Tuesday 28 April 2009

சரம் - 3 மகா நடிகன்

1. மகா நடிகன்

புகழ்பெற்ற றிப்பப்லிக் சதுக்கத்தில் தொடரும் ஈழத்திற்கான கவனயீர்ப்பு போராட்டத்திற்குச் செல்ல இருந்தவேளை ஐங்கரன் தொலைக்காட்சியில் திடீரென புதிய காட்சி இசையில்லாது போய்க்கொண்டிருந்தது. உலகத்தமிழருக்கு நன்கு தெரிந்திருந்த முகம் காணப்பட்டதாலும், அவரது முதிய வயதின் காரணமாகவும் பலரின் கவனம் இங்கு குவிந்ததில் ஆச்சரியமில்லை.
ஆச்சரியமோ ஆச்சரியம்! தமிழ் நாட்டில் என்னதான் நடக்குதோ? வியப்பு உலகெங்கும் பரவியுள்ளதென்பதே எதார்த்த நிலை.
அம்மா தமிழீழம்தான் தீர்வென்கிறார்.
ஐயாவோ சாகும் வரை உண்ணாநிலை(!) என்கிறார்.
ஓட்டு வேட்கைக்காக என்னவெல்லாமோ நடக்கிறது. அங்கே ஈழத்தில் நாதியிழந்த மக்களாக தமிழர்கள் இரத்த்தில் குளிக்கப்படுகிறார்கள். உறவுகளின் நிலைகண்டு கொதித்துக்கிடக்கிறது உலகத் தமிழினம்.

சதுக்கத்தில் பரவலாக பலராலும் பேசப்பட்டது ஐயாவின் நிகழ்த்துக்கலை பற்றியே இருந்தது. அடடா எப்பேர்ப்பட்ட நடிகனை இதுவரையில் இனம்காணாது விட்டிருந்தோமே!
நம்மைக் கவர்ந்த நடிகர்களெல்லாம் மேடையிலும், திரையிலுமே நடித்திருந்தார்கள். ஆனால் தனது இயல்பான நடிப்பாற்றலால் வாழ்நாள் நடிகனாக அதுவும் பாத்திரத்துடன் இயல்புற ஒன்றியதாக நடித்த மகாநடிகனை இனங்காணாதது குற்ற உணர்ச்சியாகவே துருத்தியது. பாரிசில் பெய்துபொண்டிருந்த மழையையும் பொருட்படுத்தாது மக்கள் தமது கவனயீர்ப்பை நிகழ்த்திக் கொண்டிருந்தனர். தண்ணீரில் இயல்பான தோற்றங்கள் மிளிர்ந்து கொண்டிருந்தன.
எண்ணங்களால் அசைபோட்டுக்கொண்டிருந்த மனதில், வேடமிடாது வேடமிட்ட இந்த மகாநடிகனின் முகப்பூச்சு இப்படியா கரைவது?
எண்பதுகளைத்தாண்டியும் இப்படியாக வேடமிடும் எண்ணம் வருவதாக இருந்தால் இவருக்கு தமிழர்களின் சுயமரியாதை தொடர்பாக எப்படியானதொரு எக்காளமான கருத்துரு இருக்கும்?
எனக்கு பதின்மவயதிருந்தபோது படித்த சென் பற்றீஸ் கல்லூரியில் நிகழ்த்தப்பட்ட முதலாவது முத்தமிழ்விழா நிகழ்வின் மலரில் இவரைப்ற்றியும இவரது மொழியாடல் பற்றியும் எழுதிய கட்டுரையே ஞாபகத்தில் வந்து அருவெறுக்கத் தொடங்கிவிட்டது.
சாக்கடைக்குள் முழுவதுமாக தவறிவிழுந்ததும் அவசரமா முகத்தைத் துடைப்பதுபோல முகத்தைத் துடைக்கிறேன் அட மழைத் தண்ணீர்தான்!

இலங்கைத் தமிழ் மக்களுக்காக சென்னையில் தமிழ்த் திரையுலகம் நடாத்திய உண்ணா விரத நிகழ்வைப் பார்வையிடாதவர்கள் மிகக் குறைந்தளவில்தான் இருக்கமுடியம். இதில் நடிகனாக பலலரயும் கவர்ந்திருந்த ரஜனிகாந் உணர்ச்சிவசப்பட்டவராக 'இந்த ஈழத்தமிழர்களின் கொடும் கொலை வெறியில் ஈடுபடுவோர் நாசமாகப் போவார்கள்!' எனச் சாபமிட்டிருந்தார். இவரது கூற்று ராசபக்சேயை நோக்கியே இருந்தது் ஆனால் இந்த அழிவில் துணைபோய்க்கொண்டிருப்போருக்கும் இது பலிக்கப்போகிறது போலும்.

