Wednesday 29 July 2009

சரம் - 14 கறுப்பு யூலையால் உனக்கென்ன வந்தது?


சரம் - 14

கறுப்பு யூலையால் உனக்கென்ன வந்தது?

மானிட வாழ்வில் காலம் கரைந்துவிடுவதை அனுபவத்தால்தான் உணர முடியும். இதுதான் 'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்' என முதுமொழி கூறியதுபோலும். போனது திரும்பாது என்பது அப்படியே பொருந்திப்போவது நேரத்திற்கு (காலத்திற்கு) தான்!

1983 யூலை ஈழத் தமிழர் மத்தியில் கறுப்பு யூலையாக வரலாற்று வடுவாகிவிட்டது. அப்போது இந்நிகழ்வு ஈழம் நோக்கிச் செல்லப் பலரை ஈர்த்தது, இவர்களில் நானும் ஒருவனானேன்.

ஆனால், 1993- இன் தொடக்கம் மீளவும் ஐரோப்பிய அகதியாக ஒருவித மன உறுத்தலுடன் விண்ணப்பித்திருந்திருந்தேன். அந்த மீளகதியான முதல் நாள் இரவின் தூக்கமற்ற புரளலை எப்படித்தான் மறக்க முடியும்?..... என்னை மாதிரி எத்தனைபேர் நாடு திரும்பக் காரணமானது இந்தக் கறுப்பு யூலை. ஆனால் நான் அறியப் பலர் இன்றில்லை. ஆம் அவர்கள் போயே போய்விட்டார்கள். மானுட வாழ்வின் எச்சங்களைக் காணாத அவர்களது பயணம் முடிவடைந்துவிட்டது. நானோ தோற்றவனாகி, நூலறுந்த பட்டமாக மீளவும் வெண் பனிப் போர்வையால் தன்னை தன்னை மூடிப் பளீரிட்ட ஊசியிலை மரத்தடியில் வீழ்ந்து கிடந்தேன். இப்ப நினைக்கும் போதே பெருமூச்சு வீறிட்டுச் செல்கிறது.

வந்தாயிற்று, துணைவி வழிவந்த புது உறவுகளுடன் எதைத்தான் பேசமுடியும்? மெளனமும் சிரிப்பும் உடல் மொழியாகி, மானுட மொழி உறைந்து போனது. ஐரோப்பியப் பயணத்தால் பிரிந்த துணைவியை மீளவும் இங்கு அழைத்தாக வேண்டும். கரைந்து போன இளமையையும் மீறி காலத்தின் ஓட்டத்துக்குள் நானும் ஓடிக் கலந்தாக வேண்டும்.

80களின் தொடக்கத்திலிருந்து இந்த ஐரோப்பிய மண்ணில் பதியமிட்ட பலரது வாழுதல் சீரானதாகி பொருளாதார மலர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. வாடகைத் தரிப்பிடம் சொந்தமாகிவிட்டிருந்தது. புதிய தொழில் வழங்குவோராகவும் சிலர் பரிமாணமாயினர். இன்னும் சிலர் நாடு விட்டு நாடு சென்றவர்களாகினர். மாற்மொன்றுதான் நிரந்தரமென்பதைப் பறைசாற்றிச் சிரித்தது ஐரோப்பா.

மைத்துனரது அழைப்பை ஏற்று அவர் பணியாற்றும் உணவகத்துக்கு அவருடன் உதவியாளனாகப் பணியாற்றச் செல்கிறேன். இது நம்மவர் நடாத்தும் பிட்சா உணவகம். அனைவருக்கும் 'வணக்கம்' கூறிக் கைகுலுக்கி சமையல் அறைக்குள் நுழைகிறேன். வெள்ளைக்காரச் சிப்பந்திகளும் வணக்கம் சொன்னது என்னையும் அறியாது பெருமையாக இருந்தது. ஈழத் தமிழனின் உலகளாவிய பிரசன்னம் 'வணக்கம்' என்ற சொல்லை உலகமயமாக்கிவிட்டிருக்கிறது.

