Friday, 10 July 2009

சரம் - 11 ஈழத்தமிழரும் யூதர்களும்


சரம் - 11 ஈழத்தமிழரும் யூதர்களும்
அன்று! - இன்று!! - நாளை?

1. இன்று

வீடு வாங்குவதற்காக விற்பனை முகவரிடம் சென்றிருந்தோம். பிரான்சில் பெரும்பாலான வெற்றிகரமான முகவர்கள் யூத இனத்தவர்களாலேயே நடாத்தப்படுகின்றன. 'கருமமே கண்ணாயினார்' என்ற வாக்கியத்தை யூத இனத்துடன் அப்படியே பொருத்திவிடலாம். இந்த முகவர்களின் மொழியாடல்களால் ஒரு வித ஈர்ப்புச் சக்தி வெளியேறி கெளவிப் பிடித்துவிடும். மொழி வாயால் துள்ளி விழும் போது அதற்கு இசைவாக சுறுசுறுப்பாக கை பரபரப்பாக பதிவுகளை இடும். கவனம் பிசகவே பிசகாது. சும்மா சொல்லக் கூடாது இதுவும் ஒருவிதக் கலைதான். வாயை மட்டும் வைத்து எப்படியாகவெல்லாம் வாழமுடியும் என்பதற்கு இந்த முகவர்களின் வரவேற்பறைகளே சாட்சி.

பல்கலைக்கழக புகுமுறைப் பரீட்சை முடிவுகள் வெளிவந்திருந்த வேளையாதலால் உரையாடல்களில் படிப்பு பற்றியும் வந்தது.
"எங்களுக்கு(யூதர்) அடுத்தபடியாக சுயமுன்னேற்றத்தில் குறியாக இருப்பவர்கள் நீங்கள்தான்(ஈழத் தமிழர்)" சொன்னது யூதனாகையால் திகைத்துப் போனேன்.
'என்னைக் கவருவதற்காக இப்படியாகச் சொல்கிறாரோ?' கேள்வியுடன் உற்றுப் பார்த்தவாறு,
"எப்படிச் சொல்கிறீர்கள்?"
"ஈழத்தமிழர் பற்றி நான் அறிந்தது மிகக் குறுகிய காலம்தான். செய்யும் வேலையிலும் சுயமுயற்சியிலும் நல்ல ஈடுபாடுடையவர்கள். குறைந்த வருமானங்கள் இருந்தபோதும் முறையாக வங்கிக் கையாளல்களைச் செய்து கடனை மீட்டு இருக்கிறார்கள். இன்று உங்களில் பலர் சொந்த வீடுடையவர்களாகி விட்டனர். வங்கி மட்டத்திலும் உங்களுக்குக் கடன் கொடுப்பதில் தயக்கம் அதிகமாக இருப்பதில்லை. இந்த முறை கல்லூரிப் பரீட்சையில் இரண்டு மாணவர்கள் பொறியிலாளராகவும் ஒருவர் மருத்துவத்துக்கும் இந்தக் கிராமத்தில் தெரிவாகியுள்ளார்கள்....."
என்னால் நம்பவே முடியவில்லை. முகவராக இருந்தபடியே சமூகம் தொடர்பான அறிதல்களை விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள். பணமிடும் தொழில் புரிபவர்களின் சாதுரியமே தனியானவைதான். வட்டியுடன் திரும்பி வரும் உத்தரவாதமில்லாத எதிலும் ஒருபோதும் ஈடுபடமாட்டார்கள். நேரத்தையும் கூட...
துணைவியார் வந்த விடையத்தின் விபரங்களைப் பதிவிடத் தொடங்க, மனம் பலவித எண்ணச் சுழலுக்குள் நுழைகிறது.

புலம் பெயர்ந்த அடுத்த தலைமுறை தலையெடுக்கத் தொடங்கிவிட்டது. முதற் தலைமுறையின் கடின உழைப்பும் சிக்கனமும், தனது வம்சமாகுதல் சிறப்பான வாழ்வைப் பெறுதல் அவசியமென்ற கரிசனையால் கவனத்துடன் வளர்ந்த அடுத்த தலைமுறையாயிற்றே. இந்த முறை பல்கலைக் கழக புகுமுகப் பரீட்சையில் நல்ல புள்ளிகளுடன் கணிசமான ஈழத்தமிழ் மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள்.

