Tuesday 2 July 2013

ஈழக் கலைஞர் ஏ. ரகுநாதன் 75

ஈழக் கலைஞர் ஏ. ரகுநாதன் 75 

'வாழ்க! வளமுடன்!!'

2000-இல் பாரீஸில் வெளிவந்த 'பேரன் பேத்தி' குறும்படம் திரையிருட்டில் காண்பிக்கப்படும் போது கடைசிக் காட்சியில் பெரியவர் தாகத்துடன் தண்ணீருக்காக அவதிப்படுகிறார்... அங்கிருந்த முன் வரிசையிலிருந்த சிறு குழந்தையொன்று "அம்மா! தாத்தாவுக்கு தண்ணி கொடு!!" என்று வீறிட்டதான நிகழ்வை நேரில் காணுற்ற எவராலும் மறக்க முடியாது.  பரா மொழி தெரியாத பெயரர்களின் தவிப்பை இந்தச் சட்டகத்தினுள் அடக்கியிருந்தார். இதற்கு முன்பு வெளிவந்திருந்த 'அழியாத கவிதை' குறும்படத்தில் காரின் பின் டிக்கிக்குள் இருந்து பெரியவர் வெளிப்படும் போதில் உஸ்...... எனப் போடாதவர்கள் மிகக்குறைவு. புகலிடப் பெயர்வு வாழ்வின் தாக்கத்தை அஜீவன் இந்தச் சட்டகத்தில் அடக்கியிருந்தார்.

இந்தப் பெரியவர்தான் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும், தன்னை எப்போதும் பொடியனாகவே பிரதிபலிக்கும் ஈழக் கலையுலக இளைஞன் ரகுநாதன்.  கடந்து வந்துள்ள இந்த 75ற்குள் 57 வருட தொடர் கலையுலகப் பயணம், மூன்று நூற்றாண்டுக் கலையுலக வித்தகர்களுடனான அனுபவ வாழ்வு, இலங்கையில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கும் சிங்கள தமிழ்க் கலைஞர்களுடனான கலைப்பயணம், ஈழத்துக் கலைக் கனவு மேம்பாட்டுக்காக இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் நம்பிக்கையுடன் பயணித்துக் கண்ட பட்டறிவு, ஈழத்தமிழன் சிதறுண்டவனாகி பூமிப் பந்தில் விசிறப்பட்டிருக்கும் புலம் பெயர்வு வாழ்வில் தானுமொருவனாகித் தொடரும் அடுத்த பரிமாணத்திற்கான கலைப் பயணம் என இவரது பயணத்தைக் குறுக்கு வெட்டில் பதிவாக்கினால் ஈழத்துவரலாற்றின் இன்னுமொரு முக்கியமான ஆவணம் கிடைக்கும்.

