Tuesday 22 September 2009

சுவட்டுச் சரம் 1 - நினைவுத்துளிகள் (15)



சுவட்டுச் சரம் 1
பெர்லின் புலம்பெயர்வு தொடக்க கால நினைவுகள்
நினைவுத்துளிகள் (15)

- குணன்


சென்ற நினைவுத்துளியில் சொட்டிய மதவுணர்வுகளும் நடைமுறைகளுமானதான நம்மவர்களின் நடாத்தைகளைக் கொண்டதாகவிருந்தது. சுயவிமர்சனமும் சுயசிந்தனைத் தெளிவும்தான் மனதைப் பண்படுத்தும் என்பதில் அசையா ஈடுபாடுள்ளவன் நான். சென்ற தொடரின் நீட்சியாகவே இதுவும் அமைகிறது.


மயத்தை முன்னிலையாக வைத்து, கூறப்படும் பாவம், புண்ணியம், விதி, கர்மம், தானம் போன்ற விளக்கங்களும், அதற்கான சமயம் சார்ந்து (எத்தகைய அறிவுசார்நத தெளிவும் அற்று, அன்றி), கூறப்படும் விளக்கங்கள், அக்கால மக்களின் அறிவுக்கு ஏற்றவாறு நம்பக்கூடியவாறும், ஏமாற்றுத்தனமாகவும் புகுத்தப்பட்டதும், ஒரு குறிப்பிட்டவர்களால், நலன் சார்ந்து நடைமுறைப்பட்டதுமேயன்றி வேறொன்றல்ல என்பது தெளிவாகிவிட்டது! இந்துக்கள்- சைவர்கள், வைஸ்ணவர்கள், காணபத்தியம் போன்ற அறுசமயப் பிரிவுகளைக் கொண்டாலும், முரண்பட்ட தத்துவங்கள், வழிபாடுகள் எனக்கூறி, பரந்து பட்ட மக்கள் மத்தியில் பரவியுள்ளது.

மக்களை முடிந்தவரை, தாம் சார்ந்த சமயங்களின் கருத்தாழத்தை எடுத்துக்கூற முடியாத நிலையில், சிந்தனை வளர்ச்சியில்லாது, தம்மால் முடிந்தவரையில் மக்களை தமது பிடிக்குள் வைத்துக் கொள்வதற்காக வேண்டி பிற்போக்கும், அவநம்பிக்கையும் வளர்க்கும் பலவகைச் செயற்பாடுகளில் மதவாதிகளும், அவர்களுக்கு துணை நிற்பவர்களும் காலங்காலமாக சாத்திரம், விதி, தோசம், கர்மம் என்றெல்லாம் பலவாறு கூறி, மத நம்பிக்கை உடையவர்களைக்கூட தன்னம்பிக்கை, முயற்சி, வாழ்க்கைப் பிடிப்பு என அனைத்திலும் சந்தேகங்கொள்ளும்படி மாற்றி விடுகிறார்கள். இதனையே, புலம்பெயர் நாடுகளிலும் பரந்து காண முடிகிறது!

புலம் பெயர்வு தொடங்கிய போதே, “வெளி நாடு செல்லும் வாய்ப்பு“ கைரேகையில் பார்த்துக்கூறிக் கேட்ட கதை பற்றிய அனுபவம் எனக்கு 30 வருடங்களுக்கு முன்பே எனது நண்பனால் கிட்டியது. கிராமங்களில் கைரேகை, மற்றும் திருமணம் போன்ற எண்ணங்களை கிளப்பும் குறவர் கூட்டம் அவ்வப்போது வலம் வருவதெல்லாம் காணமுடிந்ததும், வீடுகளில், தனித்து இருப்பவர்களை ஏமாற்றிவிட்டு கையில் அகப்பட்டவற்றை அப்பிக்கொண்ட கதைகளும் நடந்தேறிய கதைகள் தான்!

இவ்வாறு, நடந்தேறிய சிறிய –மிக மிக- சிறிய, தங்கள் வறுமை காரணமாக நடத்தைகள் பற்றிய செய்திகள் எங்குமே பரவி விடும்! ஆனால், மக்கள் கண்களில், மண்ணைத் தூவி, காயகல்பம், தாயத்து போன்றவற்றின் மூலம் குறை தீர்ப்பதாக பெருந்தொகைச் செலவில் நடந்தேறிய நிகழ்வுகள் புலப்பெயர்வில் இடம் பெற்றதும், இதன் மூலம் ஏமாறிய கதைகளும் ஏராளமாகவே 'அந்தக் குறவர்கள்' இங்கில்லாத போதிலும் நடந்துள்ளன.

இலங்கை வாழ் தமிழ்மக்களின் தாய்மொழி தமிழ் ஆகும். அம்மொழி உலகின் வாழும் ஆதிப் பழமை வாய்ந்த மொழிகளில் ஒன்றென்பது மிகைப்படும் செயதியுமன்று! தமிழரின் கடவுட் கோட்பாடு யாதென வினவின் அதனை தமிழ்ச் சங்ககால இலக்கிய அறிவுடையவர்கள்-அதுவும், ஆராய்ந்துணர்ந்தால் மட்டுமே அதனை ஒருவாறு தெளிந்துகொள்ள முடியும். இன்று, குறிப்பாக சைவசமயம், தமிழர்களில், பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் சமயம் என்பது தவறான கருத்தல்லவாயினும், உண்மையில், "சைவர்கள் என்பவர் யாவர்?", சைவ சமயத்தை தவறாது, பின்பற்றுபவர் யாவர்? என்ற கேள்விகள் எழத்தான் செய்கின்றன.

தமிழரின் கடவுட்கோட்பாட்டை ஆதிமுதலாக, அதன் தொடக்கம் பற்றி ஆராய்ந்து, தமிழர் மதம் என்ற தலைப்பில் நூல் எழுதிய, அறிஞர் மறை மலை அடிகளார், தனித் தமிழ் இயக்கத்தை தொடக்கியவருமாவார். அவர் 'மதம்' என்ற சொல் கி.பி.3ம் நூற்றாண்டிற்குப் பின்னரே அறிமுகமாகியதென்றும், அதுவும் இன்று குறிப்பிடுவதை போல, கருதப்படவில்லை என்பதையும், ஆதியில் செம்பொருளாகிய ஒளியை இயற்கை வழிபாடகத் தொடங்கப்பட்டிருக்கலாம் என்பதையும் விளக்கியுள்ளார். அத்துடன் ஆதிச் சமயமாகிய சைவ சமயமே காஸ்மீரந்தொட்டு இந்தியா முழுவதும் பரவியிருந்து, திராவிடர்களுடன் போரிட்ட வந்தேறு குடிகளாகிய ஆரியர்கள், தெற்கு நோக்கிப் பரவியதன் விளைவாக, மேலை நாட்டவர்களால் அறிமுகமாகிய, “இந்தோ-ஆரியர்கள்“ எனக் குறிப்பிடப்பட்டார்கள்.

அத்துடன், அவர்களின் கடவுள்களைப் புகுத்தியதுடன், அதற்கும் திராவிட மக்களின் கடவுளருக்கும் உறவுமுறையும் கூறி, புராணங்களைப் படைத்தார்கள். உதாரணமாக, ஸ்கந்தபுராணத்தில் கூறப்படும் சுப்பிரமணியர் வேறு என்றும் கந்தன்- கந்தகழி எனக் கூறப்படுவதும் வேறு எனச் சிறந்த தமிழறிஞர் பேராசிரியர் டாக்டர் சிதம்பரநாத செட்டியார் ஆராய்ச்சி செய்துள்ளார்.

மாணிக்கவாசகர் தனது திருவாசகத்தில்,
“தெய்வ மென்பதோர் சித்தமுண்டாகி, முனிவிலாததோர் பொருளது கருதலும், ஆறு கோடி மாய சக்திகள், வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின, ஆத்தமானர் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும்பினர்……………. விரதமே பரமாக, வேதியருஞ் சரதமாகவே சாத்திரங்காட்டினர் சமய வாதிகள் தத்தம் மதங்களில், அமைவதாக அரற்றி மலைந்தனர்!" (போ.தி.அகவல்)
என்று பாடிய கருத்துக்களில் அறிந்துகொண்டால், பிற சமயங்களினால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய படையெடுப்பு, தமிழரின் சமயம், மொழி, பண்பாடு, இனம், நாடு என எல்லாவற்றையும், விழுங்கியதோடு அந்த ஆக்கிரமிப்பாளர்களே, நமது மீட்பாளர்கள்- வழிகாட்டிகள், என தலைகளில் தூக்கி வைத்ததுடன் எமது மூலகங்கள் எதென அறிய முடியாத அறியாமைக்குள் வீழந்துள்ளோம். இதை வெளிச்சம் போட்டு, வெற்று வேட்டுத் தனங்களில் அல்லாது மாணிக்கத் தமிழில், மனம் நைந்துருகிப் பாடிய அன்றைய நிலைக்கும், இன்றைய நிலைக்கும் என்ன தான் திருத்தம் பெற்றுள்ளோமோ? என்பது செம்பொருளுக்கே விளக்கம் காண்! மாணிக்கவாசகர் மணிமொழி வாசகத்தில், தமிழும் தமிழர் சமயமும் அடைந்த நிலை கண்டே, வரலாற்றுச் செய்தி போல பாடினார்!

ஆனால், இன்றும் இனிவருங் காலத்திலும், இதுபோன்ற உண்மைகள் அறிந்து நேர்செய்யா விட்டால், அதனைப் பதிந்து வைக்கவும், ஏன் படித்து, உள்ளம் பதைக்கவும் கூட முடியாத தலைமுறையினராகத் தான், எதிர்கால வேடிக்கை மனிதனாக தமிழன் இருப்பான்? நீண்ட அரசியல், சமய, பண்பாட்டு ஒடுக்குமுறை வரலாற்றுக்கு உட்படுத்தப்பட்ட காரணங்களின் விளைவாக தங்கள் உண்மைத்தன்மைகளை முழமையாக இழந்தோ, மறந்தோ போன இனமாக, தமிழர்கள் உள்ளார்கள்!

அன்று, வடக்கிலிருந்து வந்து, தமிழ் மன்னர்களை, கைக்குள் போட்டு, சுக போக வசதிகளையும், செல்வாக்கையும் தமதாக்கி, தமிழ், தமிழர் சமயம், தமிழ் மண், ஆட்சியைக் கைப்பற்றியவை புனைவுகள் அன்றி உண்மையாகும்! சைவசமயிகளாகிய நம் முன்னோர்கள், சமண, பௌத்த, வைஸ்ணவ மதங்களுடன் சேர்ந்தவர்களாகிய நிலைக்குள் மாற்றப்படாது.

தனிமுதல் (அரு, உரு அற்ற)ஒண் பொருளாகிய, செம்பொருள் -சிவன் என்ற ஒளியை, “சேயோன்- சிவன்“ என்ற பேதமற்ற இறைவனாக போற்றி வணங்கினர்! இதனை, தொல்காப்பியம் உறுதி படுத்தியுள்ளது. பண்டைய தமிழர் வணக்கம் இயற்கை வயப்பட்டதன்றி, புராண வயப் பட்டிருக்கவில்லை மேலும், முருகன் வேறு- சிவன் வேறு என்ற கருத்து பிறர் வருகையால் புகுந்த ஒன்றாகும்! இது பற்றிக் குறிப்பிடுகையில் மறை மலையடிகள், “கி.பி.முதலாம் நூற்றாண்டின் பின் தமிழ் நாட்டிற்குள் தொகுதி தொகுதியாக, புகுந்தவர்கள், தமிழ் நாட்டில் நிலவிய சிவநெறி பற்றியும், அதனைக் கடைப்பிடித்த சிவநெறி பற்றியும் தெரிந்துகொண்டார்கள்!“ என்றவாறு அறியலாம்.

சைவசமயத்தின் மறுமலர்ச்சிக்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழரின் கல்வி முயற்சிக்கும், ஈழத்திலும், தமிழ் நாட்டிலும், “சைவப் பாட சாலைகளை நிறுவியும், சிறுவர், முதியோர் அனைவருக்கும் சைவ, இலக்கண, வசன நடையில் நூல்களை யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணயிலும், தமிழ் நாட்டில் சென்னையிலும் அச்சுயந்திரசாலைகள் நிறுவியும், தொல்காப்பியம் உட்பட சமய, சங்க, புராண, தமிழ் நிகண்டு என பலவற்றை, ஆய்ந்தறிந்து, பதிப்பித்து வெளியிட்டதுடன், பதிப்புத்துறையில் முன்னோடிகளாகிய தமிழ் தந்த யாழ்ப்பாணம், சிறுப்பிட்டிவாசியும், புதுக்கோட்டை நீதிபதியும் ஆகிய இராவ்பகதூர் சி.வை.தாமோதரம் பிள்ளை, "தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர்" போன்றவர்களுக்கு உந்து சக்தியாக திகழ்ந்தார். "இத்தகைய ஓர் மாபெருந் தமிழ் அறிஞர் அன்றி, வேறு எவரால் தமிழரின் உயிர்த் துடிப்பெனப்படும் திருக்குறள் நூல் பிழையின்றி பதிப்பிக்க முடியும்?" என்றவாறு காலஞ்சென்ற முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் பெர்லின் நகரில் வாழும் தமிழர்களால் 1993ல் நடாத்தப்பட்ட வேளை உரையாடிய போது கூறக் கேட்டது நினைவில் வருகிறது.!

