Thursday 13 April 2017

நூல் அறிமுகம் : அது எங்கட காலம் (கானாப் பிரப

செய்திச் சரம் 33
நூல் அறிமுகம் :

அது எங்கட காலம்




அறிமுகம் நூல்  -
‘மடத்துவாசல் ‘ வெளியீடு
« அது எங்கட காலம் »
(நனவிடை தோய்தல் தொகுப்பு நூல்) – புலம்பெயர்வினால் பிறந்து வளர்ந்த ஊரைவிட்டு அவுஸ்ரேலியாவில் புகலிடம்பெற்ற வாழ்வில் ஆழ்மனதில் பதிந்த சம்பவங்களையும் அதோடான பயணங்களையம் புனைவில்லாது வெளிப்படுத்தும் பதிவுகள்.)
தொடர்பு : kanapraba@gmail.com

"அது எங்கட காலம்" பிறந்த கதை :
« ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக "மடத்துவாசல் பிள்ளையாரடி" என்ற வலைப்பதிவினூடாக கடந்த 11 வருடங்களாக எழுதிய பதிவுகளில் தேர்ந்தெடுத்த 21 கட்டுரைகளை வைத்து நூலாக்க வேண்டும், அந்தப் பதிவுகளில் இடம் பிடித்த இறந்து போனவர்களும் இன்னும் வாழ்பவர்களுமான எங்களூர் மனிதர்களோடு வாழ்ந்தவர்கள் முன்னால் இந்த நூலை வெளியிட வேண்டும் என்ற அவா என்னுள் இருந்தது. » எனப் பதிவுசெய்கிறார்.



அது எங்கட காலம்


(நனவிடை தோய்தல் தொகுப்பு நூல்) – புலம்பெயர்வினால் பிறந்து வளர்ந்த ஊரைவிட்டு அவுஸ்ரேலியாவில் புகலிடம்பெற்ற வாழ்வில் ஆழ்மனதில் பதிந்த சம்பவங்களையும் அதோடான பயணங்களையம் புனைவில்லாது வெளிப்படுத்தும் பதிவுகள்.
தொடர்பு : kanapraba@gmail.com
000
(மடத்துவாசல் பதிப்பகம் என்னும் அவரது பதிப்பகம் வழியாய் இரண்டாவது நூலாகவும், அவருடைய மூன்றாவது படைப்பாகவும் வெளிவந்திருக்கிறது.)

மடத்துவாசல் பதிப்பகம் பெப்பரவரி 2017
  விலை 300 இலங்கை ரூபாக்கள்
 00000 000000 000000

அன்றைய ஈழத்தமிழர்களில் ஒருவர் இன்றைய புலம்பெயர் தமிழராக அவுஸ்ரேலியா நாட்டில் படர விழையும் நினைவோடைப் பதிவுகள்


-   (அவுஸ்ரேலியப் புலம்பெயர் தமிழன்)
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
« என் பதின்ம வயதுகளில் மடத்துவாசல் பிள்ளையரடியில் தோழர்களோடு வாழ்ந்து தொலைத்த நினைவுகளை இன்றைய நிஜங்களோடு இரைமீட்கின்றேன். »

இவரோடு ஒரு பயணம் -

கானா பிரபாவின் "மடத்து வாசல் பிள்ளையாரடி" தளத்திற்கு வந்ததற்கு முதல்ல என்ர நன்றிகள். பதின்ம வயதுகளின் விளிம்பில் இணுவில் மடத்து வாசல் பிள்ளையாரடியில் பின்னேரம் முதல் சாமம் தெரியாமல், கூட்டாளிமாருடன் அரட்டையும், சண்டையும், பிள்ளையாரடிப்பொங்கலும், காதல் கதைகளுமாகக் கழிந்த நாட்களின் நினைவுகளோட
இயந்திரமான, எங்கேயோ ஓடிக்கொண்டு,நட்புக்கும் விலைபோடும் இந்த வெளிநாட்டில மீண்டும் என்னைப் புதுப்பிக்க, என்ர மனசைப் பாதிச்ச, காயப்படுத்திய, ஒத்தடம் தந்த நினைவுகளை இதில பதியிறன், பாருங்கோ

