Tuesday 18 August 2009

சுவட்டுச் சரம் 1 - நினைவுத்துளிகள் (9)


சுவட்டுச் சரம் 1 - நினைவுத்துளிகள் (9)
பெர்லின் புலம் பெயர் வாழ்வு தொடக்க கால நினைவுகள்
- குணன்


கூடி வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து, தனிக் குடித்தனம் மாதிரி வாழ்க்கையை புகலிட வாழ்க்கையில் ஏற்படுத்திய அந்த ஆரம்ப நாட்களில், ஒரு சிலர் தனிக்குடித்தன-கணவன்-மனைவியாக வாழத் தலைப்பட்டாலும், அங்கு பொது விடுதிகளாகிய புகலிடங்கோரிய, நிரந்தர வதிவிட அனுமதி பெற்ற, இளைஞர்களும் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டனர். அதுமட்டுமன்றி, பல்லினத்தவர்களுடன் ஒன்றாக ஒற்றுமையாக, சமையல், குளியல் அறைகளில், கருமங்களை ஆற்ற வேண்டிய பொதுமைக்குள் தள்ளப்பட்டவர்களாக அன்றைய அனுபவங்கள் இருந்தன!

ஒரே ஊரில், இருந்த நாட்களில், சொந்த வீடு, தனிக் கிணறு, சுற்றி நான்கு புறமும் கிடுகு வேலிகள், என்ற கட்டமைக்குள் காலா காலமாக வளர்ந்த "தனிக் காட்டு" மனப்பான்மை இரவோடிரவாக, அவ்வளவு சுலபத்தில் மாறிவிடும் ஒன்றல்ல வென்றாலும், சூழ்நிலைக்கு தக்கவாறு, வசதிகளைப் பயன்படுத்துவது தேவைப்பட்டது!

திருமணமாகி, குடும்பங்களைப் பிரிந்து, தனித்து வாழ்ந்தவர்களும், திருமண வயதை எய்தியவர்களும், தமக்குத் துணைகளைத் தேடவேண்டியவர்களாய் மாறினர்! பெற்றாரின் ஊக்கத்தால் தமது துணைகளை அழைத்தவர்களும், தாம் விரும்பியவர்களை முயற்சி செய்து அழைத்தவர்களும், உடன் பிறந்த பெண்கள் திருமணம் முடிக்க வேண்டி, உழைப்பை நல்கியவர்களுக்கு, பெரும்பாலனவர்கள் தமது துணைகளைத் தேடுவதில் தாமதம் எய்தியதும், ஒரு சிலர், புகலிடங் கோரி வந்தநேரத்தில் மனதுக்குப் பிடித்தவர்களை துணையாக்கிய சம்வங்களும், அவ்வப்போது புகலிட வாழ்க்கையில் முதன் முதல் இடம்பெற்ற முற்போக்கு நிகழ்வுகளாகப் பதிய வேண்டியவையாயின!

இன்று காலூன்றி, பணம், பகட்டென்றெல்லாம், குடும்ப விழாக்கள் என்று கூறப்படுபவை, படாடோபமாக, பெரும் பொருட் செலவில் நடைபெறாவிட்டால், அதற்கு பொருள் அற்றதாகிவிட்டதென்ற மட்டமான கருத்துக் கொண்டு போலும்,"பெரும்பாடு பட்டேனும்" பிறந்த நாள் தொட்டு அனைத்தும் அமர்க்களப்படுத்தும் நிலை உருவாக்கப்பட்டிருப்பதை புலத்தில் காணலாம்!

