Monday, 12 August 2013

« லோக்கல் சஞ்சிகை » விற்கப்படுவதில்லை

குஞ்சரம் -14

1.    அன்று

 « லோக்கல் சஞ்சிகை » விற்கப்படுவதில்லை

பதினைந்து வருட இடைவெளியின் பின் எனது அக்காவின் கடைசி மகனின் திருமண அழைப்பு என்னை கொழும்புக்கு வந்தடையச் செய்திருந்தது. காலமும் காலக்கோலங்களும் போட்டிருந்த பிரிவுத் துயர் இடைவெளிகளுக்கப்பால் பொங்கி எழுந்த குடும்ப உறவுப் பாசம் அன்பு அருவியாக மடை திறந்த வெள்ளமெனப் பிரவாகமாகியது. காண்பவரெல்லாம் உறவினராகவும் அதன் நீட்சி தந்த நினைவலைகளால் சிக்குண்டு திணறித்தான் போனேன்.
வந்த இடத்தில் வெளிவரும் சஞ்சிகைகளைத் திரட்டிச் செல்லும் நோக்கில் வெள்ளவத்தையிலிருந்த புத்தகக் கடையில் நண்பியுடன் நுழைகிறேன். இங்கு லாச்சப்பல் போல் எங்குமே இந்தியச் சஞ்சிகைகளால் பளீரிட்டிருந்து கடை. எனது தேடும் கண்களைக் கவனித்ததாலோ என்னவோ விற்பனைப்பெண், "என்ன அக்கா.... வேண்டும்?" என வினவுகிறார்.
"இருக்கிறம்" என்றேன் நான் தேடலைத் தொடந்தவாறே.
"இருக்கிறமா?.........................." விற்பனைப் பெண்ணின் குரலில் ஆச்சரியமான தொனி உயர்ச்சி பெற்றிருந்தது.
"ஓம்..... "இருக்கிறம்"........ அதைத்தான் தேடுறன்" என்கிறேன் அமைதியாக அவரது முகத்தை நிமிர்ந்து பார்த்தவாறு.
"இருக்கிறமா?" குரலில் ஆச்சரியம்; மேலோங்கியிருந்தது.
"அது இங்கிருந்துதானே வெளி வருகிறது" என்றேன் நான்
"இங்கிருந்து வெளிவருகிறதா?............... அப்படியாக இங்கு ஏதுமே இல்லையே" என்ற அவரது முகத்தில் வெவ்வேறு ரேகைகள் மாற்றமடைந்தை அவதானிக்க முடிந்தது.
"ஏன்?............" ஆச்சரியத்தால் வெளிப்பட்ட எனது குரலின் ஏற்றம் எனக்கே ஒருமாதிரித்தான் இருந்தது.
பின் கதவு திறக்க ஒருவர் வருகிறார்... வரும்போதே தெரிந்தது இவர்தான் கடை முதலாளி. "என்ன தேடுறீங்க?" சாந்தமாக
"அதுதான்............ "இருக்கிறம்" என்கிறாள் முதலாளியைப் பார்த்து அந்த இளம்பெண்.
எமது பக்கம் திரும்பிய முதலாளி 'இங்க இப்படியான லோக்கல் சஞ்சிகைகள் விற்பதிலை" என்றார் மிடுக்குடன்.
நான் போட்டிருந்த செருப்பையும் மீறியதாக உள்ளங்காலில் ஏதோ ஊரத் தொடங்க அங்கிருந்து சற்று வேகமாகவே விலகுகிறேன்.
-விமலா (கொழும்பு-ஏப்பிரல் 2010)இலங்கையில் இருந்து 'இருக்கிறம்' என்ற சஞ்சிகை தனது 60வது இதழை 2010இல் வெளியிட்டிருந்தது. புலம்பெயர் தேசங்களின் கலாச்சார விற்பனை அங்காடிகளில் இப்படியொரு 'இருக்கிறம்' பற்றிக் கேட்டால் கேட்ட எங்களைப் பரிதாபகரமாகத்தான் பார்க்கிறார்கள். என்னத்தைச் சொல்வது பெருமூச்செறிந்துவிட்டு அவ்விடத்தைவிட்டு அகலவேண்டியாகிறது. 
தற்போது அஞ்சல் (2010) வழியாகக் கிடைத்த இதழினுள் நுழைகையில் இன்னும் பேனா பிடித்தவர்களாக நம் இளையோர் இருக்கிறார்கள் என்பது ஆறுதலைத் தந்தது.
தாம் கற்றுணர்வதை தம் கைகளால் வரையும் எழுத்துச் சித்திரக் கோவைகளாக்கி அதை பலரும் புரியக்ககூடியதாகப் பரவலாக்கும் இந்த எழுத்துலக பேனாச் சித்தர்கள் எல்லாச் சமூகத்தாலும் போற்றப்பட வேண்டியவர்களல்லவா?
0 இப்போது இச்சஞ்சிகை வெளிவருதில்லை. (12.08.2013) 