தமிழறிஞர், திருவாரூர் கலியாணசுந்தரமுதலியார் (திரு.வி.க.) தமிழ் நாடு ஈன்ற சிறந்த சைவ- தமிழ்- அறிஞர், தொழிற்சங்க வாதி, பத்திரிகையாளர், சிறந்த மேடைப் பேச்சாளர், திருக்குறள் மீதும், அதன் ஆசிரியர் மீதும் தாழாத பக்தியுடையவர், சிறந்த உரை -பதிப்பாசிரியர். இவரின் தமிழறிவைக் கேட்டு, மயங்கிய ஜேர்மனிய தமிழ் அறிஞர் டாக்டர் பெய்த்தான் என்பவர், இவரை பேர்லின் பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் போராசிரியராக பதவி ஏற்று தமிழ்ச் சுவை பொழியக் கேட்டிருந்தும் மறுத்துவிட்டார் என்பதை அறியவருத்தமாகவே இருந்தது!இவர் தமிழ்ப் பதிப்புத்துறை பற்றிக் குறிப்பிடுகையில், “தமிழ்ப் பதிப்புகத்துறைக்கு கால்கோள் நாட்டியவர் நல்லூர் ஆறுமுக நாவலர், தூண்கள் எழுப்பியவர் தமிழ் தந்த இராவ்பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளை, கூரை இட்டு நிறைவு செய்தவர் தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதையர் அவர்கள்" எனக் குறிப்பிட்டதிலிருந்தே இம் மூவரும் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கு அளப்பரியனவாகுமென்பதை அறுதியிடலாம்.

இவர்கள் மூவரும், முன்னோடிகளாக, தமிழ், சைவம், பதிப்பு ஆகிய முத்துறைகளிலும் முத்திரை பதித்த பெரியார்கள்! ஆயினும் தனித்து நின்று, தமிழ் கற்கும் பொருட்டும், சைவநெறி புகட்டும் பொருட்டும், அன்றைய ஆட்சியாளரின் உதவியின்றி, தாமே பாடசாலைகளை நடாத்தித் தொண்டு புரிந்தவரை 1968ல், தமிழ் நாட்டில், அண்ணா தலைமையில் இடம் பெற்ற தனிநாயகம் அடிகளாரால் தொடங்கப்பட்ட இரண்டாவது தமிழாராய்ச்சி மாநாட்டில், 'ஆறுமுகநாவலருக்கு தகுந்த பெருமை செய்யாது விட்டதன் மூலம், தமிழ் நாடு தன்னையும், தமிழையும் சிறுமை செய்தார்களா?' என ஈழத்தில் குமுறல் எழத்தவறவேயில்லை!

000000000
பின் இணைப்பு:

1. மறைமலை அடிகள் (ஜூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950)
புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர் த்ஹனிச் செம்மொழியாம் தமிழை வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடக்கி தமிழைச் செழுமையாக வளர்த்தவர். பரிதிமாற் கலைஞரும் மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள். சாதிசமய வேறுபாடின்றிப் பொதுமக்களுக்குக் கடவுட்பற்றும், சமயப் பற்றும் உண்டாக்கும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவர். சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் பணியும் செவ்வனே செய்து தமிழர்தம் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றவர்.
1921 ஆம் ஆண்டு தமிழ்நாடு சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் தமிழர்களுக்கென ஒரு தனித்துவமான “ஆண்டு கணக்கு” இருக்கவேண்டும் என எண்ணி, தனித் தமிழ் இயக்கத்தின் திரு மறைமலை அடிகளார் தலமையில் தமிழறிவியலாளர்கள், புலவர்கள், சான்றோர்கள் 500 பேர் ஒன்று கூடி ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் முடிவாக, இயேசு பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்தவர் திருவள்ளுவர் என்றும், அவர் பிறந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தமிழர் “ஆண்டுக் கணக்கு” தொடங்கப்பட வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.
(நன்றி: விக்கி பீடியா)

2. செந்தமிழ்ச் செம்மல் சி. வை. தாமோதரம்பிள்ளை (1832 - 1901)
யாழ்ப்பாணத்தில் பிறந்த அப்பெருந்தகை, தமிழ் நாட்டுக்கு வருகை புரிந்து, தலைசிறந்த தமிழ்த் தொண்டாற்றி, வரலாற்றில் நிலையானதோர் இடமும், நெடிய புகழும் பெற்றார். 'தேசப்பற்றும், சமயப் பற்றும், மொழிப்பற்றும் அற்ற மனிதர் இருந்தென்ன? இறந்தென்ன?' என வினவினார், அப்பெருமகனார். பண்டைக்கால இலக்கியங்களைப் பதிப்பிப்பதைத் தம் வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தார். ஏடுகளைத்தேடி, இரவு பகல் பாராது தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தார். பதிப்புப் பணியில் முன்னோடியாய், பத்திரிகைப்பணியில் முன்மாதிரியாய்த் திகழ்ந்த அப்பெரியார், செந்தமிழ்ச் செம்மல் சி. வை. தாமோதரம்பிள்ளை ஆவார்.

தாமோதரம் பிள்ளை, தமது இருபதாவது வயதிலேயே 'நீதிநெறி விளக்கம்' எனும் நூலை உரையுடன் பதிப்பித்து வெளியிட்டு, அறிஞர்களின் கவனத்தக் கவர்ந்தார். 1868 ஆம் ஆண்டு, தமது முப்பத்தாறாம் வயதில், தொல்காப்பியச் சொல்லகதிகாரத்திற்குச் சேனாவரையர் உரையைப் பதிப்பித்தபோது, நல்லூர் ஆறுமுக நாவலரின் அறிவுரையை ஆதாரமாகக் கொண்டார், தாமோதரம்பிள்ளை. அதனைத் தொடர்ந்து 'வீரசோழியம்', 'திருத்தணிகைப் புராணம்', 'இறையனார் அகப்பொருள்', 'தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை, கலித்தொகை, இலக்கண விளக்கம், சூளாமணி, தொல்காப்பிய எழுத்திகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை ஆகிய பழமையான நூல்களச் செம்மையாகப் பதிப்பித்து, புலமை கொண்ட சான்றோரின் புகழ்க் கைக்கொண்டார் தாமோதரம்பிள்ளை.

பிள்ளைவாளின் பேரார்வமும், பேருழைப்பும் - பேணுவாரற்று நீர்வாய்ப் பட்டும், தீவாய்ப்பட்டும், செல்வாய்ப்பட்டும் அழிந்து வந்த தமிழ் ஏடுகளை, தனிப் பெரும் பழைய இலக்கியங்களைத் தமிழ் மக்களுக்கு அரிய சொத்துகளாக்கின. எடுக்கும்போதே ஓரம் ஓடியும்; கட்டை அவிழ்க்கும் போதே இதழ் முறியும். புரட்டும் போதே திண்டு துண்டாய்ப் பறக்கும். இன்னும் எழுத்துக்களோ வாலும் தலையுமின்றி நாலுபுறமும் பாணக்கலப்பை உழுது கிடக்கும். இத்தகைய நிலையிலிருந்த ஏட்டுச் சுவடிகளை, பூக்களைத் தொடுவதுபோல் மெல்ல மெல்ல அலுங்காமல் நலுங்காமல் பிரித்தெடுத்து, பிரதி செய்து, பதிப்பித்த அப்பெருந்தகை, 'தமிழ் மாது நும் தாயல்லவா? அவள் அங்கம் குலைந்து அழிகின்ற தருணத்திலும் நமக்கென்னவென்று நாம் இருக்கலாமா?' எனத் தமிழறிஞர்களைப் பார்த்துக் கேட்டார்.

திருக்குறள், திருக்கோவையார், கந்தபுராணம், பெரியபுராணம் ஆகிய நூல்களப் பதிப்பித்துத் தமிழுக்கும், சைவத்துக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்த ஆறுமுக நாவலர், தாமோதரம்பிள்ளைக்குப் பதிப்புத்துறையில், வழிகாட்டியாக அமைந்தார். தொல்காப்பியத்தப் பதிப்பித்தபோது, 'தமிழ் நாடனைத்திலுமுள்ள தொல்காப்பியப் பிரதிகள் மிகச் சிலவே. அவை யாவும், நான் தேடிகணட வரை ஈனஸ்திதி அடைந்திருப்பதால், இன்னும் சில வருடங்களுக்குள் அழிந்துவிடுமென அஞ்சியே, உலோகோபகாரமாக அச்சிடலானேன்' என அப்பெருமகனார், தமது தொல்காப்பியச் சேனாவரையருரைப் பதிப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது, எண்ணிப் பார்க்கத்தக்கது. 'தமிழின் நூல்கள் தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். தமிழின் பெருமையை, அருமையை தமிழர் உணர்ந்து உயர வேண்டும்' என்ற அரிய நோக்கங்களால், உரிய தொண்டாற்றிய ஒரு பெரும் தமிழார்வலராய்த் திகழ்ந்தார், தாமோதரம்பிள்ளை.

ஏட்டுப் பிரதியிலிருப்பதை, அச்சுருவம் பெறவைத்தல் எளிமையானதன்று. முதலில் ஏட்டிலுள்ள எழுத்துக்களைப் படிப்பதற்குத் தனித்திறமை வேண்டும். விளக்கத்தோடு அதனை வெளியிடத் தனிப்புலமை வேண்டும். திறமையும் புலமையும் கொண்டிருந்த தாமோதரனார், பதிப்புத் துறையில் நாட்டம் செலுத்தியதோடு, படைப்பாற்றலிலும் ஆர்வம் மிகக் கொண்டு, பல நூல்களை எழுதி வெளியிட்டார்.

'கட்டளைக் கலித்துறை', 'சைவ மகத்துவம்', 'சூளாமணி வசனம்', 'நட்சத்திர மாலை' ஆகிய நூல்களையும் 'காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி' எனும் நாவல் ஒன்றையும் இயற்றி வெளியிட்டுச் செய்யுள் திறத்திலும், உரைநடை வளத்திலும் ஓங்கு புகழ் பெற்றார். தாமோதரம்பிள்ளையின் செய்யுளில் அமைந்த செறிவை, ஒருமுறை மாயூரம் வேதநாயகம் பிள்ளை படித்துப் பரவசமடந்து,
"நீடிய சீர்பெறு தாமோதர மன்ன, நீள்புவியில் - வாடிய கூழ்கள் மழைமுகங் கண்டென மாண்புற நீ - பாடிய செய்யுளைப் பார்த்தின்ப வாரி படிந்தனன் யான் கோடிப் புலவர்கள் கூடினும் நின்புகழ் கூறலரிதே!"
என எழுதி, பாடலைத் தாமோதரம்பிள்ளைக்கு அனுப்பி வைத்தாராம்.

ஏட்டுப் பிரதிகளைப் படித்து, பரிசோதித்து, பலபடியாக ஆராய்ந்து, வழுவின்றிப் பிரதி செய்கிறபோது. சில சந்தேகங்கள் தோன்றிவிடும். அதனைப் போக்கிக் கொள்ள உரியவர் கிடைக்காது, மன உளைச்சலில் உணவும் கொள்ளாது, உறக்கமும் கொள்ளாது சில நாள்கள் வருந்திக்கொண்டே இருப்பாராம் பிள்ளைவாள்! இலக்கியங்களின் பெயர்களையே தெளிவாக அறிந்திராத காலம் அது. எட்டுத் தொகையில் அடங்கிய எவை எவையெனக் கூடத் தெரியாத காலம். இன்னும் சொல்லப்போனால், 'சிலப்பதிகாரமா', 'சிறப்பதிகாரமா' என மயங்கிக் கொண்டிருந்த காலம். இத்தகைய காலக்கட்டத்தில் ஐயங்களைப் போக்கிக்கொள்ள யார் அகப்படுவர்? எனவேதான் "எனக்கு ஸ்ரீமத் சாமிநாதையரும் அவருக்கு நானுமே சாட்சி!" எனத் தாமோதரம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுப்பிட்டி என்னும் ஊரில் வைரவநாதபிள்ளையின் மகனாக, 1832 ஆம் ஆண்டில் பிறந்தார், தாமோதரம்பிள்ளை. அன்னையார் பெயர், பெருந்தேவி அம்மாள். கோப்பாய் சக்தி வித்தியாசாலையில், ஆசிரியர் பணியில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தபோதுதான், முதன்முதலாக 1853 ஆம் ஆண்டில் 'நீதிநெறி விளக்கம்' என்னும் நூலினைப் பதிப்பித்து வெளியிட்டு, 'தமிழ்ப் பதிப்புத்துறை முன்னோடி' எனும் பெருமை பெற்றார். இளைய பருவத்தில் தாமோதரனார் கொண்ட நூல் வெளியீட்டு ஆர்வமே, தமிழ் மக்களுக்குத் தொல்காப்பியத்தையும், கலித்தொகையையும் நூல் உருவில் பெற்றுத் தந்தது. அழிந்து மறைந்து கொண்டிருந்த ஏட்டுச் சுவடிகள் பல, அச்சு வாகனமேறி, தமிழுக்குத் தனிப் பெருமையைக் கூட்டின!

(நன்றி: தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள் நூல் -
http://kanaga_sritharan.tripod.com/cythamotharampillai.htm)




3. உலகத் தமிழ் மாநாடு World Tamil Conference
உலகில் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், வளப்படுத்தவும் தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் தீவிர முயற்சியால் 1964-ம் ஆண்டு, தில்லியில் “உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்று இந்த மன்றம் வரையறுத்துக் கொண்டது. 1966-ம் ஆண்டு, ஏப். 17-ம் தேதி முதல் 23 வரை கோலாலம்பூரில் முதல் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி தனது தமிழ்ப் பயணத்தை தொடர்ந்தது இந்த மன்றம். தொடர்ந்து 1968-ல் சென்னையில் 2-வது உலகத் தமிழ் மாநாடும், 1970-ல் பாரீஸில் (பிரான்ஸ்) 3-வது உலகத் தமிழ் மாநாடும் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற 3 மாநாடுகளும் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை திட்டமிட்டபடி நடைபெற்றன. 4-வது மாநாடு 4 ஆண்டுகளுக்குப் பிறகு 1974-ல் யாழ்பாணத்திலும், 7 ஆண்டுகளுக்குப் பிறகு 1981-ல் மதுரையில் 5-வது மாநாடும், பின்னர் மலேசியாவில் 6-வது மாநாடும், மோரிஷஸில் (ஆப்பிரிக்கத் தீவு) 7-வது மாநாடும், 1995-ல் தஞ்சாவூரில் 8-வது உலகத் தமிழ் மாநாடும் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற 4 மாநாடுகள் தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் பல்வேறு சிரமங்களுக்கு இடையே நடைபெற்றன. அவரது மறைவுக்குப் பிறகு, 5-ம் மாநாட்டை தொடர்ந்து எடுத்து நடத்த போதிய சக்தியில்லாமல் மன்றத்தின் வேகம் குறையத் தொடங்கியது. பிற நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வரும் தமிழறிஞர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க முடியாததே இதற்குக் காரணம். மாநாடு நடைபெறும்பட்சத்தில் தமிழ் இலக்கிய, இலக்கணத்தின் சிறப்புகள் பற்றியும், பண்பாட்டு வளர்ச்சி, வரலாறு, அகழ்வாய்வுகள், கலைகள், தொன்மை, மொழியியல் பற்றியும் பல ஆராய்ச்சி உண்மைகள் வெளி வரும்.
(நன்றி: மண்ணடிகாகா சமுதாய மாத இதழ்
http://markaspost.wordpress.com)


8-வது மாநாடு நிறைவு பெற்று இதுவரை 13 ஆண்டுகளைக் கடந்த பிறகு 9-வது உலகத் தமிழ் மாநாடு நடைபெறுவதற்கான அறிவித்தல் இப்போதுதான் வெளிவந்துள்ளது. 21-ம் நூற்றாண்டாகிய தற்போது பூமிப் பந்தில் புதிய தலைமுறைகளுடன் தடம் பதித்துள்ள புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தால் இனிவருங்காலத்தில் இந்நிகழ்வு தனிநாயகம் அடிகளாரின் தொடர்ச்சியாக அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படவேண்டும்.