என்ன இருந்தாலும் ஐயா மகா நடிகன்தான்!! - ஏன் இன்னமும்உலகத்தமிழ் மகா நடிகன் எனும் புதிய பட்டத்தை வழங்கும் பாராட்டுவிழாவை ஏற்படுத்தாமல் இருக்கிறது தமிழ்நாடு சட்டசபை!

அநாமிகன் - பாரீஸ் 2009-0427

2.
பாரீஸ் தொலைத் தொடர்பை வழங்கும் வியாபார நிலையம்- மாலைவேளை, எத்தனை விதமான மனிதத் தோற்றங்கள், நடையுடை பாவனைகள், எத்தனை வகையான குரல்கள், மொழிகள் ஆகா...... பல்தேசியச் சமூகங்கள் வாழும் பாரீசில் இவர்கள் சங்கமிக்கும் ஒரு மையமாகவும் திகழ்வது இப்படியானதொரு இடங்களில் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. மனித மனத்தின் ஆறுதலுக்கான உணர்வுகளை வெளிப்படுத்தும் தொலைபேசி மையங்கள் என்றுமே (கோபம், தாகம், காதல், பிரிவு, இழப்பு, நேரடியாகச் சந்தக்க முடியாத பரிதவிப்பு என) உணர்ச்சி மயமாகவே இருக்கும். இப்போதெல்லாம் தொலைபேசி அட்டைகள் எல்லாப் பெயரிலும் கிடைக்கும். தொலைபேசிவிட்டு வருபவர்கள் காசு கொடுக்க வரும்போது அதன் தொகையைக்கண்டு மனக் கொந்தளிப்படைவது வழக்கமானதொன்று.

இதில் வாடிக்கையாளனிடமிருந்து எப்படியாவது கட்டணத்தொகையை அறவிடவேண்டுமென்ற பணி. 'ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்க வேணும், பாடுற மாட்டைப் பாடிக் கறக்க வேணும்!' முது மொழி நன்றாகத்தான் இருக்கும். ஆக வாடிக்கையாளனின் முகத்தில் மலர்ச்சியை உண்டு பண்ணவேண்டும். இதிலிருந்து வந்ததுதான் மில்லியன். ஒரு ஈரோவை ஒரு மில்லியன் எனச் சொல்வது. அதாவது 5 ஈரோ 40 காசுகள் கட்டணமாக இருந்தால் அதை 5 மில்லியன் 40 எனச் சொல்வது இதைக் கேட்டதும் முதலில் ஒரு அதிர்வு வரும். பின் சிரிப்பு தானாகவே கிளம்பும்.... கேட்டுக் கொண்டிருப்பவர்களின் கவனங்களும் இங்கே மையமிடும்.

இதனால் புன்முறுவலிடும் முகங்களையும், இந்தக்கடை கொஞ்சம் வித்தியாசமானதொரு நல்ல கடை என்னும் நேசவுணர்வுடனான பார்வைகளும் பதிவாகும். இதனால் இவ்வகையான வார்த்தையாடல்கள் நாளாந்தப் பணிகளாகிவிட்டன. தாங்கள் மில்லியனாகச் செலவழிப்பதை மனதில் நிறுத்திய கற்பனையுணர்வுடன் பதிகல்களும் நாணத்துடன் வரும்.
'மில்லியன் இருந்தால் நானேன் இங்கு பிரான்சில் இருக்கப் போறேன்.' அரபு ஆபிரிக்க வாடிக்கையாளர்களின் அதிர்வான பதில் இதாகவே இருப்பது வழமை. போட்டோக் கொப்பி பிரதியெடுக்க வந்திருந்த யூதர்கள் வழக்கம்போல் தமது மகத்தின் வழியாக எவ்வகையான பிரதிபலிப்புகளையும் காட்டாது தமது கடமையிலேயே கண்ணாகிச் சென்றுவிடுவார்கள். ஆனால் பிரஞ்சு மக்களிடம் விசனம் வெளிப்படவே செய்யும் ஆனாலும் நகைச்சுவையாக எண்ணிச் சிரித்துவிட்டுச் சென்றுவிடுவார்கள்.

