Thursday 23 July 2009

சுவடுச் சரம் 1 நினைவுத் துளிகள் (4)




சுவடுச் சரம் 1
நினைவுத் துளிகள் (4)

- குணன்
-------------------------------------------------------------------------------------------------
முற்குறிப்பு:

தோரணத்தில் புதிய தொடராகப் பதிவுறுகிறது நடந்துவந்த பாதையின் நினைவுச்சுவடு. இலங்கையிலிருந்து ஈழத்தமிழர்கள் பெருமளவில் அகதிகளாகவெளியேறத் தொடங்கியகளின் ஆரம்பத்தில், இலண்டனும் - ஆங்கிலமும்தவிர்ந்த ஏனைய நகரங்கள் - மொழிகள்பற்றி பெரிதும் அறிந்திராத ஈழத்தமிழர்கள் பரவலாக பூமிப் பந்தில் பரவிய குடிப்பரம்பலுக்குஅச்சாணியாகத்திகழ்ந்தது பேர்லின் நகர்தான். அப்போது கிழக்கு - மேற்கு எனப்பிளவுண்டிருந்தஇந்த நகருக்கூடாகத்தான் ஐரோப்பாவின் அகதிகளாகஈழத்தமிழரின்முதற்தலைமுறை தடம் பதித்தது. இந்த ஆரம்பகால நினைவுகளைமீட்டுசொட்டுச் சொட்டாக துளிரிடுகிறார் குணன். நினைவுத் துளிகளாகளாகச்சொட்டும் இத்தொடர் வாசகர்களின் கருத்துகளால் மெருகூட்டப்படுமென ஆவல்கொள்கிறார்.

இதைப் புகலிடப் பதிவாக்கிய தோரணம் 'சுவடுச் சரமாக'த் தொங்கவிடுகிறது. இப்பதிவுவாசகர்களின் நினைவுகளைத் தூண்டி இவ்வாறாக இன்னும் பலபதிவர்கள் பதிவிடமுன்வரும் உந்துதல் கிட்டிடவேண்டுமென்பதே தோரணத்தின்அன்பான எதிர்பார்ப்பு.
-------------------------------------------------------------------------------------------------

எங்கோ ஆறாயிரம் மைல்களைக் கடக்க, வானத்தையும், கடல், மண்ணையும் தாண்டி ஏன் இந்த புதிய மனிதர்கள் நூறு ஆயிரம் என விமானங்களை அமர்த்திக்கொண்டு பேர்லின் மேற்குள் குவிந்து தங்குமிடம், உணவுக்கு அவதிப்படவேண்டும்? என உள்ளுர் - வெளிநாட்டு ஊடகங்கள் புறப்பட புதியதான எமது தமிழர் நலன்புரிக்கழகம் பற்றி தேவாலயத்துக்குச் சென்ற சில தமிழ் கிறிஸ்தவ நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்ட திரு பீர் புக்கோல்ஸ் என்ற ஜேர்மனி பெருமகனும், கத்தோலிக்க மாணவர்களும், நாம் தங்கியிருந்த விடுதியில் ஓர் ஊடகச் சந்திப்பை நடாத்தினர்.

எம்மை அறிமுகம் செய்யவும் அதன் மூலம், எமது வருகை பற்றி யாவரும் தெரிந்து கொள்வதால், மாநில அரசின் கவனத்தையும், ஏனைய மனிதாபிமான நிறுவனங்களின் மற்றும் பொது மக்களின் அனுதாபங்களையும் பெறமுடியும் என்று கூறி பேர்லின் கிறிஸ்தவ மாணவர் கூட்டமைப்பினால், வரலாற்றில் முதன் முதலாக ஜேர்மனிய-ஐரொப்பிய ஊடகங்களின் செய்தி மாநாடு, பொஸ்டம்மர் வீதி 147, ஐந்தாம் மாடியின் எண் 502 அறையில், 08.07.1981-ல், நடைபெற ஏற்பாடாகியது!

