோசமில்லாத கடவுகளுக்கு இப்ப திருவிழா வேண்டிக்கிடக்கோ.... வெட்கம் கெட்டதுகள்தான் இப்ப போவாங்கள்.. கடைப்பிடிப்பாங்கள் தொலைஞ்சு போகட்டுமென்று விட்டிட்டன்."
நான் நண்பனைப் பார்க்கிறேன்... அமைதியாக ஊதிவிட்டவாறு றோல்சைச் சுவைத்துக் கொண்டிருந்தார். ஆம்! றோல்ஸ் சூடாகவே இருந்தது!


-முகிலன்
பாரிசு ஓகஸ்ட் 2009

No comments:

Post a Comment