நினைவுத் துளிகள் சொட்டும்...

Thursday 17 September 2009

கதைச் சரம் 14 ஏட்டுக் கல்வியும்... நடைமுறையும்


கதைச் சரம் 14
செவி வழிக் கதை 12
ஏட்டுக் கல்வியும்... நடைமுறையும்

மொஸ்கோ மா நகரத்தில் அமைந்திருக்கும் மருத்துவக் கல்லூரியின் மதிய உணவு இடைவேளையின் போது கிடைக்கும் சிறிது நேரத்தில், நண்பர்களான அந்த மூன்று மருத்துவத்துறை இறுதியாண்டு மாணவர்களும் காலாற நடப்பதையும் பூங்காவுக்குச் சென்று அமர்ந்திருந்து தமது பாடங்களை மீட்பதுமான வழக்கத்தைக் கொண்டிருந்தனர். மருத்துவக் கல்வி முடிவில் என்னவெல்லாம் செய்யவேண்டுமென்ற தமக்கிடையிலான அளவளாவல்களையும் இவர்கள் செய்வது வழக்கம்.

கோடை காலத்தை வெயிலில் தரிசிப்பதற்கு ஐரோப்பியர்களுக்கு நிகராக யாருமே இருக்கமாட்டார்கள். உடம்பு முழுவதையும் பொத்தி மூடியவாறு இறுக்கமாக வாழ நிர்ப்பந்திக்கும் குளிர் கால அனுபவம் கோடையின் அருமையை பாரம்பரிய அனுபவக் கொடையாக்கியதில் வியப்பென்ன இருக்கிறது. குதூகலமான நடமாட்டம் இக்காலத்தில் எல்லா பிராயத்தினராலும் இருக்கும். வைத்திய மாணவர்களாகையால் மனிதர்களின் நடையை உற்று நோக்குவதும் அத்தகைய நடையுடைவர்களுக்கு 'மருத்துவம் தொடர்பான என்ன பிரச்சனைகள் இருக்கலாம்?' எனவாக அலசுவதை இவர்கள் சிலவேளைகளில் நடாத்துவதும் உண்டு.

இன்று, மாலை நேர வகுப்பு ஒரு மணித்தியாலம் சென்ற பின்னர்தான் ஆரம்பிக்குமாதலால் கொஞ்சம் தூரம் காலாற நடந்துவந்திருந்தனர். அந்த அகண்ட வீதியின் ஓரமாக அமைந்திருந்த பூங்காவிலிருக்கும் பெரிய மரத்தின் கீழ் உள்ள இருக்கையில் அமர்ந்தவாறு கதைத்துக் கொண்டிருந்தனர். பிரதான வீதியில் செல்வோரையும் காணக்கூடியதாகவிருக்கும் இந்த இருக்கை அவர்களுக்கு மிகவும் பிடித்தமானது. பக்கத்திலேயே பேரூந்து தரிப்பிடமும் இருப்பதால் திரும்பும்போது விரைவாகக் கல்லூரிக்குச் சென்றுவிடலாம்.

அப்போது, பேரூந்தில் இருந்து இறங்கிய ஒருவரது நடை இவர்களது கவனத்தைப் பெற்றது.. வயிற்றை உள்ளிழுத்தவாறு மூச்சை நிதானமாக விடமுடியாது பரிதவித்தவாறு மெல்ல மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தார் அந்த மனிதர். அவரது கைகள் அசாதாரணமாக உடம்பின் பல பாகங்களையும் பிடித்தவண்ணம் இருந்தன. வழமையற்றிருந்த அந்த மனிதரின் நடவடிக்கையைப் பார்க்கவே பாவமாக இருந்தது.

"நண்பா, இவருக்கு இருதயக் கோளாறு வந்துள்ளது போலிருக்கு... உடனடியாக முதலுதவியுடன் உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டும்." முதலாவது எண்ணத்தை உதிர்த்தான் ஒருவன்.

"இல்லை... இல்லை இதயக்கோளாறு இருந்தால் அடியெடுத்து நடக்க முடியாது. இவருக்கு காலில்தான் பிரச்சினை இரண்டு முழங்காலிலும் மூட்டுச் சுழற்சி நடைபெறாத வாதப் பிரச்சனையால் அவதியுறுகிறார்." இது இரண்டாவதான மாணவனின் கருத்தானது.

"இல்லையில்லை! நண்பர்களே! அவரது கால் சில சமயத்தில் மெல்ல மேலும் கீழும் தூக்கப்படுகிறது. முகம் கோணிப் போயுள்ளது. தலையையும் தடவுகிறார்.... கைகளால் இறுக்கிப் பிடிக்கிறார். பதட்டமடைந்தவராக இருப்பினும் நிதானமாகத்தான் நடக்கிறார்.... நடக்க முடியாதவாராகவும் திணறுகிறார்.... எனக் கென்னவோ இவருக்குச் சித்த சுவாதீனப் பிரச்சனை(மனக் கோளாறு நோய்) இருப்பதாகத்தான் தெரிகிறது." என்றார் மூன்றாவதான மாணவன்.

இப்படியாக இவர்களது அலசல் நடைபெறம்போது அந்த மனிதர் இவர்களுக்கு அண்மையில் வந்தடைதுவிட்டார். மூவரும் அவருக்கருகில் சென்று, தங்களது கண்டுபிடிப்புகளில் எது சரியென்பதை உறுதிசெய்யலாயினர்.

"ஐயா, நாங்கள் மருத்துவத் துறை இறுதியாண்டு மாணவர்கள். தங்களுக்கான நோயை ஒருவாறு ஊகித்திருக்கிறோம். உங்களது நோயைக் குணப்படுத்த உடனடியாக உதவி செய்யத் தயாராக இருக்கிறோம். வாருங்கள் மருத்துவமனைக்கு.." என்றார்கள் கரிசனையுடன்.

வார்த்தைகள் தடுக்கித்தடுக்க "நோயா!.... எனக்கா?.... என்ன சொல்ல வருகிறீர்கள் தம்பீகளே!" மிகுந்த ஆச்சரியத்துடன் அந்த மனிதர்.

நண்பர்கள் ஒருவரை மற்றவர் தடுமாறிப் பார்த்தனர். "உங்களது நடையில்... நடக்க முடியாதவாறான தடுமாற்றமாக இருக்கிறதே...!" முதலாவதவன் கேட்டுவிட்டான்.

"ஓ!! அடபோங்கடா தம்பீகளா... நான் அவசரமாக வெளிக்குப் போகவேண்டிய நிர்ப்பந்த நிலையில் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்... தவிக்கிறேன். அதற்காக இடம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்...." தனது அவஸ்தையையும் பொருட்படுத்தாது கிளம்பிய மென் முறுவலுடன்.

- முகிலன்
பாரீசு செப்டெம்பர் 2009

இக்கதை மொஸ்கோவில் பட்டப்படிப்பை முடித்து நாடு திரும்பி என்னுடன் பணியாற்றிய நண்பர் துருவர் சொன்னது.

Wednesday 16 September 2009

பகிர்வுச் சரம் - 1 வால்மீகி இராமாயணம்



பகிர்வுச் சரம் - 1
வால்மீகி இராமாயணம் - மறுவாசிப்பு


அன்று காவியங்களாகவும் கூத்து, நாடகங்களாகவும், இப்போது, பிரமாண்டமான சினிமா - தொலைக் காட்சிகளாலும் பரவலான பார்வைத் தளத்தில் காண்பிக்கப்படும் "இராமாயணம்". தற்போது மணிரெத்தினத்தின் தயாரிப்பில் இருக்கும் படமும் 'ராவணன்'தான்.

வட இந்தியர்கள் கொண்டாடும் தீபாவளி இராவணன்
அழிவைக் குறிப்பதாகவே அடையாளப்படுத்தப்படுகிறது. தற்போத இந்திய அடையாளத் திருநாளாக உலக நகரங்களில் 'தீபாவளி' கொண்டாடப்படும் நிகழ்வுகளைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

தீபாவளி வெளி
ப்பாடுகளை தடபுடலாக்கும் இத்தருணத்தில், இதற்கான மறுவாசிப்பைத் தரும் அழ்வாய்வு நோக்கிலான தேடலாக வெளிவந்துள்ள நூலின் அறிமுகத்திற்காக இதனைப் பகிர்கிறேன். நீண்டு பயணிக்கும் மானிட வாழ்வியலில் மனித மனம் சார்ந்த பக்குவப்படல் எவ்வகையான பரிணாமங்களை இதுவரையில் பெற்றுள்ளது? ஒப்பிடவே வேண்டும். இவ்வாறானவை இனி பகிர்வுச் சரமாகப் பதிவுறும்.
நன்றியுடன்
- முகிலன்

0000000000



நூலில் இருந்து......

உத்தர காண்டம்
(ஒட்டக்கூத்தர்)

சாம்பன் - ஆதி தமிழன் கொல்லப்பட்டான்

இப்படியாக ராமன் அயோத்திபுரியை ஆண்டு வந்தான். ஒரு நாள், பார்ப்பனன் ஒருவன், "ராமா! உன் ஆட்சியில் இவ்வாறு பிராமணக் குழந்தை சாகலாமா?" என்று கத்தினான், கதறினான், அழுதான்.

கூடவே நாரதனும் வந்திருந்தான். அவன் "ராமா! உன்னுடைய ஆட்சியில் வருணக் காப்பு தவறி இருக்குமோ?" என்று வினவினான். வினவி விட்டு, அவனே பதிலும் சொன்னான்.

"ராமா! சூத்திரன் என்பவன், பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகிய மூன்று சாதியருக்கும் அடிமைபோல் உழைக்க வேண்டியவன். ஆனால் சூத்திரன் அவ்வாறு செய்யாமல், கால்மேல் காலை வைத்தபடி ஒரு மரத்தடியில் தவம் செய்கிறான், கல்வி கற்கிறான். சிறந்த தவத்திற்கு உரிமையில்லாத ஒரு சூத்திரப் பயல் கடுந்தவம் செய்கிறான். பெருமை தரும் உயர் கல்வியைக் கற்கிறான். சூத்திரன் கற்றதினால் தந்தை இருக்க மகன் மரணம் அடைய நேர்ந்தது" எனச் சொன்னான் நாரதன்.

ராமன், உடனே புறப்பட்டான். வடக்கே தேடினான், மேற்கே தேடினான், கிழக்கே தேடினான், சூத்திரனைக் காண முடியவில்லை. தென்திசைப் பக்கம் அப்பெருந்தவத்தானை, சூத்திரனை, தாமரை புத்த தடாகத்தின் அருகிலிருந்த அரச மரத்தடியில், கால்மேலாய்த் தலை கீழாய் நின்று தவம் செய்வோன் தன்னைக் கண்டான்.

கார்மேக வண்ணத்தான், கருணை மிகுந்த ராமன், "நீ மறையவனோ? மன்னவனோ? வணிகனோ? சூத்திரனோ?" என்றான்.

அவன் "தும்பை மலர் மாலை சூடியவனே! நான் சூத்திர யோனியில் வந்தவன், சூத்திர சாதியில் பிறந்தவன், என் பெயர் சாம்பன். அறிவைப் பெருக்க வேண்டி தவம் செய்கிறேன்" என்று 'உண்மை' சொன்னான்.

ராமன் உறை வாளை உருவினான், அந்தச் சாம்பனின் தலையைச் சீவினான்.

சிறந்த கல்வியைக் கற்ற சூத்திரன் கொல்லப்பட்டான். பார்ப்பனன் மகன் உயிர் பெற்றான்.

தேவர் உலகம் மகிழ்வுற்றது.

-முற்றும்-

0000000000000000000000

இந்நூல் முன்னுரையிலிருந்து......

'இராமாயணம்' நாடே அறிந்த கதை. தமிழர்களைப் பொருத்தவரை சங்க காலத்துப் பாடல்களிலேயே, அக்கதையின் வால் தெரிகிறது. இன்றைய தமிழகத்தில் இராவணனைப் போற்றுவாரும் உள்ளனர். ராமனைப் போற்றுவாரும் வாழ்கின்றனர். இராவணனுடைய பெயரைத் தங்களுடைய வாரிசுகளுக்குச் சூட்டி மகிழும் பெற்றோர்கள் தமிழகத்தில்தான் உள்ளனர் என்பதை அனைவரும் அறிவர்.

வால்மீகியால் எழுதப்பட்டதை ஒட்டியோ அல்லது தழுவியோ இராமாயணத்தை எண்பதிற்கு மேற்பட்டோர் எழுதியுள்ளனர். ஒன்றுக்கொன்று வேறுபட்ட வகையில் அமைந்தவை என்பதனை மயிலாப்பூர் 'சமசுக்கிரதக்' கல்லூரி ஆங்கிலத்தில் வெளியிடு்டுள்ளது என்பதை இவ்விடத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.

