Friday, 14 August 2009

செய்திச் சரம் 4 'இருக்கிறம்' சஞ்சிகைசெய்திச் சரம் - 4
கொழும்பிலிருந்து மாதமிருமுறை வெளிவரும் இலங்கைத் தமிழ்ச் சஞசிகை
'இருக்கிறம்'

கொழும்பிலிருந்து மாதம் இரு இதழாக வெளிவந்து கொணடிருப்பதான 'இருக்கிறம்' சஞ்சிகையின் ஒரு பிரதியை இந்தக் கோடை விடுமுறையின் போது எனது நண்பர் வீட்டில் காணக்கிடைத்தது. அது காத்திருப்பு : 3 - இருக்கை : 6 ஒரு பொல்லாப்புமில்லை 01.04.2009 எனப் பதியப்பட்ட அட்டையில் ஏ ஆர் ரகுமான் புன்சிரிப்போடிருந்த இதழ். அட்டையில் 'நான் கடவுள்' பதிவும் உள்ளிருப்பதான கட்டியமும் காணக் கிடைத்தது. மூன்று வருடங்களின் பின்னரே என் கைக்கெட்டிய இதழைக் குற்றவுணர்வுடன் புரட்டினேன்.

இலேசான மென் வாசிப்புத் தளத்தில், அழகான வடிவமைப்புடன், குங்குமம் - ஆனந்தவிகடன் அளவில் அதே சாயலில் கொழும்பிலிருந்து புதியதான தமிழ்ச் சஞ்சிகை. இன்று இலங்கைத் தமிழன் மூலத்தொடர் முகவரி தொலைத்தவனாகி ஆணிவேர் பிடுங்கப்பட்டவனாகி உலகெங்கும் விரவிக்கிடக்கும் அவலத்துக்கான குற்றத்தை தார்மீக ரீதியில் சுமக்கும் அதிகூடிய அதிகார மையத்தைக் கொண்ட கொழும்பிலிருந்து ஒரு தமிழ்ச் சஞ்சிகை. நம்பச் சிரமமாகவே இருந்தது.
நகைச்சுவைத் துணுக்குகளும், அருமையாக கார்ட்டூன்களும், கவிஞர் திமிலைத் துமிலன், வ.ஐ.ச ஜெயபாலன், அக்ஷயா போன்றோரின் தொடர்களுமாக பல்வேறு தகவல்களுடன் பக்கங்களைக் கவனமாகவே புரட்டமுடிந்தது.

'இருக்கிறம்' நேர்த்தியாக வெளிவரக் கடுமையாகப் பாடுபடுகிறது. உழைப்பு வீண்போகாது!
பாரீசு வந்ததும் நம் கலாச்சார விற்பனை மையமாகத் திகழும் 'லாச் சப்பல்' சென்று 'இருக்கிறம்' வினவுகிறேன். கிடைக்கவில்லை. ஒரு கடைக்காரர் மட்டும் சொன்னார், "உங்களுக்குத் தேவையாயின் எடுப்பிக்கிறேன்" என்று. நான் ஏதும் பேசவில்லை. 'உன் குற்றமா? என் குற்றமா?..... யாரை நானும் குற்றம் சொல்ல?' என்ற பாடல் முன் கடையில் இத்தருணத்தில் ஏனோ ஒலித்துக் கொண்டிருந்தது.

சென்ற நூற்றாண்டு வரை ஈழத் தமிழனாக அறியப்பட்டவன் தற்போது, பல்தேச பன்மொழிகளுடனான உறவுபூண்டவனாகி புதிய பரிமாணம் அடைந்துவிட்டான். எண்பதுகளின் பின் பூமிப் பந்தெங்கிலும் விரவி வீசப்பட்டவனாகியவன் இப்ப வாரிசுகளுடன் பூகோளத் தமிழனாகிவிட்டான். இவனுக்கு பூமி சிறுத்துவிட்டது. 'இருக்கிறம்' இந்தப் புதிய விசாலமான பரப்பின் வீச்சைக் கவனம் கொண்டால் உலகெங்கும் பயணிக்கும் சஞ்சிகையாகும்.

நான் கண்ட இந்த சஞ்சிகையில் இடம்பெற்றிருந்த ஆசிரியர் தலையங்கம் என் மண்டையில் இப்போதும் ரீங்காரமிடுகிறது. இதை மீளவும் பதிவிடுகிறேன்.

****************
நோயிருத்தல்

வணக்கம் வாசக நெஞ்சங்களே!
நோய் பற்றிக் கொஞ்சம் பேசவேண்டி இருக்கிறது. நோய் என்று வந்துவிட்டால் தீர்க்க வேண்டியதே தவிர பேசவேண்டிய விடயமல்லவே என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. நோயைச் சரிவர உணர்ந்து கொண்ட நோயாளிகளும் நோய்த் தோற்றுவாய்க்கான சரியான வாயை அறிந்து வைத்தியம் செய்யத் தயாராய் வருகிற வைத்தியனும் சந்திக்காதபோது நோயைப் பேசலாமே தவிர, வேறெதுவும் செய்ய முடியவில்லை.

