Sunday 14 January 2018

உலகமெல்லாம் விரவிய வாழ்வில் ‘தமிழ்’தான் எமக்கான அடையாளம்

தமிழர் திருநாள் 2018 பகிர்வு

உலகமெல்லாம் விரவிய வாழ்வில்
‘தமிழ்’தான் எமக்கான அடையாளம் :
‘வேற்றுமையில் ஒருத்துவம் காணும் தனித்துவநாள்’ – தைப் பொங்கல் நாள் : தமிழர் திருநாள்
'தமிழர் திருநாள்'
வள்ளுவர் ஆண்டு 2049

‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’
‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு’
‘காக்கை கரவா கரந்துண்ணும்..’ எனக் கூட்டமாக கூடி மகிழ்ந்து வாழும் மனித மனத்தின் பிரதிபலிப்பான கூற்றுகளை நாம் நம் முன்னோர் வழிகளில் கேட்டு அனுபவித்த தலைமுறையினர் நாம்.



ஆனால் மனிதர்களை 21வது நூற்றாண்டு உலகமயமாக்கிய கார்ப்பரேட் நிறுவனப் பொருளாதார அடிக் கட்டுமானத்தில் பயணிக்கும் ‘நுகரி’களாக்கிவிட்டிருக்கிறது. இந்தப் பொருளாதார அடித்தளத்தின் நிர்வாக இயந்திரங்களாக ‘அரசு’ப் பொறிமுறை அடக்கமாகிவிட்டது. உலகை அளவிடும்  ஒரே அலகாகிவிட்ட பணத்தை நிர்வகிக்கும் வங்கிப் பொறிமுறையும் இவற்றையெல்லாம் இணைக்கும் உலகளாவிய தொலைத்தொடர்பு வலையமைப்பும் பின்னிய பாதைகளில் புவியின்  நிலம் - நீர்  - காற்றும் அனைத்து உயிரிகளும் கட்டுண்டு போய்யுள்ளன.

21வது நூற்றாண்டு  உழுதுண்ட (சாகுபடி) வாழ்வு (cultivation life) என்ற நிலையிலிருந்து நுகர்வு வாழ்வு (consommation life) ஆக்கிவிட்டிருக்கிறது. இது புவியின் முழுமையான உலகமயமாகிய நிலையை எய்திருக்கிறது. இந்த உலக மயமாகிய உற்பத்தியும் (production - தயாரிப்பு) - விநியோகமும் (distribution) உலகக் காப்பிரேட் நிறுவனங்கள் வசமாகிவிட்டன.  இன்றைய பெரும்பான்மையான மக்கள் நுகர்வோராகவே மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். இன்றைய உலகு சந்தைப்படுத்துவோர் – நுகர்வோர் எனவாகப் பிளவுண்டிருக்கிறது.

உலகம் தழுவிய பெருநிறுவனத் தயாரிப்புகளாகியுள்ள உணவு உற்பத்தி முறைமையும், தொழிற்துறையும், பெரும் வணிக வளாகச் சுற்றுகளுக்குள் நுகர்வோராக ஒருங்கிணைக்கும் நகரமாக்கிய – மாநகரமாக்கிய அடுக்கு மாடித் தொகுப்புகளிலும் அதனையொட்டிய சேரிகளிலும் குவிக்கும் அசைவை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இது தேசங்கள் – பிரதேசங்கள் – பிராந்தியங்கள் கடந்த எல்லையற்ற புலப்பெயர்வுக்கு அகன்றுசெல்ல நிர்ப்பந்திக்கிறது. கல்வி – சுகாதாரம் – மருத்துவம் போன்ற அடிப்படைச் சேவைகளும் சந்தை மைய இலாபநோக்கிலான நிறுவனங்களாக்கப்படுகின்றன. புதியதாகக் கட்டமைக்கப்பட்ட அன்னையர் நாள், தந்தையர் நாள், காதலர் நாள் என மனித உள்ளுணர்வு நிகழ்வுகள் கூட சந்தைகளால் வடிவமைக்கப்பட்ட நுகர்வுக் கலாச்சாரமயமாகியுள்ளது. ஆடம்பர கவர்ச்சியில் திருமண நிகழ்வுகளும் – இறப்பு நிகழ்வுகளும் அடக்கப்பட்டு விட்டன. பண்பாட்டு நிகழ்வுகளும் இத்தகைய சந்தைப்படுத்திய நிகழ்வுகளாகி இயந்திரத்தனமாகிவிட்டன.

