Wednesday 12 August 2009

கதைச் சரம் - 8 புகையிலை விற்ற கதிர்காமக் கந்தன்!



கதைச் சரம் - 8
புகையிலை விற்ற கதிர்காமக் கந்தன்!


கதைச்சரம் - 8
செவிவழிக் கதை - 6

அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து புகையிலை தென்னிலங்கைக்கு பெருமளவில் ஏற்றுமதியாகும் பெரும் பணப்பயிர். இந்த வகையிலான பல கடைகளை தென்னிலங்கையின் பல சிங்கள நகரங்களில் நிறுவி வியாபாரத்தில் கோலோச்சியவர்கள் குறிப்பிடத்தகுந்த நம் தமிழ் வியாபாரிகள். இதில் மொத்த மற்றும் சில்லறை வியாபாரமும் அடங்கும். இதிலும் குறிப்பிடப்பட வேண்டியது யாழ் தீவகற்பத்தில் அமைந்ததொரு தீவைச் சேர்ந்த வியாபாரக் குழுமமொன்றே இந்தக் கொள்முதல் விநியோக நிர்வாகத்தில் கோலோச்சியது. புகையிலையும், சுருட்டும் குறிப்பாக கோடா சுருட்டும் தென்னிலங்கையில் நன்றாகவே விலை போயின. இதற்கான ஆளுமையும், வியாபாரத் துணிச்சலும் இந்த ஊரார்வசம் கைவந்த கலையாகியிருந்தது. இதனால் இந்த ஊரின் வியாபார அடைமொழியாக புகையிலையும் அமைந்திருந்தது.

யாழ்ப்பாணக் கிராமங்களில் கொக்குவில் மற்றும் கோண்டாவில் யாழ்ப் பெருநகர அண்டிய நல்ல விவசாயக் கிராமங்கள். இதில் புகையிலையைப் பணப் பயிராகச் செய்துவரும் கந்தசாமி என்ற விவசாயி வாழ்ந்து வந்தார். இவரின் அனுபவ முதிர்ச்சியால் புகையிலை, சின்ன வெங்காயம், மிளகாய் போன்ற பணப் பயிர்களும் கத்தரி, வெண்டை, பாகற்காய், புடலங்காய், பூசணி போன்ற உள்ளூர்ச் சந்ததைக்கான பயிர்களும் செழிப்பாக வளர்வது அக்கம் பக்கமெல்லாம் பிரசித்தமானது. உரவகை ஏதையும் சேர்க்க மாட்டார். எல்லாமே இயற்கை ஊக்குவிப்பான சாணம், குழைகள் கொண்டு மண்ணைப் பதப்படுத்தி தகுந்த முறையில் பயிரிடுவார். பக்கத்துத் தோட்டக்காரர்களுக்கான பயிர் ஆலோசனைகளையும் விருப்புடன் வழங்கி செய்தும் காட்டுவார். இதனால் இவரை எல்லோரும் 'கந்தசாமி அண்ணை' என்று அன்பாக அழைத்தனர்.

