Friday, 21 August 2009

சுவட்டுச் சரம் 1 - நினைவுத்துளிகள் (10)
சுவட்டுச் சரம் 1
பெர்லின் புலம்பெயர் வாழ்வு தொடக்க கால நினைவுகள்
நினைவுத் துளிகள் (10)

- குணன்


-----------------------------------------------------------------------
1982 நவம்பர் 10-ம் நாளிலிருந்து வெளிவந்த அர்த்தமுள்ள 'யதார்த்தம்' இதழ்

கால்நூற்றாண்டுக்கு முன்னர், புலம்பெயர்வில், பேர்லின் மாநகரில், கால்கோள் இட்டு, அன்றைய நாட்களில், உரிமைக்கும், உணர்வுகளுக்கும் தீனி போடவேண்டும் என்ற நோக்கில், சிந்தித்த சிலரின் எண்ணப்படி, முன்னர் பத்திரிகையாசிரியர் தொழில் அனுபவமுடைய இரா.பாஸ்கரன் ஆசிரியராகவும், திருவாளர்கள் முகுந்தன், நகுலன், குகன், கண்ணன், குணன் (இவர்களில் ஒருவர் தவிர ஏனையவர்கள் இன்று பேர்லினில் இல்லை) மற்றும் பலரின் ஒன்றுபட்ட உழைப்பின் விளைவாக "யதார்த்தம்" உருப்பெற்றது. பேர்லின் ஈழத்தமிழர் நலன்புரிக் கழகத்தின் வழிகாட்டலுடன், 'ஆபத்துக்குள்ளானோருக்கு உதவும் அமைப்பு' (organisation for endangered people) வழங்கிய நிதியுதவியுடன் கையெழுத்துப் பதிவில், கனமான கருத்தாழமிக்க கட்டுரைகள், செய்திகள், கொள்கை விளக்கங்களுடன், புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழர் நலன்கள் பேணும் கவசம் போல 1982 முதல் 1987 வரையான காலப் பரப்புள் 29 இதழ் வெளியிடப்பட்டன! இவ்வாறு வெளிவந்த இதழ்களுடன், ஒன்று விசேட வெளியீடாகவும், ஒன்று சிறப்பு இதழாகவும், மற்றொன்று பத்தாண்டுநிறைவு இதழாகவும், கடைசியாக நலன்புரிக் கழகந் தொடங்கி, கால்நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடியபோது (1982 - 2007) வரலாற்று மலராக புலப்பெயர்வின் ஆவணக் கோவையாகவும் (அச்சுப் பதிவில்) வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது! இதனை வெளியிட எண்ணியவேளை, "யதார்த்தம்" என்ற பெயரை முன்மொழிந்தவர் நண்பர் குகன் ஆவார்! முதலாவது இதழில் சிறந்த சிந்தனைகள் நிறைந்த கட்டுரைகள் எழுதிய திருவாளர்கள் குணன், முகுந்தன், குகன், கணேசன், தங்கராசா மற்றும் ஆசிரியர் இரா.பாஸ்கரன், ஓவியம், பிரதி எழுதல், வடிவமைப்பு போன்றவற்றிலும், தொடர்ந்து அதன் வெளிக்கொணர்வில், பங்காற்றியவர்களில், கழக நிர்வாகங்களில் பதவியேற்ற பலரையும் 25 வது ஆண்டு நிறைவு மலரில் காணலாம்! இந்த இதழ்கள் வெளியீட்டு முயற்சியை இன்று மீட்டுப்பார்க்கையில் இனிக்கும் நிகழ்வாகி ஆறுதல் தருகிறது. இவ்வாறு நீண்டவரலாற்றுடன் வளர்ந்து வந்த இந்த இதழ், இன்றைய கணினி யுகத்தில் தொடரப்படாது, நின்றுவிட என்னதான் காரணமோ தெரிய முடியவில்லை!
பேர்லின் 'டாலம்டோவ்' பல்கலைக்கழகத்தின், வெளிநாட்டவர்க்கான சுவடிக் காப்பகத்தில் டாக்டர் கோவ்மன் அவர்களின் ஆதரவுடன் இவ்விதழ்கள் பேணப்பட்டிருப்பது ஓர் வரலாற்று பதிவேயாகும். இது புலப்பெயர்வின் செய்தி, சிற்றிதழ் முயற்சிக்கு தரப்பட்ட ஆவண அங்கீகாரமுமாகும்!