வாழ்வுக்கான பணம் தேடி அலைபவர்களாகிவிட்ட மனிதர்கள் வெறும் நுகர்வும் - வாழ்வும் மட்டும் போதுமென்ற நிலையையுடைய உயிரிகள் அல்லவே ! தமது வாழ்தலுக்கான புலப்பெயர்வுகளால் தம் மனவெளியில் சிதையும் ஆழப்பதிந்த பண்பாட்டு அடையாளத் தகவமைப்பில் அலையுற்று கவனம் கொள்கிறார்கள். இது தம்மையொத்த கூட்டத்தினை ஒருங்கிணைத்து மகிழும் நிகழ்வுகளைத் தேடுகிறது.

ஒவ்வொரு தனி மனிதரும் தம்மை அடையாளப்படுத்தும் ‘தான் யார் ?’ என்பதைக் கொண்ட தேடல்களில் தன்னை அறியும் முனைப்புடனே பயணிக்கின்றனர். இதனை தமிழ்ச் சமூகம் உலகளாவிய பரம்பலில் நேரடியாக அனுபவித்து எதிர்கொள்கிறது. இன்றைய ஈழத் தமிழர்களது வாழ்வு ஐந்திணைக் கோட்பாடுகளைக் கடந்த புவியெங்கும் சிதறிப் பரவிய (diaspora) நிலையைப் பெற்றிருக்கிறது. இது புதியதான பண்பாட்டு அடையாள ஒன்றித்தல் முறைமையைத் தேடி உசாவுகிறது. இந்தத் தேடலின் பெறுபேறுகள் பூர்வீகப் பரப்பின் நகர - மாநகரக் குடியேற்றல்களில் பொருத்தப்பாடுடன் இணையக்கூடியதாக அமைகின்றன.

தான் வாழ்ந்த ஐந்திணை மண்ணோடு பல்லுயிரி வாழ்வுடன் இயைந்து வாழ்ந்த நம் மூதாதையினர் கண்டெடுத்த அரிசிப் பண்பாட்டு நிகழ்வு ‘பொங்கல்’ நிகழ்வு. இந்தப் பொங்கலுடனான கூட்டிணைதல் நமது அடையாள ஒருங்கிணைவுக்கான சிறப்புடையதென்பதை சென்ற ஆண்டு தமிழ்நாடு கண்ட ‘காளை எழுச்சி’ கட்டியமிட்டிருக்கிறது.

............................................................................................................................................................
காக்கைச் சிறகினிலே (சனவரி 2018) இதழில் வெளிவந்த ஆக்கம் இது. 
...........................................................................................................................................................................................


