Monday 14 September 2009

சுவட்டுச் சரம் - 1 நினைவுத்துளிகள் (14)




சுவட்டுச் சரம் - 1
பெர்லின் புலம்பெயர்வு தொடக்க கால நினைவுகள்
நினைவுத்துளிகள் (14)

- குணன்



"வாழ்க்கை ஒரு வியாபாரம் போன்று, இலக்கு-இலட்சியம், யாவையும் புறந்தள்ளி வாழமுற்பட விரும்பினால்
, அதன் விளைவு சமுதாயச் சீரழிவில்தான் கொண்டு சென்றுவிடும். இதைச் சுட்டிக்காட்ட சில குறிப்புக்களை எனது, 13வது நினைவுத்துளிகளில் சொட்டப்பட்டது!

இதனைப் பிரதிபலிப்பதைப் போல, இன்றைய ஐரோப்பிய பிரபல தமிழ் வானொளி ஒன்று, புலம்பெயர் வாழ் தமிழர்களின் ஆதரவுடன் தனது சேவையை கட்டணம் இன்றி(சில தமிழ் பார்வையாளர்கள், தெரிவித்தவாறு) நிகழ்ச்சிகளைத் தமிழில் முழுமையாகவும், தமிழர் நலன்களுக்காக, நடுநாயகமாக நடாத்த(தமிழர் ஆதரவு நாடி) நிற்பதாக தெரிவித்தது அனைவராலும் விரும்பத்தக்கதாக இருந்தது. நல்ல விடயங்களை யார் முன்னெடுத்தாலும், தமிழ் மக்கள் உதவிட முன்வருவதும், அவைருக்கும் செய்திகள்(உண்மை சார்ந்தவைகள் மட்டும்!) சென்றடையுமாயின் அதனை வரவேற்பதும், ஆதரவு தருவதும் பிழையாகமாட்டாது! ஆயினும், கட்டணமோ, இலவசமோ என்பது ஈற்றில் அதன் நிர்வாகத்தைச் சார்ந்ததாகவே இருத்தலே யதார்தமாகும்.

ரு தலை முறை நிறைவு காண, மற்றொரு புதிய தலைமுறையின் தொடக்கத்தில் கால் பதிக்கத் தொடங்கியுள்ள, புலம் பெயர் ஈழத் தமிழர்கள், தமது வாழும் நாடுகளில், வாழ்ந்து இதுவரை எது- எதையெல்லாம் தமது அடையாளமாக்கிக் கொண்டிருக்கிறார்களென்றால், அவ்வாறு சுட்டிக்காட்டவும், நினைத்துப் பார்க்கவும், பிறரைத் திரும்பிப் பார்க்கச் செய்யவுமான சாதனைகளென்று கூற, எதனையும் குறிப்பிட முடியாதிருப்பதான உறுத்தும் நிலைதான் என்பதை ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும்!

நீறு மறைத்த நெருப்புக் கொள்ளிபோல, மனத்தின் ஆழத்தில், தம்மை உயர்த்தியும், ஒரு பகுதியினரைக் குறைத்தும் பார்க்கின்ற- பேசுகின்ற தலைக்கு மேலாக, "கை காட்டும்" இழிந்த- சீரழிந்த அறிவுக் கொவ்வாத "சாதிப்பித்து" பீடித்
துள்ள நிலை தொடரத்தான் செய்கிறது. இது மட்டுமன்றி, தமது எதிர்காலச் சந்ததிகளின் மனங்களிலுங்கூட, இல்லாத- சொல்லாத அந்தச் சகதி பற்றிய புகட்டலில், மெல்ல... மெல்ல வாழைப்பழத்தில் ஊசியைப் ஏற்றுவதைப்போல, பிஞ்சுகளின் மனங்களில் நச்சு ஊசி ஏற்றும் கொடுமை, புலப்பெயர்வில் (வயதுக்கு வந்த பிள்ளைகள்) மத்தியில் விதைக்கப்படுகின்றது. ஆயினும் இத்தனை "போதனைகளையும்" புறந்தள்ளிய (சாதி இல்லை) ஒருசிலர், நம் மத்தியில் இருப்பதும் உண்மைதான். இன்றைய புலப்பெயர்வில் தாம் வாழும் நாடுகளில், குறித்த நாட்டு மக்கள், எத்தகைய சமுதாய வளர்ச்சியையும் இனவிழுமியங்களையும், சமூக ஒருமைப்பாட்டையும், பேணிக்காத்து தலை நிமிர்ந்து ஓர் குடும்பமாக, வேற்றுமை, உயர்வு- தாழ்வு அற்ற, சிறந்த வாழ்வைக் காண்கிறார்கள் என்பதை நிச்சயமாக இளைய தலைமுறையினர் மிகத் தெளிவாக கண்டறிந்துள்ளார்கள். இத்தகையை அறிவால் ஒப்பீட்டளவில் தமது பெற்றோர்கள் அவ்வாறு ஏன் இல்லை? என்பதைக் காண முனையும்போது தலைமுறை இடைவெளியாக மனத்தாக்கம் ஏற்பட ஏதுவாகிறது!