இங்கெல்லாம் யார் அதீத கவனமெடுத்து பணியாற்றுகிறார்களோ அவர்களுக்குத் தனியான மதிப்பீடு இலகுவாகக் கிடைத்துவிடும். இதில் ஈழத்தமிழர்கள் தடம் பதித்துள்ளனர் என்றே சொல்ல வேண்டும். தற்போதைய இளையோரின் வாகனங்கள், வாங்கப்படும் வீடுகள் மற்றும் நடைமுறைகளைக் காணும் போது முதற் தலைமுறையினருக்கு கனவுலக சஞ்சாரம் போலத்தான் இருக்கும். இந்தப் புலம்பெயர்வாழ்வின் இருப்பில் இயல்பாகவே இயைந்து போயுள்ள இந்தத் தலைமுறையினருக்கு இது பெரிய சவாலாக இருக்கவில்லை. ஐரோப்பாவில், குடும்ப மாத வருமானம் சுமார் 6000 ஈரோக்களைப் பெறும் பொருளாதாரத் தளத்தில் மேல் நடுத்தர நிலையை வேகமாக அடைந்த சமூகமாக நம் கண்முன்னால் அடுத்த தலைமுறையினர் காணப்படுகின்றனர்.

"எப்படி உங்களுக்கும் 'நாதொன்(Nathan), வினி(Vignes), யோகம்(Yoham)...... எனப் பல எங்களவர் பெயர்கள் இருக்கின்றன?"
முகவரின் கேள்விக்குப் பதில் தெரியாது என்னைப் பார்க்கிறார் துணைவி.

ஏற்கனவே வாயடைத்துப் போயிருந்த நான் மெல்லியதாக அசட்டுச்சிரிப்பை வெளியிடுகிறேன்.

சந்திரன்
யூலை 2009 - பாரீஸ்

000000000000

2. அன்று

தொண்ணூறுகளின் தொடக்கம், நான் ஐரோப்பா வந்த புதிது, அதுவும் பென்னாம்பெரிய பட்டினமாம் பாரீசில் வந்திருப்பதை நம்பவே முடியவில்லை. எல்லாமே மலைப்பாக இருந்தது. புலம் பெயரும்போது நான் நினைத்தே இருக்கவில்லை இப்படியான பட்டினத்தில் குடியேறுவதாக நான் கனவுகூட கண்டதில்லை.... நிலத்தடி இரயில் (மெட்ரோக்களில்) பயணங்களும் பிரமாண்டமான கட்டிடக் காட்டின் தரிசனங்களும் என்னைப் புள்ளியாக்கின. ஆயினும் பொருடக்களுக்கும் பாலிடும்(ஆண்பால், பெண்பால், பலர் பால்) புதிய மொழியைக் கற்கும் முயற்சியிலிருந்தேன்.

எனக்குக் கிடைத்த முதல் வேலையும் ஆச்சரியமாகத்தான் அமைந்தது. நண்பர் வீட்டுக்கு அழைத்திருந்தார். அவர் ஒரு பிரஞ்சுச் சீமாட்டியிடம் உதவியாளராக இருப்பவர். பாரீசின் மேற்கே செல்வச் செழிப்பான பகுதியில் மூன்று மாடிகளைக் கொண்ட அவரது பங்களா இருந்தது. அகண்ட வரவேற்பறையும் சமையலறையும் முதற் தளத்திலிருந்தது.

வரவேற்பறையிலிருந்த பெரிய மேசையைச் சுற்றியிருந்த ஆறு இருக்கைகளில் ஒன்றில் நான் அமர, எதிரில் எனது நண்பரும் அந்தச் சீமாட்டியும் இருக்க தேனீர் அருந்தியவாறு அளவளாவினோம். அப்போது ஒரு பூனை எனது கால்களைத் தழுவியவாறு அந்த அம்மாவின் மடியில் ஏறி உட்கார்ந்தது. அவர் வாஞ்சையுடன் அதன் முகத்தை வருடிக் கொடுத்தார். பூனையும் அதன் பாசையில் மியா மியாவ்... எனக் குழைந்தவாறு ஏதோ பேசியது.

