Wednesday 5 April 2017

ஆவி – பிசாசு - பேய் (Devil - Diable) - என்ன பேய்க் கதை ?

குஞ்சரம் 27


ஆவி – பிசாசு - பேய்

  (Devil - Diable)

என்ன பேய்க் கதை ?


நீண்டு விரியும் புலம்பெயர்வு வாழ்வின் நீட்சிப் பயணத்தில்  எமை உலுக்கியெடுக்கும் தருணங்கள் அவ்வப்போது விளாச நாம் ‘பேயறைந்தவர்களாக’ மலைத்து வாயடைத்துப் போகத்தானே செய்கிறோம் ?
ஏனிந்த நிலை ?
'வசதிகளும் – வாய்ப்புகளும் நிறைந்த முதலாம் உலகத்தில் அதுவும் தகவல் தொழில் நுட்ப நுகர்வை உள்ளங்கைகளுக்குள் சுருட்டியவாறு பயணிக்கும் வேளையில்  - இருபத்தியொராம் நூற்றாண்டிலா நாம் வாழ்கிறோம் ?’ என நம்மை நாமே உலுக்கும் கேள்வியால் துவண்டு போகும் நிலையை அவ்வப்போது தந்தவாறே வாழ்வு அசைந்து செல்கிறது.
அன்றொருநாள் புலம்பெயர்வு வாழ்வின் ‘சடங்கு’ நிகழ்வொன்றுக்கு குடும்பமாகச் சென்றிருந்தோம்.. இது மறைந்தவர்களை நினைவுகொள்ளும் ஒரு சடங்கு நிகழ்வு.
இங்கு நன்மையோ - தீமையோ வார இறுதி நாட்களான சனி அல்லது ஞாயிறு நாட்களில்தான்  அதற்கான ஒன்றுகூடல்களை நம்மவர்களால் செய்ய முடிகிறது. பல்வேறு தேசங்களிலிருந்து வருகைதரும் உறவுகளும் நட்புகளும் இத்தகைய விடுமுறை நாட்களில்தானே சந்திக்கவும் முடிகிறது.
இத்தகைய சந்திப்புகளில் உணவு உண்டபின் கிடைக்கும் பொழுது மிகவும் முக்கியமானது. இவை ஒருவரையொருவர் காண அரிதாகக் கிடைக்கும் தருணங்கள். முகம் பார்த்த உரையாடல்களையும் பல்வேறு தரப்பட்டவர்களது எண்ணங்களையும் கேட்கும் வாய்ப்பைத் தரும் தருணங்கள் இவை. 
நமது புலம்பெயர்வு வாழ்வின் நீட்சி குடும்பங்களில் பெரியவர்கள் - நடுத்தரத்தினர் - இளைஞர்கள் - சிறார்கள் என சிறு சிறு வளைங்களாக தனித் தனிக் கோளங்களாக (குழுக்களாக – gangs) தமக்குள் உரையாடி உறையும் – சந்திக்கும் நிலையைத் தந்த வண்ணம் பயணிக்கிறது. இந்த உறவாடலை இத்தகைய பொதுச் சந்திப்புத் தருணங்கள் வெளிப்படையாகவே புலப்படுத்தும். தத்தமக்குள்ளாகவே இறுகியவாறு சுழலும் கோள்களான இந்தக் குழுக்கள் 1. சிறார்கள் 2. இளைஞர்கள் 3. பெண்கள் 4. ஆண்கள் 5. வயோதிபர் எனவாக அமைந்துவிடும்.
தவிரவும் பிறிதொரு வகையினர் இரு பிரிவுகளாகவும் சந்தி பிரிப்பர் : 1. மதுக் குழு – 2. மது அருந்தாக் குழு.
உணவு வழங்கல் கூட வேறுபட்டதாய் இத்தகைய குழு நிலையை அங்கீகரித்தவையாகவே பகிரப்படும். பெயருக்குத்தான் ஒன்றிணைவாக இருக்குமே தவிர ஓர் ‘ஒன்றித்தல் அரங்கு’ நடைபெறுவதே கிடையாது.
மாறுபட்ட வயதினர் – தலைமுறையினர் – வெவ்வேறு புலங்களில் வாழ்வோர் – ஏற்றத் தாழ்வு கொண்டோர் என பலரும் சந்திக்கும் - உரையாடும் சங்கமிப்புத் தருணங்கள் மானிட வாழ்தலில் பெறுமதி மிக்கவை. இங்கு நடைபெறும் உரையாடல்களில் சரளமாகவே எண்ணங்கள் பகிரப்படவும் - அறிந்திடவும் தேடலுந்துதலுக்கும் தள்ளிவிடுவதும் உண்டு.
நினைவேந்தல் நிகழ்வாக இருந்ததாலோ அல்லது ‘டோரா’ படம் வெளிவந்திருந்ததாலோ என்னவோ அன்றைய சந்திப்பில் இடம் பிடித்திருந்தது ‘ஆவி’ – ‘பேய்’. சும்மா சொல்லக்கூடாது 'டோராவில்' இரும்பிலான காரையே பேயாக்கி விட்டார்கள்.
சோர்ந்திருந்த எனது முகம் மலைப்போடு நிமர்ந்தது. எனக்கோ ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது. எனது துணைவியாரின் கண்களிலிருந்து ‘மூச்சுக்காட்டக் கூடாது – வாயை இறுக மூடியவாறு பொத்திக்கொண்டிரும் !’  மின்காந்த அதிர்வு அலைகள் கட்டளையாக வந்தடைந்தது. எத்தகைய சந்திப்புகளிலும் யார் சுயமாகப் பேசினாலும் மாறுபடும் எனது எண்ணங்களை நான் வெளிப்படையாகவே முன் வைப்பது வழக்கம்.