இன்
று, ஐரோப்பிய சமூகத்தினரால், சட்டவரம்புக்குட்பட்ட செயலாக, ஓரினச் சேர்க்கை ஆண் - பெண் இருபாலாருக்கும் அங்கீகாரம்(Homosexuality) வழங்கப்பட்டிருப்பதும், வயது வந்த, இருபாலாரும் தத்தமது விருப்பப்படி, தாம் விரும்பும் ஒருவரைத் துணையாக்கவும், மணம் செய்யவும் விரும்பின், நியாயமான காரணங்களுக்காக உறவை, துண்டித்துக் கொள்ளவும், மணவிலக்கல் அனுமதி பெறவும் வசதி வழங்கும் நாடுகளில், பிறந்து வளர்ந்து கல்வி, நட்புடன், பழகி, மணம் முடிக்க, தாமே விரும்பும் பட்சத்தில், (வெள்ளை இனத்தவராகில்), வரவேற்பதும், தான் சார்ந்த தமிழ் இனத்தவராகில்(வர்ணம் தீட்டி!) தடுப்பதும், தமது விருப்பப்படி, ஒருவருக்கு தமது பிள்ளையை மணந்துகொள்ள வற்புறுத்தி, பணிய வைப்பதும், புலப்பெயர்வில் காணக்கூடியதாக இருக்கிறது. சில சந்தர்ப்பங்களில், கட்டுக்களை உடைத்து, தமது எண்ணப்படி, வாழ்க்கையைத் தொடங்கும், தைரியம் படைத்த புதிய தலைமுறைத் தமிழர்களும், புலப்பெயர்வில் இல்லாமலில்லை! இத்தகையவர்கள், ஓர் புதிய சமுதாயத்தை உருவாக்கப் புறப்பட்ட புரட்சி எண்ணம் படைத்தவர்கள் என்று கூறிவிடலாம்!

புலம்பெயர் சமூகங்களிடையே நிலவுகின்ற குடும்ப உறவு, சமூகத் தொடர்புகள், மதக் கோட்பாடுகள், பண்பாடு எனப் பல்வேறு இனங்கிடையே நிலவுகின்ற வேற்றுமை, ஒற்றுமைகள் பற்றிய ஆழமான ஆய்வுகள், மானிடவியலாளர்களால் மேற்கொண்டிருப்பதை அறியும் வாய்ப்பு எனக்கு கிட்டியிருந்தது. நானும் எனது மனைவியும், தூரத்து உறவைக் கொண்டிருந்தாலும், எங்களின் பெற்றோர்களால் தீர்மானிக்கப்பட்ட திருமணநாள் (பதிவு நடைபெற்ற
நாள்!) வரைக்கும்-பழகாமலும், ஒருவருடன் மற்றவர் மனம்விட்டு, தத்தமது விருப்பு, வெறுப்பைத் தெரிந்துகொள்ளாமலும், மணம் முடித்து வைக்கப்பட்டு நாற்பதாண்டுகள் தாண்டி வாழமுடிந்தது என்பதை நம்பமுடியாதது என விமர்சனம் சில ஆண்டுகளுக்கு முன்னர் முன்வைக்கப்பட்டபோது தலைமுறை இடைவெளிச் சிந்தனைகளை ஒப்பிட்டவனாக புன்முறுவலுடன் உள்வாங்கிக் கொண்டேன்!