சமயலறையில் எனக்குப் பாத்திரங்கள் கழுவும் வேலை. மைத்துனர் பிரதம சமையலாளர், தனக்கே உரிய வேகத்துடன் பல் வேறு வகை உணவுகளைத் தயாரித்தளித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். வாடிக்கையாளர் குறைந்த நேரம், எல்லோரும் தமக்கான உணவைச் சாப்பிடத் தொடங்கினர். உணவகத்தின் தமிழரான முதலாளி உள்ளே வந்து எனக்கு வணக்கம் சொன்னார். எல்லோரும் என்னைப் பொறாமையாகப் பார்த்தனர்.
"எப்படி?" என்றார்.
"நலம்" என்றேன் மெளனம் கலைந்தவனாகி.
"எப்படி இருக்கு சேர்மனி?"
"நன்றாக இருக்கு, நம்மவர்கள் வளர்ச்சியடைந்துள்ளார்கள்" என்றபின் தொடர்ந்து,
"உங்களுடைய 'காந்தி பிட்சா' பெயரும் இதன் சிறப்பாக மரக்கறிப் பிட்சாவாக்கிய உங்களது எண்ணம் மிகவும் சிறப்பானது" என்றேன் மகிழ்வோடு.
எனக்கு விசேட சாப்பாடு செய்து கொடுக்கச் சொல்கிறார்.
"எப்படி இத்தகைய எண்ணம் வந்தது?" என்றேன் அவரது நட்பால் கவரப்பட்டு
"இங்கு நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டுமென்றால் 'ராம்' அல்லது 'காந்தி' என்று சொல்ல வேண்டும். பெயரை வைத்தால் மட்டும் போதுமா? தனிச்சுவையுடன் இருக்க வேண்டுமல்லவா? இதற்காக இஞ்சி, உள்ளி, கொஞ்சம் பச்சை மிளகாய் சேர்த்து புதிய பசை செய்தேன். சிறப்பு 'காந்தி பிட்சா'வுக்காக வெண்டக்காயும் சேர்க்க நன்றாகப் போகிறது" என்றார் பெருமையுடன்
கொஞ்ச நேரம் அமைதியாகச் செல்கிறது.

"அது சரி, ஏன் நீர் திரும்பிப் போனீர்?" அமைதியைக் கலைத்தது அவரது கேள்வி.
என்னைப் பற்றிய விபரங்களை முன்னரே அறிந்திருக்கிறார். வேலை கொடுக்கும் முதலாளிகளுக்கு இது கைவந்த கலை.

நிமிர்ந்து பார்க்கிறேன், அவரது ஆர்வம் இயல்பானதாகவே இருப்பதாகப்பட்டது. திடீரெனக் கேட்ட இப்படியான கேள்வியை இவரிடமிருந்து நான் எதிர்பார்த்திருக்கவில்லை.
"அப்ப 83 கலவரம் நடந்ததே, அது ரொம்பவும் பாதிச்சுது அதுதான்!"...... என்றேன் ஒருவாறு சமாளித்தவாறு.

"83 கலவரம் அங்கே கொழும்பில் சிறிலங்காவில்தானே நடந்தது, ஆனால் பெர்லின் நகரில் இங்கிருந்த உம்மை அக்கலவரம் எப்படிப் பாதிச்சது?" என்றார் உறைப்பாக.

ஈழத் தமிழனொருனின் வாயிலிருந்து தமிழால் வெளிப்பட்ட வாக்கிய அதிர்வு காற்றைக் கிழித்து என் செவிப் புலனைத் தொட்டதும் இத்தகைய அதிர்வெண்ணை அறியாத என் செவிப்புலனை விறைப்பாகிக்கியது. இது என்னைப் பேச்சு மூச்சற்றதாக்கியது!
'என்ன சொல்லலாம்........?' இது நடந்து 15 வருடங்கள் கழிந்த நிலையிலும் இப்பவும் யோசிக்கிறேன்.

காலத்தின் ஓட்டத்திற்கு இசைவாகி தமக்கான தமக்கு மட்டுமான விருப்பின்
இருப்புக்காகவே வாழும் கருணாக்களுக்கான உலகில் இன்று எனக்குள் எரிமலையாகக் கொதிக்கும் கேள்வி

'அடேய்! முத்துக்குமாரா.... உனக்கென்ன வந்தது?'


- வளவன்
செர்மனி 25.07.2009


1 comment: