Tuesday, 28 July 2009

சுவட்டுச் சரம் 1 - நினைவுத்துளிகள் (5)
சுவட்டுச் சரம் 1
நினைவுத்துளிகள் (5)

- குணன்


பேர்லின் முதல்,“தமிழ் மாலைப் பொழுதும்“ புகலிடத்தமிழர் அறிமுக விழாவும்! புகலிடம் தேடி வந்த 250 பேர் வரை, தகுதி வாய்ந்த அனுமதியின்றி உள் நுழைந்தார்கள், என்ற, காரணத்தினால், பொலிசாரினால், கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டார்கள், செய்தி, பத்திரிகையில், புகைப்படங்களுடன் வெளியிடப்பட்துடன், “பேர்லின் தமிழர் தகவல் ஒன்றியம்“ சார்பில், டாக்டா கொவ்மன் அம்மையார், மாநில, மத்திய அதிகாரிகள், அமைச்சர்கள், முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணி பா.உ(சாவகச்சேரி)திருவி.என்.நவரத்தினம்,(4.09.1981ல்)பேர்லினில் இடம் பெற்ற, தமிழகதிகள் வருகை பற்றி எடுத்துக் கூறியதுடன், ஒரே விமானத்தில் திருப்பி நாடு கடத்தப்பட்ட 139 தமிழர்களுக்கு நடந்தவற்றை விளக்கிடுமுகமாகவும், நாட்டில், தக்க பாதுகாப்பு ஏற்படாமல், அங்கு, குறிப்பாக, 1978ம் ஆண்டின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகலாம், என்றும், “இலங்கையில் தமிழர் துன்புறுத்தலும்-இங்கு அவர்கள் வருகையும்“ என்ற தலைப்பின் கீழ் நடந்த கருத்தரங்கில் விளக்கினார்கள். இதற்கு போலின் மாநில செனட்டர் கென்றிக் லூமர், சமூகநலத்துறை செனட்டர் பிங், மத்திய அரசின் அரசாங்க அமைச்சர், டாக்டர் காம் புரக்கர்(எவ்.டி.பி), பொருளாதாரத்துறை அமைச்சர் கிராவ் லம்ஸ்டோவ் ஆகியோரும் கலந்து கொண்டதன் விளைவாக, புகலிடம் கோரிய தமிழர் திருப்பியனுப்புவது நிறுத்தப்பட்டது! இங்கு, வந்திருந்த பா.உ திரு வி.என்.நவரத்தினம், பேர்லின் நீதி மன்றில் இடம் பெற்ற, புகலிடக் கோரிக்கை தொடர்பாக, சாட்சியம் வழங்கியதும் குறிப்பிடத்தக்கதாகும். இக்கலந்துரையாடலை, "ஆபத்துக்குள்ளாவோருக்கு உதவும் அமைப்பு" சார்பில் டாக்டர் கொவ்மன், ஆ.எல் பேர்லின், தமிழர் விடுதலைக்கூட்டணி, கூட்டாக ஒழுங்கு செய்யப்பட்டது.தமிழ் மாலைப்பொழுது! - 17-04-1982

தமிழர் பற்றிய செய்திகள் ஜேர்மனியர்களிடம் சென்றடையும் பொருட்டு, அவர் தம் அரசியல், கலை, பண்பாடு, உணவு போன்றவற்றின் அறிமுகம், முதன் முதலாக அறிமுகஞ்செய்யும் முயற்சியில், பலரும் உதவினார்கள்.தமிழரின் வரலாற்று நாடகம்(சங்கிலியன் நாடகக் காட்சி), தமிழரின் பண்பாட்டுக் கலைகளாகிய, பரதம், நடனம், கோலாட்டம், பாட்டு எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன. இணைத் தலைவர்களாக நலன்புரிக்கழகப்பொறுப்பில், அதன் தலைவரும் தமிழர் ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் தலைவர், டாக்டர் கொவ்மன் அவர்களும், அறிமுக உரை, தலைமையுரைகளில், புகலிடத் தமிழ் மக்கள் பற்றிய செய்திகள் பற்றி கூறப்பட்டன.

தமிழரின் பாரம்பரிய பட்சணங்கள், உணவு வகைகள், பானங்கள் வழங்கப்பட்டதுடன், விவரணச் செய்தி(வீடியோ) படமும் காட்டப்பட்டது! இவ்விழா-பேர்லின் முதல் தமிழ் மாலைப்பொழுது மூலம், புகலிடத் தமிழர்களுக்கு, ஓர் தற்காலிக (அல்ல!) நிரந்தர விடியலுக்கு வழிகூறி நின்றது பேர்லின். இலவச பல்கலைக்கழக, இவாங்கிலிஸ மாணவர் ஒன்றியத்தினர் தந்துதவிய இலவச மண்டபம் நிறைந்திருந்த ஜேர்மனிய ஆர்வலர்கள் கூட்டம், இது வரை தமிழரின் வேறு எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் வருகை தந்ததில்லை!


"ஏ" பாஸ் பெற்று விட்டால்……!


எம்மைப் போல பேர்லின் நகரில், ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர், பஞ்சாபிகள் லெபனானியர்கள், ஆபிரிக்கர்கள்,கிழக்கு ஐரொபியர்கள்,என வந்து குவிந்தவண்ணம் இருந்தார்கள். வெளிநாட்டவருக்கானவர்களுக்கான தனிப்பகுதியில், அகதி விண்ணப்பங்கள் எழுதி பயணச்சான்று, கடவைச் சான்றுகளுடன், வரிசையில் மணித்தி யாலக்கணக்கில் என்றால் தாங்கி கொள்ளலாம். ஆனால் முதல் நாள் மாலையில், வந்து, இடம்பிடித்து, இரவிரவாக காத்துக் கிடந்தாலும், வாசற் கதவு திறக்கும் நேரத்தில்,வரிசையைக் குலைத்துக்கொண்டும் முண்டியடித்துக் கொண்டும் வருகின்றவர்கள், காட்டுமிராண்டிகள் போன்று நடந்துகொள்வதை, எவருமே தாங்கிக் கொள்ளமாட்டார்கள்!