அது எங்கட காலம் (நூல்)
00000
இலங்கையின் அரச அதிகார இயந்திரத்தின் பேரினவாத நெருக்குதலினால் புவயெங்கும் விரவியவர்களாகி ‘கனவு சுமக்கும்’ புகலிடமும் - பூர்வீகமுமான வாழ்வில் புத்தம்புதிய வாழ்வனுபவங்களுடன் வாழ்பவர்கள் முதல் தலைமுறைப் புலம்பெயர் தமிழர்கள். தாங்கள் வாழத் தலைப்பட்டுள்ள புகலிடங்களில் தம்மால் விட்டுச் செல்லவுள்ள தொடரும் தலைமுறைகளது மூலத் தொடர்புகள் பற்றிய மயக்கங்களுக்கும் தேடல்களுக்கும் எதைத்தான் விட்டுச் செல்லப்போகிறோம் ? தார்மீக அழுத்தம் சுமக்கும் பயணங்களை எழுத்துகளாலும் பண்பாட்டு அரங்குகளாலும் பதிவு செய்தவாறே தம்மைத்தாமே ஆசுவாசப்படுத்துகிறார்கள்.
மானிட வாழ்வில் விடலைப் பருவம் – இளைஞர்களாவதற்கு முன்னரான பதின்ம வயதுப்பிராயம் என்பது தமக்கான மனத்தை கட்டமைத்துக் கொள்ளும் மறக்கவே முடியாதொரு காலகட்டமாகும். இந்த வயதிலமையும் சுயவிருப்புடனான தேடல்களும் – ஆர்வமிகுதியுடனான செயற்பாட்டு உந்துதல்களும் பொதுவாக எதிர்கால வாழ்வுக்கான இலட்சிய நோக்கை இயல்பாகவே கட்டமைத்துவிடுவதாக சமூகவியலாளர்கள் கூறுவார்கள். ஒருவரது ‘ஆளுமைகள்’ தமக்குள் தாமே உருவகமாகி அவரவரது மனங்களை உந்தியெழுப்பும் செயலூக்கத்தை விருப்புடன் பெற்றுக் கொள்ளும் காலகட்டம் இது. நம்மில் பலருக்கு இக்காலகட்டம் மத்திய பள்ளிகள் மற்றும் உயர்கற்கை நிறுவனங்களில் கடந்து செல்லுவதாகவே அமைந்துவிடுகின்றன. ‘உன்னை நீ அறி’ எனும் கற்கைத் தத்துவம்தானே கல்வி. இதைத்தான் கண்ணதாசன் தனது பாடல் வரிகளில் (படம் : வேட்டைக்காரன்)
உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
(உன்னை)
என அழுத்திப் பாடவைத்துள்ளார்.
தாம் கற்பனையே செய்திராத தேசங்களில் – புதிய மொழி மற்றும் பண்பாட்டுச் சூழல்களில்  சிதறுண்டு விழுந்த விதைகளாக ஈழத்தமிழர்களது புலம்பெயர் முதல் தலைமுறையினரை நோக்க முடியும். தம்மைத்தாமே தகவமைத்தவாறு எதிர்காலத்தை நோக்கியும் – தாம் உருவான மானிடப் பாசவலைகளினால் பின்னப்பட்ட உறவுகள் சுற்றத்தார் நட்புகளையும் இணைத்தவாறு ‘பெரும் பொதிசுமக்கும்’ பார வண்டியை இழுப்பவர்களாகவே இவர்களை வாழ்வைக் கரிசனையுடன் நோக்க முடியும். பெரும்பாலானவர்கள் தமக்காக மட்டுமல்லாது தாம் சார்ந்தவர்களது தேவைகளுக்குமாகவே தமது வாழ்வைப் பணையமிட்டுள்ளார்கள்.
தமது பதின்ம வயது வாழ்வியல் நேசிப்புகளினால் கட்டமைக்கப்பட்ட செயலாக்க மீள்நினைவுகளது ஒன்றித்தலாகவே புலம்பெயர் நாடுகளெங்கும் உருவாகிய பழைய மாணவர் சங்கங்களையும் – ஊர்ச் சங்கங்களையும்  - இதனோடான விளையாட்டு மற்றும் பொதுச் சேவைச் சங்கங்களையும் புதிய புலம்பெயர்வுத் தடங்களில் நோக்கமுடியும்.
கானாப் பிரபா ‘மடத்துவாசல் பிள்ளையாரடி’ நினைவுகள் சுமந்த பதிவுகளை இணையவலைகளில் பகிர்ந்து தற்போது நூலாக்கித் தந்துள்ளார். இது புனைவுப் பகிவுகள் அல்ல. அவரது வாழ்வனுபவத் துண்டின் எழுத்து வடிவ வாக்கு மூலம். இது ஓர் ஆவணம்.
இது ஒரு முன்மாதிரியான முன்னெடுக்கை. புலம்பெயர்ந்த வாழ்வினைத் தொடரும் பலருக்கும் தத்தமது அனுபவப் பொக்கிசங்கள் கொண்ட வாழ்வுப் பதிவுகள் கொட்டிக் கிடக்கின்றன. இந்நூலின் வருகை இத்தகைய எழுத்தூக்கத்தை உந்திச் செல்லுமாயின் தமிழர்களது வாழ்வுப் பயணத்தில் பெறுமதியான அனுபவ ஆவணங்கள் கிடைக்கும். இவை எதிகாலத் தலைமுறையினர்க்கும் சமூக ஆய்வாளர்களுக்கும் சான்றாதாரங்களாக அமையும்.
கானாப் பிரபா எனும் முகமறியாத இணையத் தொடர்பூடக நண்பனது  வாழ்வுத் தடத்தின் துண்டமொன்று எழுத்தாவணமாக வாசிக்கக் கிடைத்தது. அவரது எழுத்தின் பரிவதிர்வலைகள் எனது பதின்ம வாழ்வின் நினைவுகளையும் மீட்டி அழைத்துச் செல்கிறது. இதை வாசிப்பவர்களையும் அழைத்துச் செல்லும்.
2005இல் வலைப் பதிவராக ஆரம்பித்து இணையவலைகளுடாகவும் சமூகவலைத் தளங்களூடாகவும் வானொலியூடாகவும் சிறப்பான தொடர்பாடல்களையுடைய சிறந்த நண்பர், மானுட நேசிப்பாளர் கானாப் பிரபா. தனக்கேயான விபரணச் சொல்லியாக யாழ் மண்ணின் வட்டாரச் சொற்களில் இந்தத் தொகுப்பு வெளிவந்துள்ளது. நூலின் தலைப்பும் வட்டார மொழியாக ‘அது எங்கட காலம்’ எனவாகவே அமைந்திருக்கிறது. இந்த நூலின் அச்சேற்றலையும் வெளியீட்டையும் தமது மண்ணிலேயே நிகழ்த்தியும் பெருமைப் பட்டிருக்கிறார் கானாப் பிரபா. இதில் 21 தலைப்புகளில் அனுபவங்கள் தொகுப்பாகிப் பதியப்பட்டுள்ளன.  