கதையின் நாயகன் ராமன் பிராமண தர்மத்தையும், அதற்கு ஆணிவேராக உள்ள நால்வருண்ண தர்மத்தைக் (சாதிப்பாகுபாட்டை) காப்பாற்றுவதற்கு என்றே பிறந்தவன்.

"என்னுடைய மனைவியாகிய சீதையை விட்டுவிடு என்றாலும் விட்டுவிடுவேன்! எனது ஆனால் பிராமணர்களைப் பாதுகாப்பதையோ, அவர்களுடைய தருமத்தைக் காப்பதையோ எள்ளால் விட முடியாது!" என்று தசரத ராமனின் வாயாலேயே சொல்ல வைக்கிறார் வால்மீகி.

பிராமண தர்மத்தையும், அவர்கள் ஆடு, பசு போன்றவைகளைக் கொன்று செய்யும் யாகங்களைச் செய்யவிடாது தடுப்பதும், தன் இனத்தை, வேறு ஓர் இனம் கொன்று அழிக்கும் செயலை எதிர்ப்பதுமே தனது ஆட்சியின் வேலை என்று சொல்லக்கூடிய பவுத்த நெறிக் கொள்கையைப் பின்பற்றுகிறனாகவே ராவணன் திகழ்கிறான். இவ்வாறுதான் ராவணனைச் சித்தரிக்கிறார் வால்மீகி முனிவர்.

இராமன், அத்துமீறி மற்றவர்களின் காடுகளையும், நாடுகளையும் ஆக்கிரமித்து தனது காலடியில் விழுந்து கிடக்கின்றவர்களாக வாலியின் தம்பியையும், ராவணனுடைய தம்பி விபீசணனையும் தனது கதையில் சித்தரிக்கிறார்.

இவை போன்று வேறு பலவும் இக்காவியத்தில் உண்டு என்பதை முன்பே அறிந்தவர்கள்தான் தமிழர்கள்.

இருந்தாலும் இதனை அறியாத ஒரு சிலர் படித்து மகிழவும், சிந்திக்கவும், தன்மானம் பெறவும் இச்சிறு நூல் உதவும் என்ற நம்பிக்கையோடுதான் இதனை வெளியிடுகிறோம்.

நான் ஒரு சுயமரியாதைக்காரன். ராமாயணத்தை ஏற்றுக்கொள்ளாதவன். ஆனாலும் மக்கள் எல்லாவிதமான கருத்துகளையும் படித்துப் புரிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தோடுதான் இதனை தமிழாக்கம் செய்துள்ளேன். தவறாக மொழிபெயர்த்துள்ள இடத்தை மட்டிலும் திருத்தியுள்ளேன்.

வால்மீகியின் கருத்தை எந்தவொரு இடத்திலும் நான் சிதைக்கவே இல்லை என்பதை உறுதியுடன் கூறுகிறேன்.

இந்த ராமாயணத்தின் சமசுக்கிரதத் தொகுப்பு என்னிடத்திலேயே உள்ளது. அய்யப்படுவோர், வேண்டும்போது எனது இல்லம் வந்து ஒப்பிட்டுப் பார்க்கலாம்.


- குருவிக்கரம்பை வேலு
00000000000000



வைதீக இலக்கியங்களைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக அவற்றைப் பயில வேண்டும். மறுவாசிப்புச் செய்ய வேண்டும். 'சீன தேசத்துக்குச் சென்றேனும் அறிவைத் தேடு' என்ற ஓர் இறைதூதர் சொல்லியுள்ளார். சமஸ்கிரதம் தொலைதூர நாட்டு மொழியல்ல. நம் நாட்டிலேயே செயற்கையாகச் 'செய்ய'ப்பட்ட மொழி. இம் மொழியைப் படிப்பதும் இம் மொழியில் புதைக்கப்பட்டுள்ள உண்மைச் செய்திகளை வெளிக் கொண்டுவருவதும் அரிய செயலல்ல. தோழர் வேலு 'வால்மீகி இராமாயணம்' மூலம் இதைத் தொடங்கி வைத்துள்ளார். இளந் தலைமுறை இப்பணியை ஏற்று இன்னும் விரிவுபடுத்திச் செல்லவேண்டும்.
- இந்நூ லை வெளியிட்ட சாளரம் வைகறை
000000000000


நூல் : வால்மீகி இராமாயணம்
தமிழில் : குருவிக்கரம்பை வேலு
வெளியீடு : சாளரம், சென்னை

Tuesday 15 September 2009

சரம் - 19 இறைச்சிக் கடையில் ஏன் சரசுவதி ?

சரம் - 19

இறைச்சிக் கடையில் ஏன் சரசுவதி ?

பக்திப் பிரவாகத்துடன் கோயில் பூசையுடன் அந்த இளம் அடுத்த தலைமுறைத் தமிழர்களின் திருமணம் ஐயரின் ஆசீர்வாதத்துடன் சென்ற ஞாயிறன்றுதான் நடந்திருந்தது. பிரமாண்டமான மண்டபத்தில் தமது அழைப்பை ஏற்று வந்திருந்த பெருங்கூட்டத்தின் ஆரவாரத்தால் பெற்றோர் சொந்தங்கள் பந்தங்களைச் சந்தித்த திருப்தியுடன் இருந்தனர். நடைபெறும் நிகழ்வுகளை ஆவல் ததும்பும் நிறையவே கேள்விகளோடுதான் வேடிக்கை பார்த்தனர் புகலிட இளந்தலைமுறையினர்.

இளந்தம்பதியினரை கல்யாணம் முடிந்தபின் முதல் பூசை பார்ப்பதற்காக கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். பூசை முடியவும் பெண்வீட்டார் நான்காம் சடங்கிற்குத் தேவையானவற்றை வாங்குவதற்காக கடைத்தெருவுக்குச் செல்ல விரும்பினர். ஐயர் விடுவதாக இல்லையாதலால், வேறு வழியில்லாது எல்லாம் முடிந்தபின் வரவேண்டிய கடையின் பெயரைச் சொல்லிவிட்டு (மீண்டும் சந்திப்பதற்கான இடம்) பெண்ணின் தந்தையும் மாமன்மாரும் அவசரமாக கடைத் தெருவுக்கு விரைந்தனர்.

கோயில் பூசை முடிய அனைவரும் பகிடிவிட்டுச் சிரித்தவாறு குறிப்பிட்ட கடைக்குச் செல்கின்றனர். அக்கடை இறைச்சிக்கடையாக இருந்ததால் கூடவே பல்வேறு சடங்குகள் அறியும் ஆவலுடன் வந்திருந்த மாப்பிளையின் தங்கைக்கு ஆச்சரியமோ ஆச்சரியம்....! ஆனாலும் ஏதும் பேசாதவளாகி சுற்றுமுற்றும் கடையை நோட்டமிடுகிறார். அவரது கண்களில் அங்கு மாட்டியிருந்த சாமி படம் பல கேள்விகளை எழுப்பிவிட்டது. மச்சம் சாப்பிட்டாலே சாமி அறைக்குள் நுழைய மறுக்கும் அம்மாவின் அறிவுரைக்கு இடி விழுந்தது போல் இறைச்சிக்கு முன் வீற்றிருந்த கடவுளைக் கண்டாள்.

அவளுக்குத் தெரிந்த சாமிகளின்படி அப்படத்திலிருந்தவர் சரசுவதியாகவே தெரிந்திருந்தார். சிறுவயதிலிருந்து சரசுவதி பூசையை வீட்டில் செய்தது பசுமரத்தாணியாகப் பதிந்திருந்தது.

'புத்தகக் கடையில் இருக்க வேண்டிய கடவுள் இங்கு ஏன் வைக்கப்பட்டிருக்கிறார்?' மனதுள் குடைச்சலெடுத்த கேள்வியை யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதென அவளுக்குத் தெரியவில்லை.

இதில் கதைத்தால் பெரிசுகள் என்ன நினைக்குமோ எனப் பயந்தவளாகி, தனது தமையனிடம் புகலிடச் சூழல் மொழியில்
"அண்ணா! இறைச்சிக் கடையில் ஏன் சரசுவதி படம் வைத்திருக்கிறார்கள்?" என்றாள்.

மாப்பிளை மயக்கத்தில் நடமாடிக் கொண்டிருந்த தமையனாரும் அப்பத்தான் அந்தப் படத்தைப் பார்த்தார். தங்கையின் நியாயமான கேள்வி அவரைப் பதில் சொல்லத் தூண்டியிருக்க வேண்டும்.

"சரசுவதி நன்றாக இறைச்சி சாப்பிடுவார் அதனால்தான் இங்கு வைத்திருக்கிறார்கள்" என்றார் புகலிடச் சூழல் மொழியில்.

அண்ணனின் தெளிவான பதிலால் தங்கையின் முகத்தில் மலர்ச்சி!!

கூட்டத்துடன் சென்றிருந்த நான் பொத்திக் கொண்டு வந்த சிரிப்பை அடக்கியவனாகி மற்றோரை நோட்டமிட்டவாறு முகத்தைத் திருப்புகிறேன். வழமைபோல் எதையும் சட்டை செய்யாதவர்களாக பெரிசுகள் தமது கருமங்களில் மூழ்கி இருந்தனர்.

ஒன்றாக வாழ்ந்திருந்த போதும்....., ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாக்களுடன்தான் அடுத்த தலைமுறை உலகம் தனித்தே இயங்கிக் கொண்டிருக்கிறது.

- அருந்தா
பாரீஸ்
செப்டெம்பர் 2009

Monday 14 September 2009

சுவட்டுச் சரம் - 1 நினைவுத்துளிகள் (14)




சுவட்டுச் சரம் - 1
பெர்லின் புலம்பெயர்வு தொடக்க கால நினைவுகள்
நினைவுத்துளிகள் (14)

- குணன்



"வாழ்க்கை ஒரு வியாபாரம் போன்று, இலக்கு-இலட்சியம், யாவையும் புறந்தள்ளி வாழமுற்பட விரும்பினால்
, அதன் விளைவு சமுதாயச் சீரழிவில்தான் கொண்டு சென்றுவிடும். இதைச் சுட்டிக்காட்ட சில குறிப்புக்களை எனது, 13வது நினைவுத்துளிகளில் சொட்டப்பட்டது!

இதனைப் பிரதிபலிப்பதைப் போல, இன்றைய ஐரோப்பிய பிரபல தமிழ் வானொளி ஒன்று, புலம்பெயர் வாழ் தமிழர்களின் ஆதரவுடன் தனது சேவையை கட்டணம் இன்றி(சில தமிழ் பார்வையாளர்கள், தெரிவித்தவாறு) நிகழ்ச்சிகளைத் தமிழில் முழுமையாகவும், தமிழர் நலன்களுக்காக, நடுநாயகமாக நடாத்த(தமிழர் ஆதரவு நாடி) நிற்பதாக தெரிவித்தது அனைவராலும் விரும்பத்தக்கதாக இருந்தது. நல்ல விடயங்களை யார் முன்னெடுத்தாலும், தமிழ் மக்கள் உதவிட முன்வருவதும், அவைருக்கும் செய்திகள்(உண்மை சார்ந்தவைகள் மட்டும்!) சென்றடையுமாயின் அதனை வரவேற்பதும், ஆதரவு தருவதும் பிழையாகமாட்டாது! ஆயினும், கட்டணமோ, இலவசமோ என்பது ஈற்றில் அதன் நிர்வாகத்தைச் சார்ந்ததாகவே இருத்தலே யதார்தமாகும்.

ரு தலை முறை நிறைவு காண, மற்றொரு புதிய தலைமுறையின் தொடக்கத்தில் கால் பதிக்கத் தொடங்கியுள்ள, புலம் பெயர் ஈழத் தமிழர்கள், தமது வாழும் நாடுகளில், வாழ்ந்து இதுவரை எது- எதையெல்லாம் தமது அடையாளமாக்கிக் கொண்டிருக்கிறார்களென்றால், அவ்வாறு சுட்டிக்காட்டவும், நினைத்துப் பார்க்கவும், பிறரைத் திரும்பிப் பார்க்கச் செய்யவுமான சாதனைகளென்று கூற, எதனையும் குறிப்பிட முடியாதிருப்பதான உறுத்தும் நிலைதான் என்பதை ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும்!

நீறு மறைத்த நெருப்புக் கொள்ளிபோல, மனத்தின் ஆழத்தில், தம்மை உயர்த்தியும், ஒரு பகுதியினரைக் குறைத்தும் பார்க்கின்ற- பேசுகின்ற தலைக்கு மேலாக, "கை காட்டும்" இழிந்த- சீரழிந்த அறிவுக் கொவ்வாத "சாதிப்பித்து" பீடித்
துள்ள நிலை தொடரத்தான் செய்கிறது. இது மட்டுமன்றி, தமது எதிர்காலச் சந்ததிகளின் மனங்களிலுங்கூட, இல்லாத- சொல்லாத அந்தச் சகதி பற்றிய புகட்டலில், மெல்ல... மெல்ல வாழைப்பழத்தில் ஊசியைப் ஏற்றுவதைப்போல, பிஞ்சுகளின் மனங்களில் நச்சு ஊசி ஏற்றும் கொடுமை, புலப்பெயர்வில் (வயதுக்கு வந்த பிள்ளைகள்) மத்தியில் விதைக்கப்படுகின்றது. ஆயினும் இத்தனை "போதனைகளையும்" புறந்தள்ளிய (சாதி இல்லை) ஒருசிலர், நம் மத்தியில் இருப்பதும் உண்மைதான். இன்றைய புலப்பெயர்வில் தாம் வாழும் நாடுகளில், குறித்த நாட்டு மக்கள், எத்தகைய சமுதாய வளர்ச்சியையும் இனவிழுமியங்களையும், சமூக ஒருமைப்பாட்டையும், பேணிக்காத்து தலை நிமிர்ந்து ஓர் குடும்பமாக, வேற்றுமை, உயர்வு- தாழ்வு அற்ற, சிறந்த வாழ்வைக் காண்கிறார்கள் என்பதை நிச்சயமாக இளைய தலைமுறையினர் மிகத் தெளிவாக கண்டறிந்துள்ளார்கள். இத்தகையை அறிவால் ஒப்பீட்டளவில் தமது பெற்றோர்கள் அவ்வாறு ஏன் இல்லை? என்பதைக் காண முனையும்போது தலைமுறை இடைவெளியாக மனத்தாக்கம் ஏற்பட ஏதுவாகிறது!