விவசாயிகள் வியாபாரிகளாக இல்லாத காலம் அது. இன்னும் சொல்லப் போனால் ஊர் தாண்டி வேறு ஊர் பார்க்காத கிராமவாசிகளைக் கொண்டதான காலம் அது. யாழ் நகரத்தையே பார்த்திராத கிராமவாசிகள் கொண்டதான யாழ் குடாவாசிகளில் வெளியூரில் வியாபாரம் செய்து அதுவும் தென்னிலங்கையில் சிங்களக் கிராமங்களில் வியாபாரம் செய்பவர்களைக் கண்டால் எப்படி இருக்கும்? இந்தப் பிரமாதமான அறிமுகம் கந்தசாமி அண்ணைக்கு வீடு தேடி வந்தது. புண்ணிய மூர்த்தி என்ற பெருவியாபாரி கந்தசாமி அண்ணையின் புகழறிந்து வீடு தேடிவந்திருந்தார். புகையிலைக்கு நல்ல விலையும் பேசப்பட்டு 'முன்பணமும்' கொடுக்கப்பட்டதில் கந்தசாமி அண்ணைக்கு நல்ல திருப்தி. முழுமையான கொள்வனவு முடிந்ததும் ரொக்கப் பணத்தையும் கொடுத்து மேலதிகமாக 'அண்ணே! உங்களது புகையிலையின் தரம் மிகவும் நன்றாகவுள்ளதால் ஆயிரம் ரூபா மேலதிகமாகத் தருகிறேன்' என்றார் மூர்த்தி முதலாளி. அந்க்காலத்தில் இது பெரிய தொகை. மூர்த்தி முதலாளியின் பேச்சிலும் சிரிப்பிலும் நடையுடை பாவனையிலும் ஒருவித கவர்ச்சி மிளிரும். இடைக்கிடை சிங்களத்திலும் பேசுவார். சிங்களம் விளங்காத கிராமவாசிகள் அண்ணாந்து பார்த்த வண்ணமிருந்தனர். இப்படியாக இந்த வியாபார உறவு மூன்று வருடங்களாகித் தொடரந்து அண்டை அயல் விவசாயிகளின் கொள்வனவையும் மூர்த்தி முதலாளிக்குப் பெற்றுக் கொடுத்தது. மூர்த்தி முதலாளியின் நடையுடை பாவனையால் 'மூர்த்தி மாத்தையா' என அழைக்கப் பெற்றார். எல்லா விவசாயிகளுக்கும் கந்தசாமி அண்ணைதான் துணை அதாவது பொறுப்பானார். இப்படியாக மலர்ந்த கந்தசாமி - மூர்த்தி மாத்தையா நட்பு கொடுக்கல் வாங்கலுக்கான கடன் கையாளலாகவும் விரிவடைந்தது.

கடந்த ஏழு மாதங்களாக மூர்த்தி மாத்தையா இந்தப்பக்கம் வராதலால் மூர்த்தி கிராமத்தில் ஒருவித சஞ்சலம் எழுந்தது. முதலாளியால் தனக்கு வரவேண்டிய கடன் பாக்கியும், புதியதான வியாபார அணுகுமுறையும் கந்தாமி அண்ணையின் நிம்மதியைப் பாதித்து சுமையாகியது. அக்கம் பக்கத்தவர்களது நிலையும் இதுதான். எல்லோரும் அதிகாலையிலேயே கந்தசாமி அண்ணையின் வீட்டு வாசலில் குழுமும் வழக்கமும் வந்தாயிற்று.

கந்தசாமி அண்ணைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. "அண்ணே! நீங்க மூர்த்தி முதலாளியின் கடைக்குப் போய் விசாரித்தால் என்ன?" என்றார் பக்கத்தூர் விவசாயி ஒருவர். கந்தசாமி அண்ணை அந்தக்குரல் தந்தவரை திடுமென திரும்பிப்பார்த்தார். முகத்தில் இலேசான மலர்வு தென்படத் தொடங்கியது. இது எல்லோருக்கும் சரியாகவே தெரிந்தது.

கொழும்புக்கே பயணமாகாத கந்தசாமி அண்ணை மாத்தறைக்குப் பயணமாத் தயாரானர். மூர்த்தி மாத்தையாவின் வியாபார முகவரிகளை இலகுவில் பெறமுடியவில்லை. அப்பாவிக் கந்தசாமி அண்ணைக்கு இதிலெல்லாம் நாட்டமிருந்திருக்கவில்லை. எல்லாமே உடன் பணமாகவே செய்திருந்த மாத்தையாவும் கடன் வியாபாரம் செய்திருக்கவில்லை. கந்தசாமியின் துணைவிதான் அந்தக் கலண்டரைக் கொண்டுவந்து காட்டி முகவரியைப் பார்க்கச் செய்தது ஆச்சரியத்தைத் தந்தது. ஒவ்வொரு வருடமும் தனது வியாபாரக் கலண்டரை அவரிடம் மாத்தையா கொடுப்பதின் முக்கியத்துவம் இப்பத்தான் கந்தசாமி அண்ணைக்குப் புரிந்தது. அதில் ஐந்து முகவரிகள் இருந்தன. அவை கொழும்புவில் ஒன்று, மாத்தறையில் ஒன்று, காலியில் ஒன்று, இரத்தினபுரியில் ஒன்று, பதுளையில் ஒன்றெனவாக இருந்தன. அனைத்தையும் குறித்துக் கொண்டார். தான் திரும்ப எவ்வளவு காலமெடுக்கும் என்பதை குத்துமதிப்பாகக் கணக்கெடுத்து அவ்வேளையில் தோட்டத்தில் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதை விலாவாரியாக விபரித்தைக்கேட்ட மூத்த மகன் சலிப்பின் எல்லையைக் கடந்தவனாகியிருந்தான். ஆனால் எதையுமே பேசாதிருந்தான். கந்தசாமி அண்ணையின் பயணம் நன்றாக அமைவதற்காக சிறப்பு வழிபாடு செய்த துணைவியார் வீபூதியையும் பூசி மிகுதியையும் கட்டி இடுப்பு மடியில் வைக்கும் பெட்டியில் பத்திரமாக வைத்துவிட்டார்.