இத்தகைய நூல்கள் உலகத் தமிழர்களது கவனத்தைப் பெற்று பரவலான வாசிப்புக் செல்ல வேண்டும். தனித்துவமான பண்பாட்டுத் தொன்மத் தொடரையுள்ள ஈழத் தமிழர்கள் பற்றிய புரிதல்களுக்கு இவை உறுதுணையாக இருக்கும்.
‘வாசிகசாலைகள் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் !’ எனும் விருதுவாக்கியத்தை உயர்த்திப் பிடிப்பவர்களில் நானுமொருவன். (கவனிக்க ‘வாசிகசாலைகள் – பன்மை) இவரது தொகுப்பிலமைந்த வாசிகசாலைகளது பதிவை இதில் பதிவிட்டு மகிழ்கிறேன்.
00000
அன்றைய கானாப் பிரபாவும் அவரது சைக்கிளும் - நினைவு தளும்பும் வீட்டு முகப்பில்


கட்டுரைகள் வெளிவந்த இணையவலைப் பதிவு : மடத்துவாசல் பிள்ளையாரடி
இதில் ஒரு பானை சோற்றுக்குள் ஒரு பருக்கையாக « எங்கட ஊர் வாசிகசாலைகள் » எனும் பதிவை இணைக்கிறேன். http://www.madathuvaasal.com/2006/06/blog-post.html



எங்கட ஊர் வாசிகசாலைகள்

எங்கட ஊர்களுக்கே இருக்கிற ஒரு தனித்துவமான விசயம் இந்த வாசிகசாலைகள். ஊருக்கு ஊர் குறைஞ்சது ஒரு வைரவர்கோயில் இருப்பது போல இந்த வாசிகசாலைகளும் விதிவிலக்கல்ல . என்ர சிறு வயசு வாழ்க்கையில் ஒன்றிப் போன சில வாசிகசாலைகள் நினைவுக்கு வருகுது இப்ப.