இதனால் வழக்கமான எனக்கான தொடர்பாடல்களில் இத்தகைய நம்பிக்கையாளர்களை நான் சந்திப்பதும் உரையாடுவதும் அரிதிலும் அரிது.
« இறக்கும்போது ஓர் உலுக்கல் ஏற்பட்டுத்தான் ‘ஆவி’ கிளம்பிப் போகும். » தன்னால் உணரப்பட்டதைப் போல் முழுமையான நம்பிக்கையுடன் சொன்னார்  இங்குள்ள பல்கலைக் கழகத்தில் கல்வியைத் தொடரும் பிள்ளைகளின் தந்தையாகிய ஐம்பதைத்தாண்டிய குடும்பத் தலைவர்.
« தங்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்காதபோது ‘ஆவி’ போகவே போகாது. சுற்றிக் கொண்டே இருக்கும். » இது நடுத்தர வயதுடைய பெண்ணொருவர்.
இவர்களது உடல் மொழிகளில் வெளிப்படுத்தும் உடல் மொழியுடன் வார்த்தைகள் சங்கமித்தவாறு இருந்தது ஆச்சரியமாக இருந்தது. பகிடியாகவோ கேலியாகவோ யாரும் கதைக்கவேயில்லை.
« ஓமோம் ! சிலவேளையில் தமக்குப் பிடித்தமானவர்களையும் இந்த ஆவிகள் அழைத்துச் சென்றுவிடும் ! » முதலாவதாகச் சொன்னவர் ஆமோதித்தார்.
« அதுதான்…. ! சில ஆவிகள் தனியாகப் போகவே போகாது. கூடவே துணைக்கும் உரியவர்களை அழைத்துவிடும். » அந்தப் பெண்மணி தனது எண்ணத்தை தனது அசலான நம்பிக்கையுடன்.
சூசகமாக வெளிப்பட்ட கருத்தால் துவண்ட எனக்கு வாய் துறுதுறுத்தது. ஆயினும் பல்லை இறுக்கியவாறு பேசாதிருந்தேன். ‘தான் சொல்வதைக் கேட்பதாக ஒரு சீவன் இருக்கிறதே’ என்று எனது துணைவியாருக்கு பெருத்த சந்தோசம். அடிக்கடி என்னை நோட்டம் விட்டவாறு கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த நினைவேந்தலில் ஞாபகம் கொள்பவர் இறந்து அடுத்தடுத்த மாதம்தான் அவரால் அன்புடன் நேசிக்கப்பட்ட அவரது நண்பனது வாரிசும் இறக்க நேரிட்ட சம்பவம் என் நினைவில் நிழலாடியது.
« சிலருடைய ஆவி இலகுவில் வெளியேறாது…. சேடமிழுத்தவாறு…. தேடிக் கொண்டே இருக்கும். இதற்கு அவர்கள் பெரிதும் ஆசைப்பட்ட பொருட்களை வாயில் வைப்பதும் உண்டு. இப்படித்தான் ஒருமுறை ஊரில் ஒருவரது வாயில் தங்க நகைகளைக் கொண்டு வந்து வைக்க ஆவி  போயிட்டுது ! » இது வேறாரு பெண்ணின் அனுபவப் பகிர்வு.
