Thursday, 20 August 2009

கதைச் சரம் - 11 மெத்தப் படித்த வாலிபனும் குடியானவனின் பண்ணையும்


கதைச் சரம் - 11
செவி வழிக்கதை - 9

மெத்தப் படித்த வாலிபனும் குடியானவனின் பண்ணையும்

வட இலங்கையில் மன்னார் மாவட்ட மாதோட்டத்தில் அடம்பன் என்ற அழகிய கிராமம். இதன் இயற்கை வாழ்வியல் அழகிற்கு பெரிய நாவற்குளம் எப்போதும் நீர் நிறைந்ததாக வழி சமைத்தது. இங்கு விவசாயமும் கால்நடை வளர்ப்பும் பிரதான தொழிலாகவிருந்தது. நெற்பயிரிடலுக்குப் பேர்போன கிராமங்களில் இதுவும் அடங்கும். இந்தக் கிராமத்திலிருந்த பெரிய பண்ணை வீட்டின் இளையமகன் அமலன் பல்கலைக் கழகத் புகுமுகத் தேர்வில் வெற்றியடைந்திருந்தான். அப்போது தரப்படுத்தல் அமுலில் இருந்த காலம். அடம்பன் கிராமத்திலிருந்து யாழ் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவான முதல் இளைஞனாக இவன் இருந்தான். ஊரே ஒன்றிணைந்து மாதோட்டம் சந்தியில் பஸ்சில் வழியனுப்பியதென்றால் பாருங்கள்! 'சின்ன வயதிலிருந்தே அவன் நல்ல கெட்டிக்காரன்!" என்றார் அந்த ஓர் ஆரம்ப்ப பாடசாலை ஆசிரியர் பெருமையுடன்!

பெரிய பண்ணையில் ரக்டர் ஓட்டும் முதல் மகனுக்கும், குடும்ப்ப பெரியவருக்கும் பெருமையோ பெருமை! தனது குடும்பத்திலிருந்து உயர் கல்வி பெறும் வாய்ப்பை இளையவன் பெற்றிருக்கிறான் என்றால் சும்மாவா? பின்னே! ஊர்ச் சிறுசுகளுக்கு ஒரே வேடிக்கைதான். "பெரிய படிப்பென்றால்; பென்னாம்பெரிய கொப்பியெல்லாம் வைச்சிருப்பாங்களாம்" என்கிறான் ஏதோ இதுபற்றித் தெரிந்ததாகப் பாவனைசெய்யும் குறுப்புக்காரச் சிறுவன் தன் நண்பனிடம்.

இப்படியாகப் பயணித்த நம்ம அமலன் தனது பல்கலைக் கழகக் கல்வியின் முதலாண்டை நிறைவு செய்து விடுமுறைக்கு வீடு திரும்புகிறான். சொல்வா வேண்டும் மாதோட்டச் சந்தியில் பெரிய வரவேற்பு. தனது ரக்டரில் வந்திருந்த பெரிய அண்ணனைக் கண்டதும் அமலனுக்கு சந்தோசத்தால் கண் கலங்கியது. பெரிய அண்ணனென்றால் அவனுக்கு சின்ன வயதிலிருந்து சரியான பயமும் மரியாதையும் இருந்தது. அந்த அண்ணனே தனக்கு மரியாதை வழங்கி வரவேற்கிறார் என்றால் சும்மாவா?

பதினொரு பிள்ளைகள் பெற்ற பெரிய குடும்பம் அது இவன்தான் கடைக்குட்டி. இவனுக்குப் பின் அந்த அம்மா போயே போய்விட்டார். இதனால் அனைவருக்கும் இவன்தான் செல்லப் பிள்ளை. பொதுவான பள்ளிகளுக்கும் இப்பத்தான் விடுமுறை காலமாதலால் அவ்வூர் சிறுவர்களுக்கு பெரிய பண்ணை வீட்டு சிறப்புகளைப் பார்ப்பதே பொழுதுபோக்காகி விட்டிருந்தது. அமலனின் ஒவ்வொரு அசைவும் நோட்டமிப்பட்டு அவ்வப்போது சிறுவர்களால் நடித்தும் காட்டப்படன. அந்தவூர்க் கதாநாயகன் இப்ப அமலன்தான்!

அந்தக் காலத்தில் யாழ்ப்பாணக் கிராமங்களில் நாங்கள் வசித்தபோது இலண்டனிலிருந்து இளைஞர்கள் திரும்பியபோது அவர்களது நடை, உடை பாவனைகளால் நாம் கவரப்பட்டதையொட்டியதாக இது இருந்தது. அந்த மார்க
ண் ஸ்பென்சர் உடுப்பும் குறுந்தாடியும் மினுங்கும் பேனாக்களும் தேற்பையும் கறுப்புச் சப்பாத்துமாக அந்த ஆடல் நடையுமாக வந்து நம் கனவுகளைக் ஆக்கிரமித்த நண்பர்களை எப்படி எம்மால் மறக்க முடியும்.