கே.கே.எஸ் றோட்டிலகோண்டாவில் உப்புமடப் பிள்ளையார் கோயில் தாண்டினாப் பிறகு வருவது தான் மக்கள் முன்னேற்றக்கழகம் . நல்ல பெயர் வைச்சுத் தொடங்கின இந்த வாசிகசாலை வெறும் பேப்பர் படிக்கும் இடமாகத் தான் கனகாலம் இருந்ததுரீ.வீயும் வீடியோவும் முதன் முதலில யாழ்ப்பாணம் வரேக்க(அதைப் பற்றி ஒரு பெரியகதை சொல்ல இருக்குஇந்த வாசிகசாலைகள் தான் மக்களுக்கு அவற்றைக் கொண்டுபோய்ச் சேர்த்தவை. 80 களின் ஆரம்ப காலங்களில் ஒவ்வொரு வாசிகசாலையிலும் வச்சு விடியவிடியப் படம் காட்டினவைதலைக்கு அஞ்சு ரூபா எண்டு நினைக்கிறன்.
ஒரு நாள் உந்த வாசிகசாலைப் பெடியள் மக்கள் முன்னேற்றக்கழகத்திற்கு முகப்பில இருக்கும் கே .கே.எஸ் றோட்டுக்கு அங்காலை உள்ள பற்றைக் காணியை நல்லாச் சுத்தம் பண்ணிட்றக்டரில கொண்டு வந்த குருமணல் பறிச்சு கிழுவந்தடிப் பொட்டுக்குள்ளால நுளைவாயில் விட்டுச் சாமம் சாமமாய்ப் படம் போட்டவை.
போட்ட படங்களில "அண்ணன் ஒரு கோயில்மட்டும் ஞாபகத்தில இருக்குஅந்தப் படத்தில வரும் "நாலுபக்கம் வேடருண்டுபாட்டு கனநாள் என்ர ஞாபகத்தில இருந்ததுஅந்தப் பாட்டுக்கட்டத்தில பொலிஸ் துரத்தத் துரத்த "ஏன் உவன் சிவாசியும்சுயாதாவும் பத்தைகளுக்குள்ளால ஓடி ஒளியினம்?" என்று எனக்கு நானே கேட்ட விபரம் புரியாத வயசு அது . எனக்குத் தெரிஞ்சு இந்த மக்கள் முன்னேற்றக் கழகம் செய்த பெரிய வேலை உந்த வீடியோப்படம் காட்டினதுதான்
உத விட இன்னுமொரு விளையாட்டும் நடந்தது. பெரிய ஸ்கிறீனைக் கொண்டு வந்து வாசிகசாலை முகப்பில வச்சு படறீல் பெட்டியால மலேரியா, வாந்திபேதி வகையறா சுகாதார விழிப்புணர்வுப் படங்கள் போடுவினம். செக்ஸ் படம் ஓடுதடா எண்டு பெடியள் சொல்லுவாங்கள். சனத்துக்கு விழிப்புணர்வு வருகுதோ இல்லையோ விடுப்புப் பாக்கிறதுக்கு எண்டு ஊர்முழுக்க இருந்து வந்து குந்தி இருப்பினம்.
அந்தக் காலத்தில வாசிகசாலைக்குப் பின்னேரம் போல வந்து பார்க்கோணும்நீங்கள்,
பற்மின்ரன் ஆடுற பெடியள் ஒருபக்கம்குமுதம், பேசும் படத்தில நடிகை ராதாவைத் தேடுறவை ஒருபக்கம்,
"
உவன் சே யார்செயவர்த்தனா என்ன சொல்லுறான்என்ற முனைப்போட கொடுக்குக்குள்ள சுருட்டை வச்சுக் கக்கினபடி தினபதிப் பேப்பரை நோட்டம் போடுற வயசாளியள் ஒருபக்கம்ஸ்ரைலுக்காக சண் ஆங்கிலப் பேப்பர் பார்க்கிற லோங்க்ஸ் போட்ட மாமாமார் ஒருபக்கம் எண்டு வாசிகசாலையே நிறைஞ்சிருக்கும்ஒரு தினப்பத்திரிகையின்ர ஒவ்வொரு பக்கமும்தனித்தனியா ஒவ்வொரு ஆளிட்ட இருக்கும்ஆக்களின்ர முகங்களைப் பேப்பர் தான் மறைச்சிருக்கும். வாசிகசாலைச் சுவரில மில்க்வைற் அச்சடிச்ச "வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான்" எண்ட வாசகமும் அமைதி பேணவும் எண்ட அன்புக்கட்டளையும் இருக்கும்.
80 களின் ஆரம்பத்தில் என்ர அண்ணரும் கூட்டாளிமாரும் உறுப்பினராக உந்த வாசிகசாலையில் இருந்தவை. 83 இல தின்னவேலிச்சந்தியிலை வச்சுப் பொலிஸ்காரருக்கு விழுந்த அடியோட, அவங்களும் சுடுதண்ணி குடிச்ச நாயள் போல கண்ட நிண்ட பெடியளையும் றோட்டில கண்டா அடிக்கிறதும், மறியலுக்குக் கொண்டுபோவதுமாக மாறிவிட்டது எங்கட யாழ்ப்பாணம். ஒருநாள் மக்கள் முன்னேற்றக் கழகத்தின்ர முகப்பில அண்ணராக்கள் நிற்கேக்க ஜீப்பில இருந்து பொலிஸ்காரன்கள் துவக்கால சுட்டுக்கொண்டுவந்தவன்கள். அதோட சரி, அண்ணரும் கூட்டாளிமாரும், மெதுமெதுவாக வெளிநாட்டுக்குப் பறந்துவிட மக்கள் முன்னேற்றக்கழகமும் கவனிப்பார் இன்றிப் போனது.