ஆடிய கால்கள் ஆடிக் கொண்டுதான் இருக்கும், உழைத்த கைகள் உழைத்துக் கொண்டே இருக்கும் என்பார்கள் அதை இவருடன் நெருங்கியவர்கள் அனைவரும் உணர்ந்திருப்பர். மேடை நாடகத்துடன் அறிமுகமாகி வானொலி, திரை, குறுந்திரை எனவும் புதியதாகப் பிரசவிக்கும் கலை வெளிப்பாடுத் தளங்களிலும் இவரது பயணம் தொடர்வது ஆச்சரியமானதொன்று. கலைப்பயணத்தில் எல்லாமாகி இருந்தாலும் ஈழத்துக் கூத்து தொடர்பாக இவருக்கிருக்கும் நேசம் அலாதியானது. தருணம் கிடைக்கும்போதெல்லாம் தன்னை ஒரு கூத்தராக வெளிப்படுத்த முன்னிற்பார். இதனால்தான் இவர் தனக்கென்று நிறுவியுள்ள அமைப்பிற்கு "தமிழாள் கூத்தவை" எனப் பெயரிட்டுள்ளார் போலும்.  இந்தப் பெயரிடல் இவரது ஆழ்மனத் தெரிவு. ஆக ஆழ் மனத்தில் ஈழத்துக்கான கலை பதிவுற்றிருக்கிறது.
ஈழத்துத் தொன்மக் கலை கூத்து, இதனுள்ளிற்தான் எமக்கானதான அடையளக் கலைப் பொக்கிசங்கள் புதைந்து கிடக்கின்றன. அரங்கியல் நிகழ்த்துக் கலையின் வலாற்றில் சடங்குகள் முக்கிய தொடக்கப் புள்ளி என வரலாற்றியலில் பார்க்கிறோம். மனிதனின் மனம் சார்ந்த விரிவுத்தளத்தில் உதயமாவதும் மற்றைய மனிதர்களின் மனதினுள் ஊடுருவி, ஆர்கசித்து மனிதரை மானிடராக பரிணமிக்கவைப்பது கலை இலக்கியத்தின் முக்கியமான பணி. மிக வேகமாக விரட்டப்படும் புதிய உலகமயமாகச் சூழலிலும் பரவலான மானிட நேசிப்புக்குரியதான இடத்தில் கலையுலகு புதிய விஞ்ஞான உத்திகளினூடாகப் பயணித்த வண்ணம் இன்றும் இருக்கிறது. சமூக இயற்கை இயங்கியல் போக்கில் தன்னை இயைந்து தான் நேசிக்கும் கலை வெளிப்பாடுகளை காலத்துக்கேற்ற புதிய சூழலிலும் தகவமைக்கும் இவரால் பலர் கவரப்பட்டதில் வியப்பொன்றும் இல்லை. இதில் நானும் ஒருவன். இவர் எங்களுக்கெல்லாம் மானுட நேசிப்புடனான ஒரு தந்தை. ஈழத்து வரலாற்றில், வாழும் போதே வாழ்த்தும் அரிய நிகழ்வுகளில் ஒன்றாகப் பதிவுறும் இந்நிகழ்வில் பெரும்பாலான ஆர்வலர்கள் பங்கேற்பதானது ஒரு சிறந்த உதாரணமாகும்.

தொண்ணூறுகளின் கடைசியில், புதிய சந்ததியினராக தடமிடப்போகும் புலம் பெயர் ஈழத்தமிழர் தொடர்பான சமூக அக்கறையுடனான சந்திப்புகளில் கலைத்தளத்தின் அவசியம் எங்களால் நன்கு உணரப்பட்டது. அப்போது கலை- இலக்கிய படைப்பாளர் தனித்தனிக் குழுமங்களாகவும் பெரும்பான்மை மக்கள் வீடியோ, சஞ்சிகைகளை இலகுவாகவும் மலினமாகவும் பெறும் கலாச்சார விற்பனை நிலையங்களின் நுகர்வோர்களாகவும் சமூகச் சக்கரம் சுழன்று கொண்டிருந்தது.

இவ்வேளையில் நம்மவர் கதை சொல்லிகளாகி நம்பிக்கையூட்டும் குறுந்திரைப் படங்களை தந்திருந்தார்கள். இதற்கான போட்டிகளும் நடந்து உற்சாகமளிப்பதாக இருந்தது. இந்தக் குறுந்திரை முயற்சி எம்மைப் போன்ற பலரை ஈர்த்தது. இனிவரும் காலத்தில் பெரிய அளவில் நம்மவர் படைப்புகள் வெளிவருவதற்கான நிறைவான சாத்தியப் பாடுகளை இதில் எம்மால் இனங்காண முடிந்தது. எதிர்காலச் சந்ததியினரின் சமூக அக்கறையின் ஈர்ப்பால் இவ்வகைப் படைப்புகள் பரவலான மக்கள் தளத்திற்குப் போக வேண்டியதன் அவசியத்தை முன்னிட்டு நாம் கூறிய ஆலோசனைகள் கேட்பாரற்று காற்றில் சங்கமித்து கரைந்து போயின. நம்;மவர்களால் நிகழத்தப்படும் எழுத்து - காட்சி ஊடகங்கள் பெரும்பான்மை மக்களின் இயந்திரத்தன இரசனைக்குத் தீனி போடும் ஆர்வத்துடனேயே செற்பட்டன.