இன்று இளம் ஆபிரிக்கத் தம்பதி தொலைபேசி அட்டை வாங்க வந்திருந்தது. இவர்கள் கேட்ட அட்டை 'சூறிர் அவ்றிக்கா' (சிரிக்கும் ஆபிரிக்கா)என்னுடன் பணியாற்றும் விற்பனையாளர் கேட்கிறார்
'சிரிக்காது எப்படி சிரிக்கும் ஆபிரிகாவைப் பெறமுடியும்?'
பெண்ணிடமிருந்து சிரிப்பு கிளம்புகிறது. ஆண் காசைக் கொடுக்க அவர்கள் சென்றுவிடுகிறார்கள்.
வழமையான பணிகளுடன் காலம் நகருகிறது்

மாலை ஒன்பது மணி இப்பத்தான் இருள் கவியத் தொடங்குகிறது. சற்று முன் தொபேசி அட்டை வாங்கிய குடும்பத்தின் தலைவன் மீளவும் வந்திருந்தான். அனேகமாக கார்டு வாங்கியவர்கள் திரும்பவும் வந்தால் நாம்தான் பதைபதைப்புக்குள்ளாவது வழமை 'கார்ட்டு வேலை செய்யவில்லையோ?' ஆனால் வந்தவன் சிரிக்கிறான் சிரிக்கிறான்..... சிரித்துக் காண்டிருக்கிறான்.... சும்மா சொல்லக்கூடாது சிரிப்பைப் போல் உடனடியாகத் தொற்றக்கூடியது எதுவென இதுவரையில் எனக்குத் தெரியவில்லை. எங்களையும் அறியாது முகம் மலர
"என்ன?" என்று கேட்கிறோம்.
"நான் இப்ப தனியாளாக வந்திருக்கிறன், அதுதான் மனங்கொள்ளச் சிரிக்கிறேன். போட்டோப் கொப்பி எடுக்கவேண்டும்!" என்றானே பார்க்கலாம்.

எம்மையும் அறியாது ஒருவரையொருவர் பார்க்கிறோம் நமட்டுச்சிரிப்பு வெடியாகிறது. ஆகா உலக மக்களில் மனம்விட்டு சிரிப்பவர்களைப் பட்டியலிட்டால் முதலிடத்தில் வருபவர்கள் ஆபிரிக்கர்களாகத்தான் இருப்பார்கள்.
- சந்திரன் -பாரீஸ் 28.04.2009


3. மே நாள்

உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுவீர்! அனைத்துச் சுரண்டல்களுமற்ற மனித நேய உலகிற்கான விடியலை நோக்கி அடியெடுப்போம்!!
"அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துகள்!"

வரலாற்றுக் குறிப்பு:
ஜூலை 14 அன்று சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.
-முகிலன் 01052009

Saturday 25 April 2009

சரம் -2 தேவர்கள் - அரக்கர்கள் - அனுமான்

1. அரக்கர்களும் அனுமானும்

சும்மா சொல்லக் கூடாது தலைவர் பத்திரிகையாளர்கள் முன்தோன்றினாலும் தோன்றினார் வாதப் பிரதிவாதங்களுக்குப்
பஞ்சமே இல்லை. அரச மட்டங்களிலிருந்து ஆண்டியார் வீடு வரையில் பேசுபொருள் இதுதான்.

நண்பர் மகனின் பிறந்தநாள் நிகழ்வு,

பெரியவர்களின் ஊர் திரும்பும் கருத்து மோதல்கள்....... அறியாச் சிறார்களெல்லோரும் விளையாட்டுச் சாமான்களுடன் அடுத்த அறையுள் ஓட....
விவாதம் செல்வி ஜெயலலிதாவின் வீராவேசம் பற்றி தடம் மாறியது....
இந்தியா, தமிழ்நாடு மீது அதிக நட்பும் எதிர்பார்ப்பும் கொண்டிருக்கும் முகங்களில் கவலை படர மௌன உறைவானது வரவேற்பறை.