இன்
று, ஐரோப்பிய சமூகத்தினரால், சட்டவரம்புக்குட்பட்ட செயலாக, ஓரினச் சேர்க்கை ஆண் - பெண் இருபாலாருக்கும் அங்கீகாரம்(Homosexuality) வழங்கப்பட்டிருப்பதும், வயது வந்த, இருபாலாரும் தத்தமது விருப்பப்படி, தாம் விரும்பும் ஒருவரைத் துணையாக்கவும், மணம் செய்யவும் விரும்பின், நியாயமான காரணங்களுக்காக உறவை, துண்டித்துக் கொள்ளவும், மணவிலக்கல் அனுமதி பெறவும் வசதி வழங்கும் நாடுகளில், பிறந்து வளர்ந்து கல்வி, நட்புடன், பழகி, மணம் முடிக்க, தாமே விரும்பும் பட்சத்தில், (வெள்ளை இனத்தவராகில்), வரவேற்பதும், தான் சார்ந்த தமிழ் இனத்தவராகில்(வர்ணம் தீட்டி!) தடுப்பதும், தமது விருப்பப்படி, ஒருவருக்கு தமது பிள்ளையை மணந்துகொள்ள வற்புறுத்தி, பணிய வைப்பதும், புலப்பெயர்வில் காணக்கூடியதாக இருக்கிறது. சில சந்தர்ப்பங்களில், கட்டுக்களை உடைத்து, தமது எண்ணப்படி, வாழ்க்கையைத் தொடங்கும், தைரியம் படைத்த புதிய தலைமுறைத் தமிழர்களும், புலப்பெயர்வில் இல்லாமலில்லை! இத்தகையவர்கள், ஓர் புதிய சமுதாயத்தை உருவாக்கப் புறப்பட்ட புரட்சி எண்ணம் படைத்தவர்கள் என்று கூறிவிடலாம்!

புலம்பெயர் சமூகங்களிடையே நிலவுகின்ற குடும்ப உறவு, சமூகத் தொடர்புகள், மதக் கோட்பாடுகள், பண்பாடு எனப் பல்வேறு இனங்கிடையே நிலவுகின்ற வேற்றுமை, ஒற்றுமைகள் பற்றிய ஆழமான ஆய்வுகள், மானிடவியலாளர்களால் மேற்கொண்டிருப்பதை அறியும் வாய்ப்பு எனக்கு கிட்டியிருந்தது. நானும் எனது மனைவியும், தூரத்து உறவைக் கொண்டிருந்தாலும், எங்களின் பெற்றோர்களால் தீர்மானிக்கப்பட்ட திருமணநாள் (பதிவு நடைபெற்ற
நாள்!) வரைக்கும்-பழகாமலும், ஒருவருடன் மற்றவர் மனம்விட்டு, தத்தமது விருப்பு, வெறுப்பைத் தெரிந்துகொள்ளாமலும், மணம் முடித்து வைக்கப்பட்டு நாற்பதாண்டுகள் தாண்டி வாழமுடிந்தது என்பதை நம்பமுடியாதது என விமர்சனம் சில ஆண்டுகளுக்கு முன்னர் முன்வைக்கப்பட்டபோது தலைமுறை இடைவெளிச் சிந்தனைகளை ஒப்பிட்டவனாக புன்முறுவலுடன் உள்வாங்கிக் கொண்டேன்!


நாம் எங்கே செல்கிறோம்?


இன்று, புலம் பெயர்ந்து, பரந்து பல நாடுகளில், பதவிகள், வசதிகள்- சுகபோகங்கள் அதேபோன்று ரோகங்கள்- குரோதங்கள், பேதங்கள் நிறைந்து, எதிர்காலம் பற்றிய சிந்தனைகள், கடமைகள், உணர்வுகள்(வெறும் பேச்சிலும் அன்றி செய்கையில்) ஒருமைப்பாடின்றியும், செய்கைத்திறன் அற்றும், வெறும் நுகர்விலும்(இதில் உணவு, உடை, அணிகலம், உல்லாசம், பொழுது போக்கு) தாம் சார்ந்தவர்களின் யதார்த்தங்களில் இருந்து, தம்மை, வேறுபடுத்தி நிற்கும் குணாதிசயம் போன்ற சமுதாயச் சீரழிவுக்கு இட்டுச் செல்லும் "அழிவு முரண்பாடுகளுக்கு"(Destructive contradictions) திசைகாட்டிகளாக, தமிழரின் புலப்பெயர்வு மாறிவிட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளதும்- (வாழும் நாட்டில்) எ
ழுப்பப்பட்டிருப்பதும் எவராலும் மறுக்கமுடியாதது. தான் பெற்ற பிள்ளை தவறானவன்- குற்றமுடையவன் என்று, உலகமே திரண்டுவந்து கூறினாலும் தாயனவள் அதை ஏற்கமாட்டாள்! அவ்வாறில்லாமல் நம்மவர்களில் சிலர் குறிப்பாக, தாயகத் தமிழர்களின் அண்மைக்கால அனர்த்தங்களால், அநியாய அழிவுகளால், தாங்கொணாத் துயரங்களாலும், துன்பங்களாலும் சூழ்ந்தபோது தாம் வேறு- அவர்கள் வேறு என்றவாறாக எதையுமே காணதவர்களைப் போல வேடம் போட்டதை உண்மை அறிந்த உலகியலறிவு படைத்தவர்கள் ஆங்காங்கு(வாழும் நாடுகளில்) தோலுரித்து- தொட்டுக்காட்டத் தவறவில்லை. அண்மையில், சில தினங்களாக எம்மவர்கள் வாழ்கின்ற மேற்கு நாடுகளில் நடைபெற்றுவரும் சமய நிகழ்வுகள், பெருங்கூட்டத்தை(அடியார்கள்) கவர்ந்துள்ளது ஒன்றும் மிகையல்ல. அதுமட்டுமன்றி, ஒரே நகரத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட சமய நிறுவன அமைப்புக்களைக் கொண்டு இயங்கும் நிகழ்ச்சிகளும், உலாக்களும், வர்ணஜாலங்கள், காட்சிக்கோப்புக்கள், ஆட்டங்கள்-பாட்டங்கள் உட்பட இன்னோரன்ன வகையறாக்களைக் கொண்டிருந்ததை (சமய நிகழ்வுகள்) கவலையுடன்தான் பதிவு செய்யலாம். இந்தப் பின்னணயில் நடைபெறும் "மலிவு விற்பனைகள்" புதியதோர் வர்த்தக தந்திரமாக, அடியார்கள் மீது கருணை காட்டுவதுபோல, காலாவதிகளை காலியாக்கும் ஒன்றாகக் கருதலாம். ஆனால் இவற்றையெல்லாந் தாண்டி, இடம் பெற்று முடிந்தவைகள், எஞ்சிய நடந்தேறும் இதயவலி தரும், யதார்த்தங்களை மறந்து 'தம்மை மட்டும்' அருள்பாலிக்க வேண்டி நடப்பதைப்போல எண்ணி(யோ?)ப்போலும்! இன்றைய சொந்தங்கள், துயரத்துள் வீழ்ந்து- மாண்டழிய, இங்கு அவர்களுக்காக, இலண்டன் பிரதமர் அலுவலக முன்பு நடைபெற்ற நிகழ்வில் சில நூறுவரும் பங்கேற்க, இங்கு நடைபெற்றுவரும் சமய விழாக்களில் பல்லாயிரக்கணக்கில் விலையுயர்ந்த, ஆடை, ஆபராணாதிகளுடன் வலம் வருவது எப்படி?
"இங்குள்ள உங்களையும், உங்கள் பயணத்தையும் எம்மால் புரியமுடியவில்லையே?" என இலண்டன் தமிழ் வானொலி ஒன்றில், இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஆங்கிலேய மனிதாபிமானி ஒருவர் ஆங்கிலத்தில் கூறிய வார்த்தைகளை அந்த வானொலி நிலையத்தாருடன் என்போன்று செவிமடுத்தவர்கள் வாயடைத்துப்போனவர்களாகிக் கேட்டதை எப்படியாகப் பதிவுசெய்யலாம்? அன்று, நியுசிலாந்து கரும்புத் தோட்டத் தமிழர்களின் பரிதாப நிலைகண்டு தமிழகத்திலிருந்து வெதும்பிய பாரதியை நினைத்து துவண்டு போகிறேன்.

காசிக்கோ,அன்றி உரோமுக்கோ விமானம் ஏறவேண்டிய நம்மவர்கள் அங்கங்குள்ள மதசார் நிலையங்களில் தாம் சார்ந்தோ-சேர்ந்தோ விரும்பியவாறு தடம்பதிப்பதற்கு (இங்கு புலப்பெயர்வில் புகுந்தவேளை தாம் கடைப்பிடித்த மதங்களைச் சார்ந்த தனிப்பட்டவர்கள் பற்றியதல்ல) நான் விமர்சனம் கூறவில்லை.


அகதிகளைக் கரையேற்ற வழிதெரிந்தவர்களை போல, றீல்விட்டு, குறிப்பாக, இந்து-சைவ மதத்தினராகிய இளைஞர்களிடையே,“தொண்டாற்றியவர்கள்“, ஆங்காங்கு குறிப்பாக தமிழர்கள், புலம்பெயர்ந்துள்ள அனைத்து நாடுகளிலும், தமிழரின் புலப்பெயர்வுகளின் காரணங்களை வெளிக்கொண்டு வர உதவிடாமல், அவர்களை தத்தம் மதப்பிரிவுகளின் வழிநடத்தலின் நோக்கத்தை நிறைவேற்றிட இட்டுச்சென்றார்கள் என்பதை அறியமுடிந்தது. இதன் பிரதிபலனாக சிறு, சிறு, உதவிகளைப் பெற்றுக்கொள்ஞம் உள்நோக்குதான், இவ்வாறு தான் பிறந்தபோது பின்பற்றிய சமயத்தில், பெற்றவர்கள் சார்ந்த சமயத்தை துறந்து, சிலருடன் அற்ப சொற்பங்களைக் குறியாக்கி, வேற்று மதத்தில் புகவேண்டிய தேவை ஏற்பட்டது போலும்!
இவ்வாறான நிலைமை, தமிழர்களிடையே(இந்துக்களிடையே) உள்ளக- வெளிநாட்டில்- இடம் பெயர்ந்தும்- புலம் பெயர்ந்தும் பெரிதும் பரவியுள்ள ஒன்றாகும்! இதற்கு முதன்மைக் காரணம், இவ்வாறு, தாம் சார்ந்த- பிறந்த மதத்தில் கடவுளைத் தேடமுடியாது என்று, நன்றாக அறிந்த பின்னர், புதிய- மாறிய மதம் பற்றி நன்கு கற்றுக்கொண்ட பின்னரே மதமாற்றம் மேற்கொண்டதாகக் கூறின், அதனை ஒரு தனிமனித சுதந்திரம் என்றுகூட ஏற்க முடியும்.

மற்றும், இருவர் விரும்பி மணஞ்செய்பவர்களாக- வாழத் தீர்மானித்து மதமாற்றம் (ஒருவரின் மதத்திற்கு மற்றவர்)மாறுவதையும் அனைவரும் ஏற்பர்.
இவற்றுக்கும் மேலாக, பிறரின் தூண்டுதல்- வேண்டுதல்- பிரசாரங்கள் போன்றவற்றிற்கு வளைந்து நிற்பது ஏற்புடையாகாதது.

தூரநோக்கில்- எதிர்விளைவுகளையும் (தான் சார்ந்த குடும்பம், சமூகம், ஊர், உறவு என) ஏற்படுத்தலாம். புலம் பெயர்ந்த சூழலில், மதம் சார்ந்த விடயங்கள் இன்றைய ஐரோப்பிய மக்களை குறிப்பாக இளைய வயதினரின் கருத்தியலில் 'மதம் சார்ந்திருப்பது' பெரிதும் தேவைக்குரியதாக நோக்கப்படவில்லை. இதை நடைமுறை வாழ்வியலில் காணமுடிகிறது. வாரத்தில் ஓய்வுநாளாகிய ஞாயிற்றுக்கிழமைகளில் வட்டாரத்தில் உள்ள வயோதிபர்கள், மற்றும் அந்த வட்டாரத்தில் குடியேறிய புதியவர்கள் சிலரே தேவாலய மண்டபத்தில் வருகை தருவதைக் காணமுடிகிறது.


பிறந்த தமது நாட்டில் இந்து-சைவ ஆலயங்களில் முகாமைத்துவம்- உரிமை கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவாகள், தமது மதங்களில் அதிக பங்கு கொண்டிருந்த குடும்பங்களிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள், இவ்வாறு மாற்று மதத்தில் மாறியதை அறிந்து மனமுடைந்தவர்கள் பற்றிய நிலை பற்றி நிறைய செய்திகள் உண்டு. காலனித்துவ காலத்தில், ஆட்சியில் இருந்தவர்களின் கட்டாயத்தால், தமது மதங்களைவிட்டு, ஆளவந்தவர்களின் மதங்களைத் தழுவி பல நன்மைகளை பெற்றுக்கொண்டவர்கள், மூன்றாம் உலக நாடுகளில் எங்குமே உள்ளார்கள்.


புலப்பெயர்வின் மூன்று தசாப்தம் கடந்த நிலையில், ஆங்காங்கு தமிழர்கள் வாழும் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா எங்குமே இன்று மிகப்பாரிய அளவில், கோவில்கள், திருவிழாக்கள், சமய வழிபாடுகள் எனக் காணப்படுவது ஆச்சரியமானதுதான். சில இடங்களில் கைவிடப்பட்ட தேவாலங்கள் நம்மவர்களது வழிபாட்டுக் கோயிலாகியுமுள்ளன. காலனித்துவ அதிகாரத்தால் தேவாலயங்களை அன்று மூன்றாம் உலகில் புகுத்தியவர்களது பூர்வீக மண்ணில் அகதிகளாகக் குடியேறியவர்கள் தமக்கான ஆலயங்களை அமைத்துள்ளதானது விசித்திரமானதுதான்.


