Saturday, 4 July 2009

சரம் 10 - கோவிந்தசாமியும் - அரோகராவும்
சரம் 10 -

கோவிந்தசாமியும் - அரோகராவும்

1. 'அரோகரா...'

நான் புலமபெயர்ந்து வந்திருந்த 90களின் ஆரம்பக்காலம். துணைவியின வருகையும் அமையவே பிரான்சின் மேற்கே ஐரோப்பிய கடைசி நிலமுடிவு எல்லை நகரான பிறஸ்டில் குடியேறிய காலம். அட்லாண்டிக் சமுத்திரத்தால் வருடப்படும் கரையோர நகரம் அது. பெரிய துறைமுகமுடையதும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கப்பல் விழாக் காணும் நகரம் அது. இவ்விழாவில் உலகெங்கிலுமிருந்து பழையதான கப்பல்கள் காட்சிக்கு வரும். கப்பலால் உலகை வென்றதையும் நிலை செழித்ததையும் நினைவு கூருவதாக எண்ணிக்கொள்வேன். நீண்ட பகலைக் கொண்ட கோடையை திறந்த வெளி வெயிலில் கொண்டாடிக் களிப்புறுவதில் ஐரோப்பியப் பாரம்பரிய விருப்புடையவர்களுக்கு நிகர் யாருமில்லை.

இங்கு அதிகம் தமிழர்கள் கிடையாது. அவர்களும் சற்று தொலைவில்தான் இருப்பார்கள். இது பல்தேசிய இனங்களுடன் இணைந்து வாழும் அரிய வாய்ப்பைக் கொடுத்தது. இங்கெல்லாம் கொண்டாட்டமென்றால் சம்பையின்தான் ஓசை எழுப்பி தொடக்கி வைக்கும். (அங்கு தேங்காய் உடைப்பதுபோல்).

இப்படியான நிகழ்வொன்றில் ஒருநாள்.....
நிரப்பப்பட்ட சம்பயின் கிளாசுகளுடன் ஒன்று கூடிய நண்பர்கள், "சிங..; சிங்.. " என்று மட்டும் பிரஞ்சில் (ஆங்கிலத்தில் "சியர்ஸ்..." என்பது போல்) சொல்லாமல் தங்கள் தங்கள் மொழியால் சொல்வதாக நிகழ்வு அமைந்துவிட்டது. எல்லோரும் தத்தம் மொழிகளால்; சொல்லி எனது முறைக்கானது... அதாவது தமிழில் சொல்லியாக வேண்டும்.

என்னசெய்யலாம் என நிகழ்வு தொடங்கியபோதிருந்தே பதட்டத்துடன் யோசித்தவாறிருந்த எனக்கு சட்டெனக் கிடைத்த சொல்..... "அரோகரா" என்றேன். எல்லோரும் அன்றிலிருந்து சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

இன்று என்னைப் போன்றவர்கள்; இவ்வேளையில் பயன்படுத்தும் சொல் இதுதான்.

'ஆகா என்ன பொருத்தமான இடத்தித்தில் இச்சொல் இணைந்திருக்கிறது. இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே!......" சுமார் 15 வருடங்களின் நினைவு மீள்கையில் முகத்தில் லேசான முறுவல்.

- முகிலன்
(பாரீஸ் யூலை 2009)


2. 'கோவிந்தசாமி'

இதுவொன்றும் சாமி கிடையாது. எண்பதுகளில் தமிழ்நாட்டில் இருந்தபோது அறிமுகமான மறைச்சொல் இது. ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. எமது நெருங்கிய ஓவிய நண்பர் அவர். அவருக்கு நெருங்கிய நண்பர்கள் கிடைத்தால் கொஞ்சம் மது அருந்துவதற்கு விருப்பம். ஆனால் வீட்டில் கடுமையான கெடுபிடி.