நாம் எங்கே செல்கிறோம்?


இன்று, புலம் பெயர்ந்து, பரந்து பல நாடுகளில், பதவிகள், வசதிகள்- சுகபோகங்கள் அதேபோன்று ரோகங்கள்- குரோதங்கள், பேதங்கள் நிறைந்து, எதிர்காலம் பற்றிய சிந்தனைகள், கடமைகள், உணர்வுகள்(வெறும் பேச்சிலும் அன்றி செய்கையில்) ஒருமைப்பாடின்றியும், செய்கைத்திறன் அற்றும், வெறும் நுகர்விலும்(இதில் உணவு, உடை, அணிகலம், உல்லாசம், பொழுது போக்கு) தாம் சார்ந்தவர்களின் யதார்த்தங்களில் இருந்து, தம்மை, வேறுபடுத்தி நிற்கும் குணாதிசயம் போன்ற சமுதாயச் சீரழிவுக்கு இட்டுச் செல்லும் "அழிவு முரண்பாடுகளுக்கு"(Destructive contradictions) திசைகாட்டிகளாக, தமிழரின் புலப்பெயர்வு மாறிவிட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளதும்- (வாழும் நாட்டில்) எ
ழுப்பப்பட்டிருப்பதும் எவராலும் மறுக்கமுடியாதது. தான் பெற்ற பிள்ளை தவறானவன்- குற்றமுடையவன் என்று, உலகமே திரண்டுவந்து கூறினாலும் தாயனவள் அதை ஏற்கமாட்டாள்! அவ்வாறில்லாமல் நம்மவர்களில் சிலர் குறிப்பாக, தாயகத் தமிழர்களின் அண்மைக்கால அனர்த்தங்களால், அநியாய அழிவுகளால், தாங்கொணாத் துயரங்களாலும், துன்பங்களாலும் சூழ்ந்தபோது தாம் வேறு- அவர்கள் வேறு என்றவாறாக எதையுமே காணதவர்களைப் போல வேடம் போட்டதை உண்மை அறிந்த உலகியலறிவு படைத்தவர்கள் ஆங்காங்கு(வாழும் நாடுகளில்) தோலுரித்து- தொட்டுக்காட்டத் தவறவில்லை. அண்மையில், சில தினங்களாக எம்மவர்கள் வாழ்கின்ற மேற்கு நாடுகளில் நடைபெற்றுவரும் சமய நிகழ்வுகள், பெருங்கூட்டத்தை(அடியார்கள்) கவர்ந்துள்ளது ஒன்றும் மிகையல்ல. அதுமட்டுமன்றி, ஒரே நகரத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட சமய நிறுவன அமைப்புக்களைக் கொண்டு இயங்கும் நிகழ்ச்சிகளும், உலாக்களும், வர்ணஜாலங்கள், காட்சிக்கோப்புக்கள், ஆட்டங்கள்-பாட்டங்கள் உட்பட இன்னோரன்ன வகையறாக்களைக் கொண்டிருந்ததை (சமய நிகழ்வுகள்) கவலையுடன்தான் பதிவு செய்யலாம். இந்தப் பின்னணயில் நடைபெறும் "மலிவு விற்பனைகள்" புதியதோர் வர்த்தக தந்திரமாக, அடியார்கள் மீது கருணை காட்டுவதுபோல, காலாவதிகளை காலியாக்கும் ஒன்றாகக் கருதலாம். ஆனால் இவற்றையெல்லாந் தாண்டி, இடம் பெற்று முடிந்தவைகள், எஞ்சிய நடந்தேறும் இதயவலி தரும், யதார்த்தங்களை மறந்து 'தம்மை மட்டும்' அருள்பாலிக்க வேண்டி நடப்பதைப்போல எண்ணி(யோ?)ப்போலும்! இன்றைய சொந்தங்கள், துயரத்துள் வீழ்ந்து- மாண்டழிய, இங்கு அவர்களுக்காக, இலண்டன் பிரதமர் அலுவலக முன்பு நடைபெற்ற நிகழ்வில் சில நூறுவரும் பங்கேற்க, இங்கு நடைபெற்றுவரும் சமய விழாக்களில் பல்லாயிரக்கணக்கில் விலையுயர்ந்த, ஆடை, ஆபராணாதிகளுடன் வலம் வருவது எப்படி?
"இங்குள்ள உங்களையும், உங்கள் பயணத்தையும் எம்மால் புரியமுடியவில்லையே?" என இலண்டன் தமிழ் வானொலி ஒன்றில், இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஆங்கிலேய மனிதாபிமானி ஒருவர் ஆங்கிலத்தில் கூறிய வார்த்தைகளை அந்த வானொலி நிலையத்தாருடன் என்போன்று செவிமடுத்தவர்கள் வாயடைத்துப்போனவர்களாகிக் கேட்டதை எப்படியாகப் பதிவுசெய்யலாம்? அன்று, நியுசிலாந்து கரும்புத் தோட்டத் தமிழர்களின் பரிதாப நிலைகண்டு தமிழகத்திலிருந்து வெதும்பிய பாரதியை நினைத்து துவண்டு போகிறேன்.

