Thursday, 29 August 2013

சிதிலமாகி இளக்காரச் சிறுமையாகிச் சிதைவுறும் கலாச்சார அடையாளங்கள்

குஞ்சரம் 16

சிதிலமாகி இளக்காரச் சிறுமையாகிச் சிதைவுறும்
கலாச்சார அடையாளங்கள்

பாரீசுக்கு வான் வழியான உலகப் பயணத்தைத் தரும் முக்கியமான தளம் சார்ல் டு கோல் விமான நிலையம். உலகின் எந்த விமான நிலையத்திலும் கிடைக்காததொரு அனுபவத்தை இந்தப் பாரிய விமான நிலையம் தருவதாக பல வெளிநாட்டு நண்பர்கள் எமக்குத் தெரிவித்திருக்றிhர்கள். இந்த விமான நிலையத்தில் பயணிக்கவோ, பயணம் அனுப்பவோ, வரவேற்பதற்காவோ எப்போதுமே கூட்டம் நிறம்பி வழிந்த வண்ணமே இருக்கும்.
இது ஒரு வெள்ளையர் நாடுதானா? என்று நம்மவர்களும் வினவுமளவுக்கு, இங்கு நடமாடும் மனிதர்கள் பல்லினப் - பல்தேசியர்களாக தத்தமது தனித்துவமான வேறுபட்ட கலாச்சார ஆடை அலங்காரங்களுடன் காணக்கிடைப்பார்கள். 'சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" என்னும் விருதுவாக்கியக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்தும் ஒரு நாட்டின் தலைநகரிலமைந்த விமானத்தளமே அந்த மானிட அழகியல் பண்பை வெளிப்படுத்தி நிற்பதில் என்னதான் ஆச்சரியம் இருக்கிறது.
முப்பது வருடங்களுக்கு மேலான புலப்பெயர்வின் நீட்சியில் எவ்வளவோ தன்னிலை முன்னிலை படர்க்கை மாற்றங்களை காண்பவர்களாகவே நாமும் வாழ்வில் சமைந்து போயுள்ளோம்.
சென்ற மாதத்தில் ஒருநாள், இந்தக் கோடை விடுமுறையை இலங்கையிலிருக்கும் தனது பாசத் தாயாருடன் கழிப்பதற்காகப் பயணப்பட்ட எமது நண்பனின் துணைவியாரை வழியனுப்பச் சென்றிருந்தோம்.
பயணத்தை உறுதி செய்யும் இருக்கை அட்டை (boarding pass) பெறுவதற்காக நீண்ட வரிசையில் பயணப் பொதிகளுடன் காத்திருந்தோம். அது சிறிலங்கன் ஏயர்லைன் விமானம். பல்தேசியர்களும் பல்வேறு ஆடை அணிகளுடன் தத்தமது கனவுகளுடனான எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்தனர்.
நம்மவர்களை (ஈழத்தமிழர்கள்) இப்போது இலகுவில் அடையாளம் கொள்ள முடியாது. அதுவும் பெரும்பாலான அடுத்த தலைமுறையிலானவர்களை நம்மவர்கள்தானா என்று பேசிப்பார்த்தால் மட்டுமே இனங்காண முடியும். இருந்தும் அங்கொன்று இங்கொன்றாக நம்மவர்களும்(ஈழத்தமிழர்கள்)- இந்திய வம்சா வழித் தமிழர்களும்- சிங்களவர்களும், இந்திய - பாக்கிஸ்தானியர்களும்- வங்காளிகளும் புலப்படவே செய்வர்.
நாம் புலப்பெயர்வில் வந்திருந்த ஆரம்பக் காலங்களில், வெள்ளை இனத்தவர் எல்லோரையும் ஒரே மாதிரித்தானே பார்த்திருந்தோம். காலம் கடந்து செல்ல இன்று கிழக்கு-மேற்கு ஐரோப்பியர், ஸ்கண்டிநேவியர், இத்தாலியர், போர்த்துகல்காரர், ஸ்பானிஸ்காரர், ஜேர்மனியர், இங்கிலாந்து ஆங்கிலேயர்- அமெரிக்கர் என எமது மூளைப் படிமம் வேறுபிரிக்கும் திறனைப் பெற்றுத்தானே இருக்கிறது. ஆனால் நம் வாரிசுகளாகி நடமாடுபவர்களது நடையுடை பாவனைகளால் இப்போது எமது அடுத்த தலைமுறையினரை இலகுவில் இனங்காண முடியாதவர்களாகி விட்டோம். இந்த தலைகீழ் மாற்றத்தை நினைக்கவே முகத்தில் புன்முறுவல் பூக்கிறது.
பிரியாவிடைபெறும் நண்பனின் துணைவியாரும், எனது துணைவியாரும் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
'வெயில் நேரமாகையால், பாவாடை சட்டையோடு போகலாம் என்றுதான் நினைத்தேன். அவரும் அப்படித்தான் சொன்னவர்."
'ஓமோம், பிறகென்னத்திற்கு டவுசர் சட்டையோடு கிளம்பி விட்டீர்?" எனது துணைவி ஆச்சரியத்துடன்.
'இல்லையப்பா, இங்கு வரேக்கே அப்படித்தானே வந்தோம். அப்ப நினைச்சுப் பார்த்திருந்தோமா டவுசர் போடுவமென்று!" பெருமை முகப் பொலிவுடன் பிரகாசித்தது.
'நான் நிறையவே யோசித்தனான்! வந்த மாதிரியே திரும்பிறதிலே என்ன இருக்கு? இங்கு நாளாந்தம் இப்படித்தானே உடுக்கிறம். அப்ப இப்படியே போவம் என்று முடிவெடுத்தனான்."
எனது துணைவி மௌனமாகவே கேட்டுக்கொண்டிருந்தார். 'சும்மா" என்ற சொல் தமிழில் மிகவும் வித்தியாசமானதொரு தனித்ததொரு சொல். இச்சொல் தரும் பொருளடிப்படையில் 'சும்மா"வாக இருக்கவே முடிவதில்லை. காத்திருக்க நிர்ப்பந்திக்கப்படும் வேளையில், நம்மை இந்த 'சும்மா" எவ்வளவோ விடையங்களை அவதானிக்கத் தள்ளிவிட்டுவிடுகிறது. இப்படியானதொரு நிலையில் அனைத்தையும் கிரகிப்பவனாகினேன். இந்நிலையில், தொலைவில் ஒரு குடும்பம் தமக்கான இருக்கை உறுதியட்டையைப் பெற முன்னேறியிருந்தது.


