Wednesday 27 January 2010

கதைச் சரம் 16 அங்கொடைக்குப் போன சனாதிபதி!


கதைச் சரம் 16
செவிவழிக் கதை-13

அங்கொடைக்குப் போன சனாதிபதி


தடல்புடலாக இலங்கையின் எந்தப் பாகத்திற்கும் திடீர் திடீரெனப் பயணித்து இந்த சனாதிபதி புகழ் பெற்றிருந்தார். இவரது இந்தப் பயணங்களால் அல்லோககல்லோப்பட்டது இவருடன் பணியாற்றிய அதிகார வர்க்கம்தான். இவரது அறிவிப்பு வந்ததுமே எதையும் செய்யக்கூடியவர்களைக் கொண்டதாக இக்குளாம் அமைக்கப்பட்டிருந்தது. 

இம்முறை சனாதிபதியிடம் இருந்து வந்த பயண அறிவிப்பால் இந்தக் குளாம் அரண்டு ஆச்சரியப்பட்டுத்தான் போயிற்று. அது வேறொன்றும் இல்லை. கொழுப்புக்குப் பக்கத்திலிருந்த 'அங்கொடை' ஆக இது இருந்ததுதான்! அங்கொடை இலங்கை முழுக்கப் பிரபல்யமாகியது அங்குள்ள வைத்தியசாலையால்தான். சென்னையில் 'கீழ்ப்பாக்கம்' மாதிரி என்றாலும் அதைவிட முக்கியமானதாக அதீத உச்சக்கட்ட மனவிகாரர்களுக்கு மருத்துவம் பார்க்கும் இடம் இது.
 

வடக்கின் மூலைமுடுக்கு வரை பயண ஒழுங்கைச் சிரமம் இல்லாது சீராகச் செய்த அதிகார வர்க்கம் இந்த முறை ஆடித்தான் போனது. இருப்பினும் ஒருவாறு சமாளித்து நிறைவேற்றிவிட்டது.

அன்றைய நாள் என்றுமில்லாத மிளிர்வுடன் அங்கொடை வைத்தியசாலையில் விடிந்தது. பணியாற்றிய அனைவருக்கும் போனசுடன் சிறப்பு உணவுகளும் பரிமாறப்பட்டன. நோயாளிகளுக்கும் சிறப்பு விருந்து கொடுக்கப்பட்டது. இந்த வளாகமே வழமையை மீறியதாக கலகலப்பாக இருந்தது.
 தனக்கான பெருமிதமுடைய உடுப்புடன் கம்பீரமாக வந்த சனாதிபதிக்கு மிகப் பெரிய வரவேற்பு வழங்கப்பட்டது. சனாதிபதியும் மிகவும் சுறுசுறப்பாக பார்வையிட்டார். எல்லோரும் கைகூப்பியும், காலடியில் விழுந்தும் வணக்கம் செலுத்தினர்.

ஆங்காங்கே குறைகளையும் கேட்டறிந்தார்(!) குறைகள் இருந்தால்தானே சொல்வதற்கு!! கடைசியில் தண்ணீர் தொட்டியின் பழைமையும் நீர் சீராக வராததுமே பிரச்சனை எனப் பதிவானபோது நம்ம சனாதிபதியின் முகம் கோபக் கனலாகி அதிகாரியை எரித்த காட்சியைப் பார்த்த முப்பது வருட அனுபவமுள்ள மருத்துவத் தாதி நெகிழ்ந்து போனார். பின்னர் தன் ஊரில் இதைச் சொல்லிச் சொல்லி இந்த சனாதிபதியின் கருணை பற்றி வியாபித்த கதையை வேறாகத்தான் பதிவிட வேண்டும்.
 

இவ்வளவு சிறப்பாக இந்நாள் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் சனாதிபதி முகத்தில் ஒரு கவலை இருப்பதை கூடி இருந்த மூத்த அதிகாரி கண்டு பதறித்தான் போனார்.
 
"ஐயா, ஏதாவது சரியில்லை?"
 என்று சனாதிபதியின் காதுக்குள் பவ்வியமாக முணுமுணுத்துக் கேட்டுவிட்டார். 

