Monday 27 July 2009

கதைச் சரம் - 7 சாப்பாட்டுராமன் கதை


கதைச் சரம் - 7
செவி வழிக் கதை - 5

சாப்பாட்டுராமன் கதை

இது ஒன்றும் இராமன் கதை கிடையாது. நன்றாகச் சாப்பிடுபவர்களை 'சாப்பாட்டுராமன்' என்று சொல்வது வழக்கம் என்ற வகையிலமைந்த கதை இது.


அந்த ஊரில் நன்கு அறிமுகமான சாப்பாட்டுராமன் இருந்தான் இவன் முன் எவ்வளவு உணவை இட்டாலும் பொறுமையாக முழுமையையும் முடித்துவிடுவான். அதனால் இவன் குண்டன் கிடையாது. வெண்ணிலாக் கபடிக்குழுவில் சாப்பிட்டவன் போல் இருப்பான்! கலகலப்பானவன் ஆகையால் இவனைச் சுற்றியொரு கூட்டம் எப்போதும் இருக்கும். இவனது திறமை அறிந்து அவ்வப்போது பக்கத்து ஊரிலிந்தெல்லாம் போட்டிகளுக்கான அழைப்புகள் வரும். இப்படியான போட்டிகளüல் கலந்து பெற்ற வெற்றிகளால் இவனது புகழ் பெருகி சுற்றுவட்டாரத்திலெல்லாம் விசிறிகளை ஏற்படுத்தியிருந்தது. இப்போதெல்லாம் இந்த விசிறிகள் தரும் உற்சாக விசிலடி ஆரவாரத்துடன்தான் போட்டிகள் நடைபெறுவது வழக்கமாகி விட்டது.

இந்த நிகழ்வுகளால் அவ்வூர் இராசாவின் கவனத்துக்கு உரியவனாகி விட்டான்.
அதனால் இந்த இராசாவுக்கு இவனைத் தோற்கடித்துக் காட்ட வேண்டுமென்ற எண்ணம் தோன்றிவிட்டது. இராசாவின் உய்தறிந்த எண்ணத்தை உய்தறிந்த மந்திரிமாரும்(இவர்களுக்கு வேறென்ன வேலை) தூபமிடத் தொடங்கினர். சாப்பாட்டுராமனை அழைத்து போட்டிக்கான நாள் குறிக்கப்பட்டு தண்டோராவும் தரப்பட்டது. இம்முறை சாப்பாட்டுராமன் தோற்கடிக்கப்படுவான் என்று மந்திரிகளிடமிருந்து கசிந்த செய்தியால் போட்டி நாளனன்று கூட்டம் அலை மோதியது.

போட்டிக்கான அரங்கம் நிரம்பி வழியும் உற்சாகம் கண்டு மன்னர் நெகிழ்து போனார். தனது அரசாட்சியில் மக்கள் மகிழ்வாக இருப்பதை எண்ணி அகமகிழ்கிறார். முன்னரே திட்டமிட்டபடி ஒருவனால் உண்ண முடியாத அளவில் போட்டிக்கான பண்டங்கள் தயாராகி விட்டன. விசிறிகளின் ஆரவார அழைப்பொலியுடன் அரங்கத்தில் நுழைகிறார் நம்ம சாப்பாட்டுராமன். சும்மா சொல்லக்கூடாது இராசாவுக்கே கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது. இராசாவிற்கும் சபைக்கும் வணக்கம் தெரிவித்து அமர்கிறான் சாப்பாட்டுராமன்.

போட்டி விதிகள் அறிவிக்கப்பட்டதும் எழுந்த நம்ம சாப்பாட்டுராமன் "மன்னா! ஒரு வேண்டுகோள் இந்தப் போட்டியில் நான் உண்ண வேண்டிய முழு உணவினையும் இங்குள்ள மேசையில் என் கண் முன்னால் வைக்க வேண்டும்!" என்றான்.

மன்னரும் சற்றே யோசித்துவிட்டு "சரி" என்கிறார்.
"நான் கேட்கும் வகையிலேயே உணவைப் பரிமாறவேண்டும்" என்கிறான் நம்ம சாப்பாட்டுராமன்.

சாப்பாட்டுராமன் பயந்துவிட்டான் என்று திருப்தியடைந்த மன்னர் "சரி" என்கிறார்.

விசிறிகளும் கைதட்டி ஆரவாரிக்கின்றன. அழகான மேசை தருவிக்கப்படுகிறது. அதன் மேல் வட்ட வட்டத் தாம்பாளங்களில் விதம் விதமான ஒழுங்காக அழகாக அடுக்கப்பட்ட உணவுகள் கொண்டு வந்து வைக்கப்படுகின்றன. இவ்வளவு உணவை ஒருசேரப் பார்த்ததால் பலருக்கு வாயில் எச்சில் ஊறியது. சபை மெளனிக்கிறது. அனைவரது கண்களும் உணவு மேசையையும் நம்ம சாப்பாட்டுராமனையும் மாறி மாறிப் பார்த்த வண்ணமிருக்கின்றன.

நம்ம சாப்பாட்டுராமன் எழுந்து வந்து சாப்பாடு முழுவதையும் நோடமிடுகிறான். பின் அமைதியாகத் திரும்பி வந்து கை கால்களை ஒரு முறை அசைத்து தன்னைத் தயார் செய்து அமர்கிறான். ஒரு நிமிடம் தியானம் செய்தபின் சரியென்கிறான்.

