Monday 10 August 2009

அறிவுச் சரம் - 3 செவிமடுத்தல் தொடர்புறுதல்


செவிமடுத்தல் தொடர்புறுதல்

பொ. கனகசபாபதி
(ஓய்வுநிலை அதிபர், மகாஜனக் கல்லூரி)



கணவன் மனைவி இருவரும் ஓர் இரவு உணவு அருந்துவதற்காக உணவகம் சென்றனர். உணவகச் சிப்பந்தியிடம் இருவருக்கும் ஆட்டிறைச்சிப் பிரியாணி கொடுக்குமாறு கணவன் பணித்தான். "ஏன் கோழிப் பிரியாணி எடுப்போமே. அதுவும் நல்லாத்தான் இருக்கும்." என்றார் மனைவி. "நீர் விருப்பம் என்றால் கோழிப் பிரியாணியை எடும். நான் ஆட்டுப் பிரியாணி சாப்பிடப் போகிறேன்" என்றார் கணவன். "இல்லையப்பா உங்களுக்கு..." என மனைவிகூற முன் கணவன் பாய்ந்து விட்டார். "வீட்டிலே தான் நீர் அவித்துப் போடுவதைச் சாப்பிட வேண்டும் என்ற தலைவிதி. இங்கேயாவது என் எண்ணப்படி சாப்பிடுவதா அல்லது வெளியே போவதா" என்றார். உள்ளே வரும் போது இருந்து சந்தோசம், உல்லாசம் எல்லாம் போய் விட்டது. ஏதோ சாப்பிட்டார்கள். வீடு சென்றார்கள். இருவருலுமே குறையில்லை. இருவரும் தொடர்புறவில்(Communication) செய்தியை (Message) கிரகித்தார்களேயன்றி அதில் உள்ளார்ந்த செய்தியை(அனுசெய்தி Metamessage) உணரத் தவறியதால்தான் இப்பிரச்சினை எழுந்தது. கணவனுக்கோ இதயக்கோளாறு உண்டு. மனைவிக்கு அவன் உடல்நலத்தில் அக்கறை. ஆட்டிறைச்சியில் கொழுப்பு அதிகம் என்ற ஆதங்கம். எனவே அதனைத் தடுக்க முனைகிறார். கணவனுக்கோ வீட்டுக் கட்டுப்பாடுகாளல் ஆசைக்குப்ச்சாப்பிட முடியாத அவலம். எனவே, இங்கேயாவது நாக்கின் ருசிக்குச் சாப்பிடுவோமே என்ற வேட்கை. இருவருமே ஒருவரை ஒருவர் சற்றுப் புரிய முனைந்திருந்தால் இப்பிரச்சினை ஏற்பட்டிருக்காது. ஆங்கிலத்தில் "Reading between the lines" என்பார்கள். வாசகங்களுக்கு இடையே வெளி இருப்பதில்லை. அங்கேதான் அனுவாசங்கள் உள்ளன. சொல்லாத ஆனால் உணர வேண்டிய வாசங்கள் அவை.

பொதுவாக நாம் சிந்திக்கையில் ஒன்றுக்கு 1000 முதல் 3000 சொற்கள் வரை சிந்திப்போம். ஒருவர் பேசும்பொழுதோ 125 முதல் 250 சொற்கள் வரை தான் ஒரு நிமிடத்தில் காதால் கேட்போம். மேலும் ஒரு முக்கிய விடயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருவர் பேசும் போது நாம் கேட்பது போல்பாவனை செய்தாலும் 75 வீத நேரம் எமது மனம் பேச்சில் இலயிக்காது. வேறேதேனும் பற்றிச் சிந்திக்கும், அல்லது அசட்டைசெய்யும் அல்லது கவனபேதமிருக்கும். எனவே ஒரு நிமிடத்தில் நாம் கேட்ட 250 சொற்களில் 60-65 சொற்களே சாதாரணமாக மனதில் பதியும் சாத்தியம் உண்டு. இப்போ சிந்தித்துப் பாருங்கள் Reading between the lines என்பது பற்றி.

உற்றுக்கேட்டல் அல்லது செவிமடுத்தல் (Listening)நான்கு வகைப்படும என்பர். அவை..
01. மக்கள் சார்பு செவிமடுத்தல் (People oriented Listening)
02. செயல் சார்பு செவிமடுத்தல் (Action oriented Listening)
03. பொருள் சார்பு செவிமடுத்தல் (Content oriented Listening)
04. காலம் சார்பு செவிமடுத்தல் (Time oriented Listening)