அப்பத்திரிகை செய்தி மாநாட்டு அழைப்பிதழில், "நாம் இதன் வாயிலாக, உங்கள் கவனத்திற்கு கொண்டுவரும் செய்தியாவது, இதுவரை ஊடகங்களின் கவனத்தைப் பெறாதுள்ள, சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற சிறுபான்மையினராகிய தமிழர் மீது நடாத்தப்பட்டு வருகின்ற, வன்செயல்களுக்குத் தப்பிட வேண்டி, 500 பேர்கள் வரை அகதிகளாக பேர்லின் மேற்குள் வந்திருக்கிறார்கள். தினமும் மேலும் வருகிறார்கள். இது பற்றி ஓர், ஊடக மாநாட்டைக் கூட்டி ஆராய, உங்களையும் அழைக்கிறோம்" என்று குறிப்பிட்டிருந்தது. இது கீழ்க்காணும் அமைப்பு மற்றும் ஆதரவாளர்களின் சார்பில் இடம் பெற ஏற்பாடாகியது என்றவாறு அழைப்பாளர்கள் :
- அண்மையில் வந்த தமிழர் பிரதிநிதிகள்
- இங்குள்ள தமிழ் அகதிகள்
- தமிழரின் புதிய அமைப்பின் (ஈ.த.ந.க. பேர்லின்)
- கத்தோலிக்க மாணவ அமைப்பு பிரதிநிதிகள்

இங்ஙனம், நன்றியுடன்,
கிறிஸ்தோப் றெம்பெக் எஸ்ஜே
பீர் புக்கோல்ஸ் (என) பெயர்கள் காணப்பட்டன.

அங்கு அன்று, மேற்படி அழைப்பை ஏற்று, ஜேர்மன், உள்ளுர் - வெளி ஊடகங்களில் பி.பி.சி உட்பட பலரும் வருகை தந்தனர். ஏன் இவ்வாறு பெரும் பொருட்செலவில், இங்கு மிகவும் கஸ்டங்களைக் கடந்து வரவேண்டும்? என்றும், அண்டை நாடாகிய தமிழ் நாடு, இந்தியா செல்வது இலேசானதல்லவா? என்று பலரும், குறிப்பாக பி.பி.சி நிருபர் கேட்டது இன்றும் என் நினைவில் துளிர்க்கிறது. தாய் மண்ணையும், குடும்ப உறவினர், நண்பர்கள், அனைவரையும் பிரிந்தும் என் போன்ற சிலர் மனைவி, பிள்ளைகளையும், வயதான பெற்றோர்களையும் அழைத்து ஏன் வரவேண்டும்? இதன் வழி, எதனைச் சாதிக்க எண்ணம்? என்றது போன்ற கேள்விகள் பலரால் கிளப்பப்பட்டன!

அன்று, வந்த பலரின் நோக்கம் பசுமை தேடியே என்பது தவறெனக்கொள்ள முடியாது! ஆயினும் 1981-ல், யாழ் மாவட்டசபை தேர்தலை அடுத்து, போராளிகள் - அரசியல்வாதிகள் மோதல், யாழ் நூல் நிலைய எரிப்பு, யாழ் பா.உ.அமரர் யோகேஸ்வரன் வீடெரிப்பு, யாழ் நகர அங்காடி தீவைப்பு, என தமிழர் மீது வன்முறை, கொலை, கொள்ளை, தீவைப்பு என்பன தொடராக அரச இயந்திரங்கள் மூலம் நடந்தேறிய செய்திகள் பேர்லின் நகரில் தெரிந்து கொள்ள முடிந்தது. இக்காலத்தில், பல்வேறு மனித உரிமைகளுக்கான அமைப்புக்களாகிய ஜேர்மன், பேர்லின் கிளை, ஆபத்துக்குள்ளாகிய இனங்களுக்கு உதவும் உலக அமைப்பின் பேர்லின் பொறுப்பதிகாரியாக விளங்கிய டாக்டர் ரீ.கொவ்மன் மற்றும் பல்வேறு கிறிஸ்வ பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள், ஆகியோர், ஈழத்தில் இருந்து இங்கு, ஆதரவின்றி வீதிகள், மைததான்ஙகள், சோலைகள், ரயில் நிலையம் போன்ற இடங்களில் தவித்துக் கொண்டதை அறிந்து, மாநில அரசுக்கும், மற்றும் பல்வேறு உதவி புரியும் செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றின் கவனத்துக்கும் கொண்டு வந்ததுடன், மத்திய-மாநில செனட்டர்கள், அமைச்சர்களுடன், தமிழ் அகதி வருகையும், தமிழர் நிலைமை பற்றியும் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்தவர் டாக்டர் கொவ்மன் என்பதும், இலங்கையில் இருந்து, முதன் முதல், "வீரகேசரி” இதழை கழகத்தின் சார்பில் தருவித்து(தினந்தோறும்) தாயகச் செய்திகளை அறிந்துகொண்டு, அவற்றை சான்றுகளாக்கி தமது விண்ணப்பத்துடன் வழங்கச் செய்தோம்!

