Sunday 16 August 2009

கதைச் சரம் - 9 பெப்சியும் யேசுவும்!


கதைச் சரம் - 9
செவிவழிக் கதை - 7
பெப்சியும் யேசுவும்

அந்தப் பிரெஞ்சுக்காரச் சிறுவன் இந்த விடுமுறைக்கு மிகவும் பழமையான கிராமத்துக்குச் சென்றிருந்தான். இவனுக்கு பெப்சி என்றால் வாயூறும். பெப்சி குடிக்காத மதிய உணவென்பது அவனுக்குக் கிடைத்ததே இல்லை. பெறறோரும் அவனது விருப்புக் கேற்றவாறே நடப்பது வழக்கம்.

ஆனால் விடுமுறைக்கு வந்த கிராமத்தில் பெப்சி கிடைக்கவில்லை. இதைப் பெற்றோர் எடுத்துக்கூறியும் அவனால் நம்பவே முடியவில்லை. கிடைக்காத பெப்சி என்றதும் பெப்சி மீது இன்னும் அதிக நாட்டம் கூடியது. இதனால் அவ்வூரிலுள்ள கடைக்கு இவனே சென்று பெப்சி கேட்டான். கடைக்கார் பெப்சி இங்கு கிடையாது என்று சொல்லிவிட்டார். சிறுவனோ விட்டபாடில்லை, அடுத்த நாளும் கடைக்காரனிடம் போய்க் கேட்டான். அவரும் இல்லை என்று சொல்லி அனுப்பிவிட்டார். இது இப்பயே வாடிக்கையாகி ஓவ்வொரு நாளும் காலையில் சிறுவன் வருவதும் பெப்சி கேட்பதுமான நிலையைக் கண்டு கடைக்காரன் கோவத்துக்குள்ளானான்.

"தம்பி இனிமேல் நீ இங்கு பெப்சி கேட்டு கடைக்கு வந்தாயானால் நடப்பதே வேறு!" என்று கடுமையாகச் சொல்லிவிடுகிறான்.

பெப்சி மேல் தீராத தாகமுடைய சிறுவன் கடைக்காரனின் எச்சரிக்கையை சட்டைசெய்யவில்லை. அடுத்த நாளும் செல்கிறான். கடைக்காரன் இந்த முறை ஏதுமே பேசவில்லை. சிறுவனைப் பிடித்து சிலுவையில் கட்டிவிடுகிறான். இதைச் சற்றும் எதிபாராத சிறுவன் என்ன செய்வதென்று தெரியாமல் அங்குமிங்கும் பார்க்கிறான். காலை நேரமாகையால் சன நடமாட்டம் இல்லாது வீதி வெறிச்சோடியிருந்தது. தெருவின் அடுத்த பக்கத்தில் சிலுவையில் யேசு அறையப்பட்ட பெரிய சின்னம் அந்தச் சந்தியிலிருந்ததை அவனால் இப்போதுதான் உணர்வுபூர்வமாகப் பார்க்க முடிந்தது. அதில் இலயித்துப் போனவனாகி,

"யேசுவே! ஐயகோ!! நீருமா பெப்சிக்காக சிலுவையில் ஏற்றப்பட்டீர்!!" அவன் வாய்விட்டே கேட்டுவிட்டான்.


- முகிலன்
பாரீசு ஓகஸ்ட் 2009
(கோடை விடுமுறைப் பிரயாணத்தின்போது பல்வேறு பகிடிக் கதைகளை பரஸ்பரம் சொல்லிச் செல்கையில், வாகனத்தின் பின் இருக்கையிலிருந்த பிரான்சில் பிறந்து வளரும் 12 வயது எனது இளையமகன் சொன்ன கதை இது)

No comments:

Post a Comment