கந்தசாமி அண்ணையின் முதல் கொழும்புப் பிரயாணம் அதிகாலையில் யாழ்தேவியில் தொடங்கியது. பேச்சுத் துணையாக கொழும்பில் வேலைபார்க்கும் அவரது அக்கா மகன் கிடைத்தது வசதியாகவும் கொழும்பில் தங்கி மூர்த்தி மாத்தையாவின் கடையைக் கண்டுபிடிக்கவும் வசதியாகிப்போனது. கொழும்பைப் பார்த்து அசந்து போய்விட்டிருந்தார் கந்தசாமி அண்ணை. 'கண்ணைக் கட்டி காட்டில் விட்டது' மாதிரி இருந்தது அவருக்கு முதலில். அவர் போன வேளையில் மூர்த்தி மாத்தையா கடையில் இல்லை. அவர் எப்ப வருவார் என்ற விபரமும் கடைச் சிப்பந்திகளுக்குத் தெரியவில்லை. இதனால் ஒவ்வொரு நாளும் காலை, மாலை என இரு வேளைகள் கடைக்கு வருவதான பயணம் கொழும்பை கந்தசாமி அண்ணைக்கு ஓரளவு பழக்கப்படுத்திவிட்டது. கிணற்றடியில் அனாயாசமாகக் குளித்த அண்ணைக்கு குளோரின் மணத்துடனான குளாய்க் குளியல் கடைசி மட்டும் பிடிக்கவேயில்லை. சாப்பாட்டுக் கடையில் சாப்பிட்டு புதிய பழக்கங்களும் நட்புகளும் கிடைத்துவிட்டிருந்தன. இப்ப இவரால் தனியாக தான் இருக்கும் இடத்திலிருந்து முதலாளியின் கடைக்கு வந்து போகத் தெரிந்தது மட்டுமன்றி, கொழும்புக் கோட்டையின் சுற்றுப் புறங்களும் கோல்பேசும் ஐந்து லாம்புச் சந்தியும் பரீட்சியமாகி விட்டன. கடைச் சிப்பந்திகளும் பழகிப் போயினர். இதனால் முதலாளி மாத்தறையில் இருப்பதான தகவல் கிடைத்தும் விட்டது. பிறகென்ன கந்தசாமி அண்ணையின் மாத்தறைப் பயணம் அடுத்த நாள் தொடங்கியது.

இப்ப கொஞ்சம் பிரயாணத்துக்கான சிங்களமும் கற்றுக் கொண்டுவிட்டார். அப்போதெல்லாம் ஆட்டோ கிடையாது பஸ் மட்டும்தான். மாத்தறையின் பிரதான வீதியில் கடை இருந்ததால் சிரமமில்லாது கண்டு பிடித்துவிட்டார். கடை ஓகோவென நடந்து கொண்டிருந்தது. சிப்பந்திகளுக்கு இவர் யாரெனத் தெரியாத போதும் மாத்தையாவுக்கு வேண்டியவர் என்ற படியால் நன்றாகக் கவனித்தனர். சோடாவும் கொடுத்தனர். ஆனால் மாத்தையாவைப் பற்றி ஏதுமே அறியமுடியவில்லை. நொந்து போன கந்தசாமி அண்ணை மீண்டும் கொழும்பு திரும்பும் முடிவெடுத்தார். சிப்பந்திகளின் ஒருவன் பஸ் கண்டக்டெருடரன் பேசி முன்சீற்றில் இடம் பிடித்துக் கொடுத்திருந்தான்.