"என்ன பார்த்துக் கொண்டிருக்கிறீர? அங்கே பாரும்..... அந்த மரத்தடியில் இருப்பவன் நான் வந்தது தொடக்கம் அங்கேதான் இருக்கிறான். நான் வந்துள்ளதையும் சட்டை செய்யாமல் எவ்வளவு அலட்சியமாக இருக்கிறான். அவனுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்?"
 

இதன்பின்தான் அந்த அதிகாரிக்கு அந்த அவனின் இருப்பு தெரிந்தது. 'மனுசன் எல்லாவற்றையும் என்னமாதிரிக் கவனிக்கிறார்! கழுகுக்கண்தான்' என மனதுக்குள் நினைத்தவாறு,
 
"ஐயா, நான் போய் அவனைக் கூட்டிவாறன்."

"இல்லை, இல்லையில்லை..... அவனை நான்தான் கவனிக்க வேண்டும்!" என்றார் அதிகார முனைப்புடன். 

"சரி ஐயா!...."
 அதிகாரி தலை குனிந்தவாறு விலகுகிறார். 

எழுந்தார் சனாதிபதி, தன்னோடு யாரும் வரக்கூடாது எனப் பார்வையாலேயே பணித்துவிட்டு மரத்தடி நோக்கி நடக்கத் தொடங்கினார்.

25 மீற்றர் தொலைவில் வட்டமாக அவரது குளாம் பார்த்துக் கொண்டிருந்தது. என்ன ஆச்சரியம் சனாதிபதி கிட்டே வந்தும்கூட மரத்தடிக்காரன் அசையவேயில்லை.
 

சனாதிபதி செருமிப்பார்த்தார் .......ம்கூம்..... எந்தச் சலனத்தையும் காணமுடியவில்லை.
 'சனாதிபதியைக் கண்டாலே காலைத் தொட்டுக் கும்பிடும் மக்கள் கூட்டத்தில் இப்படியும் ஒருவனா?' தொலைவிலிருந்த அதிகாரிக்குக் கோவமேறிக்கொண்டிருந்தது. 

சனாதிபதி இன்னும் அவனுக்கு அருகாமையில் வந்து தோளில் தொட்டு
 "தம்பி......." என அன்பொழுக அழைக்கிறார். 

அவனது தலை திரும்பி சனாதிபதியை ஒரு முறை மேலும் கீழும் பார்த்துவிட்டு மீண்டும் வழமைக்குத் திரும்பிவிடுகிறது.
 இச்செய்கை சனாதிபதியை கொஞ்சம் ஆட்டம் காண வைத்துவிட்டது. 

"தம்பி, நான்.... இந்த நாட்டு சனாதிபதி வந்திருக்கிறேன்.... என்னைப்பார்! உனக்கு என்ன தேவை சொல்லு தம்பி....."
 என நெகிழ்ந்த குரலில் 

இம்முறை சடாரென திரும்பிய அவன், சனாதிபதியின் முகம் பார்த்து,
"ஐயா.... இங்கு வந்தீட்டிங்களல்ல.... கொஞ்சம் பொறுமையாக இருங்க.... எல்லாம் போகப் போகச் சரியாகிவிடும். இங்கு வந்த புதிசில உங்களை மாதிரித்தான் நானும் கதைச்சுக் கொண்டிருந்தனான். கவலைப் படாதேயுங்கோ....." என்றவாறு பெரிதாகச் சிரிக்கத் தொடங்கினான்.
0000 0000

பிற்குறிப்பு :

அங்கொடை :– இலங்கையிலுள்ள மிப்பெரிய மனநிலைப் பிறழ்வு வைத்தியசாலை – (சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையைக் குறிப்பிடுவது போல்)

-முகிலன்
பாரீசு 27 ஜனவரி 2010
(- 1977 காலத்தில் நான் கேட்ட கதை)


Saturday 23 January 2010

சரம் 21 பன்னாடைகள்

சரம் - 21
பன்னாடைகள்

பாரீசில் வியாபார நிறுவனமொன்றில் பணியாற்றும் வார நாளொன்றின் மாலை நேரம், இம்முறை ஏற்பட்ட குளிராலும், பரவலாக சர்வதேச மக்களால் முகம்கொள்ளப்படும் நுகர்வுக் கலாச்சார முடக்கத்தாலும் மந்தமாகக் கழிகிறது.