ஒருநாள் இவர் கொஞ்சம் அதிகமாகச் சாப்பிட்ட துணிச்சலால் ஆசுவாசமாக வீடு திரும்பிவிட்டிருந்தார். வழமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதும் செய்யவில்லை. கணவன்மாரின் நடத்தைகளை உற்று உணரும் வல்லமை பொருந்திய பெண்களிடமிருந்து இலகுவில் தப்பிவிட முடியுமா? ஐயா வசமாக மாட்டிவிட்டார். அந்தக் கிறுகிறுப்பிலும் இலக்கியச்சுவை ததும்ப அவரது மூளை தடாலடியாச் செயற்பட்டிருக்க வேண்டும்.
"என்ன இது பழக்கமில்லாத புது நடத்தைகளாக இருக்கு" கோவத்துடன் இல்லத்துணைவி.
"பெரிசா சத்தம் போடாத புள்ள..... குழந்தைகள் முழிச்சுக்கப் போது..." பவ்வியமாக இவ்வகை வேளையில் பணிதல் பெரு வெற்றியைத்தரும். ஆனால் அம்மா விடுவிதாகத் தெரியவில்லை. மனைவியின் முறைப்பைக் கண்டும் காணாதவராக,
"இன்று கோவிந்தசாமியைப் பார்த்துட்டு வாறன் என்று சொன்னல்லவா?" என்றவாறு கொஞ்சம் குரலை உயர்த்தி கடைக்கண்ணால் நோட்டமிட்டார்.
"கோவிந்தசாமியா? இதுஎன்ன புதுச்சாமியா இருக்கு" மனைவியின் குரலில் பழைய இறுமில்லை.
"எத்தனை தடவை சொல்லுறது.... அதுதான் கலெட்டர் ஆபிசில...."
"கலெக்கடர் ஆபிசிலயா......... அப்படி எனக்குத் தெரியாதே..." குரலிலே தொய்வு பளீரிட்டிருக்க வேண்டும். கலைஞர் துடிப்பாகி விட்டார்.
"உனக்கு எத்தனைவாட்டிதான் சொலலறது. கோவிந்தசாமி கலெக்ட்டர் ஆபிசில எந்தப் பெரிய அதிகாரி. அவர் கூப்பிட்டு மேசையில உட்கார்ந்து பரிமாறினா மறுக்கமுடியுமா என்ன?" அம்மாவின் வாய் அடங்கிப்போனதால் ஐயா மேலும்,
"ஆபிசு வேலையின்னா அப்பிடி இப்பிடி இருக்கத்தானே செய்யும். நானென்ன நாளாந்தமா செய்யிறன் அந்தப்பெரிய ஆபிசரே அழைக்கும்போது....."

ஆகா 'கோவிந்தசாமி" சூத்திரம் நன்றாக வேலை செய்திருந்தது.. ஐயாவும் நிம்மதியாக வீடு திரும்புவது பழகிவிட்டிருந்தது. இப்படியாக நடைமுறையான ஒருநாள் முன்னிரவில் ஆட்டோவிலிந்து இறங்கி ஆசுவாசமாக நுழைகிறார் கலைஞர், "அம்மா... அப்பா கோவிந்தசாமியைப் பார்த்துவிட்டு வருகிறார்" உரத்த குரலில் சிறிய மகள்.
வந்திருந்த உசார்நிலையிலும் அதிர்ந்து போனார் கலைஞர்.

தனது கதையை மனம்விட்டுக்கூறி கலகலக்க வைத்த அந்த இரவு விருந்தின் நினைவுடன் கலைஞரின் தயைவால் கிடைத்த "கோவிந்தசாமியை" நாம் இப்போதும் பயன்படுத்தும் சொல்லாக்கியுள்ளோம்.

மூன்றாண்டு ஆண்டுகளுக்கு முன் பாரீஸ் வந்திருந்த கலைஞர் எம்முடன் "கோவிந்தசாமி"யும் சந்தித்து தன் சொல்லாடலின் உலகப்பயணத்தைக் கண்டு மகிழ்வுற்றார்.

- முகிலன்
(பாரீஸ் யூலை 2009)

பின் குறிப்பு:
எண்பதுகளின் ஆரம்பத்தில் சென்னையில் எம்மோடு நண்பனாய் வாழ்ந்த நேரு, அழைத்த சொல் "கையேந்தி பவன்" கையில் போதிய காசில்லாத வேளையில் பெயரிடாத தெருக்கடைகளுக்குச் செல்ல புதியவர்கள் முன் அழகாகச் சொன்ன பெயர்தான் 'கையேந்தி பவன்'. இன்று பரவலான பாவனைக்கு வந்துவிட்டது. இந்த நேரு இப்போது எங்கிருக்கிறாரோ... சிதறுண்டு சின்னாபின்னமாகிய ஈழத்தமிழரின் சிதறல்கள் கொஞ்சநஞ்சமல்ல...........

2 comments:

 1. வணக்கம் முகிலன்

  பதிவும், தளமும் சிறப்பாக இருக்கிறது. தமிழ் மணத்திலும் இணைந்து விடுங்களேன்.

  ReplyDelete
 2. அன்புப் பதிவர் கானா பிரபாவிற்கு தங்கள் வரவிற்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.
  தமிழ் மணத்தில் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளது.
  -முகிலன்

  ReplyDelete