காசிக்கோ,அன்றி உரோமுக்கோ விமானம் ஏறவேண்டிய நம்மவர்கள் அங்கங்குள்ள மதசார் நிலையங்களில் தாம் சார்ந்தோ-சேர்ந்தோ விரும்பியவாறு தடம்பதிப்பதற்கு (இங்கு புலப்பெயர்வில் புகுந்தவேளை தாம் கடைப்பிடித்த மதங்களைச் சார்ந்த தனிப்பட்டவர்கள் பற்றியதல்ல) நான் விமர்சனம் கூறவில்லை.


அகதிகளைக் கரையேற்ற வழிதெரிந்தவர்களை போல, றீல்விட்டு, குறிப்பாக, இந்து-சைவ மதத்தினராகிய இளைஞர்களிடையே,“தொண்டாற்றியவர்கள்“, ஆங்காங்கு குறிப்பாக தமிழர்கள், புலம்பெயர்ந்துள்ள அனைத்து நாடுகளிலும், தமிழரின் புலப்பெயர்வுகளின் காரணங்களை வெளிக்கொண்டு வர உதவிடாமல், அவர்களை தத்தம் மதப்பிரிவுகளின் வழிநடத்தலின் நோக்கத்தை நிறைவேற்றிட இட்டுச்சென்றார்கள் என்பதை அறியமுடிந்தது. இதன் பிரதிபலனாக சிறு, சிறு, உதவிகளைப் பெற்றுக்கொள்ஞம் உள்நோக்குதான், இவ்வாறு தான் பிறந்தபோது பின்பற்றிய சமயத்தில், பெற்றவர்கள் சார்ந்த சமயத்தை துறந்து, சிலருடன் அற்ப சொற்பங்களைக் குறியாக்கி, வேற்று மதத்தில் புகவேண்டிய தேவை ஏற்பட்டது போலும்!
இவ்வாறான நிலைமை, தமிழர்களிடையே(இந்துக்களிடையே) உள்ளக- வெளிநாட்டில்- இடம் பெயர்ந்தும்- புலம் பெயர்ந்தும் பெரிதும் பரவியுள்ள ஒன்றாகும்! இதற்கு முதன்மைக் காரணம், இவ்வாறு, தாம் சார்ந்த- பிறந்த மதத்தில் கடவுளைத் தேடமுடியாது என்று, நன்றாக அறிந்த பின்னர், புதிய- மாறிய மதம் பற்றி நன்கு கற்றுக்கொண்ட பின்னரே மதமாற்றம் மேற்கொண்டதாகக் கூறின், அதனை ஒரு தனிமனித சுதந்திரம் என்றுகூட ஏற்க முடியும்.

மற்றும், இருவர் விரும்பி மணஞ்செய்பவர்களாக- வாழத் தீர்மானித்து மதமாற்றம் (ஒருவரின் மதத்திற்கு மற்றவர்)மாறுவதையும் அனைவரும் ஏற்பர்.
இவற்றுக்கும் மேலாக, பிறரின் தூண்டுதல்- வேண்டுதல்- பிரசாரங்கள் போன்றவற்றிற்கு வளைந்து நிற்பது ஏற்புடையாகாதது.