குறிப்பு:
'யதார்த்தம்' முதல் இதழின் அட்டை, முதல் பக்கம், ஆசிரியர் பக்கம் ஆகிவற்றின் பிரதியினை பார்வைக்காக இணைக்கிறேன். முதல் இதழ் வெளியிடப்பட்ட நாள் 1982. 11. 10
இவ்விதழ்கள் கையால் எழுதப்பட்டு, பிரதியெடுப்பு இயந்திரத்தின் மூலம் (A4 size - photocopies) புத்தகமாக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன.
------------------------------------------------------------------------

தாய் நாட்டை விட்டு, புலப்பெயர்வுக்கு ஆளாகிய ஓர் இனத்தைச் சார்ந்த மக்கள் எனக் கூறியவர்களுக்கு, புகலிடத்தில் வதிவிட அனுமதி கிடைத்து விட்டால் அனைத்தும் கிடைத்து விட்டதாகக் கொண்டதும், தான் சார்ந்த இன, மொழி போன்ற அடிப்படை அடையாளங்கள் அனைத்தையும் உடைய நிறுவன அமைப்புக்களையுங்கூட சிறிதும் சிந்தனை அற்ற போக்கில் தூக்கி வீசியதுமான தூரநோக்கில்லாத மக்கள் வரிசையில், புலம்பெயர்ந்த தமிழருக்கு ஓர் சிறப்பு இடம் கிடைத்திருக்கிறது!

பெற்றார்- குடும்பம், உறவுகள், நண்பர் எல்லாவற்றையும் மிகத் துச்சமாக்கிவிடவும், எதையும் ஊன்றிப் பார்க்கின்ற செயல் திறன் அற்று, பிறரின் ஏமாற்று அல்லது ஆசை வார்த்தைகளில், யாவற்றையும் மறந்து, தனித்துவத்துடன், சுயத்தை இழப்பதில மற்றவர்களுக்கு ஒருபடி முன்நிற்பதிலும் நம்மவர்கள் வல்லவர்கள் தான் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. இவ்வாறன போக்கால் தன்னை இழந்து தவித்தவர்கள் எத்தனையோ எத்தனையேர் வகை சார்ந்தவர்கள் என இனங்காணமுடியும்!

தாம் செய்கின்ற, பங்கெடுக்கின்ற எதனையும் நன்றாக சீர்தூக்கிப் பார்க்கும் ஆழ்ந்த அறிவும், தெளிவான நோக்கும், செல்லத் துணிகின்ற பாதை சரியா, தப்பா என்றெல்லாம் தாமாகத் தெளிவு பெறமுடியாது போகும் அல்லது பிழையான தீர்மானங்களை எடுக்கும் போது அதனைச் சுட்டிக்காட்டி விளக்கிடும் தகுதியான நட்போ- வழிகாட்டியோ இல்லாத காரணிகளால், புலம்பெயர்வில் இருக்கும் போது வயதில் மட்டுமன்றி அனுபவத்தில் புதிய பலருக்கு, குறுக்கு வழிகளில் செல்ல அல்லது இட்டுச் சென்று சீர்குலைக்கவென்று சில வேடதாரிகள் தாமாக வந்து புகுந்து விடுகிறார்கள் என்பதுதான் உண்மை!