ஐயோ பாவம்! கொழும்பு திரும்பிய அண்ணைக்கு பரிதாப அதிர்ச்சி காத்திருந்தது. நேற்று மூர்த்தி மாத்தையா கொழும்புக் கடைக்கு வந்து சென்றிருந்த தகவலால் ஆடிப்போனார். முதலாளியின் பயணங்கள் பற்றி யாருமே விசாரிக்க முடியாதாதலால் எவருக்கும் எங்கு போயிருப்பாரென்றே தெரியவில்லை. அனேகமாக இரத்தினபுரி போயிருப்பார் என ஊகம் செய்தனர்.

சோர்ந்து போயிருந்த கந்தசாமி அண்ணைக்கு வந்தது ஒருவெறி. மறுநாள் அதிகாலையில் கிளம்பினார் இரத்தினபுரிக்கு. ஒருவாறு விசாரித்து கடைக்குப் போய்விட்டார். இரண்டடுக்குக் கடை. மேல் மாடியில் சிப்பந்திகள் தங்குமிடமாக இருந்தது. வயதான ஒருவர்தான் கடையை நடாத்திவந்தார். அண்ணையின் முகத்தைப் பார்த்த அவர் மேலே அழைத்துச் சென்று முதலில் சாப்பிட வைத்தார். பின் விபரம் கேட்டார். இதிலிருந்து முதலாளியின் ஒன்றுவிட்ட மூத்த சகோதரன் இராசையாதான் இவரென்பது தெரிந்தது. 15 வருடமாக இக்கடையை நடாத்தி வருவதும் அந்தத் தெருவில் அனைவரது நட்பைப் பெற்றவராகவும் இருந்தார் இராசையா முதலாளி. கோடாச் சுருட்டு நன்றாக விற்பனையாகிக் கொண்டிருந்தது. கடை பலசரக்கு(மளிகை)க் கடையாகவும் இருந்தது.

விபரம் அறிந்த இராசையா முதலாளி "அண்ணே! கவலைப் படாதேயுங்கோ! மூர்த்தி மாத்தையா(தம்பி என்றாலும் இப்படித்தான் அழைப்பது வழக்கம்) பதுளைக் கடைக்கு இந்த வெள்ளி அல்லது சனிக்கு வந்தேயாக வேண்டும். அந்தக் கடையின் கணக்கு வளக்குப் பிரச்சனை முடிக்க இந்த வாரம்தான் கடைசி... அந்தக் கதிர்காமக் கந்தனை நினைத்துக் கொண்டு அங்க போங்கோ உங்களுக்கு எல்லாமும் கைகூடும்" என்றார் நம்பிக்கையுடன்.

கதிர்காமக் கந்தன் என்று சொன்னதும் அண்ணைக்கு பக்தியால் நா தடுமாறியது. நம்பிக்கை துளிர்விட்டது. 'சரி வந்ததுதான் வந்தம் கதிகாமத்தானையும் தரிசித்துவிடுவம்' என மனம் உறுதியானது. இராரசயா முதலாளியின் பக்குவமான கவனிப்பால் நெகிழ்ந்து போனார் கந்தசாமி அண்ணை. இங்கு குளியல் அதிகாலையில் வளைந்து நெளிந்து செல்லும் ஆற்றில் கிடைத்தது 'சொர்க்கமாக' இருந்தது அண்ணைக்கு. நாட்கள் போனதே தெரியவில்லை. வியாழன் மாலையில் பதுளை நோக்கிய பிரயாணத்திற்கு தன் சிப்பந்தியொருவரையும் துணையாக அனுப்பினார் இராசையா முதலாளி. அச்சிப்பந்தி கண்டி மட்டும் துணைக்கு வந்து அண்ணையை பதுளைக்கு வேறொரு பஸ்ஸில் ஏற்றிவிட்டு தனது கண்டி வீட்டுக்குச் செல்ல விடைபெற்றுவிட்டார்.

மலைப்பாதைகளில் பஸ் உந்தியவாறு வளைந்து செல்வதும் பச்சைப்பசேலென இயற்கை கொழிப்பதும் அழகான தேயிலை இரப்பர் தோடங்களுடனான மலைகளையும் கண்டு கிறங்கிப்போனவரானார் அண்ணை. பதுளையும் வந்தாச்சு கடையையும் கண்டு பிடிச்சாச்சு. ஆனால் மாத்தையாவைத்தான் இன்னும் காணமுடியவில்லை. ஆனால் இம்முறை நல்ல நம்பிக்கையுடன் இருந்தார் கந்தசாமி அண்ணை. எப்ப மாத்தையா வருவாரென்ற தகவல் யாருக்கும் தெரியாத நிலையிலும் கந்தசாமி அண்ணைக்கு நம்பிக்கை தந்தது அந்த கதிர்காமக் கந்தன்தான்!