இவ்வாறு,நாட்கணக்கில், வாரக்கணக்கில், அலைந்து திரிந்த பின்னர்தான், உள்ளே சென்று, நிழற் படம் இணைத்த தற்காலிக, தங்குமிட அனுமதிப் பத்திரமும், இலவச பயணச் சீட்டு, வைத்திய பரிசோதனை செய்யும் அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டு, தற்காலிக தங்குமிட வசதி, உணவு ஆகியவற்றுக்குரிய அனுமதி உத்தரவுகளும், மத்திய அகதிகள் நிலையத்தால் வழங்கப்பட்டு, மீண்டும் அதே பத்திரங்களைப் புதிதாகப் பெறுவதற்கு திகதி வழங்கப்படும். இத்தனைக்கும் கையில், பெற்றுக்கொண்ட, தற்கால வதிவிட அனுமதிப் பத்திரத்தில், பெரிய எழுத்தில், பொறித்த “A“ (for asyl applicant) என்றிருப்பதையே, "A Passport” என்று கூறினார்கள்! இவ்வாறு, "ஏ” பாஸ்போர்ட்டுடனே, பேர்லின் வீதி தோறும் அச்சமின்றி எங்குமே சென்று வரலாம். ஆனால், எல்லை தாண்டமுடியாது!

இவ்வாறு, இரண்டு மாதங்கள் முதல் ஆறுமாதங்கள் வரை தற்காலிக முகாங்களாகிய விடுதிகளில் தங்கிய பின்னர் நிரந்தர வதிவிடம், ஜேர்மன், ஏனைய மாநிலங்களின் இடவசதிகளைப் பொறுத்து (station) நிரந்தர வதிவிடம் வழங்கப்பட்டு, அரச செலவில் அனுப்பிவிடுவார்கள்! மிகக் குறைவானவர்களுக்குத்தான், பேர்லின் மாநகரத்தில் (station) நிரந்தர வதிவிட அனுமதி கிடைப்பதென்பது பலரின் கணிப்பாகும் அவ்வாறு, தவறிய பலர் கவலையடைவதும் உண்டு! எமது நாட்டைப் போல, இங்கு உணவுச் சாலைகளில்,குறைந்த செலவில் உணவைப் பெற முடியாது! அதே நேரம், தற்காலிக விடுதிகளில் தினமும் பாண், பட்டர், ஜாம், அவித்த முட்டை, மீன் ரின், பிரதான உணவாக வழங்கப்பட்டது! அன்று, தேனீர் தயாரிப்புக்கு அனுமதிக்கப்பட்டிருந்த மின்சார சட்டியில், உருளைக்கிழங்கு, மீன், முட்டை, பயணப்பொதியில் இருந்த, யாழ்ப்பாண மிளகாய்த்தூள் இட்டு, மாலையில், அறையின் மூலைக்குள், சமைத்த குழம்பின்வாசனை, நிர்வாகத்தின் அறைக்குள் இருந்த மனேஜரின் மூக்கினுள் சென்றது. அவர் என்னவோ ஏதோவென அறைக்குள் வந்ததும், செய்வதறியாது திகைத்திருந்த வேளையில் நண்பரின் சமயோசிதத்தால், பழைய பொருள் விற்கும் வாரச்சந்தையில் (லுண்டா மார்க்கெட்)* ஆளுக்கு ஒரு டொச் மார்க் வீதம் சேர்த்து விலைக்கு வாங்கிய “கீட்டர்” போர்வையால் மூடிக்கிடந்து,”குளு குளு”த்தபடியே மறைக்கப்பட்டது. இதைக் கண்ட எல்லோருமே, வயிறு குலுங்கிட சிரித்தபடியே குழம்புடன், பாண் உண்டதை இன்றும் எண்ண வைக்கும் ஓர் நினைவுத் துளிதான்!

00000000000
குறிப்பு:
* லுண்டா மார்க்கெட் - (Trödel Markt or flohmarkt) :
செர்மானிய மக்களால் வாங்கப்பட்ட பின், நல்ல நிலையிலுள்ள தமது பாவனைக்குத் தேவையற்றதெனக் கருதும் பொருட்களை அவர்களே விற்கும் ஒரு சந்தை. இது மக்களால் நடாத்தப்படும் சிறப்புச் சந்தை. கையில் போதிய காசில்லாத அகதிகளாக வந்திருந்த ஈழத்தமிழருக்கு இங்கு தம்மாலும் வாங்க முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்த சந்தை இது. வாராந்தம் நடக்கும இச் சந்தை பற்றிய செய்தி நம்மவர் மத்தியில் வேகமாகப் பரவி பெரும்பான்மையானவர்கள் காத்திருந்து சந்திக்கும் இடமாகிவிட்டது. இதில் நம்மவர்களால் நடைமுறை செர்மன் மொழி பேசும் அரிய வாய்ப்பைத் தந்தது எனலாம். அப்போதெல்லாம் நம்மால் அணியப்பட்ட உடைகள் மற்றும் பாவனைப் பொருட்கள் இங்குதான் பெரும்பாலும் நுகரப்பட்டன என்பதை அறுதிட்டுச் சொல்லலாம்.


(நினைவு துளிகள் சொட்டும்....)

No comments:

Post a Comment