Friday, 7 August 2009

சுவட்டுச் சரம் 1 - நினைவுத்துளிகள் (7)


சுவட்டுச் சரம் 1 - நினைவுத்துளிகள் (7)

- குணன்

"புகலிடம்", அல்லது "புகலிட வாழ்க்கை" என்பதை சரியாகப் புரியாத்தனங் கொண்டிருந்தவர்கள் இன்றும் புகலிடம் பெற்றபின்னரும் உள்ளார்கள் என்பது பொய்யல்ல! மனித வரலாற்றில், மக்கள் குழுமங்களுக்கிடையே அடக்கு முறைகள் தலைதூக்குவதும், யுத்தம், கலவரம் ஏற்படுவதால் பெரும்பான்மை கொண்டவர்களுக்கஞ்சி, தொகையில் குறைந்த பலவீனர்கள் பாதுகாப்பைத் தேடுவதும், காலங்காலமாகத் தொடருகின்ற மிக நீண்ட மனிதத் துயர் கதையாக இன்று வரை இடம் பெறுகின்ற ஒன்றாகும்.

ஏனைய சீவராசிகளைக் காட்டிலும், தன்னை உயர்வாக நினைக்கும் மனித இனம், மட்டுமே, ஐந்தறிவு படைத்த விலங்கினம், தன்னின அழிவுக்கு குழி பறிக்காத நிலையில், தன்னினத்தை கொன்று, பழிதீர்க்கும் பான்மையுடன் நடந்து கொள்ளும் உயிர்ப் பிரிவாக இன்று வரை காண முடிகிறது! இதன் காரணமே, இன்றும், உயிர்ப் பாதுகாப்பு நாடும் மக்கட் பிரிவினர், சொந்த தான் பிறந்த மண்ணிலும், அண்டை நாடு, தூர நாடுகளிலும், எல்லை தாண்டிச் சென்று, தம்மை காத்துக்கொள்வதில் ஈடுபடுகிறார்கள்! இவ்வாறு, சென்று காத்துக் கொண்டவர்கள், சிலர், தம்மைத் தாமே, தாழ்த்திக் கொண்டவர்களைப் போல, புகலிடம் கோரி நிற்பது பற்றி, தாழ்வாகப் பேசுவதும், நினைப்பதும், செயற்படுவதும், நடந்துகொள்வதும் அறியாமை வாய்ப்பட்டதாகுமன்றோ?

இன்று, உலகின் பல்வேறு நாடுகளில், காலூன்றுவதற்கு முழுமுதற் காரணி புகலிட வாழ்க்கையே என்பதை மறந்து விட்டு, நாட்டுக் குடி மகன் என்ற கனவில் வாழ்வது, தனது சுய அடையாளத்தை, மட்டுமன்றி, அடுத்தடுத்து வரவிருக்கும் தன் வழித்தோன்றல்களையும் தடுமாற வைத்து, அடையாளமற்றவர்களாக்கி விடலாம்! இங்கு, புகலிடம், கோரியபோதும், அதுபற்றிய கலந்துரையாடல்களிலும், வாழும் நாட்டவர்களால், மீண்டும், மீண்டும் விடுக்கப்படும், கேள்வி, "உங்கள் சொந்த நாட்டில், யாவும், தீர்ந்து விட்டால், நீங்கள் அங்கு திரும்புவீர்களா?, இங்கு தங்க விரும்பகிறீர்களா?", என்ற கேள்வியை ஒருபோதும் மறந்து வாழ்வது சரியாகாது தானே? இதற்குப் பின்னால் ஒளிந்துள்ள அர்த்தம் மனத்தின் ஆழத்தில் இருக்க- நினைக்கப்பட வேண்டிய ஒன்று! சொத்துச் சுகங்கள் சொந்தம், என வாழ்ந்தவர்கள், கால மாற்றத்தின் விளைவாக, ஆபிரிக்க, ஆசிய நாடுகளிலும், ஐரோப்பிய நிரந்தரக் குடிகளாகிய இந்திய வம்சா வழியினர், இஸ்ரேலியர், போன்றவர்கள், உடமைகள் யாவையும், இழந்த நிலையில், உகண்டா, பர்மா, இராணுவங்களினால் துரத்தப்பட்டனர். நாசி ஜேர்மன் ஆட்சியில், இரண்டாம் உலகப்போருக்கு வழி வகுத்ததும் சியோனிஸ்டுக்களுக்கு எதிராக குரல் எழுப்பப்பட்டதால் ஐம்பது இலட்சம் உயிர்களைப் பலிவாங்கி, புதிய இஸ்ரேல் அமைந்ததும் வரலாறு கூறும் உண்மை. இனி வருங்காலங்களில், இன்று அணைப்பவர்கள் நாளைக்கு, எப்படியும் மாறலாம், என்ற எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும்! எனவே தான், நாம் எமது ஆணிவேர்களைப் பேணிக் காப்பது கடமையாகக் கொள்ளல் வேண்டும்.
000000000000

