Friday 11 December 2009

சுவட்டுச் சரம் 1 நினைவுத் துளிகள் (18) புலப்பெயர்வில் தமிழர் பண்பாடு


சுவட்டுச் சரம் 1 நினைவுத் துளிகள் (18)
சுவட்டுச் சரம் 1
பெர்லின் புலம்பெயர்வு தொடக்க கால நினைவுகள்
நினைவுத் துளிகள் (18)
-குணன்
(அசர்பைஜானின் கோபஸ்தானில் உள்ள பாறை ஓவியம். இது கி.மு 10,000 ஆண்டு காலப்பகுதியில் எழுச்சி பெற்றிருந்த பண்பாட்டைக் குறிக்கிறது.)

புலப்பெயர்வில் தமிழர் பண்பாடு ?

இன்றைய புலம்பெயர் வாழ்வில்,அதிகமாக பேசப்பட்டும் கருத்துக்கள் தெரிவித்தும், ஊடகங்களிலும், மேடைகளிலும், விவாதிக்கப்பட்டும் விளக்கம் பெற முடியாது எல்லோரையுமே தடுமாற வைக்கும் தலைப்பாக, தமிழர் பண்பாடு என்ற 'கருத்துரு' தோற்றம் பெற்றுள்ளதோவென எண்ணவேண்டியுள்ளது.

இதற்கு காரணங்கள் ஏதும் உண்டா? அல்லது, பண்பாடு பற்றிய தவறான கருத்தாக்கம் தோற்றம் பெற்று விட்டதா? என ஆழமாக வரலாற்றுப் பின்னணியில் ஆராய வேண்டுமா? என கேள்விகள் எழுந்துள்ளனவா? அல்லது எழுப்பவேண்டுமா? என்பதை ஆராய்ந்தறிய வேண்டிய பொறுப்பு மானிடவியலாளர்களுடைய பிரதான பணி எனக் காணப் படவேண்டும்.

மானிடவரலாற்றில், உலகின் பல பாகங்களிலும் வரலாறு காணதா காலந்தொட்டடே நீண்ட மனித நாகரிகம்-பண்பாடு, என்ற பரிணாம வளர்ச்சி கண்டிருப்பதும், மனித இடப்பெயர்வுகளினால், ஆதிக்க மேலாண்மை, மத,மாற்றம், மொழி மேலாதிக்கம், தொழில், கலை என, புதிய அறிமுகங்கள் எனப் பேணவேண்டிய காரணிகள் பண்பாட்டு, நாகரிக மாற்றங்களுக்கு உதவுகின்றன!


நாகரிகம்-பண்பாடு என்றால் என்ன?

மனித நாகரிகம், மருதம் சார்ந்த, ஆற்றங்கரைகளின் நிலப்பரப்பில் நிலைபெறத்தொடங்கியதும், பண்படுத்தப்பட்ட நிலங்களில், பயிர்ச்செய்கை இடம்பெற்றது. அதனையடுத்தே நிலையான குடியிருப்புச் சூழல், சுற்றாடல் போன்றவை உருப்பெற்றதும், குடும்பங்கள், உறவுகள், குடியமைப்பு, நண்பர், அயலவர், மேலோர், கீழோர், முதலையுடையோர், பணியாளர்கள், ஆள், பொருள் ஆதிக்கம் படைத்தவர்கள், எனப் பல்வேறு கட்டமைப்புக்கள் கொண்ட குடிகள் வாழும் நகரங்கள் தோன்றியன. ஏனையோருக்கு உணவு தரும் உழவுத் தொழில் முக்கியம் பெற்றிருந்ததும், வேளாண்மை கொண்டவர்கள், பதினெட்டுத் தொழில்களில் பிரதானமாகவும் விளங்கியது. இதன் காரணம் போலும் மனித வாழ்க்கையில், உணவுத் தொழில் முக்கியம் என்று கருதினார் போலும்! இவ்வாறான, குடிவாழ்க்கை, என்பதே,“பட்டின வாழ்க்கை“,(இலத்தீனில்- civitas-city or city state)என்ற கருத்தில், ”நாகரிகம் வாய்ந்த”(civilized life), என்ற கருத்தியல் தோன்றியதென்பர். இந்த நாகரிகம் வாய்ந்த குடியினரே(citizen) ஆட்சிப் பொறுப்புடையவர்களாகி தலைவர்களாக, பின்னர் முடிசூடிய மன்னர்களாக,(சர்வாதிகாரிகளாக மாறி) அதிகாரம் செலுத்திய வரலாறுகள் அறியமுடிகிறது! நகரங்களிலிருந்து தொடங்கிய மக்கள் குடிமுறை வழியாக, நாகரிக வாழ்க்கை, இயற்கையாக அமைந்த துறைமுகங்கள் அருகாமையில், வளர்ச்சி பெற்ற பெரிய பட்டினங்களை உருவாக்கியதென்பதற்கு, பண்டைய நாள் முதலாக, இன்றுவரை உலகநாடுகள் எங்கணுமே காணலாம்!