பிறகு அடுத்த தலைமுறை இளவட்டங்கள் வந்து மக்கள் முன்னேற்றக் கழக ஆட்சியைப் பிடிச்சினம்சரஸ்வதி பூசை நேரங்களில அவல்சுண்டல் படைக்கிறதும் , காளிகோயில் சுவாமி கே.கே.எஸ் றோட்டால வரேக்க பொங்கல் பொங்கிப் படைக்கிறதும்ஈழநாடு , ஈழமுரசு பேப்பர் போடுவதுமாகத் தங்கட பங்கையும் செய்தினம்.
கிட்டத்தட்ட இதே மாதிரித் தான் தாவடி பரமானந்த வாசிகசாலையும் இருந்தது.என்ர அப்பாவின்ர ஊர் எண்ட உரிமையில அடிக்கடி அந்த வாசிகசாலைக்கும் நான் செல்வதுண்டுபரமானந்த வாசிகசாலைதாவடிப் பிள்ளையார் கோயிலுக்குப் பக்கத்தில இருந்த பிரமாண்டமான வாசிகசாலைஅந்த வாசிகசாலைப் பெடியள் நல்ல முனைப்பாக இருந்து அந்த வாசிகசாலையில் ஒரு நூல் நிலையத்தையும் ,முகப்பில இருந்த கோவில் வீதியில வச்சு ஒரு பற்மின்ரன் கோட் ஐயும் வச்சுப் பராமரிச்சவைவாசிகசாலைக்குப் பக்கத்தில ஒரு பெரிய கலையரங்கும் இருக்கிறது . முந்தி நடிகவேள் வைரமுத்துவின்ர சத்தியவான் சாவித்திரி நாடகம் ஒருமுறை தாவடிப் பிள்ளையார் பூங்காவன நாளில நடந்தது ஞாபகமிருக்குது.
இணுவில் சந்திக்குப் பக்கத்தால கந்தசாமி கோயில் போற வழியிலவெங்காயச் சங்கம் இருந்ததுஅதுக்குப் பின் வளவில ஒரு சின்ன வாசிகசாலை இருந்தது . 1987ஆம் ஆண்டு அந்த வாசிகசாலையில இருந்த பெடியள் ஒருநூலகத்தை ஆரம்பிச்சினம். 1987 ஆம் ஆண்டு இந்தியன் ஆமிச் சண்டை நடக்கிறதுக்கு முதல் கிழமை தான் ஒரு புத்தகத்தை இரவல் எடுத்திருந்தன்.மகாத்மா காந்தியின்ர வாழ்க்கையில நடந்த நிகழ்வுகளைப் போட்டோக்களோட வெளியிட்ட பெரிய ஒரு புத்தகம் அது.இந்தியன் ஆமிச் சண்டைக்காலத்தில கோயில் அகதிமுகாமில் இருக்கேக்கையும் வச்சிருந்து அதை வாசிச்சனான்.
ஒருமாதிரி இந்தியன் ஆமிச் சண்டை ஓய்ஞ்சுபோன நேரத்தில அந்த நூலகம் நடத்தின பெடியனைக் கண்டுபிடிச்சுப் புத்தகத்தைக் கொடுத்தேன். ஒரு மாதிரி வியப்போட பார்த்துவிட்டு வாங்கித் தன் சைக்கிள் கரியரில் வச்சுக்கொண்டு போனான். என்னவோ தெரியேல்ல எங்கட ஊர்களுக்கும் நூலகத்துக்கும் வெகுதூரம் போல. அந்தச் சின்ன நூலகமும் பாதியில செத்துப்போனது.
.எல் பரீட்சைக்குப் படிக்கிற காலத்தில தொந்தரவில்லாமல் படிக்க நான் தேர்ந்தெடுத்தது சுன்னாகம் நூலகம்எங்கட ஊர்களுக்குள்ளேயே பெரிய நூலகம் அது . அங்கிருந்து படிப்பவர்களுக்குத் தனியாகவும்தினப்பத்திரிகை பார்ப்போருக்குத் தனியாகவும்நூல்களுக்குத் தனிக் களஞ்சியமாகவும் எண்டு வெள்ளைச்சுண்ணாம்பு நிறத்தில அடுக்குமாடிக் கட்டிடத்தில இருந்த அரசாங்க நூலகம் அது . எங்கட கிராமத்து வாசிகசாலைகள் எதோ ஏழை போலவும்தான் பெரிய பணக்காரன் போல சுன்னாகம் நூலகம் பாவனை பிடிப்பது போலத் தோன்றும் . தினத் தந்திஜீனியர் போஸ்ட் போன்ற இந்தியப் பத்திரிகைகளும் வருவதுண்டுபடிக்கப் போற சாட்டில செம்பருத்தி படத்தில பிரசாந்துக்கு யார் ஜோடி எண்டு தேடினதுதான் மிச்சம் .

