Tuesday, 30 July 2013

மகாஜனாக் கல்லூரியும் நானும்

சுவடகம்

நினைவில் மலரும் அந்த நாட்கள்

மகாஜனாக் கல்லூரியும் நானும்

'உனை நீ அறி'


’70 களின் ஆரம்பத்தில் எனது பதின்ம வயதின் தொடக்க நிலையில் கல்விக்காக எனக்குக் கிடைத்த இடமாற்றம். வகுப்பறை தாண்டியதான புத்தம்புதிய சூழல் தொடர்பு அறிவுக் கண்ணைத் திறந்துவிட்டிருந்தது. எனது வீட்டையும் எனது கிராமத்தையும் தாண்டியதாக தொலைவில் புதியதான இயற்கைச் சூழலில் அமைந்த தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி நுழைவுதான் இதனைத் தொடக்கி வைத்தது. 40 ஆண்டுகளுக்கு முன்னதான அடிமனப் பதிவை வார்த்தைகளால் கோர்த்திருக்கிறேன்.

இந்த ஆக்கம் பிரான்சு பழையமாணவர் சங்கம் வெளியிட்ட நூற்றாண்டு மலருக்காகவே எழுதப்பட்டது. இதற்காக வெளியூரிலிருந்து இக்கல்லூரியில் படிக்க வந்த ஒரு மாணவனின் நினைவு மீட்சியாகப் பதிவிட்டிருக்கிறேன்.


70களின் ஆரம்பத்தில்; நான் மகாஜனாக் கல்லூரியில் ஒன்பதாம் வகுப்பு மாணவனாக உள்நுழையும் முன்னரே இக்கல்லூரி தொடர்பாக அறிந்திருந்தேன். எனது அண்ணா தனது பதினொராவது வயதில் 6-ம் வகுப்பில் இணைந்து ஐந்தாண்டுகளாக இங்குள்ள விடுதியில் தங்கிப்படிப்பவராக இருந்தார். அந்தக்காலத்தில், இவர் கலங்கியவாறு எமது வீட்டைவிட்டுப் புறப்படுவதும், விடுதியின் இரும்புக் கம்பிக் கதவுகளுக்குள் கதறி அழுதவாறு பிரியாவிடை கொடுப்பதையும் என் சிறுவயது முதல் அப்பாவுக்கு பக்கத்திலிருந்து பார்த்துத் திணறியிருக்கிறேன். அப்போது எனது அப்பாவின் முகத்தில் எந்தத் துயரும் தெரிந்ததில்லை. நான் அறிந்து கரம்பனில் இருந்து மகாஜனாவுக்கு கல்வி கற்க வந்த முதல் மாணவன் எனது அண்ணாவாகத்தான் இருக்கும்.

காலத்தின் ஓட்டத்தில் அண்ணாவும் தெல்லிப்பழை மகாஜனாவுடன்; இயைந்து சங்கமமாகியதானது எனது நுழைவுக்கு வழி கோலியது. எனது கிராமமான கரம்பனில் அமைந்த சண்முகநாத மகா வித்தியாலயத்தில் 8-ம் வகுப்பு வரை துடிப்பான மாணவனாக இருந்த எனக்கு ஏற்பட்ட இந்த இடமாற்றம் திடுமென வேறொரு தளத்தில் வேறாரு உலக சஞ்சாரமாகியதை எப்படி மறக்க முடியும் ? பதின்ம வயதுப் பிராயம் ஒவ்வொருவர் வாழ்விலும் சுவாரசியங்களைக் காவிச் செல்வதாகவே இருந்திருக்கும். குடும்பத்தில் குழந்தையாகப் பிறந்து, அன்பின் அரவணைப்பால் குடும்ப உறவினனாகி இருந்தாலும் வீட்டின் வெளியே கிராமத்தில் கிடைக்கும் நட்பும், முதன்முதல் நுழையும் ஆரம்பப்பாடசாலையில் கிடைக்கும் நட்புதான் எமக்கெல்லோருக்கும் சமூகம் தொடர்பான முதல் தொடுகையைத் தருகிறது. சாதாரணமாக நிகழும் இத்தகைய தொடுகைகளும் அதன் நீட்சியில் கிளம்பும் மனப் பரிவலைகளும் உருவகிக்கும் மனமண்டலத்தில்தான் மானிடம் பிறக்கிறது, சமூகப் பிரக்ஞைக்கான அத்திவாரம் இடப்படுகிறது.