பண்டமாற்று, குடியேற்றம், வாணிபம், கப்பல் போக்குவரத்து என இதில் பல அடக்கம்! இன்றும், புலப் பெயர்வுக்கு முக்கியமான வழியாக, துறைமுகங்கள் -கப்பல் பிரயாணம் அமைந்திருக்கின்றது. இலங்கைத் தீவுக்குள் அகதியாக, எழு நூறு தோழர்களுடன் வட நாட்டிலிருந்து விஜயன், வந்திறங்கிய தம்பபண்ணை, ஓர் இயற்கைத துறை முகம் என்பதும், இங்கிருந்து வெளி நாடுகளுக்குச் செல்கின்ற நாவாய்கள், தோணிகள், கப்பல்களை ஆரியசக்கரவர்த்தி நிறுத்தி வைத்திருந்தான் என்ற வரலாற்றுக் குறிப்பு உள்ளது. அதே போன்று, மாந்தை(மன்னார்), பருத்தித்துறை, காங்கேசன்துறை, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம் என துறை முகங்களைச் சார்ந்த, தமிழர் தாயகம், பலநூற்றாண்டு கால நாகரிக வாழ்க்கைக்கு அடிகோலி இருந்தது!

பட்டினங்களில் பல்வேறு தரப்பட்ட மனிதர்களுடைய வரவால் கிடைக்கப்பெற்ற அனுபவங்களால் பட்டினவாசிகள் நாகரிகமடைந்தவர்கள் எனவும், கிராமத்தவர்கள், இவ்வாறான புதிய அனுபவங்களைப் பெறமுடியாதவர்களாக தனிமைப்பட்டிருந்த கிராமவாசிகள் ”பட்டிக்காட்டு”மக்கள் எனவும் குறிக்கப்பட்டதும் கவனிப்புக்குரியது!

பண்பாடு என்றால் என்ன?

பண்பாடு என்றால் எதனைக் குறிக்கிறது? தமிழர் பண்பாடு என்றால் யாது? என்று, கேட்கப்படுவதும், அதற்கு நீட்டி முழக்கிப் பதில் அளிப்பதும், எங்குமே காணப்படுகின்ற வழக்கம். அந்த விளக்கம் முழுமை என்று கருதலாமா? வெளிப்படையாகவே இது இயலாது என்பதை யாராலும் உணரமுடியும்.

தோற்றப்புல வெளிப்பாடாக அமையும் வேட்டி, மேற்சட்டை, சால்வை(தலைப்பாகை நீங்கலாக!) ஆண்களும், சேலை, சட்டை அணிவது(பழைய, புதிய) முறைகள் பெண்களும், கடைப்பிடிப்பதை தமிழர் உடைப் பண்பாடு என்பதும், குங்கும் பெண்களுக்கும், சந்தணம் ஆண்களுக்கும் (பொது வைபவங்களில் அனைவருமே அணிவதுண்டு), தமிழர் பண்பாட்டு அடையாளம் என்பர்! இது ஒரு சமயத்தவரின் குறியீடு என்று கூறி, மறுப்பவரும், தவிர்த்துக் கொள்வாரும் உண்டு!