என்னுடன் பணியாற்றுபவர் முப்பதைத் தொடும் துடிதுடிப்பான இளம் குடும்பத்தவர். பிரான்சுக்கு தன் பன்னிரெண்டாவது வயதில் வந்தவர். வேலைப்பழு தெரியால் இருப்பதற்காக அவ்வப்போது பல்வேறு விடையங்களை கதைத்துக்கொண்டே பணியாற்றுவதென்பது எங்களுக்குக் கைவந்திருந்தது.

தமிழில் உரையாடுவதற்கான சந்தர்ப்பமும், அடுத்த தலைமுறையினரின் சிந்தனைகள் தொடர்பாக எனக்கிருக்கும் ஆவலும் இத்தகைய கதையாடல்களில் அதிக நாட்டம் கொள்ள வைத்தன.


எமது கடைக்கு இவரது சித்தப்பா மகன் பிரபு அடிக்கடி வருவது வழக்கம். இந்த பதிம வயதினனை எனக்கு நன்றாகவே பிடிக்கும். இவன் பிரான்சு வந்து சுமார் நான்கு ஆண்டுகள்தான் ஆகிறது. ஆனாலும் கணினி பற்றிய தொழில்நுட்பத்தை விரல் நுனியில் பெற்றுவிட்டிருக்கிறான். போடோ சொப் இவனுக்கு கைவந்த கலை. இங்கு வந்தபின்தான் கணினியைப்பற்றி அறிந்திருந்தும், கணினியை பிரித்து மேய்ந்து மீளப்பொருத்தும் ஆற்றல் இயல்பாகவே வந்திருக்கிறது. இவரது குடும்பத்தில் இவனொருவன்தான் பிள்ளை. ஆதலால் பெரியப்பா குடும்பச் சகோதரங்களுடன் அடிக்கடி சந்திக்கும் ஆவல் இயல்பாகவே இவனுக்கிருந்தது.

வழக்கத்தில் உற்சாகமாகக் காணப்படும் பிரபு இன்று ஏதோ யோசித்தவாறு நின்று கொண்டிருந்தது எனக்கே ஒருமாதிரியாக இருந்தது. இவர்களை அவ்வப்போது நோட்டமிட்டவாறு வாடிக்கையாளர் தேவைகளை வழங்கிக் கொண்டிருந்தேன்.


"என்னடா! யோசிக்கிறாய்? ஏதாவது வேண்டுமா?......" பொறுக்க முடியாதவனாகி வார்த்தைகள் அண்ணனின் வாயிலிருந்து விழுகின்றன.


என்னை ஒருமுறை பார்த்துவிட்டு பிரபு பேசாமலேயே இருக்கிறான்.

இதைக் கவனித்த அண்ணன், "பரவாயில்லை, பிரபு எதெண்டாலும் சொல்லு!...."
"இல்லை...! அண்ணா!! நாங்களும் பெரியாக்களாக வந்ததும் சண்டைபோட்டு கதைக்காமல் இருப்பமா?"

துறுக்கென்றிருந்தது எனக்கு. முகத்தை மறுபக்கம் திருப்பியவாறு வேறொரு வேலையில் ஈடுபட முனைகிறேன்.


"ஏனடா இப்படியெல்லாம் யோசிக்கிறாய்? நாங்கள் ஒருபோதும் அப்படியெல்லாம் இருக்கவே மாட்டம்!" தமையன் ஆறுதல்படுத்தியவாறு எழும்புகிறார்.

தமையனின் கண்கள் என் பிரடியை நோக்குவது பிரடிக்கே தெரிகிறது.


ஊர்விட்டு, தேசம் மாறி, கண்டம் விட்ட தொலைவில் சிதறிக்கிடக்கும் மூத்த தலைமுறையினராகிய நாம் ஆறுதலாகச் சந்திக்கும் உறவுகளும் நட்புகளும் தொடர்பான நிகழ்வுகள் எம் முகம் பார்த்து வளரும் தலைமுறையினரின் வெண் மனத்திரையில் அழுக்குகளைப் பீச்சிவிடத் தவறுவதேயில்லை.


குறிப்பு:

பன்னாடை - கள்ளு வடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பனை அல்லது தென்னையில் எடுக்கப்படும் இயற்கை வடி. நல்லதை விட்டுவிட்டு அழுக்குகளைச் சுமப்பது இதன் சிறப்பு.