ஒரு சம்பவம் விபரிக்கபடுகிறது என்று எடுத்துக் கொள்வோம். அச்சம்பவத்தைச் செவிமடுக்கிறவர்களில், மக்கள் சார்பினர் - சம்பவத்துடன் சம்பந்தப்பட்டோர் அணிந்திருந்த உடை, கூடியிருந்தோர் என்ன செய்தனர் போன்ற விபரங்களைத் தெரிந்து கொள்வதிலேயே அக்கறை காண்பிப்பார்கள்.
செயல் சார்பினர் - நடைபெற்ற நிகழ்ச்சியைப் பற்றியே தெரிந்து கொள்வதில் அவாவுற்றிருப்பர். சம்பவத்தில் யாராவது பாதிப்புக்குள்ளானார்களா? நகர பாதுகாவலர் வரவழைக்கப்பட்டனரா? பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடைபெற்றது போன்றவை பற்றிய செய்திகளுக்கே முன்னுரிமை கொடுப்பார்கள்.
பொருள் சார்பினர் - நடைபெற்ற சம்பவம் ஏற்பட்டதற்குரிய காரணம் யாது, எவ்விதமாக அச் சம்பவம் ஆரம்பமானது. அதற்குப் பின்னணியில் யாராவது உள்ளனரா? அப்படியாயின் யாராக இருக்கலாம்? என்பவை பற்றி அறிய முனைவர்.
காலம் சார்பினர் - நடைபெற்ற சம்பவம் நடந்த காலம் பகலா, இரவா? காலையா, மாலையா? வானிலை எப்படியிருந்தது? மழையா, வெயிலா? பனிமழையா? என்பது போன்றவற்றைத் தெரிந்து கொள்ள முனைவர்.

எனவே, மக்கள் சார்பு செவிமடுத்துனர் ஒருவருக்கும் செயல் சார்பு செவிமடுத்துனர் ஒருவருக்குமிடையே சம்பாசணை நடக்கின்ற பொழுது தொடர்புறல் (Communication) வெற்றியீட்டும் வாய்ப்பு அதிதாகவே தான் இருக்கும். பெரும்பாலான பெண்கள் மக்கள் சார்பு செவிமடுப்போராகவே உள்ளனராம். அதே சமயம் ஆண்களில் அதிகமானோர் பொருள் சார்பு செவிமடுப்போராக இருப்பார். இதனால் தானோ மனைவிமார் சொல்லுவது கணவர் காதில் ஏறுவதில்லை. எனவே தாய்மார்களே, உங்கள் கணவன்மாரைக் கோபிக்காதீர்கள். அவர்கள் வேண்டுமென்று செய்யவில்லை. உளவியல்சார் உண்மையே தான் நிலைநாட்டப்படுகின்றது. பொதுவாகவே ஆண்களுக்குத் தமது ஆற்றல்பற்றி மிகையான (என்னைத் தவிர) அபிப்பிராயம். தம்மால் ஒரு சமயத்தியே ஒன்றுக்கு மேற்பட்ட விசயங்களைச் செய்யமுடியும் என்ற (நான் கனடா வந்த காலத்தில் நான்கு வேலைகள் செய்தேன்.) தளராத நம்பிக்கை. பத்திரிகையும் வாசித்தபடியே மனைவி கூறுவதையும் கேட்க முடியும் எனப் பல தடவைகள் பல கணவன்மார்கள் செய்து காட்ட முயன்றுள்ளனர். "ம், "ம்" என்பதை விடச் சற்று விபரமான மீள ஊட்டலை (feed back) எதிர்பார்க்கும் மனைவி கணவன் உதாசீனம் செய்கின்றார் எனக் குற்றம் சாட்டுவதில் தப்பு இல்லை.

அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய மனைவி, "இன்று அலுவலகத்தில் ஒரு பெண் சொன்னார்" என்றார் தனது கணவனை நோக்கி. "என்ன சொன்னார்" என்றார் கணவர். "இல்லை எப்போதும் ஒரு விசயத்தை ஒரு முறை சொன்னாலேயே பெண்கள் சடுதியில் புரிந்து கொள்வார்களாம். ஆண்கள் அப்படியிலையாம். ஒரு முறைக்கு இருமுறை சொன்ன விசயத்தைச் சொன்னால்தான் அவர்களின் மண்டையில் ஏறுமாம்" என்றார். "எங்கே எங்கே இன்னொரு முறை சொல்லும்" என்றாராம் கணவன்.

இங்கே ஒரு உணமையை மிக்க சங்கடத்துடன் ஒத்துக்கொண்டேயாக வேண்டும். ஆண்கள் என்னை மன்னிப்பார்களாக.(?) இன்டியானா பல்கலைக்கழகப் பேராசிpரியர் டாக்டர் Joseph T. Lorito என்பவர் அண்மையில் சில அவதானங்களைக் கூறியுள்ளார். அதன்படி ஆண்கள் செவிமடுக்கின்றபோது தமது இடப்பக்கத்து மூளையைத்தான் பெரும்பாலும் உபயோகிக்கின்றனர். பெண்கள் இருபுறத்து மூளையையும் ஒரே சமயத்தில் உபயோகிக்கின்றனர். இதன் காரணமாக இரு கருத்துக்கள் கூறப்படுகின்றன. "பெண்கள் ஒரே சமத்தில் இரு சம்பாசணைகளைச் செவிமடுக்க முடியும்." என்கிறார் பேராசிரியர் லுறிற்ரோ. ஆனால் பெண்களைச் சிறந்த செவிமடுப்போராகக் கொள்வதற்கும் இல்லை எனக்கூறி ஆணன்களின் கோபாக்கினியில் இருந்து தப்பித்துக் கொள்கிறார். ஆண்கள் செய்கின்ற அதே செயலைப் பெண்கள் செய்வதற்கு ஆண்கள் உபயோகித்த மூளைப் பகுதியிலும் கூடிய பகுதியைப் பெண்கள் உபயோகிக்க வேண்டியுள்ளது. இது பெண்கள் சிறந்த செவிமடுப்போராக இருப்பதைக் கடினமாக்கிறது என லுறீற்ரோ சொல்லுகிறார். தொடர்புறல் என்பது ஆங்கிலத்தில் Communication எனப்படுகிறது.