பெண்கள் பருவம் எய்தி நடாத்தப்படுகின்ற சடங்கு, ஒருவர் மறைந்த பின்னர், குழந்தை பிறந்தால், பின்னர் காலத்துக்கு காலம் நடாத்தப் படுகின்ற சடங்குகள், சம்பிரதாயங்கள் என நடந்தேறிய எண்ணற்ற செயற்பாடுகள் அனைத்தையும் பண்பாடு என்று கூறுவாரும் உண்டு.

இது பற்றி, பேரா.தேவநேயப்பாவணர் குறிப்பதைப்போல, ”நாகரிகம் என்பது அழகுறத் திருந்திய வாழ்க்கை வழக்கம்", இதில் அந்தந்தக் காலக்கட்டத்தில் அறியப்பட்ட பொருள்களையும் தமக்கே பயன்படுத்தல்(அழகுபடுத்தல் அல்லது மெருகூட்டல்) வழக்கம், பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம் (வாழ்வு நெறி), அது சீரான வாழ்வுத் தேவையை முதன்மைப்படுத்தியதாக எல்லாப் பொருட்களையும் தமக்கும் பிறர்க்கும் பயன்படுத்தும் ஒழுங்காற்று முறைமை” என எண்ண முடிகிறது! ஒருவரின், அல்லது ஓர் குறிப்பிட்ட தொகுதி(இன, சமய, குழு)சார் மக்களிடத்தில், காணப்படுகின்ற பழக்க, வழக்கங்கள் வேறு சில மக்கள் கூட்டத்தினருக்கு, ஏற்கமுடியாத, அருவருப்புத்தருகின்ற (மேற்கு நாடுகளில், பொது இடங்களில் கைகளால் உணiவு உண்பது வெறுக்கப்படுவது, அல்லது விரும்பத்தகாததைப்போல), அக, புற பண்பாட்டு வெளிப்பாடுகள் பார்க்கப்படுவதும், விமர்சிக்கப்படுவதும் காணலாம்! ஆயினும், ஒருவரின், மாறுபட்ட பழக்கங்கள் என்பது, தனித்துவம் கொண்ட, அதேநேரத்தில், பலரால் பேணப்படும் பொழுது, அதனைப் பண்பாடாகப் பார்க்கவும், மதிக்கப்படவும் வேண்டும்!

புலப்பெயர்வில், பொது - குடும்ப விழாக்களில் இடம்பெறுகின்ற தோற்றப்பாடுகள், பற்றிய வினாக்களை, பிற மத, இன, மக்கள் கிளப்பும் போது, சரியான விடை தரவேண்டியவர்கள், பலவாறு, விளக்கம் தருவதைக் காணலாம்! பெண்கள், திலகம் இடுவது பற்றி பலரும் வினா எழுப்புவதைக் காண முடிகிறது! இதை, அழகுச் சின்னம், சமயச் சின்னம், அறிவுச்சின்னம் (மூன்றாவது கண்!) என விளக்கங்கள் தரப்படுகின்றன! இவ்வாறான, ஒரு கூட்டுப் பழக்கம், ஓர் தொகுதி மக்களால், தொடர் நிகழ்வாக காரணம் புரியா நிலையிலும் பின்பற்றப்படுகின்ற "பண்பாட்டுக் குறியீடாக" கொள்ளப்படுவதான (Sign is something which stands to somebody for something insome respect or capacity) உட்கருத்தை தாங்கியதென்பர் குறியீட்டியலாளர்(Semiologist). இவ்வியல் நிபுணராக,பிரஞ்சு நாட்டின் மிசேல் புக்கோ (Michel Foucault) மதிக்கப்படுபவராவார்.