ஒருகாலகட்டத்தின் நினைவுகளைப் பதிவாக்கும்போது அக்காலகட்த்தில் நம் மனவெளியில் நிகழ்ந்த பண்பியல் மாற்றங்களையும் தாக்கங்களையும் கூறல் சிறந்ததாக இருக்கும். பரிசோதனைக்கூடத்தில் பௌதிகம், இரசாயனம் நிறுவிப்படித்ததுபோல் இல்லாமல் மனித மனவெளியில் அவரவரால் உய்த்து உணரும் நிலைசார்ந்தது மனோவியல். விலங்குகளில் இருந்து மனிதரைப் பிரிக்கும் 'மனோவியல்" எனக்குறிப்பிடப்படும் இத்துறையை நாம் கற்ற பாடசாலையில் ஒரு பாடமாக அப்போது கற்கவில்லைதான். ஆனாலும் சுயநினைவுகளுடன் வாழ்வு என்ற பாத்திரத்தில் இந்தப் பூமியில் நடமாடும் வரையில் கற்றும், கற்றுக்கொண்டும், கற்றுணர்ந்து எதிர்கொள்ளலுடனும் படித்துக்கொண்டே இருப்பதை யாரால்தான் மறுக்க முடியும்.

60களின் கடைசியில் எனது விடலைப் பருவம். காலை எழுந்ததும் வீட்டில் வானொலி இயங்கத் தொடங்கிவிடும். பொங்கும் பூம்புனல் கேட்டதும் பாடசாலை செல்லலும் நாளாந்த வழமை. வானொலியில் சில வசதிகளுண்டு. அருகில் இருந்துதான் கேட்க வேண்டுமென்பதில்லை. அதைக் கேட்டுக் கொண்டே செய்யவேண்டிய பணிகளையும் தொடரலாம். இதனால் பெற்றோர் இதைத் தவறாக அப்போது சொன்னதில்லை. காலில் செருப்புப் போடாமலேயே பள்ளிக்குப் போகும் கிராமத்து மாணவன்;. அப்போது இப்படியாக இருந்த எமக்கான உலகத் தொடர்பை செவி வழியாகத் தந்ததில் வானொலி முக்கியமானதாக இருந்தது. அதுவும் இலங்கை வானொலி முக்கிய பங்காற்றியது. கிரிகட் விளையாட்டை விபரண வர்ணனையாகக் கேட்டு இரசித்தவர்கள் எங்களில் எத்தனையோ பேர். இவ்வேளையில் சந்திர மண்டலத்திற்குப் போன ஆம்ஸ்ரோங்கின் செயலை வர்ணித்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை யாராலும் மறக்கமுடியாது. மறைந்த அறிஞர் அண்ணாவுக்காக நடந்த ஊர்வலத்தை செய்தி வர்ணனையாக அப்போதே கேட்டு இலயித்தவர்களில் நானும் ஒருவன். விளையாட்டாக வர்ணனையைக் கேட்டுக் கொண்டிருந்த எமக்கு விஞ்ஞாகத்தின் உயர்வையும், தமிழ் மொழி சார்ந்த உணர்வையும் குக்கிராமங்களிலும் கொண்டு வந்து சேர்த்தன.

இலங்கையின் வடக்கே கிடக்கும் தீவுக்கூட்டங்களில் ஒன்றின் ஓரமாக அமைந்தது கரம்பன் கிராமம். முறுக்கேறிய பனை வளவுகளுடன் கரிசல் மண்ணைக்கொண்ட இக்கிராமத்தில் ஆறுமாத காலம் மட்டும்தான் விவசாயம் செய்யமுடியும். வானை நம்பிய கிணற்று நீரை நாடியிருக்கும் மண்ணில் தேங்கிக் கிடக்கும் நீர் வற்றி வருடத்தில் மூன்று மாதங்களாவது உயிர்வாழ்வுக்காக நீர் தேடிப் பயணிக்கும் வாழ்வைக் கொண்டது எமது வாழ்வு. தெல்லிப்பழை இதற்கு நேர் எதிரான கிராமம். மிகவும் ஆழமான கிணறுகளைக் கொண்டதும் கிணற்றுக்குள்ளேயே தண்ணீர் இறைக்கும் இயந்திரங்களைக் கொண்டு வருடம் முழுவதும் விவசாயம் செய்யும் செம்மண்ணைக் கொண்ட கிராமம். தண்டுகளெங்கும் காய்த்துக் குலுங்கும் பலா மரங்களின் அழகை இங்குதான் நான் முதன் முதலில் கண்டேன். அழகான வெற்றிலைத் தோடங்களையும், கீரை வயல்களையும், காய்கறித் தோடங்களையும் காணுற்ற பசுமை இன்றும் நினைவோடைப் படங்களாகி மூளையின் நினைவுத் திரையில் அழகாகப் பளீரிடுகின்றன. எனது கிராமத்தில் பிரதான பணப் பயிராக புகையிலையும், மிளகாயும், வெங்காயமும் முதன்மை வகித்தன. சிறு தோடங்களாகத்தான் மரக்கறி மற்றும் வாழை எங்கும் பயிரிடப்பட்டிருக்கும். அந்தக் காலத்தில் என் வீட்டைச் சுற்றியிருந்த வயல்களில் மாரி கால நெற்பயிற்செய்கை இருந்தது. பின்னர் இது இல்லாது போய்விட்டிருந்தது.