Communication என்பது Communis என்னும் லத்தீன் சொல்லிலிருந்து தோன்றியது. கொமினிஸ்(Communis) என்பதன் பொருள் பொதுவானது. நாம் ஒருவருடனோ, ஒரு கூட்டத்தினருடனோ தொடர்புறுகின்ற போது எம் இரு இருசாராருக்கும் பொதுவான தளம் ஒன்றினை உருவாக்கி விடுகின்றோம். தொடர்புறல் நடைபெற மூன்று பிரதான மூலக்கூறுகள் அவசியம். அவை மூலம் (Source) செய்தி (Message) சேரிடம் (Destination) ஆகும். மூலம் என்பது தனிநபராகவோ அல்லது அமைப்பாகவோ அமையலாம். அங்கே இருந்துதான் செய்தி வெளிவருகின்றது.மூலத்தில் வெளிவருவது பேச்சு, எழுத்து, படம், சைகை எனப் பல்வேறு வகைப்படலாம். அவை செய்தியாகச் செல்லுகையில் ஒலி அலைகளாகவோ வெறும் பத்திரிகையாகவோ அல்லது அர்த்தம் பொதிந்த வேறேனும் சுட்டுக் குறியாகவோ செல்கின்றன. செய்தி எவரை எதிர்பார்த்து அனுப்பப்பட்டதோ அவரை அடைதல் வேண்டும். அவருக்கேதான் செய்தி அர்த்தம் புரியும். வெறுமனே ஒலி அலைகளாகக் காற்றூடகத்தினால் எடுத்துச் செல்லப்படும் செய்தி சேரிடத்தை அடைந்ததும் அர்த்தம் பொரிந்ததாகி விடுகிறது. செய்தி பல சுட்டுக் குறிகளாகவே ஊடகத்தின் ஊடாகச் செல்கிறது. பின்னர் சேரிடம் அடைந்ததும் இச் சுட்டுக்குறிகள்(Signs) மீண்டும் ஒன்று சேர்ந்து செய்தியாகின்றன. உனவே தொடர்புறல் நிகழ்விலே மேலும் இருடி நிலைகள் ஏற்படுகின்றன. அவற்றினைக் குறியீடாக்கல் என்றும் குறியீடக்கற்றல் என்றும் அழைப்போம்.


செயதியை மேலெழுந்தவாரியாக இரு வகையாகப்பிரிககலாம். அவை சொல் சார்ந்தவை (Verbal) சொல் சாராதவை (Nonverbal) ஆகும். சொல் சார்ந்த தொடர்புறலே மனித குலத்தின் தனித்துவம். கலந்துவரும் ஒலி அலைகளோ ஒவ்வொருவருடைய மூளையியும் பிம்பம் ஒன்றைத் தோற்றுவிக்கிறது என்றால் அது ஒரு ஆச்சரியமான விடயமல்லவா? நாய்இல்லாத ஊரிலிருந்து ஒருவர் நம் நாட்டிற்கு வருகிறார் என வையுங்கள்.. அவர் நாயைப் பற்றி முன்பின் கேள்விப்படாதவர் எனக் கொள்வோம். அவர் முன்னே "நாய், நாய்" என எததனை முறை நாயாகக் கத்தினாலும் அவர் என்ன சொல்கிறார் எனக் கேட்பாரேயன்றி அவர் மூளையில் நாய் பற்றிய பிம்பம் தோன்றவே மாட்டாது.

சொல் சாராத செய்திகள் என்பவை, சொற்கள் அற்ற முறையிலே அல்லது சொற்களுடன் கூட்டாக நாம் செய்தியொன்றினை பரப்புதற்குக் கையாளும் நெறிமுறைகள். அவை முகபானை, நிலைகோடல் (Posture), கை அசைவுகள், உடுத்திய உடையின் தன்மை, குரலின் தன்மை போன்றவை, தனித்தோ அல்லது சொற்களுடன் இணைந்தோ செய்தி ஒன்றினை வழங்க முடியும்.