ஒருவரிடம், எமது அன்பு, இரக்கம், நன்றி போன்ற அக பண்பாடுகளை வெளிப்படுத்தும் முகமாக, மலர்கொத்தை (குறியீடாக) வழங்குவதைக் கூறலாம். இதே போல, அமைதிச் சின்னமாக, புறாவைக் குறியீடாக்குவதையம் குறிப்பிடலாம்.”குறி” என்பது,”உணர்த்து” என்ற பொருளில் வாழ்வின் ஒவ்வொரு செயலும், ஒன்றை உணர்த்தி நிற்கின்ற தென்பதால், ஒரு தனிமனித நடத்தை, அவன் சார்ந்த, இன, மதப் பிரிவையும் பிரதிபலிக்கின்றதென்பது உணரப் படவேண்டியதாகும்! புறத்தோற்றங்களுக்கான மதிப்பீடுகளின் முக்கியத்துவம், பெறுமானங்களைவிட, அகவுணர்வுகளைப் புலப்புடுத்தி நிற்கும்.

மானிடநேய விழுமியங்களின் அடிநாதமாகிய அன்பு, இரக்கம், கொடை ஆகிய பண்புகளையே சிறப்புடையனவாக அறிவுடையர் கருதுவர். பட்டினியால் வாடும் ஒருவருக்கு தான் உண்பதை பங்கிட்டு உண்ணும் பண்பு வாயினால், வெறும் வார்த்தைகளைவிட பயனுடையதாகும்!இதனை, தமிழ் ஞானி திருவள்ளுவர், மிக நுட்பமாக,
“பகுத்துண்டு பல்லூயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை "
- திருக்குறள் (322),
கூறியவாறு,கோடி நீதி, தத்துவ வாசகங்களை விட, ஒரு சிறிய செயலாக்க வடிவம், நிகழ்த்தல், பெரியதும், தலையாயதுமாகும்! ஒரு போதனையைவிட, ஒருவரின் பட்டறிவு மேலானது!

இரண்டாம் உலக போர் இறுதிக்காலநாட்கள், அறுபது ஆண்டுகள், கழிந்த பின்னரும், அன்று, ஒன்பது வயதுச் சிறுவனாக நானும், பிள்ளைப் பருவத்தினராகிய எனது இரு சகோதரர்களும் உணவுப் பஞ்சத்தினால்,அ வதிக்குள்ளாகிய வறிய குடும்பங்களில் ஒன்றாக இருந்து பட்ட பசியின் கொடுமையை இன்றும், முழமையாக என்னால் உணரமுடிகிறது. எங்கள் பசியைத் தீர்த்தவரையும், இன்றும் நெஞ்சில் நினைக்க மறந்திடவில்லை! அவ்வாறே, புகலிட வாழ்வில், உள்ள பல்லினத்தவர்களை, தமது நாடுகளில் அனுமதித்து, தம்மைப்போல வசதிகள் வழங்கி, வாழ வைத்த மக்களுக்கும், அவர் தம் அரசுகளுக்கும் நன்றியுணர்வுடையவர்களாக –பண்புடையவர்களாக வாழவேண்டுமல்லவா?
(பண்டைய எகிப்து நாட்டைச் சேர்ந்த ஓவியம்.Ägyptischer Maler um 1400 v. Chr. 001.jpg)




அறிவியலை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் -எடுத்துச்செல்லுங்கள்!