அப்போது,
|| இங்கே பாருங்கோ இந்தியா இப்போது அதிகம் அலட்டிக் கொள்ளும் விடயம் எது? ||
...................................
|| உங்களால் சொல்ல முடியாது என்று எனக்குத் தெரியும் ! ||
|| இராமர் ||
எல்லோரும் ஆச்சரியத்தால் அவர் முகத்தைப் பார்க்கிறார்கள்.
|| இவர்களின் சிந்தனை செயல்களெல்லாமே இராமரை நோக்கியே இருக்கும் போது இலங்கை மீது என்ன பார்வை இருக்கும், இன்னொரு அனுமானை நோக்கியதாகத் தானே இருக்கும். ||

உயர்ந்த புருவங்கள் இறங்க அவரது முகத்தை வாஞ்சையோடு பார்க்கிறேன்...... இருந்தாலும் வானரங்களை நினைக்கப் பரிதாபமாகத்தான் இருக்கிறது !

அநாமிகன் -பாரீஸ் ஏப்பிரல்2002
- முன்பு எழுதியதாக இருந்தாலும் இப்போதும் பொருந்தக்கூடியது.



2. அரக்கர்களும் தேவர்களும் - புதிய இதிகாசம்? - ஏப்பிரல் பாரீஸ் 2009

பாரீசு என்றதுமே முதல் நினைவு ஈபிள் கோபுரத்தில்தான் மையமிடும். இந்தக் கோபுரத்தைப் பார்வையிடும் ஆயிரக்கணக்கானோர் தினமும் இந்க் கோபுரத்தில் ஏறிப் பார்வையிடுவர்! இது பாரீசைப் பார்வையிட வைக்கும். ஆனாலும் ஈழப் போராட்டத்தின் உலகளாவிய எழுச்சி கண்டுள்ள இன்றைய சூழல், வீடும் வாழ்வுமென இயந்திரச் சழற்சியிலிருந்த பலரையும் வீதிக்கு வரவழைத்துவிட்டது.

பாரீசு நகரின் பிரசித்திபெற்ற சுற்றுலா மையங்களை நடந்தே சென்று பார்வையிடும் உலகத் தமிழருக்கு ஈபிள் போபுரம் பல முனைப் பார்வையில் கிடைத்துள்ளது. ஈபிளுக்குப் போவதானால் முன்னரெல்லாம் ஒரு வழிப்பாதை மடடுமெ தெரிந்திருப்பவருக்கு இன்று சந்து பொந்தெல்லாம் தெரிந்துவிட்டது. அந்தவகையில் ஈபிள் தரிசனமாகிவிட்டது. இப்போதுதான் ஈபிளை நாங்கள் முழுமையாகப் பார்ப்பதாகக் குறிப்பிட்டார் நண்பர் ஒருவர்.

அன்று தமிழரின் எழுச்சியால் றொக்கட்டோ வளாகம் நிறம்பியிருந்தது. இருந்தும் தெரிந்த முகங்களைத் தேடி நலம் விசாரிப்பும் ஆங்காங்கே தொடர்கிறது. இப்படியாகக் குழுமிய நண்பர்களுள் நானும் ஒருவனாகிறேன். ஈழத்தின் அண்டை நாடாக பிரகாசித்துக் கொண்டிருக்கும் அரசினரின் செயற்பாடுகள் வேதனைகளுடன் அலசப்படுகின்றன.

சுமார் இருபது வருடங்களுக்கு முன் தமிழ்நாட்டில் தரிந்திருந்த தனது வாழ்வின் நினைவுகளை மீட்டினார் நண்பர் ஒருவர். அப்போது நலம் விசாரிக்க வைகறையின் அச்சகத்துக்குப் போய்வருவது இவரது வழக்கம், இதில் பல இலக்கியவாதிகளுடனான கலந்துரையாடல் தரும் சுவை இவரை ஈர்த்திருந்தது.
இப்படியாகத்தான் ஒருநாள் நண்பர் தியாகு கேட்டார் ' ஈழம் அமைந்தால் உங்களுக்கான முதல் எதிரியாக யார் இருப்பார்கள்?'
நண்பரால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை.
'பொறாமையால் பொசுக்கும் எதிரியாக இருப்பது தமிழக அரசாகத்தான் இருக்கும்'
தனக்கு ஆச்சரியமாக அப்போதிருந்த இந்தக் கருத்தை இவ்வேளையில் நினைவூட்டிய நண்பரை அதிசயமாப் பாரக்கிறேன்.
ஆம் வரலாறு நகர்ந்து செல்கிறது் காலம் புன்முறுவலுடன் காத்திருக்கிறது.
தேவர்களின் காதைகளைக் கேட்டுக்கேட்டு புளித்துவிட்டது.
இந்நிகழ்வு முடிந்து வீடு திரும்பிய பின்பும் மனம் சழன்ற வண்ணமே இருக்கிறது.
வரலாறைத் தீர்மானிப்பது மக்கள்தான்! நாராயணன்களல்ல!!


3. மகன் கண்ட அனுமான்!

சென்ற விடுமுறை ஜேர்மனியில் கழிந்தது. இம்முறை எமது வண்டியிலேயே சென்றிருந்ததால் பல இடங்களுக்கும் செல்ல முடிந்தது. ஊர் சுற்றிப் பார்ப்பதென்றால் எனக்கு சின்ன வயதிலிருந்தே சரியான விருப்பம். இம்முறை மைத்துனன் குடும்பம், நண்பனது குடும்பங்களுடன் இணைந்தவாறு கோயில்களுக்கும் போகும் வாய்ப்பு கிட்டியது. இதனால் துணைவி குடும்பத்தாருக்கு நல்ல மகிழ்ச்சி.
இந்தக் கோயில் ஆகமவிதிப்படி தனியான இடமொன்றில் அமைந்திருந்தது. ஆண்டு தோறும், பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொள்ளும் திருவிழாக் காணும் கோயிலாகும். நாள் தோறும் அன்னதானமும் வழங்குகிறார்கள். எங்களுடன் மூத்த மகன் மட்டும் வந்திருந்தான். சிறியவன் பந்தடிக்கும் ஆசையில் வரமறுத்துவிட்டான். உள்ளே நுழைகிறோம். வெள்ளைத் நிறப்; பக்தர்கள் சிலரும் பவ்வியமாக வழிபட்டுக் கொண்டிருந்தனர். சிற்பங்கள் ஓவியங்களென கோவில் சுவர்களும் தூண்களும் வித்தியாசமாகத்தான் இருந்தது.
துணைவியுடன் கோவிலைச் சுற்றியவாறு வருகிறோம், ஒவ்வொரு கடவுள்களுக்கும் தனித்தனியான மண்டபங்கள் கட்டப்பட்டு வித்தியாசமாகவே இருந்தது. ஓடி ஓடி ஒவ்வொன்றையும் பார்த்தவாறு வினாக்களால் குடைந்தான் மகன். முன்னுக்கு ஓடிச்சென்றும் பார்வையிட்டான். சூரியன் சந்திரன் எல்லாம் மனிதத் தோற்றத்தில் இpருப்பதை ஆச்சரியத்தோடு பார்த்தான். நானும் நண்பனும் மற்றவர்களுக்கு இடம்விட்டு ஓரமாக உட்கார்ந்து ஊர்ப்புதினங்களைப் பரிமாறத் தொடங்கினோம்.
திடீரென ஓடிவந்தான் எனது மகன் ‘அப்பா, அங்கே குரங்கிருக்குது.. வாங்க காட்டிறன்’ என்றவாறு விடாப்பிடியாக அழைத்துச் சென்றான்.
அதோ எனச் சுட்டினான். அசடு வழிய சழன்று பார்க்கிறேன். ‘அப்பா’ என்று அழைத்தவாறு கோவில் தூணைக்காட்டினான் மகன்.
‘அடப் போடா.... இது குரங்கில்லை மகனே! அனுமான்’ உண்மைக் குரங்கைக் காணலாமென்ற ஆவலில் இருந்த எனக்கு சலிப்பு தானாகவே வந்தது..
‘ அப்ப இது யார்? ‘ அவனது ஆச்சரியத்தைக் காண எனக்குச் சிரிப்பு வந்தது.
‘ இது என்ன செய்தது?’
‘ இந்த அனுமான்தான் இலங்கையை எரித்ததாம்!’
‘ ஆஆஆ அப்ப நாம் எப்படியப்பா கோயிலுக்குள்ள வைத்து கும்பிடலாம்?’ அவனது நியாயமான கேள்வி அறையாக விழ நான் ‘ இதை உன் அம்மாவிடம் போய்க் கேள்’ என்றேன் நமட்டுச் சிரிப்புடன். அவனும் விடவில்லை, பஞ்ச விளக்குப் பூசை பார்த்துக் கொண்டிருந்த தாயிடம்,
அம்மா நம்மட இலங்கையை எரித்த குரங்கையும் எப்படியம்மா கும்பிடலாம்! ’ பலரும் கேட்கக்கூடியதாக இருந்த சந்நிதானத்தில் வினவிய மகனது குரலால் குணுக்குற்ற துணைவி என்னை முறைத்துப் பார்ப்பது தொலைவிலும் சுட்டது.

- கண்ணன்
ஜேர்மனி 2006

Friday 24 April 2009

சரம் -1 கருணாநிதியின் பந்து!!

கருணாநிதியின் பந்து!!
பாரீசு
-இப்போது நம்மவர்கள் சந்திக்கும்போதெல்லாம் பேசு பொருளாவது 'வன்னி நிலவரம்'தான். இதனுடன் கூடவே அலசப்படுவது தமிழ்நாட்டு நிலவரம். தமிழ்நாட்டையும் தமிழக அரசையும் ஏக்கத்துடன் பார்த்திருந்து பெருமூச்செறிந்தவர்கள் இந்த ஈழத் தமிழர்கள்.
தேவைக்குதவாத உறவு தேவையற்றதாகிவிடும். இதைச் செவ்வனே நிறைவேற்றிய திருமகன் மாண்பு மிகு உலகத்தமிழ்த்தலைவனாக தம்பட்டமிட்ட கருணாநிதி அவர்கள்தான்.
நாங்களெல்லோருமே திரையிலும், மேடையிலும் நடிகர்களைக் கண்டு இரசித்தவர்கள். ஆனால் தன் வாழ்வையே முழுமையான நடிப்பாற்றலால் அசத்திய பெரு நடிகனாக விளங்கியவர் கருணாநிதி அவர்கள்தான். இவரது இயல்பான நடிப்பாற்றலை அரங்கிலாமல் வெளிப்படுத்தியது இந்த ஈழப்போராட்டம்தான்.
முகமூடி கழன்ற நிலையிலும் சளைக்காமல் இவரால் நடாத்தப்பட்ட பந்து இன்று பாரீசிலும் கதைக்கப்பட்டது. பதிவர்களின் பல்வேறு கருத்தகளால் உந்தப்பட்டிருந்தார்கள் வாசகர்கள்.
'இவ்வளவு ஈழத்தமிழர்கள் சாவடையவும் அங்கவீனராகவும் துன்புறும்போது இந்தக் கருணாநிதியால் எப்படித் தாங்கிக் கொள்ள முடிகிறது?' என்கிறார் கொஞ்சம் வயதானவர்.
'அதுதானே!' ஆச்சரியம் கூட வந்தவருக்கு.
'நாடே எரியும் போது பிடில் வாசித்தவனும் இருக்கிறான்தானே!' என்றார் இன்னுமொருவர்.
'இந்தக் கருணாநிதியால் இந்தத் தள்ளாத வயதில் எப்படி எம்மவர்களின் அவலச் செய்திகளைத் தாங்கிக் கொள்ள முடிகிறதோ?' இது இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த பெண்ணுடையது.
இதுவரையில் பேசாதிருந்த இளைஞன் 'அந்த மனுசனுக்கு எங்கே இருக்கிறது இதயம்!' என்றான் படபடப்புடன்.
வாயடைத்துப்போனோம்.
-சந்திரன்
வாழ்க வளமுடன்!
வலைப்பதிவினூடாக இது முதல் வருகை.

இங்கு இடம்பெறுபவை நிகழ்ந்த நிகழ்வுறும் சம்பவங்களில் அறியப்பட்ட ஒரு குறுக்குவெட்டுப் பதிவுகள். இவை நாம் வாழும் சமூகத்தின் எண்ணச் சிதறல்கள். எங்கள் சிந்தனைகளை ஆடியில் பார்க்கும் முயற்சி!
புலம்பெயர்ந்தும் தொலைவுறாது அளவளாவும் தமிழ்த் தோரணம்.
தோரணம் தமிழ் வலைப்பதிவுப் பார்வையர் கருத்துகளுடன் கைகோர்த்து செழுமைபெறும். இந்த அளவளாவலை ஆவலுடன் எதிர்பார்க்கிறது தோரணம்.

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை
குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று . (523)

வலைப் பதிவர் மற்றும் பார்வையர் கருத்துகளுடன் காட்சிக்குவருகிறது தோரணம்
.
ஆக, பார்வையர் "எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" என்பற்கமைய மனம் கொள்க!!