« ஓமோம் அப்படித்தான்….. ! இதற்குத்தான் அவர்கள் விரும்பிய சாப்பாடுகளை வைத்து எட்டாவது சடங்கில் படைப்பது வழக்கம். இல்லாது விட்டால் ஆவி சுற்றிக் கொண்டேதான் இருக்கும். தண்ணீர் நிரப்பிய சொம்பும் இதுக்காத்தான் வைக்கிறார்கள்.» முதலில் கருத்தைப் பகிர்ந்தவர் மேலும் குறிப்பிட்டார்.
« வருடாந்த நினைவுகூரல்களையும் அவர்களது ஆசைகளை நிறைவேற்றி சரியான சாந்தப்படுத்தலைச் செய்துவிட வேண்டும். இல்லாதுவிட்டால்….. அந்த வருடம் முழுவதும் தொந்தரவுதான்… ! » ஆரம்பத்தில் ஆவிகள் பற்றி உரையாடிய பெண் தெளிவாக முன் வைக்கிறார்.
« வெளியேறிய ஆவி வருடாவருடம் அந்த குறிப்பிட்ட நாளில் இரவு 12க்குத்தான் திரும்பவும் வரும். அது வந்து பார்க்கையில் எல்லாம் சரியாக இருந்தால் ஒரு பிரச்சனையும் வராது ! » முதலாவதாகக் குறிப்பிட்டவர்.
« வாழ்வில் நிறைவாக வாழ்ந்தவர்களது ஆவிகள் இலகுவாகச் சென்றுவிடும். அகாலத்திலும் நிறைவேறாத வாழ்வையும் கொண்டவர்களது ஆவிகள்தான் இப்படியாகச் சுற்றிக் கொண்டிருக்கும் » இதைச் சொன்னவர் வேறொரு நாட்டிலிருந்து வந்திருந்த பெரியவர்.
« இப்படியான ஆவிகள் திரும்பவும் பிறக்கவும் செய்யும் ! »
உண்மையில் ‘பேயடித்தனாக – வாயடைத்துப்’ போனவனாகினேன்.
அந்த வீடு அமைந்திருந்த 17வது மாடியில் செவிகளை உசாராக்கியவாறிருந்த எனது முகம் அதிலிருந்து விலகியவாறு கண்களைச் கூர்மையாக்கியவாறு அகண்ட கண்ணாடிகள் வழியாக தொலைவை நோக்கத் தொடங்கின. பாரீசின் புறநகரில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட கட்டிடங்கள் சிறியவையாகத் தோற்றமளிக்க தொலைவில் குவியமிட்டது எனது பார்வை. தொலைவில் வெள்ளைக் கோட்டை இட்டவாறு மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு சின்னப் பறவை ஊர்ந்து கொண்டிருந்தது.
‘நான் ஏதுமே பேசவில்லை. பேச என்னதான் இருக்கு !’ அந்தக் கூட்டத்திலிருந்த தனித்தவனாகி வேறெங்கோ பயணிக்க ஆரம்பித்தது மனம். என்னைப் புரிந்தவராக  புறப்பட ஆய்தமாகினார் எனது துணைவியார். அனைவரிடமும் சம்பிரதாயபூர்மாக விடைபெற்றவாறு கிளம்பினோம்.
எங்கிருந்தோ வந்தார்கள் அந்த வீட்டின் வாரிசுகளும் சிறார்களும் மகிழ்வோடு ‘ஒவ் றிவுவார் !’(au revoir) சொல்லி வழியனுப்புகிறார்கள்.
au revoir – மீண்டும் சந்திப்போம் (பிரெஞ்சு)
00000