தூரநோக்கில்- எதிர்விளைவுகளையும் (தான் சார்ந்த குடும்பம், சமூகம், ஊர், உறவு என) ஏற்படுத்தலாம். புலம் பெயர்ந்த சூழலில், மதம் சார்ந்த விடயங்கள் இன்றைய ஐரோப்பிய மக்களை குறிப்பாக இளைய வயதினரின் கருத்தியலில் 'மதம் சார்ந்திருப்பது' பெரிதும் தேவைக்குரியதாக நோக்கப்படவில்லை. இதை நடைமுறை வாழ்வியலில் காணமுடிகிறது. வாரத்தில் ஓய்வுநாளாகிய ஞாயிற்றுக்கிழமைகளில் வட்டாரத்தில் உள்ள வயோதிபர்கள், மற்றும் அந்த வட்டாரத்தில் குடியேறிய புதியவர்கள் சிலரே தேவாலய மண்டபத்தில் வருகை தருவதைக் காணமுடிகிறது.


பிறந்த தமது நாட்டில் இந்து-சைவ ஆலயங்களில் முகாமைத்துவம்- உரிமை கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவாகள், தமது மதங்களில் அதிக பங்கு கொண்டிருந்த குடும்பங்களிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள், இவ்வாறு மாற்று மதத்தில் மாறியதை அறிந்து மனமுடைந்தவர்கள் பற்றிய நிலை பற்றி நிறைய செய்திகள் உண்டு. காலனித்துவ காலத்தில், ஆட்சியில் இருந்தவர்களின் கட்டாயத்தால், தமது மதங்களைவிட்டு, ஆளவந்தவர்களின் மதங்களைத் தழுவி பல நன்மைகளை பெற்றுக்கொண்டவர்கள், மூன்றாம் உலக நாடுகளில் எங்குமே உள்ளார்கள்.


புலப்பெயர்வின் மூன்று தசாப்தம் கடந்த நிலையில், ஆங்காங்கு தமிழர்கள் வாழும் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா எங்குமே இன்று மிகப்பாரிய அளவில், கோவில்கள், திருவிழாக்கள், சமய வழிபாடுகள் எனக் காணப்படுவது ஆச்சரியமானதுதான். சில இடங்களில் கைவிடப்பட்ட தேவாலங்கள் நம்மவர்களது வழிபாட்டுக் கோயிலாகியுமுள்ளன. காலனித்துவ அதிகாரத்தால் தேவாலயங்களை அன்று மூன்றாம் உலகில் புகுத்தியவர்களது பூர்வீக மண்ணில் அகதிகளாகக் குடியேறியவர்கள் தமக்கான ஆலயங்களை அமைத்துள்ளதானது விசித்திரமானதுதான்.


இதன் மூலம், ஏற்பட்டுள்ள விளைவுகள் பற்றி சிந்தித்துப் பார்க்கின், சமயம் பற்றிய தத்துவ விளக்கம், குறைந்தது சமயத்தைப் பற்றிய தெளிவு, சமய அறிவு, அதன் நம்பகத்தன்மை, அதன் வழி ஏற்பட்ட மக்கள் தொண்டுக்குரிய எத்தனங்கள், சமயம் பற்றிய சிந்தனை உரையாடல், புதிய வாழ்க்கை நோக்கில் சமயத்தின் பங்கு, எதுவுமே எங்கும் எடுத்துக் காட்டுமளவுக்கு, நிகழ்ந்திருப்பதாக கூறிடமுடியவில்லை என்பது வருந்தவேண்டியதாகும்!



வெந்த புண்ணில் வேலைப் பாச்சுவதா?
புலப் பெயர்வின் அரசியல் முக்கியம் முழுமையாக்கப்படாமல், வெறும் நுகர்ச்சி, ஆடம்பரம், நீண்டு செல்கின்ற பாமரத்தனங்களின் வெளிக்காட்டல், போன்றவற்றின் அதீத ஈடுபாடுகளில் கவனஞ்செலுத்தி, தமது கடின உழைப்பின் மூலம் சேர்த்துக் கொண்ட பொருளை, விஞ்ஞான முறையில் சேமிப்புக்குள்ளாக்குவதை கருத்தூன்றிக்கொள்வதற்குப் பதிலாக, சேமிப்பாக கூறி, தங்கக் குவியல்களை (தரம்- தரம் அற்றதா, என்பதை விட்டு) ஆசைவழி –மனம் போனவழி, தேக்கியதன் விளைவை, தமிழர் வதிவிடங்களில், தொடர் கொள்ளைகள், பட்டப் பகலில் இடம்பெறுவதிலிருந்து அறியமுடிகின்றது. இந்த இழப்புக்கள் மிக அதிகம் எனவும் தெரியவந்துள்ளது. இதனால், புலம்பெயர்ந்த வாழ்வில் புதியதொரு அச்சப்பாடு எங்குமே நிலவுகின்றது!