கொக்குவிலில் வளர்மதி சனசமூக நிலையம் எண்டு ஒண்டிருக்குஅந்த வாசிகசாலை இளைஞர்கள் "உள்ளம்எண்ட சஞ்சிகையையும் வெளியிட்டவை .நல்ல தரமான கதைகட்டுரைகளையும்நல்ல முகப்போவியங்களை அட்டைப் படமாகவும் கொண்டு அந்தக் காலத்தில அழகாக வந்துகொண்டிருந்தது உள்ளம் .அதுக்கும் பின்னாளிலை இருதய நோய் கண்டுவிட்டது.
மருதனார் மடச்சந்தியில இருந்த வாசிகசாலை உள்ளூராட்சி சபைக்குச் சொந்தமானதுசந்தைக்குப் பக்கத்தில இருந்த இந்த வாசிகசாலையில ஒப்புக்குச் சில பத்திரிகைகளும் , சந்தையில் நைய்ந்து போன கறிச்சாமான் போல சில நாவல்களும் இருந்தனஎனக்கு வேற வழி கிடைக்காத நேரத்தில இந்த வாசிகசாலைக்கும் போவதுண்டு .
வாசிகசாலைகள் தவிர இருக்கும் நூலகங்கள் இளைஞர்களின்ர மேற்பார்வையில்லாமஅரசாங்கச் சம்பளத்துக்கு வேலைபார்க்கும் ஊழியரைக்கொண்டவைஅப்பிடிருந்த நல்லூர் நூலகத்துக்கும் , நாச்சிமார் கோயிலடி நூலகத்துக்கும் நான் அடிக்கடி போவதுண்டுஆனால் பிரச்சனை என்னவெண்டால்புத்தகம் இரவல் தரமாட்டினம் . அந்த நூலகங்கள் அந்தப் பிரதேசமக்களுக்கு மட்டும் சொந்தமானவையாம்வெளியாட்கள் எண்டால் அதிக பணம் கொடுத்து உறுப்பினர் ஆகவேணுமாம் .
இணுவில் சிவகாமி அம்மன் கோயிலுக்குப் பின்னால சிவகாமசுந்தரி சனசமூகநிலையம் எண்டு ஒரு வாசிகசாலை இருக்குதுபுறாக்கூடு போல சரியான சின்னன் அது. 93 ஆம் ஆண்டு கோயில் திருவிழாக் காலத்தில அந்த வாசிகசாலைக்குப் பொறுப்பா இருந்த பெடியள் ஆரம்பவகுப்புப் படிக்கிற பிள்ளையளுக்கு ஒரு சைவசமயப் பரீட்சையை வச்சுப் பரிசெல்லாம் கொடுத்தாங்கள் .
மடத்துவாசல் பிள்ளையாரடிக்குப் பக்கத்தில இருந்த சைவப்பிரகாச வித்தியாசாலையின் முகப்பு அறையில கொஞ்சநாள் ஒரு வாசிகசாலை இருந்தது.இந்தியன் ஆமிச் சண்டைக்குப் பிறகு அதுவும் போட்டுது . பொறுப்பா இருந்த தயா அண்ணை கனடாவிலையாம்.
90 ஆம் ஆண்டு வாக்கில எங்கட மடத்துவாசல் பிள்ளையாரடிப் பெடியளும் கோயில்முகப்புப் பக்கமா உள்ள டிஸ்பென்சறிக்கு அருகில இருந்த கடையில ஒண்டைத் திருத்திப், புத்தகம் எல்லாம் போட்டு இணுவில் பொதுநூலகம் எண்டு தொடங்கினவை.கலாநிதி சபா ஜெயராசா, செங்கை ஆழியான் உட்படப் பல பிரபலங்கள் வந்து அந்த நூலகத்தைத் திறந்தது இப்பவும் கண்ணுக்குள்ள நிக்கிது. அதுவும் 95 ஆம் ஆண்டு சந்திரிகாவின்ர சண்டை தொடங்கினாப் பிறகு மூடுவிழாக் கண்டது.
போனவருஷம் ஊருக்குப் போனபோது இணுவில் பொது நூலகம் இப்ப டிஸ்பென்சறியா இருந்த கட்டிடத்தில இயங்குது. நூலகம், சின்னப் பிள்ளையளுக்குப் பூங்கா, பிள்ளைப் பராமரிப்பு, சைவ சமயப் போட்டிகள் என்று இந்த வாசிகசாலை நிறையவே செய்யுது. வெளிநாட்டுக்காரரும் நல்லா உதவி செய்யினமாம்.
தட்டாதெருச் சந்தியில ஒரு வாசிகசாலை இருந்ததுநல்லூர்த் திருவிழா நேரத்தில கே.கே.எஸ் றோட்டை மேவி ஒரு பெரிய தண்ணீர்ப் பந்தல் வச்சு கலாதியா இருக்கும் அது . இந்த வருஷம் நான் ஊருக்குப் போனபோது பார்த்தேன்வாசிகசாலை இடிபாடுகளுக்குள்ள புதர் மண்டிக்கிடக்குதுபக்கத்தில ஆமிகாறன் சென்றி போட்டிருக்கிறான் .