இதன் மூலம், ஏற்பட்டுள்ள விளைவுகள் பற்றி சிந்தித்துப் பார்க்கின், சமயம் பற்றிய தத்துவ விளக்கம், குறைந்தது சமயத்தைப் பற்றிய தெளிவு, சமய அறிவு, அதன் நம்பகத்தன்மை, அதன் வழி ஏற்பட்ட மக்கள் தொண்டுக்குரிய எத்தனங்கள், சமயம் பற்றிய சிந்தனை உரையாடல், புதிய வாழ்க்கை நோக்கில் சமயத்தின் பங்கு, எதுவுமே எங்கும் எடுத்துக் காட்டுமளவுக்கு, நிகழ்ந்திருப்பதாக கூறிடமுடியவில்லை என்பது வருந்தவேண்டியதாகும்!



வெந்த புண்ணில் வேலைப் பாச்சுவதா?
புலப் பெயர்வின் அரசியல் முக்கியம் முழுமையாக்கப்படாமல், வெறும் நுகர்ச்சி, ஆடம்பரம், நீண்டு செல்கின்ற பாமரத்தனங்களின் வெளிக்காட்டல், போன்றவற்றின் அதீத ஈடுபாடுகளில் கவனஞ்செலுத்தி, தமது கடின உழைப்பின் மூலம் சேர்த்துக் கொண்ட பொருளை, விஞ்ஞான முறையில் சேமிப்புக்குள்ளாக்குவதை கருத்தூன்றிக்கொள்வதற்குப் பதிலாக, சேமிப்பாக கூறி, தங்கக் குவியல்களை (தரம்- தரம் அற்றதா, என்பதை விட்டு) ஆசைவழி –மனம் போனவழி, தேக்கியதன் விளைவை, தமிழர் வதிவிடங்களில், தொடர் கொள்ளைகள், பட்டப் பகலில் இடம்பெறுவதிலிருந்து அறியமுடிகின்றது. இந்த இழப்புக்கள் மிக அதிகம் எனவும் தெரியவந்துள்ளது. இதனால், புலம்பெயர்ந்த வாழ்வில் புதியதொரு அச்சப்பாடு எங்குமே நிலவுகின்றது!

திருமணத்தின் போது,பெண்ணுக்கு மாப்பிள்ளை, சுபவேளையில், கட்டும் மாங்கல்ய நாண், பின்பு தத்தமது பொருள் வரவுக்கேற்ப, அளவு கடந்த பெறுமதியில், மாற்றிக் கொள்ளும், புதிய ஏற்பாடு தோன்றியிருப்பது அவதானிப்புக்குரியதாகியது புதியதுதானே. கிலோக்கணக்கில் கழுத்தில் சுமக்கும் காரணமாக சிலர் கழுத்து நோய்களுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள்!


சில வருடங்களுக்கு முன்னர், தொடர் வண்டிப் பயணமொன்றில், சிறிலங்காவில் தமிழர் நிலைமை பற்றித் தெரிந்து கொள்ள விரும்பிய, ஜேர்மனியர் எம்முடன் நடாத்திய பன்முக உரையாடலின் இடையில், "உங்கள் பெண்கள், தங்க நகைகளை மிதமாக அணிவது, தத்தமது கணவர்மார் பணக்காரர் என்பதை பிறருக்கு வெளிப்படுத்துகின்ற நோக்கமென கருதமுடியுமா?" என்று பேச்சுக்கு மத்தியில் கேட்டதை மற்கமுடியாத நினைவுடன் பதிவிடுகிறேன்.

அகதிகளாக இறைஞ்சி வாழும் நம்மவர்களின் நடாத்தைகள் எவ்வாறெல்லாம் மற்றவர்களது பார்வைகளால் அலசப்படுகிறதென்றும் இங்கு தம் கண் முன்னால் தெரியும் தமிழர்களது நடாத்தையின் பார்வை ஒட்டுமொத்தமான தமிழர்களது நடாத்தைகளாக பொதுப்பார்வையாகின்றன என்றும் அன்று வேதைனைப்பட்டேன்.
முன்பு, சிறுகச் சிறுகச் சேமித்த நம் முன்னோர்கள், பெட்டிகள், முட்டிகள், முடிச்சுக்கள் என கொண்டிருந்ததை தத்தமது வமிசாவழியினருக்கு பழுதடையாமல் கொடுப்பதற்காக உருவான நடைமுறைதானே இது. ஆயினும் இன்று, அதே பாணியில், பணத்தை வைத்து பெருக்கும் பல வழிகள் இருந்தும், தங்கத்தில் மோகமுற்று, தேடி வைத்து, ஈற்றில் இழந்து வருந்தும் பலரைப் பார்த்து பரிதாபப்படுவதைத் தவிர வேறு என்னதான் செய்யமுடியும்? எதையும், பறிகொடுத்து, பட்டறிவு பெற்ற பின்னர் தான் புத்தி பெறமுடியும் போலும்!

இன்று, தமிழினத்தவர் படும் அவலங்களின் மூலத்தைப் பற்றியதை இங்கு பேசவேண்டியதில்லை ஆயினும், அங்கு நம்மவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றவற்றை வரிசைப் படுத்துவதற்குப் பதிலாக, அவர்களின், துயரங்களைத் தீர்க்கவும், அவற்றை வெளிப்படுத்தவும், முடிந்தவரையில் உதவிடவும் வேண்டிய தார்மீகப் பொறுப்பினைத் தவறாது நிறைவேற்றுவதற்குப் பதிலாக, நொந்து நலிவுற்றவர்கள் பற்றியும், அவர்களைப் புணபடுத்துவது போலவும், மாற்றினத்தவர்கள் நம்மை, ஏளனஞ் செய்வது போலவும் காரியங்கள் கண்மூடித்தனமாக மேற்கொள்ளலாகுமா? என்பது சிந்திக்க வேண்டியதாகும்.


புலம் பெயர்ந்த தமிழர்களின் விளிப்புணர்வற்ற, தமது மக்களின் ஒட்டுமொத்த நிலையை தெரிந்துணர்ந்திராத அவலநிலை அம்மணமாகப் பதிவுற்றிருக்கிறது. தனிப்பட்டு, விபத்து மரணம் எய்திய தமது, குடும்பத்தில் ஒருவர் இறக்கின், அவருக்குரிய(மறைவுக்கு காட்டப்படும், சமய சம்பிரதாயங்கள் என்று கூறி) சிரார்த்தங்களை மூன்று, ஆறு மாதங்களுக்கு பின்னரே மேற்கொள்ளுகின்ற வழக்கம் நம்மவர்களுக்கு உண்டு. இழவு நடந்த குடும்பத்தார் குறைந்தது ஒரு வருட காலத்திற்கு விசேடங்களில் கலந்து கொள்ள முடியாதென்ற வழக்கமும் இருந்தது.

இரவு பகலென இன்னல் துயரங்களுக்குட்படுத்தப்பட்டு நம் உடன்பிறப்புகள் ஆயிரமாயிரமாக கொல்லப்பட்டிருந்த வேளையில், உயிர் தப்பியவர்களுள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள், உடல் உறுப்புக்கள் இழந்தவர்கள், பசிக்கொடுமைக்கு உள்ளாகியவர்கள், யுத்த களத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் எனக் கூறப்பட்டு, முட்கம்பிக்குள் முடக்கப்பட்டு யாசிப்பாரின்றி பரிதவிக்கும் நிலையில், பட்டுப்பீதாமபரங்களுடன் புலம் பெயர்ந்த நாடுகளின் வீதிகளில் உலாவந்து, தடல்புடல் என வேடிக்கை வினோதங்களுடன் வடம்பிடித்து தேரில் வந்தது தேவர்களா? கடவுள்களா? மனிதர்களா? எனக் கேட்கப்படும் கேள்விக்கெல்லாம் பதில்தான் என்ன?


தன்னை பன்னெடுங்காலமாக யாசித்த மக்களது ஈனக்குரலில் கதறிய அவலத்தைப் போக்க இந்தக் கடவுகள்களுக்கு முடியாது போனாலும், ஏதுமே நடவாத பாவனையுடன் உலகத் தெருக்களில் பவனி வந்தது உறுத்தவில்லையா? இந்த புலம்பெயர்ந்த தமிழர்களாலேயே உலகின் பிரதான நகரங்களைப் பார்க்கக் கிடைத்த வெக்கங்கெட்ட கடவுள்களும், மானங்கெட்ட மனிதக் கூட்டமுமான ஊர்தலாகவே இதை நோக்க முடிந்தது சோகம்தான்!


நாடே பிணக்காடாகி, பிண வாடை வீசுகின்ற தற்போதைய சோகங்கள் புலம் பெயர்ந்த தமிழர்களின் கணகள் திறக்கப்பட்டு, உண்மைகள் நெஞ்சங்களை உறுத்தவில்லையா? சாதாரணமாக ஓரிடத்தில் அதிகவளவிலான பேரிழப்பு நிகழுமாயின், வருடா வருடம் தவறாது நடாத்தப்படுகின்ற சமய, சமூக விழாக்கள்(வீழ்ந்து, மடிந்த சொந்த மக்கள் நினைவாக நிறுத்தி!) நடைபெறாது நிறுத்தப்பட்டு அனைத்தையும் அடுத்தாண்டில் புதிய குடமுழுக்கு நிகழ்வுகளாகி புத்தெழுச்சியுடன் தொடர்ந்திடுவதுதானே பொது வழக்கு.... இவ்வாறாக இங்கு நம்மவர்களால் இந்த மத நிகழ்வுகள் நடாத்தப்பட்டிருந்தால் நம்மவர்களின் அவலம் உலகத்தினர் அனைவரையும் திரும்பிப் பார்க்கவும், நெஞ்சம் உருகவும் செய்திருக்குமே! ஆனால் இதைச் செய்ய யாருமே நினைக்கவே இல்லையே!
(நினைவுத் துளிகள் சொட்டும் .....)

Sunday 6 September 2009

சுவட்டுச் சரம் - 1 நினைவுத்துளிகள் (13)


சுவட்டுச் சரம் -1
பெர்லின் புலம்பெயர்வு தொடக்க கால நினைவுகள்
நினைவுத்துளிகள் (13)

- குணன்


இன்று, உலகின் பல நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழத்தமிழரிடையே மிகுந்த இடைவெளி தோன்றி,மொழி வேற்றுமை காரணமாக,ஊர்,உறவு காரணமாகத்தானும்,குறிப்பாக,இளைய தலைமுறையினரிடையே காத்திரமான எண்ணப் பரிமாற்றங்களை வைத்திருப்பதில்,மொழி வேறாக, இருப்பதால் கடினமாகியுள்ளதை அவதானிக்க முடிகிறது.உதாரணமாக,பின்லாந்து,டென்மார்க்,சுவிடன், நோர்வே,ஜேர்மனி,ஒல்லாந்து,பிரான்ஸ்,இங்கிலாந்து போன்ற,ஒரே குடுபம்பத்தின் புதிய தலைமுறையினர், தமது பெற்றோரின் மொழியில் கற்றறிவு பெறாது,வெறும் பேச்சு மொழியில் மட்டும்,உரையாடுவதால், உறவை வளர்க்கப் போதும் என்ற ஒரு பொய்மைதான் வளர்ந்துள்ளது.இத்தகைய நிலை,இன, மொழி அடையாளங்களை வெளிப்படுத்தவோ,வளர்க்கவோ,போதுமானதாக இருக்கப் போவதில்லை!


இங்கே அதிதி, அங்கே அகதி, எங்கே தமிழ் மானுடர்?