சமூக அக்கறையின் காரணமாக தொலைவில் தெரியும் பிரகாசத்தை மக்களிடம் கொண்டு சென்று மக்களின் இரசனையையும் படைப்பாளரது எண்ணங்களையும் சங்கமிக்கும் ஒரு தளம் காலத்தின் அவசியமானது. 'நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம்' என்ற விருது வாக்கியத்துடன் சலனம்  பிறந்தது. எதிர்கால ஈழத்தமிழரின் வாழ்வுப் பதிவுகளுக்காக அப்பால் தமிழ் இணையமும், கலை வெளிப்பாட்டுத்தளமாக சலனமும் சமூக அக்கறைத் தொண்டு நிறுவனங்களாகின. இதனூடான பயணத்தில் கலையுலக நட்புடன் ரகுநான் ஐயா எம்முடன் இணைகிறார். 'வாழ்க வளமுடன்' என்ற அழைப்புக்குரலுடன் தொலைபேசி முனையில் விளிக்கும் தன் அணுகு முறையை இன்று எம்போன்ற பலரும் பரவலாக மேற்கோள்ளும் பரிவுத் தெறிப்புக்குச் சொந்தக்காரர் இவர். ஆனால் இவர் தொடர்பான அறிமுகம் எனக்குக் கிடைத்தது சுவையான வேறோரு கதை.

1970 கள், ஈழத்தின் வடபகுதியில் இளையோர் மத்தில் சுதேசியம் தொடர்பான சுயதேடலுக்கான விழிப்பு பரவலாக வெளிப்பட்ட காலம். யாழ் நகரத்தைக் கோலாலகலமாக்கிய உலகத் தமிழாராட்சி மாநாடு கிணற்றுத் தவளையாக இருந்த இளையோரை வெளியுலகில் கொண்டுவந்து விட்டிருந்தது. 'வெளிக்கிடடி விசுவமடு' நாடகம் மற்றும் 'இலண்டனில மாப்பிளையாம் பொண்ணு கேக்கிறாங்க.... ஐயையோ வெட்கக் கேடு...' பொப்பிசைப்பாடல் மற்றும் வாடைக்காற்று திரைப்படம் என மக்கள் மயமான ஈழத்தமிழர் படைப்புகள் இளையோரின் பெரும் கவனத்தைக் குவித்திருந்தன. இக்காலகட்டத்தில் உருவாகிய யாழ் பல்கலைக்கழகத்தினூடாக 'கண்ணாடி வார்ப்புகள்' போன்ற புதிய அரங்க நிகழ்வுகளும் வெளிப்படத் தொடங்கின. இலங்கையில் இதுவரை அறுபதுகளில் சமுதாயம்(1962) முதலாக 1993இல் வெளிவந்த சர்மிளாவின் 'இதயராகம்' வரை சுமார் 28 திரைப்படங்கள் பதிவு பெற்றுள்ளன. இதில் 1970களில் மட்டும் 16 திரைப்படங்கள் வெளிவந்துள்ளமையை அலட்சியப்படுத்திவிட முடியாது. இதிலும் யாழ் ராணித் திரையரங்கில் 'வாடைக்காற்று' திரையிட்ட அதே வேளையில் யாழ் லிடோ திரையரங்கில் 'தென்றலும் புயலும்' ஓடியதை கவனமெடுக்கத்தான்
வேண்டும்.