நண்பர் முகத்தில் நல்ல மகிழ்ச்சி. எங்களுக்கான உரையாடல்களின் மொழிபெயர்ப்பாளனாகவும் இவர்தான் இருந்தார்.
"நீங்கள் பூனைகளுடன் இருந்திருக்கிறீர்களா?" அம்மணி என்னைப் பார்த்துக் கேட்க எனக்குச் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.
"எனது வீட்டில் பூனைப் பட்டியே இருந்தது. எங்கள் வீட்டில் நாயும் பூனைகளும் நண்பர்களாக இருந்தன. நான் படிக்கும் போது மூக்கில கறுப்பன் என்ற பூனையைச் செல்லப் பிராணியாக வைத்திருந்தவன்" என்றேன்.
அவர் முறுவலித்தார். பல் வேறு உரையாடல்களுடன் சந்திப்பு நிறைவுற கிளம்புகிறேன்.
வாசல் வரை வந்த நண்பன் எனது கைகளைக் குலுக்கி "இந்த வீட்டில் வேலை செய்யும் பணிக்கு நீ தெரிவாகிவிட்டாய்" என்றார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.
"என்னது?"
"ஆம் இன்றைய சந்திப்பு வேலைக்குப் பொருத்தமானவரா என்பதைத் தெரிவதாகத்தான் இருந்தது"
எனக்கு ஏதுமே புரியவில்லை. "அப்படி என்ன வேலை எனக்கு இங்கிருக்கிறது?" என்கிறேன் அப்பாவித்தனதுடன்.
"பூனைகள் பராமரிப்புதான் உமது வேலை. அதே நேரம் தொடர்ந்து மொழிக் கல்வியைத் தொடரலாம்"
பொருத்தமான தெரிவாக நட்புடன் வழங்கும் இந்த முயற்சியை உடைய உள்ளத்தை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. 'ஆகா எப்பேற்பட்ட காருண்ய உள்ளமுடையவர்.' எனது கை இறுக்கமாகவே அவரது கையைப் பற்றியிருக்க வேண்டும்.
பாரீசில் முதல் வேலை பூனை வளர்ப்பு.
"எப்படி நான் தெரிவானேன்?" ஆவலுடன் கேட்கிறேன்.
"அதுதான் பூனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு விட்டதே!" என்றார் மகிழ்வுடன்.
"என்ன பூனையா?....." என்னால் நம்பவே முடியவில்லை. இப்போது பூனையுடன் அந்தச் சீமாட்டி செல்லமாக உரையாடியது நினைவில் வந்து சென்றது.
"இவர்கள் சும்மா மிருகங்களை வளர்க்க மாட்டார்கள் அவற்றின் உளவியலையும் நன்றாகக் கற்றுக்கொண்டவாறே வளர்க்கிறார்கள். இங்கு இவை தொடர்பான எத்தனை புத்தகங்கள் இருக்குத் தெரியுமா?"
'ஆம்! மிருகங்களும் குழந்தைகளும் எல்லோரிடமும் சேரமாட்டாது' அப்பா சொல்லுவது ஞாபகத்தில் வந்து சென்றது....'

"என்ன இருந்தாலும் உங்கள் இலங்கை வீட்டில் பூனைகள், நாய் இருந்த கதையைத் தவிர்த்திருந்திருக்கலாம்."
"ஏன்?" அப்பாவித்தனமாக
"இவர்கள் பெருமையாக வளர்ப்பதை நாமும் செய்வதாகச் சொல்லலாமா?, கொஞ்சம் அடக்கியே வாழப் பழக வேண்டும்... எல்லாம் போகப் போகத் தெரிந்துவிடும்."
இப்படியாகத் தொடங்கிய வேலையுடன் பாரீஸ் வாழ்வில் ஓடத்தொடங்கினேன்.

கொக்கோ கோலா சாப்பிடக்கூடாது, முட்டைகளில் நடமாடும் கோழி முட்டைகளையே சாப்பிட வேண்டும், சுவையூட்டாத பழரசங்களையும் நன்னீரையும் நன்றாகப் பருகவேண்டுமென பலவாறான அறிவுரைகளை அந்த சீமாட்டியிடமிருந்தே பெற்றுக் கொண்டேன்.
இப்படியாக சென்ற நாட்களில் ஒருநாள்,
நண்பர் உணவு பரிமாறிக் கொண்டிருக்கிறார்
"உங்கள் நாட்டில் யூதர்கள் இருக்கிறார்களா?" சீமாட்டியின் கேள்வி என்னை நோக்கியதாக இருந்தது
"இலங்கையில் யூதர்களா? நான் அறிந்த வரையில் அப்படியாக யாரும் இருந்ததில்லை" என்கிறேன் உறுதியாக
"இல்லை. ஒருவர் இருக்கிறார்" என்றார் சிரித்துக் கொண்டு
"அதெப்படி ஒருவர் மட்டும்?" நம்பவே முடியாதவனாக
"ஆம் ஒருவர் இருக்கிறார்" அம்மாவின் உறுதியான பதில் என்னை ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.
"யாரவர்?"
"இவர்தான்" என்றார் சிரித்தவாறு எனது நண்பனைக் காட்டி.....
நண்பனும் என்னைப் பார்த்து சிரிக்கிறார்.
நானும் சிரிக்கிறேன்.
ஒருபோதும் எதிர்பார்க்காத அந்தக் காட்சி என்றென்றும் எனைவிட்டு அகலாது.

- அநாமிகன்
யூலை 2009 - பாரீஸ்

No comments:

Post a Comment