காரில் பயணிக்கிறோம். இன்று என் துணைவியாருக்கு ‘தான் சொன்னவாறு மனுசன் பேசாதிருந்தது’ மிகுந்த மனநிறைவு. சும்மா சொல்லக்கூடாது… துணைவிக்கு பிடித்ததாக நாம் ஒன்றை செய்துவிட்டாலேபோதும் – அவர்கள் பலதை எமக்கு விட்டுக் கொடுத்துவிடுவார்கள். இதை மறைந்த எனது நண்பன் அப்போதே சொல்லியும் இருந்தான். ஆனால் இதை நான் அனுபவத்தில் இயல்பாகப் பெற்றுணர இருபத்தைந்து ஆண்டு இல்லற வாழ்வைத் தாண்டவேண்டியதாயிற்று.
தனியான இழப்புகளை ஒதுக்கிவிடுவோம். எமக்கு முன்னால் நிகழ்ந்த பேரிழப்புகளை எப்படித்தான் புறந்தள்ள முடிகிறது ? 2004 டிசம்பரில் சுனாமியால் அள்ளுண்டு போனவர்களையும், சிறிலங்காவின் பேரினவாத வரலாற்றுக் கறைபடிந்த 2009 மே 18ல் ஒரே நாளில் கதறக் கதற கொலையுண்ட 70000 சீவன்களையும் கொண்ட சமூகத்தின் எச்சங்களாக வாழும் நாம் எதைத்தான் பெற்றுக் கொண்டோம் ? எதை எம்மால் பெறத்தான் முடியும் ? இதனையும் ‘ஆவி’களாக உலாவவிடத்தான் முடியுமா ?
பேய்க் கதையாடலாகவும் – பேயர்களாகவும் வாழும் நம்மவர்களை நினைக்க எனக்குள் நானே சிரிக்கிறேன்.
துணைவி முறைக்கிறார். « என்னது சொல்லிப் போட்டுத்தான் சிரியுமேன் ? » வண்டிப் பயணங்களில் எனது நினைவு மகிழ்தலினால் கவனம் குறைந்து நான் வேறெங்கும் போய்விடுவேன் என்ற பயம் அவருக்கு. இதனால் நீண்ட பயணங்களில்கூட அவர் தூங்குவதே கிடையாது.