உறைவிடம் நாடி, ஊரைவிட்டு வந்தவர்கள் என்ற உண்மையை மறந்து, உலா வரும் பொய்யான கோலத்துள், மேலை நாடுகளில் வாழும் நாம் மாறிவிட்டால், வருங்காலம் நிச்சயம் காணமால் போய்விடலாம்! இங்கு வந்தவர்கள், வாழும் நாடுகளில் நிரந்தரவாசிகளாகிவிட்டால், எங்கள் இருப்பு உறுதிப்பட்தாக நினைப்பது தவறாகும் என்பதற்கு ஐரோப்பாவில் வாழ்ந்த இஸ்ரேலிய மக்களே சான்றாகும். நாமும், எமது தலைமுறையினரும், தம்மை யாரென்ற தேசிய அடையாளங்களுடன், காத்து வாழத் தலைப்படுவதுதான் உண்மையான கோட்பாடன்றி, வந்த நாடுகளில் நாம் யாரென்ற நிலையைத் துறந்தோ-மறந்தோ இருந்தால், அதுவே யதார்த்தமாகி விடமாட்டாது!
இன்று வாழும் நாட்டில், ஒழுக்கம், பண்பு காத்து வாழக்கூடாது என்பது என் கருத்தல்ல. பதிலுக்கு -முதல் நாம் நல்ல தமிழர்களாக வாழாது, மறைந்து கொண்டு, நல்ல ஆங்கிலேயர்கள், நல்ல பிரஞசுக்காரர்கள், நல்ல ஜேர்மனியர்கள், நல்ல கனேடியர்கள், நல்ல அவுஸ்திரேலியர்கள் மற்றும் வாழும் நாடுகளின் இனத்தவர்களாக -வாழும் நாடுகளில்- வந்த விருந்தினர்- அதிதிகள் என்ற நினைப்பில், காலத்தை தொலைப் பவர்களாக மறந்தும் மாறிவிடக்கூடாது! அவ்வாறு ஒருநிலைமைக்கு ஆளாகாமல், என்றைக்காவது எமது முந்தைய தலைமுறை தலை முறையாக வாழ்ந்த தாய் மண்ணை நாடவேண்டியதென்பது, ஒருநாள் ஏற்படவே செய்யும்! இங்கு நாம் வந்து வாழ்ந்து, வாழ்க்கைப் பாதையில் வெற்றி கண்டு, எதனைச் சாதித்தோம்? என்ற சுயவிமர்சனத்துக்கு எம்மை உட்படுத்தாவிட்டால், நாம் சந்தித்ததெல்லாம் வளர்ச்சியா, வீழ்ச்சியா என்பதை எப்படி எடைபோடமுடியும்? தமிழர்கள், பெரும்பாலும், யாரையும் அண்டி வாழ்வதும், மண்டியிடுவதும் மட்டுமே கைக்கொள்வதால், தமது தனித்துவத்தில் நம்பிக்கை இழந்து, வீரமற்று கோழைகளாகி விடுகிறார்கள் என்று, “தென் இந்தியா பற்றிய தனது கருத்தை, கார்ல் மாக்ஸ்” Fறிப்பிட்டு, சீக்கிய, ராஜ்புத்திரர் போர்க்குணம் படைத்தவர்களல்லர் (தமிழர் உட்பட தென் இந்தியர்கள்!), என்பதற்கு, அண்மையில், ஈழத்தமிழ் அப்பாவிகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்செயல்களில், ஆயிரம், ஆயிரம் என மக்கள் அடைந்த கொடுமைகளை, தென்னிந்தியர்கள்(திராவிடப் பெருங்குடியில் வந்தவர்கள் என பீத்திக்கொண்டிருப்பவர்கள்!) அவலங்களுக்குள்ளானவர்களுக்கு, எப்படிக்குரல் கொடுத்தார்கள் எனபதையும், அதே காலப் பகுதியில், சீக்கிய மத குரு ஒருவர், மற்றொரு சீக்கிய பிரிவினரால் கொலை செய்யப் பட்டதை அறிந்தவுடன், அதனைக் கண்டித்து, பஞ்சாப்பில் ஏற்படுத்திய தாக்கம் முழு இந்தியாவிலும் எதிரொலிக்கச் செய்தது! இதிலிருந்து கார்ல் மார்க்ஸ் கூறியது,நருPபிக்கப்பட்டது! ஆனாலும்,தமிழகத்தில்(தமிங்கழம்!) ஈழத்தமிழர்களுக்கு, "டைகர் பாம்" (பொம் அல்ல!) தடவுவதைப்போல, (ஊழலில் உழுத்துப்போனவர்கள் உட்பட) தெருவோர கூத்துப்போட்டுக் காட்டித் தாமே தமக்கு பொன்னாடை போர்த்தி, சான்றிதழ் வணங்கி, நாட்டையே நாறடித்துவிட்டார்கள் என்பதுதான் உண்மையாகும்! புலம் பெயர் வாழ்விடத்தில், குழந்தை பிறந்தால் பெயரிடல் என்பது தத்தமது அடையாளத் தொடரின் இருப்புக்கான முக்கியத்துவமானது. இதற்கான தார்மீகப் பொறுப்பு பெற்றவர்களுக்கானது என்பதை மறந்தவராகி, வீட்டில் வளரும் சிறு பிராணிகளுக்கு மட்டும் வைக்கும் பெயர் போல, குடியுரிமைக்காக பெயர் வைப்பதென்பது ஏற்கமுடியுமா? தமிழன் தடுமாற நேர்ந்ததால் -தடம் மாறிவிடலாமா? கூடவே கூடாது!

புலப்பெயர்வில் பெற்றுக் கொண்டதா, கற்றுக்கொண்டதா, தொலைக்கப்பட்டதா அதிகம்?


இப்படி ஒரு தலைப்பில், அண்மைக்காலமாக அறிமுகமாகி, மேலை நாடுகளில், வாடிக்கையாளர்களாக புலம்பெயர் குறிப்பாக ஈழத்தமிழர்கள் இல்லங்களில்(இலவசமாக சில வாரங்கள் காண முடிந்த பின்னர்) காட்சி ஒலிபரப்புக்களின் வானொளிக் கதவுகளைச் சாற்றிட முன்னர், வலம்வரும் "ஆடரங்கங்க, தேடலற்ற அரட்டை" போன்ற பல்வேறு பட்ட, மலினங்களைப் போலன்றி, ஒரு கருத்தாழமிக்க நிகழ்ச்சி அல்லது நிகழச்சிகள் எங்காவதாயினும் நடந்தேறியிருந்தால் அதனை அனைவருமே கண்கொண்டும் பார்த்தும், காதுகளால் கேட்டும், நெஞ்சில் நிறுத்தி, நிலைமையை எண்ணிப்பார்த்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.
ஆனால் அவ்வாறான, சிந்திக்கவைக்கும் நிகழ்ச்சி பற்றி எங்கும்-எதிலும் தந்திருப்பின், அதனை வரவேற்போம்! ஆயினும், வானளாவிடும், பல்வகை வெகுசன ஊடகங்களாகவும், தனி அல்லது கூட்டு வர்த்தகப் பதாதகையின் கீழ், உருண்டோடிக் கொண்டிருப்பது என்பது, அரைத்த மாவைத் திருப்பித் திருப்பி அரைப்பதைப் போல, இரவும் பகலும் ஒன்றை மட்டும் புகுத்தும், வர்த்தகத் தந்திரோபாய நோக்கம், இலவச கலர்த் தொலைக்காட்சியுடன் இணைப்பு (மின்சார வெட்டு உட்பட) வழங்குவதும், இவற்றுக்கு மேலாக, தமிழ் மக்களை மட்டரகமாக்கி, தமிழ் மொழியை அறவே புரியாத -தமிங்கில திலகங்களை முன்னிலைப் படுத்தி, தினமும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்ற, தமிழகத்தின் வழியில்,“ஈயடித்தான் கதை“போல, அனைத்து நிகழ்ச்சிகளும் (மிக மிக குறைந்தளவிலான எண்ணிப்பார்க்க வைக்கும் நல்லவை தவிர) கொஞ்சம் மாற்றப்பட்ட மீள் ஒளிபரப்பு போல பல நிகழ்ச்சிகளாக அமையவேண்டியதன் தேவைதான் என்ன? என்றவாறு கேட்கக்கூட யாருக்கும் இங்கு உரிமை கிடையாதென்பது சோகம்தான்! பணம், வசதி, நேரம் உள்ளவர்கள், தனிமையால் நேரத்தை செலவு செய்யும் வழி அறியாது உள்ளவர்களுக்கு, இதன் பயன்பாடு ஓர் அரிய வரப்பிரசாதம் என்பது உண்மைதான்! இதனைப் பலரும் பாவிப்பதால் (பயனோ- பாதகமோ!), மவுசு இல்லாமல், ஏன் இதனை இத்தனை பெரும் பொருள் முதலீட்டில், இயக்க முன்வரவேண்டும்? இதனை, "வாங்குவோன்-விற்போன்" என்று மட்டுமன்றி, இதன் விளைவுதான், எப்படி உள்ளது? என்ற கேள்வியும்-மதிப்பீடும் ஏற்படுவதும் தவிர்க்கமுடியாத ஒன்று! சில தனிமனித விருப்பு, வெறுப்பு, மாற்றுக்கருத்து, மதிப்பீடு, எனவரும் போது அதன்பின்னணியில், நிச்சயம், ஓர் மூகஅக்கறையன்றி, வர்த்தக அக்கறை இருக்கமாட்டாது! பல்லினமக்கள், புலம் பெயர்ந்து- கலந்து வாழ்கின்ற நாடுகளில், கடந்த கால்நூற்றாண்டு காலத்தை தாண்டிய நிலையிலும், தாம் வாழ்கின்ற நாடுகளின் காலநிலைக்கேற்றவாறு, உணவு, உடை, உடல் நலம், பொழுது போக்கு, மனநலம், உறவு என, கவனத்தில் எடுத்து வாழாது, வாய், கண் விரும்புவதை மட்டும் விரும்பி, உடல், உள்ளம் பாதிப்புக்குள்ளாகி உயிர் வாழ்வையே கேள்விக் குறியாக மாறும் மாற்றிய நிகழ்வுகள் பல படிப்பினைகளாக புலப்பெயர்வில் காட்டவும் காணவும் முடியும்! தமிழர் வரலாற்றில் மட்டுமன்றி,உலகின் பல்வேறு நாடுகளில் வாழ்கின்ற பல்லினத்தவர்களின் வரலாற்றிலுங்கூட புலப்பெயர்வு பற்றிய நீண்ட வரலாறு பற்றிய செய்திகள் தொடர்ந்து கொண்டிருப்பதைக் காணலாம்! ஆபிரிக்க, தென்-அமெரிக்க, மத்திய கிழக்கு, ஐரோப்பிய, ஆசிய இன மக்கள் போன்றோர் இடம்பெயர்வுக்கு உள்ளாகப்பட்டிருப்பதைக் காணலாம். மானிடவியலாளர்களின் கருத்தில், மனிதர்கள் பல்வேறு காரணங்களை முன்வைத்து இடம் பெயர்கிறார்கள், இதில் ஒடுக்குமுறை, பொருள் தேடல், இடமாற்றம் போன்றவை பிரதான காரணிகளாகும்!


தமிழர் இடப்பெயர்வுக்கான காரணிகளும் அதன் மறுபக்கங்களும்


18ம் நூற்றாண்டில், ஈழத்தமிழர்கள் ஆங்கிலக் கல்வியறிவில், முன்னணி நிலை எய்தியமையால், ஆங்கில எசமானர்களுக்கு நம்பிக்கையுள்ளவர்கள் என்ற அடைமொழிக்குரியவர்களாக மதிக்கப்பட்டதாற் போலும், இந்தியா, மலேசியா, சிங்கை போன்ற நாடுகளுக்கு ஆங்கிலேய எசமானர்களால், அழைத்துச் செல்லப்பட்டு உயர்பதவிகளில் வகித்தவராகினர். இரண்டாம் உலகப்போரில், யப்பானிய படைகளின் கீழ் கைப்பற்றப்பட்ட நாடுகளில், ஆங்கிலேயருக்கு துணைபோனவர்கள் பலர் கடத்தப்பட்டும், கொல்லப்பட்டும் வேறுசிலர், நாட்டைவிட்டு, மீண்டும் ஈழத்திற்கு திரும்பியதுமானதாக சென்ற நூற்றாண்டு வரலாறு பதிவானது. இவ்வாறு ஈழம் திரும்பியோர் சிங்கை-மலேயா பென்சன்மார் சங்கம் அமைத்து புதிய புலப்பெயர்வின் பணக்கார வர்க்கமாக தம்மை அடையாளப்படுத்தியது, 1950 முதல் ஒரு வரலாறு தான்!


தமிழர் பற்றிய ஆங்கில அறிஞர் அன்ரனி பெர்க்கிஸின் கருத்து


இரண்டாம் உலகப்போரில் பணிபுரிந்து, பின்னர், நாவலாசிரியராக மாறிய, ஆங்கில எழுத்தாளர், அன்ரனி பெர்க்கிஸ் என்பவர், தமிழரின் வாழ்வியல் பற்றி, நேரடியாக கவனித்து தெரிந்தறிந்தவற்றின் பின்னணியில் எழுதிய,“கிழக்கில் படுக்கை“ (Bed in the East)நாவலில், தமிழ் கதாநாயக-நாயகிகளை உருவாக்கி (இடைக்கிடையே, தமிழ் வசனங்களையும் புகுத்தி) யதார்த்த குணாதிசயங்களையும் சுட்டி, யாழ்ப்பாணத் தமிழர்கள் ஆங்கில அரசின் ஆட்சி, சிறப்பாக நடந்தேற காலனித்துவ ஆட்சி நடைபெற்ற நாடுகளில், விசுவாசத்துடன், கடமை புரிந்துள்ளார்கள். இவர்களில் திருவாளர் சுப்பிரமணியம் (Mr.Maniam) ஒருவர்! என்று குறிப்பிட்டிருந்தார்! (They (the Jaffna tamils ) helped the British Masters to run their government !!) என்றவாறு, அன்றைய தமிழரின் புலப்பெயர்வும், இன்றைய பெயர்வுகளுக்கும் இடையே நிலவுகின்ற கருத்துருவாக்கம் எங்கே நகர்த்தியுள்ளது என்பதை சிறிது பார்ப்போம்!



(நினைவுத் துளிகள் சொட்டும் .....)

Wednesday 2 September 2009

கதைச் சரம் - 13 சோதிடரின் மொழியாடல் திறன்


கதைச் சரம் - 13
செவி வழிக் கதை - 11

சோதிடரின் மொழியாடல் திறன்

முன்னொரு காலத்தில் வாழ்ந்த அந்த இளைய இராசாவுக்கு சோதிடத்தால் ஒரு பிரச்சினை வந்தது. இளம் வயதில் பட்டமேற்றிருந்த இந்த இராசா அதிகமான துடிப்புடன் பணிகளை ஆற்றியதால் மக்களிடததில் மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்தான். மட்டமளிப்பின் போது அரசவை தலைமை சோதிடர் அதிகம் பேசாதவராக இருந்தது அவரின் கீழ் பணியாற்றிய சோதிடக் குழுமத்திற்கும் சங்கடமாக இருந்தது. எல்லாவற்றுக்கும் பட்டமளிப்பு நாளுக்கு முன்னர் நிகழ்ந்த உரையாடல்தான் காரணம்.

மக்களிடம் நன்னமதிப்பைப் பெற்றிருந்த வயதான இராசாவின் மறைவினால் தலைமைப்பொறுப்பு இந்த இளவரசனுக்குக் கிட்டியது. அந்த இராசாவுக்கு முதலில் பிறந்த அறுவரும் பெண்கள், இவன்தான் கடைக்குட்டியாக அந்த அரண்மனையில் வந்த ஆண் வாரிசு. சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்றவனாகி வளர்ந்து வந்த இளவரசருக்கு தந்தையின் திடீர் இழப்பால், ஆட்சி பீடமேறவேண்டி வந்தது. இதற்காக மூத்த மந்திரிகளும், நிர்வாக அதிகாரிகளும் செய்த ஆலோசனையில் நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றத்தில்தான் பிரச்சனையே தோன்றியிருந்தது.

"இளவரசே! தங்களது சோதிடத்தில் ஒரு கண்டம் இருக்கிறது. நீங்கள் அவசரப்படக்கூடாது!..... இப்போது, நீங்கள் அரசபீடமேறினால், உங்கள் முன்னிலையில் தங்களது குடும்ப அங்கத்தவர்கள் பலியாக நேரிடும்." இதுதான் தலைமை சோதிடர் அக்கறையாகச் சொன்ன கணிப்பு.

