Tuesday, 15 September 2009

சரம் - 19 இறைச்சிக் கடையில் ஏன் சரசுவதி ?

சரம் - 19

இறைச்சிக் கடையில் ஏன் சரசுவதி ?

பக்திப் பிரவாகத்துடன் கோயில் பூசையுடன் அந்த இளம் அடுத்த தலைமுறைத் தமிழர்களின் திருமணம் ஐயரின் ஆசீர்வாதத்துடன் சென்ற ஞாயிறன்றுதான் நடந்திருந்தது. பிரமாண்டமான மண்டபத்தில் தமது அழைப்பை ஏற்று வந்திருந்த பெருங்கூட்டத்தின் ஆரவாரத்தால் பெற்றோர் சொந்தங்கள் பந்தங்களைச் சந்தித்த திருப்தியுடன் இருந்தனர். நடைபெறும் நிகழ்வுகளை ஆவல் ததும்பும் நிறையவே கேள்விகளோடுதான் வேடிக்கை பார்த்தனர் புகலிட இளந்தலைமுறையினர்.

இளந்தம்பதியினரை கல்யாணம் முடிந்தபின் முதல் பூசை பார்ப்பதற்காக கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். பூசை முடியவும் பெண்வீட்டார் நான்காம் சடங்கிற்குத் தேவையானவற்றை வாங்குவதற்காக கடைத்தெருவுக்குச் செல்ல விரும்பினர். ஐயர் விடுவதாக இல்லையாதலால், வேறு வழியில்லாது எல்லாம் முடிந்தபின் வரவேண்டிய கடையின் பெயரைச் சொல்லிவிட்டு (மீண்டும் சந்திப்பதற்கான இடம்) பெண்ணின் தந்தையும் மாமன்மாரும் அவசரமாக கடைத் தெருவுக்கு விரைந்தனர்.

கோயில் பூசை முடிய அனைவரும் பகிடிவிட்டுச் சிரித்தவாறு குறிப்பிட்ட கடைக்குச் செல்கின்றனர். அக்கடை இறைச்சிக்கடையாக இருந்ததால் கூடவே பல்வேறு சடங்குகள் அறியும் ஆவலுடன் வந்திருந்த மாப்பிளையின் தங்கைக்கு ஆச்சரியமோ ஆச்சரியம்....! ஆனாலும் ஏதும் பேசாதவளாகி சுற்றுமுற்றும் கடையை நோட்டமிடுகிறார். அவரது கண்களில் அங்கு மாட்டியிருந்த சாமி படம் பல கேள்விகளை எழுப்பிவிட்டது. மச்சம் சாப்பிட்டாலே சாமி அறைக்குள் நுழைய மறுக்கும் அம்மாவின் அறிவுரைக்கு இடி விழுந்தது போல் இறைச்சிக்கு முன் வீற்றிருந்த கடவுளைக் கண்டாள்.

அவளுக்குத் தெரிந்த சாமிகளின்படி அப்படத்திலிருந்தவர் சரசுவதியாகவே தெரிந்திருந்தார். சிறுவயதிலிருந்து சரசுவதி பூசையை வீட்டில் செய்தது பசுமரத்தாணியாகப் பதிந்திருந்தது.

'புத்தகக் கடையில் இருக்க வேண்டிய கடவுள் இங்கு ஏன் வைக்கப்பட்டிருக்கிறார்?' மனதுள் குடைச்சலெடுத்த கேள்வியை யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதென அவளுக்குத் தெரியவில்லை.

இதில் கதைத்தால் பெரிசுகள் என்ன நினைக்குமோ எனப் பயந்தவளாகி, தனது தமையனிடம் புகலிடச் சூழல் மொழியில்
"அண்ணா! இறைச்சிக் கடையில் ஏன் சரசுவதி படம் வைத்திருக்கிறார்கள்?" என்றாள்.

மாப்பிளை மயக்கத்தில் நடமாடிக் கொண்டிருந்த தமையனாரும் அப்பத்தான் அந்தப் படத்தைப் பார்த்தார். தங்கையின் நியாயமான கேள்வி அவரைப் பதில் சொல்லத் தூண்டியிருக்க வேண்டும்.

"சரசுவதி நன்றாக இறைச்சி சாப்பிடுவார் அதனால்தான் இங்கு வைத்திருக்கிறார்கள்" என்றார் புகலிடச் சூழல் மொழியில்.

அண்ணனின் தெளிவான பதிலால் தங்கையின் முகத்தில் மலர்ச்சி!!

கூட்டத்துடன் சென்றிருந்த நான் பொத்திக் கொண்டு வந்த சிரிப்பை அடக்கியவனாகி மற்றோரை நோட்டமிட்டவாறு முகத்தைத் திருப்புகிறேன். வழமைபோல் எதையும் சட்டை செய்யாதவர்களாக பெரிசுகள் தமது கருமங்களில் மூழ்கி இருந்தனர்.

ஒன்றாக வாழ்ந்திருந்த போதும்....., ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாக்களுடன்தான் அடுத்த தலைமுறை உலகம் தனித்தே இயங்கிக் கொண்டிருக்கிறது.

- அருந்தா
பாரீஸ்
செப்டெம்பர் 2009

2 comments:

 1. //மச்சம் சாப்பிட்டாலே சாமி அறைக்குள் நுழைய மறுக்கும் அம்மாவின்//

  வேதம்; அந்த வேதம் கூறிய வேள்வி; அதில் படைத்த இறைச்சி ; மது போன்றவற்றை உண்டார்கள்.
  என்ற விடயமும் அறியாத அறியாமை.
  இதை இன்றைய தலைமுறை சிந்திக்கத் தலைப்பட்டுள்ளது. மறு சிந்தனை கொண்டு வருவார்களெனில்
  பாராட்டே!
  இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலுமிருப்பானெனில்; சாமியறையிலும்; குசினியிலும் ஏன்? கக்கூசிலும் இருப்பான்.
  சாமியறை,குசினி;கக்கூசு இருக்கும் வீட்டில் சரசுவதி இருக்கலாமெனில்; இறைச்சிக்கடையிலும் தாராளமாக இருக்கலாம்.

  ReplyDelete
 2. நன்றி யோகன்
  அந்த இறைச்சிக் கடையிலிருந்த படம் சரசுவதியுடையதே அல்ல... இலட்சுமியுடையது!!
  கண்ணை மூடிக்கொண்டு வெறும் குருட்டு நம்பிக்கைகளையுடைய
  ஏராளமான கடவுள்களுக்குக் கும்பிடு போடும் நம்மவர்களால் சரியான விளக்கத்தை தமது அடுத்த தலைமுறைக்குக் கொடுக்க முடியாதது ஆச்சரியமானதல்லவே. அதுமட்டுமல்லாது கல்லைக் கண்டால் நாய் காலைத் தூக்குமே.....
  அதுபோல தம்மையறியாது எந்தத மதச் சாமிகளைக் கண்டாலும் கண்ணை மூடிக் கும்பிடும் பழக்கமுடைய நம்மவரை நினைக்க வருத்தமாகத்தான் இருக்கிறது!!

  - அருந்தா

  ReplyDelete