000000

0.     பிரான்சு புகலிட வாழ்வில் எனது ஊரைச் சேர்ந்த ஒரு நண்பர் இருக்கிறார். அவர் அன்பும் பாசமும் நேசமும் மிகுந்தவர். அவரது வீட்டிலிருந்து ஏதாயினும் உணவுப் பொருட்களை இரவுவேளையில் எடுத்துவரும் வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் மூன்று முறை துப்பிவிட்டுத்தான் செல்ல வைப்பார். எனக்கோ என்ன சொல்லதென்று தெரியாது முழி பிதுங்கியிருக்கிறேன். அவரது அன்பும் அக்கறையையும் அவ்வேளையில் இலகுவில் புறந்தள்ள முடியாது.

0.    நான் மதிக்கும் முதிர்ச்சியான ஐந்து தலைமுறைகள் கண்ட கலைஞர் ஒருவர் தனது நோயினால் கோமா நிலைக்குச் செல்கிறார். இனி பிழைக்கும் சாத்தியங்கள் குறைவென அனைவருக்கும் தெரிகிறது. இனி என்ன செய்வதென யோசிக்க ஆரம்பிக்கிறோம். இவரது மத ஈடுபாடற்ற கருத்துக் கூற்றின்படியே வாழ்ந்து கொண்டிருப்பவர். ஆனால் வைத்தியர்களதும் மருத்துவ விஞ்ஞான தொழில் நுட்ப அணுகுமுறையாலும் இவர் மீளவும் இயல்பு வாழ்வுக்குத் திரும்புகிறார்.
மீண்டெழுந்தவர் வழமை போலவே துணைவியாருடன் பாரீசில் தமிழர் கலாச்சார விற்பனை நிலையங்கள் கொண்ட ‘லாச் சப்பலு’க்குச் செல்கிறார். அங்கு தற்செயலாக சந்திக்க நேரிட்ட கலையுல நண்பர் « ஐயா ! யமனும் கிங்கிரர்களும் எப்படியாக இருந்தார்கள் ? என்னதான் நடந்தது ? » என்றார் ஆர்வத்துடன். இவர்களைப் பொறுத்தவரையில் ஐயா யமன் உலகத்திற்குச் சென்றே வந்திருக்கிறார்.
« அதுவா ! அது பெரிய கதையடா…. ! அவங்கள் என்னைக் கூட்டிக்கொண்டு யமனிடம் கொண்டு போனாங்கடா அங்கே யமன் என்னைப் பார்த்ததும் ‘இவனை யாரடா இங்க கூட்டி வந்தது !’ என்று முறைத்தானே பார் ஒரு பார்வை. கிங்கிரர்கள் தொடை நடுங்கிவிட்டார்கள். தொடர்ந்த யமன் ‘இவன் இங்கிருந்தால் எல்லோருக்கும் நாடகம் பழக்கி நாடகம் போட்டுக்கொண்டு திரிவான். இங்கு ஒரு வேலையையும் ஒழுங்காகச் செய்யமுடியாது. உடனேயே கொண்டுபோய் விட்டுட்டு வாங்கடா… !’ என்றார் கடுப்புடன். அப்படியே திரும்பிவிட்டேன் !! » என்றார் அமைதியாக.

0.    தென்னாசியக் குக்கிராமமொன்றில் மின்னொளி இல்லாத சூழலில் பிறந்து தவழ்ந்து இன்று முதலாம் உலகில் தொழில்நுட்ப நுகர்வில் திளைப்பவர்கள்தான். ஆனாலும் நம் சிறு பிஞ்சு வயது மனங்களில் விதைத்த ‘பேய் வித்துகள்’ கொஞ்சநஞ்சமல்ல. இருட்டு என்பது எமக்கெல்லாம் ஒருவிதக் கிளர்ச்சியையே தந்திருக்கிறது. இருட்டினூடாக பயணப்படவும் அதனூடாக புலனுணர்வு கொள்ளவும் எமது வாழ்வு நிர்ப்பந்தித்தது. இரவில் தெரிந்த பிம்பங்களும் அசைவும் ஓசைகளும் எமக்கு பயப் பிராந்தியையே வழங்கியும் இருந்தன. இதனால் பெரும்பாலும் இரவு நடமாட்டத்தை தவிர்த்தே வாழ்ந்திருக்கிறோம். எமக்குக் கதைகள் சொல்லிய பலர் ‘பேயை’ நேரில் கண்டதாகக் கூறவவும் இல்லை.
ஆனாலும் இத்தகைய இரவுகளில் துணிந்து நடமாடுபவர்களாக பலர் இருந்திருக்கிறார்கள் என்பதையும் அறிந்தே இருக்கிறோம்.  குறிப்பாக திருடர்கள் - வண்டில்காரர்கள் – வழிப்போக்கர்கள் வாழ்ந்ததை நாம் அறிந்தும் இருக்கிறோம். வெளிச்சம் – குறிப்பாக ‘நெருப்பு இருந்தால் பேய் வராது’ எனக் கேட்டும் இருக்கிறோம். இரவில் கரியும் இரும்புத் துண்டும் கொண்டு போனால் பேய் அண்டாது எனவும் வண்டில்காரர்களின் கதைகள் பலவற்றை கேட்டிருக்கிறோம். இதனால் இரவு வேளைகளில்  சலங்கழிக்க நேர்கையில் வெளிவிறாந்தையில் நின்றவாறு பீச்சியடித்தவர்களாக வாழ்ந்திருக்கிறோம்.