தொடர்புறல் என்பது ஒரு வழிப்பாதையல்ல. இருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் சம்பந்தப்பட்ட இருவழிப்பாதை. மூலத்தில் இருந்து பிறந்த செய்தி சேரிடம் போய்ச் சேர்ந்ததா? எதிர்பார்க்கப்பட்ட பிரதிவினை கிடைத்ததா? என மூலத்திற்குத் தெரிதல் அவசியம். இது மீளவூட்டல் மூலம் சாத்தியமாகிறது. மீளவூட்டல் சொல் சார்ந்தவையாகவோ அல்லதுசொல் சாராதவையாகவோ அல்லதுத வேறு செயல்களாகவோ அமையலாம். மீளவூட்டல் தொடர்புறல் தொடர்வதற்கும் காரணமாக அமைவதுடன் சில நடத்தைகளை வலுப்படுத்தவும்(Reinforce) வேறுசிலவற்றை ஒழிப்பதற்கும் காரணமாகி விடுகின்றன. தமிழ் சினிமாவிலே தொப்புள் புராணம் தெரியும்தானே! அங்கே பம்பரம் விட ரசிகர்கள் ஆர்வமாய்ப் பார்க்க ஓம்லட் சுடுமளவிற்குப் போரார்களே. அதேபோன்று கவுண்டமணி, செந்திலைத் தேங்காய்த் தலையன் என ஏற்பட்ட வரவேற்பு ஒவ்வொரு படத்திலேயும் புதுப் புதுத் தலையனாக வைதாரே இதுதான் வலுப்படுத்தல்.

சாதாரணமாகத் தொடர்புறுதலின்போது ஒருவர் ஐந்து பிரச்சினைகளைச் சுமுகமாகத் தீர்க்க வேண்டிய அவசியம் உள்ளது.

01. அவர் தொடர்புறுகிறவர் (சேரிடம்) தனக்கு ஏற்றவர்தானா என்பதை முன்கூட்டியே தீர்மானித்துவிடல் வேண்டும் வள்ளுவன் அழகாகச் சொல்லியுள்ளார்.

"உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று" குறள் : 718

சொல்வதை உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், பாத்தியிலே நன்கு வளரும் பயிர்களுக்கு மேலும் நீர் பாய்ச்சுவது போன்ற பயன்விளைவிக்கும்.

02. பேசப்படுகின்ற விசயம் சேரிடத்தை அடைதல் அவசியம். எனவே இடத்துக்குத் தகுந்த மாதிரிப் பாவக்கும் சொற்கள், பிரயோகிக்கும் சைகைகள் அமைதல் அவசியம். இங்கேயும் வள்ளுவன் உதவிக்கு வருகிறான்.

"அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்" குறள் : 711

அவையிலே கூடியிருப்போரின் தன்மையை உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுபவர்களே ஒவ்வொரு சொல்லினதும் தன்மை உணர்ந்த நல்ல அறிஞர்கள்.

03. தொடர்புறலின் போது மற்றவருடன் நல்ல உறவினை ஏற்படுத்தக் கூடிய விதத்திலே செய்தியை வெளிவிடுகின்றோம். சுவாமி சுகபோதானந்தர், "அகமே ரிலாக்ஸ் ப்ளீஸ்" என்னும் தொடரில் எழுதியுள்ளதை வாசியுங்கள்.

"பதஞ்சலி என்பவர் யோகாசனக் கலையின் முன்னோடிகளில் முக்கியமானவர். அவரது "யோகசூத்திரம்" வாழ்க்கையின் பல ஆழமான பரிமாணங்களை எடுத்துக் காட்டும் நூல். அதிலே அவர் கருத்து மாறுபாடுவிவாதம் பற்றியும் விபரமாக எடுத்துச் சொல்லுகிறார்.

"ஒரு விசயம் குறித்துக் கருத்துச்சொல்வதில் மூன்று விதமான அணுகுமுறை உள்ளதாக அவர் சொல்கிறார். முதலாவதாகத் தர்க்கம், இரண்டாவதாகக் குதர்க்கம், மூன்றாவதாக விதர்க்கம்.

தர்க்கம் என்பது எது ஒன்றினாலும் அதைப்பற்றித் தனக்கென ஒரு கருத்தினை ஏற்படுத்திக் கொள்வது. (ஆனால் இங்கே எதிராளியின் கருத்துச் சரியென்றால் அதனை ஏற்க முடியும். தனது தான் சரியாக இருக்கும் என்ற முடிவான கருத்து இல்லை).

குதர்க்கம் என்பது கருத்துத்தான் சரியென்று கருதி அதனை நிலைநாட்டப் பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போவது. (எதிராளி எவ்வளவுதான் நியாயத்தை எடுத்துக் கூறினாலும், தனது கருத்தே சரியானது என்ற நிலைப்பாட்டிலே குதர்க்கவாதி இருப்பார்).

விதர்க்கம் என்பது ஒரு பொருள் குறித்து, மாறுபட்ட கருத்துக்களைத் தன் மனத்திலே ஆராய்ந்து பார்த்துப் பேசுதல்.( எதிராளியிடம் இருமாறுபட்ட கருத்துக்களையும் பெருந்தன்மையுடன் எடுத்துக்கூறி அவரது தீர்மாத்துக்கு விட்டு விடலாம்.)

விதர்க்க முறையே மற்றவருடன் நல்ல உறவினை ஏற்படுத்துவதற்கு உகந்தவழி. ஆனால் நம்மில் எத்தனைபேர் இதனைக் கையாள்கிறோம். நமது கருத்துத்தான்சரி. மற்றவர் அதனை ஏற்பதுதான் முறை என விதண்டாவாதம் புரிபவாகள் அநேகர்.