தான் நாளைக்கு இவ்விடம் வருவதாக கடைச் சிப்பந்திகளுக்குச் சொல்லிவிட்டு, 'சரி ஒருக்கா கதிர்காமத்தானைத் தரிசித்துவருவமென'க் கிளம்பினார்.

அப்பாடா! அண்ணைக்கு புல்லரித்தது. கதிர்காம மண்ணில் கால்பட்டதை அவரால் நம்பவே முடியவில்லை. 'அடடா! மனுசியை அழைத்து வராமல் போனேனே!' என மனம் ஒரு கணம் குத்திக் காட்டிற்று. 'யாழ்ப்பாணத்திலே நம்மாக்கள் ஏன்தான் முடங்கிக் கிடக்கிறாங்களோ?' என மனம் தன்பாட்டில் கேள்வியையும் எழுப்பியது. 'சரி எனக்குப் பாக்கியம் கிடைச்சிருக்கு! எல்லோருக்குமாக கந்தனை வேண்டுவம்!!' என்ற முடிவோடு நடக்கத் தொடங்கினார். முதலி மாணிக்கை கங்கையில் நீராடல் பின் தரிசனம்... ஒரு திட்டம் வரையப்படுகிறது. 'கதிர்காமத்தான் இனி எல்லாத்தையும் பார்த்துருவான்!' நம்பிக்கை மெருகூட்ட நடையில் தெம்புதொனித்தது.

மாணிக்க கங்கையின் கரையோரமாக வேட்டி நசனலையும் சால்வையையும் பையையும் வைத்துவிட்டு பக்தியுடன் ஆற்றில் இறங்கி நீராடியதை இவரால் என்றுமே மறக்க முடியாது. குளிர் தண்ணீர் பட்ட உடம்பும் பக்தியால் நன்றாகச் சூடேறியிருந்தது. துள்ளிய வாறு கரைக்கு வந்த அண்ணைக்கு அதிர்ச்சி! 'எங்கே எனது வேட்டி நெசனல் சால்வை?' பக்கத்தில் ஆள் அரவமே இல்லை. யாரும் தூக்கியிருக்கவும் வாய்ப்பிலலை, முதற் தடவையாக அண்ணைக்கு நெஞ்சடைத்தது. தூரத்தில் வந்தவரிடம் விசாரித்ததில் "இங்கு குரங்குத் தொல்லை அதிகம் கவனமாக இருக்க வேண்டும்" என்ற அனுபவப் பாடம் பதிலாகக் கிடைத்தது.
"ஐயனே! கதிர்காமக் கந்தா! இதென்ன சோதனையடா?" வாய்விட்டே கதறினார் கந்தசாமி அண்ணை. அப்படியே மெல்ல நடைபோட்டவராக கோயில் முகப்பிற்கு வந்த அண்ணைக்கு ஆச்சரியமோ ஆச்சரியம்!! தனது கோலத்துடனேயே கந்தன் சிரித்தவாறு அளித்த காட்சியைக் கண்டு உருகிப்போனார்.
"ஐயகோ! கந்தா! கதிர்காமத்தானே!! நீயுமா மாத்தையாவுக்குப் புகையிலை விற்றிருக்கியாய்?" என்று கதறிய கந்தசாமி அண்ணையின் கதறல் கேட்டு சந்நிதியில் இருந்த அனைத்துப் பக்தர்களும் பதைபதைத்துப் போனவர்களாகி அண்ணையைச் சுற்றிக் குழுமத் தொடங்கினர்.


- முகிலன்
பாரிசு - ஓகஸ்ட் 2009
(சிறுவயதில் எனது கிராமத்தில் கேட்ட கதை. இதில் ஒரு ஊரின் பெயர் வருவது வழக்கம். அந்த ஊருக்கு அவப்பெயர் வரக்கூடாது என்பதற்காகத் தவிர்ததுள்ளேன்.)

*பிற்குறிப்பு:
இதை அடியொற்றிய வேறொரு கதையின் பதிவு (பிரான்சில் பிறந்து வளரும் எனது இரண்டாவது மகன் சொன்ன கதை) அடுத்த முறை இடம்பெறும்.

No comments:

Post a Comment