கால் நூற்றாண்டுக்கு முன்பு, 1985ல், பேர்லின் நகரில், வாழும் புலம் பெயர் தமிழர்கள் மத்தியில், உரையாற்றிய (20.10.1985), அன்றைய சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ந.சஞ்சீவி அவர்கள், ”ஐரொப்பிய நாடுகளில், வாழும் புலம் பெயர் ஈழத்தமிழர்கள் குறிப்பாக பெரும்பான்மைத் தமிழ் இளைஞர்களுக்கு சில அறிவுரைகள்” என்ற தலைப்பில் வழங்கிய கருத்துரையில், "ஐரோப்பிய நாடுகளில், சொந்த நாட்டை விட்டு புலம்பெயர்ந்து உறவை, ஊரை, நட்பை, பிறந்த மண்ணைப் பிரிந்து வாழ்வதென்பது, மிகப் பெரிய துயரம் மட்டுமன்றி பேரிழப்புமாகும். இதனை இளைஞர்கள் பிற்காலத்தில் தான் நன்கு புரிந்து கொள்ளவும், வருத்தப்படவும் முடியும்!" ஏதோ ஒரு விபத்தைப்போலவே இன்றைய புலப்பெயர்வு உங்களை இங்கு தள்ளிவிட்டிருக்கிறது! இதில் பெருமையோ, மகிழ்ச்சியோ ஏற்பட முடியாது -கூடாது! இது ஒரு வேதனை தரும் நிகழ்வாகவே நீங்கள் கருதி, அந்த வேதனை வாழ்க்கையை ஒரு சாதனை வாழ்வாக ஒவ்வொரும் மாற்ற சபதம் எடுத்துக்கொள்ளுங்கள்! இதனை, எனது பணிவான வேண்டுகோளாக உங்கள் முன் கூற விரும்புகிறேன்!” என்று குறிப்பிட்டு, இங்குள்ள கண்மூடித்தனமாகக் கெளவிக் கொள்ளப்படும் ஆடம்பரங்கள் காலப்போக்கில் அர்த்தமற்றதாகிப்போய் எமது பண்புகளுக்கும் ஒழுக்கத்திற்கும் கேடு விளைவிக்கும். நிதானமாக சொந்தப் புத்தியில் அறிவைத் தேடி வாழப் பழகியவராக முடிந்தவரை, ஐரோப்பாவின் அறிவியல்களை பெற்றுகொள்ளுமளவுக்கு தேடிக் கற்றுக்கொள்ளுங்கள்!"

"தமிழர் வாழ்வுக்கும், ஒழுக்கத்திற்கும் ஊறு விளைக்கும், கீழ்த்தர நடவடிக்கைகளில் பலர் தம்மை ஈடுபடுத்துவதைக் காண வருத்தம் அடைகிறேன். இவ்வாறன செயல்களில் தம்மை ஈடுபடுத்துவோர், தமக்கும் தான் சார்ந்த மக்களுக்கும் தீங்கு செய்பவர்களாவர்!இவ்வகையினர், தம்மை அழிப்பதுடன், தமது கிடைத்தற்கரிய மனித வாழ்வையே முழுமையாக இழந்துவிட நேரிடுகிறது. எனவே, ஒரு நாள், நீங்கள் அனைவருமே, உங்கள் சொந்த நாட்டிற்கு சென்று வாழவேண்டியபோது, உங்களுடன், இங்கு கற்றுக் கொண்ட அறிவியலை மட்டும் எடுத்துச் செல்லுங்கள், இன்றேல், நீங்கள் கண்டு, கேட்டு, கற்றுக்கொண்டவற்றை, முடிந்தவற்றை நூலாக, பதிவுகளாக, கலை வடிவங்களாக ஆவணமாக்குங்கள். பெற்றிருக்கும் இத்தகைய புதியதான அனுபவங்களை உண்மைப் பதிவுகளாக்க முனையுங்கள்!” என்று குறிப்பிட்டு, மேலும் தொடர்கையில், ”உங்கள் உடன் பிறப்புக்கள், தமிழகத்தில் அகதிகளாக முகாம்களில், மிகவும் துயர் பட்டுக்கொண்டிருக்கையில், இங்கெல்லாம், அர்த்தமற்ற விதத்தில், நீங்கள் நடப்பதை எப்படி (சினிமாக்காரர்களுக்கு மேடையில், தங்க மோதிரங்கள், சங்கிலிகள், விருந்து என…….!) ஏற்பார்கள்! தமிழர் சமுதாய வாழ்வியலில்,என்றுமே சாதி இருந்ததில்லை என்பதை தமிழ் இலக்கியங்கள்(சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியலாம்)".

"சாதி என்ற அநீதி மதத்தினூடாக இடைச்செருகலாக புகுத்தப்பட்டு, இதனை இன்றும் கடைப்பிடிப்பது அறிவீனமல்லவா? தமிழரின் அறிவுக் களஞ்சியமாகிய திருக்குறளை, அன்றைய மதந்சார்ந்திருந்து கோலோச்சிய மூவேந்தர்கள் எனப்படுவோரும் வளர்த்திட உதவவில்லை! வேதங்கள், புராணங்கள் கட்டிக்காக்கப்படவேண்டி தமிழர் கிராமங்களைத் தானம் செய்தார்கள்! இவ்வாறு தமிழர் வாழ்வை சிறுமைப்படுத்தவே உதவியதால், தமிழ், தமிழர் தாழ்வடைந்தனர்!"