இதைக்கேட்டு வெகுண்டெழுந்த இளையவரான இளவரசர் "சோதிடமும் மண்ணாங்கட்டியும்!........ நான் இப்ப பதவியேற்காதுவிட்டால் நாட்டை யார்தான் காப்பது?" என்றவாறு நடக்கவேண்டியவற்றை ஆணையிட்டுவிட்டுச் சென்றுவிட்டான்.

பதவியை ஏற்றிருந்தபோதிலும் இராசாவுக்கு சோதிடரின் வார்த்தகளிலான சங்கடம் தொடரத்தான் செய்தது. எனவே 'வேறு சோதிடர்களை வரவழைத்து இன்னுமொரு முறை பார்த்தால் என்ன?' எனவாக ஓடிய தன் சிந்தனையை தலைமை மந்திரியிடம் தெரிவிக்க இதற்கான ஏற்பாடுகளை மந்திரிசபை செய்தது.

இதன்படி அயலூரில் பிரபல்யமாக இருந்த இன்னுமொரு சோதிடர் வரவழைக்கப்பட்டு பழைய குறிப்புகளைக் கொடுக்காமல், புதியதாகக் கணித்துப் பலன் சொல்லும்படி கேட்கப்பட்டது. அவரும் மூன்று நாள் அவகாசமெடுத்து தனது கணிப்புகளுடன் வந்தார். அன்று மந்திரி சபை இதற்காக விசேட கூட்டமொன்றை நடாத்தியது.

இதில், "மன்னா! தங்களது சோதிடப்படி ஒரு குறை இருக்கிறது. இதன்படி தங்கள் முன்னிலையில் தங்களது குடும்ப அங்கத்தவர்களது மரணங்கள் நிகழப்போகின்றன!" என அமைதியாகக் கவலையுடன் தெரிவித்தார் அந்தப் புதுச் சோதிடர். அரசவை திகைத்துப் போனது. மன்னன் ஆத்திரத்தால் வெகுண்டெழுந்தான். "யாரங்கே! இந்தச் சோதிடரை அடையுங்கள் சிறையில்..." ஆணை பிறந்தது.

மந்திரிமார் செய்வதறியாது தடுமாறினர். எல்லாவற்றுக்கும் காரணமான அரண்மனைத் தலைமைச் சோதிடரும் சிறையில் அடைக்கப்பட்டார். அவரின் கீழ் வேலை செய்தவர்களையும் சிறையில் அடைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் சிலர் தலைமறைவாகினர். சிலர் பிடிபட்டனர்.

கொஞ்சக் காலம் செல்ல இராசாவின் அம்மாவாகிய மகாராணியும் நோய்வாய்பட்டவராகி காலமானார். ஆனால் அந்த ஊரில் மக்கள் சோதிடம் பற்றி குசுகுசுப்பதே இலலை. 'ஏன் வீண் வம்பு?' என தத்தமது சோலிகளைப் பார்த்த வண்ணம் இருந்தனர்.

இப்படியாகக் கழிந்து கொண்டிருந்த வேளையில், வெளியூரைச் சேர்ந்த ஒருவன் அவ்வூருக்கு வந்திருந்தான். நிமிர்ந்த நடையும், குறுந்தாடியும், தோழில் தொங்கும் பையில் சுவடிகளுமாக இருந்த அவனைப் பார்க்கும் போது நன்றாகக் கல்வியறிவு பெற்ற ஞானியாகத் திகழந்ததால் பலரும் அவனையணுகி குசலம் விசாரித்தனர். ஆனால் அவனோ ஏதுமே பேசாது சிரிதவாறு இருந்ததால் விடையம் அரண்மனைக்குச் சென்றது. தலைமை மந்திரி விசாரித்து வருமாறு தனது செயலாளரை அனுப்பினார்.

"ஐயா! வணக்கம்!! நான் அரண்மனை பதிவாளர். தாங்கள் யார்? இந்த ஊருக்கு எதற்காக வந்திருக்கிறீர்கள்? எவ்வளவு காலம் தங்கப்போகிறீர்கள்? " என்றார் மரியாதையுடன் செயலாளர்.

"நான் ஒரு சோதிடன். உங்கள் இராசாவுக்குச் சோதிடம் கணித்துச் சொல்ல வந்திருக்கிறேன்." என்றார் ஒரு புன்முறுவலோடு. தலைமைப் பதிவாளர் உட்பட அனைவரும் திகைத்துப் போயினர்.
"ஐயா!, நீங்கள் வழிதவறி இந்த நாட்டுக்கு வந்துள்ளீர்களோ தெரியவில்லை. இங்கிருந்தால் சிறைக்குச் செல்ல வேண்டிவரலாம்..." என்றார் தலைமை அதிகாரி அக்கறையுடன்.

"ஞான் அனைத்தும் அறிந்தவன்!" என்றார் சிரித்தவாறு வழிப்போக்கனாக வந்திருந்தவர்.

'அட இப்பேர்ப்பட்ட பைத்தியக்காரனை இப்பத்தான் முதன்முதலாகப் பார்க்கிறன். வலிய வந்து சிறைக்குப் போக இருக்கிறானே!' என ஓடிய சிந்தனையால் தலைமை அதிகாரி தனக்குள் சிரித்துக்கொண்டவராக, "ஐயா, இந்த நாட்டு அரசபையில் சோதிடத்திற்கு இடமில்லை. இருந்தாலும் தங்களது கோரிக்கையை இராசாவின் கவனத்துக்குக் கொண்டுபோய் முடிவுடன் வருகிறேன்" என்று சொல்லி அவ்விடத்தைவிட்டு அகன்றார்.

புதிய சோதிடர் நாட்டுக்குள் வந்துள்ள செய்தி காட்டுத் தீயாகப் பரவ மக்கள் வேடிக்கைப் பார்க்கக் கூடினர். அரண்மனை அமைதியாக இருந்தது. தலைமை மந்திரிக்கும் பிறருக்கும் இத்தகவலை எப்படி இராசாவுக்குச் சொல்வதென்றே தெரியவில்லை. நேரம் திக் திக் எனவாகக் கழிந்துகொண்டிருந்தது. 'சரி, வருவது வரட்டும்!' என்ற முடிவோடு தலைமை மந்திரி இராசாவிடம் சொல்லவதென தன்னைத் தயார் செய்தவாறு எழுந்து சென்றார். மற்றைய அனைவரும் மறைந்திருந்தவாறு நடப்பதை உற்று அவதானித்தனர்.

"இராசாவே! வணக்கம்!! நம்ம நாட்டிற்கு சோதிடம் சொல்வதற்காக ஒரு புதியவர் வந்துள்ளார்!" தலைமை மந்திரி.

இராசாவின் முகத்தில் ஆச்சரிய உணர்வு வந்து மறைந்தது. "புதிய சோதிடனா? நம்ம நாட்டுக்கா?..." இராசாவின் வார்த்தைகளில் வியப்பும் இருந்தது, வந்துள்ள சோதிடனின் தற்துணிச்சல் தொடர்பான ஆர்வமும் இருந்தது. ஒரு கணம் யோசித்தவராக பேசாதிருந்தார்.

இதனை உணர்ந்த மந்திரி "அவரிடம் நம்ம நாட்டு சட்டதிட்டங்களைக் கூறியிருக்கிறேன். நன்றாகப் படித்த மேதையாக அவரது பேச்சு இருக்கிறது...." என்றார்.

நீண்ட காலமாகச் சோதிடம் பார்க்காதிருந்த இடைவெளியும் சோதிடனின் துணிவும் இராவிடம் மனமாற்றத்தைக் கொண்டுவந்தது. "சரி! இவரையும் ஒரு முறை பார்த்துவிடுவோம். நாள் குறித்து அழைத்து வாருங்கள். அவருக்குத் தேவைப்பட்டதைச் செய்யுங்கள். ஆனால் தவறாகச் சொன்னால் கண்டிப்பாகச் சிறைதான் என்பதையும் கூறிவிடுங்கள்" என்றார் இராசா.

இராசா ஏற்றுக்கொண்டதானது அரண்மனையில் நிலவிய இறுக்கத்தைக் குறைத்தது. எல்லாமே வேகமாக நடந்தன. குறிக்கப்பட்ட நாளில் அரண்மனை சோதிடக்கூறலுக்காகக் கூடியது. பெரும்பாலான மக்கள் குழுமியிருந்தனர். 'புதிய சோதிடர் என்னதான் சொல்லப்போகிறார்? என்னதான் நடக்கப்போகுதோ?' என்பதாகவே பெரும்பாலானோரின் கருத்து இருந்தது.

புதிய சோதிடர் கம்பீரமாக எழுந்து நடந்து வந்து அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார். இக்காட்சியால் அனைவரும் மெங்மறந்தவர்களாகி, தத்தமது காதுகளைத் தீட்டியவாறிருந்தனர்.
"மன்னா! நீ மிகப் பெரிய அதிஷ்டக்காரன்! மிக மிக நீண்ட ஆயுள் கொண்ட யோகக்காரன்!! மிக மிக அதிக காலம் அரசபையில் இருந்து உன் நாட்டு மக்களுக்கு நல்லாட்சியையும் உன் குடும்பத்தார் அனைவருக்குமான நல்வாழ்வுக்கும் ஆதாரமாக இருக்கப் போகிறவன். இதனால்தான் உனக்கு இளவயதில் பதவிகிட்டியுள்ளது. நான் இதுவரையில் பார்த்த சாதகக் குறிப்புகளில் மிக மிக அதிகமாக ஆயுள் உள்ள சாதகம் உன்னுடையதுதான்!" என்ற முதற்கருத்தே இராசாவையும், சபையையும் வசீகரித்தது. இதனால் எழுந்த கரவொலி வானைப் பிளந்தது.

இராசா கிறங்கிப்போனவரானார். எழுந்து சென்று சோதிடரின் கையைக் குலுக்கி நன்றி தெரிவித்தார். "சோதிடரே! இப்படியாக எம்மைக் கவர்ந்த தங்களுக்கு ஏதாவது பரிசு தர விருப்பமாக இருக்கிறது. விரும்பியதைக் கேளுங்கள்!!" என்றார்.

"யான் கேட்பதைத் தங்களால் தர முடியுமா?" சோதிடர் இழுத்தார்.
"தயங்காமல் கேளுங்கள்" இராசாவிடம் உறுதி இருந்தது.
"மன்னா! தங்களால் சிறைப் பிடிக்கப்பட்டுள்ள சோதிடர்களை விடுவிக்க முடியுமானால் நான் மிகுந்த நன்றியுடையவானாவேன்." என்றார் பவ்வியமாக சோதிடர்.

ஆச்சரியத்தால் திகைத்தது சபை. சோதிடரின் பெருந்தன்மை இராசாவைக் கவர்ந்தது. தன் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை கழற்றி புதிய சோதிடருக்கு அணிவித்து "தங்களது கோரிக்கையை இப்போதே ஏற்றுக் கொள்கிறேன்!" என்றார் சிரித்தவாறு.

"நன்றி! நன்றி" என்றார் பணிவாக சோதிடர். சபை மீண்டும் கரவொலி எழுப்பி மகிழ்வை ஏற்றுக் கொண்டது.

சிறை மீண்ட சோதிடர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சந்தோசமோ சந்தோசம். இதற்குக் காரணமாகவிருந்த அந்தப் புதிய சோதிடருக்கு பாராட்டு நிகழ்வொன்று செய்வதென தீர்மானமாயிற்று.

சிறப்பு நிகழ்வு மகிழ்வாக நடந்து கொண்டிருந்தது. அனைத்துச் சோதிடர்களும் புதிய சோதிடரின் அறிவாற்றலையும் மனிதாபிமானத்தையும் பாராட்டி 'சோதிடக் கலையின் நிபுணன்' எனவாகப் பட்ம் சூட்டினர். அமைதியாகப் புன்முறுவலுடன் கேட்டவாறிருந்தார் புதியவர். கடைசியாக புதிய சோதிடரின் ஏற்புரைக்கான வேளை வந்தது. குண்டூசி விழுந்தால் சத்தம் கேட்குமளவில் சபை அமைதியாக இருந்தது. புதியவர் கம்பீரமாகப் பேசத்தொடங்கினார்.

"மதிப்புக்குரியவர்களே! தங்களது பாராட்டுகளுக்கு நன்றிகள். ஆனால் என்னை கொஞ்சம் அதிகமாகவே புகழ்ந்து விட்டீர்களென்றே தோன்றுகிறது. நானும் உங்களைப் போன்றவன்தான்! உங்களில் ஒருவன்தான்!!...." என்றவாறு சபையைப் பார்க்கிறார். சபை ஆச்சரியத்தால் மெய்மறந்திருந்தது.

"நான் என்னை மிகப்படுத்த விரும்பவில்லை. நன்றாக யோசித்து அலசிப்பாருங்கள்.... இராசாவின் சாதகம் தொடர்பாக நான் என்னதான் புதிதாகச் சொல்லி விட்டேன்?... நீங்கள் சிந்தித்துச் சொன்னதைத்தான் நானும் சொல்லியுள்ளேன்!!.... உற்று அவதானியுங்கள்... நான் சொன்ன சொல்லாடல்தான் கொஞ்சம் வேறுபட்டுள்ளது புரியும்" சபை ஈடாடிப் போனது. கொஞ்ச நேரம் சலசலப்புக்குள்ளானது சபை.
முன்னைய தலைமைச் சோதிடர் எழுந்துவந்து,
"ஆம்! ஐயா!! தங்களது சொல்லாடலின் மகிமையை இபபோதுதான் நாங்கள் உணர்கிறோம். எங்களது அறிவுக் கண்ணைத்திறந்து விட்டுள்ளீர்கள்!!" எனவாகச் சொல்லி புதிய சோதிடரை ஆரத்தழுவினார்.


-முகிலன்
எனது தந்தையாரிடம் சிறுவயதில் கேட்ட கதை
பாரிஸ் செப்டெம்பர் 2009