'அங்கே பாருமப்பா.....!" நண்பனின் துணைவி வரிசையின் முன்னணியில் இருந்த அக்குடும்பத்தை என் துணைவிக்குக் காட்டினார். நானும் ஆர்வ மிகுதியில் பார்க்கிறேன். எனக்கு ஏதும் புதினமாகத் தெரியவில்லை.
'எதைப் பாரக்கச் சொல்கிறீர்?" எனது துணைவியார்
'அதுதான்... அவவுடைய உடுப்பைப் பாருமேன்..!"
'அந்தப் பச்சைச் சாறியுடன் இருப்பவரைத் தானே சொல்கிறீர்!"
'ஓமப்பா..... இங்கிருந்து சாறியோடு கிளம்பிட்டா!....ம்!!" என்றவாறு நையாண்டிச் சிரிப்பை வெளிப்படுத்தினார் நண்பனின் துணைவி.
'இந்தியக்காரராக இருக்கும்!" எனது துணைவி.
'அது இல்லையப்பா.... இந்தியர்களென்றால் சுடிதாரோடுதானே போவார்கள்? சாறி உடுத்துவதென்றாலும் எத்தனை புத்தம் புது ஸ்ரைலில் மினுங்கும் சாறிகள் கிடைக்கின்றன... இப்படியாக கிளடுகள் உடுத்துற பிளேன் சாறியுடனா போவார்கள்?" அவரது நக்கல் தொடர்ந்தது. எனது துணைவியாரும் அவருடன் இணைந்து சிரிக்கிறார். இது அப்பெண்ணை இவர்கள் இளக்காரமாக நினைப்பதாக என்னைத் துணுக்குற வைத்து, அதிக கவனமெடுக்கத் தூண்டியது.
முன்சென்ற குடும்பத்தை  உற்று நோக்குகிறேன். அந்தப் பெண் இரண்டு சிறு பிள்ளைகளும், கணவனுடனும் காணப்பட்டார். அவர் உடுத்தியிருந்தது பச்சை நிற காஞ்சிபுரம் பட்டுச் சாறி. தொலைவிலேயே அது பெறுமதி வாய்ந்ததென என்னால் ஊகிக்க முடிந்தது. என்னிடமிருந்து தானாகவே கிளம்பியது பெருமூச்சு.
தொலைக் காட்சிச் சட்டகங்களுக்குள்ளாக வெளிப்படுத்தப்படும் தந்திர அழகியல் நம்மவர்களுக்கு பாரம்பரிய பெறுமதியான பிடவைகளை இளக்காரமாக ஒதுக்கி, மினுக்கும் மின்னும் வட இந்திய மொடல் உடுபுடவைகள் மேல் அதீத ஈடுபாட்டைக் குவித்துவிட்டன. இது தேசங்கள் கடந்தும் கலாச்சார எல்லைகள் தாண்டியும் கௌவிக் கொண்டு வியாபித்துவிட்டன.
வழியனுப்பிவிட்டு திரும்புகிறோம். சிறிலங்கன் ஏயர்லைன் விமானிகள் இருவரும், கூடவே ஆறு விமானப் பணிப் பெண்களும் கம்பீரமாக மலர்ந்த முகத்துடன் நின்று கொண்டிருந்தனர். அந்தப் பணிப் பெண்கள் தமக்கேயுரியதான மென் நீல மயில் இறகுக் கண் போடப்பட்ட நைலோன் சாறியுடன் அழகாக இருந்ததை இன்றுதான் நான் தெளிவாகப்; பார்த்தேன். என்னையும் அறியாததொரு மகிழ்வு எனக்குள் கிளர்ந்தது.
000 000