பேர்லின் வழியாக, ஐரொப்பிய நாடுகளில் புகலிடந்தேடியவர்கள், பேர்லின், மாநில வெளிநாட்டவர் அலுவலகத்தினால், தமக்கு எங்கு தற்காலிக வதிவிட அனுமதி வழங்குவார்களோ? என்ற ஏக்கத்துடன் காத்திருப்பார்கள்! சில சமயங்களில், பேர்லின் நகரமே வழங்கப்பட்டால், தாம் விரும்பியவாறு எல்லை தாண்டிச் செல்வது, பல இடர்ப்பாடுகளை தரலாம்! இதன் காரணமாக, பெண்கள், யுவதிகள், தமது குடும்பத்தினரிடமோ, அல்லது திருமணமாகப் போகின்ற மாப்பிள்ளையிடமோ, செல்வதற்கு, ஏற்றவாறு, பேர்லின் நகரில் புகலிடக் கோரி விண்ணப்பதைத் தவிர்த்து, நிரந்தர வதிவிட அனுமதி பெற்றவர்களின் அனுமதிப்பத்திரங்களில் மாற்றம்(தலை மாற்றல்?) செய்து, வேண்டிய நாட்டிற்கோ, நகரத்திற்கோ செல்வதாக அறிய முடிந்தன.

இவ்வாறான சமயங்களில், 1989 வரையான காலப் பகுதியில்,கிழக்கு ஜேர்மன் எல்லையில் பிடிபட்டால், மேற்கு பேர்லினுக்கே திருப்பி அனுப்பப்படுவதும், மேற்கு ஜேர்மனுக்குள் நுழையும் போது, பிடிபடுவோர் அருகில் உள்ள மாநில அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு பின்னர், விசாரணைக்குப்பின்னர்,செல்லவோ, தங்கும் இடமோ தரப்படும். தகுந்த வழிகாட்டல், உதவிகள் இன்றி, சிலரின் வாழ்க்கை பயணத்தில், ஏமாற்றங்களும், துயரங்களும் நேர்வதுண்டு! இதன் விளைவாக, பேர்லின் நிரந்தர வதிவிட அனுமதி கிடைத்து வாழ்ந்த அனைவருமே நம்பகத் தன்மை அற்றவர்கள் என்ற எண்ணம் தோன்றலாயிற்று.

