Saturday, 27 July 2013

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே.. பதிவிலே.. 'மௌனம்' -காலாண்டு இதழ் பிரான்சு


செய்திச் சரம் 13
ஆவணமயப்படுத்தல் - அருமையானதொரு நினைவோடை அசைபோடல்!
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே.. பதிவிலே..
'மௌனம்' காலாண்டு இதழ் பிரான்சு

1993 இல் பிரான்சில் புத்தம்புதியதான புலம்பெயர்வு மொழிச் சூழலில் நான் - நாங்களாகி 'மௌனத்தைப்' பிரவித்த காலம். இவ்விதழ்கள் வெளிடப்பட்டபோது எங்களிடம் போதிய பணம் இல்லை - இப்போதைய நிலையைப்போல் கணினி வசதிகளில்லை - இருந்த கணினித் திரைகளிலேயே பக்கங்கள் ஆக்கும் மென்பொருட்கள் இல்லை - இணையத்திலான ஊடக வலைப்பின்னல் இல்லை - ஆக்கங்கள் எல்லாமே அஞ்சலில்தான் பெறமுடியும் அவற்றை தட்டச்சுப் பிரதியெடுத்து உரிய வகையில் பக்கமாக்கலை கைவினைஞராக ஒட்டி - ஒத்தி செய்து - படிதிருத்தி - முழுமைப்படுத்தி சரிபார்த்து - அச்சுவாகனமேற்றி இதழ் வெளிவருவதென்பது ஒரு பிரசவம்தான். தனியராக தொலைவில் வாழும் எம் நட்பு வட்ட நண்பர் குழாத்திடம் இதற்காக பயணித்த நேரங்கள்.... தொலைபேசி உரையாடல்கள்.... வெளிவந்த இதழ்களை அஞ்சலில் பயணிக்க வைக்கச் செய்த பகீரதப் பிரயத்தனங்கள்... எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.
புலம்பெயர்ந்த முதற் தலைமுறையினரில் பேனாவையும் வாசிப்பையும் புத்தகங்களையும் நேசித்தவர்கள் அக்காலகட்டங்களில் உலகமெங்கிலும் தமது படைப்புகளால் இத்தகைய பணியைச் செய்து கொண்டுதான் இருந்தார்கள்... இவர்களில் கொஞ்சம் வித்தியாசமானதாய் எமது பிரகடனத்தை முதல் மௌனம் தாங்கி வெளிவந்திருந்தது.

'93 இல் இணைந்த நாம் மௌனிகளாய் செய்த பிரகடனம் 'மௌனம் 1' (மே யூன் யூலை '93) இதழின் தொகுப்புத் தலையங்கமாக இடம்பெற்றது. இன்று தகுநல் வரலாற்று ஆவணமாகி தோரணத்தில் இணையவலைப் பயணமாக தன் பவனியைத் தொடங்குகிறது. இதனைத் 'தோரணம்' தனது நூறாவது பதிவேற்றமாக - இருபது வருடப் புலப்பெயர்வின் தொடக்க வெளிப்பாட்டை மீளவும் அசைபோட்டு மீட்டுப் பார்க்கிறது. மௌனிகளாக இணைந்திருந்தவர்கள் தொடரும் புலம்பெயர்வின் நீட்சியில் சிதறுண்டவர்களாகி பல்வேறு நாடுகளில் தம் வாழ்வைத் தொடர்பவர்களாகியும் விட்டனர்.


000 0
மௌனம் இதழ்1 (மே யூன் யூலை ’93)
சொட்டுச் சொட்டாய் தேங்கி மடை உடைத்த வெள்ளமென..


காதலில்தான் மௌனம் சம்மதமெனக் கொள்ளப்படுகிறது.
அங்கே மௌனம் தன் அர்த்தம் இழந்து நெகிழ்ந்து தன்னிலை மறக்கையில் சம்மதமாகிறது.
அந்த மௌனப்போதுகளில் கன்னம் மெருகேறி கண் இமைகள் தாழ்ந்து இதழ்கள் துடித்து மௌனம் மொழியாகின்றது.
இப்படிப் பொய்யாகிப் போன மௌனம் விருப்ப உணர்வாகின்றது.
காதல் அல்லாத நிகழ்வுகளில் மௌனம் இப்படியெல்லாம் விருப்ப உணர்வாவதில்லை.
கோப உறைதலாகின்றது.
மௌனம் கொள்ளாத 'சூழல் கைதியை' சமரசங்கள் ஆட்கொள்ள போர்க்குணம் தணிகின்றது. ஆதலால் மௌனம் தவிர்க்க இயலாத நிகழ்வாகின்றது.
மௌனங்கள் உறைந்து உறைந்துதான் கோபாக்கினியும் மூள்கின்றது.
சொட்டுச் சொட்டாய்த் தேங்கிய மௌனம் மடை உடைத்துப் பாய்கையில் எல்லைகள் விலங்குகள் சிதறுகின்றன. கட்டறுந்த சிறகுகள் விரிகின்றன.
நீண்ட ஆழ்ந்த மௌனங்கள் இப்படித்தான் இலக்கியங்களாகின்றன. சாட்சியங்களாகின்றன.
வராலாற்று குருடர்களைப் புறந்தள்ளி மௌனம் எக்காளமிடுகையில் உலகம் குலுங்குகின்றது. உதயங்கள் எழுகின்றன. வரலாறு மீள் படைப்பாகின்றது.
தூங்கும் எரிமலையாய் அலை எழா ஆழ்கடலாய் புயல் எழுமுன் சூனியமாய்.....
 கூட்டு மௌனங்கள்.
மௌனங்களின் சங்கமிப்பு சங்கமாய்....