- முகிலன்
பாரீசு (20.01.2010)

Thursday 21 January 2010

செய்திச் சரம் 9 பாரீசில் நோர்வே வாழ் புலம்பெயர் தமிழர்களின் திரைப் படைப்பாக வெளிவந்த 'மீண்டும்' திரையிடப்படுகிறது


செய்திச் சரம் 9
பாரீசில்
நோர்வே வாழ் புலம்பெயர் தமிழர்களின் திரைப் படைப்பாக வெளிவந்த 'மீண்டும்' திரையிடப்படுகிறது

பிரான்சில் எதிர் வரும் 31.01.2010 ஞாயிறு மாலை 18.00 மணிக் காட்சியாக ஓபவில்லியே நாற்சந்தித் திரையரங்கில் திரைக்கு வருகிறது நோர்வே என்.ரீ.பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த 'மீண்டும்' திரைப்படம்.

நோர்வே வாழ் புலம் பெயர் மக்களின் கதையாடலுடன் வெளிவந்துள்ள 'மீண்டும்' திரைப்படம் பரவலான பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது எனவும் உலகெங்குமுள்ள தமிழர்கள் இவ்வாறான படைப்புகளைப் பார்த்து விமர்சனங்களை முன்வைத்து நம் இளம் படைப்பாளிகளுக்கு உந்துதல் கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார் நம் மத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தின் தமிழ் திரையுலக வளர்ச்சியில் அயராது ஈடுபட்டுவரும் மூத்த கலைஞன் ரகுநாதன் அவர்கள்.

இவ்வகை முயற்சிகள் தேசம் கடந்த பார்வையாளர்களிடம் செல்ல வேண்டுமென்பதற்காக தனது 75வது அகவைக் காலத்தில், சிறு பையனின் வேகத்துடன் களப்பணியாற்றிவரும் திரு ரகுநாதன் அவர்களைக் காணுற்றபோது நாம் கலைக்காக நிறையவே செய்தாக வேண்டுமென்ற உந்துதல் கிடைத்தது. இவரது முயற்சியாலேயே பாரீசில் இப்படம் திரைக்கு வந்துள்ளது.

பொங்கல் திரைப்படங்களில் 'ஆயிரத்தில் ஒருவன்' பற்றியும் உலகத் திரைப்படங்களில் 'அவதார்' பற்றியும் கதையாடல் நடைபெற்றுவரும் யதார்த்த நிலையில் நம் இளைஞர்களின் திரை முயற்சி பற்றியும் அறியவேண்டியது அவசியமானதுதானே என்றார் என்னுடைய நண்பர்.

திரைப்படம் தொடர்பாக மேலும் அறிவதற்கு: என்.ரீ.பிக்சர்ஸ் http://www.ntpicture.com/

தகவல்: முகிலன்
பாரீசு 20.01.2010

பிற்புறிப்பு:
ஈழத் தமிழ்த் திரைப்பட படைப்பாளர்களும் தமது படைப்புகளை வெளிக்கொணர முயற்சிப்பதை நாம் அவதானிக்கக்கூடியதாகவே இருக்கிறது. அந்த வரிசையில் நோர்வே நாட்டில் பல குறும்படங்களைத் தயாரித்து வழங்கிய N.T.PICTURE இன் ”தொப்புள்க்கொடி” யைத் தொடர்ந்து இரண்டாவது முழுநீளத்திரைப்படம் ”மீண்டும்”
இந்தியாவில் திரையுலகம் நிறுவனமாக்கப்பட்ட நிலையில் இங்கு சிலர் கூடி ஒரு முழுநீளபபடம் எடுப்பது என்ற முயற்சியும் அதில் வெற்றி பெறுவதென்பதும் இலகுவல்ல. அந்த வகையில் N.T.PICTURE இனரையும் அதில் பணியாற்றிய அனைத்துக் கலைஞர்களையும் வாழ்த்துவதோடு நில்லாமல் பாராட்டியும் ஆகவேண்டும். படம் முடிந்து வெளியே பேசப்பட்ட விடயங்களில் ”மீண்டும்” திரைப்படம் பலர் மனதைக் கவர்ந்ததாகவே சொல்ல வேண்டும். இரசிகர்களை இரண்டு மணிநேரம் கட்டிவைக்கக் கற்றுக்கொண்ட திரைப்படக்கலைஞர்கள் மேலும் இனி ஆக்கபூர்வமான படைப்புகளை வழங்குவர் என்றே நம்பத்தோன்றுகிறது. N.T.PICTURE இன் முந்தய முழுநீளத் திரைப்படத்துடன் (தொப்புள்க் கொடி) ஒப்பிடும் போது ”மீண்டும்” திரைவிருந்தில் இயக்குனர் படப்பிடிப்பாளர் மற்றும் படத்தொகுப்பாளர்களின் சிறப்பான வளர்ச்சி தெரிகிறது.
விமர்சனம்: கவிதா