தனது ஊரவர், உறவின்முறை என்று, அறிமுகப்புடுத்தி, புதிதாக வருகின்றவர்களில் ஏமாற்றப்பட்டவர்கள் பிழையாக வழிகாட்டப்படுவதை கண்டறிந்த பின்னர், நன்கு ஆய்வு செய்த நலன்புரிக்களக உறுப்பினர்கள், புகலிடம் கோரி, பேர்லின் நகருக்குள் வருபவர்களுக்கு முடிந்த எல்லா வகையிலும் உதவிடத் தயங்கியதில்லை! அன்று அடிப்படை உதவிமட்டும் பெற்றிருந்த போது, தங்கள் உறவுகளுக்கு உதவியதைப் போன்று, நிலையான இருப்பை பெற்றிருந்தபோது உதவிட முன்வரவில்லை! பேர்லின் செஞசிலுவைச் சங்கம், உதவிட தொடங்கும் வரை, தனிப்பட்ட தேவாலய அமைப்புக்களும், கனவான்களும், மனிதாபிமான அடிப்படையில், உடை, உணவு போன்ற அத்தியாவசிய உதவி நல்கியதை மறக்கமுடியாது! இரண்டாம் உலகப்போரில் தாம் பட்ட அவலங்களை மறக்காது, அகதிகளாக, அவலமுற்று தமது நாட்டில் புகலிடம் கோரி வருகின்ற அனைவரையும் ஏற்றுக்கொள்வதை, தமது நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில், மாற்ற முடியாத விதியாக சேர்த்திருக்கிறார்கள்! ஆயினும், அதனோடு, சில புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கின்றது!

1980 -1989 காலப் பகுதி, ஈழத் தமிழரின் புலப்பெயர்வின் முக்கிய காலப் பகுதியாகும். ஐரொப்பிய, வட- அமெரிக்க, அவுஸ்திரேலிய நாடுகளில் தமிழர்கள் அகதிகளாகக் குடிபெயர்ந்த காலம் இது. தாம் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த சொந்த மண்ணை விட்டு, கடல் தாண்டி, வான் வழி கடந்து, குடும்பம், உறவு ஊர் விட்டு, முன்பொருபோதும் அறியா-புதிய மக்கள், புரியாத மொழி, பழக்கமில்லாத உணவு, எல்லாவற்றுக்கும் மேலாக, உடல் தாங்க முடியாத கால நிலை எனவாக யாவுமே மாறு பட்ட சூழலில் வாழ்வதென்பது, எண்ணியே பார்க்க முடியாத ஒன்றுதான்! பனிக்காலக் குளிரில் நடப்பதற்கே கால்கள் தடுமாறியதெல்லாம் பின்னர் பழகிவிட்டாலும், அன்றைய நாட்களை நினைத்துப் பார்க்காமல் இருக்கமுடியாத புதிய அனுபவங்கள்தான்!

நாட்டை நினைப்பாரோ, சொந்த வீட்டை நினைப்பாரோ என்ற அவல நிலையாக இருந்த பலரும், தமக்கு ஏற்பட்ட பெரும் பொருட் செலவை எப்படியாவது ஈடுசெய்து அனுப்புவது பெரிய போராட்டமாகவே விளங்கியது! 1980ல், வெளி நாட்டவர் -புகலிடம் கோரியவர்கள் உட்பட, இங்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு வேலை பதியவோ செய்யவோ தடை விதிக்கப்பட்டது! இதன் காரணமாக, பணம் உழைக்கும் எண்ணத்தில் இருந்த பலர் ஏமாற்றம் அடைந்தனர். இதன் காரணமாக, இங்கு புகலிடங் கோரிய சிலர், தாம் முன்பு செய்த வேலைக்கு விடுமுறை பெற்று வந்தமையால், அதனைத் தொடராமல் தாமாக புகலிடக் கோரிக்கையை திரும்பப் பெற்று, அரச செலவில் திரும்பியதுண்டு. இதன் காரணமாக, வெளிநாட்டவர் இலாகா, ஓர் அறிவித்தல் மூலம், “இங்கு வேலை செய்ய முடியாத காரணத்தால், உங்கள் விருப்பத்தின் பேரில், பொலிஸ் காரியாலத்தில், இலவச விமானப் பயணச் சீட்டையும், கைப் பணமும் வழங்க, உங்கள் பெயரைப் பதிவு செய்யுங்கள்“ என்று, எல்லோரிடமும் அறிவித்தார்கள்! இதற்கிணங்க சிலர், தத்தமது நாடுகளுக்குச் சென்றார்கள்! அவ்வாறு திரும்பிச் சென்றவர்கள், அங்குள்ள ஆபத்தான சூழலைச் சுட்டிக் காட்டி இரண்டாம் முறையாக புகலிடம் கோரினார்கள், வேறு சிலர் வேறு நாடுகளுக்கு சென்றார்கள்!புகலிடத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்

