Wednesday, 22 July 2009

சரம் - 13 மணவாழ்வில் விட்டுக் கொடுத்தல்


சரம் - 13
மணவாழ்வில் விட்டுக் கொடுத்தல்


புலம் பெயர்ந்த முதல் தலைமுறையினருக்கு அடுத்த தலைமுறை எப்படியாகவெல்லாம் வாழ்கிறது என்பதை அவதானிப்பதில் கொஞ்சம் அதிகமான ஈடுபாடுள்ளதென்றே சொல்ல வேண்டும். 
சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர்தான் இந்த இளைஞனின் கல்யாணம் நடந்திருந்தது. பார்த்திருக்கும் போதே காலம் உருண்டோடியது தெரியாது போய்விட்டது. சும்மா சொல்லக் கூடாது ஐரோப்பாவில் நேரம் விரைந்துதான் ஓடுகிறது போலும்! இங்கு வளர்ந்திருந்தாலும் காதல் வலையில் சிக்காது பெரியவர்களால் பேசி முடித்த கல்யாணம் இவனுடையது. இன்று மூன்று பிள்ளைகளோடான இளம் குடும்பமாகி விட்டது.

இன்று நீண்ட நேரம் இருக்கும் சூரிய கிரகணம் என்ற செய்தி வரவே ஐரோப்பியரெல்லாம் கறுப்புக் கண்ணாடிகளுடன் ஆவலாக இருக்க, ‘வரப்போகிறது சிறப்புச் சுனாமி’ என்ற வதந்தியுடன் சாமி கும்பிட்டு காரியம் பார்க்கும் மூத்த தலைமுறையல்லவா? நம்மவருடையது.
எது நடந்தாலும் ஒருக்கா சாமியோடு பகிர்ந்து போட்டுச் செய்தா ஒரு யானை பலம் கிடைத்த மாதிரி- என்ற நினைவுடன் பயத்தையெல்லாம் அந்தக் கடவுளுடைய தலையில் சுமத்திவிட்டு வெளியில் வரும்போது கிடைக்கும் சுகத்தை அனுபவித்தால்தான் தெரியும். புலம்பெயர்ந்த வாழ்விலும் இப்படியான தமது மனவுணர்வுகளை ஒருவாறு அடுத்த தலைமுறைக்கும் கடத்தி அந்தப் பழக்க வழக்கத்தைக் கொடுத்திருந்து நிம்மதியான முதல் தலைமுறையின் செயலை வியக்காது இருக்கமுடியாது.

தனது திருமண நாளை கோவிலில் அரிசனையுடன் நினைவுகூர்ந்து விட்டு வந்திருந்தார் இந்த அடுத்த தலைமுறை இளம் குடும்பத்தன். நான் அவரது குடும்ப நண்பன்.

"அண்ணே!.............." என்று பெளவியமாக என்னைப் பார்த்து இழுத்தார்.


"என்ன தம்பி கூச்சப்படாது கேளுங்கோ......!" ஏதோ சூரிய கிரகணத்தைப் பற்றியதாக இருக்குமாக்குமென அலட்சியத்துடன்

"அண்ணே! குடும்பத்தில நிம்மதி இருக்க யார் அதிகவளவில் விட்டுக் கொடுக்கிறார்கள்? ஆணா? பெண்ணா? உள்ளதைச் சொல்ல வேண்டும்!" என்னை உற்றுப் பார்த்தவாறு

எதிபாராத கேள்வியால் துணுக்குற்ற எனது கண்கள் தடுமாறியவாறு சில கணங்கள் நிலம் நோக்கின....

புருவத்தின் மேல் தோலில் பலவான கீறல்கள் தோன்றியிருக்க வேண்டும்
கல்யாணம் பேசிய காலத்தில் அவனது கைத்தொலைபேசி டயல் ரோனில
 "நான் ஆம்பிளைச் சிங்கம்டா........." என்றதை நானும் கேட்டவன்.

"என்ன தம்பி திடீரென்று......" ஒருவாறு சமாளித்து வார்தைகள் விழுந்தன. எனது கண்கள் நேராக அவனது முகத்தை ஆழமிட்டன.

"இல்லை அண்ணே என்ர கண்டுபிடிப்பை ஒப்பிடத்தான்.........." சஞ்சலமில்லாது

"இது என்ன கேள்வி தம்பி! ஆம்பிளையாலதான் அதிகமாக விட்டுக் கொடுக்க முடியும். அப்பத்தான் நிம்மதியாக இருக்கலாம் தம்பி."  அனுபவ முதிர்ச்சி ஓசைநயமாகி இருந்திருக்க வேண்டும்.

"ஓம் அண்ணே! சரியாகச் சொன்னீர்கள்" என்றான் திருப்தியுடன். தொடர்ந்து "மாயாண்டி குடும்பத்தார் பார்த்தனீங்களா அண்ணே! கட்டாயம் பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்!" மகிழ்வுடன்.

"பார்க்கலாம்" என்கிறேன் அமைதியாக
- அமலன்
செர்மனி 22. 07. 2009

No comments:

Post a Comment