சுற்றி வர விவசாயத் தோட்டங்களின் மத்தியில் பெரும் சுவர்களுக்குள் செவ்வகக் கட்டிடத் தொகுதியையுடைய பிரமாண்டமான மகாஜனாக் கல்லூரிக்குள் அங்குமிங்கும் பார்த்து கிலேசித்தவாறே நுழைந்த முதல் நாளை இலகுவில் மறக்கமுடியாது. அண்ணா கூடவே இருந்தது சற்று தெம்பைத் தந்திருந்தது. கட்டிடத் தொகுதியின் நடுவே அழகான புற்தரை மைதானம். நடுவில் கிறிக்கற் ஆடு களம். அங்கே கட்டிடத் தொகுதியின் நடுவில் ஒரு திறந்தவெளி அரங்கம். மைதான மூலையில் ஒரு கோவில். முன் முகப்பு கட்டடித்தின் மேல் மாடியில் அழகானதொரு உள்ளரங்கம். இதற்கு நேர் எதிர்ப் பக்கத்தில் மைதானத்தைத்தாண்டி சிறிய நுழைவாசலுடனான மாணவர் விடுதி. இந்த விடுதிக்குப் பக்கதிலான வகுப்பறையொன்றில்தான் எனக்கான இடம் கிடைத்திருந்தது.

முதலாம் ஆண்டு எனக்கு விடுதியில் தங்கியிருக்க அனுமதி கிடைக்காததால் எனது தந்தையின் நண்பர் வீட்டில் இருந்து தினமும் வந்து போகும் மாணவனாகினேன். இந்த வீடு; பண்டைத்தரிப்பு நகரில் அமைந்த வடலியடைப்பு என்றதொரு கிராமத்தில் இருந்தது. இக்கிராமத்திலிருந்து நாள்தோறும் காராளி என்பவரின் காரில் பள்ளிப் பாடப் பொதியுடன் மதிய உணவையும் சுமந்தவாறு பயணிப்பவர்களில் நானுமொருவனாக இருந்தேன். இது எனக்கானதொரு புத்தம் புதிய அனுபவமாக இருந்தது. நாளாந்தம் பண்டத் தரிப்பு செல்லும் பிரதான வீதியில் குறித்த நேரத்தில் காராளியின் காருக்காகக் காத்திருக்க வேண்டும் அதேபோல் மாலையில் மகாஜனாவின் முகப்புக்கு முன்னால் இருக்கும் பிரசித்தி பெற்ற தேனீர்க் கடைக்குப் பக்கத்தில் காராளியின் காரை இனங்கண்டு ஏறிக் கொள்ள வேண்டும். இதெல்லாம் எனக்கு முன்னர் எப்போதுமே அறிந்தே இராத புத்தம் புது அனுபவங்களாக இருந்தன.

அப்பாவின் நண்பர் கொழும்பில் பணியாற்றிக் கொண்டிருந்தார். விடுமுறைக்கு மட்டுமே வீட்டிற்கு வருவார். அப்போதெல்லாம் தொலைபேசி வசதிகள் இருந்ததில்லை. ஆனாலும் அவர் வரும் நேரம் அறிந்து சுன்னாகம் புகையிரத நிலையத்திற்கு கார் பிடித்து செல்லும் வீட்டாரோடு நானும் செல்வேன். இங்குதான் முதன் முதலில் அசையும் புகையிரதத்தையும் தண்டவாளமெனப்படும் இரும்புப் பாதையையும் காணுற்றேன். சிறுபிராயத்தில் நான் அப்பா-அம்மாவோடு பதுளையில் வாழ்ந்திருந்தாலும் எனது சுய அறிவுக்கெட்டிய பதிவாக புகையிரதம் அமைந்தது இங்கேதான். எனது குடும்பத்திற்கு வெளியில் இன்னொருவர் வீட்டில் நானும் ஒருத்தனாகி வாழ முடிந்ததை இங்குதான் பெற்றேன். அவர்களை அப்பா அம்மா எனவாகவே அழைத்தேன். அவர்களுக்கு இரண்டு பெண்பிள்ளைகள். இருவரும் பெரியவர்கள். பெரியக்கா சிவாஜி பிரியை, சின்னக்கா எம்ஜிஆர் பிரியை இதனால் அடிக்கடி இவர்களுக்குள் சண்டைவரும். எனக்கு ஒன்றுமாக விளங்காது. சில சமயங்களில் கோவித்துக் கொண்டு சாப்பிடாமலும் இருப்பார்கள். இச்சமயங்களில் அவர்களின் அம்மாவோடு நானும் சமாதானம் செய்யப்போவேன். இதிலிருந்து நான் யார் பக்கம் என்ற பிரச்சனை தொடங்கிவிட்டது. எனக்கு சிவாஜியும் தெரியாது எம்ஜி ஆரும் தெரியாது. கரம்பனுக்கான நகரான ஊர்காவற்றுறையில் ஒரே ஒரு தியேட்டர்தான் இருந்தது. அங்கே பழைய படங்கள்தான் ஓடும். இதில் நான் பார்த்தது புராண இதிகாசக் கதைப்படங்கள் மட்டும்தான். இங்கே பண்டத்தரிப்பில் விடுமுறை நாட்களில் கார் பிடித்து யாழ்ப்பாணம் போய் படம் பார்க்கும் வழக்கத்தை இந்தக் குடும்பத்தினர் கொண்டிருந்ததால் அவர்களுடன் நானும் ஒருவனானேன். மாதம் ஒரு தடவை அல்லது இரு தடவை எனவாகப் பார்க்கும் திரைக் காட்சிகள் எனது மூளைக்குள்ளும் சலனத்தை உண்டாக்கியது. இதனால் வீட்டில் நடக்கும் தமிழ்த்திரை இரசிகர் வாக்குவாதத்தில் நீண்ட நாட்களுக்கு என்னால் நடுநிலை வகிக்க முடியவில்லை. எதையும் அறியாதவனாக இருந்த நான் சிவாஜி ரசிகனாகத் தொடங்கியதை இப்போது நினைக்கையிலும் முகத்தில் புன்முறுவல் பூக்கிறது.

நான் மகாஜனாவில் படித்தபோதுதான் வைரவிழா பிரமாண்டமாக நடைபெற்றது. இன்று நூற்றாண்டுவிழா ஆக நாற்பதாண்டுகள் ஓடிக் கரைந்தே விட்டிருக்கின்றன. நினைக்கவே ஆச்சரியமாக இருக்கிறது. இந்த விழாவில் நடந்த கண்காட்சி அரங்கத்தில் எனது அண்ணாவும் தனது தொழில்நுட்பத்திலான காட்சியையும் வைத்திருந்தான். இது கல்லூரியின் பிரதான நுழைவாசலுக்கு அருகாமையில் இடது பக்கமாக இருந்த முதல் கட்டிடத் தொகுதியில் இருந்தது. தண்ணீரில் செல்லும் சிறிய மோட்டார் படகுகளை அவன் இயக்கச் செய்திருந்தான். இப்படியானதொரு கண்காட்சியை இதன் முன் நான் எங்குமே பார்த்திருக்கவில்லை. அப்போதைய அதிபர் ஜெயரெத்தினம். கண்டிப்பிற்குப் பெயர் பெற்றவர். அந்தக் காலகட்டத்தில் அதிபர்களின் ஆளுமையை வைத்தே கல்லூரிகள் பெரிதும் மதிக்கப்பட்டன. சிறந்த அதிபர்களைக் கண்டால் மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் ஒரு வித பயம்கலந்த மரியாதையை வழங்குவதை நம்மில் பலரும் நேரிலேயே பார்த்திருக்கிறோம். எமது பெற்றோரில் அனேகமானவர்கள் நல்லொழுக்கத்திற்கே முன்னுரியை வழங்கினார்கள். மாணவர் பிராயத்தில் நல்ல கட்டுப்பாடான பாடசாலைகளில் படித்தால் நல்லொழுக்கம் தானாகவே வருமென பெரிதும் நம்பினார்கள். இதனால்தான் யாழ் குடாவிலுள்ள பிரபல்யமான பாடசாலைகளுக்கு தொலை தூரத்திலிருந்தும் மாணவர்கள் வந்திருந்தனர்.