இந்தியாவின் தெற்கிலும் இலங்கையின் வட கிழக்கிலும் பூர்வீகமாகத் பல்லாயிரம் ஆண்டு தொடர் வாழ்வைக் கொண்டது தமிழர்களது இருப்பு. இந்த நீண்ட தொடர் பயணத்தில் ஐந்திணைத் தமிழ், சைவத் தமிழ், சமணத் தமிழ், பௌத்தத் தமிழ், இஸ்லாம் தமிழ், கிறிஸ்தவத் தமிழ், இந்துத் தமிழ், பிரதேசத் தமிழ், நவீனத் தமிழ் என விரிவடையும் பன்முகத் தன்மையைக் கொண்டிருக்கிறது. இப்போது புவியெங்கும் பரவிய நீட்சியுடையதாகித் தொடர்கிறது. உலகத் தொடர்பாடல் கருவிகளில் பயன்படுத்தும் வாழும்  உலகமொழியாக ‘தமிழ்’ வழக்கிலுள்ளது.
« உணர்ச்சி வழி நின்று செயல்படுவதை விட அறிவு வழி நின்று செயல்படுவது மொழி வளர்ச்சிக்கு உதவும், திராவிட இயக்கங்கள் உணர்ச்சி வழி மொழியைப் பார்த்ததால், சில பின்னடைவுகள் அதனால் ஏற்பட்டன. இன்றும் சில அமைப்புகள் ஆங்கில, இந்தி எதிர்ப்பில் கவனம் செலுத்துகின்றன. ஒரு மொழி உரிய முறையில் வளர்த்தெடுக்கப்பட்டால் பிறமொழி எதிர்ப்புத் தேவையில்லை. »  எனும் சென்ற நூற்றாண்டில் தமிழில் திறனாய்வுத்துறையை முன்னெடுத்த பேராசிரியர் க. கைலாசபதியின் கூற்றை நாம் கவனம் கொள்ளல் பொருத்தம்.

இங்கு நமக்குள்ளான அரசியல் மதம் சாதிய பிரதேச பிராந்திய தேச வேறுபாடுகளைத் தவிர்த்த ‘தமிழ்’ ஒன்றித்தலென்பதே இன்றைய - எதிர்காலத் தேவையாகும்.

மண்ணோடிணைந்த வாழ்வில் வீட்டு முற்றத்தில் தனித்த ‘தைப் பொங்கல்’ பொருத்தமாக இருந்தது. இன்றைய அடுக்குமாடி இருப்புகளில் நான்கு சுவர்களுக்குள் முற்றமில்லாத வெளியில் அடுப்படிப் பொங்கல் தைப்பொங்கலாகுமா ? மாற்றமொன்றே மாறாதது எனும் இயங்கியல் இயல்பைக் கொண்டதாக நகர – மாநகர வாழ்வைப் பெற்ற புதுமையான கூட்டுப் பொங்கலிடும் முறைமையைக் கண்டடையலாம். இத்தகைய கூட்டு ஒன்றித்தலில் நமக்கான தொன்மமும் தொடர்ச்சியுமான உணவு – உடை – கலை பண்பாட்டு அரங்குகளாக வடிவமைக்கலாம். இத்தகைய சங்கமித்தல்களில் பிற இனக்குழுமங்களை வரவழைத்து எமையும் எமது பண்பாட்டையும் புரியும் களமாக்கி மனித நேயப் புரிந்துணர்வை மேம்படுத்தலாம்.
*********


ஈழத்தமிழர்களாய் 1980களில் புலம்பெயர்ந்து நீட்சியுறும் எமது வாழ்வில், எம் அடுத்த தலைமுறையினர் புலம்பெயர் தமிழராய்- உலகத்தமிழர்களாய் புதிய சந்ததியினராகப் பரிணமிக்கத் தொடங்கியும் விட்டனர். பல்லின, பல்தேசிய மக்களுடன் வாழத் தலைப்பட்டுள்ள புலம்பெயர்வு வாழ்தலின் நீட்சியில் இந்தப் புதிய அடையாள ஒன்றிணைவு அவசியமாகிறது. இதனை மையமிடும் தைப்பொங்கல் பொது நிகழ்வரங்கம் - தமிழால் ஒருத்துவமாகி அரசியல், சாதி, மதம், பிரதேசம், தேசம் மற்றும் அரசியல்- வர்க்க பேதம் கடந்ததாகச் சங்கமிக்கிறது. இது எம்மைப் பற்றிய புரிதலை எம் சந்ததியினருக்கும், இங்கு வாழும் ஏனைய பல்தேசிய, பல்லின மக்களுக்கும் இதமான புரிதலுக்கு வழிசமைக்கிறது.