2. இன்று

இந்தப் புத்தகம் இங்கு தடைசெய்யப்பட்டிருக்கிறது!

புலம்பெயர்வு வாழ்வின் நீட்சி நினைவுகளுடன் வாழும் புதிய தடத்தில் எம்மைப் பயணிக்க வைத்திருக்கிறது. எவ்வளவுகாலத்திற்குத்தான் வெறும் நினைவுகளுடன் மட்டுமே சஞ்சரிக்க முடியும்? நிசத்தையும் நிகழும் மாற்றங்களையும் தரிசிக்கவும் வேண்டும்தானே! இதனால்தான் ஐரோப்பியர்கள் தமக்கான விடுமுறைகளை ஒருபோதும் வீணடிப்பதே கிடையாது. எங்காவது பயணம் செய்துவிடுவார்கள். இப்படியான இடமாற்றப் பயணங்களில் கற்பவைகளும் கேட்பவைகளும் உணர்பவைகளும் அவதானிப்பவைகளுமாக மனித மனத்தை கிறங்கடிக்கவே செய்கின்றன.
இம்முறை கோடைவிடுமுறையை வயதான அம்மாவுடன் கழிக்க ஊருக்குச் சென்றிருந்தேன். அம்மா ஆரோக்கியமாக இருக்கும் காலத்திலேயே கூட இருந்து அளவளாவிக் குதூகலித்துவிடவேண்டும். காலம் கடந்தபின் சென்று ‘சடங்குகளில்’ சடப்பொருளாக வீற்றிருந்துவிட்டு பின்னர் புலம்புவதில் என்னதான் இருக்கிறது? வாழும் காலத்திலேயே வாழ்த்துவதையும்! பகிர்வதையும் பெரிதும் விரும்புபவள் நான்.
நாலு வாரங்கள் எப்படியாக கழிந்தன? எனவாக நினைக்கவே ஆச்சரியம்தான் மிஞ்சுகிறது. நம்மவர்கள் வீடுகளில் கூடிவாழ்ந்தாலும்.இரண்டு - மூன்று சமையல்களாக பிரிந்தே கிடக்கிறார்கள். வீட்டிலேயே இப்படியென்றால் ஊர் எப்படி இருக்கும்? அந்தக் காலத்திலிருந்து நம்மவர் மனங்களில் ‘கரும்பேன்’களாகி அகலமறுக்கும் சாதியத் துண்டங்களாகத் துருத்திக் கொண்டே இருக்கின்றன ஊர்கள். காணக்கிடைக்கும் கோயில்கள் இதனை பறைசாற்றிய வண்ணம் பரிதாபகரமாகக் காட்சியளிக்கின்றன. கோயில்களின் அளவிற்கு மக்களில்லாதது இதைப் பதியும்போதும் உறுத்திக் கொண்டே இருக்கிறது.
நாடுதிரும்பலாகும் வேளை நெருங்கும்போது மீண்டும் அவசரம் தானாகவே தொற்றிக் கொள்கிறது. மீண்டும் தேவையான பொருட்களைத் தேடும் படலம் ஆரம்பமாகிறது. இப்பட்டியலில் நூல் தொகுதியும் அடக்கம். பிரபல்யமான புத்தக வியாபாரிகளிடம் இந்தியாவிலிருந்து வெளிவரும் நூல்களுக்கு இருக்கும் முன்னுரிமை நம்மவர்களின் படைப்பகளுக்கு இல்லாதிருந்ததைக் காணுற்றபொது வேதனையாகவே இருந்தது. ஆனாலும் யாழ் பல்கலைக்கு முன்னால் இருக்கும் கடையில் சிலவற்றைப் பெறக்கூடியதாகவும் இருந்தது.