இன்று நாம் எல்லோரும் சேர்ந்து எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதைக் காட்டுவதுபோன்ற நிகழ்வுகள் முழுமையானதென்றோ அன்றி தவறில்லையென்றோ எண்ணுவது சரியாகும் என ஏற்கலாமா? என உள்நோக்கி ஆராய்ந்து பார்த்தால், இதன் பின்னணியில் ஏதோ ஒரு உள்நோக்கம் இருப்பதைப் புரியலாம்! இன்று தாயகத்தில் இடம்பெறாத ஒன்றாகப் பார்க்கும் அளவிற்கு, சில குடும்ப விழாக்கள் புலப்பெயர் வாழ்வில் பெரும் பொருட் செலவில், நாடு கடந்த அளவில் ஒன்று கூடல்கள் ஒழுங்கு செய்வதெல்லாம் மிக சாதாரணமாகியும், அதே நேரத்தில், அதிமுக்கிய நோக்கத்துக்காக நடைபெறவேண்டி ஒழுங்கு செய்யப்படுகின்ற பல்வேறு பொது விழாக்களுக்கோ அல்லது ஒன்றுகூடல்களுக்கோ தமிழர்கள் இன்றும் முக்கியத்துவம் அளிப்பது எத்தகையது? என்பதை இங்கு நினைவு கூறத்தான் வேண்டும்.

இன ஒன்றுகூடல், பண்பாட்டு, மொழித் தேடல்கள், விழிப்புணர்வு, இலக்கியம் என, எதைக்காட்டிலும், தனிமனித, குடும்ப நிகழ்ச்சிகளுக்கு அதிக கவனம் செலுத்துகின்றவர்களாக மாறிவிட்டதில் மறைமுகத் தேவை உருவாக்கப்பட்டுள்ளது போல கருதவேண்டியதல்லவா?இவற்றை உற்று நோக்கின், ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்! சமூக-அரசியல், பண்பாடு, போன்ற பொது நோக்கிற்கான, ஆர்வமும் பொறுப்பும் பங்கேற்பும் புறந்தள்ளப்படுவதும், கண்மூடித்தனமான, காலந்தாண்டிய, தேவையற்ற தனிமனித நோக்கம் மட்டும் கொண்ட நிகழ்வுகளுக்கு அதிமுக்கியம் கொடுப்பதும், இன்றை புலம்பெயர்ந்த வாழ்வில் உள்ளவர்களை ஆங்காங்குள்ள நோக்கர்களால் சந்தேகம் கொள்ளவும் அவதானத்துக்குள்ளாக்கவும் இட்டுச்செல்கிறது எனலாம்!

பெரிய எண்ணிக்கையில் ஒன்று சேர்வதும், பெருவிருந்து போன்றவற்றில் புலப்பெயர்வில் ஈடுபாடுகொள்வதும், குறித்த மாத வருமானத்தில் நடத்த முடிகிறதா? என்ற கேள்வி எழுப்பப்படாமலில்லை!

பெரிய எண்ணிக்கையில் ஒன்று சேர்வதும், பெருவிருந்து போன்றவற்றில், புலப்பெயர்வில் ஈடுபாடுகொள்வதும், குறித்த மாத வருமானத்தில் நடத்த முடிகிறதா? என்ற கேள்வி எழுப்பப்படாமலில்லை! "நூற்றுக் கணக்கில் உங்கள் நண்பர்கள், மற்றும் உங்கள் உறவினர் மற்றும் விருந்தினர்களை உங்கள் நாட்டில் அழைத்து குடும்ப விழாக்களை நடாத்துவது ஏற்றுக் கொள்ளலாம்! ஆனால், இங்கு என்னை விடவும் மிகவும் குறைந்த ஊதியத்தைப் பெறும் ஒருவரால் எப்படி, இத்தகைய பெரிய அளவில் செலவு செய்ய முடிகிறது?" என்ற கேள்வியை தமிழர் ஒருவரின் அழைப்பை ஏற்று குடும்ப விழாவிற்கு, வருகை தந்த வேளை, அவரின் முதலாளி மற்றொரு தமிழரிடம் வினவினார். இந்தக் கேள்வியைச் சற்றும் எதிர் பாராத வேளை கேட்டதுடன் தொடர்ந்து "அப்படியாயின், வேறு தவறான வழிகளில் பணம் தேடுபவராகத்தான் கருதமுடியும்" என்றவாறு ஏளனமாகச் சிரித்துக்கொண்டவராய் அங்கிருந்து அகன்றார்! இந்தச் சம்பவப் பதிவை இலகுவில் புறந்தள்ளிவிட முடியுமா?
0000000000000000

