Friday 24 July 2009

கதைச் சரம் 6 நினைத்தாலே சிரிப்பு வரும்!!


கதைச் சரம் 6
செவி வழிக்கதை - 4


நினைத்தாலே சிரிப்பு வரும்!!
(உனக்குப் பின்னால் உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு.......! )

முன்னொரு காலத்தில் விநோத எண்ணமுடைய ஒரு ராசா இருந்தார். இவருக்கு புதுசு புதுசா சாப்பிட வேண்டுமென்று விருப்பம் (அதுதான் நம்ம 23-ம் புலிகேசி மாதிரி, இப்பவுள்ள மஞ்சள் துண்டு ராசா மாதிரி, சிவப்புத் துண்டு ராசா மாதிரி நிறையவே இருந்திருக்காங்க). இவரின் விருப்த்தை நிறைவேற்று முகமாக அமைச்சரவையும் திட்டங்களை அறிவித்து ராசாவை உற்சாகப்படுத்தியது. இது ஒரு கோடை காலம், அமைச்சரவை காலத்துக்கு ஏற்றவாறு புதுப் புதுப் பழங்களை தருபவர்களுக்கு ஆயிரம் பொற்காசு கிடைக்குமென அறிவித்திருந்தது.

பரிசைப் பெறுவதற்காகப் பெருமளவில் வித விதமான பழ வகையுடன் போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். ஐயோ பாவம்! அதில் பெரும்பான்மையான பழ வகைகள் மன்னரால் அறியப்பட்டவைகளாக இருந்தன. இதனால் கோபப்பட்ட மன்னரது மன நிலையை அறிந்த அமைச்சரவை திடீரென புது அறிவிப்பை அறிவித்து. அது "மன்னருக்கு தெரிந்த பழங்களைக் கொண்டு வந்தால், அப்பழங்கள் முழுமையாக கொண்டு வந்தவர் வாய்களுக்குள் அப்படியே திணிப்படும்." என்பதாக இருந்தது. இதனை நிறைவேற்று முகமாக காவலர்களும் நியமிக்கப்பட்டு இருந்தார்கள். இந்தச் சேதி காட்டுத் தீ எனப் பரவ, வேடிக்கையைக் காண்பதற்காக பொதுமக்களும் அலையலையாகத் திரள அரசவை அல்லோல கல்லோப்பட்டது.

இப்படியான ஒரு நாள், ஒரு வாலிபன் அன்னாசிப் பழத்துடன் அரசவைக்கு வந்தான். அன்னாசி பற்றி மன்னருக்கு ஏற்கனவே தெரிந்திருந்து. மன்னரும் "இது அன்னாசிப் பழம்" என்கிறார். உடனே காவலர்கள் பழம் கொண்டு வந்த இளைஞனை தர தரவென்று இழுத்து வந்து கட்டிவிட்டு அவனது வாயில் அந்த அன்னாசிப் பழத்தை திணிக்கத் தொடங்கினர்.

அன்னாசிப்பழத்தை செலுத்தும் போது அவனது கடவாய் கிழிந்து இரத்தம் வழிந்தது. இக்காட்சியைப் பார்த்து சபை துணுக்குற்றது, ஆனால் அவனோ சிரிக்கிறான்..... இந்த நிலையில் அந்த வாலிபன் சிரிப்பதைக் கண்ட பிரதம அமைச்சர் திகைத்துப் போனார். உடனே காவலர்களை நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டார். அந்த இளைஞனைப் பார்த்து "இப்படியான நிலையிலும் ஏனப்பா சிரிக்கிறாய்?" என வினவினார்.

அவனும் " எனக்குப் பின்னால என்னுடைய மாமா பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறார். அன்னாசியுடன் வந்த என் கதி இப்படியிருக்க... அவரை நினைக்கவே...." என்றவாறு மீண்டும் வாய் விட்டுச் சிரிக்கிறான். இம்முறை அவனோடு அவையும் சேர்ந்து கொள்கிறது.

- முகிலன்
யூலை 2009 - பிரான்சு

00000000000000000000000000000
செவி வழிக் கதைகள்
நாம் சின்ன வயது முதல் பல்வேறு கதைசொல்லிகளால் கவரப்பட்டவர்கள். இக் கதைசொல்லிகளாக எம்மது மூத்த தலைமுறையினர், பெற்றோர், ஆசிரியர்கள், சுற்றத்தார், நண்பர்கள் எனப் பலவாறாகவும் காணப்பட்டனர். இவற்றில் பல கதைகள் இராமாயண, மகாபாரதக் கிளைக் கதைகளாகவும் இருந்துள்ளன. சென்ற நூற்றாண்டில் அறிமுகமாகிப் பரவலான எழுத்துலகின் பரந்துபட்ட வாசிப்புக் கலாச்சாரம் கதைசொல்லலைப் பதிவுகளாக்கித்தரத்தொடங்கியது. இது தற்போதுள்ள தொழில் நுட்பஙகளுடன் பாட்டி கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், இன்றைய கார்டூன் கதைகள் வரையில் கதைசொல்லிகளின் வெளிப்பாடும் மனிதனுடன் சேர்ந்து பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது.
ஆனாலும் சில கதைசொல்லிகளின் கதைகள் நாடோடிக் கதைகளாகவும் வரையறுக்க முடியாது, கிராமக் கதைகளென்றும் கூறமுடியாது ஆனால் நகைச்சுவையுடன் குறுங்கதைகளாக கவனங்கொள்ள வைக்கும். ஆனால் இதைப் படைத்தவர் யாரென்பதை அறியவே முடியாது. செவி வழியாக அறிந்துள்ள இவ்வகைக் கதைகளைப் பதிய தோரணம் முனைகிறது.

00000000000000000000

5 comments:

  1. தங்கள் வலைப்பக்கம் பார்த்து மகிழ்ந்தேன்.. பக்க வடிவமைப்பு, இடுகைகள் யாவும் அருமை.....

    ReplyDelete
  2. உங்க பதிவுகளும் தளமும் நன்றாக உள்ளது!

    ReplyDelete
  3. பின்னூட்டம் இடும் போது Word verification என்று வருகிறது இதனை எடுத்துவிட்டால் பின்னூட்டம் இடுவது சுலபமாக இருக்கும்!

    ReplyDelete
  4. மன்னர்கள் மக்கள் மனதை அறிந்து வாழ்ந்த காலம் போய் மக்கள் மன்னர் விரும்பியதை அறிந்து வாழும் காலமையா இக்காலம். அறிந்து தெரிந்து வாழ பழகுவோம்.

    அமலாக்கா

    ReplyDelete
  5. நன்றி! முனைவர் இரா குணசீலன் மற்றும் ஆபிரகாம் தங்களது கருத்துகள் கவனத்திலெடுக்கப்பட்டன.
    வாழ்க! வளமுடன்!!

    -முகிலன்

    ReplyDelete