இதில் வாங்கிவர நினைத்த ஒரு புத்தகம் பெரும் அலைச்சலைத் தருமென நான் நினைத்தே இருக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் கிடைக்காத அந்தப் புத்தகத்தை கொழும்பில் வாங்கிவிடுவதாக நினைத்தேன். இப்புத்தகத்தை கொழும்பில் குமரன் புத்தக இல்லம்தான் வெளியிட்டிருந்தது. பேராசிரியர் இந்திரபாலாவின் புகழ்பெற்ற ஆய்வு நூலான “இலங்கையில் தமிழர் – ஓர் இனக்குழு ஆக்கம் பெற்றதான வரலாறு” என்ற புத்தகம்தான் என்னைப் பாடாய்படுத்தியது.
பாரீசுக்குத் திரும்பம் முதல்நாள் வரையில் கொழும்பில் பிரபல்யமாக விளங்கும் அனைத்து புத்தகக் கடைகளுக்குச் சென்றிருந்தும் இந்நூல் கிடைக்கவேயில்லை. ஆனால் கடைகளில் பணியாற்றுவோர் இப்புத்தகம் பற்றிக் கூறியவை பதிவுலகில் வலம்வரவேண்டியவை.
“அந்தப் புத்தகம் முழுவதும் விற்றுவிட்டது.” என்றார் ஒரு கடைக்காரர்.
“இப்படியொரு புத்தகத்தை நான் கேள்விப்பட்டதே இல்லையே!” என்றார் இன்னொருவர்.
“இலங்கையில் அச்சிடப்பட்ட நூல் இது குமரன் பதிப்பகம் வெளியிட்டது.” என்றேன் நான்.
“குமரன் பதிப்பகம் இந்தியாவிலும் இருக்கிறதுதானே! இப்படியான புத்தகங்களை இந்தியாவில்தான் வெளியிட்டிருப்பார்கள்.” என்றார் அமைதியாக.
“இந்தமாதிரிப் புத்தகம் இங்கு எம்மிடம் இல்லை.” என்றார் இன்னொரு கடைக்காரர்.
நம்பிக்கை குறைந்து செல்ல அந்த கடைசிக் கடைக்காரரிடம் செல்லும்போது நூல் பற்றி விபரமாக எழுதிய சிட்டையைக் கொடுத்து வினவினேன்.
சிட்டையை வாங்கி வாசித்த கடைக்காரர் “இந்தப் புத்தகம் இங்கு தடைசெய்யப்பட்டிருக்கிறது. உங்களால் எங்குமே வாங்க முடியாது” என்றாரே பார்க்கலாம். நான் அசந்துதான் போனேன்.
அந்தப் புத்தகத்தை தடைசெய்ததாகச் சொல்லிட்டு என்னை மேலும் கீழுமாகப் பார்த்தாரே ஒரு பார்வை. அப்பப்பப்பா…..
“அடச் சீ…… இவங்களெல்லாம் ஏன்தான் புத்தகக் கடையை வைத்திருக்கிறாங்களோ?” எனவாக வெம்மிப் புடைத்த மனதுடன் அவ்விடத்தை விட்டகன்றன எனது கால்கள்.
 000 0000

பிற்குறிப்பு:
ஓய்வுபெற்ற பேராசிரியர் இந்திரபாலாவின் புகழ்பெற்ற நூலான
இலங்கையில் தமிழர் - ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு

பதிப்பு ஆண்டு :
பதிப்பு :
முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
பதிப்பகம் :
விலை :
200
புத்தகப் பிரிவு :
பக்கங்கள் :
418

-விமலா (கொழும்பு) யூலை 2013

பதிவு: முகிலன்

பாரீசு 12.08.2013

No comments:

Post a Comment