திருமணத்தின் போது,பெண்ணுக்கு மாப்பிள்ளை, சுபவேளையில், கட்டும் மாங்கல்ய நாண், பின்பு தத்தமது பொருள் வரவுக்கேற்ப, அளவு கடந்த பெறுமதியில், மாற்றிக் கொள்ளும், புதிய ஏற்பாடு தோன்றியிருப்பது அவதானிப்புக்குரியதாகியது புதியதுதானே. கிலோக்கணக்கில் கழுத்தில் சுமக்கும் காரணமாக சிலர் கழுத்து நோய்களுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள்!


சில வருடங்களுக்கு முன்னர், தொடர் வண்டிப் பயணமொன்றில், சிறிலங்காவில் தமிழர் நிலைமை பற்றித் தெரிந்து கொள்ள விரும்பிய, ஜேர்மனியர் எம்முடன் நடாத்திய பன்முக உரையாடலின் இடையில், "உங்கள் பெண்கள், தங்க நகைகளை மிதமாக அணிவது, தத்தமது கணவர்மார் பணக்காரர் என்பதை பிறருக்கு வெளிப்படுத்துகின்ற நோக்கமென கருதமுடியுமா?" என்று பேச்சுக்கு மத்தியில் கேட்டதை மற்கமுடியாத நினைவுடன் பதிவிடுகிறேன்.

அகதிகளாக இறைஞ்சி வாழும் நம்மவர்களின் நடாத்தைகள் எவ்வாறெல்லாம் மற்றவர்களது பார்வைகளால் அலசப்படுகிறதென்றும் இங்கு தம் கண் முன்னால் தெரியும் தமிழர்களது நடாத்தையின் பார்வை ஒட்டுமொத்தமான தமிழர்களது நடாத்தைகளாக பொதுப்பார்வையாகின்றன என்றும் அன்று வேதைனைப்பட்டேன்.
முன்பு, சிறுகச் சிறுகச் சேமித்த நம் முன்னோர்கள், பெட்டிகள், முட்டிகள், முடிச்சுக்கள் என கொண்டிருந்ததை தத்தமது வமிசாவழியினருக்கு பழுதடையாமல் கொடுப்பதற்காக உருவான நடைமுறைதானே இது. ஆயினும் இன்று, அதே பாணியில், பணத்தை வைத்து பெருக்கும் பல வழிகள் இருந்தும், தங்கத்தில் மோகமுற்று, தேடி வைத்து, ஈற்றில் இழந்து வருந்தும் பலரைப் பார்த்து பரிதாபப்படுவதைத் தவிர வேறு என்னதான் செய்யமுடியும்? எதையும், பறிகொடுத்து, பட்டறிவு பெற்ற பின்னர் தான் புத்தி பெறமுடியும் போலும்!

இன்று, தமிழினத்தவர் படும் அவலங்களின் மூலத்தைப் பற்றியதை இங்கு பேசவேண்டியதில்லை ஆயினும், அங்கு நம்மவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றவற்றை வரிசைப் படுத்துவதற்குப் பதிலாக, அவர்களின், துயரங்களைத் தீர்க்கவும், அவற்றை வெளிப்படுத்தவும், முடிந்தவரையில் உதவிடவும் வேண்டிய தார்மீகப் பொறுப்பினைத் தவறாது நிறைவேற்றுவதற்குப் பதிலாக, நொந்து நலிவுற்றவர்கள் பற்றியும், அவர்களைப் புணபடுத்துவது போலவும், மாற்றினத்தவர்கள் நம்மை, ஏளனஞ் செய்வது போலவும் காரியங்கள் கண்மூடித்தனமாக மேற்கொள்ளலாகுமா? என்பது சிந்திக்க வேண்டியதாகும்.