எனது கிராமப் பள்ளியில் நீளம் பாய்தல், உயரம் பாய்தல், ஓட்டம் இவற்றிலெல்லாம் பரிசுகள் பெற்றிருந்தவனாயினும் கல்லூரியின் நுழைவு பெரிது-சிறிது வெளிப்படுத்தும் இருகோடு தத்துவத்தைக் காட்டியது. பென்னாம்பெரிய விளையாட்டாளர்களைக் கண்டு மலைத்துப்போனேன். தடியூண்டிப் பாய்தல், ஹாக்கி, சிவப்பு நிறத் தோற்பந்திலான கிறிக்கற், பூப்பந்து போன்ற புதியதான விளையாட்டுகள் பற்றி அறியத் தொடங்கியதும் இங்குதான். காற்பந்து விளையாட்டுக்காகக் குழுவாகச் செல்வதும், வெற்றியிடைந்தால் மேளதாள வரவேற்புடன் வீரர்களை அழைத்துவருவதும், சிறப்புப் பரிசாக வெற்றிக் கேடயங்களை பெற்றால் அடுத்தநாள் விடுமுறையை அதிபர் அறிவிப்பதையும் காணுற்று கிறங்கிப்போனவர்களில் நானும் ஒருவன். இதில் கதாநாயக விளையாட்டு வீரராக அப்போது 'முயல்' இருந்தார். காங்கேசன்துறை-யாழ் பிரதான வீதியில் அமைந்த தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கும் இந்த மகாஜகாக் கல்லூரிக்கும் எப்போதுமே எட்டாப் பொருத்தம். இதற்கிடையில் விளையாட்டுப் போட்டிகள் வந்துவிட்டால் ஊரே பிளந்துபோகும். ஆர்ப்பாட்டங்களுக்குப் பஞ்சமே இராது. அறியாப்பருவத்தில் எப்பேர்ப்பட்ட காட்சிகளையெல்லாம் பார்த்துக் கொண்டு கடந்து வந்திருக்கிறோம்.

அடுத்தவருடம், எனது அண்ணா தொழில்நுட்பப் பயிற்சி மேற்படிப்பு கிடைத்து கொழும்பு செல்ல நான் விடுதிக்குள் நுழைந்து உள்ளக மாணவனாகிறேன். சைவ உணவைக் கொண்ட புத்தம் புதியதான விடுதிவாழ்வு. காலை 5.40ற்கு எழுந்தால் இரவு 10.30 மணி வரையிலும் நிர்ணயிக்கப்பட்ட சீரான ஒழுங்கு வாழ்க்கை. மாறுதலே இல்லாத வாராந்த உணவு முறை (உதாரணமாக புதன் காலையில் புக்கை என்றிருந்தால் ஆண்டு முழுவதும் புதன் காலையில் புக்கைதான் உணவு), பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்ல முடியாத கடும் கட்டுப்பாடு, பகலில் படிக்கும் வகுப்பறைகளிலேயே இரவிலும் மீட்டலுக்காக யாருடனும் கதைக்கக்கூட முடியாத இருப்பு, ஒவ்வொருவருக்கும் தனியான அடையாள இலக்கமிட்டு அதையே அடையாளமாக்கி இனம்காணும் புதிய பொறிமுறை (எனக்கான கட்டில், கோப்பை, தட்டு, வாளி என தனியான எண் குறியீடாக இருக்கும்), நொறுக்குத் தீனி உண்ண முடியாத வெறுமை என்பன எங்களைக் கைதி போலவும் நாளாந்த மாணவர்களை சுதந்திரமானவர்கள் போலவும் இனங்காட்டியது. ஆனால் இந்த இருப்பு புதிய அறிமுகத் தொடுகைகள் கிடைக்கவும் ஒரு குழாமாக இணையவும் வழிகோலியது. தீவுக்கூட்டம் முதல், கிழக்கு மாகாணம், மலையகம் வரையில்; பலபிரதேசங்களில் இருந்து வந்துள்ள சக மாணவர்களின் அறிமுகத்தாலும் கூடி வாழ்தலாலும் பேச்சு வழக்கு முறைகளிலிருந்து - உணவுப் பழக்கம் வரையிலான பன்முக அறிதல்கள் பெற்றவராயினோம். மாணவர்களைப் பார்க்கவரும் உறவினர்கள் ஏதாவது தின்பண்டங்களை கொண்டே வருவார்கள்.  இவை பகிர்ந்துண்ணும் இயல்பான பண்பை எமக்குள் ஏற்படுத்தியிருந்தது. இதனால் எமக்கிடையில் ஒருங்கிணைப்பைத் தந்து மகிழ்வூட்டியது.

இந்தக் காலகட்டத்தில்தான் சேகுவரா சிங்கள இளைஞர் எழுச்சி இலங்கையில் நடைபெற்றிருந்தது. சிங்களமென்றால் என்ன என்று தெரியாதிருந்த பிராயத்தில் இளைஞர்களது எழுச்சி மலைப்பூட்டியது. பலரும் ஆங்காகே குசுகுசுத்த வண்ணமே இருந்தனர். விடுதியில் நிறையவே கதைக்கப்பட்டன. ஆனால் எம்மால் எங்குமே செல்ல முடியாதிருந்தது. இங்கு தான் டாக்டர் கோபூர் பற்றிய அறிதலும் வித்தைகளும் கடவுள் பக்தியும் தொடர்பான தொடக்க அறிமுகமும் கிடைத்தது. இந்த விடுதிக்குள் எத்தனையோ விவாதங்களைக் கேட்டிருப்போம். எத்தனையோ மேடையில்லா நிகழ்த்துகளையும் பார்த்திருப்போம். இதில் ஒன்று நம்மில் பலர் விழுந்து விழுந்து சிரித்துப் பார்த்த 'மங்கோலியாவிலிருந்து வருகை தந்திருந்த சிறப்பு அதிதியின் உரையை மொழிபெயர்த்து வழங்கிய நிகழ்வு" இன்றும் என் கண் முன்னால் இருக்கிறது. இந்த மொழி பெயர்ப்புக் கலையை வி.பொன்னம்பலம் வாயிலாக மேடைகளில் கேட்டு வளர்ந்த தலைமுறை எங்களுடையது. இதுமட்டுமல்லாது தந்தை செல்வா மகாஜனா திறந்தவெளி அரங்கில் வாயசைத்து ஆற்றிய செய்கை உரையை அமிர்தலிங்கம் உரத்துச் சொல்லியதை வாயைப் பிளந்தவாறு கேட்டிருக்கிறோம். அதைக்கூட அமிர்தலிங்கம் மொழி பெயர்த்துக் கூறியதாகவே கதைத்துக்கொள்ளுவோம்.

அப்போதைய விடுதிப் பொறுப்பாளராக இருந்தவர் பெரிய அல்சேசன் நாயை பிள்ளை போல் வளர்த்து வந்தார். இந்த அல்சேசன் நாயை முதன் முதலில் அதிசயமாக இங்குதான் நான் பார்த்தேன். இவருக்குப் பிள்ளை இல்லாததால்தான் இப்படியாகச் செல்லமாக வளர்க்கிறாரென சக மாணவர்கள் சொல்வார்கள். பின்னொரு நாளில், இந்த நாய் அவரைக் கடித்ததால் அவர் இறந்த செய்தி கேட்டு அரண்டு போனேன்.

வகுப்பில் கிராமத்திலிருந்து வந்து படிக்கும் அப்பிராணியாக நான் இருப்பதை எனது சக மாணவனொருவன் எப்படியோ தெரிந்துகொண்டிருக்கிறான். அவன் கட்டுன் கிராமத்தவன். அழகான துடிப்பானவன் கொஞம் குள்ளத் தோற்றமுடையவன். நகைச்சுவையாகப் பேசுவான். பல்வேறு புதினங்களைச் சொல்வான். ஆசிரியரிடம் புத்தகம் வாங்கியதற்காக கொடுப்பதற்கு 7 ரூபாய் வைத்திருந்தேன். "இக்காசை வெள்ளியன்றுதானே கொடுக்கவேண்டும், என்னிடம் தா இதை நான் வெள்ளியன்று திருப்பித் தந்துவிடுவேன்" என்று அவன் கேட்க நானும் கொடுத்துவிட்டேன். வெள்ளின்று நான் காசைக் கேட்டபோது, "மச்சான் இப்ப என்னட்ட இல்லை கொஞ்சம் பொறு தந்துடுவன்." என்று சொல்லிக் கொண்டு ஏதோ யோசித்தவனாக "உன்னிட்ட இருக்கிற 3 ரூபாயையும் தந்தா கணக்கு 10 ரூபாயாக மட்டமாக இருக்கும் நானும் மறக்காமல் தந்துவிடுவேன்" என்றான். நானும் கொடுதே விட்டேன். அதன் பின் எத்தனையோ வெள்ளிகள் தாண்டியும் அந்தக் காசு எனக்குக் கிடைக்கவே இல்லை. பின்னொரு நாளில் யோசித்துப் பார்க்கையில் சிரிப்பாக இருக்கிறது. ஒப்பீட்டளவில் 'வாழ்வியல் சமயோசிதம்" வேறுபட்டிருந்த வளர்ப்பு முறைகளிலேயே நாமிருந்ததை உணர முடிந்தது. பட்டறிவுகளால் கிடைக்கும் பெறுமதி மிக்க அனுபவங்களைப் பெறுவதற்கு நாம் வீட்டிற்கு- கிராமத்திற்கு- நாட்டிற்கு வெளியில் நடமாடியே ஆகவேண்டும்.