இண்டைக்கு ஒரு அறைக்குள்ள இருந்து இன்ரநெற் பார்த்துத் புதினம் அறிவது எண்டு உலகம் சுருங்கிவிட்டதுஆனால் இந்த வாசிகசாலைகளின் செயற்பாடுகள் பரந்துபட்டவை . ஒரு ஊருக்குத் தேவையான அறிவுக்கண்ணாக அவை இருப்பதோடு காலத்தின் தேவை கருதிச் செயற்படும் ஒரு சமூக முன்னேற்ற அமைப்பாகவும் அவை இருக்கின்றன . ஆனாலும் இந்த ஈழத்தமிழினத்தின் நிச்சயமற்ற வாழ்க்கை முறை தான் எங்களூர் வாசிகசாலைகளுக்கும் வாய்த்திருக்கின்றது.

இந்த வாசிகசாலைகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்து இளைஞர்களின் நிலைக்களனாக இருந்திருக்கின்றன . ஒவ்வொரு காலகட்டத்திலும் காற்சட்டை போட்ட ஒரு புதிய தலைமுறை இதைத் தாங்கிப்பிடிக்கக் காத்திருக்கும்யுத்தம் என்ற புயல் அடிக்கும் போது பொட்டிழந்து போகும் பாவை போலச் சிதைந்து போகும் இந்த வாசிகசாலைகள் . ஆனால் இன்னொரு தலைமுறை வந்து இதைப் பூச்சூட்டி அலங்கரித்து அழகு பார்க்கும் அடுத்த யுகம் தொடங்கும்.
0000