கடந்த மூன்று தசாப்த, ஐரொப்பிய புலப்பெயர்வில், தமிழர்கள் எவற்றை எல்லாம் தமதாக்கினார்கள்? எவ்வகையான அறிவையும், அனுபவத்தையும் வளர்த்துள்ளார்கள்? என நோக்கும் போது, சமுதாய நலனைக் காட்டிலும், சுய தேவைகளுக்கான வேலைத்திட்டங்கள், மற்றும் வெளிப் பகட்டான, தேவையற்ற பாமரத்தனமான ஏமாற்றுக் காரியங்களை, நீட்டி முழக்கும் மூன்றாந்தர சினிமாத்தனங்களில் அதிக ஈடுபாடுடைய தென்னிந்திய பாணிக்கு சளைத்தவர்கள் அல்லர் என்பதை நிரூபித்திருப்பதைக் காணமுடிகிறது! இதற்கு எத்தனையோ உதாரணங்களை வரிசைப்படுத்தின் பிழையல்லவே!

புலம் பெயர் ஈழத் தமிழர்கள், குடும்பம், சமூகம், உறவு என, எல்லாவற்றையும் பற்றி ஏனைய பிரிவினரைக்காட்டிலும், சற்று சுயசிந்தனையுடன், தனது ஆணிவேர்களைத் தேடிச் செல்வது, அதற்கு அமைவாக தூரநோக்குடன், அவசரத்தனங்களையும், வெற்று வேட்டு வேடங்களையும் ஒட்டுமொத்தமாக ஒதுக்கி, யதார்த்தங்களை எண்ணவேண்டிய பாரிய பொறுப்புக்குள் உள்ளார்கள் என்பதே இன்றைய நிலைமையாகும்!

பேர்லின் நிரந்தர வதிவிட அனுமதி பெற்றபின் கல்யாணமாகிய ஆண்கள் தமது மனைவிமாரையும் (பிள்ளைகள் இருப்பின் ஓரிருவரையும்), பேர்லின் நகர் வருவதற்கு பெரும் முயற்சி செய்தனர். பேர்லின் நகரில் அவ்வாறு பலர் இணைந்து கொண்டதைக் கண்ட ஏனைய பிரதேசங்களில் வதியத் தலைப்பட்ட தமிழர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது ஐரொப்பிய நாடுகளிலும், மேற்கு ஜெர்மன் நாட்டின் பிற பகுதிகளில் வாழும் (முன்பு வந்தவர்களும்) தத்தமது குடும்பங்களையும், இளைஞர்களாக இருப்பவர்கள் திருமணஞ் செய்வென மணப் பெண்களை (பெற்றோரினால்) ஏற்பாடு செய்வித்து பேர்லின் வழியாக பயணிக்க வகைசெய்தது. இதற்காக பேர்லினில் வதிவிட உரிமம் கிடைத்த தமக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்களின் உதவியை நாடினர்! இவ்வாறு தமக்கான வாழ்க்கைத் துணை நாடி, பேர்லின் வழியாகப் பயணித்த சிலர் எதிர்நோக்கிய ஏமாற்றங்களும், அவமானங்களும், சுரண்டல்களும், பலரின் வாழ்க்கையையும், எதிர்பார்ப்புக்களையும் பகற்கனவாக்ககியதும் தனியாகப் பதிவிடப்பட வேண்டியதொன்று! இந்தக் கசப்பான அனுபவங்கள் பேர்னில் வதிவிட உரிமம் கிடைத்த தமிழர்களை ஏனைய ஐரோப்பியப் பகுதிகளில் வதியத் தலைப்பட்ட தமிழர்களுக்குமிடையில் மனப்பிரிவை உண்டாக்கியது.