நினைவோடையில் பயணிக்கையில் சிரிப்பே வருகிறது. ஐரோப்பியப் புலம்பெயர்வு வாழ்வில் எம்மோடு வாழும் எமது சந்ததியினருக்கு விஞ்ஞான அறிவுபூர்வமாக அணுகும் - அறிவு புகட்டும் புதிய தடத்திலேயே நாம் பயணிக்க வேண்டும்.

000000
வேப்பமர உச்சியில் நின்னு 
பேயொன்னு ஆடுதுன்னு
 
விளையாடப் போகும்போது
 
சொல்லி வைப்பாங்க-உன்
 
வீரத்தைக் கொழுந்திலேயே
 
கிள்ளி வைப்பாங்க
 
வேலையற்ற வீணர்களின்
 
மூளையற்ற வார்த்தைகளை
 
வேடிக்கையாகக் கூட
 
நம்பி விடாதே-நீ
 
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
 
வெம்பி விடாதே-நீ
 
வெம்பி விடாதே!
- சின்னப்பயலே சின்னப்பயலே 
சேதி கேளடா (சின்னப்)
 
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் – திரைப் படம் : அரசிளங்குமரி[1957] 

00000
மனிதன் இறப்பிற்குப் பின்பு அவனுடைய உடலிலிருந்து பிரிந்து செல்லும் ஆவி, ஆவியுலகம் என்கிற தனிப்பட்ட உலகில் வாழ்கிறது என்கிற நம்பிக்கை சிலரிடம் இருக்கிறது. மனிதன் இறப்பிற்குப் பின்பு அவன் உயிருடன் இருக்கும் போது செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்ப சொர்க்கம், நரகம் போன்றவை கிடைக்கிறது. சொர்க்கம், நரகம் போன்றவற்றில் கிடைக்கும் சுகம் மற்றும் தண்டனைகளை ஆவியுடல் ஏற்றுக் கொள்கிறது. ஆயுட்காலம் முடியாமல் தற்கொலை, விபத்துக்கள் போன்று இடையில் மரணமடைந்தவர்களின் ஆவிகள் பேய், பிசாசுகளாக உலவுகின்றன என்கிற நம்பிக்கையும் இதிலிருக்கின்றன. அதாவது ஆவி என்பது ஒருவர் இறந்த பின்பு அவரின் எதோ ஒரு வகை எச்சம் இருந்து அவர் வசித்த இடங்களில் அலைந்து கொண்டிப்பதான ஒரு வகை நம்பிக்கை. இறப்புக்காலம் வருவதற்கு முன்பாகவே மரணமடைந்தவர்கள் அவர்கள் இறப்புக் காலம் வரும் வரை பேயாக அலைந்து கொண்டிருப்பார்கள் என்கிற நம்பிக்கை இந்தியாவில் பெரும்பான்மையானவர்களிடம் இருந்து வருகிறது. இது ஒரு மூட நம்பிக்கை என்றாலும் ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்களிடையே இது அதிக அளவில் இருக்கிறது.

குறிப்பு : Ghosts exist as a concept only; despite centuries of investigation, there is no credible scientific evidence that any location is inhabited by spirits of the dead
1.    Nickell, Joe. "Scientific Investigation vs. Ghost Hunters". CSI. Committee for Skeptical Iquiry. Retrieved 21 March 2017.
2.   Jump up^ Brian Regal (15 October 2009). Pseudoscience: A Critical Encyclopedia: A Critical Encyclopedia. ABC-CLIO. pp. 77–. ISBN 978-0-313-35508-0.