000 00
மௌனிகளின் பதிவான 'மௌனம்' இரு நூறு பிரதிகள் மட்டுமே வெளியிடப்படுகின்றது.
மக்களுக்காக வெளியிடுகின்றோம் வென்றெடுக்கப் போகின்றோம் என்ற 'மிதப்பு' எதுவும் கிடையாது.
அறிமுகமான வாசக ஆர்வலர்களில் நேசமிக்கோரைச் சென்றடைதலும் இணைதலுமே இதன் திசையாகும்.
மௌனித்துள்ள கலை இலக்கியப் பதிவுகளை சமூகத் தளங்களை வரலாற்றின் பக்கங்களை வெளிக்கொணர முயல்வதே இதன் திசையாகும்.
ஆங்கிலம் படித்து அதில் சிந்தித்து ஆங்கிலேயருக்குக் கற்பிக்கும் எழுதும் கல்விப் பாரம்பரியத்தையும் கல்விமான்களையும் கொண்ட சமூகத்தில் 'இளக்காரமான தமிழ்பேசும்'  மௌனிகளின் இதழ்தான் இந்த மௌனம்.
அந்தப் பலவீனப்பட்ட சமூகத்தின் தேவையும் அவாவுமோ அளப்பெரியவை. மெளனித்துக் கிடப்பவை.
இதற்காய்ப் பூக்கும் நூறு பூக்களில் ஒரு பூவென மௌனமும் புன்னகைக்கும். தன்னை வடிவமைக்கும்.
பூக்கும் நூறும் சிவப்பு ரோஜாவாய் இருக்கும்படி விதிக்கப்படின்  விமர்சிக்கப்படின் மௌனம் வெவ்வேறு வண்ணங்களில் பூத்துக் காட்டும்!
எப்படியாயினும் கலைச் செல்வங்கள் சுமக்கும் பெட்டகமாகவும்; மேலை நாட்டு மொழிச் செழுமையைக் காவும் கடத்தியாகவும்; தமிழை - கலாச்சாரத்தைப் பரிமாறும் மையமாகவும்; நோய்வாய்ப்பட்ட சமூகத்தின் தாதியாகவும்; இனிவரும் தலைமுறையின் நம்பிக்கையாகவும் இருக்க மௌனம் உறுதி கொள்கின்றது.
மெல்லெனப் பாயும் தண்ணீர் கல்லையும் புரட்டுமென.....

000 000
அரச வன்முறையாலும் ஆயுத பாணியானோரின் வன்முறையாலும் கனவுகளுக்காய்க் கொலையுண்டு இறந்தவர்களை 'மௌனம்' நினைவில் கொள்கின்றது. தலை தாழ்த்துகின்றது.
ஆயுதக் கலாச்சாரப் பரம்பலினால் தற்காப்பு நிலைமாறி தற்கொலைக்கொப்பாய் சமூகம் தள்ளப்பட்டிருக்கின்றது.
இவ்வாயுதக் கலாச்சாரப் பரம்பலின் பொறுப்பாளிகள் நாங்களல்ல என வேறுபக்கம் கை நீட்டித் தப்பித்துக் கொள்ள முடியாது.
'மௌனிகள்' உள்ளிட்ட சம தலைமுறையினரும் அவர்தம் நாவும் பேனாவும் கூடத்தான் என்பதனை வேதனையுடன் மௌனம் ஏற்றுக் கொள்கின்றது.
வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்ததனாலேயே 'போராட்டக் குற்றவாளிகள்' அற்றவர்களாய் நாங்கள் மாறியுள்ளோம் கொல்லாமை நிலையாமை பற்றிய ஒளி கிடைத்து புனிதத்துவத்தைப் பெற்றுவிட்டோம் எனும் மார்தட்டலை மௌனம் மறுதலிக்கின்றது.
பொய்மைகளை கருத்து எழுத்து அழகுகளால் மூடி மறைப்பதையும் மௌனம் ஏற்ற மறுக்கின்றது.
தமது முன்னெடுப்புகள் பலவற்றில் 'மௌனிகள்' தோற்றவர்கள் - சிதைந்தவர்கள் என அறிக்கை செய்வதுடன் எண்பதுகளின் பிற்பகுதிகளில் உலகெங்கும்  நிகழ்ந்த - நிகழ்ந்த வண்ணமுள்ள சறுக்கல்களையும் தோல்விகளையும் மாற்றங்களையும் உள்வாங்கி கற்க கடப்பாடுடையவர்கள் என்பதனையும் ஏற்கின்றது.
'கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாதார்' பற்றி பாரதி கொள்ளும் கவலையை மௌனமும் தனதாய் வரித்துக்கொள்கின்றது.
பல்வேறு காரணிகளால் அருகிச் செல்லும் மனித விழுமியங்களை மீட்டெடுத்தலையும். நம் அடையாளத்தைப் பேணுதலையும். இருப்பை உறுதி செய்தலையும் மௌனம் தொடரும்..
'கலாச்சார ஒன்றித்தலிலும்' 'கலாச்சாரப் புத்தமைவிலும்' ஆற்றல் மிக்கோருடன் கைகோர்க்கும்.
அன்று பதிப்பு இன்று ஆவணம் :


- முகிலன்
பரீசு - பிரான்சு 27.07.2013

No comments:

Post a Comment