04. அநாவசியமான வார்த்தைப் பிரயோகங்களைக் குறைத்துச் சொல்ல வேண்டியதை ஆணித்தரமாக நறுக்குத் தெறித்தது போலச் சொல்லிப் பெற வேண்டிய விளைவைப் பெற முயல வேண்டும். இதோ இன்னொரு பழைய பாடல் (சென்ற வருடமும் எழுதியுயள்ளேன். "ஆசாரக்கோவை" எனும் பதினெண் கீழ்க்கணக்கு நூலிலே பெருவாயின் முன்னியனார் கூறியது:

"விரைந்துரையார் மேன்மேல் உரையார் பொய்யாய
பரந்துரையார் பாரித்து உரையார் - ஒருங்கனைத்தும்
சில்லெழுத்தினாலே பொருளடங்கக் காலத்தால்
சொல்லும் செவ்வி அறிந்து"

விரைவாகச் சொல்லப்படாது, மீண்டும் மீண்டும் சொல்லப்படாது, பொய்யான சொற்களைப் பரப்பி எடுத்துக் கூறப்படாது, சொல்ல வேண்டியதை நீட்டாமல்சிக்கனமாகச் சொல்ல வேண்டும். கேட்போரின் தன்மையை அறிந்த அதற்கேற்ப கூற வேண்டும். (இப்பாடலை பெரிதாகி எழுதிக் கூட்ட மேடைகளிலே வைத்தால் என்ன எனப் பலர் எண்ணுவீர்கள்.)

05. தொடர்கபுறலில் கருத்துக்கள் என்றும் மாறாத் தன்மையுடையவையாக அமையக்கூடாது. இரு முனைகளிலிருந்தும் இடைத்தாக்கம் அல்லது மீளவூட்டல் நடைபெற்றதன் விளைவாக ஆரம்பத்தில் தொடர்புறல் எந்தக் கருத்தினைப் புலப்படுத்த ஆரம்பிக்கப்பட்டதோ அதற்கு நேர்மாறான கருத்துடன் தொடர்புறல் முடியலாம். இதனை ஏற்கின்ற மனப்பக்குவம் அவசியம்.

பதினெண் கீழ்க் கணக்கு நூல்களிலே முன்றுறையரையனார் எழுதியது "பழமொழி நானுறு" அதில் ஒரு பாடல்.

கள்ள அகிலும் கருங்காக்கைச்சொல்லும் போல்
எள்ளற்க யார் வாயின் நல்லுரையைத்- தெள்ளிதின்
ஆர்க்கும் அருவி மலை நாட! நாய் கொண்டால்
பார்ப்பாரும் தின்பர் உடும்பு

கருத்துச் சுருக்கம் : அறிவு குறைந்தோர் வாயிலிருந்து வந்தாலும் கூட அது பிழையென எள்ளி நகையாடாது அதன் தன்மையை உணர்ந்து பெரியோர்கள் ஏற்றுக் கொள்ளல் வேண்டும். அதன் விளைவாக ஏற்கனவே உள்ள கருத்தில் மாற்றம் ஏற்படலாம்.

கணவன் மனைவி, பெற்றார் பிள்ளைகள், உற்றார் உறவினர், தொடர்புறல் நிகழ்த்துகிறோம். ஆங்காங்கே கடைப்பிடிக் வேண்டிய நடைமுறைகள் வேறுபடும். கண்ணியம் காக்க வேண்டும். உறவில் விரிசல்ஏற்படக்கூடாது. விரும்பிய விளைவு பெற வேண்டும். அனுபவமே சிறந்த ஆசான். "தொடர்புறல்" என இங்கே குறிக்கப்பட்டுள்ளது, பேச்சு எடுத்து மூலமாகவோ வேறு ஏதேனும் முறையாலோ தகவல்களைப் பரிமாறிக்கொள்ளலாகும். சாதாரண தொடர்புறுதல் முறை தனி நபர் சம்பந்தப்பட்டதே(Personal Communication) இதன்மூலம் ஒருவர் தனது தேவை, உள்ளக்கிடக்கை, அறிவு, அனுபவம், உணர்வு, ஆதங்கம் போன்றவறறைப் பரிமாறிக் கொள்கிறார். தொடர்புறுதலுக்கு மொழி அவசியம். மொழியென்பது வாய்ச் சொல்லாக அமையலாம். அல்லது உடற்கூற்று மொழியாகலாம் (Body Language). வெறுமனே ஒரு கண் அசைவும் வலுவான மொழிப்பிரவாகம் ஆகலாம். "An Action Speakas more than a thousand words" என ஆங்கிலத்தில் சொல்வார்கள். வாய் மூலம் சொல்கின்ற கருத்தினை வலியுறுத்த உடலசைவு, முகபாவ மாற்றம் நடைபெறுதல் இயக்கசார் மொழியாகும் (kinesics). ஆனால் வாய் பேசாதோர் கையாளும் சைகை மொழி பதிலாள் மொழியாகும்(Proxemics).