அவன் சொல்லச் சொல்ல உணவுகளை எடுத்து வைக்கின்றனர். முதல் அரை மணித்தியாலத்தில் அரைவாசி உணவு காலியானதைக் காணவே அதிசயமாக இருந்தது. நம்ம சாப்பாட்டுராமன் கருமமே கண்ணாகியிருந்தான். சும்மா சொல்லக்கூடாது அவன் உண்பதே அழகாகத்தான் இருந்தது. இவனது அசைவுகளை வைத்த கண் விடாது பார்த்த வண்ணமிருந்தது பெரியதொரு இளையோர் கூட்டம்.

அடுத்த அரை மணியில் முக்கால்வாசி உணவும் காலியானதைக் கண்ட மன்னரும் துணுக்குற்றார். சபை ஆரவாரம் செய்து உற்சாகமளித்துக் கொண்டிருந்தது. அடுத்த அரை மணி மேலும் விறுவிறுப்பாகி உச்சக்கட்ட உணர்வு மயமாகியது. ஒவ்வொரு உணவாகக் காலியடைந்த தட்டுகள் பரிதாபகரமாக முழித்துக் கொண்டிருப்பதாகச் சிலருக்குத் தோற்றமளித்தன.

மந்திரிமார் முகங்களில் ஈயாட்டம் கிடையாதது போல் விறைத்திருந்தன. இராசா உறைந்தே போனவரானார். சபை அதிரும் ஆரவாரமும் மேளதாள ஓசைகளும் பெரிய அளவில் கிளம்பி நம்ம சாப்பாட்டுராமன் வெற்றியைக் கட்டியமிட்டன. மந்திரிமாரில் சிலரும் தம்மையும் அறியாது கைதட்டினர். வெற்றி முகத்துடன் எழுந்து நிற்கிறார் நம்ம சாப்பாட்டுராமன். 'எப்படி சாத்தியமானது?' என்ற குழப்பத்துடன் பரிசை வழங்குகிறார் மன்னர்.

ஆரவாரம் சற்றுத்தணிந்ததும், "எப்படியப்பா உன்னால் இது சாத்தியமாகிறது?" என்ற தனது விடை காணாத கேள்வியை நம்ம சாப்பாட்டுராமனிடம் கேட்டே விட்டார் மன்னர்.
"இது சின்ன விடையம் மன்னா! இதைச் சொல்வது சிரமம் செய்து காட்டுவதுதான் சுலபம்" என்றான் அடக்கத்தடன் நம்ம சாப்பாட்டுராமன்.
"சரி சரி!! விளக்கமாக விபரி பார்க்கலாம்.....!" என்றார் ஆர்வமிகுதியுடன் மன்னர்.

"ஒரு அறையில் அடைக்கக் கூடிய அளவு மக்களை அடையுங்கள் பார்க்கலாம்!" என்றான் மன்னனைப் பார்த்து நம்ம சாப்பாட்டுராமன்.

"அப்படியே ஆகட்டும்!" என்கிறார் மன்னர்.

ஒரு அறையில் மக்களை அடைக்கின்றனர் காவலர்கள்.

ஒவ்வொருவராக அறையிலிடவும், இதைப்பார்த்த நம்ம சாப்பாட்டுராமன் "இன்னும் அடைக்கலாம்" என்பதுமாகி மேலும் பலர் உள்ளே தள்ளப்பட்டு அறை நிரம்பி வழிகிறது. இனிமேல் யாருமே புகமுடியாத நிலை ஏற்படுகிறது.

"மன்னா! இனிமேல் யாருமே உள்ளே புகமுடியாது" என்றார் தலைமைக் காவலர்.

மன்னர் நம்ம சாப்பாட்டுராமனை நோக்கினார் நடப்பதை அறியும் ஆவலுடன். ஆனால் அவனோ "இன்னுமொருவர் புகமுடியும்" என்றான் அடக்கத்துடன்.

"எப்படியப்பா? சரி! செய்து காட்டு பார்க்கலாம்" மன்னரே தாங்க முடியாதவராக வினவினார். குண்டூசி விழும் சத்தம் கேட்குமளவில் அமைதியாக இருந்தது சபை.

எழுந்து வந்த நம்ம சாப்பாட்டுராமன் மன்னரை வணங்கி, "அடியேனின் கோரிக்கையை தாங்களால்தான் நிறைவேற்ற முடியும்" என்றான் அடக்கத்துடன்.

"அப்படி நான் என்ன செய்ய வேண்டும்?" என்கிறார் மன்னர்.

"தாங்கள் இந்த அறைக்குள் தயைகூர்ந்து நுழைய வேண்டும். இப்படி நான் கேட்பதால் குறை நினைக்கக் கூடாது மன்னா!!"

மன்னர் மறுக்காது அறையினுள் உள் நுழைகிறார். என்னே ஆச்சரியம்! மன்னரைக் கண்டு அறையிலிடப்பட்ட கூட்டம் இன்னும் நெருங்கி வழிவிடுகிறது.

விடைகிடைத்த திருப்தியுடன் மன்னர் திரும்பி நம்ம சாப்பாட்டுராமனை நோக்கிவந்து கைகுலுக்கி, தனது கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை அணிவிக்கிறார். கூட்டம் சந்தோச மிகுதியால் எழுந்து நின்று ஆர்பரிக்கிறது.



- முகிலன்
பாரீசு யூலை 2009

(இக்கதை என் சிறு வயதில், சிங்களப்பகுதியில் பணியாற்றிய எனது அண்ணாவிடம் கேட்டது)

No comments:

Post a Comment