இந்தியத் திரைப்படங்கள் மேளதாள வரவேற்புடன் கோலாலகலமாகத் திரையிடப்பட்ட காலம் அது. திரைப்பட இரசிகர் மன்றங்களின் அட்டகாசங்களும், சீட்டுப் பெறக் காத்திருக்கும் கூட்டத்தின் மேலாக தாவிச் செல்லும் அடாவடிக் குழுவினரின் செயல்களையும் இலகுவில் மறக்க முடியுமா? புதிய படங்கள் 8 காட்சிகளாகவும் 9 காட்சிகளாகவும் போட்டா போட்டியாக அப்போது திரையிடப்படும். சீட்டுகளை திரையரங்குகளில் பெறமுடியாது தவித்த வேளையில் பிளாக்கில் யாழ் கடைகளில் சீட்டுப் பெற்று படம் பார்த்தவர்களில் நானும் ஒருவன். அப்போது நான் சிவாஜி பித்தன். சிவாஜியின் திரைப்படத்தை முதல் நாளே பார்த்துவிடும் ரசிகர்களில் ஒருவன். இதனால் நட்பு வட்டத்தில் பெரும் வாதப் பிரதிவாதங்கள் நடப்பது சகசம். இலங்கையில் உருவாகும் தமிழ்ப்படங்கள் தொடர்பாக பரிசீலனைக் கவனத்தைத்தானும் இந்த சிவாஜிப் பித்து விடவில்லை. கௌரவம் வெளிவந்திருந்த போது என் ஊர் நண்பன் குவின்டஸ், சிவாஜியின் 'ஓவர் அக்சன்' பற்றி கிண்டலாக எடுத்துரைப்பான். இதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாதிருந்தது. பொறாமையால்தான் இப்படியெல்லாம் கதைப்பதாக எண்ணிச் செல்வேன். இதன்பின் வெளிவந்திருந்த பைலட் பிரேம்நாத் தொடக்கம் பட்டாக் கத்தி பைரவன் வரையிலான சிவாஜி படங்களை எனது மூளை அவனது விமர்சனப் பார்வையடனனேயே பார்க்க வைத்தது. எனது சினிமா இரசனை மேம்பாடடைந்து. சிவாஜி பித்தை வெளியேற்றி எனது சினிமா இரசனை அறிவுக்கு வழிகாட்டிய குவின்டஸை பின்னர் வாஞ்சையுடன் கைகுலுக்கினேன்.

இக்காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் புதியதொரு உலகு தெரிய ஆரம்பித்திருந்தது. அன்னக்கிளியால் தமிழ்த் திரை இசைஞனாக இளையராசாவும், 16 வயதினிலே பாராதிராசாவும், முள்ளும் மலரும் மகேந்திரனும் எனவாக சினிமா தொடர்பான பன்முகக் கலைநுணுக்குகள் புலப்பட ஆரம்பித்தன. நிறையவே படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். இதில் நெஞ்சம் மறப்பதில்லை 'கல்யாண்குமார்' என்ற இயல்பான நடிகர் பற்றி இந்தச் சினிமா இதழ்கள் பெரிதாக எழுதாத வெறுமை தெரியவந்தது.
கொழும்பில் பணியாற்றிய எனது அண்ணன் யாழ் வரும்போது பொன்மணி மற்றும் குத்துவிளக்கு படம் பற்றி நிறையவே சொல்வான். இவை எமது தேசியப் படங்கள் இம்முயற்சியை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்வான். அப்போது இலங்கையிலும் சிலபேர் தாங்களும் கதாநாயகர்களாக நடமாடும் கனவுகளுடன் படாதபாடுபடுகிறார்கள் எனத்தான் நினைப்பேன்.

யாழ் பல்கலையில் கற்கும் காலத்தில் புதிய நட்பு வட்டமொன்று உருவாகி இருந்தது. இந்த நட்புவட்டம் ஒன்றாகவே படம் பார்த்து விமர்சன இரசனை செய்யும் பக்குவத்துடன் இருந்தது. படம் முடிய றிக்கோ ஓட்டலில் றோல் சாப்பிட்டவாறு நிறையவே விலாவாரியாக அலசலில் ஈடுபடவோம். இம்முறையால் கவரப்பட்டதாலோ என்னவோ எம்முடன் படிக்கும் ரகுநாதன் என்ற சகமாணவன் அப்போது வெளிவந்த 'தெய்வந்தந்த வீடு' பற்றிச் சொல்லி எங்களையும் அழைத்தான். சாந்தி தியேட்டரில் பார்த்த அந்தப்படம்தான் இந்த ஏ.ரகுநாதனை எனக்கு அறிமுகம் செய்தது.  தலைமுறை கடக்கும் நீண்ட கதை. பிரமாண்டமாக எடுத்திருந்தனர். சிவாஜியின் தில்லானா மோகனாம்பாளின் பாதிப்பின் பிரதியாக வெளிப்பட்ட இந்தப் படம் எம்மை நெளியத்தான் வைத்தது. அப்போது எம்மை அழைத்த நண்பனிடம் "டேய்!  உன்னடைய பெருடையவர்தான் இப்படத்தின் நாயகன் என்றதால்தானே எங்களை இப்படத்துக்கு அழைத்தாய்!" என்றபோது அவனால் ஏதுமே சொல்ல முடியவில்லை.
இப்படத்தை ஏன்தான்தான் இவ்வளவு சிரமப்பட்டு எடுத்தார்கள்? என்ற கேள்வி என்னை விடாது அரித்துக் கொண்டே இருந்தது. பின்னொரு காலத்தில் ஈழத்தமிழனாலும் முடியும் என்றதான தன்முனைப்பின் உந்துதலால் கலைத்தளத்தில் வெளிப்பட்ட ஒரு கீற்றுதான் இது என்பது தெரிந்தது. எமக்கானதோர் கலை இருப்புக்காக முனைவோராகக் காணப்பட்ட ரகுநாதன் போன்றோர் வாஞ்சைக்குரியராகினர்.

