Monday, 22 July 2013

நீட்சிபெறும் புலம்பெயர்வு வாழ்வில் குமர்ப் பொடியங்களும் - குமர்ப் பொட்டைகளும் ஒருபாலார் இணைவுகளும்!

குஞ்சரம் 5

நீட்சிபெறும் புலம்பெயர்வு வாழ்வில் குமர்ப் பொடியங்களும் - குமர்ப் பொட்டைகளும் ஒருபாலார் இணைவுகளும்!

புலம்பெயர் வாழ்வின் அதீதச் சுழற்சியால் நாமும் வேகமாச் சுழன்றடித்துச் செல்கிறோம். பிரான்சில் கல்லூரி ஆண்டு இறுதிக் கோடை விடுமுறைக்காலம் கொஞ்சம் அதிகம். அதிலும் பல்கலைக் கழக புகுமுக வகுப்புக் காலத்தில் இவ்விடுமுறை காலம் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இத்தகைய இளையோரான பதின்ம வயதின் கடைக் கோடி எல்லைப் பிராயத்தினருடன்(ஆண் - பெண்) வேலைக்குச் சென்றுவரும் பெற்றோர் படும்பாடு புதியதோர் பதிவுதான். இப்பிராயத்தினர் தத்தமது நண்பர்களுடன் அதிக தொடர்பாடல்களை மகிழ்வுடன் தொடரும் விடுமுறையாக்கவே பிரயத்தனம் செய்வார்கள். பல்தேசிய நண்பர்கள் குழாத்துடன் இவர்கள் சங்கமிப்பதை ஜீரணிக்க முடியாத முதற் தலைமுறைப் பெற்றோர் தத்தமது பிள்ளைகளை 'குமர்ப் பொட்டைகளாகவும்" 'குமர்ப் பொடியங்களாகவும்" பொத்தியபடியே வளர்க்க பிரயத்தனம் கொள்கிறார்கள்.
ஐரோப்பியக் கோடை இரவுகளைச் சுருங்கி பகல்களை வீங்கிப் பெருத்தனவாக்கி கழிந்து செல்லும். இரு குமர்ப் பொடியங்களையுடைய சிறிய குடும்பம் எங்களுடையது. 2013 கோடைக் கல்லூரி விடுமுறையின் நீட்சி தகிக்கும் வெயிலுடன் பெரும் புழுக்கத்தை வீட்டுக்குள் வாரி இறைப்பாதாகவே அமைந்து விட்டிருந்தது. நம்; பொடியங்களோ ஜெர்மனிச் சுற்றுலாவை தனியர்களாகச் செய்வதென ஏற்கனவே திட்டமிட்டிருந்தனர். அவர்களை இங்கிருந்து நான் ஜெர்மனிய நகரான சார்புறூக்கனுக்கு அவர்களது மச்சான் (இவர்களும் இவர்களோடு ஒத்த குமர்ப் பொடியன்கள்தான்) வீட்டில் கொண்டு போய்விடுவதாக வாக்குக் கொடுத்திருந்தேன். ஊருக்குச் சென்றிருந்த தாயார் இங்கு வந்ததும் வரும் வார இறுதியில் ஜெர்மனி செல்வதாக எப்போதோ வாக்கு கொடுக்கப்ட்டிருந்தது.
எனது மைத்துனர் வீட்டிற்கு சென்ற சனியன்று குடும்பமாகச் சென்றிருந்தோம். பிள்ளைகளை அங்கு விட்டுவிட்டு அடுத்தநாள் பாரீசு திரும்ப வேண்டும். திங்களன்று மனைவிக்கு விடுமுறை கழிந்து வேலை தொடங்குகிறது. நாம் போனபோது அங்கே இந்த வார சனி - ஞாயிறுக் கொண்டாட்டமாக 'ஒத்தபாலார் இணைவுத் திருவிழா" கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. எனது மைத்துனர் பணியாற்றும் உணவகத்தில் பெரும் கூட்டம் அலைமோதுவதால் கடுமையான உழைப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவரது பெரிய மகனும் அங்கு தற்காலிக மேலதிக வேலைக்காக இணைந்திருந்தார். இவர்களுடன் அடுத்த வருடம் பல்கலைக் கழகத்தினுள் புகவுள்ள எங்களது மூத்த மகனும் தற்காலிக மேலதிக பணியில் இணைந்து கொண்டார். வண்டி ஓட்டிச் சென்ற பயணக் களைப்பால் நாம் முன்னரே தூங்கிவிட்டதால் சனியன்று நாம் அவர்களுடன் உரையாடவே முடியவில்லை.
ஞாயிறு பகல் வேலைக்கு அவர்கள் செல்ல வேண்டும் நாமோ பாரீசு திரும்ப வேண்டும். இடையில் கொஞ்ச நேரம் மைத்துனரோடு உரையாட முடிந்தது. இந்த உரையாடல் கொஞ்சம் வித்தியாசமானதாக அமைந்திருந்தது. மைத்துனருக்கு 'ஒத்தபாலார் இணைவு" புதிர் கலந்த வேடிக்கையாக இருந்திருக்க வேண்டும்.