நம்ம கதாநாயகன் அமலனுக்கும் கிட்டத்தட்ட இதே நிலைதான். ஊரே வந்து குசலம் விசாரித்து நோட்டமிட்டது. "சாப்பாடு எப்படி?" "நல்லா மெலிந்து விட்டாயடா!" "உன்னோடு இருப்பவர்கள் நன்றாகப் பழகுறார்களா?" "யாழ்ப்பாணத்திலே என்னவெல்லாம் பார்த்தாய்?" இப்படியாகப் பல விசாரிப்புகள். இதனால் உற்சாகமான நம்ம ககதாநாயகன் புதிய நடையுடன் வலம்வரலானான். வயசுப் பெண்கள் நேரில் தென்படாவிட்டாலும் தன்னை ஆங்காங்கிருந்து நோட்டமிடுவதை அவனது அறிவுக் கண்(அதுதான் ஞானக்கண்!- அவன்தான் மெத்தப் படிக்கிறவனாயிற்றே) சொல்லிக் கொண்டிருந்ததால் மண்டையில் காதுகளின் பின் புறம் விறுவிறுக்க மேலும் மெடுக்கு அதிகரித்தது.

முதல் நாள் மாலை, வயல் வேலை முடிந்து மேலும் ஆக்கள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். மேச்சலுக்குப் போன கால் நடைகளும் திரும்பின. சூரியனும் மறைந்தும் மறையாத செவ்வான வெளிச்சம் மனதை வருடுவதாக இருந்தது. பண்ணையின் பெரியவர் "தம்பி அமலா! மாடுகளெல்லாம் பட்டிக்கு வந்துவிட்டதா என கணக்குப் பார்க்கிறாயா?" என்கிறார் அன்புடன்.

"ஓம் ஐயா!" என்று துள்ளலுடன் எழுந்தான் நம்ம கதாநாயகன். அவனுக்குப் பின்னால் சின்னஞ் சிறுசுகளின் கூட்டம் தொடர்கிறது. இதனால் புதிய சங்கடம் ஏற்படுகிறது நம்மாளுக்கு.

'அடடா! இந்தச் சிறுசுகளுக்கு முன்னால் எப்படி சாதாரணமாக எண்ணுவது? அப்படி எண்ணினால் எப்படி என்னை மதிப்பார்கள்... பெரிய படிப்பைப் படிச்சாலும் நம்மளப் போலத்தான் கணக்குப் பார்ப்பதாக ஊர் முழுக்கச் சொல்லித்திரிவார்கள்.... என்ன செய்யலாம்!' அவனது எண்ணம் குறுக்குமறுக்காக ஓடியது. தேடல் வீண் போகவில்லை. அவனுக்கு ஒரு புதிய உத்திகிடைத்துவிட்டிருந்தது.

படபடப்படன் ஓடி, மாட்டுப் பட்டிக்குள் நுழைந்தான். சடாரென கீழே படுத்து மாடுகளின் கால்களை எண்ணத் தொடங்கினான். பின் தொடர்ந்த சிறுவர் கூட்டம் வாயைப் பிளந்தவாறு அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தது. ஆகா! நம்மாளும் ஒருவாறு எண்ணி முடித்தவாறு எழுந்து ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட்டு அக்கம் பக்கம் பெருமிதத்துடன் நோட்டம் விட்டான். எல்லோரது கண்களும் அவனையே மொய்த்த வண்ணமிருந்தன. அதே சமயம் அவன் மனது கணக்கு பார்த்துக்கொண்டிருந்தது .
"எத்:தனை மாடுகள் இருக்கண்ணே?" ஒரு சிறுவன் கேட்டுவிட்டான்.

"மொத்தம் தொண்ணூறெட்டே முக்கால் மாடுகள்" என்றார் நம்மாள் பெருமிதத்தோடு. ('மொத்தம் 395 கால்கள் ஆக 4ஆல் வகுத்தால் தொண்ணூறெட்டே முக்கால் மாடுகள்.
395 / 4 = 98 3/4 )

- முகிலன்
(இக்கதை என்னுடன் பல்கலையில் படித்த மன்னார் பள்ளிமுனையைச் சேர்ந்த நண்பன் பிகராடோ சொன்னது. இவர் இப்போது எங்கிருக்கிறார் என அறிய முடியவில்லை.)
பாரிஸ் ஓகஸ்ட் 2009

No comments:

Post a Comment