பாரீசில், கலையரசு சொர்ணலிஙகம் -நூல் அறிமுகமும், கலையரசு விருது 2009 வழங்கலும்


செய்திச் சரம் - 8
பாரீசில் ஈழவர் திரைக்கலை மன்றம் நடாத்தும்
'ஈழத்தில் நாடகமும் நானும்' நூல் அறிமுகமும் -
சிறந்த கலைஞருக்கான 'கலையரசு விருது2009 வழங்கலும்!

எதிர்வரும் 30.01.2010 சனி பிற்பகல் 6 மணி 30 இற்கு பாரீசு 18 இல் அமைந்துள்ள அண்ணாமலை பல்கலைக்கழக (பாரீசுக் கிளை) மண்டபத்தில் ஈழவர் திரைக் கலை மன்றத்தினரால் கலையரசு சொர்ணலிங்கம் நினைவாக வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வு ஏற்பாடாகி உள்ளது.

இம்முறை பாரீசில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் 'ஈழத்தில் நாடகமும் நானும்' நூல் அறிமுக அரங்கமும், ஈழத்துச் சிறந்த கலைப்படைப்பாளிகளைத் தெரிவு செய்து கெளரவிக்கும் கலையரசு விருதாகிய 'கலாவினோதன் 2009' வழங்கல் அரங்கமும் நடைபெறவுள்ளது.

2006 முதல் இதுவரையில், இலண்டனிலும் கொழும்பிலும் நிகழ்ந்த இந்நிகழ்வு இம்முறை பாரீசில் நடாத்தப்படுகிறதெனவும் இதனைத் தொடர்ந்து 'கலாவினோதன் 2010' விருது நிகழ்வு கனடாவிலும் அவுர்திரேலியாவிலும் நடைபெறவுள்ளதாகக் குறிப்பிட்டார் ஈழவர் திரைக்கலை மன்றத் தலைவர் பாரீஸ்டர் யோசெப் அவர்கள்.

பாரீசு நிகழ்வில் இம் முறை 'கலாவினோதன் 2009' கெளரவிப்பைப் பெறுகிறார் நீண்ட காலமாக கலைப்படைப்பாற்றலை வெளிப்படுத்திவரும் பல்துறைக் கலைஞன் திரு பரா அவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகப் பெருமையுடன் குறிப்பிட்டார் அமைப்பாளர்களில் ஒருவரும் நம் மூத்த கலைஞனுமாகிய ஏ. ரகுநாதன் அவர்கள் அனைவரையம் அன்புடன் அழைப்பதாகவும் குறிப்பிட்டார்.

காலம் : 30.01.2010 சனி மாலை 18 மணி 30 நிமிடம்
இடம் : 70 Rue Phillippe de Gerard, 75018 Paris

தகவல் : முகிலன்

பிரான்சு 20. 01. 2010

Thursday 14 January 2010

தமிழர் திருநாள் வாழ்த்துகள்!

பகிர்வுச் சரம் 1
தமிழர் திருநாள் வாழ்த்துகள்!

தமிழ் எங்கள் பிறவிக்குத்தாய் - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
தைப் பொங்கல் நாள்
தமிழருக்கு ஒருநாள் - இது தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள்.

புலம் பெயர்ந்தும் தமிழுடன் பிணைந்து நீளும் எமது வாழ்வு 'காலம் அரித்திடாது மூலம் காத்திடும்' அரும்பணியுடன் தொடருட்டும்!

-தோரணம்
முகிலன்
பாரீசு
14.01.2010