இவருடன் புகலிட வாழ்வில் நெருங்கிப் பழகியபோது, பதின்ம வயதில் தேசங்கடந்த வாழ்வின் இருப்பாலும், மதம் சார்ந்த குறுட்டு மூடநம்பிக்கையில் தான் பெற்றிருந்த அனுபவத்தால் பெரியாரியத்தை தழுவியதையும் அறியமுடிந்தது. இயல்பாக முகிழ்ந்திருந்த இக்கொள்கையை இன்று வரை கடைப்பிடிக்கும் இரவது ஆளுமை என்னைப் பெரிதும் கவர்ந்தது.

பாரீசில் 90களின் கடைசியில் ரகுநாதன் ஐயாவை ஒரு குறும்படப் போட்டியின் நடுவர்களில் ஒருவராகச் சந்தித்து கைகுலுக்கியபோது புளங்காகிதமடைந்தவனானேன். நீண்ட வெண்முடியுடன் நிமிர்ந்த திடகாத்திரமான உருவத்துடன் குழந்தைபோல் பழகும் இவரது சுபாவம் தனிக் கவனத்தைக் கொடுத்தது. பின்னர் வில்தானூஸ் கிராமத்தில் சலனம் நடாத்திய குறும்பட மக்களரங்கில் இவரும், புதிய நடிகனாக அறிமுகமாகிய மோகனும் கலந்து மக்கள் இரசனையுடன் சங்கமித்தனர். இந்நிகழ்வில் நடிகன் தொடர்பாக இவர்கூறிய எண்ணம், "நாங்கள் நடிகர்கள்தான் ஆனால் உங்களைப் போன்ற சாதாரண மக்களில் நாங்களும் ஒருவர் என்பதை உற்றுக் கவனிக்க மறக்காதீர்கள்.  நாங்கள் மின்னொளி பீச்சும் மேடைகளிலும், கமெராக்களுக்கும் முன் மட்டும்தான் நடிப்பவர்கள்." என்றதானது என்னைப் பெரிதும் கவர்ந்தது. அதுமட்டுமில்லாது அப்போதுதான் வெளிவந்திருந்த 'விலாசம்'  படத்தின் நாயகன் மோகனுடன் சினேக பாவத்துடன் பழகிய மானிட நேசம் கவனங்கொள்ள வைத்தது.

பின்னர் ஈழவர் திரைப்பட மன்றம் வெளியிட்ட குறுப்பட ஒளித்தட்டு நிகழ்வில் புதியதாக கலையுலகில் பிரகாசத்த இளையோர் வதனன், குணா போன்றோரை கௌரவித்து ஊக்குவித்த செயல் மிகவும் பாராட்டப்பட வேண்டிய உதாரண நிகழ்வாகும். தத்தமது படைப்புகளே ஆகச் சிறந்தது என நினைத்து சிறு சிறு குளாமாகச் சுழலும் கலை இலக்கிய வட்டங்கள் ஒருத்துவமாகும் சங்கமிப்புகளாக இந்நிகழ்வுகள் அமைந்திருந்தன. 'கலைஞர்களால் என்னத்தைச் செய்ய முடியும்?" என்ற இளக்காரத் தொனியுடன் காணப்பட்ட சமூகத் தளத்தில், சமூக ஆர்வலராகக் கலந்துகொண்ட எமக்கு நம்பிக்கையூட்டிய உதாரண மானிடர்களாக இக் கலைஞர்கள்தான் காணப்பட்டனர். இதில் குறிப்பிடத் தகுந்தவர் ரகுநாதன் ஐயா என்பதை மகிழ்வுடன் பதிவிடுகிறேன்.