பெரியோருடன் தொடர்புறுதல், வெகுஜனத் தொடர்புறுதல் பற்றிப் பின்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம். இப.பொது வளரும் சிறார்களுடனான தொடர்புறுதலைப் பற்றிச் சிந்திப்போம்.

"மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழைஞம் விருந்து" குறள் : 90

இன்றைய இளைய தலைமுறையினரின் உள்ளம் அனிச்சத்திலும் மென்மையானது. சிறிது வித்தியாசமான உடற்கூறு மொழியே அவர்களது உள்ளத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும். இவர்களுடன் தொடர்புறுகையில் தெளிவு மிக அவசியம். குதர்க்கம் தவிர்க்கப்படல் வேண்டும். பொறுமை பேணப்படல் வேண்டும். வள்ளுவன் மிக அழகுறச் சொல்கிறான், 'அவை அறிதல்' எனும் அதிகாரத்தில்,

"அவையறிந் தராய்ந்து செல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்" குறள் : 711

அவையிலே கூடியிருப்போரின் தன்மையை உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்தது பேசுபவர்கள் தான் சொல்லின் தன்மையை உணர்ந்த அறிஞர்கள். இங்கே 'அவை' என்பற்குப் பதிலாக இளைய தலைமுறையினரை வைத்துப் பாருங்கள். அவர்களுடன் தொடர்புறும் வேளையிலே, அவர்கள் தன்மைக்கேற்ப சொற்பிரயோகம் இருந்தால்தான் தொடர்புறுதல் ஆக்கபூர்வமானதாக அமையும். அவர்களுடன் நாம் தொடர்புறும்போது தெரிந்தோ தெரியாமலோ சில தவறுகளை இழைத்து விடுகின்றோம். சீரான தொடர்புறுதலுக்குத் தடையாய் நிற்பவை சிலவற்றைக் குறிப்பிடலாம்.

01. உத்தரவிடல் - ஆணையிடல்
"இதை நீ செய்" - "கட்டாயமாகச் செய்தே தீரவேண்டும்" போன்ற ஏவல்கள் பிள்ளைகளின் மனதிலே பய உணர்வினை ஏற்படுத்தலாம். அல்லது எதிர்க்கும் மனப்பான்மையை உருவாக்கலாம். செய்யாமல் விட்டால் என்ன செய்துவிடப்போகிறார் என்று பார்ப்போமே எனும் சோதனை முயற்சியில் ஈடுபட வைக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாகப் பிள்ளையின் நடத்தையில் எதிர்க்கும் தன்மை ஏற்பட நிறையவே வாய்ப்புண்டு.

02. எச்சரித்தல் - அச்சுறுத்தல்
"இதை நீ செய்யாவிட்டால்..... தெரியுந்தானே" "இதைச் செய்துவிட்டுத்தான் போகவேண்டும், தெரியுமோ" இதற்கு அடிபணியும் பிள்ளை பயந்தாங்கொள்ளியாக வளரலாம். இணங்கிப்போகின்ற மனப்பாங்குடையவராக அடிபணிந்து செயற்பட்டாலுங்கூட ஆழ்மனதிலே வெறுப்புணர்வு, கோபம், எதிர்க்கும் தன்மை படியவே செய்யும். வேறு வேறு சந்தர்ப்பங்களில் அவை தலைகாட்ட முடியும். சிக்கலான, அச்சுறுத்தும் சந்தர்ப்பங்களில்கூட சோதித்துப் பார்க்கும் எண்ணம் மேலெழுந்து நிற்கலாம்.

03. நீதி முறை வகுத்தல் - அறிவுரை கூறல்
"நீ செய்ய வேண்டிய கடமை", "இது உனது பொறுப்பு" அப்போது 'இது என் கடமையின் கூறா?' என மனம் சிந்திக்கத் தொடங்குவதுடன், அதனைச் செய்துமுடிக்காவிட்டால் மனதிலே 'குற்ற உணர்வு' ஏற்பட வாய்ப்புண்டு. வளர்ந்த பிராயத்தில்கூடத் தன் சுயபொறுப்பு எது என்று தெரிந்துகொள்ளும் பகுப்பறிவு குன்றிவிடக்கூடும். அல்லது "அவர் யார் எனக்குச் சொல்வதற்கு" என்று தனது செயல்களை நியாயப்படுத்தவும் முயலலாம்.

04. அறிவுரை - தீர்வுகளைக் கூறல்
"இப்படிச் செய்தால் என்ன?" "நான் என்ன செய்வேன் என்றால்...." இதன்படி செயற்படும் பிள்ளை தனது பிரச்சினையை உணர்ந்து அதற்குரிய பல்வேறுவகையான தீர்வுகளை மதிப்பீடு செய்து உகந்ததினைத் தெரிவுசெய்து செயற்படுத்தும் திறமை குன்றியவராகிறார். எதற்கும் மற்றையோரை நம்பியே வாழ முனைவார். செயற்படாதவர் எதனையும் எதிர்க்கும் மனப்பாங்கினைப் பெறுகிறார்.