பேர்லின் நகருக்குள் புகலிடம் தேடிய தமிழர்களில் தொண்ணூற்றொன்பது சத வீகிதமானவர்கள்- திருமண மாகாத இளைஞர்களாவர். இவர்களுள், கல்லூரியைவிட்டு வெளியேறியவர்கள், பாடசாலைப் படிப்பை நிறுத்தியவர்கள், வேலை செய்தவர்கள், விவசாயம், வர்த்தகத் துறைகளில் ஈடுபாடுடையவர்கள், இளங் குடும்பஸ்தர்கள் எனப் பல்துறையைச் சேர்ந்தவர்களும் ஒன்றாகவும், சமூக வேற்றுமை என்பன பாராட்டாது, ஒரே குடும்ப உறவினராக, பல்லின மக்களுடனும் புரிந்துணர்வுடன் வாழவேண்டிய தேவை ஏற்பட்டது. சொந்த நாட்டில் பக்கத்து வீட்டவருடன் கூட பேதம் -பிரிவு காட்டி வாழும் பாடம் புகட்டப்பட்டிருந்த பரம்பரையில் வளர்க்கப்பட்டவர்களை, புலப்பெயர்வில் பேணப்படுகின்ற (சமநிலை) வாழ்வியலை உள்வாங்குவது, தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியது-மாற்றப்பட்டது! புலம்பெயர்ந்த பன்னாட்டு மக்கள், நிரந்தர வதிவிட அனுமதி பெற்று குறித்த கால எல்லை கடந்த பின்னரே சட்டப்படி பதிவு செய்த செர்மனிக் குடியுரிமையைப் பெற விண்ணப்பிக்கலாம்.

கட்டங்கட்டமாகவே நிரந்தர வேலை செய்யும் உரிமை இங்கு கிடைக்கும். முதலில் குறுகிய நேர வேலை (இருப்பதாக உறுதிப் படுத்திய பின்னர்) அவ் வேலை செய்யும் அனுமதி, முதலில் வரையறுக்கப்பட்ட காலம்(வதிவிட அனுமதி உள்ள காலம் வரை) நீடிக்கப்படும். பின்னர், மாற்றமில்லாத நிரந்தர அனுமதி(Aufenthahaltbereichtigung) வதிவிட அனுமதி(Aufenthahalterlaubinis) இருப்பின் கால வரையறை அற்ற நிரந்தர வேலை அனுமதி(open work permit) கிடைக்கப்பெறுவர்.

ஜேர்மன் மொழியில் குறித்த தர அறிவும், நன்நடத்தையும் கொண்டவர்கள, எத்தகைய சமூக நல உதவி பெறாதவர்கள், தங்குமிடம்- நிரந்தர வதிவிடம் என சான்றுகளுடன், ஜேர்மன் பிரசையாகக் கோரி விண்ணப்பித்தால் ஜேர்மனிய பிரசைக்குரிய சகல உரிமைகளையும் பெற்று வாழத் தகுதி பெறுவர்! ஆயினும் இன்றும், தாய்த் தமிழகத்தில், புகலிடம் தேடிச் சென்ற நம்மவர்கள் எத்தகைய உரிமை, வசதி, தகுதி எதுவும் கிடைக்காது ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், மேலை நாடுகளில் மேன்மை பெற்று வாழ்வதென்றால், அதற்கு இங்குள்ள மக்களின் மனிதநேயம் காரணியன்றோ?


(நினைவு துளிகள் சொட்டும்....)

No comments:

Post a Comment