பிரான்சில் கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாகத் தொடரப்படும் ‘பானை வைத்துப் பொங்கலிடும்’ பொது நிகழ்வரங்கத்தினூடாக, மனித வாழ்வுக்கான அறநூலாகிய திருக்குறளும் திருவள்ளுவரும் முன்னிறுத்தப்பட்டு, தைப்பொங்கல் தமிழர் திருநாளாக புலம்பெயர் திருநாளாக எமக்கான பண்பாட்டு அடையாள நிகழ்வாக ஐரோப்பாவில் அறிமுகமாகியிருக்கிறது. இது எமக்கான பொதுப் பண்பாட்டுக் குறியீடாக, அரசியல், சாதி, மத, பிரதேச, தேசம் போன்ற பேதங்கள் கடந்த காட்சி அரங்காக நிகழ்த்தப்படுகிறது.

எமது தொன்மச் சமூகத்தினர் கண்டடைந்து தொடரும் இயற்கையுடன் இயைந்த மானிட வாழ்வைக் குறித்து - இயற்கைக்கு நன்றி பாராட்டி மகிழும் நன்னாள் பொங்கல் திருநாள்இன்று தேசங்கள் கடந்து -கண்டங்கள் கடந்து - நூற்றாண்டுகள் பல கடந்து தொடரும் சமூக பண்பாட்டு நிகழ்வுத் தொடராக எமையெல்லாம் ஒன்றிணைக்கிறது.

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும் 
வாளது உணர்வார்ப் பெறின். (குறள் 334 - நிலையாமை)
"தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை - தொடர்ச்சியில் உள்ளது"
- இந்தத் தொடர்ச்சியில் தற்போதைய வாழ்வில் நமது பங்கு என்ன? 
- வாழும் தமிழ்தான் எமக்கான தொன்மையும் தொடர்ச்சியுமான தனித்துவ அடையாளம்!!
« யாதும் ஊரே யாவரும் கேளிர் »

'தை பிறந்தால் வழி பிறக்கும்!' என எம்மவர் வாழ்வில் முன்னோர்களால் விட்டுச் சென்ற முதுமொழியின் வழி எம்மவர் வாழ்வுத் தளத்தில் புதிய நம்பிக்கை வாழ்வாதாரம் கிட்டடும்!
நீண்டு செல்லும் தமிழர் வாழ்வில் இயற்கையின் சீற்றத்தாலும் மானிடக் கொடூரங்களாலும் கண்ட அழிவுகள் பலவாயினும் அவற்றையும் கடந்து எதிர்கொண்டு வாழும் நம்பிக்கையூட்டும் நன்னாள் பொங்கல் நாள் !
பழையன கழிந்து புதியன புகட்டும்!
எல்லோருக்கும் இன்பம் பொங்கட்டும்!!
இனிய தைப் பொங்கல் – தமிழர் திருநாள் வாழ்த்துகள் !!
தைப்பொங்கல் - தமிழர்க்கு ஒரு நாள் - இது தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள்!!

000000

பாரீசில் இந்த ஆண்டு 12வது நிகழ்வரங்காக சிலம்புச் சங்கத்தால் முன்னெடுக்கப்படும் 
புலம்பெயர் தமிழர் திருநாள் 2018

000000


-        க.முகுந்தன் (பிரான்சு சிலம்புச் சங்கத்தின் நிறுவனர்) ஐரோப்பியக் கண்டத்தில் பிரான்சில் முதல் தடவையாக பானை வைத்து கூட்டுப்பொங்கலிட்டு தைப்பொங்கலை ‘தமிழர் திருநாள்’ என முன்னெடுத்த சங்கம். இது 12வது நிகழ்வரங்கை பாரீசு பெருநகர மையத்தில் எதிர்வரும் 14.01.2018 அன்று நிகழ்த்துகிறது.
    


     தகவல் முகுந்தன் பாரீசு 14.01.2018