இவ்வாறு போலாந்து, ரஸ்சியக் குடியரசு போன்ற நாடுகளைத் தாண்டி, குறிப்பாக பேர்லின் நகருக்குள் வந்து சேரும் பெண்கள், குழந்தைகள் போன்றோர் தங்கி தப்பிக்கொண்டதும்- உயிர் தப்பியதும், தாயை, குழந்தையை, மற்றும் கூடவந்த துணையையும், ஆற்றைக் கடக்கும் வேளை, நீர் மட்டம் உயர, அடித்துச் சென்ற சொல்லொணாச் சோகவரலாறு பலவும் நெஞ்சில் உறைந்து, நினைவை வாட்டிய உண்மையாகும்! பொருந்திய பணத்தைக் காட்டிலும், மேலும் வருத்தியும் பயமுறுத்தியும் பெற்று, ஏமாற்றிவிட்டு தப்பியோடிய தரகர்கள் பற்றியும் சேதிகள் கிடைக்கத்தான் செய்தது!

நீதி, தர்மம், பண்பாடு என்றெல்லாம் கூறிக்கொள்ளுகின்ற, அடக்குமுறை- கொடுமைகள் பற்றி தெரிந்து கொண்டு, அவற்றுக்கெதிராக குரல் எழுப்புகின்ற வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என அறிமுகமுடையவர்களே, தமது சொந்த மக்களை சுரண்டிக் கொண்டவர்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டார்கள் என அறிந்தபோது, யாரைத்தான் இங்கு நம்பமுடிகிறது? என,மட்டுமே எண்ணிப்பார்க்க மனம் விழைகிறது!நேற்றைய செய்திகள் இன்றைய வரலாறு

எத்துறை சார்ந்த செய்திகளாயினும் காலங்கடந்து மீட்டுப் பார்க்கும்போது, அவற்றின் உண்மைத் தன்மைகளை உணரப்பட்டு, அதன் வரலாற்றுத்தேவை நன்றாகப் பேசப்படுகின்றதென்றால் வரலாற்றுப் பெறுமதியுடையதென்பது கருத்தாகும்!

புலம்பெயர்ந்து வந்து தன்னைப் பற்றியோ தான் சார்ந்த சமுதாயம் பற்றியோ அன்றி, அவற்றில் நாட்டம் கொள்ளவோ, பலர் முயலாது தமது சுயலாபங்களை முன்வைத்து (வேலை, வதிவிடம், மற்றும்……..!) தொடர்பாடல்களுக்காக,சில தேவைகளை நிறைவேற்றவே, சில நல்லவர்களிடம் 'நச்சு விதைகளை விதைக்கும், மட்டரகச் செயல்களில் ஈடுபட்டார்கள்!' "தமிழன் என்றெரு இனமுண்டு....“என்று அன்று கவிஞன் ஏன் பாடினான்? என்பதற்கு புகலிட வாழ்க்கையில் தான், சரியான- பொருத்தமான கருத்தை அறியமுடிந்தது என்பது பட்டறிவாக கொள்ளமுடிகிறது!

அது மட்டுமன்றி தமிழர்கள், தனது தன்மானத்தை தாரைவார்த்துக் கூட, பிறர் மானத்தை(இனமானத்தை) விற்க முடிந்தால், தயங்கிட மாட்டார்கள் என்பதை இங்கெல்லாம் பரவலாகக் காண முடிந்தது தான்! பொது விடயங்கள், எதுவாகினும், அங்கு, எவை எல்லாம் கையடக்கமாக்க முடியுமோ அவற்றை தனதாக்கும் தனிக்கொள்கையுடையவன் தமிழன், தவிர பிறர் இல்லை என்பதை நன்கு தெரிந்த பின்னர் தான் அந்த அடைமொழியைக் கொடுத்துப் பாடினான் போலும்! ஒருவரின் பலவீனத்தை அன்றி அறியாமையைத் தெரிந்து கொண்டால், அதனைப் போக்கிட உதவுதற்குப் பதிலாக அதனைப் பிறரிடம் பரப்புவதும் பழிப்பதும், இழித்துரைப்பதும் மிகக் கண்டிக்கப்பட வேண்டியதே!

