Wednesday, 24 July 2013

மத நம்பிக்கை அற்றவர்கள் வில்லங்கமானவர்கள்!


குஞ்சரம் 6
மத நம்பிக்கை அற்றவர்கள் வில்லங்கமானவர்கள்!
வேகமாக கரையும் கால ஓட்டத்தில் சங்கமமாகிவிட்ட வாழ்வில் அவ்வப்போதுதான் நினைவில் சிலர் வருவார்கள்.  உடனே அவர்களுடன் தொடர்பாடல் கொள்ள மனத்து}ண்டலாகும். இத்தகைய தருணங்களில் கைகொடுப்பது தொலைபேசிதான். இதிலும் எங்கிருந்தாலும் தொடர்பாடல் இணைப்பைக் கொடுப்பது இந்த 'செல்பேசி"தான். இப்படியான நினைவுத் தொடர்பாடலில் தனது காத்திரமான பங்கை அளிப்பதனு}டாக 'செல்லிட பேசி" 'கைபேசி" 'கைத் தொலைபேசி" 'செல்பேசி" எனவாகப் பல பெயர்களுடன் மனிதர்களின் நெஞ்சோடு இணையும் விஞ்ஞானக் கருவியாகிவிட்டது.
ஆதிகால மனித உயிரி காட்டிலிருந்து வீட்டுக்கு வரும்போது உடன் வந்த மிருகம் நாய். இன்று வரையில் இந்த மனிதக் கூட்டத்துடன் விசுவாசமானதாகச்  சங்கமித்த  விலங்காகிவிட்டது. தற்போதைய தொடர்பூடக விஞ்ஞான யுகத்தில் விஞ்ஞானக் காட்டியாக மனிதஅவர்களது அவயங்களுடன் இணைக்கப்பட்தொரு கருவியாகிவிட்டது செல்பேசி. குரல் வழியான உணர்வுப் பகிர்வுடன் இணைந்து புதிய பல பரிமாணங்களுடன் மனிதக் கைகளுக்குள்ளேயே உலகைச் சுருக்கிக் கொடுக்கும்  விசுவாசமான கருவியாக மனித வாழ்வோட்டத்துடன்  பின்னிப் பிணைந்து விட்டது.
இப்படித்தான் ஒருநாள் எனது ஊர் நண்பன் நினைவுத் திரையில் தோன்ற எனது கைபேசி அவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தது. வழமையான  குசல விசாரிப்புகளின் பின் உரையாடல் 'தமிழர்களின் தனித்துவ ஆடல் கலைகள்' தொடர்பான உரையாடலுக்குச் சென்றது. இந்த நண்பர் எமது பாரம்பரியமிக்க 'கூத்து இசைக் கலைஞன்'. புலம்பெயர்வு வாழ்வில் எமது அடையாளக் கலைகள் தொடர்பான கரிசனைகளில் அதுவும் அடுத்த தலைமுறையினரிடம் கையளிக்கும் சமூகப் பொறுப்புணர்வில் நாம் என்றென்றும் இணைந்தவர்கள். இரு வாரங்களுக்கு முந்திய ஞாயிறன்று இவர்களது நிகழ்வரங்கமொன்று நிகழ்த்தப் பட்டிருந்தது. என்னால் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. இதற்கான செல்லக் கோபத்தை உரிமையுடன் கொப்பளித்தார் நண்பன்.
'எனது நண்பர் ஒருவரின் மூத்த மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. காதல் திருமணம். இருபெற்றோரும் இணைந்து நிகழ்வரங்கை வித்தியாசமானதாக நடாத்த இருக்கிறார்கள். இதற்காக என்னையும் அழைத்திருந்தார்கள். நான் அங்கு சென்றுவிட்டேன். இதனால் உங்களது நிகழ்ச்சியைப் பார்க்க வரமுடியவில்லை.' என எனது இயலாமையை  நிதானத்துடன்  தெரிவித்தேன்.
'இதென்ன.... பெரிய விடையம்!.... சம்பந்தம் கலக்கிறது என்று சொல்லலாம்தானே!.... அங்கே பலகாரத்தைச் சாப்பிட்டுப் போட்டு எங்கள் நிகழ்ச்சிக்கு வந்திருக்கலாம்தானே!!' வார்த்தைகளின் ஒலி அசைவுகளுடன் கோப அதிர்வும் இணைந்தே செவிப்பறையைத் தாக்கியது.
'அது இல்லை... சிறி! பிள்ளைகள் காதலால் இணைகிறார்கள். பெற்றோர்களில் ஒரு குடும்பம் முழுமையான பக்தி சிரத்தையானது. மற்றைய குடும்பம் கடவுள் மறுப்புடையது.'
'என்னது!! அய்யையே... கடவுள் மறுப்பா?...... இது வில்லங்கமானது அண்ணே!' என்றார் பழைய இயல்பான பாவத்துடன்.
நான் விக்கித்துப் போனவனானேன்.  தொலைபேசித் தொடர்பாடலாகையால் என் நிலை அறியாமல் தொடர்கிறார்....
'அண்ணே! மனுசனாகப்பட்டவன் கடவுளை நம்ப வேண்டும். அது எந்த மதமாக  இருந்தாலும் பரவாயில்லை. அவர்கள் இந்துவாகவோ கத்தோலிக்கர்களாகவோ இசுலாமியர்களாகவோ பௌத்தர்களாகவோ இன்னும் அல்லலோயாவாகவோ இருந்தாலும் பரவாயில்லை என்பேன்! இப்படியில்லாமல் கடவுள் மறுப்பவராக இருந்தால் வில்லங்கம்தான். இவர்களுடன் கதைக்க இயலாது. என்னென்னவோ எல்லாம் நாக்கூசலில்லாமல் கதைப்பார்கள். இவர்களுடன் சம்பந்தம் கலக்கிறதை நினைக்கவே நடுக்கமாக இருக்கு! இப்ப எல்லாம் விளங்கிவிட்டது. அண்ணே! அங்கே நீ இருந்ததுதான் சரி.' அவரது குரலில் தெளிவு பிரகாசமாகத் தொனித்தது.  நான் பேசும் நிலையில் இருக்கவில்லை.
'எல்லாம் நல்லபடியாக ஒப்புக்கொள்ளப்பட்டாயிற்றா?' அக்றையுடன் விசாரித்தார்.
'ஓம்! ஓமோம் இரு பகுதியினரும் ஏற்புடையதாக பொதுவானதொரு நிகழ்வைச் செய்வதாக முடிவெடுத்துவிட்டார்கள்' என்று வார்த்தைகளை அளவெடுத்துக் கதைத்தேன்.
'அது போதும் அண்ணே!! எல்லாம் நல்லபடியாக நடக்கும்!' அவர் எனக்க ஆறுதலளிப்பதாக இருந்தது அவரது கூற்று. இந்த உரையாடலை அவருடன் நீட்ட என் மனம் இடம்கொடுக்காது விலகிச் சென்று கொண்டிருந்தது.
'வேறென்ன சிறி! இன்னுமொரு முறை ஆறுதலாகக் கதைப்போம்!'
'ஓம்! மீண்டும் சந்திப்போம்!!'
'நன்றி சிறி! சந்திப்போம்!' தொலைபேசி இணைப்பு துண்டிப்பாகிறது.
-----
இரவு படுக்கையிலும் இந்தக் கூற்று என்னை அரித்துக் கொண்டே இருந்தது.