"இங்கு எல்லா வசதி வளங்கள் கிடைப்பதாக உங்கள் வாழ்வை மறந்து, வருங்கால நிலை மறந்து வாழாதீர்கள்! அடிமைத்தனம், எந்த உருவத்தில் வசதிகளைத் தந்தாலும், அது அடிமை வாழ்வே என்பதை மறந்து விடாதீர்கள்! நாம் இங்கு உபதேசிகளாக வரவில்லை உங்களைக் காணவும், உங்களிடம் கேட்டறியவும், ஐரோப்பா வாழ் தமிழரைக் காணவுமே ஆவலாக வந்திருந்தோம். இங்கு எமது ஐரோப்பிய பயணத்தில் பேர்லின் வாழ் உங்களைக் கண்டு, உரையாட வசதி செய்த பேர்லின் நலன் புரிக்கழக நிர்வாகத்தினருக்கும் நன்றியறிதல் உடையோம்!உங்கள் அனைவருக்கும் தமிழக மக்கள் சார்பில் எமது நன்றிகள் உரித்தாகுக! வணக்கம்!!” இவ்வாறு, ந.சஞ்சீவி அவர்களின் உரை, காலந்தாண்டியும் நிலைக்கும் கருத்துக்களாக இன்று நான் நினைவில் மீட்டுப்பார்க்கிறேன்.


எண்ண சில எண்ணங்கள்

இன்று, வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து பல நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களில், ஒரு வீதத்தினர் கூட, தமது தாய் நாட்டில் சென்று வாழ -வாழும் திடம் கொண்டிருப்பார்களா? என எதிர்பார்க்கக் கூட முடியாது! அவ்வாறாயின், அவர்கள், தமக்கு வாய்த்த புகலிட உரிமைகளை தூக்கி எறிந்து விட்டு தாம் பிறந்த மண்ணில், தம் பெற்றோர், உறவினர், ஊரவர் என பலரும் வாழ்ந்த மண்ணில் செல்ல யாரும் (எந்த தலை முறையினரும்) முன்வரப் போவதில்லை என்பதும், அங்கு தமக்கு, எந்தவித உறவோ,அறிமுகமோ இல்லை என்றும் முதிர்ந்த உறவுமுறையினரும் மறைந்து விட்டார்கள் என்று கூறும் பலரை எங்குமே அறிந்து கொண்டிருக்கிறோம்! அவ்வாறு தமது கருத்தை வெளிப்படுத்துபவர்களின், அடுத்த தலைமுறையிரும், தொடர்ந்து வருபவர்களும், எதிர்காலத்தில் தமது பெற்றோர்கள், பாட்டன் பாட்டி பிறந்து வாழ்ந்து மறைந்த மண்ணை எட்டிக்கூட பார்க்கும் நிலை வரமாட்டாது -வரும் வாய்ப்பு ஏற்படும் சூழுல் உருவாக இடம் எழாது என்பது இன்றே உருவாகியுள்ளது!

மேலும், இங்கு புதிய தலைமுறையினராகிய இளைய தலைமுறை, தங்கள் பெற்றோரின், உறவுகளோடு, முழமையாகத் தொடர்பை வைத்துக்கொள்ளவும் -வளர்க்கவும், வாழ்க்கைப் பந்தம் ஏற்படுத்தவும் முடியாத ஓர் அவல நிலை உருவாகிக் கொண்டிருப்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதற்கு, இரண்டு முக்கிய காரணிகளைக் கூறலாம். ஒன்று தாய்மொழிச் சிக்கல், மற்றையது வளர்ந்த பண்பாட்டுச் சிக்கல் என்பதை விபரிக்க வேண்டியதில்லை. பிற இனத்தவர்களின், புதிய தலைமுறையினரை விட, தமிழர்களின், உறவுப் பாலம் மிக பலவீனமுற்றிருப்பது வெள்ளிடமலை. இனி வருங்காலத்தில் இது மாற்றத்துக்குள்ளாகாது போயின், புலமபெயர் தமிழினம் கூறுபட்ட -வேறுபட்ட குழுவாகவே மாற்றம் பெறலாம்!