ஈழத் தமிழர் வாழ்வில், கலை இலக்கியத்தில் (பரதநாட்டியம் தவிர்த்து) ஈடுபட்டோர் பெரும் சம்பாத்தியங்களை ஈட்டியவர்களான சரித்திரம் கிடையாது. இதில் ஈடுபாடு காட்ட முனையும்போது குடும்பமும் சுற்றமும் "வேலை வெட்டியில்லாதவர்கள், லூசுகள், வெங்கிணாந்திகள், அலுக்கொசுகள், தற்புகழ் விரும்பிகள்....." போன்ற அடைமொழிகளுடன் தூர வைப்பதான வழக்கமே காணப்படும். இதனை நன்கு அறிந்திருந்த பின்பும் ஈடுபட முனைவோரை சாதாரணமானவர்களாக அலட்சியப்படுத்த முடியாது. தன்முனைப்பு கொண்ட முன்னனெடுப்பாளர்கள் பலர் இத்தகைய குளாங்களில் இருப்பதையும், இவர்களது தேவை இயல்பான சமூக அசைவியகத்திற்கு மிக அவசியமானதென்பதையும் உணர முடியும்.

முன்னைய தமிழ் திரையுலக சாம்பிராஜ்யத்தில் கோலோச்சிய எம்ஜியார் - சிவாஜி காலத்தில், வாழ்ந்த போர் வாள் என அடையாளப்படுத்தப்பட்ட எம் ஆர் ராதாவை இங்கு நினைவு கூர்கிறேன். இவரை பள்ளி ஆண்டு விழாவுக்கு அழைத்திருந்தார்கள்.

இதில் கலந்து கொள்ள மறுத்திருந்த எம் ஆர் ராதா பின்னர் அன்பால் கட்டுண்டவராகி இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், "உலகத்தில் எந்த வேலையையும் உருப்படியாகச் செய்யாது விட்டால் உடனடியாகவே வேலையிலிருந்து நீக்கி விடுவான் முதலாளி. ஆனால் நாம் செய்யும் தொழில் இதற்கு நேர் எதிரானது. பிழையாகச் செய்துவிட்டால் எமக்கு பழச்சாறு தந்து, சாமரம் வீசி, உற்சாகமாகச் பேசி மிண்டும் மீண்டும் திருப்பிச் செய்ய வைப்பார்கள். இவைதான் திரையில் பிரகாசிக்கும். இதைப் பார்த்துவிட்டு ஒழுங்காகப் பணியாற்றாத எம்மை முன்னிலைப்படுத்தி நிகழ்வுகளுக்கு அழைக்கிறார்கள்! இந்த இடத்தில் ஒரு அறிஞனையோ, ஒரு விஞ்ஞானியையோ அழைத்திருந்தால் அழைத்தவர்களுக்கும் சிறப்பு வந்திருப்பவர்களுக்கும் சிறப்பாக இருந்திருக்கும்!" எனத் திறந்த மனதுடன் கூறியதை இங்கு மீளப் பதிவிடுகிறேன்.

நுண்கலை மனிதரை உற்றுநோக்கிக் குவியப்படுத்தி மானுடராக்கும்! 
தனக்கானதொரு கலை அடையாளத்தை வெளிப்படுத்தாத சமூகம் முழுமையானதாக கவனங்கொள்ளப்படாது.
- வாழ்க! வளமுடன்!!

- நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம்!
சலனம் முகுந்தன்.
பாரீஸ் யூலை 2010
*****
இக்கட்டுரை 2010 செம்டெம்பரில் பாரீசில் நிகழ்ந்த பவள விழா நிகழ்வு மலரான 'சுட்ட பழமும்  சுடாத மண்ணும்' இல் இடம்பெற்றது.

No comments:

Post a Comment