ஒரு மாத இடைவெளியின் பின் ஒரு நாள், பிரான்சு திரும்பும்; நண்பரின் துணைவியாரை அழைக்கச் சென்றிருந்தோம். இது பெரும் காத்திருப்புக்கு இடமளிக்கவில்லை. விரைவிலேயே வெளி வந்துவிட்டார்.
வண்டியில் திரும்பிக் கொண்டிருக்கையில், வழக்கமான குசலம் பகிர்ந்தபின் காலை உணவு பற்றிய விசாரிப்புடன் உரையாடல் தொடங்கியது.
'சிறிலங்கன் ஏயர்லைனில சாப்பாடு நன்றாகத்தான் இருக்கும் என்று கேள்விப்பட்டனான்." எனது துணைவி.
'என்ன சாப்பாடு…. !  காலைச் சாப்பாட்டுக்குச் சோறும் குழம்புமா போடுறது?"
'சோறா?"

'அதுதான் பால் சோறு!"
'என்னது புக்கையா?"
'ஓமோம் புக்கையும், இறைச்சிக் குழம்பும், பழமும் தந்தார்கள். கொஞ்சப் புக்கையை மட்டும்தான் நான் சாப்பிட்டனான்." என்று சொல்லி நிறுத்திவிட்டு தொடர்ந்தார். 'என்னுடன் வந்த வெள்ளைக்காரரெல்லோரும் வழித்து வழித்துச் சாப்பிட்டாங்கள்!"
'நீர் வேறு சாப்பாட்டைக் கேட்டிருக்கலாம் தானே?" எனது துணைவி.
'அது பால்ச் சோறு என்றதால சக்ரைப் புக்கை என்று கேட்டுவிட்டன்!"
'ஆனால் வடிவாக சதுரத் துண்டான புக்கையை இறைச்சிக் குளம்புக்குள் வைத்துத் தந்திருந்தார்கள். நான் எங்கட குழம்பே சாப்பிடுறது கிடையாது. காலையில யாரும் இப்படியாக மொத்துவாங்களா?" இதைச் சொல்லும்போதே அவரது முகத்தில் ஆச்சரியம் பளீரிட்டது.
'அம்மா! உலகில் 75 வீதமான மக்கள் காலை உணவாக இறைச்சி முட்டை வகையானதையே சாப்பிடுகிறார்கள். பட்டர் ஜாம் வகையானதை குறைந்த அளவானவரே சாப்பிடுகிறார்கள்" கேட்டுக் கொண்டிருந்த அவரது மகன் தெளிவாகப் பதிலுரைக்கிறான்.
அமைதியாக வாகனம் ஓடிக் கொண்டிருக்கிறது.
000 000


முப்பது வருடங்களுக்கு முன்னரான வாழ்வில் எமக்கான காலை உணவாக கருவாட்டுக்குழம்பும், பழைய மீன் குழம்பும் கிடைக்கவில்லையா? முட்டைக் கோப்பி அருந்தவில்லையா?
நீடிக்கும் புலப்பெயர்வு வாழ்வில், எமது உணவு வகைகளில், உடுபிடவை வகைகளில், நடைமுறைகளில் எவ்வளவு மாற்றங்கள்? எமது மூலப் பழக்க வழக்கங்களையே நாமே மறந்துவிட்டிருக்கிறோம். போகும்போது சாறி இளக்காரமாகியது. திரும்பும்போது காலை உணவு பட்டிக்காட்டு வகையாகிறது.
ஆனால் இந்நடைமுறையைத் தொடரும் சிறிலங்காவின் ஆளும் பெரும்பான்மை இனம் பெருமிதம் கொள்கிறது. இது ஜனாபதிபதியின் உடையில் மட்டும் வெளிப்படவில்லை.
ஏதும் பேசாமல் இறுகிய மனதுடன் பயணத்தைத் தொடர்கிறேன்

 (படங்கள் கூகிள் இணையத்திலிருந்து நன்றியுடன் இணைக்கப்படுகிறது.)
.-முகிலன்

பாரீசு 29.08.2013

No comments:

Post a Comment