05. இணங்குவித்தல் - தருக்கமுறை வாதிடல்
"சரிதான் ஆனால்...." "நீ இங்குதான் பிழைவிட்டுள்ளாய்" செயற்படுபவரில் தாழ்வுச் சிக்கல் ஏற்படலாம். தன்னில் ஏதோ குறைபாடுள்ளதாய்க் கீழ்ச் சுயமதிப்பு உருவாகலாம். தன்னை நியாயப்படுத்தும் விதத்தில் வாதம் செய்து செயற்படாமல் விடுவதுடன், அவ்விடத்தையே விட்டு விலகிச் சென்று சொல்வதைச் செவிமடுக்காது போய்விடலாம்.

06. தீர்ப்புக் கூறல் - குறை கூறல் - குற்றம் சாட்டல்
"நீ அறிவுபூர்வமாகச் சிந்திக்கவில்லை" "நீ சோம்பேறித்தனமாய்..." இத்தகைய கூற்றுக்கள் பிள்ளைகளின் தனித்துவத்தையே பாதித்துவிடும். சரியான தீர்ப்பு எடுக்கமாட்டாதவர், திறனற்றவர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். "நான் எதற்கும் லாயக்கற்றவன்" என்று தன்னைத்தானே குறைகூறும் சுய பச்சாதாப உணர்வு மேலிடலாம். தொடர்புறுபவர் எதிர் மறையான தீர்ப்புகள் கூறுவதால் அவரோடு தொடர்புறுவதை முற்றாகவே தவிர்க்க முனையலாம் அல்லது "நீர் என்ன திறமோ?" என எதிர்த்து வாதிடலாம்.

07. புகழ்தல் - இணங்குதல்
"நன்று! நீ மிகச் சிறப்பாகச் செயற்பட்டுள்ளாய்.", "நீ சரியாகச் சொன்னாய், அந்த ஆசிரியர் ஒரு முட்டாள்." இத்தகைய கூற்றுகள் ஏற்புடைய நடத்தையை (Desired Behaviour) மீள் வலியுறுத்தி விருத்தியுற வைக்கின்றன. சொல்லுகின்றவர் பாராட்டுகின்ற அளவுகோல் கேட்கின்றவருக்குத் திருப்தி அளிக்காத இக்கட்டான நிலையினை ஏற்படுத்தி அவருக்கு பதகளிப்பு (Anxiety) ஏற்பட வைக்கலாம்.

08. நையாண்டி - ஏளனம்
"ஏய்! அழுகுண்ணி, அழுமூஞ்சி!" "உன் வேலை அழகாகத்தான் உள்ளது!" இவ்வித தொடர்புறல் ஒருவரைத் தன்னைப் பற்றிய அபிப்பிராயத்தைப் படுமோசமாகக் கீழ்நிலைக்குக் கொண்டு செல்லும் தன்மையது. 'நான் கையாலாகாதவன்', 'என்னை எவருமே விரும்புகிறார் இல்லை' என்ற பரிதாப எணர்வு மேலோங்கும் அல்லது எதிர்மறை விளைவுகளாய் வாய்ச் சொல் மூலம் அல்லது உடற்கூறு மூலம் எதிர்க்கும் தன்மை வெளிவரலாம்.

09. பகுதாய்தல் - ஆய்வுறுதி செய்தல்
"நீ விட்ட பிழை என்னவென்றால்", "நீ அவ்விதம் எண்ணிச் செய்யவில்லை போலும்" பிள்ளைகளுக்கு ஒன்றைச் செய்வதற்கு இயற்கையாக ஆவல் ஏற்படாது. பிழை விடலாமோ என்ற பயமும் விரக்தி உணர்வும் ஏற்படலாம். 'தெரியாத்தனமாக மாட்டிக் கொண்டேனோ, பிழையான முறையைக் கையாண்டதால் அகப்பட்டுவிட்டேனோ, என்னில் நம்பிக்கை இழந்துவிடுவார்களோ' என்ற பயம் மேலிடலாம். இதன் காரணமாகத் தொடர்புறுதலையே தவிர்க்க முனையலாம்.

10. மீள் உறுதியளித்தல் - பரிவிரக்கம்
"போகுது, கவலைப்படாதே", "இப்போது என்ன போய்விட்டது என்று கவலைப்படுகிறாய்!", "விட்டது சனியன்" தொடர்புறுபவர் உற்சாகம் ஊட்டுவதற்காகக் கூறிய வார்த்தைகளை நியாயப்படுத்தல்களாகப் பிள்ளை ஏற்றுக் கொண்டு செய்த தவற்றுக்காக மனவருத்தப்படத வேண்டிய தேவை இல்லை என்ற நிலையினை ஏற்கத் தொடங்கலாம். என்னைத் தப்பாக விளங்கிக் கொண்டு விட்டார்களோ என்று மனதில் குமையலாம். அதன் பிரதிபலிப்பாக வெறுப்புணர்வு காட்டும் தன்மையான "உங்களுக்கென்ன சுலபமாகச் சொல்லி விட்டீர்கள்" என்பது போன்ற கசப்பான வார்த்தைப் பிரயோகம் வெளிப்படலாம்.