புலம் பெயர்ந்த தமிழர்களின் விளிப்புணர்வற்ற, தமது மக்களின் ஒட்டுமொத்த நிலையை தெரிந்துணர்ந்திராத அவலநிலை அம்மணமாகப் பதிவுற்றிருக்கிறது. தனிப்பட்டு, விபத்து மரணம் எய்திய தமது, குடும்பத்தில் ஒருவர் இறக்கின், அவருக்குரிய(மறைவுக்கு காட்டப்படும், சமய சம்பிரதாயங்கள் என்று கூறி) சிரார்த்தங்களை மூன்று, ஆறு மாதங்களுக்கு பின்னரே மேற்கொள்ளுகின்ற வழக்கம் நம்மவர்களுக்கு உண்டு. இழவு நடந்த குடும்பத்தார் குறைந்தது ஒரு வருட காலத்திற்கு விசேடங்களில் கலந்து கொள்ள முடியாதென்ற வழக்கமும் இருந்தது.

இரவு பகலென இன்னல் துயரங்களுக்குட்படுத்தப்பட்டு நம் உடன்பிறப்புகள் ஆயிரமாயிரமாக கொல்லப்பட்டிருந்த வேளையில், உயிர் தப்பியவர்களுள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள், உடல் உறுப்புக்கள் இழந்தவர்கள், பசிக்கொடுமைக்கு உள்ளாகியவர்கள், யுத்த களத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் எனக் கூறப்பட்டு, முட்கம்பிக்குள் முடக்கப்பட்டு யாசிப்பாரின்றி பரிதவிக்கும் நிலையில், பட்டுப்பீதாமபரங்களுடன் புலம் பெயர்ந்த நாடுகளின் வீதிகளில் உலாவந்து, தடல்புடல் என வேடிக்கை வினோதங்களுடன் வடம்பிடித்து தேரில் வந்தது தேவர்களா? கடவுள்களா? மனிதர்களா? எனக் கேட்கப்படும் கேள்விக்கெல்லாம் பதில்தான் என்ன?


தன்னை பன்னெடுங்காலமாக யாசித்த மக்களது ஈனக்குரலில் கதறிய அவலத்தைப் போக்க இந்தக் கடவுகள்களுக்கு முடியாது போனாலும், ஏதுமே நடவாத பாவனையுடன் உலகத் தெருக்களில் பவனி வந்தது உறுத்தவில்லையா? இந்த புலம்பெயர்ந்த தமிழர்களாலேயே உலகின் பிரதான நகரங்களைப் பார்க்கக் கிடைத்த வெக்கங்கெட்ட கடவுள்களும், மானங்கெட்ட மனிதக் கூட்டமுமான ஊர்தலாகவே இதை நோக்க முடிந்தது சோகம்தான்!


நாடே பிணக்காடாகி, பிண வாடை வீசுகின்ற தற்போதைய சோகங்கள் புலம் பெயர்ந்த தமிழர்களின் கணகள் திறக்கப்பட்டு, உண்மைகள் நெஞ்சங்களை உறுத்தவில்லையா? சாதாரணமாக ஓரிடத்தில் அதிகவளவிலான பேரிழப்பு நிகழுமாயின், வருடா வருடம் தவறாது நடாத்தப்படுகின்ற சமய, சமூக விழாக்கள்(வீழ்ந்து, மடிந்த சொந்த மக்கள் நினைவாக நிறுத்தி!) நடைபெறாது நிறுத்தப்பட்டு அனைத்தையும் அடுத்தாண்டில் புதிய குடமுழுக்கு நிகழ்வுகளாகி புத்தெழுச்சியுடன் தொடர்ந்திடுவதுதானே பொது வழக்கு.... இவ்வாறாக இங்கு நம்மவர்களால் இந்த மத நிகழ்வுகள் நடாத்தப்பட்டிருந்தால் நம்மவர்களின் அவலம் உலகத்தினர் அனைவரையும் திரும்பிப் பார்க்கவும், நெஞ்சம் உருகவும் செய்திருக்குமே! ஆனால் இதைச் செய்ய யாருமே நினைக்கவே இல்லையே!
(நினைவுத் துளிகள் சொட்டும் .....)

No comments:

Post a Comment