இந்த மகாஜனாவுக்கான எனது பிரயாணம் வலிகாமத்தில் நிறைய ஊர்களையும், ஊராரையும் அறிமுகம் செய்தது. கிணற்றுத்தவளையாக இருந்தவன் குளத்துத் தவளையாகி இன்னும் பென்னாம்பெரிய நீர்நிலைகளை அறியும் உலகப் பார்வையை பார்க்கத் திறந்துவிட்டது. பின்னாளில் தொடரப்பட்ட எனது முறைசார் கல்வி வாழ்வில் நட்பின் முக்கியத்தவத்தையும், இதனோடான பிரயாணங்களின் அவசியத்தையும் எவ்வித சங்கோசமில்லாமலும் பிரயோகிக்க வழிகோலியது. இன்று தேசம் கடந்து கண்டம் கடந்த நிலையில், 40 ஆண்டுகள் போனாலும் புதிய உத்வேகத்துடன் தொடரப்படும் பண்பாகவும் அமைந்துவிட்டது.

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு. (திருக்குறள் 784)
(நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று, நண்பர் நெறிக்கடந்து செல்லும் போது முற்ப்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.)

மனித வாழ்வில் நமக்கென நாமே தெரிவாக்கி நாமே அனுபவித்து, மகிழ்ந்து- பரவசமாகி, நொந்து- துவண்டு...... இன்ன பிறவாக பல்வேறு உணர்ச்சி வலைக்குள் மூழ்கி எழும் அனுவத்தைத் தருவது இந்த 'நட்பு" என்ற மூன்றே எழுத்தில் அடக்கப்பட்ட கடுகுச் சொல். வார்த்தைகளை அளந்துபேசிய, நாவடக்கத்தை வலியுறுத்திய, பயனில்லாதவற்றைத் தவிர்க்கப் பணித்த வள்ளுவர், தனது 133 அதிகாரங்களுடைய குறட் கோவையில் 5 அதிகாரங்களை "நட்பு" இற்காக ஒதுக்கியிருக்கிறார். திருக்குறளில் வேறொரு தலைப்புக்கும் இந்தளவுக்கு அதிக பதிவு முக்கியத்துவம் தராத திருவள்ளுவரின் கவனங்கொள்ளல் இதனது செயற்திறனை நன்குணர்த்தும்.

இளைஞராவதற்கு முன்னரான பதின்ம வயதானது வகுப்பறை தாண்டியதான பாடங்களையும் அறியும் தேடல்களையும் புரிதல்களையும் கொண்டது. ஒரு மனிதனது சுயம் கட்டமைக்கப்படும் முக்கியமானதொரு காலகட்டம். இத்தகைய பிராயத்தில் எமக்கான ஆளுமையை அல்லது எதிர்கால வாழ்வின் இருப்புக்கானப் பாதைகள் தெரிவாவதோ அல்லது கிடைக்கவோ செய்கின்றன. அதுமட்டுமல்லாது இப்பிராயத்தின் நினைவுகள் ஆழ்மனப் பதிவாகிவிடுகின்றன.
இறுக்கமான குடும்பச்சூழல் வேலியைத் தாண்டியதாக அவரவர்களது சுயவிருப்புகளுடன் கிடைக்கும் புதியதான வாழ்வின் நீட்சியில் இனிக்கும் நினைவுகளாக மீள்பாக்கமடையும் நினைவலைகள் இவ்வகையினர்களுடனான தொடர் சந்திப்புகளில் குவியமாகிறது. தன்னியல்பாக இக்குவிய மையங்கள் சமூக அசைவியக்கத்தில் செயலாற்றும் தார்மீக வகிபாகத்தை எடுக்க முனையும்போது அவை இதில் பங்கேற்பவர்களது தனி விருப்ப அடையாளமாகிறது.
இந்த யாதார்த்த வெளிப்பாட்டு நிலையில்தான் புலம் பெயர்ந்த சூழலிலும் செயற்படும் பழைய மாணவர் சங்கங்களையும், ஊர்ச்சங்கங்களையும் விளங்கிக் கொள்ள முடியும். அதாவது இன்று இருக்கும் 'நான்" யார்? எப்படியாக இந்நிலைக்கு முகிழ்ந்தேன்? என்ற கேள்விகள் அவரவர் சுயத்திற்கான, இருத்தலுக்கான விடைகளைக் கொண்டிருக்கும். இப்படியாக ஒருத்துவமாகும் விடைகளைக் கொண்டோர் பொதுமைப்பட்டு 'நாங்கள்"(நான்+கள் - நாங்கள்) ஆக ஒன்றிணைந்து சமூக அசைவியக்கத்தில் பணியாற்ற விளையும்போது இந்த "நாங்கள்" என்பது இவர்களது தனி அடையாளமாகிறது. செம்மண்ணின் செறிவைப் பிரதிபலிக்கும் கடுமையான பிறவுண் நிறத்திலான 'மகாஜனன்' இவ்வகை அடையாளத்தில் ஒன்றுதான்.
- க. முகுந்தன்
நன்றி : 'மண்ணிறம்' நூற்றாண்டு விழா சிறப்பிதழ்
பிரான்சு பழையமாணவர் சங்கம் 14.11.2010


பின்குறிப்பு :

‘70கள் இலங்கைத் தமிழர்களின் கல்வி - அரசியல் - பொருளாதாரத் தளத்தில் மாபெரும் குலுக்கலை ஏற்படுத்திய காலகட்டம். இக் காலத்தில்தான் இலங்கையின் வடபகுதி இளைய பருவத்தினராக நாம் வளர்ந்து கொண்டிருந்தோம். கல்வி வழிப் பொருளாதார மேம்பாட்டிற்காக ஊக்குவிக்கப்பட்ட சமூகமாக இருந்த போக்கில் திடீர் பண்பு மாற்றமாக ‘வெளிக்கிடடி விசுவமடு’ ஆகிய கமம் செய்வதை இலக்காக்கும் வன்னியில் படித்த வாலிபர் குடியேற்றங்கள் நிகழ்ந்த காலம். அதேசமயம் இலண்டனை நோக்கிய பயணமாத் தொடங்கிய ஆங்கில மேட்டுக் குடிப் புலப்பெயர்வு. நாம் கனவுகூடக் கண்டிராததொரு பிரமாண்டமான ஊர்வலமும் உலகத் தமிழ் மாநாடாகவும் அதன் வடுவானதாகவும் அமைந்த ‘தமிழாராட்சி மாநாடு’. பாரிய அளவில் தொடங்கிய வேலைகளுக்கான அரபு நாட்டுப் புலப்பெயர்வும் அதன் நீட்சியாகி விரவிய ஐரோப்பியப் புலப் பெயர்வும்…. பக்கத்து வீட்டுச் சண்டையில் கூடத் தலையிடாது ஒதுங்கிக்கொள்ளும் நடுத்தர வர்க்க மனநிலை இளைஞர்கள் ‘ஈழக் கனவுகளுக்காக’ தம் தனித்துவமான சுயநல வாழ்வைத் துச்சமெனப் புறந்தள்ளித் தொடங்கிய ‘புதுமையான போராட்டக்’ காலகட்டம். இலங்கைத் தமிழ் திரைப்பட வெளிப்பாடுகளில் அதிகமான இலங்கைத் தமிழ்ச் சினிமாக்களைக் கண்ட காலம். வானொலியைத் தாண்டி ‘தொலைக் காட்சிகளும் வீடியோகக்களுமாக’ குறுந்திரையை கறுப்பு வெள்ளையாகவும் பின் வண்ணமாகவும் வந்து நம்மவர் பார்வையை குவியப்படுத்திய குறுந்திரையின் வரவு. இப்படியாகச் சொல்லிக் கொண்டே போகலாம்….. எனவாகும் கடந்துபோன இலங்கைத் தமிழர் வாழ்வியலை ஆராய முனைபவர்கள் ‘70கள் காலகட்டத்தைத் தனித்துவமானதாகத் தொகுக்க வேண்டும்.


இடுகை : முகிலன்

பிரான்சு 30.07.2013

No comments:

Post a Comment