'அத்தார்! ஆணும்- ஆணும் பெண்ணும்- பெண்ணும் கல்யாணம் செய்து என்னதான் சாதிக்கப் போகிறார்களோ தெரியவில்லை?....... நல்ல முசுப்பாத்தியாகத்தான் இருக்கு! அவர்களும் அவர்களது கொஞ்சல்களும்!!" நான் அவரது முகத்தை உற்று நோக்கியவாறு ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்ததானது, அவரைத் தொடர்ந்தும் உரையாட வைத்தது.
'உங்களது பிரான்சின் தற்போதைய புதிய அதிபரும் இவர்களது திருமணத்துக்கு முன்னுரிமையை வழங்கித்தானே இருக்கிறார்?"
'ஓம்! இப்போது உலகம் முழுவதிலும் இந்த வகையான இணைவுக்கு ஒத்துப்போகும் நீதி வழங்கும் சட்ட உரிமம் நிறைவேற்றப்பட்டுக் கொண்டே வருகின்றன." என்ற எவ்வித ஆச்சரியமும் கலக்காத எனது பதில் அமைந்திருந்ததை அவருடைய முகத்தின் சலனங்கள் புலப்படுத்தின.
'அதெப்படி மூன்று அல்லது நான்கு சதவீதத்தினரது கிலேச விருப்பத்தை இந்த சனநாயக நாடுகளில் பெரும்பான்மையை மீறிச் செய்கிறார்கள்?" என்ற மைத்துனரின் கேள்வியில் அமைந்திருந்த நியாயம் என்னைக் கவர்ந்தது.
'எல்லாமே எதிர்கால இலாபத்திற்காகத்தான்!" அமைதியாக நான்.
'இலாபமா? யாருக்கு?"
'இப்படியானவர்கள் குழந்தைகள் பெறும் போது வருமானம் பெருகும். புத்தம் புதியதான தொழில் வாய்ப்பு கிடைக்கும்."
'அதெப்படி அத்தார்?"
'உயிரி வாழ்வுக்கான அத்தியாவசிய இயற்கை நிலம் நீர் காற்று எல்லாமே இப்போது சந்தைப் பண்டமாகி விற்கத் தொடங்கிவிட்டனதானே! இதன் அடுத்த கட்ட நீட்சிதான் மனித இனவிருத்தி வியாபாரம்."
'ஓரினச் சேர்க்கையாளர்களும் பிள்ளை பெற முடியுமா?"
'உலகமயமாகிய வியாபாரத்துடன் இணைந்துள்ள விஞ்ஞானம் மனித வினையாக்கத்தில் புதியதான உலக ஒழுங்கைத் தரப்போகிறது. எதிர்காலத்தில் 'நோகாமல் பிள்ளைகள் பெற்றெடுக்கப் போகிறார்கள்!" யாராருக்காகவோ புதியதாக உருவாகவுள்ள ஈண் இல்லங்களில் வாடகைத் தாய்மார்கள் - ஈன்றாள் (surrogate) இவ்வேலைகளைச் செய்யப் போகிறார்கள். அதுமாத்திரமில்லாது விற்பனைக்காக தாய்ப் பால் கொடுக்கும் கறவைப் பெண்களாகவும் இருக்கப் போகிறார்கள். தற்போதே தொடங்கப்பட்டுள்ள இந்த வகையிலான பெற்றெடுக்கபடும் பிள்ளைகளுக்கு ஒரு இலட்சம்யூரோக்கள் கொடுக்க நோகாத பெற்றோர் தயாராகி விட்டார்கள்." என்ற என் சிறுவிளக்கம் மைத்துனருக்கு ஒரளவு புரிந்திருக்கவேண்டும். அவர் முகத்தில் சிறு பிரகாசம் மின்னிச் சென்றது.
'இந்த நகரத்தில் இங்கு பிறந்து வளர்ந்த ஒரு புலம்பெயர்ந்த தமிழ்ப் பெண்பிள்ளையும் இப்படியாகத் திருமணம் செய்து போயிட்டா...."
'என்னது?" இப்போது ஆச்சரியப்பட்டது நான்தான்.
'அவளது தாய் தகப்பன் மிகவும் கவலையோடு இருக்கிறார்கள். பார்க்கப் பாவமாக இருக்கிறது." என்றவாறு தொடர்ந்தார்.... 'நம்மவர்கள் போய்க் கதைப்பதாலோ என்னவோ அப்பெண் இங்கிருந்து 150 கிலோ மீற்றர் தொலைவில் வேறிடமொன்றில் குடியேறி வாழத் தொடங்கிவிட்டார். அவளின் தாய் தகப்பனை நினைக்கவே எங்களுக்கு வேதனையாக இருக்கு...." பெருமூச்சை விட்டவாறு அவ்விடத்தைவிட்டு அகன்றார்....
ஒன்றுமே பேசாதவனாக அந்த இருக்கையில் உறைந்தவனாகினேன்.
0000000000
பல்வேறு நினைவுகளுடன் நான் சங்கமிக்கிறேன்.