இன்றைய புலப்பெயர்வின் (பயனாக?) விளைவாக, கடந்த முப்பதாண்டு காலத்தையும் படித்த பாடங்களை அல்லது அனுபவங்களின் வெளிப்பாடுகளையும் சற்று நோக்கின்,
"உலகம் பரவிய தமிழன்" இன்று எங்கே உள்ளான்?
எதனை பெற்றுள்ளான்?
அவனிடம் கண்ட புதிய அறிவார்ந்த மாற்றங்கள் எவை?
எவற்றில் நாட்டங்கொண்டிருக்கிறான்?

எனவாக நோக்கின், அவன் எதையுமே, தான் வாழும் வளர்ச்சி கொண்ட மக்கள் சமுதாயத்திடம் இருந்து வரவாக்கிப் பெற்றிருக்கிறானா? என்றால், பெரிதாக ஆக்கந்தரும் எதனையும் பெறவில்லையே என்ற ஏக்கத்தைத்தான் பதியமுடிகிறது!

பண்பாடு, கலாச்சாரம், சமயம், என்ற திரைகளுக்குப்பின்னால், ஓர் சுரண்டலுக்கு ஏதுவான வேலைத்திட்டங்கள், மிகக் கன கச்சிதமாக நிறைவேற்றப்படுவதற்கு தூண்டுகோலாக மாறியிருப்பதைக் காணலாம்!

அறிவியல், நாட்டுப்பற்று, மொழிப்பற்று, மிக்க மக்களிடையே வாழுகின்ற நாம், எதனைத்தானும் கற்றுக்கொண்டிருக்கிறோமா? என்றால், எதையும் தொட்டுக் காட்டவோ, சுட்டும் அளவுக்கோ கற்றுக்கொள்ளவில்லை என்பது உண்மையாகும்! அறிவைத்தேடும் தாகத்திற்கேற்ற விடயங்களை அறிவதைவிட, வெறும் ஊனக் கண்களுக்கு தீனி போடுகின்ற நிகழ்ச்சி நிரல்களையே தேடித்திரிந்து 'அருமருந்தென' காலத்தை வீணடிப்பதும், இளந்தலைமுறையினருக்கும் அவற்றிற்கு பாதை போட்டு கொடுக்கிறோம் என்பதை, ஏனோ மறந்து விடுகிறோம்!

மேலைநாட்டவர்கள் மத்தியில் எங்கும் எல்லோரிடமும் காணக்கூடிய ஓர் சிறந்த பழக்கம்,"வாசிப்பு", அதுவும், ஒரே குடும்பத்தில் இருப்பவர்களாயினும், தாமாக பணங்கொடுத்து வாங்கும், தின, வார, மாத, அல்லது நூலைப் படிப்பதைத் தவிர, பிறரிடம் இலவச(ஓசியில்......!)மாக பெற்றுக்கொள்ளும் பழக்கமின்மையால்தான், இந்நாடுகளில் வெளியிடப்படுகின்ற இதழ்களின் எண்ணிக்கை பல இலக்கங்களைத் தாண்டியுள்ளன! தமிழில் வெளியீடுகள், நூல்கள், சிற்றிதழ், எதனையும் வெளியிட யாரும் துணிவதோ, எழுதுவதிலோ முன்வருவது, மேலை நாடுகளில் இடம் பெறுவது போல இல்லை என்பதற்கு, வாசிப்போர்-வாங்குவோர் இன்மை தான் காரணம்.