ஆம்! தமிழர் யார்? ஏன் இங்கு வந்தோம்? அரசியல், கலை, பண்பாடு, உணவு என, ”தமிழர் அறிமுகவிழா”என ஜேர்மன் - பேர்லின், பல்கலைக்கழகத்தின் இவாங்கிலிச மாணவர் ஒன்றியத்துடனும், மற்றும் பல்வேறு அமைப்புக்களுடனும் இணைந்து முதன் முறையாக, கோலாகலமாக ஜேர்மனிய-தமிழர் நடாத்திய, ”தமிழ் மாலைப்பொழுது” நடந்தேறியது. மீண்டும் கொவ்வன் அவர்கள் முன்நின்று நாம் (கழகம்) நடாத்த அனைவரையும் ஒன்றிணைத்து உதவினார்.

0000000000000000000

எப்போது மனிதன் தோன்றினான் என்பதையும், எங்கு, எவ்வாறு தோன்றினான் என்பதையும் "இப்படி, இங்கேதான்!" என்று அறுதியிட்டுக் கூற இயலாது அறிவியல் மற்றும் மதவாதிகள் நீண்ட காலமாக முரண்பட்டே வந்துகொண்டிருக்கிறார்கள். ஆயினும், ஆதிகாலத்தில் விலங்குகளைப் போன்றே மனித இனம் வாழ்ந்து, முன்னேற்றங்கண்டு, சமூகப்பிராணியாக மாற்றம் பெற்றிருக்க வேண்டும் என்ற மானிடவியலாளர் டார்வின் கூறிய கருத்து முழு அளவில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஏனெனில், மனிதனிடம் விலங்குத்தனம் இன்றும் ஒழிந்ததாகத் தெரியவில்லை!

இன்றைய புதிய நூற்றாண்டிலும், வரலாற்றுத் தொடக்க காலம் போன்று, மனித குலத்தின் ஒரு பிரிவு மக்கள் உலகின் பல நாடுகளில், நாட்டைவிட்டு துரத்தியடிக்கின்ற, குறிப்பாக சிறுபான்மை இன மக்கள், வாழ்வுரிமை நாடி, புலம் பெயர்கின்ற அவலத்தை எதிர்நோக்கி உலகின் பல பாகங்களுக்கும் ஓடிக் கொண்டிருப்பதைக் காணலாம். இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலும், மனிதர்கள் தினம் தினம் எங்கோ ஒரு மூலையில், இறக்கிறார்கள் என்பது உண்மைதான்! அதே போன்று, ஆதிக்குடியினர், சிறுபான்மை இனத்தவர்கள், ஆளும் அதிகார வர்க்கத்தினராலும், ஆயுதப் படைகளினாலும், கட்டங்கட்டமாகத் திட்டம் போட்டு, வேரோடு அழிக்கப்படுவதை இன்றும் கண்டும் உலகம் கையாலாகத்தனமாக கைகட்டி, வாய் மூடி மௌனம் காக்கிறது. இது ஒருவகையில், தந்திரமாக வன்முறைகளுக்கு துணை போவது போல சந்தேகம் எழுவதைக் தவிர்க்க முடியாததாக்கிறது. இத்தகைய ஆபத்துக்களைக் கண்டும், கேட்டும், பட்டறிவும் கொண்டவர்களாகிய எம்மக்களும், தமது அழகிய பிறந்த மண்ணில் வாழமுடியாமல் ஊர், உறவை உதறிவிட்டு, மிகக் கொடுமை மிக்க காலநிலை கொண்டதான புதிய நாடுகளில் (எங்காவது) சென்றிடத் துணிந்தவர்களாக மாறினார்கள்!