இருக்கட்டும் வாருங்கள் கொஞ்சம் நோய் பற்றிப் பேசலாம். நாம் பார்க்கும் இந்த நோய் விரைவில் தீர்க்கக்கூடிய ஒன்றல்ல. முதற்காரணம் நோய்வாய்ப்பட்டவர்களில் ஒரு சாரார் தமது இருப்பே இந்த நோயில்தான் இருக்கிறதென்று நம்புகிறார்கள். இரண்டாம் காரணம் சரிவர வைத்தியம் தெரிந்த வைத்தியனை நாம் இன்னும் இனம் காணவில்லை. இதுவரை வந்துபோன வைத்தியர்களிடம் இந்த நோயைத் தீர்த்திருக்கலாமே என்று கேட்பீர்கள்.

இதே கேள்வியோடு அல்லலுறும் நோயாளியைப் பார்த்தேன். உபாதைதரும் தன் நோயையும் மறந்து சிரிக்கிறான். எனக்குத் புரியவில்லை, உங்களில் யாருக்கேனும் புரிகிறதா என்று தெரியவில்லை. ஆனால் பொதுமறை தந்த வள்ளுவனுக்குப் புரிந்திருக்கிறது.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

இ.தயானந்தா - இருக்கிறம்

*****************
பின்னிணைப்பு :
இணைய வலை உலாத்தலில் காணுற்ற சில 'இருக்கிறம்'


"இருக்கிறம்" சஞ்சிகை (15-02-09)

உண்மையான கலையுழைப்பைச் செலுத்தும் கலைஞரை ஊக்குவிக்காதவரை, நசிவுப்பண்டங்களை ஒதுக்கி தரமான படைப்புக்கள் வருவதை உறுதிப்படுத்தாதவரை, ஆபாசப்பண்டங்கள் உண்மையன கலைப்படைப்புக்களை ஒதுக்கிதள்ளும் நிலையை மாற்ற முடியாதவரை, படைப்பொன்றின் மொத்த பயனும் படைப்பாளிக்கும், மக்களுக்கும் ஆரோக்கியமான முறையில் பகிர்ந்தளிக்கப்படாதவரை எந்தவொரு காப்புரிமையும், புலமைச்சொத்துரிமையும் பெரு முதலாளிகளின் உரிமைகளாக மட்டுமே இருக்கும்.

நன்றி : "ம்.."

http://mauran.blogspot.com/2009/03/drm.html

00000000

"இருக்கிறம்"

வெற்றிகரமான ஒரு தமிழ் சஞ்சிகையாக கொழும்பிலிருந்து மாதம் இருமுறை வெளிவந்துகொண்டிருக்கும் இருக்கிறம் தற்பொழுது வடக்கு, கிழக்கு, மலையக பிரதேசங்களிலும் தன்னை விஸ்தரித்துள்ளது. இதுவரை 34 இதழ்களைத் தாண்டி பயணித்துக்கொண்டிருக்கும் இருக்கிறம் சஞ்சிகையின் வெற்றிப் பயணத்தில் நீங்களும் இணைந்துகொள்ளுங்கள்.

Contact - T.P - 0602150836
Fax : 011 2585190

Office:
ஈகோ பப்ளிசிங் ஹவுஸ் (பிறைவேற்) லிமிட்டட்

03, டொரிங்டன் அவன்யு, கொழும்பு - 07

நன்றி : http://te-in.facebook.com/group.php?gid=32791766180

000000000

கவிஞர் இளையதம்பி தயானந்தாவை ஆசிரியராகவும் (பெண்ணிலைவாதி) சாந்தி சச்சிதானந்தனை நிர்வாக ஆசிரியராகவும் கொண்டு வெளிவரும் இச்சஞ்சிகை ஆங்காங்கு கவித்துவச் சாயலோடும் பெண்ணிலைக் கருத்துக்கள் இடைக்கிடை தூவப்பட்டதாயும் விளங்குவதில் வியப்பில்லை.

"இருக்கிறம்' என்பது வெறும் அர்த்தமில்லாத இருப்பாக இருந்துவிடக்கூடாது என்பதில் மேற்குறித்த இரு ஆசிரியர்களும் கவனமாக இருக்கிறார்கள் என்பதை இதன் உள்ளடக்கங்கள் புலப்படுத்துகின்றன.

வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமன்றி, தரமான வாசகர் குழாத்தை உருவாக்கும் நோக்கிலும் ஆக்கங்கள் சேர்க்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. அவை வாசகர்களின் சிந்தனையைத் தூண்டுபவையாக விளங்குவதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி : http://www.kalaikesari.com/culture/culturenews/view.asp?key_c=Book+launch&offset=33

1 comment:

  1. இருக்கிறம் இதழ் ஆரம்பத்தில் இருந்தே காத்திரமான பங்களிப்பை செய்துவருகின்றது. பதிவுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete