Saturday, 25 April 2009

சரம் -2 தேவர்கள் - அரக்கர்கள் - அனுமான்

1. அரக்கர்களும் அனுமானும்

சும்மா சொல்லக் கூடாது தலைவர் பத்திரிகையாளர்கள் முன்தோன்றினாலும் தோன்றினார் வாதப் பிரதிவாதங்களுக்குப்
பஞ்சமே இல்லை. அரச மட்டங்களிலிருந்து ஆண்டியார் வீடு வரையில் பேசுபொருள் இதுதான்.

நண்பர் மகனின் பிறந்தநாள் நிகழ்வு,

பெரியவர்களின் ஊர் திரும்பும் கருத்து மோதல்கள்....... அறியாச் சிறார்களெல்லோரும் விளையாட்டுச் சாமான்களுடன் அடுத்த அறையுள் ஓட....
விவாதம் செல்வி ஜெயலலிதாவின் வீராவேசம் பற்றி தடம் மாறியது....
இந்தியா, தமிழ்நாடு மீது அதிக நட்பும் எதிர்பார்ப்பும் கொண்டிருக்கும் முகங்களில் கவலை படர மௌன உறைவானது வரவேற்பறை.

அப்போது,
|| இங்கே பாருங்கோ இந்தியா இப்போது அதிகம் அலட்டிக் கொள்ளும் விடயம் எது? ||
...................................
|| உங்களால் சொல்ல முடியாது என்று எனக்குத் தெரியும் ! ||
|| இராமர் ||
எல்லோரும் ஆச்சரியத்தால் அவர் முகத்தைப் பார்க்கிறார்கள்.
|| இவர்களின் சிந்தனை செயல்களெல்லாமே இராமரை நோக்கியே இருக்கும் போது இலங்கை மீது என்ன பார்வை இருக்கும், இன்னொரு அனுமானை நோக்கியதாகத் தானே இருக்கும். ||

உயர்ந்த புருவங்கள் இறங்க அவரது முகத்தை வாஞ்சையோடு பார்க்கிறேன்...... இருந்தாலும் வானரங்களை நினைக்கப் பரிதாபமாகத்தான் இருக்கிறது !

அநாமிகன் -பாரீஸ் ஏப்பிரல்2002
- முன்பு எழுதியதாக இருந்தாலும் இப்போதும் பொருந்தக்கூடியது.2. அரக்கர்களும் தேவர்களும் - புதிய இதிகாசம்? - ஏப்பிரல் பாரீஸ் 2009

பாரீசு என்றதுமே முதல் நினைவு ஈபிள் கோபுரத்தில்தான் மையமிடும். இந்தக் கோபுரத்தைப் பார்வையிடும் ஆயிரக்கணக்கானோர் தினமும் இந்க் கோபுரத்தில் ஏறிப் பார்வையிடுவர்! இது பாரீசைப் பார்வையிட வைக்கும். ஆனாலும் ஈழப் போராட்டத்தின் உலகளாவிய எழுச்சி கண்டுள்ள இன்றைய சூழல், வீடும் வாழ்வுமென இயந்திரச் சழற்சியிலிருந்த பலரையும் வீதிக்கு வரவழைத்துவிட்டது.

பாரீசு நகரின் பிரசித்திபெற்ற சுற்றுலா மையங்களை நடந்தே சென்று பார்வையிடும் உலகத் தமிழருக்கு ஈபிள் போபுரம் பல முனைப் பார்வையில் கிடைத்துள்ளது. ஈபிளுக்குப் போவதானால் முன்னரெல்லாம் ஒரு வழிப்பாதை மடடுமெ தெரிந்திருப்பவருக்கு இன்று சந்து பொந்தெல்லாம் தெரிந்துவிட்டது. அந்தவகையில் ஈபிள் தரிசனமாகிவிட்டது. இப்போதுதான் ஈபிளை நாங்கள் முழுமையாகப் பார்ப்பதாகக் குறிப்பிட்டார் நண்பர் ஒருவர்.

அன்று தமிழரின் எழுச்சியால் றொக்கட்டோ வளாகம் நிறம்பியிருந்தது. இருந்தும் தெரிந்த முகங்களைத் தேடி நலம் விசாரிப்பும் ஆங்காங்கே தொடர்கிறது. இப்படியாகக் குழுமிய நண்பர்களுள் நானும் ஒருவனாகிறேன். ஈழத்தின் அண்டை நாடாக பிரகாசித்துக் கொண்டிருக்கும் அரசினரின் செயற்பாடுகள் வேதனைகளுடன் அலசப்படுகின்றன.

சுமார் இருபது வருடங்களுக்கு முன் தமிழ்நாட்டில் தரிந்திருந்த தனது வாழ்வின் நினைவுகளை மீட்டினார் நண்பர் ஒருவர். அப்போது நலம் விசாரிக்க வைகறையின் அச்சகத்துக்குப் போய்வருவது இவரது வழக்கம், இதில் பல இலக்கியவாதிகளுடனான கலந்துரையாடல் தரும் சுவை இவரை ஈர்த்திருந்தது.
இப்படியாகத்தான் ஒருநாள் நண்பர் தியாகு கேட்டார் ' ஈழம் அமைந்தால் உங்களுக்கான முதல் எதிரியாக யார் இருப்பார்கள்?'
நண்பரால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை.
'பொறாமையால் பொசுக்கும் எதிரியாக இருப்பது தமிழக அரசாகத்தான் இருக்கும்'
தனக்கு ஆச்சரியமாக அப்போதிருந்த இந்தக் கருத்தை இவ்வேளையில் நினைவூட்டிய நண்பரை அதிசயமாப் பாரக்கிறேன்.
ஆம் வரலாறு நகர்ந்து செல்கிறது் காலம் புன்முறுவலுடன் காத்திருக்கிறது.
தேவர்களின் காதைகளைக் கேட்டுக்கேட்டு புளித்துவிட்டது.
இந்நிகழ்வு முடிந்து வீடு திரும்பிய பின்பும் மனம் சழன்ற வண்ணமே இருக்கிறது.
வரலாறைத் தீர்மானிப்பது மக்கள்தான்! நாராயணன்களல்ல!!


3. மகன் கண்ட அனுமான்!

சென்ற விடுமுறை ஜேர்மனியில் கழிந்தது. இம்முறை எமது வண்டியிலேயே சென்றிருந்ததால் பல இடங்களுக்கும் செல்ல முடிந்தது. ஊர் சுற்றிப் பார்ப்பதென்றால் எனக்கு சின்ன வயதிலிருந்தே சரியான விருப்பம். இம்முறை மைத்துனன் குடும்பம், நண்பனது குடும்பங்களுடன் இணைந்தவாறு கோயில்களுக்கும் போகும் வாய்ப்பு கிட்டியது. இதனால் துணைவி குடும்பத்தாருக்கு நல்ல மகிழ்ச்சி.
இந்தக் கோயில் ஆகமவிதிப்படி தனியான இடமொன்றில் அமைந்திருந்தது. ஆண்டு தோறும், பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொள்ளும் திருவிழாக் காணும் கோயிலாகும். நாள் தோறும் அன்னதானமும் வழங்குகிறார்கள். எங்களுடன் மூத்த மகன் மட்டும் வந்திருந்தான். சிறியவன் பந்தடிக்கும் ஆசையில் வரமறுத்துவிட்டான். உள்ளே நுழைகிறோம். வெள்ளைத் நிறப்; பக்தர்கள் சிலரும் பவ்வியமாக வழிபட்டுக் கொண்டிருந்தனர். சிற்பங்கள் ஓவியங்களென கோவில் சுவர்களும் தூண்களும் வித்தியாசமாகத்தான் இருந்தது.
துணைவியுடன் கோவிலைச் சுற்றியவாறு வருகிறோம், ஒவ்வொரு கடவுள்களுக்கும் தனித்தனியான மண்டபங்கள் கட்டப்பட்டு வித்தியாசமாகவே இருந்தது. ஓடி ஓடி ஒவ்வொன்றையும் பார்த்தவாறு வினாக்களால் குடைந்தான் மகன். முன்னுக்கு ஓடிச்சென்றும் பார்வையிட்டான். சூரியன் சந்திரன் எல்லாம் மனிதத் தோற்றத்தில் இpருப்பதை ஆச்சரியத்தோடு பார்த்தான். நானும் நண்பனும் மற்றவர்களுக்கு இடம்விட்டு ஓரமாக உட்கார்ந்து ஊர்ப்புதினங்களைப் பரிமாறத் தொடங்கினோம்.
திடீரென ஓடிவந்தான் எனது மகன் ‘அப்பா, அங்கே குரங்கிருக்குது.. வாங்க காட்டிறன்’ என்றவாறு விடாப்பிடியாக அழைத்துச் சென்றான்.
அதோ எனச் சுட்டினான். அசடு வழிய சழன்று பார்க்கிறேன். ‘அப்பா’ என்று அழைத்தவாறு கோவில் தூணைக்காட்டினான் மகன்.
‘அடப் போடா.... இது குரங்கில்லை மகனே! அனுமான்’ உண்மைக் குரங்கைக் காணலாமென்ற ஆவலில் இருந்த எனக்கு சலிப்பு தானாகவே வந்தது..
‘ அப்ப இது யார்? ‘ அவனது ஆச்சரியத்தைக் காண எனக்குச் சிரிப்பு வந்தது.
‘ இது என்ன செய்தது?’
‘ இந்த அனுமான்தான் இலங்கையை எரித்ததாம்!’
‘ ஆஆஆ அப்ப நாம் எப்படியப்பா கோயிலுக்குள்ள வைத்து கும்பிடலாம்?’ அவனது நியாயமான கேள்வி அறையாக விழ நான் ‘ இதை உன் அம்மாவிடம் போய்க் கேள்’ என்றேன் நமட்டுச் சிரிப்புடன். அவனும் விடவில்லை, பஞ்ச விளக்குப் பூசை பார்த்துக் கொண்டிருந்த தாயிடம்,
அம்மா நம்மட இலங்கையை எரித்த குரங்கையும் எப்படியம்மா கும்பிடலாம்! ’ பலரும் கேட்கக்கூடியதாக இருந்த சந்நிதானத்தில் வினவிய மகனது குரலால் குணுக்குற்ற துணைவி என்னை முறைத்துப் பார்ப்பது தொலைவிலும் சுட்டது.

- கண்ணன்
ஜேர்மனி 2006

No comments:

Post a Comment