ஒரு புத்தகத்தில் வரும் இடம், ஆட்கள் அப்படியே மாற்றப்படாது எழுதப்பட்டு அந்த ஊரிலேயே நூல் வெளியீடு கண்ட புதுமையையை நிகழ்த்திக் காட்டியாகி விட்டது.
"அம்மா! புத்தகம் எப்பிடி இருக்கு ?" – கானாப் பிரபா
"வாசிச்ச சனம் சிரிச்சுக் கொண்டு கேட்டவை 
எப்பிடி உவனுக்கு ஞாபக மறதி இல்லாமல்
எல்லாத்தையும் எழுத முடிஞ்சது" – அவரது அம்மா
 00000 000000 000000


மடத்துவாசல் பதிப்பகம் என்னும் அவரது பதிப்பகம் வழியாய் இரண்டாவது நூலாகவும், அவருடைய மூன்றாவது படைப்பாகவும் வெளிவந்திருக்கிறது.
மடத்துவாசல் பதிப்பகம் பெப்பரவரி 2017
– இலங்கை  விலை 300 இலங்கை ரூபாக்கள்
வெளியீட்டு நிகழ்வு : 21.03.2017 இணுவில் வாசிகசாலை மண்டபம்




பின்னிணைப்பு :
1.   இவரது இணைய வலைப்பதிவு பற்றிய இவரது பகிர்வு :-

Wednesday, December 05, 2007
வலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று – கானா பிரபா
இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பதிவுகளையாவது "மடத்துவாசல் பிள்ளையாரடி" தளத்தில் இட்டு வருகின்றேன். நான் வலை பதிய வந்த காலத்து நினைவுகளைக் கடந்த ஆண்டு நிறைவுப் பதிவில் நினைவு மீட்டியிருந்தேன்.
மடத்துவாசல் பிள்ளையாரடி தவிர்ந்து,
என் பயணப் பதிவுகளுக்காக உலாத்தல்
ஒலி மற்றும் இசைக்காக றேடியோஸ்பதி
வீடியோ காட்சித் தொகுப்புக்காக வீடியோஸ்பதி
அவுஸ்திரேலிய நடப்புக்கள் குறித்த கூட்டு வலைப்பதிவு
பாடகி பி.சுசீலாவிற்கான கூட்டு வலைப்பதிவான இசையரசி
என்றும் வலைப்பதிவுகளைக் கட்டி மேய்க்கின்றேன் ;-)
தற்போது தனியாக ஒரு தளமாக கானா பிரபா பக்கங்கள் என்ற திரட்டியையும் ஆரம்பித்திருக்கின்றேன்.

நுழைக :
2.   இவரது முந்தைய இரு நூல்கள்
2.1  கம்போடியா : இந்தியத் தொன்மங்களை நோக்கி (பயணக் கட்டுரை)

2.2  பாலித் தீவு (பாலித்தீவுப் பயணப் குறிப்பு)


இவரது நூல்கள் பற்றி நண்பர் லோகநாதன் பாலகிருஷ்ணன் Lohanathan Balakrishnan அவர்களது குறிப்பு :-

« நான் கம்போடியா பயணம் செல்ல மிகவும் தூண்டுதலாக இருந்தது திரு. கானா பிரபா அவர்களின் உலாத்து இணையதளம். அவரின் எழுத்து நடை என்னை மிகவும் கவர்ந்தது. கானா பிரபா அவர்கள் எழுதிய இரண்டு நூல்களை ஆஸ்திரேலியா வில் இருந்து எனக்கு அன்பளிப்பாக அனுபியுள்ளார். மிக்க நன்றி கானா பிரபா. நண்பர் கானா பிரபா அவர்களின்  பாலித்தீவு நூல் மிக சிறந்த பயண நூல்களில் ஒன்று. நான் 2013 இல் பாலி தீவிருக்கு சென்றேன். ஆனால் இபொழுது அவரது நூலை படிக்காமல் சென்று விட்டனே என்று வருந்துகிறேன். » 

3.   இவரது இணைய வானொலி :-
சிறப்பு இசைத் தொகுப்புகள்

பதிவிடல் : முகிலன் 13.04.2017
பாரீசு பிரான்சு