Sunday 23 August 2009

சரம் - 17 "கோயிலுக்கு யார் போவார்கள்?"


சரம் - 17 "கோயிலுக்கு யார் போவார்கள்?"

எனது தந்தையார் ஆசிரியப் பணியில் இருந்த போதும், வீட்டில் சோதிடம் கணித்து எழுதுபவராகவும் இருந்ததால் எங்களது வீட்டுக்கு புதியவர்கள் அதுவும் படித்தவர்கள், அதிகாரிகள், வணிகர்கள் எனப் பலர் அடிக்கடி வந்து போவது வழக்கம். அப்போது பதின்ம வயதுப் பிராயத்திலிருந்த எனக்கு இது புரியவதே இல்லை. மாலையில் என்னை விளையாடப் போகவிடாமல் சாதகக் குறிப்புக் கணிப்பதைக் கற்றுக்கொள்ளும்படி வற்புறுத்துவார். நானும் திமிறிக் கொண்டிருப்பேன். சிலசமயம் அவருடன் இணைந்து வேலையும் செய்வதாகவும் போனதுண்டு.

இப்படியாக ஒருநாள், அப்பாவிடம் எனக்கு எழுந்த கேள்வியை முன்வைத்தேன்.
"அப்பா!, ஏன் ஆக்கள் சோதிடம் கணித்து சாதகம் பார்க்க வருகிறார்கள்?" எனது நீண்ட நாள் கேள்வியைக் கேட்டுவிட்டேன்.

அப்பா பதிலுக்கு என்னிடம் வேறு கேள்வியை முன்வைத்தார்...
"வைத்தியரிடம் யார் போவார்கள்?"

"நோயாளிகள்..." இது என்ன கேள்வியென்ற அலட்சியத்துடன்

"காவல் நிலையத்திற்கு யார் போவார்கள்?" அப்பாவும் விடாமல்

"குற்றச் செயல்களுடன் தொடர்புள்ளவர்கள்" இப்போது அப்பாவை ஆச்சரியமாகப் பார்க்கிறேன்.

"அப்புக்காத்திடம் (லோயர்) யார் போவார்கள்?"

"வழக்காடுபவர்கள்..." என்றேன் ஆவலுடன்...

"இப்படியே யோசித்துப்பார்.... சோதிடரிடம் யார் போவார்கள்? என்பது தெரியவரும்" என்றார் புன்முறுவலுடன்

எனது மண்டையில் எதுவும் சரியாகக் கிடைக்வில்லை.... அப்பாவை அண்ணாந்து பார்க்கிறேன். என்னிலையைப் புரிந்தவராகித் தொடர்கிறார்..

"தம்பி! மனித மனங்கள் பற்றி நிறையவே முதலில் அறிய வேண்டும். நிறையவே வாசிக்கவேண்டும். முடிவெடுக்க முடியாது தடுமாறும், தன்னம்பிக்கை குறைந்தவர்கள், தோல்விகளால் மனம் நொந்தவர்கள்தான் சாதகம் பார்க்க வருவார்கள்"

எனக்குக் கொஞ்சம் புரிவது மாதிரி இருந்தது. ஆவலுடன் அப்பாவைப் பார்க்கிறேன்.

"சாதகம் என்றால் என்ன தெரியுமா?" வினவினார் அப்பா.

"தெரியாது.... " என்கிறேன்.

"இங்கு பார் தமிழ் ஆழமான மொழி. 'சாதகமாக நடந்து கொள்' என்றால் என்னவென்று புரியுதா?" என்றவாறு என்னைப் பார்க்கிறார்.

"ஓ!! நன்றாகப் புரியுது." எனது முகத்தில் பிரகாசம் இருந்திருக்க வேண்டும்.

"நிலையை உணர்ந்து சாதகமாகச் செயற்படும் உத்தியை வழங்குவதுதான் 'சாதகம் பார்த்தலுக்கான' பணி" என்று சொல்லியவாறு தொடர்கிறார், "தம்பி! சோதிடரிடம் வரும் இந்தத் தன்னம்பிக்கை குறைவானவர்களுக்கு மிகுந்த மனவுறுதி கிடைக்குமாறு அறிவுறுத்தி, எதிர்காலச் செயற்பாடுகளை ஆர்வத்துடன் செய்யத்தூண்டும் கலைதான் சோதிடக் கலை."

அழகாகப் பாடம் கற்ற திருப்பியுடன் எனது கருமங்களில் மூழ்கினேன். கொஞ்சம் காலம் கடந்த பின்னர் எனக்கு அப்பரின் பாணியில் ஒரு கேள்வி எழுந்தது....
"கோயிலுக்கு யார் போவார்கள்?" பதிலை உங்கள் தேடலுக்கு விட்டுவிடுகிறேன்.

- முகிலன்
பாரீஸ் ஓகஸ்ட் 2009

No comments:

Post a Comment