யார் வில்லங்கமானவர்கள்?.....  நாத்திகர்கள் தொடர்பாக சாதாரண மத ஈடுபாட்டாளர்கள் கொண்டிருக்கும் பயப் பீதியான எண்ணம் எப்படியாக நிலைபெற்றது? ஏன்?..... நாத்திகர்களும் ஆத்திகர்களும் - நண்பராக இருக் முடியாதா?... கணவன் மனைவியாக வாழ முடியாதா?.. சக தொழிலாளியாக ஒரே கூடத்தில் பணியாற்ற முடியாதா?.... வகுப்பறையில் பாடமெடுக்க முடியாதா?..... பக்கத்து வீட்டில் வாழ முடியாதா?.... இன்னுமேன் ஒரே பேரூந்தில் பயணிக்க முடியாதா?.....
அப்ப எப்படி வில்லங்கம் வந்திருக்க முடியும்?.... என்னையும் அறியாமல் புன்முறுவலிடுகிறேன்.


- முகிலன்
பாரீசு 24.07.2013

தொடர்பான இன்னுமொரு பதிவு நுழைக:

சரம் - 9 அரோகரா! அரோ....கரா....!!

3 comments:

  1. நாத்திகர்கள் - ஆத்திகர்கள் கலந்தே காலம் காலமாய் வாழ்ந்து வந்துள்ளனர், என்ன கடந்த ஐயாயிரம் ஆண்டு கால மனித நாகரிக வரலாற்றில் பெரும்பங்கான அதிகாரத்தை ஆத்திகம் கொண்டிருந்தமையால் நாத்திகம் முழுமையாய் வெளிப்படவில்லை. நம் ஒவ்வொரு குடும்பத்திலும் ஓர் ஆத்திகன் நாத்திகன் இருக்கின்றான். பல சமயங்களில் நாத்திகர் தம்மை வெளிக்காட்டுவதில்லை. ஆத்திக மனைவிமாருக்கு நாத்திக கணவன்மார் உண்டு. நேரில் கண்டதும் உண்டு. இரு மதத்தார் இணைந்து வாழ்தலை விட ஆத்திக - நாத்திகர் எளிதாய் இணைந்து வாழவும் இயலும். பள்ளி, பணியிடங்கள் என இவ் இணைவுகள் பல இடங்களில் உண்டு. விட்டுக்கொடுப்புக்கள், கட்டாயப்படுத்தல்கள் இல்லாது இருக்கும் பட்சத்தில் இவை ஒரு பிரச்சனையே இல்லை.

    ReplyDelete
  2. துண்டு துண்டங்களாகிச் சிதறிய வாழவைத் தொடரும் நம்மவர்களுக்கு இணையவலைப் பிணைப்பு நமக்கு விருப்பமான ஈடுபாடான தொடர்பைப் பேணி இணைய வழிக் கைக்குலுக்கி மன உற்சாகத்தையும் வரலாற்றைப் பதிவுற வைத்து எதிர்கால ஆவணப்படுத்தலையும் செய்கிறது. கருத்துகள் எழுதுபவர்களுக்கும் எழுத நினைப்பவர்களுக்கும் பதிவின் தூணடலைப் பெற்றவர்களுக்கும் எனது நன்றிகள்!!
    முன்பு இதே இணைய வலையில் இடப்பட்ட வேறொரு பதிவையும் வாசிக்கலாம் அதனுள் நுழைய : சரம் - 9 அரோகரா! அரோ....கரா....!!

    ReplyDelete