புகலிடத்தேடலின் தொடக்க நிலைமையை முற்றாக இழந்து முகந்தெரியாது, தாம் வாழும் நாடுகளில் தமக்கு வழங்கப்பட்ட பிறந்து வளர்ந்த நாட்டில், பெறமுடியாத வசதிகளைப் பெற்றுக் கொண்டவற்றை மேலும் பேணி மதிக்காது, பிழையான, பேராசை, பொய்யான வழிகளில், சட்டங்களை மீறிய வழிகளில் அதிக நாட்டங்கொண்டதால், தங்கள் இருப்பையும், எதிர்காலத்தையும் பாழடித்துக் கொண்டவர்கள் பலர், நாட்டையே விட்டு, வெளியேறினார்கள்! சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டாவது, பொருள் சேர்க்கத் துணிந்தவர்கள், சிறைக்குள் தள்ளப்பட்டு, பின்னர் நாடு கடத்தப்பட்டு, தம்மைத் தாமே தண்டித்தவர்களாய் மாறினார்கள்! வெளிநாட்டில் புகலிடங்கோரியவர்களிடம் வேறு காரணங்களுக்காக(கல்வி,வேலை) போன்றவற்றுக்காக வந்தவர்கள், தொடக்கத்தில் நட்புக்கொள்ளவோ, உறவு வைக்கவோ விரும்பவில்லை! ஆயினும், ஜேர்மன் மொழிபெயர்ப்பாளர்களாகிய ஒரு சிலர் பழக முன் வந்ததும் உள்நோக்கங் கொண்டதே என்பது பின்னர் அறிந்து கொள்ளமுடிந்தது!

புலம்பெயர்வில் ஆங்காங்கு வாழ்ந்த பலரும், தமது சமூகப் பொறுப்பை புறந்தள்ளியும், புரிந்துகொள்ளும் வகையில் குறிப்பாக, மொழியறிவைப் பெற முயலாது, தம்மை, பொருளாதாரத்தில் உயர்த்துவதில், எதையெதைச் செய்து குறுக்கே பயணிக்கலாம் என்பதில் அதிகம் கவனத்தை செலுத்தினர்!

இவற்றுள் தவறான, மலிவான கூலியில் வேலை செய்தல், விடுமுறையற்று தொடர் வேலை, குறித்த வேலைக்கான எல்லையைத்தாண்டி, வேலை உடன்படிக்கையைத் தாண்டி, குறித்த பணிக்குப் புறம்பாக மேலதிகமாகவும், 'காக்காய்' பிடிப்பதற்காகவும் பணியாற்றுவதில் முன்மாதிரி தொண்டாற்றியவர்கள் தமிழர்கள், என்றவாறு, சக தொழிலாளர்களின் எரிச்சலைத் தேடிக் கொண்டார்கள்! ஓய்வற்று, குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து நோய்வாய்ப்பட்டவர்கள், தம்மையே இழந்துபோனார்கள்!

புலப்பெயர்வாழ்வில் இரண்டாம் தலைமுறையினர் கல்வியில் கால்பதித்தும், எதிர்காலத்தில் பொறுப்புமிக்க குடிமக்களாகவும், அதே நேரத்தில், தாம் சார்ந்த இனத்தின், பெற்றோர்- உறவின் முறை, பண்பாடு, மொழி போன்ற மானிட அடையாளங்களைத் தொலைத்து-தொலைந்து போகாமலும், காத்து, வளர்த்து, வாழையடி வாழையாக புலப்பெயர்வில் வேர் பதிக்கவேண்டிய கடமையை உணர்த்தும் பாரிய பொறுப்பு சமூக அக்கறை கொண்ட அனைவருடையதாகும்!

(நினைவுத் துளிகள் சொட்டும்....)

No comments:

Post a Comment