இலங்கையின் மூத்த குடிகளாகிய தமிழர்கள், வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டே வாழ்ந்து வருபவர்கள். இம்மக்களின், அடிப்படை சொத்துக்களாகிய வாழ்விடம், தாய்மொழி, தனித்துவமான பண்பாடு ஆகியனவற்றை, சென்ற 5000 ஆண்டுகளாக பேணிவருபவர்கள். இவ்வாறான எம்மை இல்லாதொழிக்கும் முகமாக அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டதாலேயே, கடந்த அரை நூற்றாண்டு தாண்டிய நீண்ட எதிர்ப்பையும், போராட்டங்களையும் நகர்த்தி வந்தார்கள். இன்று உலகின் அகதிகளாக்கப்பட்ட மக்களில், கடந்த மூன்று தசாப்தங்களில் கணிசமான மக்கள் கூட்டத்தினருள், ஈழத்தமிழர்களும் அடங்குவர். 1980 முதல், தொடங்கிய புலப்பெயர்வு, இனறும் தொடர் கதையாகவே உள்ள ஒன்று!

ஐரோப்பாவுக்குள், அதிக எண்ணிக்கையில் தமிழரின் பரம்பல் இடம்பெறுவதற்கு வழிசெய்த பேர்லின் ஊடாக, ஏனைய நாடுகளுக்குள் நுழைவை மேற்கொள்ளும் வழி ஏற்பட்டது. 1980 சனவரி 15 முதல் பிரான்ஸ், நுழைவுக்கு, விசா முறை புகுத்தல் நடைமுறை கொண்டு வரப்பட்டதால், பிரான்ஸ்சுக்கு நேரடியாக வருவது தடைப்பட்டது. இதனால், பேர்லின் வழி மட்டுமே இருந்தது. மேற்குல நாடுகள், அனைத்திற்கும், பேர்லின் வழியாக பலர் செல்லமுடிந்தது. இவ்வாறு, அடுத்து ஐந்தாண்டுகளாக, 1985 யூலை 15 வரை, தொடர்பாதையாக பாவித்து பலரும் நுழைய முடிந்தது. 1980 - 1989 வரையான காலப்பகுதி, பேர்லின் வாழ் தமிழர் நலன்புரிக்கழகம் ஆற்றிய பணிகளையும், அதற்கு வழிகாட்டிய அமைப்பு சார்ந்த பெருமக்களையும், தொண்டுணர்வுடன் உதவியவர்களையும், எல்லாவற்றிற்கும், மேலாக, ஐரொப்பிய- நிரந்தர இருப்பை, உறுதி செய்யும் வகையில், டாக்டர் கொவ்மன் ஆற்றிய உதவியை ஈழத்தமிழர்கள் புலப்பெயர்வில் என்றுமே மறக்கமாட்டார்கள்-மறக்கமுடியாது!

(நினைவுத் துளிகள் சொட்டும்…..)

1 comment:

  1. அந்தக் காலத்தில் மொழி புரியாத பெர்லின் சூழல் அனுபவங்களை அறிய ஆவலுடன் இருக்கிறேன்

    - அமலாக்கா

    ReplyDelete