0-   புலம்பெயர்வு வாழ்வின் நீட்சியில், எம்மோடு வளரத் தலைப்பட்ட ஆனாலும்; புலம்பெயர் நாட்டுச் சூழலுடன் பின்னிய எமது வாரிசுகளின் வளர்ச்சியுடன் நாமும் இயைந்தும் உரசியவாறும் அசைவுற்றுக் கொண்டிருக்கிறோம். இது புத்தம் புதியதோர் அனுபவங்களாகி பதிவுறுகின்றன. இங்கு பெரும்பான்மையான பெற்றோர் தமது பதிம வயதின் கடைசியிலிருந்து வாலிபத்தைத் தொடும் பிள்ளைகளை 'குமர்ப் பொட்டைகளாகவும்" 'குமர்ப் பொடியங்களாகவும்" குறிப்பிட்டு அதீத அவதானிப்புடனேயே வளர்க்கின்றனர்.
இதனால் வெளியிலே சொல்ல முடியாத மிகை மன அழுத்தத்துடனேயே நாளாந்த வாழ்வைக் கழிக்கின்றனர். சூழலுடன் முழுமையாக இயைய முடியாத முதற்தலைமுறையினருக்கு தாம் வாழ்ந்த தத்தமது கிராமத்திலான சிறு பிராய நினைவோடையே முன்னுதாரணமாகி விரிந்தாலும் குடியேறிய பென்னம்பெரு நகர வாழ்வோட்டம் புரட்டிப் போட்டவாறே அசைகிறது.
நமது பிறந்த ஊர்க் கிராமங்களில் ஆண் பிள்ளைகள் என்றால் 'சேறு கண்ட இடத்தில் மிதித்து தண்ணி கண்ட இடத்தில் கழுவிச் செல்வதாக" அலட்சியத்துடன் வளர்க்கபட்டுவது சாதாரணம். ஆனால் புலம்பெயர்வு வாழ்வில் இவர்களை 'குமர்ப் பொடியங்களாக" பொத்தி கவனமாக வளர்க்க பகீரதப் பிரயத்தனம் செய்கிறார்கள்.
2013 மே நடுப்பகுதியில் பாரீசில் ஒரேபாலார் இணைவுச் சட்டமாக்கலுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மாபெரும் ஆர்பாட்டப் பேரணியின் ஒரு காட்சிப் பதிவு


0-   எதிர்கால மகப்பேறுக்கான வாடகைத் தாய் - ஈன்றாள் (surrogate) ஒருத்தியுடன் ஒப்பந்தம் செய்து அவளிடத்தில் முளையை விருத்திக்கான பொறுப்பினை   ஒப்படைக்கபடும். இத்தகைய தொண்டாற்றுவதற்காகவே 'ஈண் இல்லம்' மாதச் சம்பளத்தில் ஈன்றாள் பெண்களை வேலைக்கு அமர்த்தியிருப்பார்கள். வைத்தியர்களின் கண்காணிப்பில் அவர்களது ஒவ்வொரு செயல்களும் நடைபெறும். என்று குறிபிடுகிறார் கல்வியாளர் பொ. கனகசபாபதி (நூல் : திறவு கோல்).