11. ஆழ்ந்தாராய்தல் - வினாவுதல்
"ஏன், ஏன்?", "யார்..?", "நீ ஏன் அப்படி..?", "எப்படி?" நிகழ்வுகளை ஆழ்ந்து ஆயும் நோக்குடன் பெற்றோர்கள் வினா எழுப்பும்போது பிள்ளைகள் பதிலிறுப்பார்களானால் அது பெற்றோர்கள் குறை காண்பதற்குரிய தளமாகவோ அல்லது தீர்வுகளைக் கூறும் தளமாகவோதான் அமையும். எனவே, பிள்ளைகள் பதில் கூறாமல் தவிர்க்கப்பார்ப்பார்கள் அல்லது அரையும் குறையுமாக ஏதோ சொல்லித் தப்பிக்கப்பார்ப்பார்கள் அல்லது முழுமையாகப் பொய்கூறி ஏமாற்றப்பார்ப்பார்கள்.

பொதுவாகவே பெற்றோர் வினா எழுப்புகின்றபொழுது அவர்களின் நோக்கம் பற்றி முழுமையாகத் தெரியாத பிள்ளைகள் தமது பிரச்சினையையே மறந்துவிடக்கூடிய அளவினுக்குப் பயமும், பதகளிப்பும் உடையோராய் இருப்பர்.

12. போக்கு மாற்றல் - வசைகூறல் - விலகல்
"இப்போ நாம் வேறு சந்தோசமான விசயங்கள் பற்றிப் பேசுவோம்", "அடி! உலகத்தைப் பிரட்டிப் போட்டாயே", "என்னை விடு! கொம்மாவும் நீயும் பட்டபாடு!" பெற்றோரின் நடவடிக்கை பிள்ளைகளுக்குப் பிழையான வழகாட்டுதலைத் தருகின்றது. பிரச்சினைகள் ஏற்படுகின்ற போது அவற்றினை எதிர்கொண்டு தீர்வு காண்பதிலும் பார்க்க தவிர்ப்பதுவே சிறந்த வழி என எண்ண வைக்கிறது.

எனது பிரச்சினை என் அப்பாவிற்குப் பெரிதாகத் தெரியவில்லையே என்ற காழ்ப்புணர்வு மேலோங்கலாம். வளர்ந்த பின்னரும் பிரச்சினைகள் ஏற்படுகின்றபொழுது திறந்த மனதுடன் அவற்றினை எதிர்கொள்ளும் பக்குவம் வராமலே போய்விடலாம்.

தொடர்புறுதல் செவ்வனே நடைபெறுவதற்குரிய தடைகள் இவைதான். "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?" என நம்மவர்கள் கூறுவதுண்டு. பிள்ளை வளர்ச்சியின் உளவியல் தத்துவத்தை உள்ளடக்கிய அற்புத வாசகம். பிஜாஜே(Piaget) சென்ற நூற்றாண்டில் கூறிய 'Child is a finished product by five' என்பதை நம்மவர்கள் எப்போதோ சொல்லிவிட்டார்கள். பிள்ளையின் ஆளுமை விருத்திக்கு அரும்பங்கேற்பது 'தொடர்புறுதல்' என்பதை நாம் உணரவேண்டும்.

எமது இலக்கியங்களில் இவை எல்லாமே உள்ளன. நாம் அவற்றினைக் கவனிப்பதில்லை. "Old wine in new bottle" என ஆங்கிலத்திலே வந்ததும் ஆச்சரியப்படுவோம், அவற்றினைக் கைக்கொள்ள வேண்டும் என எண்ணுவோம் அவ்வளவே.

"அட பாவி! எல்லாமே தடைகள் என்று கூறுகிறாய் அப்படியென்றால் பிள்ளைகளுடன் நாம் தொடர்புறுதல் முடியாத காரியமா?" எனச் சிலர் முனகுவதும், 'அது தெரிந்தது தானே, நாம் பிள்ளைகளுடன் கதைப்பதைக் குறைத்து அவர்களை தொலைக்காட்சியுடன் உறவாட விட்டுவிட்டு நாமும் நமது தொழிலுமெனத் திரிகிறோம்' என இன்னொரு சாராரின் கெக்கலிப்பையும் கேட்க முடிகிறது.

கஸ்டமான விசயம்தான் பெற்றோரியம் என்றால் சுலபமான தொழிலா? சற்றே ஏழாவதைக் கூர்ந்து வாசியுங்கள் அது ஒன்றுதான் தொடர்புறுதலுக்கான சீரிய வழி. ஆனால் அளவுடன் நின்று கொள்ளுங்கள் வெற்றி உங்களதே.

நன்றி : மனம் எங்கே போகிறது?
கலை இலக்கிய வெளியீடு, கலை இலக்கியக்களம், தெல்லிப்பழை. இலங்கை

தட்டச்சு உதவி: அமலா

1 comment:

  1. ஒரே ஒரு Add-தமிழ் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள் அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் மிக எளிதில் வெளியிடலாம்.

    உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே
    Add-தமிழ் விட்ஜெட் இணையுங்கள்.
    விட்ஜெட் தரவிறக்கம் செய்ய www.findindia.net

    ReplyDelete