நன்றி : விக்கிபீடியா https://ta.wikipedia.org/s/6us

000000

முகநூல் பகிர்வில் கிடைத்த தகவல் :

13 hrs · 
சுகவீனமுற்ற உறவினரைப் 'பிடித்த' கெட்ட ஆவியை விரட்ட $101,000 ஐ அறவிட்ட சாத்திரி 'உள்ளே'.
1. சூனியம் செய்தமை
2. மோசடி
3. மிரட்டிப் பணம் பறித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சாத்திரியார் மீது சுமத்தப்பட்டுள்ளன.
கனடாவுக்கு இவர்களைக் கூப்பிட்டு இடம் கொடுத்து வைத்திருப்போருக்கும் இந்தக் கைது ஓர் எச்சரிக்கை.
முப்பது, நாற்பது, ஐம்பதாயிரம் என்று அள்ளிக்கொடுத்துத்
'தகடு' வாங்கிய, வீட்டில் சங்கு புதைத்த
ஏமாந்த சோணகிரிகள் பலர் இதைப்பற்றி வெளியே சொல்லமுன்வரவேண்டும்.
இந்நேரம் பல சாத்திரிகள் பயணச்சீட்டு வாங்கியிருப்பர்.

Devil
From Wikipedia, the free encyclopedia
For other uses, see Devil (disambiguation).

Depiction of the devil as seen in the Codex Gigas.

Angels who follow the Devil are also called devils.[1]Here is a fresco detail from the Rila Monastery, in which demons are depicted as having grotesque images.
The Devil (from Greek: διάβολος or diábolos slanderer or accuser)[2] is, according to Christianity, the primary opponent of God.[1]
Christianity identifies the Devil ("Satan") with the Serpent who tempted Adam and Eve to eat the forbidden fruit, and describes him as a "fallen angel" who terrorizes the world through evil,[1] is the antithesis of Truth,[3] and shall be condemned, together with the fallen angels who follow him, to eternal fire at the Last Judgement.[1]
Islam identifies the Devil ("Shaitan") with all those who oppose Allah.[1]
Some non-Abrahamic religions contain figures similar to the Devil, such as the Buddhist demon Mara[1] and the Zoroastrian spirit Angra Mainyu.

மேலதிக இணைப்பு :
நிறம் – மனிதனின் கட்புலன்
மனிதக் கண்களில் புலப்படாத
1.   அகச் சிவப்புக் கதிர்களைக் (Infrared )கொண்டது இரவு.
2.   புற ஊதாக் கதிர்களைக் (ultraviolet) கொண்டது பகல்.
நிறம் என்பது, ஒரு பொருளினால் வெளிவிடப் படுகின்ற, கடத்தப்படுகின்ற அல்லது தெறிக்கப்படுகின்ற ஒளியின் சேர்க்கையினால் ஏற்படுத்தப்படுகின்ற ஒரு காட்சி விளைவு ஆகும்.

வானவில்.
புவியைப் பொறுத்தவரை சூரியனே ஒளியின் முதன்மையான மூலம் ஆகும். சூரிய ஒளி வெள்ளை நிறமாகக் காணப்பட்டாலும், அது ஏழு நிறங்களின் கலவை ஆகும். இயற்கையில் வானவில் தோன்றும் போது இந்த ஏழு நிறங்களும் பிரிவடைந்து தோன்றுவதைக் காணமுடியும். பட்டகத்தின் ஊடாக வெள்ளொளியைச் செலுத்தி இதே விளைவைப் பெறமுடியும்.
 நன்றி : விக்கி பீடியா மற்றும் கூகிள் இணைய வழங்கி

பதிவிடல் : முகிலன்
பாரீசு 05.04. 2017

No comments:

Post a Comment