0-   சென்ற நு}ற்றாண்டில் வெளிவந்திருந்த சிலுவையில் தொங்கும் சாத்தான்(கூகி வா தியாங்கோ - ஆபிரிக்க நாவல். வெளியீடு: தாமரைச்செல்வி பதிப்பகம்) கூறும் தகவல்கள்  இன்று நாம் காணும் உலகில் பொருந்திப்போகின்றன. ஆபிரிக்க கென்யக் கலக எழுத்தாளரின் இந்நாவலை நாம் அனைவரும் வாசிக்க வேண்டும். புரிதல்கள்தானே மனித மனவளமூட்டலைக் கொடுத்து மானுட நேசிப்பை விரிவாக்குகிறது.

தொடர்பார்ன வேறொரு பதிவினுள் நுழைய : 

சரம் - 8 "வாடகை அம்மா"


-முகிலன்
பாரீசு 22.07.2013

2 comments:

 1. உங்களின் கருத்தோடு முற்றாக முரண்படுகின்றேன். குழந்தைகளை உண்டாக்கவும், வாடகைத் தாய் வியாபாரத்துக்குமாகத் தான் சமபாலின மணமுறை அங்கீகரிப்பதாக கூறுவது உண்மையில் முட்டாள் தனமான கருத்தியலே. அத்தோடு தமிழ் பெண் ஒருத்தி சமபாலின மணம் புரிந்தமைக்கு புலத்தின் அதீத சுதந்திரமும் என்ற தொனியும் தவறானது. சமபாலினமோ, மூன்றாம் பாலினமோ தேர்தெடுப்புகளால் உண்டாவதல்ல, இயற்கையால் நிகழ்வது. அதீத சுதந்திரம் இல்லாத தேசங்களிலும் சமபாலினமும், மூன்றாம் பாலினங்களும் உள்ளன. அடுத்து வாடகைத்தாய் வியாபார மயமாதல் உண்மை என்ற போதும், அம் முறைமைகளின் முதன்மை வாடிக்கையாளர்கள் ஆண்-பெண் எதிர்பாலின தம்பதியினரே, அதுவும் இந்தியா போன்ற வளரும் நாடுகளிலேயே வாடகைத் தாய்மார்கள் அமர்த்தப்படுகின்றனர். ஆக, அதன் பொருளாதார நலன்கள் மேற்குக்கல்ல மூன்றாம் நாடுகளுக்கே செல்கின்றன.. ஆக, பொருளாதார நலன் கருதி சம பாலின மணமுறை ஏற்கப்படுகின்றன என்ற வாதம் சரியாகப் படவில்லை, சமத்துவ நடைமுறை ஆக்கல், மற்றும் அனைத்து மக்களையும் சமூகத்தில் உள்வாங்கப் பட வேண்டும் என்பதால் முன்னேறிய சமூகங்கள் சம பாலின மணமுறையை ஆதரிக்கின்றன, அங்கீகரிக்கின்றன என எனக்குப் படுகின்றன.

  ReplyDelete
  Replies
  1. பொறுப்புடன் தங்களது கருத்துகளை பதிவிட்டமைக்கு நன்றிகள். வெளிப்படுத்தப்படும் கருத்துகள் என்றுமே அலசி ஆராயப்படும்போதுதான் அறிவுலகம் விரிவடைகிறது. காலம் நிறையவே உண்மைகளை வெளிக் கொண்டுவந்த வண்ணமே பயணிக்கும்.
   மேலே குஞ்சரமாகப் பதிவிடப்படுபவை இக்காலகட்டத்தில் மனித எண்ணங்களாக வலம்வரும் கருத்துகளின் பிரதிபலிப்புகள்தான். ஆய்வுக் கட்டுரைகளல்ல.

   Delete