Monday, 17 August 2009

கதைச் சரம் - 10 தாத்தாவின் சாப்பாட்டுச் சிரட்டையும் பேரனும்


கதைச் சரம் - 10
செவிவழிக் கதை - 8
தாத்தாவின் சாப்பாட்டுச் சிரட்டையும் பேரனும்

ஒரு கிராமத்தில் அந்தக் குடும்பம் நல்ல வசதியாக வாழ்ந்து வந்தது. அந்த நாட்களில் வசதியென்றால் மூன்று வேளை நல்ல உண்வு, போதிய ஆடை அணிகலங்கள், விவசாயத்துக்கான நில புலத்துடனான வீடு, கால்நடைகள் போன்றவைதான் பிரதானமாகப் பார்க்கப்படும். இது ஒரு கூட்டுக் குடும்பம்.

இந்த வீட்டில் மிகவும் வயதான தாத்தா ஒருவர் இருந்தார். பல் எல்லாம் விழுந்த இவரால் எழுந்து நடக்க முடியாத முதுமைநிலை. படுக்கையிலேயே கழிவு போகும் இவரது நிலை கண்ட குடும்பத்தின் தலைவனாக இருந்த மூத்த மகன், இவருக்கு வீட்டின் புறத்தே அமைந்த மாட்டுத் தொழுவத்துக்கு அருகாமையில் ஒரு பத்தி இறக்கி அதில் சாய் மனை வசதியுடனான பலகைக் கட்டில் வைத்துப் பராமரித்து வந்தான். நாளாந்தம் கழிவைச் சுத்தப்படுத்துவதற்கு இந்த இடமும் கட்டிலும் நல்ல வசதியாக அமைந்திருந்தது. இவருக்கு கஞ்சி போன்ற திரவ உணவு வகைகளே கொடுப்பதால் இவருக்கென்று தனியான சிரட்டையொன்றை சிறப்பாகச் செய்து அந்த அறைபோன்ற பத்தியின் கிடுகுக் கூரையில் சொருவி வைத்திருந்தனர்.

இந்தக் குடும்பத்தலைவனாகிய வயதானவரின் மூத்த மகனுக்கு ஆறு பிள்ளைகள். இதில் நான்கு வயதான கடைக்குட்ப் பயல் ஒரு சுட்டிப் பையன். இவனுக்கு தாத்தா என்றால் நல்ல விருப்பம். தனக்குப் பல் முளைத்த போதும் தாத்தாவுக்குப் பல் இல்லாதது இவனால் அறிய முடியாத அதிசயம். தனது சின்ன வயதிலிருந்து தாத்தாவிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டு அந்தப் பொக்கை வாயால் வரும் பதில்கள் புரிந்தனவோ, புரியவில்லையோ தலையாட்டிச் செல்வது வழக்கம். தான் மெல்ல மெல்லத் தவழ்ந்து நடந்து பழகி ஓடத் தொடங்கவும் நடந்து கொண்டிருந்த தாத்தா தடியூன்றி நடந்து பின் நடக்க முடியாதவராகி படுக்கையில் வீழ்ந்ததானது இவனுக்கு சரியான கவலை. தாத்தாவுக்கு என்ன பணிவிடை நடந்தாலும் ஓடி வந்து பார்ப்பதும் தன்னால் முடிந்த ஒத்தாசை செய்வதும் இவனது வழக்கமாகிவிட்டன. அதுவும் சாப்பாடு கொடுக்கும் போது அந்தச் சிரட்டையைத் தன் கையால்தான் தாத்தாவுக்குக் கொடுக்க அடம்பிடிப்பான். இதனால் கொஞ்சம் கஞ்சி சிந்தியதும் உண்டு. பேரனின் ஆசையை அந்தக் குடும்பத்தினர் கண்டு பெருமிதம் கொண்டனர்.

இப்படியான ஒரு நாள் அந்த முதியவர் காலமாகிப் போனார். இறப்பென்றால் என்னவென்று தெரியாத சிறுவன் அனைவருடன் சேர்ந்து தாத்தாவுக்கு நடக்கும் புதிய சடங்குகளை கவலையுடன் உன்னிப்பாக கவனித்தான். எல்லோரும் அழுததால் அவனும் அழுதான். இறப்பு என்றால் இனித் திரும்பி வராத இடத்துக்கு தாத்தா போயிற்றார் என்றே அவனுக்கு விளக்கம் கூறியிருந்தனர்.
"தாத்தாவின் உடம்பு இங்கிருக்கையில் தாத்தாவால் எப்படி, அதுவும் நடக்க முடியாத தாத்தாவால் எப்படி திரும்பி வராத இடத்துக்குப் போக முடிந்தது?" சுட்டிப் பையனின் இந்தக் கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.

மேளமடித்து எல்லாவிதச் சடங்குகளும் முறைப்படி நடந்து வயதானவரின் உடலைத் தீமூட்டித் திருப்பினர் குடும்பத்தினரும் ஊராரும். அடுத்த நாள், வயதானவரின் அந்தக் கட்டிலும் இடமும் சுத்தம் செய்யப்படன. கிழவரின் படுக்கையும் துணுமணிகளும் வெளியில் குவிக்கப்பட்டு தீயிடப்பட்டன. எல்லாவற்றையும் அந்தச் சிறுவன் பார்த்துக் கொண்டிருந்தான். கிழவரின் பத்திக்குள் குடும்பத் தலைவன் வந்து பார்க்கிறான். தனது தந்தையுடன் இந்தச் சிறுவனும் கூட வந்துவிடுகிறான்.

சுற்று முற்றும் சுழண்டு பார்க்கும் தந்தையின் கண்களில் அந்தச் சிரட்டை பட்டுவிடுகிறது. அதை எடுத்தவாறு எரியும் நெருப்பிலிட வெளியில் வருகிறார் குடும்பத் தலைவன்.

"அப்பா...." சிறுவன் கத்திக் கூப்பிட்டதை இதுவரையில் இவர் கேட்டதில்லை. திடுகிட்டவாறு நிற்கிறார். ஓடி வந்த சிறுவன் அவரது கையிலிருந்த சிரட்டையைப் பறிக்க முயலுகிறான்.

"தம்பி! ஏனப்பா பறிக்கிறாய்....? தாத்தா இனி வரமாட்டார்தானே... இனி இது தேவையில்லையல்லவா!!" பொறுமையுடன் விபரிக்க முனைகிறார். வீட்டிலிருந்தவர்களும் வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

"இல்லை. இது எனக்கு வேணும்." சிறுவனின் குரலில் இறுக்கம் இருந்தது. தந்தையாருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

"ஏன்.....?" என்றார் சலிப்புடன்.

"அப்பா! நீங்களும் கொஞ்சக் காலத்தில் தாத்தா மாதிரி வந்துவிடுவீர்களல்லவா... அப்போது நான்தான் உங்களுக்கு சாப்பாடு தரவேண்டும்.... அதற்கு இந்தச் சிரட்டை வேண்டும் !!"

சிறுவனின் உறுதியான பதில் கண்டு அனைவரும் வாயடைத்துப் போயினர்.- முகிலன்
பாரீசு ஓகஸ்ட் 2009
(சிறு வயதில் எனது தந்தையிடம் கேட்ட கதை)

No comments:

Post a Comment