இவற்றைக் கடந்து, இணைந்த இனமாக காப்பாற்ற அல்லது நிலைத்து, நீடித்து, பண்பாடு, தாய்மொழி, உறவு வளர, புலம்பெயர் புதிய தலைமுறைத் தமிழர்கள், தமது பெற்றோர்களின் தாய் மொழியாகிய தமிழ் மொழியை, மற்றெல்லாவற்றைக் காட்டிலும், உறவுப் பாலமாக கைக்கொள்தல் அவசரமும் -அவசியமுமாகும்.
***********************

பிற்குறிப்பு 1.:

பண்பாடு
(கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து)

பண்பாடு என்பது பரந்த பொருளுடன் பயன்படுத்தப்படும் ஒரு சொல். ஆங்கிலத்தில் culture (கல்ச்சர்) என்னும் சொல்லுக்கு இணையான பொருளில் இச்சொல் தமிழில் பயன்படுத்தப்படுகிறது. கலாச்சாரம் என்ற சொல்லும் பண்பாட்டுக்கு ஒத்தசொல்லாக பயன்படுகின்றது. இது பொதுவாக மனித செயற்பாட்டுக் கோலங்களையும்; அத்தகைய செயற்பாடுகளுக்குச் சிறப்புத் தன்மைகளையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புக்களையும் குறிக்கின்றது.

பண்பாடு ஒரு பலக்கிய கருப்பொருள். அதற்கு பல நிலைகளில் வரையறை உண்டு. ஒரு நிலையில் பண்பாடு என்பது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், அறிவு பரம்பல்கள், வாழ்வியல் வழிமுறைகள், சமூக கட்டமைப்பு என்பனவற்றை சுட்டி நிற்க்கின்றது. மொழி, உணவு,
இசை, சமய நம்பிக்கைகள், தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டுக்குள் அடங்கும்.

பொதுவாக இது மனிதரின் நடவடிக்கைகளைக் குறிக்கிறது எனலாம். பண்பாட்டின் வெவ்வேறு வரைவிலக்கணங்கள், மனிதச் செயல்பாடுகளை விளங்கிக்கொள்வதற்கான அல்லது அவற்றை மதிப்பிடுவதற்குரிய அளபுருக்களுக்கான வெவ்வேறு கோட்பாடுகளைப் பிரதிபலிக்கின்றன எனலாம். 1952ல் அல்பிரட் எல். குறோபெர் என்பாரும் கிளைட் குளுக்ஹோனும் பண்பாடு என்பதற்குக் கூறப்
படும் 200க்கு மேற்பட்ட வரைவிலக்கணங்களைத் தாங்கள் எழுதிய பண்பாடு: எண்ணக்கருக்களும் வரைவிலக்கணங்களும், ஒரு விமர்சன மீள்பார்வை (Culture: A Critical Review of Concepts and Definitions) என்னும் நூலில் பட்டியலிட்டுள்ளார்கள்.

(இன்று கம்போடியாவின் பண்பாட்டின் அடையாளமாகப் பயன்படும் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அங்கூர் வாட் கோயில்)
பிற்குறிப்பு 2.:
'பண்பாட்டு அசைவுகள் ' நூலிலிருந்து உணவும் நம்பிக்கையும் - தொ. பரமசிவன் (திண்ணை)
http://www.thinnai.com/?module=displaystory&story_id=203082810&format=html
"தமிழருகென்று தனிப்பண்பாடு இருக்கின்றதா?" - மு. பொ நேர்காணல் (ஆறாம்திணை) http://www.aaraamthinai.com/guest/ponnambalam.asp


தொடர்பான பதிவுகள்

சுவட்டுச் சரம் 1 நினைவுத் துளிகள் (17) இழந்ததும் பெற்றதும்......

No comments:

Post a Comment