தமிழர் புலப்பெயர்வில் கூட, வசதிகொண்டிருந்தும், மேலை நாட்டவரிடத்தில் இருப்பதைப்போன்ற வாசிப்பு ஆர்வம், வேரூண்டாத் தன்மையை குறிப்பிட்டேயாக வேண்டும்! ஆயிரம் நூலைத் தமிழில் வெளியிட்டு, விற்பனையாக்கிட, (இலவசம்- அன்பளிப்புக்கள் நீங்கலாக) சில வருடங்கள் தானும் தேவை!

சிக்கன வாழ்க்கையும் சேமிப்பும் எத்துணை தேவையானதென்பதை யாருமே ஏற்பர். இதனை, இன்றைய வாழ்க்கைத் தேடலில், குறிப்பாக புதிய சூழலில்வாழும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப மேற்கொள்வது, புலம் பெயர்ந்தவர்களின் எதிர்கால இருப்புக்கு மிகத் தேவையான காரணியாகும். சட்டப்படி கிடைக்கின்ற ஊதியத்தில், சிக்கனமாக வாழ்க்கை நடாத்துவதென்பது எல்லோராலும் முடிவதில்லை!

சிக்கனத்தின் மறுபெயர் 'ஈயாத்தனம்' அல்ல எனபதையும், நாம் பிறரிடமிருந்து பெறுவதில், எத்தனை ஆர்வமுடையோமோ, அந்த அளவிற்கு எம்மைக் காட்டிலும் நலிவுடையோருக்கு வழங்கிடவும் வேண்டும்! ஆயினும், சிக்கனம் என்றால் என்ன? சேமிப்பு என்றால் எப்படி? என்பதைப் புலம் பெயர்வில் வாழ்கின்ற நாட்டின் சட்ட ஒழுங்குமுறைக்கு ஏற்றவாறு பேணுதல் கவனிக்கப்படவேண்டும். காண்பதும், கேட்பதும் ஈற்றில் இருப்பையே மாற்றிய கதையாகத்தான் முடிவுற்ற அவலத்தில் கொண்டு சென்றதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு!

சீட்டுக்கட்டு ராசாக்களாக மாறிய பலர் புலப்பெயர்வில் பெற்றுக்கொண்ட 'பட்டறிவுகளின்' பாடங்களில் ஏற்றுக்கொண்ட பாரிய தாக்கங்களும், ஏமாற்றுக்களும், இவ்வாறாகவா சேமிப்பை மேற்கொள்வது? என்பதற்கு விடை கண்டிருந்தும் கூட, தொடர் பாணியில் இன்னும் நீண்டிருப்பதுதான், புலம் பெயர்ந்தும் தமிழர் தமது பட்டறிவை எப்படியாகப் பயன்படுத்துகிறார்கள்? என்ற கேள்வி எழாது போகுமா?

இது குறிப்பாக,புலம்பெயர் சூழலில், நிதானமாகவும், நியாயமாகவும் நாணயத்துடனும், வாழ்வதை வெளிப்படுத்தவேண்டிய சமூக நல உதவிகள் உறுதிசெய்யப்பட்ட தகுதிமிக்க-அமைப்பின்கீழ் வாழ வசதி நல்கிய நாட்டில், வாழ்கின்றபோது ஏனோ நம் நாட்டில் முன்பு கண்டறிந்த பின்னர், இங்கும் வேதாளம் வெளிநாட்டிலும் ஏற வேண்டிய தேவை ஏன்? என்பது ஆராய வேண்டும்.

தமிழர் எங்கெலாம் புலப்பெயர்வில் உள்ளார்களோ அங்கெலாம், இவ்வாறு சீட்டுப்(பிள்ளையார் பிடிக்கப்போனவர்கள்), குரங்கு பிடித்த செய்திகள் பரவலாக அறிந்த தொன்றே!

(நினைவு துளிகள் சொட்டும்....)

No comments:

Post a Comment